Thursday, December 14, 2017

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்


ஆசை

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.

நிறைகள்:
 1. சுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.
 2. தான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.
 3. ஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியிலான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.
 4. ப்ளூவேல்விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல்  நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.
 5. ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.
 6. ‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
 7. ‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.


குறைகள்
 1. மிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்து பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.   
 2. தூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 3. கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


சுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்!). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத்  தெரிவித்துக்கொள்கிறேன்.  

1 comment:

 1. நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும் உங்களது பாணி அருமையாக உள்ளது. உங்களுடன் சேர்ந்து நானும் நூலாசிரியருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

  ReplyDelete