Sunday, January 14, 2024

தட்டொளி உடைந்த மார்கழி

 

மார்கழியின்
கடைசி நாளன்று
மன்னார்குடி வந்திருக்கிறேன்
பிராயத்தில்
தவறவிட்ட
மார்கழிப் பெண்டிரை
அவர்தம்
கோலப்பொடி கையுடனும்
தாவணிகளுடனும்
காலடிவிரி
கோலங்களுடனும்
காண வந்திருக்கிறேன்
ராஜகோபாலசுவாமியின்
திருவில்லம்சூழ்
நான்கு திருவீதிகளிலும்
தெப்பக்குளத்தின்
நான்கு கரைகளிலும்
அக்கிரகாரங்கள்
ஆவிகளாய்த்
திரிந்துகொண்டிருக்கும்
அனைத்து வீதிகளிலும்
அலைந்து திரிந்து
பார்த்துவிட்டேன்
திரைமூடிய
மார்கழித் தரையில்
புள்ளிகளாய்
முன்பு தோன்றிய
கோதைகள்
எங்கே
அவர்தம்
பூசணிப்பூம் பாதமெங்கே
பூசணிப்பூக்களைச்
சூழ்ந்து கோலமாக்கும்
மார்கழியின் கூவுகுயில்கள்
எங்கே
பங்குனியில் நின்றுகொண்டு
இன்னும் மார்கழியில்
கோலம் போடும்
பேரிளம்பெண்டிரே
நான் இப்போது
மாசியில் நிற்கிறேன்
மன்னார்குடி
அங்கேதான் இருக்கிறது
திருவீதிகளும்
அங்கேதான்
இருக்கின்றன
மார்கழிப் பெண்டிரும்
அங்கேதான்
இருக்கிறார்கள்
மார்கழியும்
அங்கேதான்
இருக்கிறது
ஆனால்
அது எப்போதும்
ஒரே மார்கழியாக
இருப்பதில்லை
அதுதான்
அவர்களைப்
பங்குனியிலும்
என்னை மாசியிலும்
கொண்டுவந்து நிறுத்தி
அதனை வேடிக்கை
பார்க்க வைத்திருக்கிறது.
-ஆசை

Thursday, January 11, 2024

கமல், ஸ்டேன்லி கூப்ரிக்கை என்ன செய்தீர்கள்?

 

(குறுநாவலின் தொடக்கப் பகுதி)

ஆசை

(இப்படைப்பு முழுவதும் கற்பனையே. ஆனால் யாருடைய கற்பனை என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்தப் படைப்பு தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. இறுதியில் படைப்பும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்து இது யாருடைய கற்பனை என்று கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே. கமல், சத்யராஜ், வாகை சந்திரசேகர், நிக்கி கல்ரானி, ஜெய் மற்றும் ஸ்டேன்லி கூப்ரிக் ஆகியோரின் ரசிகர்கள் மனம் புண்படும் என்றால் அவர்களிடம் இந்தப் படைப்பு, மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.)

**

நடிப்பு: பத்மஸ்ரீ கமல்ஹாசன் (அப்போது உலக நாயகன் பட்டம் தரப்படவில்லை), சத்யராஜ், வாகை சந்திரசேகர், ஜெய், நிக்கி கல்ரானி இவர்களுடன் நானும் நீங்களும்.

கதை-திரைக்கதை-வசனம்: ஸ்டேன்லி கூப்ரிக், கமல்ஹாசன், நானும் நீங்களும்

இயக்கம் – முதல் அத்தியாயத்தின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்   

குறிப்பு: இத்திரைப்படம் மன்னார்குடி சத்யா திரையரங்கில் மட்டுமே தினமும் இரவு ஒரு மணிக்குத் திரையிடப்படும்

**

1.

சைக்கிளை விட்டு இறங்காமல் ஒற்றைக்காலை ஊன்றிக்கொண்டு  “கோபாலகிருஷ்ணன்” என்றான் பிரகாஷ்.

நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

“ஆனா இன்னைக்கு ரொம்ப ரொம்ப வேற விஷயம் அப்படின்னாரு சண்முகம் அண்ணே” என்றான். 

அவ்வளவு தூரம் சைக்கிள் மிதித்து வந்ததில் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அவனுக்கு.

“சரி நீ போ. நான் வந்துடுறேன்.”

சண்முகம் அண்ணன் சத்யா திரையரங்கின் உரிமையாளர். எங்களைப் போல கமல் ரசிகர். மன்னார்குடியில் நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் கமல் ரசிகர்கள். அதிலும் அதிதீவிர ரசிகர்கள். அது வெளியே. உள்ளுக்குள் நாங்கள் கமலின் ரகசிய சங்கத்தினர். ஓடுமோ ஓடாதோ என்ற கவலையின்றி கமலின் எல்லாப் படங்களையும் அவர் தன் திரையரங்கில் திரையிடுவார். இரண்டாவது, மூன்றாவது ரிலீஸ்களும் உண்டு. அவையெல்லாம், சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் மாதிரி நன்றாக ஓடிய படங்கள். அதிலெல்லாம் எங்களுக்கு ஈடுபாடு இல்லை. நான் பிறக்கும் முன்னே வந்த படங்கள், முதல் வெளியீட்டிலும் ஓடாத ஆனால் நல்ல படங்கள், பிற மொழியில் கமல் நடித்த நல்ல படங்கள் போன்றவற்றை நாங்கள் இரண்டாம் ஆட்டம் முடிந்து ஒரு மணிக்குப் போட்டுப் பார்ப்போம். இது மாதிரி மாதத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஒன்று நடக்கும். இதெல்லாம்கூட ‘அதிதீவிர’ என்ற பதத்துக்குள் நாங்கள் சேர்க்க மாட்டோம். 

அது வேறு விஷயம். ஆம்! எங்களைப் போல் தமிழ்நாடு முழுவதும் கமலின் ரகசிய சங்கத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எங்களுக்கு ஏதாவது ஒரு பொக்கிஷத்தைக் கொண்டுவருவார்கள். அது கமலின் கைவிடப்பட்ட படத்தின் திருடப்பட்ட ஃபிலிம் சுருள்களாக இருக்கலாம். படத்திலிருந்து நீக்கிய காட்சிகளாக இருக்கலாம். பட உருவாக்கத்தின்போது யாரோ ரகசியமாக எடுத்த வீடியோவாக இருக்கலாம். இதில் எனக்குப் புரியாத விஷயம் என்னெவென்றால் கொஞ்சம் எடுக்கப்பட்டுக் கைவிடப்பட்ட கமலின் வெளிவராத படங்களின் படச்சுருள் நெகட்டிவாகத்தானே இருக்கும். அதை எப்படி புராசஸ் செய்தார்கள்? ஜெமினி லேப், விஜயா லேப் போன்றவற்றில் இதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பிற மாநிலங்களில் புராசஸ் செய்தபின் இங்கே வந்திருக்குமோ என்று நினைத்துக்கொள்வேன். நாங்கள் செய்வது ஒரு வகையில் சட்டத்துக்குப் புறம்பான வேலை என்பதால் இதைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்வதில்லை. சண்முகம் அண்ணன்தான் ஆப்பரேட்டர். அதிகம் ஆப்பரேட்டர் அறையில் இருந்தே பார்ப்போம். சற்றே நீளமான படம் என்றால் திரையரங்கில் அமர்ந்து பார்ப்போம்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘டாப் டக்கர்’, ருத்ரையாவின் ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ போன்ற படங்களின் காட்சிகளைப் பார்த்தபோது எங்களைவிட அதிகப் பரவசம் அடைந்தவர் சண்முகம் அண்ணன். இருக்காதா, அந்தப் படங்கள் அறிவிக்கப்பட்ட காலத்தில் ஒரு இளைஞராக, கமல் ரசிகராக எவ்வளவு ஆர்வத்துடன் இருந்திருப்பார். அந்தப் படங்கள் கைவிடப்பட்ட பின்னும் வரும் வரும் என்று எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருப்பார். வரவே வராது என்று ஆன பின் அவற்றின் முடிவுபெறாத வடிவமாவது கிடைக்கிறதே என்பது எத்தகைய உணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை கடந்த சில மாதங்களாக மருதநாயகம் குறித்து நான் கொள்ளும் கவலைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரே ஒரு முறைதான் பிரகாஷை அடிக்கப் போய்விட்டார். 

“அண்ணே, எனக்கு ஒரே ஒரு ஆசைண்ணே. கமலுக்கும் ….க்கும் ஒரு வீடியோ இருக்குன்னு நெறைய பேரு பேசிக்கிறாங்க. அதை மட்டும் பார்த்துடணும்” என்று பிரகாஷ் கேட்டுவிட்டான். நான் குறுக்கே போய்ப் பாய்ந்து தடுக்காவிட்டால் அன்று அவனுக்கு உண்மையில் முதுகு பிளந்திருக்கும். அது மட்டுமல்ல, எங்கள் ரகசியச் சங்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கும். அல்லது, சண்முகம் அண்ணன் மட்டுமே ஒற்றை உறுப்பினராகத் தொடர்ந்திருப்பார்.

அவர் அடங்கிச் சற்று ஓய்ந்திருந்தபோது மெல்லிய குரலில் பிரகாஷ் மன்னிப்பு கேட்டுவிட்டுச் சொன்னான், “அதில்லண்ணே, காதல் காட்சிகள்லயே ரெண்டு பேருக்கும் இடையில அவ்வளவு லவ்வு தெரிஞ்சிதுண்ணே. உலகத்துலேயே அழகான அந்த ரெண்டு பேரும் உடம்பால இணையிற சமயத்துல அவங்க இன்னும் எவ்வளவு அழகா இருப்பாங்க. அதுவும் நடிப்பை மறந்து. அதுக்காகத்தான் அப்படிச் சொன்னேண்ணன். எனக்கு அந்த மாதிரி படங்கள்லாம் பாக்குறதுன்னா பாக்யா தியேட்டருக்குப் போக மாட்டேனா” என்று அவன் சொன்னதும் முடிந்தது கதை என்று நினைத்தேன். அவரோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். “அய்யோக்கியப் பயலே” என்று வி.கே.ராமசாமி மாதிரி சொல்லிவிட்டு அவன் முதுகில் ஒரு அடி கொடுத்தார். அப்பாடா சங்கம் தப்பித்தது என்ற நிம்மதி எனக்கு.

இன்றைக்கு ‘ரொம்ப ரொம்ப வேற விஷயம்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறாரே என்னவாக இருக்கும். ‘ஹே ராம்’ படம் வருவதற்கு இன்னும் ஒரு வருஷமாவது ஆகிவிடும். எல்.சுப்பிரமணியத்தை நீக்கிவிட்டு இளையராஜாவைப் போடப்போகிறார்கள் என்று வேறு கேள்விப்பட்டேன். அண்ணன் ’ரொம்ப ரொம்ப’ என்று சொல்லி அனுப்பினால் ரொம்ப ரொம்ப வேறு விஷயமாகத்தான் இருக்கும் என்று சில முறை கண்டிருக்கிறேன். 

பன்னிரண்டு மணிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.  


2. 

“இன்னைக்கு என்ன போடப் போறோம்னு நான் சொல்லப் போறதில்லை. ஏன்னா எனக்கே இன்னும் தெரியாது. ரீலை ஒரு மணிக்கு ஓட விடப் போறப்பதான் எனக்கும் தெரியும். அப்புறம் எனக்கு ரீலைக் கொடுத்தவங்க ரொம்ப ரொம்பக் கண்டிப்பா சொன்ன விஷயம் இந்த ரகசியத்தை சாகிற வரைக்கும் காக்கணும்ங்கிறதுதான். நமக்கு மட்டும் முதல் தடவையா தரப்பட்டிருக்குன்னு சொன்னாங்க” என்றார் சண்முகம் அண்ணன்.

“சரிண்ணேன்” என்று ஆப்பரேட்டர் அறையிலேயே நாற்காலியை இழுத்துப் போடப்போன என்னைப் பார்த்து “ம்கூம், ரெண்டு பேரும் உள்ளே போங்க” என்றார். அது வழக்கத்துக்கு மாறாக ஒரு ஆணை மாதிரி இருந்தது.

அரங்கத்தின் கதவைத் திறந்துவிட்டு ஒவ்வொரு படியாக இறங்கிக்கொண்டிருந்தோம். ஆனால், எனக்கென்னவோ ஏறிக்கொண்டிருப்பதுபோலவே ஒரு உணர்வு ஏற்பட்டது. பிரகாஷ் முகம் எப்படி இருக்கிறது என்பதும் இருட்டில் தெரியவில்லை. படத்தின் ஒளி வருவதற்கான பொந்து வழியாகக் குரல் வந்தது:

“வழக்கமா ஒக்கார்ற இடம் வேண்டாம். நட்ட நடுவுல உக்காருங்க”

அவர் சொன்னபடியே உட்கார்ந்தோம். எங்கள் மூச்சு சீராகும்வரை காத்திருந்தாற்போல் திரையில் ஒலி விழ ஆரம்பித்தது. 

“நான் வணக்கம் சொல்லப்போறதில்லை, நன்றிதான் சொல்லப்போறேன். ஏன்னா நீங்க பார்க்கப் போறது ஒரு படத்தோட கிளைமாக்ஸ்.” 

தலைவரின் குரல்.

அதனைத் தொடர்ந்து ஒளியும் திரையில் விழ ஆரம்பித்தது. எந்த எழுத்தும் இல்லை. இரவு தொடங்கும் நேரம் போல் இருக்கிறது. ஒரு பணக்கார வீட்டின் திறந்த வெளியில் ஏதோ விருந்து தொடங்கவிருக்கிறது. மிக மிக நீளமான அலுமினிய பெஞ்சில் வரிசையாக பஃபே போன்ற விருந்துக்காகப் பாத்திரங்களில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரத் தந்தை சத்தியராஜ் வருகிறார். (ஆ, மருதநாயகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் இதில் எப்படி?) உணவுப் பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறார். ஓரமாக நிற்கும் மாப்பிள்ளை வீட்டாரை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, 

“செய்வினையெல்லாம் செய்ய வக்கு இல்லதான். ஆனா அதுக்காக சும்மாவா வேடிக்கை பார்ப்பீங்க” என்கிறார்.

பதறிப்போன மாப்பிள்ளையின் தாயும் தந்தையும் (அப்படித்தான் இருக்க வேண்டும்) ஒரு பாத்திரத்தை ஒன்றாகத் தொடப்போக, அந்த நவீன வடிவமைப்பு கொண்ட அலுமினிய பெஞ்சில் அது வழுக்கிக்கொண்டுபோய் மறுமுனையைத் தாண்டிக் கீழே விழுந்து அதிலிருந்து ரசம் சிதறுகிறது. சத்தியராஜ் மறுபடியும் அவர்களை இளக்காரமாகப் பார்ப்பதற்குள் காட்சி மாறுகிறது. 

இரவுதான். அன்றைய இரவா, பல ஆண்டுகளுக்கு முந்தைய இரவா, பல ஆண்டுகள் கழித்து வரப்போகும் இரவா என்பதற்கெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், நீச்சல் குளத்திலிருந்து நீச்சல் உடையுடன் வெளிப்பட்டு நிக்கி கல்ரானி அழுதபடி, உடலில் நீர்ச் சொட்டச் சொட்ட ஓடுகிறார். அவர் பின்னாலேயே நீச்சல் குளத்திலிருந்து அப்பா சத்யராஜும் வெளிப்பட்டு மெதுவாக நிக்கி கல்ரானியைப் பின்தொடர்கிறார். எப்போதும் நீந்திக் குளித்தபின் அங்கிபோல் அணியும் தூவாலை உடையை நீச்சல் குளத்திலிருந்து வெளிப்படும்போதே சத்யராஜ் அணிந்திருந்தார். காட்சி அங்கே வெட்டப்படுகிறது. மாப்பிள்ளைக் கோலத்தில் ஜெய் பிணமாகப் படுத்திருந்தார். (இந்தக் காட்சிக்கு கமலை வசனம் எழுதச் சொன்னால் ‘மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருந்ததா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருந்தாரா’ என்று நிச்சயம் எழுதியிருப்பார்).        

ஜெய்க்கு அருகில் வாகை சந்திரசேகர் போலீஸ் உடையில், கூடவே மழை கோட்டு போல ஏதோ ஒன்றையும் அணிந்திருந்தார். கமலும் அதே மாதிரி ஆடைகளை அணிந்தபடி புரியாத மாதிரி சன்னமான குரலில் ஏதோ வசனம் பேசுகிறார். பிறகு விசிலடிக்க ஆரம்பிக்கிறார். 

அது ‘உன்னையறிந்தால் உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்’ பாடல். விசிலடித்துக்கொண்டே கமல் கேமரா நோக்கி வருகிறார். பின்னால் வாகை சந்திரசேகர் ஜெய்யின் மேலே உட்கார்ந்துகொண்டு தலையை ஆட்டிக்கொண்டு காலை இரண்டு பக்கமும் ஆட்டுகிறார். பாட்டின் தாளத்துக்கு ஏற்ப கமல் இன்னும் கேமரா நோக்கி நெருங்கி வருகிறார்.

பின்னால் வாகை சந்திரசேகர் தொடர்ந்து இன்னும் தலையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஜெய் திடீரென்று கார் ஆகிறார். வாகை தொடர்ந்து கால் ஆட்டுகிறார். கமல் பாடிக்கொண்டே இருக்கிறார். படம் முடிந்துவிடுகிறது.

என்ன இது? என்ன பார்த்தோம்? இதுவரை இப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே? எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? கருமாந்திரத்தை எடுத்துவைத்திருக்கிறாரா, இல்லை அபத்தத்தை அபத்தமாகவே கலைப்படுத்தியிருக்கிறாரா? யாரோ ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஏன் நிக்கி கல்ரானி என்ற பெயர் எனக்குத் தோன்றியது? பிணமாகக் கிடக்கும் அந்த நடிகரின் பெயர் ஜெய் என்று எனக்கு எப்படித் தோன்றியது? 

“கமல் கனவில் படம் எடுத்தால்கூட இப்படித்தான் எடுப்பார் போல” என்று நினைத்துக்கொண்டு பக்கத்தில் பிரகாஷைத் தேடினேன். அவனைக் காணவில்லை. அவன் அப்போதே போய்விட்டான் போல.

சண்முகம் அண்ணனிடம்கூட சொல்லாமல் எழுந்து, திக்பிரமையிலிருந்து விடுபடாமலேயே வெளியே வந்தேன். சைக்கிளில் ஏறியபோது திரையரங்குக்கு வெளியே ஓரத்தில் மிகவும் விலையுயர்ந்த கார் ஒன்று நிற்பது தெரிந்தது. காருக்குள் சிறு செவ்வக வடிவத்தில் மங்கலான வெளிச்சம் ஒரு ஜோடிக் கண்களின் மீது விழுந்திருந்தது. அந்தக் கண்கள் அங்கிருந்தே என்னைப் பின்தொடர்வது தெரிந்தது. எங்கேயோ பார்த்த கண்கள்.

3.

மறுநாளும் பிரகாஷ் வந்தான். இம்முறையும் “கோபாலகிருஷ்ணன்” என்றான்.

அடுத்தடுத்த நாட்களில் இப்படி நிகழ்ந்ததில்லையே என்ற குழப்பத்துடன் அவனிடம் இது குறித்துக் கேட்பதற்கு வாயைத் திறப்பதற்கு முன் தன் வாய் மேல் ஆட்காட்டி விரலை வைத்து எச்சரித்துவிட்டு மறுபடியும் “கோபாலகிருஷ்ணன்” என்றான். நானும் “கோபாலகிருஷ்ணன்” என்றேன். சங்கேதம் ஒப்புக்கொள்ளப்பட்டது. “இன்னும் ரொம்ப ரொம்ப வேற மாதிரி” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பன்னிரண்டரை மணிக்குத் திரையரங்க வாசலில் எனக்காக பிரகாஷ் காத்திருந்தான். நேற்று போலவே அதே மாதிரியான சடங்குகள். இருட்டுக்குள் நடுவாந்திரமாகப் போய் உட்கார்ந்ததும் ஒலி தொடங்கியது. தலைவரின் அதே குரல், அதே வார்த்தைகள். அதே போன்ற காட்சிகள். ஆனால், ஜெய் பிணமாகக் கிடப்பது வரைதான் நேற்று மாதிரி. 

“கொலையா தற்கொலையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்கான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“உயிரோட இருக்கானா இல்லையா?” என்று கமல் கேட்கிறார்.

“இரண்டுக்குமான அறிகுறியும் தெரியலை” என்கிறார் வாகை.

“வாகை, யூ ரிப்பீட் யுவர்செல்ஃப். மேக் ஹிம் டு பி சம்ஒன்” என்று சொல்லிவிட்டுத் திரையின் முன்னுள்ள திசை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல்.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ படத்தின் காட்சிப்படுத்தும் விதத்தை கமல் காப்பியடித்திருக்கிறார் என்ற நினைப்பு என்னுள் தோன்றி மறைவதற்குள்,

மாப்பிள்ளைக் கோலத்தில் பிணம் படுத்திருக்கிறதா, இல்லை பிணக் கோலத்தில் மாப்பிள்ளை படுத்திருக்கிறாரா? நோ கன்ட்ரி ஃபார் யங் மென்” என்று சொல்லிவிட்டு திரையின் முன்னுள்ள திசை நோக்கி, இல்லை என்னை நோக்கிக் கண்ணடிக்கிறார் கமல். 

“ஓ மை காட்! கமல் மைண்ட் ரீடிங் ஃபிலிம் எடுத்திருக்கிறார், அல்லது எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் ‘ரொம்ப ரொம்ப வேற மாதிரி’ என்பதன் அர்த்தம். ஒரே ஒருவருக்காக, அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அறிவியல் வரலாற்றில், சினிமா வரலாற்றில் இதுபோன்ற ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே. அல்லது நாம் கனவு கண்டுகொண்டிருக்கிறோமா? திரும்பிப் பக்கத்தில் பார்த்தால் பிரகாஷை இன்றும் காணோம்.

கமல் விசிலடிக்க ஆரம்பிக்கும்போதே எழுந்து ஆப்பரேட்டர் அறைக்குச் செல்கிறேன். அங்கே சண்முகம் அண்ணன் நக்கலா முறைப்பா என்று சொல்ல முடியாத ஒரு பார்வையுடன் என்னைப் பார்த்தபடி நிற்கிறார். 

“படத்தை நிப்பாட்டுங்கள் அண்ணே. நான் ஃபிலிமைப் பார்க்கணும்,”

அவர் நிப்பாட்டுகிறார். நான் சொன்னதை அவர் உடனே கேட்டதில் கூட ஏதோ சூட்சமம் இருப்பதுபோல் தெரிந்தது.

அவர் நிறுத்தியதும் மின்விளக்கைப் போட்டுவிட்டு ஃபிலிமைப் போய் எடுத்துப் பார்த்தேன். என்ன இது, ஒரே ஒரு ஃபிரேம்தான் ஒட்டுமொத்தப் படச் சுருளிலும் தொடர்ந்து வருகிறது. கமல் பார்வையாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், பின்னணியில் ஒரு கார் மேலே வாகை உட்கார்ந்திருக்கிறார். ஒரே ஒரு காட்சிதான், எல்லா ஃபிரேம்களிலும். என் உதடுகள் “ஆல் வொர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்” என்று உச்சரிக்கத் தொடங்குகின்றன. அதையே உச்சாடனம் போல் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அறையிலிருந்து சண்முகம் அண்ணன் பதுங்கிச் சென்றுவிடுகிறார். நான் உச்சாடனத்தை நிறுத்தாமல் பக்கவாட்டில் பார்க்கிறேன். ஆப்பரேட்டர் அறையிலிருந்து திரையரங்கை விட்டு வெளியேறுவதற்கான கதவு நிலையில் சாய்ந்துகொண்டு குறுஞ்சிரிப்புடன் கமல் நிற்கிறார். ஷெல்லி டூவாலின் கையில் இருந்ததைப் போலவே ஒரு பேஸ்பால் மட்டையுடன் கமல். மன்னார்குடியில் இப்போதுதான் ஒரு பேஸ்பால் மட்டையை முதன்முதலில் பார்க்கிறேன்.

சண்முகம் அண்ணனின் குரல் மட்டும் வெளியிலிருந்து கேட்கிறது. “தம்பி, சங்கத்துக்கு இன்னொரு உறுப்பினர் இருக்காரு. நேத்துவரைக்கும் உன் கண்ணுக்குத் தெரிஞ்சதில்ல.” இப்போது புரிந்தது, கிடைப்பதற்கே வாய்ப்பில்லாத படச்சுருள்கள் பலவும் எப்படி சங்கத்துக்குக் கிடைக்கிறது என்பது.

பேஸ்பால் மட்டையை கமல் தனது இன்னொரு கைமீது மெதுவாக அடித்தபடி என் மீது விழிகளை விலக்காமல் என்னை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார். அந்த அறையின் இன்னொரு கதவு நோக்கி ஓடுகிறேன். ஆனால், அது திரையரங்குக்குள் செல்லும் கதவு.


4.

திரையரங்குக்குள் நுழைந்ததும் ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் போடப்பட்டது. திரையில் வேறொரு படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், நான் இருக்கும் நிலையில் அது என்ன படம் என்று நான் கவனிக்கவில்லை. நான் கமலை நோக்கியவாறே பின்பக்கமாக இறங்கிக்கொண்டிருந்தேன். திரும்பி நேராக ஓடலாம். ஆனால், எனக்கு என்ன நிகழப் போகிறது என்பதை கடைசி நொடித் துகள் வரை நேரே கண்டுவிட விரும்பினேன். 

கமல் கேட்டார், “இந்த ஊரில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள்?”

“நிறைய பேர். அபூர்வ சகோதர்கள், தேவர் மகன்லாம் நூறு நாள் ஓடுச்சு”

“அப்புறம் ஏன் குணா, மகாநதி எல்லாம் ஒரு வாரத்தைக்கூட தாண்டவில்லை? இப்போ சொல்லு இந்த ஊரில் எனக்கு எத்தனை ரசிகர்கள்”

“மூன்று பேர்.”

“அதெப்படி இன்னும் ஒன்பது வருஷம் கழிச்சு வரப்போற ‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்’ படத்தை நான் இப்பவே காப்பியடிச்சிருக்கேனா?”

“……..”

“நான் என்ன படம் எடுக்கிறேன்?”

“மைண்ட் ரீடிங் படம்”

”சபாஷ்! அப்புறம்”

“மைண்ட் கன்ட்ரோலிங் படம்”

“ட்ரூ ட்ரூ! அப்புறம்”

“இன்டெராக்டிவ் படம்”

“அற்புதம்! அப்புறம்”

“டைம் ட்ராவலிங் படம்”

“யூ மீன் டைம் ட்ராவல் படம்?”

“இல்லை இல்லை! டைம் ட்ராவல் செய்யுற படம்”

“ப்ரில்லியண்ட்! அப்புறம்”

“செல்ஃப் திங்க்கிங் படம்”

“வாவ்! அப்புறம்”

“செல்ஃப் ட்ரீமிங் ஃபில்ம்”

“எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… எவ்ரிதிங்… யூ காட் மை பாய்ண்ட் பீம் பாய். அண்ட் அனதர் திங்க், படச்சுருள் இட்செல்ஃப் இஸ் எ திங்கிங் பீயிங். எ சென்டியண்ட். என் ரசிகன் ஒரு சென்டியண்ட் படச்சுருளாகத்தான் இருக்க வேண்டும். அவனைத் தேடித்தான் இதுநாள் வரை நான் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். என் கலையைப் பரிபூரணமாக உள்வாங்கக் கூடிய ரசிகன் நீயே” என்று சொல்லிவிட்டு ‘விக்ரம்’ (1986 & 2022) பாட்டுக்கிடையில் வருவதைப் போல் பயங்கரமாகச் சிரிக்கிறார். இவ்வொரு படி இறங்கும்போதும் மட்டையால் தன் கையில் மெதுவாக அடிப்பதை நிறுத்தவே இல்லை.

“கமல் தயவுசெஞ்சு நிறுத்துங்க” என்று கெஞ்சினேன்.

“இங்க கமல்னு யாரும் இல்லை. நான் ஜாக் நிக்கல்சன்” என்றார்.

“இல்லை நீங்க கமல், நான் ஆசை, ஆசைத்தம்பி.”

“இனிமே நீ ஆசை இல்லை, ஷெல்லி டூவால். வேண்டுமென்றால் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்” குரூரமாக இளித்தார்.

“இங்கே கண்ணாடி ஏதும் இல்லையே.”

“நான் எங்கிருந்து வந்தேனோ அதுதான் கண்ணாடி. டயலாக் நல்லா இருக்குல்ல?” 

“கூப்ரிக் கூப்ரிக் நிறுத்துங்க. கட் சொல்லுங்க” என்று குத்துமதிப்பாக ஒரு திசையைப் பார்த்துக் கதறினேன்.

“இந்த ஷாட்டை கட் செய்வதற்கு கூப்ரிக் என்று யாரும் வர மாட்டார். இப்போதுதான் இதே மட்டையால் அடித்து அவரைக் கொன்றுவிட்டு வந்தேன். வேண்டுமென்றால் இந்த மட்டையைப் பார். ரத்தம். திஸ் ஷாட் இஸ் ஹியர் டு ஸ்டே ஃபாரெவர் லைக் ‘ஆல் ஒர்க் நோ ப்ளே மேக்ஸ் ஜாக் எ டல் பாய்.” 

திரையை நோக்கி ஓடுகிறேன். திரைக்குள் பாய்ந்தால் கிழித்துக்கொண்டு அந்தப் பக்கம் வழியாகத் தப்பிக்கலாமே என்ற யோசனை வருகிறது. திரையின் அந்தப் பக்கம் இதுவரை பார்த்ததில்லையே, வழி இருக்குமோ இருக்காதோ என்றாலும் இப்போது எங்காவது பாய்ந்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பாய்கிறேன். 


5.

பாய்ந்துவிட்டேன். ஆனால் திரைக்கு அந்தப் பக்கம் இல்லை நான். வேறு எங்கே இருக்கிறேன்? அங்கே ஒரு கறுப்புச் செவ்வகக் கல் இருந்தது. அதைச் சுற்றிலும் சிம்பன்சிகள் இங்குமங்குமாக அலமலந்துகொண்டிருந்தன. ஓ கூப்ரிக், விடவே மாட்டீர்களா? சற்று அருகே சென்று பார்த்தேன். அதன் மேல் பக்கம் ஸ்டேன்லி கூப்ரிக் என்று எழுதி அதன் கீழே இப்படி இருந்தது: “Here lies our love Stanley with Eyes Shut Wide, born in New York city on 26 July 1928, Died here at home on 7 March 1999 buried 2,00,000 years ago” 

இன்றைய தேதி என்ன? அப்படியென்றால் கமல் உண்மையைத்தான் சொல்கிறாரா? ஸ்டேன்லி கூப்ரிக் இறந்துவிட்டாரா? நான் திரையரங்குக்கு வரும் வரை எந்தச் செய்தியிலும் பார்க்கவில்லையே. தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ கூப்ரிக்கின் முக்கியத்துவம் தெரியாது என்பதால் இன்றோ நாளையோ எப்போதும் தமிழ்ச் செய்திகளில் அவரது மரணம் இடம்பெறுவது கடினம். எனக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் கிடைத்திருக்கிறது. சினிமா ஆர்வலர்களிடமாவது பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், வெளியே எப்படிப் போவது?

இவ்வளவு நேரமும் என்னையே குரூரக் குறுஞ்சிரிப்பு மாறாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் கமல்.

என் முன்னே எத்தனை வாய்ப்புகள், தெரிவுகள் இருக்கின்றன என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

இன்னும் சற்று நேரத்தில் அந்தச் செவ்வகக் கல் இருக்கும் இடமருகே ஒரு சக குரங்கின் எலும்பாயுதத்தால் அடிவாங்கிச் சாகவிருக்கும் ஒரு குரங்கு போலவே நானும் கமல் கையால் அந்த மட்டையாலேயே அடிவாங்கி செத்துப்போகலாம்.

இல்லையெனில் அங்கேயே இருந்துகொண்டு குரங்கின் அறிவு வளர்ச்சியைத் தூண்டும், அதன் மூலம் பரிணாம மாற்றம் நிகழ்த்தும் செயல்களை இப்போதோ அப்போதோ சாகும் வரை செய்துகொண்டிருக்கலாம். 

இல்லையெனில் குரங்கிலிருந்து மனிதன் என்பதன் முதல் படியாக முதல் மனிதக் குழந்தையின் தகப்பனாகலாம். பரிணாம மாற்றத்தைப் பொறுத்தவரை அது படிப்படியானதாக இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கூறியதுபோல் ’ஜெயண்ட் லீப்’பாக இருக்கும். கூடவே, தன் இணையைக் கவர்ந்ததால் என்மேல் பொறாமை கொண்ட ஆண் குரங்கொன்றால் அடித்துக் கொல்லப்பட்ட முதல் மனிதனாகவும் நான் ஆகலாம். 

தப்பிக்க வழி இல்லாமல் இருக்காது. எனினும் ஸ்டேன்லி குப்ரிக் படத்துக்கு ஒருபோதும் முடிவு கிடையாது. தெரியவில்லை, இது ஸ்டேன்லி படமா கமல் படமா என்று. ஸ்டேன்லி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கொண்டுபோய்த் தன் கல்லறைக் கல்லை சும்மா வைத்திருப்பார் என்று தோன்றவில்லை. அது நிச்சயம் என்னை எதிர்காலத்துக்கோ வேறு பிரபஞ்சத்துக்கோ கொண்டுசெல்லும் புழுத்துளையாகத்தான் இருக்கும். 

ஆனால், அசைக்கவே முடியாத ஆகிருதியுடன் அது இருந்தது. திறப்புகளோ, ஒட்டவைக்கப்பட்ட விளிம்புகளோ ஏதும் இல்லை. படச்சுருளின் ஃப்ரேமும், கையில் பேஸ்பால் மட்டையுடன் இருக்கும் கமலும் அனுமதிக்கும் காலத்துக்குள் நானும் எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டேன். பிறகு ‘த யூஸுவல் சஸ்பெக்ட்ஸ்’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆம், உடைத்துப் பார்த்துவிட வேண்டியதுதான். துணிந்து கமலிடம் கேட்டேன்:


“கமல், அந்த பேஸ்பால் மட்டையைத் தாங்களேன்”

“கட்” என்ற சத்தம் திரைக்கு முன்னாலிருந்து கேட்டது. அது ஸ்டேன்லி கூப்ரிக் குரல் போல இல்லை, சந்தானபாரதி குரல் போலத்தான் இருந்தது. 

(தொடரும்)


நன்றி:

‘The Shining’ and ‘2001: A Space Odessey’ by Stanely Kubrick

‘No Country for Old Men’ by Coen Brothers

‘The Usual Suspects’ by Christopher McQuarrie

கமல் ரகசியச் சங்கம், மன்னார்குடி கிளை


Wednesday, January 10, 2024

ஓர் அறிவிப்பு! - என்னை விடுங்க சாமிகளா!


(எச்சரிக்கை: இலக்கியம் உடலுக்கும் மனதுக்கும் பெருங்கேடு)

நான் இனிமேல் புத்தக விமர்சனங்கள் எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். குறிப்பாகத் தமிழ்ப் புத்தகங்களுக்கு. நான் விமர்சனம் எழுதுவதாக ஒப்புக்கொண்ட ஓரிரு நண்பர்கள் என்னை மன்னிக்கவும். அதே போல் எந்த இலக்கிய நிகழ்வுகளில் பேசுவதற்கும் என்னை தயவுசெய்து கூப்பிட வேண்டாம்!

நான் இந்த முடிவுக்கு வருவதன் பின்னணியில் பல்வேறு தொடர்ச்சியான காரணங்கள், அவமானங்கள், அவதூறுகள், இருட்டடிப்புகள் உண்டு. அவற்றுள் சமீபத்திய ஒரு சிறு சம்பவத்துக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்தேன். இதனை நான் எழுதக்கூடாது என்றே இருந்தேன். சம்பந்தப்பட்டவர்களைச் சங்கடப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால், அந்தச் சிறு சம்பவம் அதற்கு முன் நான் எதிர்கொண்ட எல்லா அவமானங்களின் தொடர்ச்சி என்பதால் என்னைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டது. அதனால்தான் எழுதுகிறேன். 

சமீபத்தில் ஒரு புதிய கவிஞர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்கள் இருவருக்குமே பரஸ்பர அறிமுகம் கிடையாது. ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன் அவரது சில கவிதைகள் நன்றாக இருக்கிறது என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். அவரது முதல் நூல் வெளியிடப்போவதாகவும், அதனை நான்தான் வெளியிட்டு உரையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஏனெனில், எனக்கெல்லாம் அப்படி நடந்ததே இல்லை. அதற்குச் சில நாட்கள் கழித்து அவரே என்னைத் தொடர்புகொண்டார். மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பேசினார். “சார், யார் வெளியிட்டுப் பேசப்போறாங்க என்று கேட்டாங்க. நான் உங்க பேரைச் சொன்னேன். தவிர்க்கச் சொல்லிட்டாங்க. என்ன சார் செய்யுறது?’ என்று கேட்டார். அதற்குக் காரணம் இந்து தமிழ் நாளிதழில் நான் இருந்தபோது  அந்தப் பதிப்பகத்தின் புத்தகங்களையெல்லாம் நான் தவிர்த்துவிட்டதாக அவர்கள் (முற்றிலும் தவறாக) நினைத்துக்கொண்டதுதான். ‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க முதல் புத்தகத்த வெளியிடுறாங்க. அவங்க சொல்லுறததான் நீங்க கேட்கணும். முதல் புத்தகம் முதல் குழந்தை மாதிரி. எந்தச் சங்கடமும் இல்லாமல் முழு மகிழ்ச்சியுடன் இருக்கணும்’ என்று சொன்னேன். அதனால் அது குறித்து அப்போது நான் ஏதும் வெளியில் எழுதவில்லை.   

உண்மை என்னவென்றால் நான் இந்து நாளிதழிலிருந்து புறப்படுவதற்கு முன் இறுதியாக எழுதிய விமர்சனம் அந்தப் பதிப்பகத்தின் இரண்டு நூல்களைப் பற்றித்தான். அந்த புத்தகங்களின் ஆசிரியரான இளைஞரை எனக்கு முன்பின் தெரியவே தெரியாது. மேலும், அந்தப் பதிப்பகம் வெளியிட்ட மேலும் இரண்டு இளம் எழுத்தாளர்களின் பேட்டிகளை நானே எடுத்திருக்கிறேன். இது தவிர சிறு சிறு குறிப்புகள், சிறு சிறு விமர்சனங்கள் என்று அந்தப் பதிப்பகத்தின் நூல்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. எல்லா நூல்களைப் பற்றியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். இது எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொருந்தும்தானே. இந்தப் புள்ளியில்தான் அனைத்துப் பதிப்பகங்களும் கடந்த 10 ஆண்டுகளாக என்னிடமும் அணி நண்பர்களிடமும் குறையாகவும் புலம்பலாகவும் குற்றச்சாட்டாகவும் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ‘நீங்க எங்க பதிப்பகப் புத்தகங்களைக் கண்டுகொள்வதே இல்லை’.

இதெல்லாம் பரவாயில்லை. ‘வெண்முரசு’ தொடரை ஜெயமோகன் எழுத ஆரம்பித்த சில காலத்தில் அவரது பெரிய பேட்டி ஒன்றை நடுப்பக்கத்திலும் அவரது வேறு பேட்டி ஒன்றை இன்னும் விரிவாக தீபாவளி மலரிலும் வெளியிட்டோம். எடுத்தவர் நண்பர் ஷங்கர்ராமசுப்பிரமணியன். ஆனால், ஜெயமோகன் திரும்பத் திரும்ப இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார், “உலகிலேயே பெரிய நாவல். எவ்வளவு பெரிய சாதனை. என்னை மலையாள இதழ்களின் அட்டைப் படத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் முழுவதும் புறக்கணித்துவிட்டார்கள். இந்து தமிழில் வந்த ஒரே ஒரு பேட்டியும் விஷ்ணுபுர வாசகர் வட்ட நண்பர்களின் முயற்சியால் வெளிவந்தது.” எவ்வளவு பெரிய பொய்! தன்னைக் கொண்டாடவில்லை என்று புலம்பும் ஒருவர் கொண்டாடியவர்களை இருட்டடிப்பு செய்வது உண்மையில் அயோக்கியத்தனமன்றி வேறென்ன? நான் பார்த்த அவரது ஒரே ஒரு நிகழ்ச்சியிலும் இதையே அவர் கூறினார். 

வெண்முரசு பற்றி ஒரு பாரபட்சமில்லாத மதிப்புரையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று முயன்றுகொண்டிருந்தேன். வி.பு.வா.வ நண்பர் ஒருவரிடமும் இதுகுறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், ஜெ.மோ. தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டிருந்ததில் வெறுப்புற்று முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் பதிலுக்கு அவரோ தமிழ் இலக்கியத்துக்கு வெகுஜன இதழ்களில் கடற்கரயும். நா.கதிர்வேலனும் மட்டுமே பங்களிப்பு செய்தார்கள், இந்து தமிழ் ஏதும் செய்யவில்லை என்று இந்து தமிழ் நாளிதழ் நண்பர்கள் அத்தனை பேரின் அர்ப்பணிப்பையும் ஒரே வரியில் டிஸ்மிஸ் செய்துவிட்டார். அவரே இந்து தமிழ் ஒரு மாபெரும் அறிவியக்கம் என்றும் பேசியிருக்கிறார். அவரைப் பற்றிதான் நமக்குத் தெரியுமே. கூடவே, ஆசை, (அப்புறம் இன்னொரு சகாவும்) ஒரு இலக்கிய மொண்ணை என்று எழுதினார். இதுவும் சரி கண்ணன் தொடர்ச்சியாகச் செய்த அவதூறுகளும் சரி என்னை மன உளைச்சலின் உச்சத்துக்கே கொண்டுபோய்த் தள்ளி மனநல மருத்துவரைத் தொடர்ச்சியாகப் பார்க்க வைத்தது. இவ்வளவு நாளும் இதைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் உள்ளுக்குள்ளே வைத்துப் புழுங்கிக்கொண்டிருக்கவும் என்னால் முடியவில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் வந்த ஒருவனால் இதையெல்லாம் தாங்க முடியாது. எந்த நிறுவனமும் பின்னால் நிற்காது. 

அடுத்தது மனுஷ்ய புத்திரன்! அவர் முகநூலில் எனது நட்பில் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் அவ்வப்போது எனக்கு அவரது சில பதிவுகளைக் காட்டுவார்கள். அவர் பெரும்பாலும் ‘இந்து தமிழில் என்னைப் புறக்கணிப்பு செய்தார்கள். சமஸ், அரவிந்தனோடு முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் என்னைப் பற்றி இடம்பெறச் செய்வார்கள். ஆனால், உள்ளே என் மீது வன்மம் கொண்டவர்கள் இருந்தார்கள்’ என்றரீதியில் எழுதியிருந்தார். இன்னொரு முறை, ‘மிஸ் யூ’ வெளியாவதற்கு முன் அதன் முன்வெளியீட்டுத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு கைபேசி எண்ணுடன் கொடுத்திருந்தோம். அவர் எழுதுகிறார். ‘குறைந்தபட்சம் இந்து தமிழாவது வெளியிடுகிறார்களே. 2000 கவிதைகளுக்கு 9 வரிகள். அடுத்த ஆண்டு 5000 கவிதைகள் எழுதினால் 20 வரிகளுக்கு மேலாவது எழுதுவார்களா என்று பார்ப்போம்’ (நினைவிலிருந்து எழுதிய வரிகள். ஸ்க்ரீன்ஷாட் வேண்டுமென்றால் பல கி.மீ. பயணிக்க வேண்டும்.) முன்வெளியீட்டுத் திட்டத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு புத்தகம் கூட அனுப்பவில்லை. ஆனால் புலம்பல். இதை என்னவென்று சொல்வது? மேலும் அவருடைய இரண்டு கவிதை நூல்கள் வெளியானபோது அவற்றின் முன்னுரைகளை வெளியிட்டோம். அவருடைய புத்தகங்கள் வெளியான வெவ்வேறு தருணங்களில் எனக்குத் தெரிந்து மூன்று பேட்டிகளாவது வெளியிட்டிருக்கிறோம். அவற்றை எடுத்தவர்கள் வேறு நண்பர்கள் என்றாலும் இரண்டு பேட்டிகளில் கணிசமான கேள்விகள் என்னுடையவை. (நான் பேட்டி எடுத்தாலும் நண்பர்களின் கேள்விகள் அதில் இருக்கும்). ஆனால், நாங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டோம், புறக்கணிப்பு செய்துவிட்டோம்! 

பிரபல நால்வரான ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோருக்கு நாங்கள் பெரும்பாலும் நூல் விமர்சனம் வெளியிட்டதே இல்லை. அதற்குப் பதிலாகப் பேட்டிகள் , முன்னுரைகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டோம். ஏனென்றால், விமர்சனம் எழுதி ஒரு வரி கூட அவர்களைப் பற்றி குறையாக எழுதிவிட முடியாது, முன்னோடிகள் என்று ஆகிவிட்டவர்கள் என்பதால்.  

மனுஷ்யபுத்திரனின் முன்னெடுப்பில் இலக்கியவாதிகளை வைத்து எத்தனையோ நிகழ்வுகள் நடத்தப்படுகின்றனவே. அதில் ஒன்றில்கூட ஆசையின் பெயரை நீங்கள் பார்த்திருப்பீர்களா. லட்சம் கவிஞர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் ஆசையின் பெயர் இருக்காது. மனுஷ் மட்டுமல்ல மற்றவர்களின் நிகழ்வுகளிலும் அப்படியே. அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. அது தனிப்பட்ட ரசனையின் தெரிவாக இருக்கும். எந்தச் சதியோ வஞ்சமோ வன்மமோ இருக்காது என்று நம்புகிறேன். அதே சுதந்திரத்தை எனக்கும் என்னைப் போன்ற நண்பர்களுக்கும் வழங்க வேண்டுமல்லவா. 

மனதாரச் சொல்கிறேன், யாரையும் தடுக்கவோ யாருக்கெதிராகவும் சதி செய்யவோ நானும் நண்பர்களும் ஒருபோதும் நினைத்ததில்லை. எதிர்வினைகளைக் கூட முகநூலில்தான் ஆற்றியிருக்கிறோம். அதற்காகப் பத்திரிகையைப் பயன்படுத்தவில்லை. நூல்விமர்சனப் பக்கம் என்பது ஒரு வாரத்தில் ஒரு பக்கம் மட்டுமே, முன்பு இரண்டு பக்கங்களாக வந்தது. எங்கள் பெரும்பாலான சக்தி வாரம் முழுவதும் இடம்பெறும் நடுப்பக்கங்களுக்கே போய்விடும். இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு அதிலும் ஜனநாயகத்தன்மையைக் கடைப்பிடிப்பதற்காக எல்லோரையும் உள்ளடக்கி இலக்கியப் பக்கங்கள் நடத்தப்பட்டன. நூல் விமர்சனம், பேட்டி போன்றவற்றுக்கான வரையறை இதுதான்: 1. அந்த நூல்கள் நமக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் (அனுப்பப்படாத நூல்கள் நல்ல நூல்கள் என்று கேள்விப்பட்டால் சொந்தக் காசில் வாங்கியும் விமர்சனங்கள் எழுதியிருக்கிறோம்), 2. அவற்றைப் படித்திருக்க வேண்டும். 3. படித்தவருக்கு ஏதோ ஒரு வகையில் அந்த நூல் பிடித்திருக்க வேண்டும். 4. அணியினரின் ரசனைக்கு உட்பட்டதில்லை என்றாலும் அதற்குப் பொதுவெளியில் ஒரு முக்கியத்துவம் உருவாகியிருந்தாலும்  அதைப் பற்றியும் எழுதுவோம் (எ-டு. ராஜேஷ்குமார்) இதைத் தாண்டியும் நேரமின்மை, எல்லோருக்கும் இருக்கக் கூடிய போதாமை போன்றவற்றால் முக்கியமான நூல்கள் விடுபட்டிருக்கலாம். எல்லோரும் விடுபட்டதன் சித்திரத்தைதான் பெரிதுபடுத்திப் பேசுகிறார்களே தவிர, வரையப்பட்டதன் சித்திரத்தை யாருமே பார்ப்பதில்லை, அதைப் பற்றிப் பேசுவதும் இல்லை. 

புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர். எனது ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) கவிதை நூல்கள் வெளியானபோது, கடந்த காலத்தில் அவர் எனக்குக் காட்டிய நட்பின் நிமித்தமாக அந்த நூல்களை அனுப்பிவைத்தேன். வேறொரு விஷயமாக அவரிடம் ஒருமுறை தொலைபேசியில் பேசியபோது அவராகவே, “உங்க ரெண்டு தொகுப்புகளும் படித்தேன். ரொம்ப முக்கியமான தொகுப்புகள். ஆனா சூழல்ல இதைப் பத்தியெல்லாம் பேசப்படுறதேயில்லைங்கிறதுதான் துரதிருஷ்டம்” என்று வேதனைப்பட்டார். அவரும் வெளியில் அந்தத் தொகுப்புகளைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், எவ்வளவு புகழ்பெற்றாலும் தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை, தன்னைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பல். ஐயா நீங்களே புலம்பினீர்கள் என்றால் யாருடைய வாங்கும் விருப்பப் பட்டியலிலோ, வாங்கிய பட்டியலிலோ, பிடித்த கவிஞர்கள் பட்டியலிலோ, ஒரு சிறு மேற்கோளாகவோ மேலும் கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள், விமர்சனக் கூட்டங்கள் என்று எதிலும் சிறு இடம் கூட வழங்கப்படாத ஒருத்தன் எவ்வளவு புலம்ப வேண்டும்?

பத்து ஆண்டுகள் ஒருத்தன் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் இருந்திருக்கிறேன். மிகப் பெரிய இலக்கிய நிகழ்வுகள் இரண்டுக்கு முக்கியப் பொறுப்பு வகித்திருக்கிறேன். ஏராளமான நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். இலக்கியப் பக்கங்களுக்குச் சில ஆண்டுகள் பொறுப்பில் இருந்திருக்கிறேன். ஆனால் நம்புவீர்களா, இதுவரை நான் அழைக்கப்பட்டுப் பேசிய இலக்கிய நிகழ்ச்சி நடராஜன் பாரதிதாசனின் கவிதை நூலுக்கு மட்டும்தான். 

மேலும் சமீபத்தில் என்னுடைய கவிதை நூல்களுக்கு முதன்முறையாக ஒரு கூட்டம், அதுவும்கூட ஜூம் மீட்டிங்கதான், நடக்கவிருந்தது. அதனை ஏற்பாடு செய்தவர்கள் பேராசிரியர்கள், கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள். நவீன இலக்கிய உலகோடு அவ்வளவாகத் தொடர்பற்றவர்கள். ஜெயமோகனின் வாசகர்கள். ஜெயமோகனை நான் விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு என் வலைப்பூவில் கவிதைகளையும் படித்துப் பார்த்து மகிழ்ந்துபோனவர்கள். அந்த மீட்டிங்கில் என் கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு யாராவது முக்கியமான எழுத்தாளர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார்கள். நானும் சில நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தேன். அவர்களுக்கு உண்மையிலேயே நியாயமான காரணங்கள் இருந்ததால் அவர்கள் தயக்கத்துடன் மறுத்துவிட்டார்கள். எனக்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ ஒரு வகையில் விமர்சனம் எழுதிய, பேட்டி எடுத்த எழுத்தாளரிடம் கேட்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். நன்றிக்கடன் போன்று நான் எதிர்பார்ப்பதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக. மேலும் அவர்களில் பெரும்பாலானோர் என் எழுத்துகளைப் படித்திருக்கிறார்களா, அவர்களின் ரசனைக்கு என் எழுத்துகள் உட்பட்டவையா என்று தெரியாத நிலை. ஆகவே, ‘ஆசை படைப்புலகம்’ (!) பற்றி கவிஞர் ஆசையே பேசினார். அந்தப் பேராசிரியர்களும் பேசினார்கள். 

இந்த நிகழ்வு குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவு போட்டுக்கொண்டுவந்தேன். என் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸும் வைத்திருந்தேன். ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? மூன்றே மூன்று பேர். அதில் ஒருவர் கவிதையுடன் தொடர்பற்ற, என் மேல் அன்புள்ள என் முன்னாள் சகா, மற்ற இரண்டு பேரும் என் கவிதைகளைப் படித்திருக்கிறார்களா என்று தெரியாது, அவர்களும் என் மேல் உள்ள அன்பினால் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள். ஒருவரை இதுவரை நான் சந்தித்ததே இல்லை, இலங்கையிலிருந்து கலந்துகொண்டார். இத்தனைக்கும் பலருக்கும் வசதிப்பட வேண்டுமென்று ஞாயிறு அன்றுதான் வைத்திருந்தோம். என் நெருங்கிய நண்பர்கள்கூட வரவில்லை. ச்சே என்று அலுத்துப்போனது. ஒரு solidarityiயைக் கூட சம்பாதிக்காமல் போய்விட்டோமே என்று வெறுப்பாக இருந்தது. நானும் எல்லோரும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லைதான். ஆனால், ஒருத்தருக்கு ஒரு முக்கியமான நிகழ்வென்றால் ஆதரவு கொடுப்பதற்கென்று சிறு குழுவாவது இருக்குமல்லவா!   

இதற்கெல்லாம் நானும் ஒரு காரணம். நான் இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள் என்று யாரோடும் என்னை Align செய்துகொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் ஒரு எழுத்தாளருக்கு நண்பராக இருந்தால்கூட அவருக்கு ஏதோ ஒரு வகையில் நாம் கட்டுப்பட்டுவிடுவோம் என்று நான் பெரும்பாலான முக்கிய எழுத்தாளர்களின் நண்பராக இல்லை. நட்பில் இருக்கும் கணிசமான எழுத்துலக நண்பர்களும் அவர்களின் நட்பழைப்பை நான் ஏற்றுக்கொண்டதே. அதனால்தான் இன்னும் மூவாயிரத்திலேயே முட்டிக்கொண்டு நிற்கிறது. எழுத்தாளர்கள் நண்பர்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இங்கே அது மட்டுமா நடக்கிறது.  கடுமையான அகமண முறையில் சிக்கிக்கொண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியச் சூழல். நச்சுச் சூழல். இந்த அகமண முறைக்குள் நீங்கள் இல்லையென்றால் கவிஞர் அபி மாதிரி 80ஐ ஒட்டிய வயதுகளில்தான் உங்களுக்குச் சிறு அளவிலாவது அங்கீகாரம் கிடைக்கும். தமிழ் நவீன கவிதையின் சிறந்த கவிஞராக நான் கருதும் அபியைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அதலபாதாள கிணற்றில் பெரிய பெரிய பாறைகள் எறியப்பட்டு யாருக்கும் தெரியாமல் கிடக்கின்றன. நாமெல்லாம் சிறு கல் என்றுதான் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஐயாக்களே ஏதோ சதி செய்தோம், வன்மம் கொண்டோம், வஞ்சம் கொண்டோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே. நானும் வெகுஜனப் பத்திரிகையில் 10 ஆண்டுகள் இருந்தவன்தான், என்னுடைய படைப்புகள் குறித்த ஒரு வரியை நீங்கள் எந்த வெகுஜன இதழிலாவது பார்த்திருக்கிறீர்களா? எனக்கு முதல் விருது கிடைத்தபோது இந்து தமிழில் அதைப் பற்றி ஒரு வரி வெளியாகவில்லை. எனக்குக் கலைஞர் பொற்கிழி விருது கிடைத்தது. அதைப் பற்றி நண்பர் எழுதிய கட்டுரையில் கூட என் பெயரை நீக்கிவிட்டுத்தான் அனுப்பினேன். நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். (இதையெல்லாம் சொல்லிக்காட்டக் கூடாது என்று நினைத்தாலும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது). 

நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் விருது பெறும்போது அவர்களுடைய பெயர்கள் இடம்பெறவே செய்தன. நான் என்னுடைய பெயரோ, புத்தகங்களோ வெளியாக வேண்டாம் என்று முடிவெடுத்துப் பின்பற்றினேன். ஆனால் ஷங்கர், மண்குதிரை அரவிந்தன் போன்றவர்களின் நூல்கள் பற்றியோ மு.முருகேஷ், கவிதா முரளிதரன் போன்றவர்கள் பெற்ற விருது செய்திகளோ நம் பக்கத்திலேயே வெளியாகத்தான் செய்தன. ஆகையால் சமஸ் உள்ளிட்ட நடுப்பக்க அணியினர்  இத்தகைய முடிவை சுயகட்டுப்பாடோடு பின்பற்றினோம்.

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், சொல்ல வைத்துவிட்டார்கள். சமீபத்தில் ஒரு பாடத்திட்டக் குழுவில் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாட்கள் கூட்டம். போகும்போதே இரண்டு கட்டைப்பைகள் நிறைய புத்தகங்கள் கொண்டுசென்றேன். வழியில் ஒரு முக்கியமான எழுத்தாளரிடமும் சில புத்தகங்கள் பெற்றுக்கொண்டேன். இரண்டு நாட்கள் முடிவில் எல்லோரும் வெவ்வேறு வகைமைகளைப் பிரித்துக்கொண்டோம். நான் நவீன இலக்கியம், திராவிட இயக்கம் போன்ற சில விஷயங்களைக் கேட்டுப்பெற்றுக்கொண்டேன். போகும்போது ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார்கள். எல்லோரும் வாங்க மறுத்துவிட்டோம். நான் கேட்டேன் ‘ஜெயமோகனைக் கூப்பிட்டு இப்படி ஆயிரம் ரூபாய் நீட்டுவீர்களா?’ என்று. எங்கள் குழுவில் ஒரு தோழர் உடல்நல பாதிப்பு கொண்டவர் இரண்டு நாட்களும் ஆட்டோவில்தான் வந்துசெல்ல வேண்டும். ஆட்டோ செலவே ஆயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கும். என்னுடைய இரண்டு நாள் சம்பளத்தின் மதிப்பு ரூ. 10,000. பணத்துக்காக வரவில்லை யாரும். பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினையே இல்லை. அந்தத் தொகைதான் அவமதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், எங்களை ஒருங்கிணைத்தவர் பாவம். மேலுள்ள அமைப்பு அப்படியென்றால் அவர் என்ன செய்வார். (என்ன லட்சணத்தில், எப்படிப்பட்ட அவசரத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்வினையை அரசு ஆற்றுகிறது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் இது. இதைப் பற்றி தனியே பிறகு பேசலாம்.) 

அப்புறம் பல வாரங்கள் பல புத்தகங்களைத் திரட்டிக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பெரும் பட்டியலைத் தயாரித்துக்கொடுத்தேன். இறுதியாகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற படைப்புகளின் வரிசையைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுகதைகள் 100% என்னுடைய தெரிவு இடம்பெற்றிருந்தது. கவிதைகள் 50%. வேறென்ன வேண்டும் எனக்கு? இத்தனைக்கும் நான் கவிதைப் புத்தகங்கள் போட்டிருக்கிறேன் என்றோ, சிறார் இலக்கியத்தில் என் மகன் மகிழ் ஆதனைச் செருகிவிட வேண்டும் என்றோ நான் நினைக்கவே இல்லை. என்னால் அவனுக்குத்தான் இழப்பு. (’மகிழ் புத்தகத்துக்கு நீங்கள் விமர்சனம் போட வேண்டும்’ என்று அவனது இரண்டாவது புத்தகத்தின் பதிப்பாளர், அது ஒரு பதிப்பாளரின் நியாயம்தான், கேட்டுக்கொண்டபோது ‘நான் இலக்கியப் பக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கும் வரை அது நடக்காது’ என்று சொல்லிவிட்டேன்.) அது மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளிலும் reference books என்ற வகைமையிலும் பல புத்தகங்களைப் பரிந்துரைத்து அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்காக குழுத் தலைமைக்கும் ஏற்பாடு செய்தவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப் பிடித்த பா.வெங்கடேசன் படைப்பு எதையும் நான் அந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. என்னை மொண்ணை என்று சொன்ன ஒருத்தரின் படைப்பைத்தான் முன்வைத்தேன். மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சமீபத்தில் நிகழ்விலிருந்து என்னைத் தவிர்த்த பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்திலிருந்தும் ஒரு கதை அந்தப் பட்டியலில் இருக்கிறது. இந்தப் பட்டியலுக்காகவும் நான் விமர்சிக்கப்படலாம். என்ன செய்வது, அதில் பத்து இதில் பத்து மட்டும் வேண்டும் என்றால் யாரால்தான் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும்?

அது மட்டுமல்ல  17 ஆண்டுகளுக்கு முன்பு, காலஞ்சென்ற மொழிபெயர்ப்பாளர் லஷ்மி ஹோம்ஸ்ட்ராம் உள்ளிடோர் க்ரியாவுக்கு வந்திருந்தனர். தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறோம், அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என்று க்ரியா ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது ‘கவிதை என்னுடைய ஏரியா இல்லை. ஆசைத்தம்பி உங்களுக்கு உதவுவார்” என்று அவர் கூறினார். நானும் பல நாட்கள் என்னிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டிப் புரட்டி மொழிபெயர்ப்பில் அழகாக வரக்கூடிய, இன்னொரு மொழியினருக்குச் சேரக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளின் பட்டியலைத் தேர்ந்தெடுத்து, கூடவே என்னிடம் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும், அவரிடம் கொடுத்தேன். இந்தத் தொகுப்புக்கு நான் உட்பட பலரும் உதவியிருக்கிறோம். நன்றி பட்டியலில் (அகரவரிசைப்படி) என் பெயர் முதலில் இடம்பெற்றிருக்கிறது. (என் பங்கு தெரிவுகளின் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளும் அடங்கும். இதெல்லாம் அவரிமிருந்து நான் விலகல் கொண்ட பிறகு.)

என் கவிதைத் தொகுப்புகள் எல்லாமே எனக்கும் பதிப்பாளர்களுக்கும் துரதிர்ஷ்டம். முதல் தொகுப்பு ‘சித்து’ (2006 ) 350 பிரதிகள் போட்டு, கணினியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றினால் அத்தனை பிரதிகளையும் தூக்கி எறிந்தோம். மறுபடியும் 350 பிரதிகள் போட்டு அதே விலை வைத்தார் ராம். ஆச்சு 17 ஆண்டுகள் அவற்றில் ஒரு 300 பிரதிகள் நானே வாங்கி நோட்டீஸ் கொடுப்பதுபோல் கொடுத்திருக்கிறேன். சில வாரங்களுக்கு அந்த அதிசயப் பொருளின் இறுதிப் பிரதியை கோவை விஜயா பதிப்பகத்தில் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் போட்டோ அனுப்பியிருந்தார். ‘கொண்டலாத்தி’ (2010) சாதாரணமாக வெளியிட்டிருந்தால் கூட இந்த 14 ஆண்டுகளில் நஷ்டமில்லாமல் ஒரு 500 பிரதிகளாவது விற்றிருக்கலாம். ராமகிருஷ்ணனோ பறவைகளின் படங்களுடன் ஆர்ட் பேப்பரில் வெளியிட்டதால் விலை அதிகம் வைக்க வேண்டியிருந்தது (இத்தனைக்கும் அடக்க விலையின் இரண்டு மடங்கு கூட இல்லை). அதுவும் போச்சு. ’சூழலியல் ஆர்வலர்+பறவை ஆர்வலர்+கவிதை வாசகர்’ என்ற அரிய உயிரிகள் ஒருசிலரிடம் மட்டுமே போய்ச்சேர்ந்தது. அதையும் நோட்டீஸ் போல நிறைய கொடுத்தேன். 

பாவம், இப்போது டிஸ்கவரியில் இரண்டு கவிதைத் தொகுப்புகள். என்னால் நான் நிறைய நஷ்டமடைந்துவிட்டேன், என் பதிப்பாளர்கள் நஷ்டமடைவதை நான் விரும்பவில்லை. ஆகவே, எல்லாக் கவிதைத் தொகுப்புகளையும் நூறு நூறு பிரதிகள் வாங்கிக்கொண்டேன். மற்ற புத்தகங்களையும் கணிசமான பிரதிகள் வாங்கிக்கொண்டேன். வீட்டுக்கு வாருங்கள் அனைவருக்கும் அன்புடன் தருகிறேன்.

இதனாலெல்லாம்தான் கையில் ஏழெட்டுக் கவிதைத் தொகுப்புகள் இருந்தும் என்ன ஹேருக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சலிப்பு. அப்படியே விட்டுவிட்டேன். நல்லா இல்லன்னு சொன்னால் கூட ரொம்ப சந்தோஷப்படுவேன். விடுங்க! நம்மளுக்கெல்லாம் சூப்பர் சீனியர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்காச்சும் மூன்று விருதுகளும் சில ரகசிய வாசகர்களும் இருக்கிறார்களே என்று திருப்தியடைய வேண்டியதுதான்.

இரண்டு எழுத்தாளர்களிடம் மட்டும் நான் மன்னிப்பு கேட்டாக வேண்டும். ஒருவர் எஸ். சண்முகம், இன்னொருவர் யுவன் சந்திரசேகர். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளைப் பற்றி நான் எழுதிய விமர்சனங்கள் சரியானதுதான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வெகுஜன இதழொன்றில் எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னாளில் வருந்தத் தொடங்கினேன். ஆனால், அந்த விமர்சனங்களுக்காக நான் எதிர்கொண்ட அவதூறுகள், காயங்கள் மிக மிக அதிகம். அதில் அவர்களுக்குத் தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆயினும் அவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் போதாமைகளை, குறைகளை முன்வைத்துப் பேசுங்கள். தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன், திருத்திக்கொள்ள முயல்கிறேன். எனது நேர்மையைச் சந்தேகிக்கும்போதும் என்னைத் தங்களுக்கு எதிரான சதிக்காரன் என்று சித்தரிக்கும்போதுதான் வெறுத்துப்போகிறது.

இறுதியாக, உறுதியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கடும் நச்சு அகமண முறையில் சிக்கிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் நான் கடைசி வரை முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பேன். 

நன்றி!

கீழ்க்கண்ட பதிவுகளையும் படித்துப் பார்க்கலாம்:




Monday, January 8, 2024

தாமதமாக வந்தவள் (எழுதிக்கொண்டிருக்கும் ‘திருவயிற்றின் கனி’ நூலிலிருந்து...)


(பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தபோது ‘திருவயிற்றின் கனி’ கவிதை நூலின் ஒரு பகுதியாக எழுதிய கவிதை. இப்போது உச்ச நீதிமன்றம் அந்த விடுதலையை ரத்துசெய்திருக்கிறது. கவிதையை மறுபடியும் பகிர்ந்துகொள்கிறேன்.)

வேறு தேசத்திலிருந்தும்
வேற்றினத்திலிருந்தும்
வேறு காலத்திலிருந்தும்
வந்திருக்கிறேன்
ஏசுவே

உம்மை வந்து அடைவதற்குக்
கால இயந்திரம் வேண்டும்
கால இயந்திரம் வேண்டும்
என்று நான்
கெஞ்சாத ஆள் இல்லை

பின்னொரு நாள்
’வலியைவிடச் சிறந்த
கால இயந்திரம் இல்லை
என்று உனக்கு மெய்யாகவே சொல்கிறேன்’ 
என்று என் கனவில் வந்து 
நீர் உரைத்தீர்

முறை வைத்து
என் அக்கம்பக்கத்தார் வன்புணர்ந்த
என் யோனியிலிருந்தும்
ஓங்கியடித்துக் கொல்லப்பட்ட
என் குழந்தையின் ஓலம்
எதிரொலித்த
என் கருப்பையிலிருந்தும்
வெளிப்பட வாய்ப்பின்றிக்
குமைந்த வலி ஒன்றுதான்
எனக்கு எஞ்சுவது

அதை என் மேல்
ஏவியவர்களை
நீதிமான்கள்
ஆசிர்வதித்து வழியனுப்ப
மன்னர்களும் தளபதிகளும்
அவர்களுக்கு அணிவகுப்பு செலுத்த
அவர்களின் கெக்கெலிப்பில்
திரும்பத் திரும்பத்
தலைமோதிச் சாகிறாள் என் குழந்தை

காணவும்
கேட்கவும் சகியாமல்
என் வலி மீதேறி
வந்துவிட்டேன்

ஆனாலும்
இது தாமதம்  ஏசுவே

முன்பே வந்திருந்தால்
உம் மலைப்பிரசங்கம்
எனக்குச் சிறிது வருடிக் கொடுத்திருக்கலாம்

நீர் அளித்த
அற்புத திராட்சை ரசம்
சிறிது என் வயிற்றைக் குளிர வைத்திருக்கலாம்

இன்னும் இன்னும் முன்பு வந்திருந்தால்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த
உமது தூய ஒளியில்
சிதறலுக்கு முந்தைய
என் சிசுவின்
தூய ஒளியைக் கண்டிருக்கலாம்

ஆனாலும்
இது தாமதம் ஏசுவே

வந்து பார்த்தால்தான்
தெரிகிறது
என்னைப் போலவே
கைவிடப்பட்டவர்
நீர் என்று

உம் அன்னை
உம் சகோதர சகோதரிகள்
உம் அன்பர்கள்
உம் தேசத்தவர்  
அனைவர் கண்முன்னே
நீதியின் பெயரால்
நீர் அந்தரத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறீர்
ஆணியடித்து

சிறிதே சிறிது உயிர்
உம்மிடம் இருப்பதை
உணர்கிறேன் ஏசுவே

இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்
திரும்பிச் சென்றால்
இறங்குவதற்கு
எனக்கு இடமளிக்கும்
நீதிதேசம் எங்கும் இல்லை

இறுதியாய் ஒரே ஒரு முறை
கண் திறந்து பாருங்கள்
உம் வலியோடு ஒன்றாய்
என் வலியும் சேர்த்துவிடுவேன்

ஏதும் செய்ய முடியவில்லையென்றாலும்
ஒரு வலிக்குத் துணையாய்
இன்னொரு வலி
இருப்பதன்றோ நீதி
          -ஆசை


Saturday, January 6, 2024

சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதன் புத்தகங்கள்

 

மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ 2021ல் வானம் வெளியீடாக வெளியானது. தற்போது அது மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது. கவிதைத் தொகுப்புக்கு மூன்று ஆண்டுகளில் மூன்று பதிப்புகள் என்பது உண்மையிலேயே கொண்டாட்டத்துக்குரியதுதான்.

மகிழ் ஆதன் நான்கு வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவனது ஒன்பதாவது வயதில் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ கவிதைத் தொகுப்பு வெளியானது. அதுவரையிலான அவனது கவிதைகளை அவன் சொல்லச் சொல்ல கைபேசியிலோ எழுத்து வடிவத்திலோ நாங்கள் பதிவுசெய்து வந்தோம். அதன் பிறகு அவனே கைப்பட எழுத ஆரம்பித்தான். அவனது அடுத்த கவிதைத் தொகுப்பு ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (எதிர் வெளியீடு, 2022). இந்தத் தொகுப்பு முழுவதும் காலத்தைப் பற்றிய 51 கவிதைகளைக் கொண்டது. சமூகவியலர், பேராசிரியர் சுந்தர் சருக்கையின் முன்னுரையுடன் வெளியானது.  

மகிழ் ஆதன் 11 வயதுக்குள் 500 கவிதைகள் இயற்றியிருக்கிறான். இந்த 500 கவிதைகளில் நூல் வடிவில் இடம்பெற்றவை இரண்டு தொகுப்புகளும் சேர்ந்து 125 மட்டுமே. அது மட்டுமல்லாமல் அவன் சொல்லி, பின் மறந்துபோன கவிதைகள், எழுதித் தொலைத்த கவிதைகள் என்று எப்படியும் இன்னும் ஒரு 50 கவிதைகளாவது இருக்கும். 500 என்பது நான் தொகுத்து இப்போது கையில் உள்ளவை மட்டுமே. 

இந்தத் தருணத்தில் மகிழ் ஆதனின் நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்கள், அவற்றின் ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், அவன் கவிதைகளை அள்ளி அரவணத்துக்கொண்ட எழுத்தாளர்கள், இதழ்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

எல்லாக் குழந்தைகளுமே மேதைகள்தான். அவற்றில் வெளிப்பட்ட மேதைகளின் வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானதுதான். மேதைகளாக வளர்ப்பதற்கு அந்தக் குழந்தைகளைப் பெற்றோர்கள் கடும் பயிற்சி கொடுப்பதோ அல்லது அந்தக் குழந்தைகளே தங்கள் விருப்பத்தின் பேரில் கடும் உழைப்பில் மூழ்குவதோ உண்டு. ஆனால், இசை, ஓவியம், செஸ், விளையாட்டு போன்று கவிதை இல்லை. சூழலின் பரிச்சயத்தில் ஒரு தூண்டுதல் இருந்திருக்கலாமே ஒழிய குழந்தையிடம் கலை இல்லாமல் அதனைத் திணித்து வெளிப்படுத்திவிட முடியாது. 

மழலை மேதைகள் என்று அறியப்பட்டவர்கள் பலரும் குழந்தைப் பருவத்தின் இன்பங்களை, சாகசங்களை இழக்க நேரிடும். மகிழ் ஆதனுக்கு அப்படியில்லை. கவிதையை நீக்கிவிட்டால் அவனுக்கும் அவன் வயதில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சொல்லப்போனால், தான் கவிதை எழுதுவது குறித்தோ அதற்காகக் கிடைக்கும் அங்கீகாரங்கள் குறித்தோ எந்தப் பிரக்ஞையற்றும்தான் அவன் இருக்கிறான். சமீபத்தில் தேனியில் அவனுக்கு ‘தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை’ ஒரு விருது வழங்கியபோது மேடையில் ஏறிச் சென்று வாங்குவதற்கு மிகவும் தயங்கினான். தன் தம்பியை ‘மகிழ் ஆதன்’ என்று சொல்லி விருது வாங்கச் சொல்லலாம் என்று என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.   

எதிர்காலத்தில் கவிதையைத் தொடர்வது அவனது விருப்பம், கவிதையின் விருப்பம், தமிழின் விருப்பம்! 

**

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் மகிழ் ஆதனின் நூல்களும் கிடைக்கும் அரங்குகளும்:

'நான்தான் உலகத்தை வரைந்தேன்' (கவிதைகள், 2021) -

நூல்வனம் (வானம் வெளியீடு): அரங்கு எண் 112

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன் (கவிதைகள், 2022) -

எதிர் வெளியீடு: F-61


மகிழ் ஆதன் குறித்த பதிவுகளில் சில:

எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கைhttps://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமிhttps://tinyurl.com/yu3y94jk

ஆசை: https://tinyurl.com/mr9vn367

The New Indian Expresshttps://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki

Friday, January 5, 2024

ஆசையின் நூல்கள் குறித்த விமர்சனங்கள்... ஓரிடத்தில்!


 

முதன்முதலில் என் நூலொன்றுக்கு விமர்சனம் எழுதியவர் கவிஞர் பூமா ஈஸ்வரமூர்த்தி. 2006-ல் வெளியான எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்து’வுக்கு 2007 தீராநதியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். நிறைகுறைகள் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிய சுருக்கமான, நல்லதொரு விமர்சனம் அது. அதன் பிறகு மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மட்டும் எனது மூன்று நூல்களுக்கு (சித்து, கொண்டலாத்தி, ருபாயியத்) விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்தது. ஒட்டுமொத்தமாக என் அத்தனை கவிதைத் தொகுப்புகளையும் பற்றி எழுதியிருப்பவர் கவிஞர் ந.பெரியசாமி மட்டுமே. என் கவிதைத் தொகுப்புகளில் அதிக மதிப்புரைகளும் பாராட்டுகளும் பெற்றது ‘கொண்டலாத்தி’ தொகுப்பு. அதற்கு சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் ‘உயிர்மை’யில் ஒரு நல்ல மதிப்புரை எழுதியிருந்தார். அது இப்போது எனக்குக் கிடைக்கவில்லை. 

2021ல் ‘அண்டங்காளி’, ‘குவாண்டம் செல்ஃபி’ ஆகிய இரண்டு கவிதை நூல்களும் வெளியானபோது அவற்றை முகநூலில் எட்டு எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டு, அறிமுகக் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியிருந்தார்கள். 

என்னுடைய படைப்பிலக்கிய நூல்கள் அதிக வாசகர்களைப் போய்ச் சேரவில்லை என்றாலும் கணிசமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அவற்றைப் பற்றி எழுதவே செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி! இந்த மதிப்புரைகளை வெளியிட்ட இதழ்களுக்கும் இணையதளங்களுக்கும் மிக்க நன்றி!

இதுவரை என் நூல்களுக்கு எழுதப்பட்ட மதிப்புரைகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் போன்றவற்றை இங்கே ஓரிடத்தில் திரட்டித் தர முயன்றிருக்கிறேன். சில கட்டுரைகள் கிடைக்கவில்லை. அவை கிடைத்ததும் அவற்றையும் சேர்த்துவிடுகிறேன். என் நூல்களைப் பற்றிய விரிவான சித்திரம் கிடைப்பதற்குக் கீழ்க்கண்ட கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன்.

   - ஆசை

எனது நூல்கள் தொடர்பாக எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கட்டுரைகள்:

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: கவிஞர் ஆசை (என்னைப் பற்றிய பொது அறிமுகம்)

பேராசிரியர் தங்க. ஜெயராமன்: மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலை 

கவிஞர் கலாப்ரியா: சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி: அண்டங்காளி - சன்னதம் கொண்ட கவிதைகள்

கவிஞர் கண்டராதித்தன்: மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

கவிஞர் தேன்மொழி தாஸ்: ஆசையின் ‘அண்டங்காளி’

கவிஞர் சபரிநாதன்: காமத்தின் தாளமும் அகண்டகாரப் பின்புலமும்...

கவிஞர் சுகுமாரன்: ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ - கவிஞர் சுகுமாரனின் அறிமுகம்




டி.என்.ரஞ்சித்குமார்: கொண்டலாத்தி: கண்சிமிட்டும் பறவைக் கணங்கள்

டி.என். ரஞ்சித்குமார்: அவதானிப்பும் கரைதலும் (கொண்டலாத்தி குறித்து ‘கனலி’ இதழில் எழுதிய கட்டுரை)

கவிஞர் ந.பெரியசாமி: யாதுமாகி நின்ற காளி (நான்கு கவிதைத் தொகுப்புகளையும் குறித்து)

டைம்ஸ் ஆஃப் இண்டியா: 'பறவைகள்: அறிமுகக் கையேடு' நூலைப் பற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் வந்த செய்தி

தினமணி: கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்

ந.வினோத்குமார்: To Nature, with love...

வெங்கட் சாமிநாதன்: பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

வெங்கட் சாமிநாதன்: ஒமர் கய்யாமின் ருபாயியத்

வெங்கட் சாமிநாதன்: ஆசை என்றொரு கவிஞர்

ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பைக் குறித்து...


தேன்மொழி தாஸ்

கவிதை என்பது குறைந்தபட்சமாக எழுதுபவரின் இரவுகளையும் அதிகபட்சமாக அவர்கள் தம் வாழ்வையும் பலியாகக் கேட்கும் சக்தி எனலாம் . கவிதை காலங்களைச் சூடி காலங்களை யார் மூலமாகவேனும் எழுதி வைத்துக்கொள்கிறது. உண்மையில் ஒரு கவிஞனின் வரிகள்  என்பது சமூகத்தின் குரலே. காதலைப் போராட்டங்களை, தத்துவங்களை, பசியை,  காமத்தை, பக்தியை, தேசத்தை விடுதலையை, ஒடுக்குமுறையை, அகத்தை, புறத்தை இப்படி எதை எழுதினாலும் அது நிலத்திலிருந்து மேலோங்கி அந்தரத்தில் நின்று யாவருக்குமாகிறது . ஒவ்வொரு மனதும் அகத்தால் புறத்தோடு... புறத்தால் அகத்தோடு கட்டப்பட்டு ஒரு மெல்லிய அன்பொலியால் ஆளப்படுகிறது. சுவாசத்தை விட இருப்புக்கு ஒரு இனிய விருப்பம் ஜீவநாடியாகத் தேவைப்படுகிறது. இறுதி மூச்சு வரை இருப்பை உறுதி செய்வதில் மனம் பெரும் பங்கை எடுத்துக்கொள்கிறது. 

      அத்தகைய கவி மனம் இருப்பை ஆடும் கூத்தாக்கி ஆடச் செய்யும் இயற்கையைப் பெண்ணாய் வணங்கும் ஒரு புள்ளியில் சக்தி உயிர்கொண்டு துடி கொண்டு சுரக்கும். 

      அண்டங்காளி அப்படி ஒரு துடி நடனச் சன்னதக் கவிதைகளால் , வாக்குகளால் வாக்குகளுக்கு வாசல் வைக்கிறாள். எக் கதவைத் தொட்டாலும் துடி குன்றாது நாவை நீட்டும் அவளை காதலாகவும், உடலாகவும், பேயாகவும், தாயாகவும், மாயமாகவும் உறவாடி மகிழும் கவிதைகள். இக் கவிதைகளைப்  பிரார்த்தனைகளாய்க் காண்கிறேன் 

        பாதிப் பிறப்பு தந்தாய் 
        உடலே ஒரு காலாய் 
        இப்பிறவில் நடக்கிறேன் 
        மீதிப்பிறப்பின் ஒரு கால் 
        நடப்பது எங்கே 

இந்த வரிகளில் உதடு துடிக்க அழும் ஒரு ஆன்ம பிராத்தனை வெளியெங்கும் காற்றாவதை உணர்கிறேன். தன் உச்சபட்சமான உயிர் அள்ளிப் படையலிட்டு வேண்டும் கவிதைகள். ஒரு மனதூடே யாவருக்குமாய் பரவும் பிரவாகத் துடி . இடாக்கினிக்கும் வாரிணிக்கும் பலியிட ஏதுமில்லாதபோது தனது தலையை வெட்டி இரத்தம் ஊட்டிய அரிதலைச்சியின்  தியாகமாய் நன்றியின் நீரூற்றாய், தான் ஏகமனநிலைப்பட்டுத் துதிக்கும் ஒருத்திக்கு தன்னையே சொற்பலியிடும் கவிதைகள்... அண்டங்காளியில்

     பிரபஞ்சப் பெருமுலை திரட்டி
     ஒற்றைக் காம்பின் வழி
     அமுதூட்டு அம்மா 

எனும் இவ்வரிகளில்... உலக உருவாக்கம் மூன்றே நாளில் எப்படி வெடித்துப் பூர்த்தியாகி இருக்கும்!  ஆயிரம் ஆயிரம் அறிவியல் ஞானத்தின் அமுதக் கண் யார்... எவ்வழியே யார் யாருக்காக மொழியின் பால் ஊறிக் கடந்திருக்கும் . நமது மரபின் நஞ்சுக்கொடி எல்லா வண்ணத்திற்கும் தாயாம் - கருப்பு என்று தலை தாழ்ந்து வணங்கி இருகை நீட்டி ஆழ் மனம், வான்தனை உச்சிமோந்து பிரபஞ்சத்தை முத்தமிடும். யார் வந்து, யார் சென்று, யார் பிறந்தாலும், சகலருக்கும் கேள்வியின்றி சோறூட்டும் பிரபஞ்சத்தை வழிபட்டு வழிபட்டே தீரா காமமாகும் கவிதைகள். காமம் மீறக் கருணையாகும் வித்தைகள்... வித்தைகள் தேங்க சன்னதமாகும் அழுத்தங்கள்... அழுத்தங்கள் தேய அழுகையாகும் அவயங்கள் என 

அண்டங்காளி கவிதைத் துடி
எல்லாப் பக்கங்களிலும் அனல் மாறா இசை. 

          வாழ்த்துகள் ஆசை 

இத்தொகுப்பை முகநூல் மூலம் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இக் கவிதைகளை நான் வாசிக்கையில் அடைந்த இன்பம் யாவருக்கும் புதிதாக வேண்டும் என்று அநேக கவிதைகள் மேற்கோள் காட்டவில்லை. அவை தந்த ஒலியின் சிறு துண்டை இங்கே பொத்தி வைத்திருக்கிறேன் . இத் தொகுப்பை வாங்கிப் படித்து மகிழ பரிந்துரைக்கிறேன்

ஆசைக்கும் இக் கவிதைகளை நூலை வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸ்க்கும் வாழ்த்துகள். 

அண்டங்காளி

ஆசை

விலை: ரூ.100

புத்தகத்தை வாங்க: டிஸ்கவரி புக் பேலஸ் – 8754507070

அமேஸானில் வாங்க: https://amzn.to/3d6QxEb

அன்புடன் 

- தேன்மொழி_தாஸ் 

(‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை 2021-ல் முகநூலில் வெளியிட்டுக் கவிஞர் தேன்மொழி தாஸ் எழுதிய குறிப்பு)



எனது நூல்கள் தொடர்பாக எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கட்டுரைகள்:

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: கவிஞர் ஆசை (என்னைப் பற்றிய பொது அறிமுகம்)

பேராசிரியர் தங்க. ஜெயராமன்: மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலை 

கவிஞர் கலாப்ரியா: சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி: அண்டங்காளி - சன்னதம் கொண்ட கவிதைகள்

கவிஞர் கண்டராதித்தன்: மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

கவிஞர் சபரிநாதன்: காமத்தின் தாளமும் அகண்டகாரப் பின்புலமும்...

கவிஞர் சுகுமாரன்: ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ - கவிஞர் சுகுமாரனின் அறிமுகம்




டி.என்.ரஞ்சித்குமார்: கொண்டலாத்தி: கண்சிமிட்டும் பறவைக் கணங்கள்

கவிஞர் ந.பெரியசாமி: யாதுமாகி நின்ற காளி (நான்கு கவிதைத் தொகுப்புகளையும் குறித்து)

டைம்ஸ் ஆஃப் இண்டியா: 'பறவைகள்: அறிமுகக் கையேடு' நூலைப் பற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் வந்த செய்தி

ந.வினோத்குமார்: To Nature, with love...

வெங்கட் சாமிநாதன்: பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

வெங்கட் சாமிநாதன்: ஒமர் கய்யாமின் ருபாயியத்

வெங்கட் சாமிநாதன்: ஆசை என்றொரு கவிஞர்

Thursday, January 4, 2024

சென்னை புத்தகக் காட்சியில் எனது நூல்கள் கிடைக்கும் அரங்குகள்


நேற்று 47வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியிருக்கிறது. இந்தப் புத்தகக் காட்சியை முன்னிட்டோ கடந்த ஆண்டிலோ புதிய புத்தகங்கள் ஏதும் நான் கொண்டுவரவில்லை. கையில் கணிசமான புத்தகங்கள் வெளியிடத் தயாராக இருந்த நிலையிலும் அவற்றை நன்றாகச் செம்மையாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று கருதியதால் அந்தப் புத்தகங்களின் வெளியீட்டைத் தள்ளிப்போட்டுவிட்டேன். மெதுவாக வரட்டுமே, என்ன அவசரம். 

இதுவரையில் சித்து (க்ரியா, 2006), கொண்டலாத்தி (க்ரியா, 2010), அண்டங்காளி (டிஸ்கவரி புக் பேலஸ், 2021), குவாண்டம் செல்ஃபி (டிஸ்கவரி புக் பேலஸ், 2021) ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன். பறவைகள்: அறிமுகக் கையேடு (ப.ஜெகநாதனுடன் இணைந்து, க்ரியா, 2013), என்றும் காந்தி (இந்து தமிழ் திசை, 2019), இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான் (டிஸ்கவரி புக் பேலஸ், 2022) ஆகிய உரைநடை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ (தங்க.ஜெயராமனுடன் இணைந்து, க்ரியா, 2010), திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ (க்ரியா, 2018) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன். இவை தவிர தூலிகா பதிப்பகத்துக்காக ஆசை என்ற பெயரிலும் சிந்து என்ற பெயரிலும் சிறார்க்கான புத்தகங்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். அம்பேத்கர், காந்தி போன்றோரைப் பற்றிய புத்தகங்களும் அவற்றுள் அடங்கும்.

மேற்கண்ட நூல்களில் ‘சித்து’ கவிதைத் தொகுப்பு இப்போது அச்சில் இல்லை. ஏனைய நூல்கள் புத்தகக் காட்சியில் கீழ்க்கண்ட அரங்குகளில் கிடைக்கும். தேடினால் பிற விற்பனையாளர்களிடமும் கிடைக்கலாம்.  

எனது நூல்கள் கிடைக்கும் அரங்குகள்: 

க்ரியா பதிப்பகம்: 180-181

டிஸ்கவரி புக் பேலஸ்: F-55

டிஸ்கவரி புக் பப்ளிகேஷன்ஸ்: 473-474 

இந்து தமிழ் திசை: 56-57

தூலிகா: 156


எனது நூல்கள் தொடர்பாக எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கட்டுரைகள்:

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: கவிஞர் ஆசை (என்னைப் பற்றிய பொது அறிமுகம்)

பேராசிரியர் தங்க. ஜெயராமன்: மாம்பழ நிறப் புடவைக்குக் கறுப்பில் கரைக்கட்டு நெய்யும் கலை 

கவிஞர் கலாப்ரியா: சாக்த அழகியல் - ஆசையின் ‘அண்டங்காளி’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து...

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி: அண்டங்காளி - சன்னதம் கொண்ட கவிதைகள்

கவிஞர் கண்டராதித்தன்: மாசியும் ஆசையின் அண்டங்காளியும்

கவிஞர் சபரிநாதன்: காமத்தின் தாளமும் அகண்டகாரப் பின்புலமும்...

கவிஞர் சுகுமாரன்: ஆசையின் ‘குவாண்டம் செல்ஃபி’ - கவிஞர் சுகுமாரனின் அறிமுகம்




டி.என்.ரஞ்சித்குமார்: கொண்டலாத்தி: கண்சிமிட்டும் பறவைக் கணங்கள்

கவிஞர் ந.பெரியசாமி: யாதுமாகி நின்ற காளி (நான்கு கவிதைத் தொகுப்புகளையும் குறித்து)

டைம்ஸ் ஆஃப் இண்டியா: 'பறவைகள்: அறிமுகக் கையேடு' நூலைப் பற்றி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் வந்த செய்தி

ந.வினோத்குமார்: To Nature, with love...

வெங்கட் சாமிநாதன்: பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

வெங்கட் சாமிநாதன்: ஒமர் கய்யாமின் ருபாயியத்

வெங்கட் சாமிநாதன்: ஆசை என்றொரு கவிஞர்

Tuesday, January 2, 2024

மகிழ் ஆதன் விருது பெறும் தருணம்

 


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் விருது வழங்கும் விழா கடந்த 31-12-23 அன்று தேனியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் மகிழ் ஆதனுக்கு ‘சிறார்க்கான மேடை விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற இன்னொரு குழந்தை தமிழ் இனியன். இந்த நிகழ்வில் ஏராளமான படைப்பாளிகளுக்கும் பிற கலைத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மகிழ் ஆதனின் முதல் கவிதைத் தொகுப்பான ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021, வானம் பதிப்பகம்) இரண்டாம் பதிப்பும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் அவனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2024, எதிர் வெளியீடு) நூலை மட்டுமே சில பிரதிகள் எடுத்துச்சென்றிருந்தேன். அவையும் அங்கே விற்றுவிட்டன. என்னுடைய நூல்களும் கட்டுரைகளும் படிக்காத சிலரும் மகிழின் நூலை ஏற்கனவே தாங்கள் வாங்கி வாசித்திருப்பதாகக் கூறினார்கள். மிகவும் மனநிறைவான நிகழ்வு. ‘தமிழ்நாடு கலை இலக்கிய மேடை’யின் நண்பர்களுக்கும் நிகழ்விலும் கைபேசி, முகநூல் போன்றவற்றின் வாயிலாகவும் மகிழ் ஆதனை வாழ்த்திய, கொண்டாடிய அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! உங்கள் அன்பும் அவனுக்கு அவன் வாழ்நாளை உண்மையில் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றும் என்று நம்புகிறேன். 

இது மகிழ் ஆதனுக்கு முதல் விருது. புத்தகம் வெளியிட்டது குறித்தே எந்த உணர்வும் இல்லாமல் இருக்கிறான். விருது குறித்தும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதுதான் உண்மை. மேடை ஏறுவதற்கு மிகுந்த கூச்சம். சென்னையிலிருந்து கிளம்பும்போதே “அப்பா, எனக்கு வெக்கமாவும் பயமாவும் இருக்கு. அதனால நீரனை (தம்பி) மகிழ் ஆதன்னு சொல்லி விருது வாங்க வைச்சிடலாம்” என்று விடாமல் நச்சரித்துக்கொண்டே வந்தான். இதெல்லாம் ஒரு வகையில் நல்லதுதான். ஆனால், சிறுவயதில் பெற்ற, பெறப்போகிற அங்கீகாரங்கள் குறித்து பின்னாளில் அவன் சிலாகித்து மகிழ்ச்சி கொள்வான் என்று நம்புகிறேன்.

- ஆசை


மகிழ் ஆதன் குறித்த பதிவுகளில் சில:

எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கைhttps://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமிhttps://tinyurl.com/yu3y94jk

ஆசை: https://tinyurl.com/mr9vn367

The New Indian Expresshttps://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki