Thursday, September 17, 2020

நினைவில் வாழ்வீர் கல்யாண்!

கேமராவிலிருந்து முதலாவதாக கல்யாண், அடுத்து தஞ்சாவூர் கவிராயர், என் மகன் மகிழ் ஆதன், நான், என் மனைவி, கீழே கவிராயர் பேரன்

ஆசை

காலையில் ஜீவசுந்தரி மேடத்தின் பதிவைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். நண்பர் கல்யாண் (ஆர். கல்யாணசுந்தரம்) இன்று அதிகாலை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 38. ஃபேஸ்புக்கில் அசடன் பாலாஜி என்ற பெயரில் இயங்கிவந்தார். ஒரு வாசகராக எனக்கு அறிமுகமாகி உலகத் திரைப்படங்கள் பலவற்றையும் அறிமுகப்படுத்தியவர் அவர். ஸ்டேன்லி கூப்ரிக்கின் படங்கள் அவர் புண்ணியத்தால்தான் எனக்கு அறிமுகமாயின. முற்போக்குச் சிந்தனைகள் நிரம்பியவர். நாங்கள் இருவரும் புத்தகங்களும் திரைப்படங்களும் பரிமாறிக்கொள்வோம். எங்கள் வீட்டுக்கு அவரும் அவர் வீட்டுக்கு நானும் சென்றிருக்கிறோம். திருவான்மியூரில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இடியாப்பம் விரும்பிச் சாப்பிட்டார். இடையில் சில காலம் அவர் தொடர்பே இல்லாமல் இருந்தது. கைபேசி மாற்றியதால் அவர் எண் தொலைந்துபோய்விட்டிருந்தது. அப்புறம் எப்படியோ கண்டுபிடித்து அழைத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோய்விட்டன. அதனால்  டயாலிஸிஸில்தான் தனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது என்று துயரம் நிறைந்த குரலில் என்னிடம் பேசினார். நேரில் போய் பார்த்தபோது இன்னும் அதிர்ச்சி. பாதியாய் இளைத்து, குச்சி ஊன்றிக்கொண்டு நடந்தார். இத்தனைக்கும் மதுப் பழக்கம், புகைப்பழக்கம் என்று ஏதுமில்லாதவர். ஏதோ மரபுக் காரணம் போல. வாழ்க்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்குப் பிறகும் எங்கள் பகிர்தல் தொடர்ந்துகொண்டிருந்தது. சென்னைத் திரைப்பட விழாவில் சில படங்களைப்  பார்க்க வேண்டும் என்று விரும்பினார். என்னிடம் இருந்த நுழைவுச் சீட்டை அவருக்குத் தந்து ஒரு படத்துக்கும் அழைத்துச் சென்றேன். குச்சி ஊன்றியபடிதான் வந்தார். வாரத்தில் இரண்டு தடவையாவது டயாலிஸிஸ் செய்தாக வேண்டிய அவருக்கு சென்னை பெருமழை வெள்ளத்தின்போது மிகுந்த சிரமம் ஏற்பட்டுவிட்டது. எனினும் வாழ்வின் மீதான பிடிப்பில் அதையும் தாண்டி வந்தார். 

நாங்கள் கூடுவாஞ்சேரிக்கு இடம்பெயர்ந்தபோதும் அதே உடல்நிலையுடன் ஜனவரி 1, அன்று புத்தாண்டு மட்டுமல்லாமல் என் மனைவி பிறந்த நாள்கூட, எங்கள் வீட்டுக்கு வந்தார். நாங்கள் கேக் வெட்டி, உணவு சமைத்து, படங்கள் எடுத்து அந்நாளைக் கொண்டாடினோம். கல்யாண் ஒரு செல்ஃபி எடுத்தார். அதற்கு முன்னோ அதற்குப் பின்னோ கல்யாணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதில்லை, கல்யாண் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று யார் நினைத்துப் பார்த்தது? ஒரு கட்டத்தில் அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைக் கொண்டு அவருக்கு சீறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மாதம்தோறும் சுமார் ரூ. 10 ஆயிரத்துக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலை. நல்லவேளை அவருடைய திறமை காரணமாக அவருடைய நிறுவனம் (விப்ரோ) அவரைத் தொடர்ந்து வேலையில் நீடிக்க வைத்திருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அனுமதித்தது. கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபின் அவருக்கு மாத்திரை, சிகிச்சை எல்லாம் என்னவாகுமோ என்று கவலை கொண்டு அவரை அழைத்துப் பேசினேன். மாத்திரை அவ்வளவு பிரச்சினை இல்லை. மாதந்தோறும் செக்அப்புக்குச் சென்றாக வேண்டும். அதுதான் பிரச்சினை என்றார். அதன் பிறகு, கல்யாண் பற்றி நான் கேள்விப்பட்டது இன்று காலை ஜீவசுந்தரியின் பதிவில்தான். கல்யாண் எண் தவிர அவருடைய உறவினர்கள் எண் ஏதும் என்னிடம் இல்லை என்பதால் மிகவும் துடித்துப்போனேன். என் மனைவியும் மிகுந்த துயருற்றார். ‘அந்த அண்ணன் இடியாப்பத்தை ரசித்து சாப்பிட்டார்’ என்று குறிப்பிட்டார். ஜீவசுந்தரி மேடத்தைக் கைபேசியில் அழைத்துப் பேசியபோது கல்யாண் மீது தனக்கும் அப்பண்ணசாமிக்கும் இருக்கும் பந்தத்தையும் கல்யாண் இழப்பால் ஏற்பட்ட வலியையும் பகிர்ந்துகொண்டார். அவர் மிகுந்த துயரத்தில் இருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே பலமுறை அழுதார். இதையெல்லாம் பார்க்கும்போது கல்யாணுக்கு இறப்பில்லை, எங்கள் எண்ணங்களில் எப்போதும் வாழ்வார் என்றே தோன்றியது. பிறப்பால் பிராமணர் என்றாலும் பெரியார் மீதும் இடதுசாரி இயக்கங்கள் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். அப்படிப்பட்ட கல்யாண் பெரியாரின் பிறந்த நாள் அன்று காலமாகியிருக்கிறார்! என் பிறந்த நாளுக்கு முதல் நாள் இறந்திருக்கிறார்.  இனி நினைவில் வாழ்வீர் கல்யாண்!

Monday, August 17, 2020

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

 

ஆசை

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான உலகப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள பைங்காநாடு கிராமம்தான் அவரது பூர்வீகம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நுணுக்கம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், சென்னை-அமெரிக்கா என்பதைவிட பைங்காநாடு-அமெரிக்கா என்பதன் நுட்பங்களும் நீளமும் அதிகம். 

அரசியல் வாழ்க்கைக்கான வித்து 

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரின் பெண் ஷியாமளா மேற்படிப்புக்காக 19 வயதில் அமெரிக்கா சென்றார். அவரை அந்நாடு வரவேற்கவில்லை. இந்தியாவில் ஷியாமளா மேல்வகுப்பினராகப் பார்க்கப்பட்டாலும் நிறவெறி அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் ஒரு கறுப்பினத்தவரே! அந்தச் சூழல் ஷியாமளாவைப் புலம்பெயர்ந்தவர்கள், கறுப்பினத்தோருக்கான செயல்பாட்டாளராக மாற்றியது. கறுப்பின உரிமைச் செயல்பாட்டாளரும் ஜமைக்காவைச் சேர்ந்தவருமான டொனால்டு ஹாரிஸை அவர் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: கமலா தேவி ஹாரிஸ், மாயா லட்சுமி ஹாரிஸ். நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள், அணிவகுப்புகள் போன்றவற்றின்போது ஷியாமளாவும் டொனால்டு ஹாரிஸும் தங்கள் குழந்தைகளைக் குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளியபடி கலந்துகொண்டார்கள் என்று கமலா பின்னாளில் நினைவுகூர்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கான வித்து அவர் தவழும் காலத்திலேயே இடப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு 7 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

கமலா ஹாரிஸின் குழந்தைப் பருவம் கலப்பினச் சூழலில் கழிந்தது. இந்திய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கலாச்சாரம் மூன்றையும் பின்பற்றியே ஷியாமளா தன் குழந்தைகளை வளர்த்தார். வெள்ளையினக் குழந்தைகளும் கறுப்பினக் குழந்தைகளும் கலந்து வளரும், படிக்கும் சூழல் உருவாக வேண்டுமென்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்த 60-களின் பிற்பகுதி அது. மேற்கு பெர்க்லியிலிருந்து வடக்கு பெர்க்லியில் உள்ள பள்ளிக்கு கமலா ஹாரிஸ் அனுப்பப்பட்டார். நிறப் பாகுபாடு களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு 95% வெள்ளையினக் குழந்தைகள் மட்டுமே படித்துவந்த பள்ளி அது. கமலா ஹாரிஸின் இந்தப் பின்புலம் தற்போதைய வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானது. 

பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும் பொருளாதாரமும் படித்தார். அதை அடுத்து 1989-ல் ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1990-1998 வரை ஓக்லாந்தில் மாவட்ட இணை அட்டர்னியாகப் பணியாற்றினார். தனது பணிக் காலத்தில் பாலியல் வன்முறை, கும்பல் வன்முறை, போதைமருந்து கடத்தல் போன்ற குற்றங்களின் மீது மிகவும் கடுமை காட்டினார். அவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவர்கள் போன்றோர் சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்குப் பதிலாக அவர்கள் படிப்பைத் தொடரவோ, நல்ல வேலையில் சேரவோ வழிவகுத்தார். 2004-ல் மாவட்ட அட்டர்னி ஆனார். 2010-ல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் போட்டியிட்டு வென்றார். அப்படி அந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய-அமெரிக்கர் அவர்தான். 

1990-களின் மத்தியில் அரசியலர் வில்லி பிரௌனுடன் கமலா ஹாரிஸ் உறவில் இருந்தார். ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. 2014-ல் யூதரான டக்ளஸ் எம்ஹாஃபும் கமலா ஹாரிஸும் மணந்துகொண்டனர். ஏற்கெனவே, தாயின் இந்து மதம், தந்தையின் கறுப்பின பாப்டிஸ்ட் கிறித்தவம் என்ற பன்மைத்தன்மை பின்னணியில் இருந்த கமலாவுக்கு டக்ளஸ் மூலம் யூத மதமும் வந்துசேர்ந்துகொண்டது. கமலாவே தான் இந்து கோயிலுக்கும் கறுப்பின பாப்டிஸ்ட் திருச்சபைக்கும் செல்வதாகச் சொல்லிக்கொள்பவர். 

கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2015-ல் வந்தது. ஜனநாயகக் கட்சியின் பார்பரா பாக்ஸர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததும் அவர் இடத்தில் அடுத்தது தான் நிற்கப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். 2016-ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் பொறுப்பேற்றார். அட்டர்னி ஜெனரலாக அவர் பெற்ற அனுபவம் நாடாளுமன்றத்தில் அவருக்கு மிகவும் உதவியது. எதிர்த் தரப்பை அவர் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார். இது எல்லாமே கமலா ஹாரிஸை அடுத்த நிலையை நோக்கித் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் 2019-ல் அறிவித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக யார் அறிவித்தாரோ அதே ஜோ பிடனைக் கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எதிர்த்துக் களம் கண்டார். ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பிடனின் இனவாத நிலைப்பாடுகளை வைத்து அவரைக் கேள்விகேட்டது பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டது. எனினும், 2019-ன் இறுதியில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறையவே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகிக்கொண்டார். 

ஆனால், 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். 

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடனுக்குத் தற்போது 77 வயது ஆகிறது. ஆகவே, அடுத்த அதிபராகும் வாய்ப்புகூட கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்போது அது அமெரிக்காவின் பன்மைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 17-08-20 அன்று வெளியான கட்டுரை.)

Saturday, August 15, 2020

பொம்மை அறை: நாவலும் மொழிபெயர்ப்பும்


ஆசை


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயினின் மல்லோர்க்காவில் உள்ள பியர்ன் என்ற மலைக்கிராமத்து பிரபுத்துவக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல் இது. பியர்னில் உள்ள பிரபுத்துவக் குடும்பத்தின் தலைவர் டான் டோனியும் அவரது மனைவி டோனா மரியா அந்தோனியாவும் ஒரே நாளில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துபோவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவர்கள் இறந்த பின் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களின் குடும்பப் பாதிரியாரும் நடுத்தர வயதினருமான டான் ஜோன் தனது நண்பர் ஒருவருக்குக் கடிதத்தின் வழியாகச் சொல்வதுபோல் அதை அமைக்கப்பட்டிருக்கிறது. டான் டோனியுடன் தனக்கிருந்த இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட உறவில் தான் கண்டவற்றையும் டான் டோனி எழுதிய ‘நினைவுகள்’ என்ற நூலின் கைப்பிரதியில் தெரிந்துகொண்டவற்றையும் கொண்டு டான் ஜோன் அவர்களின் கதையைச் சொல்கிறார். மரபில் மூழ்கியிருக்கும் பியர்ன் கிராமத்தில் புதுமை விரும்பியான டான் டோனி ஒரு சூனியக்காரராகப் பார்க்கப்பட்டுவருகிறார். தானே ஒரு பிரபுவாக இருந்தாலும் அடுத்து வரும் காலம் சோஷலிஸத்தின் காலமாகத்தான் இருக்கும் என்று டான் டோனி உணர்கிறார். டான் டோனி இறந்த பின் வரும் சொர்க்கத்தின்மேல் கவனம் செலுத்தாமல் மண்ணுலகின் சொர்க்கத்தின்மீதுதான் கவனம் செலுத்துகிறார். அதற்கான அடையாளங்களுள் ஒன்றுதான் தன்னுடைய உறவினரான 18 வயது க்ஸிமாவுடன் அவர் பாரீஸுக்குச் சென்று இவ்வுலக இன்பங்களில் திளைத்தது, மறுபடியும் ஒருமுறை பாரீஸுக்கு வந்து பலூனில் பறந்தது போன்ற சாகசங்கள் எல்லாம். கதைசொல்லியும் பாதிரியாருமான டான் ஜோனின் கருத்துப்படி டான் டோனி மிகவும் நல்லவராக இருந்தாலும் சில பாவங்களைச் செய்திருக்கிறார். எனினும், இறக்கும் தறுவாயில்கூட டான் டோனி பாவ மன்னிப்பு கோரவில்லை. அவருக்கான பாவ மன்னிப்பு அவர் எழுதிய ‘நினைவுகள்’ நூல்தான்.

மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பதுபோல் இந்த நாவல் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு சவாலானதுதான் என்றாலும் அவ்வளவு சவால் இல்லாத இடங்களிலும் கூட அவர் சறுக்கியிருக்கிறார். Pagan, paganism என்ற வார்த்தைகளை ‘சமயச்சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட’, ‘சமயத்துக்குப் புறம்பான’, ‘சமயவுணர்வுக்கு எதிரான’, ‘சமய வெறுப்பு’, ‘அஞ்ஞானம்’ என்றரீதியிலேயே பல இடங்களில் மொழிபெயர்த்திருக்கிறார். விவிலிய மொழியில் ‘புறவினத்தார்’, புறமதத்தார்’ (அதாவது கிறித்தவம் உள்ளிட்ட பெரு மதங்களுக்கு வெளியில் உள்ள மதத்தினர்) என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஓரிரு இடங்களில் ‘Palaces’ என்ற சொல்லை ‘அரண்மனைகள்’ என்பதற்குப் பதிலாக ‘இடங்கள்’ என்றே மொழிபெயர்த்திருக்கிறார். ‘Intelligible’ என்ற சொல் ‘புரியக்கூடிய’ என்பதற்குப் பதிலாக நேரெதிராக ‘பூடகமான’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘For Don Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night’ என்ற வரியானது ‘டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட ஆங்கில வரியின் அர்த்தம் இதுதான்: ‘டான் டோனியைப் பொறுத்தவரை கலையானது கொஞ்சம் குழந்தைகளைப் போன்றது, குறிப்பிட்ட வழிமுறையென்று எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது, கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.’

ஒரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்லும்போது ‘எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘…always lived off’ என்று இருக்கிறது; இது ’…எப்போதும் பிறரை அண்டி வாழ்ந்தார்’ என்றல்லவா இருக்க வேண்டும். அடுத்ததாக, ‘அவர் எப்போதுமே ஒரு புரவலராக இருந்தார்’ என்று வருகிறது; ஆங்கிலத்தில் ‘He always had a benefactor’ என்று இருக்கிறது; சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்’. ‘Dog-cart’ என்பது ‘நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது ஒருவகையான குதிரை வண்டிதான். அதேபோல் ‘Ark of the Covenant’ என்றால் கவனென்ட் பெட்டகம்தான், ‘கவனென்ட் கப்பல்’ அல்ல. ’Will never amount to much’ என்றால் ‘இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு’ என்பது அர்த்தமல்ல; ‘அவர்கள் தேற மாட்டார்கள்’ என்பதுதான் அர்த்தம். ‘Thrush’ என்பது ‘அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்’ அல்ல ஒரு பறவைதான். ஆங்கில மூலத்தில் ‘டைஃபஸ்’ ஆக இருந்தது தமிழில் ‘டைஃபாய்’டாக மாறியிருக்கிறது. ’Immoral’ (ஒழுக்கக்கேடான) என்பது ‘அழிவற்ற’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (immortal என்ற சொல்லுடன் இதைப் போட்டுக் குழப்பிக்கொண்டதால் இருக்கலாம்). ‘Heresy’ என்ற சொல் பல இடங்களில் செவிவழிச் செய்தியாகவும், புரளியாகவும், கேட்பார் சொல்லாகவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இதற்கு ‘மதநிந்தனை’ என்று பொருள் (hearsay என்ற சொல்லைப்போல் இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்படிருக்கலாம்.) ‘Habit’ என்ற சொல் ஒரு இடத்தில் (பக்கம்-89) ‘பழக்கம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; இந்த இடத்தில் அது துறவிகள் அங்கியைக் குறிக்கிறது.  ’Unwholesome’ என்றால் ‘முழுமையற்ற’ என்று பொருள் அல்ல; ‘ஆரோக்கியமற்ற’ என்றே பொருள். Patron-saint என்பது சுவீகாரப் புனிதர், புரவலப் புனிதர், காவற்புனிதர் என்று பலவகைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. Such a distortion of history என்ற வரி மொழிபெயர்க்கப்படவில்லை. சில இடங்களில் வாக்கியம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்குச் சென்றிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.      

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல என்பது உண்மைதான். இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தன்னை மீறியும் பிழைகள் நுழைந்திருக்கலாமோ என்ற கவலையை நேர்மையாக வெளிப்படுத்தவே செய்திருக்கிறார். நம் கேள்வியெல்லாம் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளரின் பங்கு என்ன என்பதுதான். ஆர்வத்தால் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் சிறிய பதிப்பாளர்கள் என்றால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லைதான். ஆனால், மொழிபெயர்ப்புக்கென்று நிதியுதவி பெறும் பெரிய பதிப்பகம் தான் வெளியிடும் நூலின் மீது மேலதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்று பிறர் எதிர்பார்ப்பது  தவறல்ல. அதுவும் இலக்கிய நூல்களை வெற்றிகரமான வணிகமாக ஆக்கலாம் என்று நிரூபித்திருக்கும் ஒரு பதிப்பகத்தில் ‘எடிட்டர்’ யாரும் இல்லையா என்பது ஆச்சரியமளிக்கிறது. இனியாவது தம் மொழிபெயர்ப்புகள் மீது பதிப்பகங்கள் கூடுதல் அக்கறை செலுத்துவார்கள் என்று நம்புவோம்.

பொம்மை அறை
லோரன்ஸ் வில்லலோங்கா
(ஆங்கிலம் வழி தமிழில்: யுவன் சந்திரசேகர்)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
விலை: ரூ. 295

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 15-08-2020 அன்று வெளியான நூல் விமர்சனம்)

Friday, August 7, 2020

என்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்


அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இவ்வளவு பேசியவர் அடிப்படையில் தன்னை ஆதிக்கச் சாதியரில் ஒருவராக உணர்ந்து இந்தக் காரியங்களை தார்மீக எழுச்சியில் செய்தார் என்பது இங்கே முக்கியமானது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி.சிங் என்னவாகப் பார்த்தார் என்பதைக் கொஞ்ச காலத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட இந்தப் பேட்டி உணர்த்துகிறது. 

உங்களுடைய பாதைக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதுபோல் தெரியவில்லையே? 

அது உண்மையல்ல. 1989-ல் எங்கள் தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டபோது “தேசியச் செயல்திட்டத்தில் நீதியை மறுபடியும் இடம்பெறச் செய்வோம்” என்று தெளிவாகக் கூறியிருந்தோம். அரசியல் அறம், அதிகாரப்பரவலாக்கல், தேர்தல் சீர்திருத்தங்கள், பத்திரிகைச் சுதந்திரம் போன்ற அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிய விரிவான கோட்பாடுதான் நீதி. அது பொருளாதார நீதியையும் சமூக நீதியையும் உள்ளடக்கியது. ‘இதிலிருந்து நாங்கள் என்ன பெற்றோம்?’ என்பதல்ல நாம் கேட்க வேண்டிய கேள்வி; மாறாக, ‘ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் எங்களால் என்ன செய்ய முடிந்தது?’ என்பதைத்தான் கேட்க வேண்டும். எந்தக் கட்சியும் இதை அலட்சியப்படுத்த முடியாது. நாங்கள் அரசியல் சூழலையே மாற்றியமைத்திருக்கிறோம்.  

உங்கள் கூட்டணியில் உள்ள நிறையக் கட்சிகள் காலத்துக்கு ஒவ்வாததாகவும் சிதைந்தும் போகுமா?  

கூட்டணிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலைபெற்றுவிடும். மதச்சார்பற்ற சமூக சக்திகளை அடையாளம் காண வேண்டுமே ஒழிய, மதச்சார்பற்ற கட்சிகளை அல்ல. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள் ஒரு சக்தி வாய்ந்த மதச்சார்பற்ற சக்தியாக இருக்கிறார்கள். அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட மக்கள் எனும் சக்தியானது சிறுபான்மையினருடன் சேர்ந்து வகுப்புவாதத்துக்கு எதிரான வலுவான தூணாக இருக்க முடியும். 

ஆனால், நம் நாடு மதச்சார்பற்ற நாடுதானே?  

அது வெறும் மேல்பூச்சுதான்.  

அப்படியென்றால், காந்தி, நேரு கற்பனை செய்த மாதிரிகள் தோல்வியடைந்துவிட்டனவா?  

இல்லை. காந்தி, நேரு எல்லோரும் சூழலை மேம்படுத்தவே முயன்றார்கள். ஏராளமான பொருளாதார, சமூக அடுக்குகளைத் தகர்த்தெறிய அவர்கள் முயன்றார்கள். ஆனால், மதமும் இந்த அமைப்புமே மேலோங்கின. ஒரு அநீதியான சமூகக் கட்டமைப்பானது ஒரு அநீதியான அதிகாரக் கட்டமைப்பையே உற்பத்தி செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களையும் கட்சிகளையும் இதற்காகக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. அரசியல், சமூக, பொருளாதார ஏகபோகங்கள் முடிவுகள் எடுப்பதிலிருந்து பெரும் அளவிலான மக்கள்திரளை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். அதனால், அவை ஜனநாயகமற்றவையாக இருக்கின்றன. இதுவரை ஆளும் மேல்தட்டினர்தான் விளையாடிவந்தனர், ஏனையோரோ பார்த்துக் கைதட்ட மட்டுமே அழைக்கப்பட்டனர். இப்போது பார்வையாளர்களோ, ‘நாங்களும் பந்தை உதைத்து கோல் வலைக்குள் தள்ள வேண்டும், எங்களுக்கென்று தனி அணி இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.  

நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியா?  

இல்லை, இல்லை. நான் வெறும் ஆய்வாளன்தான்.  

அமைப்புடனும் ஊடகங்களுடனும் உங்கள் உறவு மோசமடைந்தது ஏன்?  

இதற்கான பதிலை ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களின் குழு எனக்கு அளித்தது. ‘ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளாலும், எங்களை ஆயிரம் ஆண்டுகளாக வசை பாடியவர்களாலும் நீங்கள் வசை பாடப்படுகிறீர்கள். நீங்கள் எங்கள் பக்கத்தில் நின்றால் வசையில் உங்களுக்கும் பங்கு கிடைக்கும்’ என்று அவர்கள் கூறினார்கள். அதுவே எனக்கு வெளிச்சத்தையும் தெம்பையும் கொடுத்தது. இன்னும் இரண்டு அனுபவங்கள் எனது வைராக்கியத்தை உறுதிப்படுத்தின. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள், “நாங்கள் இந்த நாட்டின் இளைஞர்கள் இல்லையா? பட்டியலினத்தோரும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான் இந்த நாட்டின் நான்கில் மூன்று பங்கு என்ற அளவில் இருக்கிறோம். மண்டல் மூலமாக நீங்கள் எங்களுக்கு ஒரு விஷயம் கொடுத்தீர்கள், ஒட்டுமொத்த நாடும் எங்கள் மீது பாய்ந்தது” என்று என்னிடம் கூறினார்கள். இது 27% அல்லது 10% என்பது பற்றிய கேள்வியல்ல; மாறாக, ‘ஆளும் மேல்தட்டினரின் இதயங்களில் எங்களுக்கு 1%-கூட இடம் இல்லையா?’ என்ற கேள்வி. நாட்டின் நான்கில் மூன்று பங்கு இளைஞர்கள் இப்படி உணர ஆரம்பித்தார்கள் என்றால் நாடு என்னவாகும்? இன்னொரு முறை ஒரு பத்திரிகைக்காரர் வயதான ஒரு தலித் பெண்மணியிடம், “நீங்கள் வி.பி.சிங்கை ஏன் ஆதரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “ஏனென்றால் அவர் எனது சாதியைச் சேர்ந்தவர்” என்று பதில் கூறியிருக்கிறார். “வி.பி.சிங் தலித் என்றா சொல்கிறீர்கள்” என்று அந்தப் பத்திரிகையாளர் திரும்பக் கேட்டார். “ஆமாம், ஏனெனில் அவர் எங்களுக்காகப் போராடுகிறார்” என்று அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். ஆக, கொஞ்சம் நம்பிக்கையாவது இருக்கிறது. அதை விட்டுவிடக் கூடாது. வாக்குகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அந்த நம்பிக்கைக்கு ஈடாக மாட்டார்கள்.  

ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் சதிதான் உங்களைக் கவிழ்த்துவிட்டதா?  

நான் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. அது இயல்பான எதிர்வினைதான். ஆளும் மேல்தட்டினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரைத் துரத்திச் சென்று ஒரு முட்டுச்சந்தில் நிறுத்துவோம் என்றால், நமது நாட்டில் மேலும் மேலும் அமைதியின்மையே ஏற்படும். வி.பி.சிங்கைத் தூக்கில் தொங்கவிடுங்கள்; ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான நீதியைக் கொடுங்கள். இல்லையென்றால் இந்த நாடு யாராலும் நிர்வகிக்க முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிடும்!

- மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று வி.பி.சிங் அறிவித்த 30-வது ஆண்டு நிறைவையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான நேர்காணல்.


 

Thursday, August 6, 2020

ஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை


ஆசை 

மனித குல வரலாற்றில், மனிதர்களின் படைப்பு சக்தியும் அழிவு சக்தியும் ஒருசேர புதிய உச்சத்தைத் தொட்ட நாள் ஆகஸ்ட் 6, 1945. சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடும் சம்பவம் அது. அதன் விளைவுகள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்திருக்கின்றன.  

இரண்டாம் உலகப் போர் தனது முடிவை நெருங்கிக்கொண்டிருந்த தருணம் அது. ஜப்பான் போரில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எண்ணிய சாதாரண குடிமக்களில் ஒருவர் சுடோமு யமகுச்சி. இன்றைக்கு உயிரோடிருந்தால் அவருக்கு 104 வயது இருக்கும். 1945-ல் அவருக்கு 29 வயது. அவரது குடும்பமும் அவர் வேலை பார்த்த நிறுவனமும் ஜப்பானின் நாகசாகி நகரத்தில்தான் இருந்தன. ஆனால், 1945-ல் மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். 

ரத்த சாட்சியம் 

ஆகஸ்ட் 6 அன்று காலையில் ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதற்காக ரயில் நிலையத்துக்குத் தனது சகாக்களுடன் சென்றவர் தனது அடையாள அட்டையை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்திருக்கிறது. அதை எடுப்பதற்காகத் திரும்பிவந்தபோதுதான் வானை அண்ணாந்து பார்த்திருக்கிறார். ஒரு விமானமும் இரண்டு பாராசூட்டுகளும் தென்பட்டிருக்கின்றன. சற்று நேரத்தில் வானத்தில் பெரிதாக ஏதோ ஒன்று அதுவரை யமகுச்சி கண்டிராத பிரகாசத்துடன் வெடித்திருக்கிறது. யமகுச்சி தூக்கிவீசப்பட்டார். எங்கு பார்த்தாலும் தீ. எங்கெங்கும் மரண ஓலம். அவரது செவிப்பறை, கண்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது; உடலில் கதிரியக்கத்தால் காயம் ஏற்பட்டது.  

குண்டுவெடித்த இடத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்ததால் யமகுச்சி உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படவில்லை. பேரழிவுக்கு நடுவே அவருக்குப் புகலிடம் கிடைத்தது. அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் நாகசாகிக்கு சென்றார் யமகுச்சி. உடலில் காயம் இருந்தாலும் ஆகஸ்ட் 9 அன்று பணிக்குத் திரும்பினார். அன்றைக்கு நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பிலும் யமகுச்சி உயிர் தப்பினார். அவருக்கு இருந்த அதிர்ஷ்டம் ஏனைய 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இல்லை. அதன் பிறகு நெடிய காலம் ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் நினைவாக இருந்த யமகுச்சி 2010-ல் தனது 93 வயதில் காலமானார். அவரை இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்தது. ஒரு கொடூர வரலாற்றுக்கு ரத்த சாட்சியமாக இருந்த அந்த மனிதர் வாழ்நாள் நெடுக அணு ஆயுதங்களின் கொடுமையையும் பேரபாயத்தையும் பேசிக்கொண்டேயிருந்தார்.  

முன் வரலாறு 
1939-ல் உலகப் போர் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் செயல்பாடுகளெல்லாம் உலக அமைதியை அச்சுறுத்திக்கொண்டிருந்த காலம் அது. இதற்கு முன்னதாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு அணுவுக்குள் எவ்வளவு சக்தி இருக்கும் என்பதை ஐன்ஸ்டைனின் கோட்பாடு விளக்கியிருந்தது; இயற்பியலாளர் லியோ ஸில்லார்ட் அணுக்கரு சங்கிலித் தொடர் நிகழ்வை 1933-ல் கண்டுபிடித்திருந்தார். 1930-களின் இறுதியில் அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உலகையே அச்சுறுத்தின. இதைத் தொடர்ந்து இந்தத் திசையில் ஜெர்மனியை முந்துவது அவசியம் என்று கருதி ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனும் லியோ ஸில்லார்டும் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார்கள். அதுதான் அணுகுண்டு திட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி.  

முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்டத்தில் 1942-ல் அணுகுண்டு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற ஆரம்பித்தன. அதனால், இதற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற பெயர் வந்து சேர்ந்தது. 1945-ல் அமெரிக்கா வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தும்விட்டது. தயாரித்த அணுகுண்டை 1945 ஜூலை 16 அன்று நியூ மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் பரிசோதித்தார்கள்.  

இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளில் பிரதானமாக இருந்த ஜெர்மனி சரணடைந்ததால் அந்தப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாலும் ஆசியப் பகுதியில் ஜப்பான் எளிதில் அடிபணிவதாக இல்லை. அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரூமேன், ரஷ்யாவின் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரும் சந்தித்து ஜப்பான் சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார்கள். ஜப்பானோ வேறு வழிகளில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தது. எது எப்படியிருந்தாலும் ஜப்பான் தோல்வியின் விளிம்பில்தான் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே ஜப்பானின் 60 நகரங்களில் அமெரிக்கா சாதாரண வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்திருந்தது. இந்த நிலையில்தான் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுவது என்று முடிவெடுத்தது அமெரிக்கா.  

ஆகஸ்ட் 6 அன்று காலையில் பசிபிக் கடலில் உள்ள டினியன் தீவிலிருந்து ‘பி-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்’ விமானம் புறப்பட்டது. பால் டிபெட்ஸ் ஓட்டிச்சென்ற அந்த விமானம் சுமந்திருந்த அணுகுண்டின் பெயர், குட்டிப் பையன் (லிட்டில் பாய்). 4,400 கிலோ எடை கொண்ட அதன் உள்ளே 64 கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட ‘யுரேனியம்-235’ இருந்தது. சரியாக 8.15 மணிக்கு ஹிரோஷிமாவுக்கு மேலே 31,060 அடி உயரத்தில் பறந்தபோது அணுகுண்டு விடுவிக்கப்பட்டது. கீழ்நோக்கிப் பயணித்து 45 நொடிகள் கழித்து, தரையிலிருந்து 1,950 அடிகள் இருக்கும்போது அது வெடித்தது. அணுகுண்டைப் போட்டுவிட்டு வெகு வேகமாக அந்த இடத்தைவிட்டுச் சென்ற அந்த விமானம் குண்டுவெடித்த இடத்திலிருந்து சுமார் 11 மைல் தொலைவில் பறந்தபோது குண்டுவெடிப்பின் அதிர்வுகள் அதையும் உலுக்கின.  

மானுட அவலத்தின் பேயாட்டம் 

அதன் பின்பு நடந்தது முன்னுதாரணமில்லாத ஒரு பேரழிவு. இந்தக் குண்டுவெடிப்பின் சக்தி 2 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருளுக்கு இணையானது என்றார்கள். குண்டுவீச்சின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். 13 சதுர கி.மீ. தூரத்துக்கு நகரம் அழிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 70% கட்டிடங்கள் சேதமடைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஹிரோஷிமாவுக்கு மேலே சிவப்பும் கறுப்புமாக ராட்சகக் காளான் ஒன்று முளைத்திருந்ததைப் போல தெரிந்ததாகச் சொன்னார்கள். குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. இறந்துகொண்டிருந்தவர்களின் மரண ஓலமும், தங்கள் குடும்பத்தினரைத் தேடி அலைந்தவர்களின் ஓலமுமாக ஓசைகளின் நகரமானது ஹிரோஷிமா. கை, கால், தலையில்லாத குழந்தைகளை அவற்றின் அன்னையர் தூக்கிக்கொண்டு திரிந்தனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் பலரும் தங்கள் உயிரையும் குடும்பத்தினரையும் பறிகொடுத்துவிட்டிருந்தார்கள். 

ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டும் ஜப்பான் அடிபணியவில்லை. மூன்று நாட்கள் கழித்து கொக்குரா என்ற நகரத்தின் மீது குண்டுவீசத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், கொக்குராவில் மேகமூட்டமாக இருந்ததால், அடுத்து நாகசாகி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இங்கு வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் குண்டு மனிதர் (ஃபேட் மேன்). இதன் எடை 4,670 கிலோ. இதன் உள்ளே 6.4 கிலோ புளுட்டோனியம் இருந்தது. ‘குட்டிப் பைய’னைவிட இது திறன் மிகுந்தது என்று கூறப்படுகிறது. 2.3 கோடி கிலோ டி.என்.டி. வெடிபொருட்களின் திறனுக்கு இணையானது அது என்று சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும் நாசத்தை வைத்துதான் போர் வியாபாரிகள் எல்லாவற்றையும் அளவிடுவார்கள். நாகசாகியின் மீது வீசிய குண்டும் ஹிரோஷிமாவுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கியது. எங்கெங்கும் மானுட அவலத்தின் பேயாட்டம். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. 

நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சு. ஜப்பான் நடுங்கிப்போனது. சில நாட்களில் ஜப்பான் மீது போர் தொடுக்கப்போவதாக ரஷ்யா அறிவித்ததும் வேறு வழியின்றி ஜப்பான் சரணடைந்தது. அணுகுண்டு வீசினாலும் வீசாவிட்டாலும் எப்படியும் ஜப்பான் இறுதியில் தோல்வியடைந்திருக்கும் என்று கருதுவோரும் உண்டு. ரஷ்யாவுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இந்தக் குண்டுவீச்சுகள் என்போரும் உண்டு. இரண்டாவது உலகப் போரை முடித்துவைத்தது அணுகுண்டு வீச்சுதான் என்று ஒரு வாதம் சொல்லப்பட்டாலும் அதுதான் பனிப்போரைத் தொடங்கியும் வைத்தது என்ற உண்மையை நாம் காண வேண்டும். 

ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களிலும் குண்டுவீச்சின்போது உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக இருந்தாலும், அடுத்து வந்த சில வாரங்கள், மாதங்கள் என்று அந்த ஆண்டின் முடிவுக்குள் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் காரணமாகப் பல்வேறு வகையிலான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். கணக்கற்ற குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்து ஹிரோஷிமா, நாகசாகியின் வாழும் சாட்சிகளாக உலவுகின்றனர். அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகாலமாக எந்த நாடும் மற்றொரு நாட்டின் மீது அணுகுண்டு வீசவில்லை என்றாலும் ஏராளமான அணுஆயுதங்களைப் பல நாடுகளும் வைத்திருக்கின்றன. ஆகவே, எப்போதும் எரிமலையின் வாய் மீது உட்கார்ந்திருப்பது போன்றதுதான் நம் வாழ்க்கை. ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளரோ அல்லது ஸ்டேன்லி கூப்ரிக்கின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ்…’ படத்தில் வருவதுபோல் ஒரு ராணுவ ஜெனரலோ திடீரென்று ஒரு கணத்தில் ஒரு பொத்தானை அழுத்தினால் இந்த உலகம் முடிவுக்கு வரும் அபாயத்தில்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  

முதல் அணுகுண்டைத் தயாரித்த அறிவியலாளர்கள் ‘அழிவுநாள் கடிகாரம்’ (டூம்ஸ்டே கிளாக்) என்ற கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அழிவுநாளுக்கு, அதாவது கடிகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, இன்னும் இரண்டு நிமிடங்களே உள்ளன. நள்ளிரவு 12 மணியை நோக்கிய முதல் உந்தலை ஹிரோஷிமா அளித்ததென்றால் தொடர்ந்த போர்கள், அணுஆயுதப் பெருக்கம், இயற்கைப் பேரழிவுகள் போன்றவை மேலும் கடிகாரத்தின் முட்களை வேகமாக நகர்த்தின, நகர்த்திக்கொண்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகியின் மீது குண்டுவீசப்பட்ட 75-ம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப்போட்டிருக்கிறது. அது ‘அழிவுநாள்’ கடிகாரத்தையும் முடக்கிப்போடுமானால் மனித குலத்துக்கே பெரும் விடிவாக அமையும். 

-(ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)

Sunday, July 26, 2020

அரை நூற்றாண்டைக் கொண்டாடும் ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’


ஆசை

ஸ்டேன்லி குப்ரிக்கின் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ (2001: A Space Odyssey) படத்தை முதல் தடவை பார்த்து முடித்தவுடன் இந்தப் படத்தை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தேன். ஆனால், அடுத்த சில நாட்கள் அந்தப் படம் என் ஆழ்மனதில் ஏதோ ரசவாதம் செய்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. அதனால் அந்தப் படம் எனக்குப் புரிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதன் வசியத்துக்கு நான் ஆட்பட்டுவிட்டேன் என்பதுதான் உண்மை. எதையுமே விளக்காமல் ஒரு அறிவியல் புனைகதை படத்தை எப்படி ஸ்டேன்லி குப்ரிக் எடுத்தார் என்பதும் பெரும் ஆச்சரியம். அந்தப் படத்தின் வசியத்துக்கு ஆட்பட்டாலும் படத்தின் முக்கியமான விஷயங்கள் பலவும் பிடிபடாத நிலைதான் எனக்கு.

 நான் மட்டுமல்ல, 1968-ல் முதன்முறையாக இந்தப் படம் வெளியானபோது பெரும்பாலானோரின் நிலையும் இதுதான். கணிசமானோர் திரையரங்கை விட்டுப் பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. அது மட்டுமல்ல, படம் வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது அந்தப் படத்தைத் தயாரித்த எம்.ஜி.எம். நிறுவனத்தின் அதிகாரிகளே பாதியிலேயே வெளியேறினார்கள். அரங்கில் நிறைய கேலி சத்தங்களும் எழுந்தன. திரையிடலின் தொடக்கத்திலிருந்தே ஸ்டேன்லி குப்ரிக் ஒருவிதப் பதற்றத்துடன் இருந்தார். நான்கு ஆண்டுகள் கண்ட கனவின் பலன் இறுதியில் ஒன்றுமில்லை என்று ஆனால் பதற்றம் ஏற்படாதா, என்ன?

 தொடக்கத்தில் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் பரவின. ‘ரொம்பவும் கொட்டாவி விட வைக்கும் படம்’ என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. ஒருசில நாட்களில் இந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. படம் யாருக்கும் புரியவில்லை என்றாலும் மக்கள் கூட்டம் திரையரங்குக்குப் படையெடுத்தது. இதற்கு ஹிப்பிக்களும் முக்கியக் காரணம். போதை மருந்து உட்கொள்ளும்போது அனுபவிப்பது போன்ற உணர்வுகளை இந்தப் படத்தில் அவர்கள் கண்டுகொண்டார்கள். திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ‘இதோ கடவுள், இதோ கடவுள்’ என்று கத்தியபடி ஒருவர் ஓடியிருக்கிறார். விளைவு, படம் ‘கல்ட் ஹிட்’!



படத்தைப் பார்ப்பதைவிட கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடுவது மிகவும் எளிது. நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மனிதக் குரங்குகள் கூட்டத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு சிறிய தண்ணீர்க் குட்டையை யார் உரிமை கொள்வது என்று குரங்குக் கூட்டங்கள் இரண்டுக்கும் இடையிலான போராட்டம். இதற்கிடையே அந்த இடத்தில் கறுப்பாக ஒரு செவ்வகக் கல் ஒன்று நிற்கிறது. (இயற்கையில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்கள் கிடையாது). அந்தச் செவ்வகக் கல்லைச் சுற்றி என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் குரங்குகள் சத்தம் போட்டபடி ஓடுகின்றன. அந்தக் கல் ஏதோ ஒரு வகையில் அங்குள்ள குரங்கொன்றிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறந்து கிடந்த விலங்கொன்றின் எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி எதிரிக் கூட்டத்துக் குரங்கொன்றைக் கொன்று தண்ணீர்க் குட்டையின் உரிமையைக் கைப்பற்றுகிறது குரங்கு. ஆயுதத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டது மனித இனத் தோற்றத்துக்கான பெரும் உந்துதலாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நாற்பது லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி 2001-க்குக் கதை செல்கிறது. அதே போன்றதொரு கல் நிலவில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் வீரர்கள் பயணம் செய்கிறார்கள். 18 மாதங்கள் கழித்து இன்னொரு விண்கலத்தில் இரண்டு வீரர்களும் உறக்க நிலையில் (hibernation) மூன்று வீரர்களும், ஒட்டுமொத்த விண்கலத்தையும் கட்டுப்படுத்தும் செயற்கையறிவுத் தொழில்நுட்பமான ஹால் கணினியும் வியாழன் கோளுக்கருகில் தென்பட்ட இன்னொரு செவ்வகக் கல்லை ஆய்வு செய்யப் போகிறார்கள். அந்த விண்கலத்தில் உறக்கநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரர்கள் மூன்று பேரைக் கணினி கொன்றுவிடுகிறது. விண்கலத்தை இயக்கிக்கொண்டிருந்த இருவரில் ஒருவரை விண்கலத்துக்கு வெளியே அனுப்பிக் கொன்றுவிடுகிறது. அந்தக் கணினியின் ஆபத்தை உணர்ந்தவரும் இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான டேவிட் போமேன் (Keir Dullea) அந்தக் கணினியின் மன்றாடலுக்கு இடையே அதனைச் செயலிழக்க வைக்கிறார். பிறகு, அந்தச் செவ்வகக் கல்லை ஆராய்வதற்காக ஒரு கோள வடிவ வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும்போது மிகவும் விசித்திரமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. காலம், இடம் போன்றவற்றையெல்லாம் கடந்துசெல்கிறார். விநோதமான ஒரு அறையில் தனது முதிய வயது உருவத்தை அவர் காண்கிறார். அங்கேயும் அந்தச் செவ்வகக் கல் தோன்றுகிறது. அதன் பிறகு கருப்பையில் இருக்கும் குழந்தையாக மாற்றப்பட்டு விண்வெளியில் மிதக்க அனுப்பப்படுகிறார். கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் பூமியையே பார்த்துக்கொண்டிருக்கிறது. குரங்காய் இருக்கும்போது மனித இனத்தை நோக்கி நகர்த்திய செவ்வகக் கல் அந்தச் சிசுவை வேறொரு பரிணாமம் அடையப் போகும் உயிரைப் போல நகர்த்தப் போகிறதான் என்ற நம் எதிர்பார்ப்புடனே படம் முடிந்துபோகிறது.

உலகின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர்  ஆர்த்தர் சி.கிளார்க்கின் ‘த சென்ட்டினெல்’ என்ற சிறுகதைதான் ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படத்துக்குத் தொடக்கப்புள்ளி. அந்தக் கதையைப் படித்துவிட்டு இயக்குநர் ஸ்டேன்லி குப்ரிக் இலங்கையில் வசித்த கிளார்க்குக்கு  1964-ல் ஒரு கடிதம் எழுதினார். ‘மகத்தான அறிவியல் புனைகதை திரைப்படம் ஒன்றைத் தான் எடுக்க விரும்புவதாக’ குப்ரிக் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். குப்ரிக்கின் அழைப்பின்பேரில் அமெரிக்கா சென்றார் கிளார்க். ‘தி சென்ட்டினெல்’ சிறுகதையை எடுத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து விரிவாக்க ஆரம்பித்தார்கள். எடுக்கவிருக்கும் படத்துக்கான கதையை ஒரு நாவலாக எழுதினால் நன்றாக இருக்கும் என்று குப்ரிக் விருப்பம் தெரிவிக்க இருவருடைய உழைப்பில் படத்தின் தலைப்பிலேயே நாவலும் உருவானது. படம் வெளியான பிறகுதான் நாவலை வெளியிட வேண்டும் என்று குப்ரிக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

கதையை உருவாக்கிக்கொண்டிருக்கும்போதே இந்தப் படத்தை முழுக்கவும் காட்சிரீதியிலான படமாக உருவாக்குவது என்ற முடிவில் இருந்தார் குப்ரிக். இந்தப் படத்தைத் தன்னுடைய படமாக மட்டுமல்லாமல் காண்பவர் ஒவ்வொருவருடைய படமாகவும் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான் புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருந்தாலும் இந்தப் படத்தில் விளக்கங்கள் ஏதும் அளிக்கவில்லை குப்ரிக். மாறாக, பார்வையாளர்களை அவர்களுக்கு விருப்பமான விளக்கங்களைக் கொடுத்துக்கொள்ளத் தூண்டினார். ஒரு வகையில் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டபோது ‘உருவாக்கப்படவில்லை’; பார்க்கப்பட்டபோதுதான் ‘உருவாக்கப்பட்டது’ என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இன்றுவரை உலகின் தலைசிறந்த படங்களின் பட்டியலில் முதல் வரிசையில் இந்தப் படம் இருந்துகொண்டிருந்தது.

இந்தப் படத்தின் பிரதானப் புதிர், செவ்வகக் கல்தான். மனித இனமே தோன்றியிராத காலத்தில் அவ்வளவு பளபளப்பாக உருவாக்கப்பட்ட அந்தக் கல்லைக் குரங்குகளிடையே யார் வைத்தது? நிலாவில் யார் வைத்தது? வியாழனுக்கருகே யார் திரிய வைத்தது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை முழுமையான விடையேதும் இல்லை. படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட நாவலில் வேற்றுகிரகவாசிகளால் வைக்கப்பட்ட கல் என்ற குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பைப் படத்தில் கொடுத்தால் ஒற்றை அர்த்தத்துடன் படம் முடிந்துவிடும் என்று எண்ணிய குப்ரிக், கல்லை வைத்தது யார், எதற்காக வைத்தார்கள் என்பதற்கான குறிப்புகளையும் விடைகளையும் படத்தில் வைக்கவில்லை. ஆகவே, நாவலைக் கொண்டு படத்தை அணுகவே கூடாது.

பரிணாமத்தை உந்தித் தள்ளும் விதத்தில் இந்தப் படத்தில் வரும் செவ்வகக் கல்லைப் போல மற்றுமொரு முக்கியமான விஷயம் மனித உணர்வுள்ள ஹால் கணினி. இன்றும் அந்த அளவுக்கு ஒரு கணினி கண்டுபிடிக்கப்படவில்லையென்றாலும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்களை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். ஆனால், செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் எனும் துறை துளிர்விடவே ஆரம்பிக்காத காலத்தில் அதனால் மனித குலத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி தீர்க்கமான எச்சரிக்கை விடுத்திருப்பார் குப்ரிக். 

விடுவிக்க முடியாத புதிர் போலவே தன் படத்தை எடுக்க வேண்டும் என்று குப்ரிக் விரும்பினார். தொடக்கத்தில் வேற்றுலகவாசிகளைக் காட்டுவது என்ற யோசனை அவருக்கு இருந்தது. வழக்கமான வேற்றுலகவாசிப் படங்களைப் போல் காட்டுவதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இந்தப் படம் மனித அச்சத்தையும் வியப்பையும் பற்றியது என்றால் அதையெல்லாம் பார்வையாளர்களும் உணர என்று முடிவெடுத்து, வேற்றுலகவாசிகளுக்குப் பதிலாகச் செவ்வகக் கற்களை குப்ரிக் தேர்ந்தெடுத்தார். அதனால்தான், படத்தில் அந்தக் கல்லைப் பார்க்கும்போது குரங்குகளுக்கு ஏற்படும் உணர்வு நமக்கும் ஏற்படுகிறது. இங்கேதான் குப்ரிக் என்ற மகாகலைஞர் வெற்றிபெறுகிறார்.

“கடவுளைப் பற்றிய கருத்தாக்கம் இந்தப் படத்தின் மையமாக இருக்கிறது. ஆனால், வழக்கமாகச் சொல்லப்படுவதும் மனித உருவிலானதுமான கடவுள் அல்ல அது” என்கிறார் குப்ரிக். காலத்தைத் தாண்டி, இடத்தைத் தாண்டி நிகழும் எந்த ஒரு பயணமும் இறுதியில் வந்தடையும் இடம்தான் குப்ரிக் காட்ட நினைக்கும் கடவுள், அதாவது காட்டாமல் காட்ட நினைக்கும் கடவுள். அந்தக் கடவுளை நோக்கிய மாபெரும் புதிர்களின் தொகுப்புதான் இந்தப் படம். புதிர்களை அவிழ்ப்பதன் மூலம் அல்ல, புதிர்களின் வழியே பயணிப்பதன் மூலம்தான் அந்தக் கடவுளை நெருங்க முடியும் என்று குப்ரிக் நம்பியிருக்கிறார்.

வழக்கமான அறிவியல் புனைகதை படங்கள் காலத்தை மீறிய தொழில்நுட்பங்களை முன்வைப்பதுண்டு. உரிய காலம் வரும்போது அந்தப் படங்களில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்பம் பொய்த்துப்போவதும், காலாவதியாவதும் உண்டு. ஆனால், ஸ்டேன்லி குப்ரிக்  உண்மையில் காலத்தைத் தாண்டி கனவு கண்ட படைப்பாளி. 1968-ல் வெளியான இந்தப் படத்தின் பெரும்பாலான கதைக்களன் 2001-ல் நடப்பதால், உண்மையில் 2001-ம் ஆண்டில் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடியவர்கள் தன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கக் கூடாது என்பதில் குப்ரிக் உறுதியாக இருந்தார். அதனால், திரைப்பட சிறப்பு வடிவமைப்பாளர்களை விடுத்து, உண்மையான அறிவியலாளர்களையும் நாசாவின் தொழில்நுட்பப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார் குப்ரிக். விண்கலம், அதன் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம், விண்வெளி வீரரின் உடைகள், கணினி என்று எல்லாவற்றிலும் தன் காலத்தை முந்திய சித்தரிப்பைத் தருவதற்காக  நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்துத்தான் இந்தப் படத்தை குப்ரிக் எடுத்தார். படம் வெளியான 50 ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்கும்போது நாசாவே குப்ரிக்கிடம் பின் தங்கியிருப்பதை உணர முடிகிறது.

இந்தப் படத்தின் தொழில்நுட்பத் துல்லியம் பற்றி நாசாவே தன் இணையதளத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி:

பூமியைச் சுற்றிவருவதாகப் படத்தில் காட்டப்படும் விண்வெளி நிலையம் அன்று கற்பனை; இன்று நிஜமாகிவிட்டது. வடிவம் வேறு விதத்தில் இருந்தாலும் அங்கே வீரர்கள் தங்கிப் பணிபுரிவது போன்று காட்டப்பட்டிருப்பது இன்று நிஜமாகிவிட்டது.

2. 1968-ல் தட்டையான திரை கொண்ட கணினிகளைக் கற்பனை செய்தே பார்க்க முடியாது. இன்று அதுவும் நிஜமாகிவிட்டது.

3. விண்கலத்தின் உள்ளே இந்தப் படத்தில் காட்டப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றுள்ள விண்கலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன.

4. படத்தில், கலத்தின் உள்ளே விண்வெளி வீரர் மித ஓட்டப்பயிற்சியில் (Jogging) ஈடுபட்டிருப்பார். அதைப் போல, 2007-ம் ஆண்டில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்தில் இருந்தபடி பூமியில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார்.

5. இந்தப் படத்தில் காட்டப்பட்ட பல்வேறு அம்சங்கள் இன்னும் நிதர்சனமாகவில்லையென்றாலும் கூடிய சீக்கிரம் அவையும் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, நிலவைத் தாண்டி அமையும் மனிதர்கள் பயணிக்கும் விண்வெளிப் பயணம், விண்வெளி நிலையத்தில் இருக்கும் உணவகங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

ஆக, ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ படம் தன் அரைநூற்றாண்டு பயணத்தை நிறைவுசெய்திருக்கும் தருணத்தில் அது வெறும் படமாக மட்டும் இல்லாமல் ஒரு கலாச்சார, அறிவியல் நிகழ்வாக உருவெடுத்திருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது.  ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லூக்காஸ், ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன் போன்ற திரையாளுமைகள் மட்டுமல்லாமல் அறிவியல் அறிஞர்கள், ஹிப்பிகள் போன்று பலருக்கும் பிடித்தமான படம்; அவர்களில் பலரது வாழ்க்கையையும் மாற்றியமைத்த படம்.

இந்தப் படத்தின் தொடக்கப் பகுதியில் ஒரு காட்சி வரும். எலும்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட குரங்கு வெறியாட்டத்தில் எலும்பை வான் நோக்கித் தூக்கியெறியும். மேலே சென்று கீழ்நோக்கி வரும்போது அது 40 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக் கலமாக உருவெடுக்கும். மனித இனத்தை உந்தித்தள்ளும் எறிதல் அது. அதுபோன்று திரையுலகத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளிய மாபெரும் எறிதல் என்றே ‘2001: ஒரு விண்வெளிப் பயணம்’ திரைப்படத்தைச் சொல்லத் தோன்றுகிறது.
(2001 எ ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘காமதேனு’ இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம் இது.)

Sunday, June 28, 2020

உலகை அன்புமயமாக்கும் கலை- தி.ஜா. நூற்றாண்டு


ஆசை

நவீனத் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத்துக்கு நிகரான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது சிறுகதையில்தான் என்ற கருத்து இங்கே வெகு காலமாக நிலவுகிறது. அது உண்மைதான் என்பதை புதுமைப்பித்தன், மௌனி, குபரா தொடங்கி நீளும் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் நிரூபிக்கிறது. இவர்களில் தி.ஜானகிராமனின் பங்களிப்பும் மிக முக்கியமானது. நெகிழ்ச்சியும் காதலும்  மீறல்களும் நிரம்பிய தனது நாவல்களாலே அதிகம் வெகுஜன வாசகர்களிடையே அறியப்படும் தி.ஜானகிராமனின் சிறுகதைகளையே அவரது முதன்மையான சாதனையாக தமிழிலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவதுண்டு. 

ஒரு எழுத்தாளருக்கு நாவல்தான் பரந்த களத்தை அமைத்துக்கொடுக்கும். சிறுகதையில் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், தி.ஜானகிராமன் விஷயத்தில் இது நேரெதிர் என்று தோன்றுகிறது. அவர் தனது நாவல்களில் எழுதிய விஷயங்களை காதல், மரபை மீறிய பாலுணர்வு, இசை என்று ஒரு சில வகைமைகளுக்குள் அடக்கிவிடலாம. அவையும் கூட ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாகவே இருக்கும். ஆனால், சிறுகதைகளில்தான் அவர் விரிவான பொருள்களைப் பேசியிருக்கிறார். மேற்கண்ட மூன்று கருப்பொருள்களுடன் அன்பு, நம்பிக்கை துரோகம், வன்மம், அறம், கருணை, (இரக்கத்திலிருந்து மாறுபட்ட) பரிவு, வீம்பு, அந்தஸ்தின் போலித்தன்மை, மரணம், குற்றவுணர்வு, நகைச்சுவை என்று பல்வேறு கருப்பொருள்களும் உணர்வுகளும் அவரது சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அவருடைய சமகால (பிராமண) எழுத்தாளர்கள் அநேகமாகத் தொடாத சாதி என்ற கருப்பொருளும்கூட ஒரு கதையில் (இசைப்பயிற்சி) இடம்பெற்றிருக்கிறது. 

சிற்சில கதைகளில் கூறல் முறையில் தி.ஜா. பரிசோதனை முயற்சிகள் செய்திருந்தாலும் அவர் ஒரு மரபான கதைசொல்லியே. ‘நாடகத்தின் முதல் அங்கத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் நாடகம் நிறைவுக்கு வருவதற்கு முன்பு அது வெடித்தாக வேண்டும்’ என்ற ஆண்டன் செகாவின் இலக்கணத்தையே தி.ஜா. பெரிதும் தனது சிறுகதைகளில் பின்பற்றியிருக்கிறார். ஒரு துரோகம், வஞ்சம், ஏமாற்று வேலை, குற்றம், கொடுமை அவரது கதை பேசும் என்றால் அந்தக் கதை முடிவதற்குள் அதற்கான பரிகாரம் கிடைத்துவிடும். அது பழிவாங்குதல், தண்டனை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டாமல் பெரிதும் மன்னிப்பு, குற்றவுணர்வு போன்றவற்றின் மூலம் ஈடுகட்டப்படுவதுதான் தி.ஜா. கதைகளின் சிறப்பு. இதற்கு கடன் தீர்ந்தது, கங்கா ஸ்நானம், கண்டாமணி போன்ற கதைகள் சிறந்த உதாரணம். ‘பாயசம்’ கதையில் கூட சாமநாது தன் வஞ்சத்தைக் கதையின் இறுதியில் வெளிப்படுத்தினாலும் உடனேயே அவருக்குக் குற்றவுணர்வு ஏற்படுத்தும் முள் ஒன்றும் அவர் மனதில் செருகப்படுகிறது. இது போன்ற மனித மனத்தின் அடிப்படை உணர்வுகள் நிகழ்த்தும் விளையாட்டைத் தன்னுடைய நெகிழ்வான, மொழியழகு மிக்க நடையால் கதை என்ற பெயரில் தி.ஜா. செதுக்கித் தருபவைதான் அவரது சிறுகதைகள்.

தி.ஜா.வின் கதைகளைப் படித்து முடிக்கும்போது கிட்டத்தட்ட வெறுக்கத் தக்கவர்கள் என்று யாருமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். ஒருவர் மோசமானவராகக் காட்டப்படுகிறார் என்றால் அவரது நெஞ்சில் ஒரு துளி அன்பைச் சேர்த்து அவரை நெகிழ்த்திவிடுகிறார் தி.ஜா. அவரது புகழ்பெற்ற ‘பரதேசி வந்தான்’ கதையில் வரும் வக்கீல் இப்படிப்பட்டவர்தான். எப்பேர்ப்பட்ட படுபாதகக் கொலை வழக்கையும் தன் வாதத் திறமையால் வெல்லக்கூடிய வக்கீல் அவர். பெரிய சங்கீத ரஸிகரும் கூட. எந்த அபஸ்வரத்தையும் சங்கீதத்திலும் வாழ்க்கையிலும் பொறுக்க முடியாதவர். அவருடைய ஒரே பிள்ளையின் கல்யாணத்தின் விருந்தின்போது வீட்டுக் கூடத்தில் முக்கியஸ்தர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடும் பந்தியில் ஒரு பிச்சைக்காரரை அவர் பார்த்துவிடுகிறார். அவரைத் தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளிவிடுகிறார் வக்கீல். அடுத்த மாதம் அதே நாள் இங்கே வந்து சாப்பிடுவதாக சாபமிட்டுச் செல்கிறார் அந்தப் பிச்சைக்காரர். அதே நாள் மாலையில் கொல்லைக்குப் போய்விட்டுத் திரும்பிய மணமகன் மயக்கம் போட்டுவிழுகிறான். என்ன செய்தும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பிச்சைக்காரர் தான் சொன்ன தேதியில் வாசலில் வந்து நிற்கிறார். அவர் சாபமிட்டது நடந்துவிட்டது என்கிறார் வக்கீல். ‘என் பசி சாபமிட்டது’ என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். “அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்கு… தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை… உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம். துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக நிற்கும்” என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். இது அந்த வக்கீலுக்கு எவ்வளவு பெரிய கண் திறப்பாக இருந்திருக்கும்! அதனால்தான் அந்தப் பிச்சைக்காரரை ‘காலதேவரே’ என்று அழைக்கிறார்.

தி.ஜா.வின் இன்னொரு முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத கதை  ‘இசைப்பயிற்சி’. அநேகமாக தி.ஜா. எழுதிய ஒரே அரசியல் கதை இதுவாகத்தான் இருக்கக் கூடும். இதில் நேரடியான அரசியல் கிடையாது. சென்னையிலெல்லாம் பலருக்கும் சங்கீதம் சொல்லிக்கொடுத்துவிட்டு திருப்தியடையாமல் கிராமத்து அக்கிரகாரத்தில் வந்து குடியிருக்கும் பாகவதர் மல்லிக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்க எந்த சிஷ்யரும் கிடைக்கவில்லை என்ற குறை உண்டு. தற்செயலாக ஒரு இளைஞருக்கு நல்ல குரல் வளம் இருப்பதை மல்லி கண்டடைகிறார். அந்த இளைஞர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர். அந்த இளைஞரை வெள்ளிக்கிழமை தன் வீட்டுக்கு வரச் சொல்கிறார். இந்த விஷயம் அக்கிரகாரத்திலும் ஊர் முழுவதும் பரவி பயங்கரக் கேலிக்குள்ளாகிறார் மல்லி. தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற குழப்பம் அவருக்கு. எனினும் சொன்னது சொன்னதுபோல் வெள்ளிக்கிழமை அந்த இளைஞனைத் தன் வீட்டுக் கொல்லைக்கு வரச் சொல்கிறார். தனக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே 40 அடி இடைவெளி விட்டு சங்கீதம் சொல்லித் தருகிறார். ஒரு பக்கத்தில் சேரி மக்களும் இன்னொரு பக்கத்தில் அக்கிரகாரவாசிகளும் இதையெல்லாம் வேடிக்கைபார்க்கிறார்கள். பயிற்சி முடிந்ததும் “மீசையிலே படாம கூழும் குடிச்சாச்சு” என்று அக்கிரகாரவாசி ஒருவர் சொல்ல, “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லியா பாருங்கடா, ஒழிச மக்களா” என்று சொல்லிவிட்டு சுருதிப் பெட்டியைத் தூக்கியெறிகிறார். சக மனிதர் மீதான கருணை, இரக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும்போது ஒருவர் தன்னை மேலேயும் இரக்கத்துக்குப் பாத்திரமானவர்களைக் கீழேயும் வைத்துப் பார்க்கும் மனநிலையை இந்தக் கதை உடைக்கிறது. இரக்கம் (சிம்பதி) அல்ல, பரிவுணர்வே (எம்பதி) சாதிய மனநிலையை அகற்ற உதவும் என்பதை உணர்த்தும் கதை இது. நுட்பமாகக் கவனித்தால், கேலி பேசிய ஊராரைவிட சங்கீதம் கற்றுத்தரும் மல்லிதான் இந்தக் கதையின் வில்லன் என்பது புலப்படும்.  

சிறுகதையின் பக்க அளவும் கால அளவும் குறைவு என்பதால் தி.ஜா.வின் நாவல் அளவுக்கு அவரது சிறுகதைகளில் வர்ணனை இடம்பெறுவதில்லை. எனினும் சில வரிகளில் ஒருவரின் தோற்றத்தை, குணநலனைச் சொல்லிவிடும் வித்தை அவருக்கு சிறுகதைகளில் கைகூடியிருக்கிறது. கதையை நடத்திச் செல்வதில் உரையாடல்கள் மிக முக்கியப் பாத்திரங்கள் வகிக்கின்றன. அவரது நாவல்களும் சரி சிறுகதைகளும் சரி அலாதியான வாசிப்பனுபவத்தைத் தருபவை. கடந்த 70- ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்திய தி.ஜா.வின் எழுத்துக்கள் இனி வரும் பல நூற்றாண்டுகளும் அப்படியே செய்யும் என்பது உறுதி! 
- (தி.ஜானகிராமன் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)   




Friday, June 19, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75 : 2


ஆசை

அப்போது நான் சினிமா கனவுகளில் இருந்தேன். சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து சத்யஜித் ரே மாதிரி பெரிய இயக்குநராகும் கனவு. மன்னார்குடியில் இருக்கும்போது கூடப் படித்த நண்பர் ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சில முறை ராமகிருஷ்ணனை சந்திக்க வந்தேன். என் குடும்பத்தினர் சாதிக்காததை அவர் சாதித்தார். எனது சினிமா கனவுகளிலிருந்து உலுக்கி என்னை வெளியே கொண்டுவந்தார். எனக்கு இருந்தது கனவு மட்டுமே தவிர அதற்காக பாடுபடக் கூடிய தைரியம் இல்லை என்பது புரிந்தது. “ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி செய்யுங்கள்” என்றார். மன்னார்குடியில் அப்போது முதுகலை இல்லை என்பதால் 2001-ல் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அண்ணனின் ஆதரவில் விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்தேன். அவ்வப்போது க்ரியாவுக்கோ அப்போது ராயப்பேட்டையில் இருந்த அவரது வீட்டுக்கோ சென்றுவருவேன். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல இலக்கியம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தினார். சில முறை கடற்கரைக்கோ வேறுசில இடங்களுக்கோ சென்று பேசுவதுண்டு. அப்போது ஒருமுறை “சுந்தர ராமசாமி பிராமணர் என்று தெரிந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றேன். “அப்படியெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது. செயல்களைத்தான் பார்க்க வேண்டும்” என்றார். அவரும் பிறப்பால் பிராமணர்தான் என்றாலும் சாதி சார்ந்த அடையாளங்களை இளம் வயதிலேயே துறந்தவர்.

என்னிடம் என்ன கண்டாரோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை சந்திக்கும்போது எனக்கென்று தாராளமாக நேரத்தை ஒதுக்கினார். நான் தத்துப்பித்து என்று உளறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அவருடைய நேரத்தை நாம் திருடுகிறோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும். ஆனால், அவரோ என்னுடன் பேசியதை விரும்பியே செய்தார். அவர் வீட்டில்தான் முதல்முதலாக சைக்காவ்ஸ்கியின் இசையைக் கேட்டேன்; ராவெலின் போலரோவைக் கேட்டேன். அவர்தான் எனக்கு பிஸ்மில்லா கானை அறிமுகப்படுத்திவைத்தார். கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. “இவர்கள்தான் எனக்கு உண்மையில் கடவுள்கள்” என்றார், கடவுள் நம்பிக்கையற்ற ராமகிருஷ்ணன்.

விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை. திருவல்லிக்கேணியில் நிறைய சாலையோரப் புத்தகக் கடைகள் இருக்கும். எனக்குக் கொடுக்கப்பட்ட மாதாந்திரத் தொகையைச் சிக்கனப்படுத்தி பழைய புத்தகங்கள் நிறைய வாங்குவேன். அப்படியும் பணம் போதவில்லை என்று ஒருமுறை ராமகிருஷ்ணனிடம் குறிப்பிட்டேன். “நான் வேண்டுமானால் உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா?” என்றார். அதேபோல், சிறிது காலம் கொடுக்கவும் செய்தார். எனக்கு, சங்கோஜமாகவே இருந்தது.
(தொடரும்...)

முதல் பகுதி: http://writerasai.blogspot.com/2020/06/75.html

Thursday, June 18, 2020

க்ரியா ராமகிருஷ்ணன்-75


ஆசை

நுழைவாயில்

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 75-வது பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரைப் போல ஒருவர் மேலைச் சமூகத்தில் இருந்திருந்தால் அவரை அந்தச் சமூகம் கொண்டாடியிருக்கக்கூடிய விதமே வேறு. அவரைப் போல பல சாதனையாளர்களுக்கும் வாழும் காலத்தில் புறக்கணிப்பையே தந்துவந்திருக்கிறோம். க்ரியா ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அதிகார பீடங்களிலிருந்து விலகி இருப்பதாலும், தன்னை முன்னிறுத்துவதில் அவருக்குச் சிறிதும் ஆர்வம் இருப்பதில்லை என்பதாலும் இந்தப் புறக்கணிப்பில் அவருக்கும் ஒரு பங்குண்டு.   க்ரியா பதிப்பகத்தின் மூலம் சி.மணி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், மௌனி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, திலீப் குமார், இமையம்  முக்கியமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி உள்ளிட்ட உலகப் படைப்பாளிகள் பலரின் புத்தகங்களின் நேரடி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்…’ நூல் மிகவும் பிரபலமானது. தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற நூலும் (ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது) க்ரியாவின் மைல்கற்களுள் ஒன்று. கூத்துப்பட்டறை, மொழி ட்ரஸ்ட், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் போன்றவற்றை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (முதல் பதிப்பு 1992, விரிவாக்கப்பட்ட பதிப்பு 2008) தமிழுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு. க்ரியா ராமகிருஷ்ணன் தனது 75-வது வயதை நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் அவருடன் 20 ஆண்டுகாலம் பழகியவன் என்ற முறையில் எனக்கென்று சொல்வதற்குச் சில அனுபவங்களும் விஷயங்களும் உள்ளன. அவற்றைக் குறுந்தொடர் வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவருடன் பழகியவர்களும் அவர் மீது மதிப்பு கொண்ட பிறரும் கூட இத்தருணத்தில் அவரைப் பற்றி எழுதலாம். 'பெரியோரை வியத்தலும் இலமே’ என்பது மிகச் சரியானதுதான் என்றாலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதியதால் இந்தக் குறுந்தொடர்.

1.

க்ரியா ராமகிருஷ்ணனை நான் சந்தித்து இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்போது, மன்னார்குடியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சென்னையில் காலச்சுவடு பதிப்பகம் ‘தமிழினி-2000’ என்ற நிகழ்வை நடத்தினார்கள். அதுவரை இலக்கிய இதழ்களிலும் புத்தகங்களிலும் மட்டுமே நான் சந்தித்திருந்த எனது அபிமான எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நிகழ்வை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என் சித்தி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த 500 ரூபாயை எனக்குக் கொடுத்து அந்த நிகழ்வுக்கு அனுப்பிவைத்தார். சென்னையில் சைதாப்பேட்டையில் சித்தப்பா வீட்டில் தங்கியபடி ‘தமிழினி’ நிகழ்ச்சிக்கு தினமும் போய்வந்தேன். அங்கே, பிரம்மராஜன், அம்பை, பெருமாள் முருகன், சாரு நிவேதிதா என்று பலரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நான் முக்கியமாக அந்த நிகழ்வுக்கு வந்தது என்னுடைய அப்போதைய ஹீரோ சுந்தர ராமசாமியைப் பார்த்துப் பேசத்தான். ஆனால், அவர் அந்த நிகழ்வில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை என்னைத் தடுத்துவிட்டது. மனுஷ்யபுத்திரன் ஒருவருடன் மட்டும்தான் பேசினேன். அங்கே நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியில் என் பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒருசில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றிரண்டு க்ரியா புத்தகங்களும் அடக்கம்.

க்ரியா பதிப்பகத்துக்கே சென்று சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை அழைத்தேன். எடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். எனக்கு அப்போது தொலைபேசியில் அதிகம் பேசிப் பழக்கமில்லை. மேலும், புதிய மனிதர்களுடன் பெரிய ஆட்களுடன் பேசுவதில் ஒருவகை பீதியும் (phobia) உண்டு. ஆகவே, அவருடன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ‘திக் திக்’ என்றது. சைதாப்பேட்டையில் நான் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதில் தொடங்கி, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி எப்படி வர வேண்டும் என்பதுவரை கையில் தெளிவான  வரைபடத்தைக் கொடுப்பதுபோல் அவர் நான் வர வேண்டிய வழியை விவரித்தார். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் என்னால் ஒழுங்காக வழி சொல்லத் தெரியாது, யாரும் சொல்லும் வழியையும் மனதில் சித்திரமாக மாற்றிக்கொள்ளவும் தெரியாது. ஆனாலும் என்ன ஆச்சரியம்! திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி யாரையும் விசாரிக்காமலேயே அவர் சொன்ன வழியைப் பின்பற்றி க்ரியா அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

அலுவலகத்தில் அவரே என்னை வரவேற்றார். மிகக் குறைவானவர்களே அங்கு இருந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள், என்ன (படிப்பு) படிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னதும் “ ஓ தங்க.ஜெயராமன் மாணவரா? ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் அவர் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். “அதில் வேலை பார்த்திருக்கிறார் என்பதை அறிவேன்?” என்றேன். க்ரியாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பற்றி எனக்கு விளக்க ஆரம்பித்தார். நான் வைத்துள்ள சொற்ப பணத்தில் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதால் ’அந்நியன்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். “ஏன் இது வேண்டாமா?” என்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து நீட்டினார். தயக்கத்துடன் “பணம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றேன். இத்தனைக்கும் அப்போது அதன் விலை 40 ரூபாய் மட்டும்தான். “பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் பணத்தை மணியார்டர் செய்யுங்கள். ஆனால், தவற விடக்கூடாத புத்தகம்” என்றார். எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு ‘குட்டி இளவரசன்’ படித்தேன். அது எவ்வளவு அழகான பரிசு என்பதை உணர்ந்தேன். க்ரியாவுக்கு 36 ரூபாயை மணியார்டர் செய்தேன். ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த, வெளியுலகமே ஏதும் தெரியாத ஒரு இளைஞனுக்கு அவருடைய இந்த எளிய செய்கைகள் எவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)

Tuesday, June 2, 2020

அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?



ஆசை

கரோனாவால் நிலைகுலைந்துபோயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது.

வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

கடைசி நிமிடங்கள்

மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்டு. அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த அங்காடியின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இடத்துக்கருகே ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தன் நண்பர்கள் இருவருடன் இருந்த ஃப்ளாய்டைக் கைதுசெய்து போலீஸ் காரில் ஏற்ற முயல்கிறார்கள். தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்டு. எனினும், போலீஸ்காரர்களுக்கு அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதிலிருந்து இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட் சாவின் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று தொடர்ந்து கத்துகிறார் ஃப்ளாய்டு. எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் டேவிட் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃப்ளாய்டு அசைவற்றுப்போகிறார். அவரது நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும்படி நடைபாதையில் இருக்கும் ஒருவர் கூறவே ஒரு போலீஸ்காரர் ஃப்ளாய்டின் நாடியைப் பரிசோதிக்கிறார். துடிப்பு இல்லை.

செல்பேசியில் பலரும் படம் பிடித்து இதை சமூக ஊடகங்களில் வெளியிட, மக்களின் கோபம் தீயாகப் பரவியது. அடுத்த நாள் அந்தக் காவலர்கள் நால்வரும் விடுப்பில் அனுப்பப்பட்டதாக மினியாபொலிஸ் காவல் துறை தெரிவித்தது. அன்று மாலையே அவர்கள் நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றாலும், நான்கு நாட்கள் கழித்துதான் டேவிட் சாவின் கைதுசெய்யப்பட்டார். இதற்குள் மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் தாரக மந்திரமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவது ஒரு சின்ன ஆசுவாசம்.

தொடரும் பாகுபாடு

போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுதான் தருணம் என்று போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் கடைகளைச் சூறையாட ஆரம்பித்தனர். அதிபர் ட்ரம்ப் ‘லூட்டிங் (சூறையாடுதல்) ஆரம்பித்தால் ஷூட்டிங்கும் (துப்பாக்கியால் சுடுதல்) ஆரம்பித்துவிடும்’ என்று ட்வீட் போட இது வழிவகுத்தது. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை விலங்குகளைப் போலவே அமெரிக்கர்கள் நடத்தினார்கள். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, கறுப்பினத்தவருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கறுப்பினப் பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அவர்கள் கீழே வைத்துப் பார்க்கப்படுவது தொடர்கிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 12% கறுப்பினத்தவர்கள்; 61% வெள்ளையினத்தவர். ஆனால், காவல் துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் வெள்ளையினத்தவரைப் போல மூன்று மடங்கு கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு பதம்தான்.

அமெரிக்காவின் நிறவெறி தொடர்பில் பேசுகையில், இந்தியாவில் சாதிவெறி தொடர்பில் சிந்தனை செல்கிறது. அமெரிக்காவில் ஒருபுறம் நிறவெறி இன்னும் நீடித்தாலும் மறுபுறம் அதற்கு எதிராக நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களும், அதற்கான ஊடகங்களின் ஆதரவும், பல்லாயிரக்கணக்கான வெள்ளை இனத்தவரும் அதில் தன்னெழுச்சியாகத் திரள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கே சாதிவெறியால் நடத்தப்படும் கொலைகளுக்கான நம்முடைய எதிர்வினை என்ன என்று ஒரு கேள்வி எழுகையில் தலைகுனிவதைத் தவிர நமக்கு வழியில்லை. ஒவ்வொரு உயிருக்குமான முக்கியத்துவமே ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கி நடத்தும்  பயணத்தில் முக்கியமான உந்துசக்தி. நாமும் அதைப் பெற வேண்டும்.
(02--06-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை)

Monday, June 1, 2020

மின்சாரம் இல்லையென்றால், தமிழக விவசாயம் நாசமாகிவிடும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி



ஆசை

கரோனா பாதிப்புகளுக்கு விவசாயமும் விதிவிலக்கு அல்ல. அடி மேல் அடி விழுவதுபோல இந்தச் சமயத்தில் விவசாயத்துக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது இந்திய அரசு. ஒருபுறம் இதைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொன்னாலும், மறுபுறம் விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நோக்கி நகர்கிறது தமிழக அரசு. அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழக விவசாயம் எந்த அளவுக்கு மின்சாரத்தைச் சார்ந்திருக்கிறது? தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியனுடன் பேசினேன்...


விவசாயிகளுக்கான மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கான முன்னோட்டம் இது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். என்றைக்கு ‘உதய் மின் திட்ட’த்தில் தமிழக அரசு கையெழுத்துப் போட்டதோ அன்றைக்கே தொடங்கிவிட்டது இதற்கான அச்சாரம். அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, இவர்கள் அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான் இன்று மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்டதே.


எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்று அரசு கூறுகிறதே?

இப்படித்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்! நாங்கள் பார்க்காததா? தமிழக அரசு உண்மையாகவே இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது என்றால், உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ‘புதிய மின்சார சீர்திருத்த வரைவு மசோதா-2020’ஐ மத்திய அரசு கைவிடும்படி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் ரத்துசெய்வதையும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டு அரசு திட்டவட்டமாகக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு ஏக்கர்; நான் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம்; ஆனால், மின் பயன்பாட்டைத் தீர்மானிப்பது நிலத்தின் அளவு மட்டும் அல்ல; நீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதே மின் பயன்பாட்டைத் தீர்மானிக்கும். நூறு அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் ஆயிரம் அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் எப்படி மின் பயன்பாட்டைச் சமன்படுத்துவீர்கள்? போர்செட்டில் சுவிட்ச் போர்டு இருக்கும் இல்லையா, அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்ஸார் வைத்துவிட்டார்கள். எந்தெந்த விவசாயி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்ற விவரம் மின் வாரியத்துக்குப் போய்விடும். இப்போது மீட்டர் பொருத்துவதன் பின்னணியில் மின்சாரத்தை விலையாக்கும் நோக்கம் எதுவும் இல்லையென்றால், நீங்கள் மீட்டர் பொருத்துவதன் நோக்கம்தான் என்ன?


தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியில் மின்சாரம் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கிறது?

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் இது நீர்ப் பற்றாக்குறை மாநிலம். கேரளம், பஞ்சாப், உத்தர பிரதேசம் போல வளம் கொழிக்கும் மாநிலம் அல்ல. தாமிரபரணி நீங்கலாக ஏனைய நதிகள் அண்டை மாநிலங்களின் தயவோடு பிணைந்திருப்பவை. இதை உணர்ந்துதான் நிலத்தடி நீராதாரத்தைப் பயன்படுத்தி, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த நம்முடைய முன்னாள் முதல்வர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இன்றைக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகை உணவு உற்பத்தி மாநிலமாகத் தமிழ்நாடு திகழக் காரணம் நிலத்தடி நீராதாரம்தான். தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகையையே எடுத்துக்கொள்ளுங்கள்,. 10 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது; இதில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் மொத்த விவசாயமும் பாதிக்கப்படும்போது, பயனடையும் நிலங்களில் அளவு அதிகரிக்கும்; விவசாயிகள் நீரைப் பகிர்ந்துகொள்வதும் உண்டு. கட்டணமில்லா மின்சாரம்தான் இதையெல்லாம் சாத்தியப்படுத்துகிறது. வேளாண்மைக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் 9 மணி நேரம்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிலும் ஏராளமான தடங்கல்கள். இப்போதைய குறுக்கீடு விவசாயத்தை மொத்தமாகவே நாசமாக்கிவிடும்.


கரோனா காலகட்டத்தில் அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன?

நம்முடைய பல பலவீனங்களை கரோனா காலகட்டம் அம்பலப்படுத்திவிட்டது. இனியாவது அரசு மாற வேண்டும் என்று நினைக்கிறோம். கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தன்னுடைய பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். விவசாயத்தை அதன் பழைய செல்வாக்குக்கு மீட்டெடுக்காமல், கிராமங்களில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால், இந்த நெருக்கடியான சூழலிலும்கூட அரசு சோதிக்கவே செய்கிறது. கஷ்டமான சூழலிலும் உணவு உற்பத்தியைத் தொடர்கிறார்கள் விவசாயிகள். ஆனால், விளைபொருட்கள் விநியோகம், சந்தைப்படுத்தலில் அரசு எங்களுக்கு உதவியாக இல்லை. எவ்வளவு விளைபொருட்கள் வீணாகின்றன தெரியுமா? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் விவசாயிகள். கேட்டால், ‘கிடங்கு கட்டியிருக்கிறோம்; குளிர்சாதன வசதியுள்ள கிடங்கு, இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பார்கள். அந்தக் கிடங்குகள் எங்கே இருக்கின்றன என்று விவசாயிகள் யாருக்குமே தெரியாது. தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் இது; இந்தக் காவிரிப் படுகையில் எத்தனை கிடங்குகளை அமைத்திருக்கிறீர்கள்? கிராமத்துக்கு ஒன்றுகூட தேவைப்படலாம்; மாவட்டத்துக்கு எத்தனை அமைத்திருக்கிறீர்கள் என்று பட்டியல் கொடுங்களேன்! எல்லாம் வாய்ப்பந்தல்! விவசாயிகளையும் மதியுங்கள். எங்கள் குரலுக்கு மதிப்பளியுங்கள்!

Sunday, April 19, 2020

காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு





ஆசை

கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (த ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் த டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இருக்கும்.

கதை 19 நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிகழ்கிறது. தோராயமாக, 1880-களில் தொடங்கி 1930-கள் வரையிலான காலகட்டம். உலகெங்கும் கொள்ளைநோய்களும் போர்களும் மனித உயிர்களைச் சூறையாடிய காலகட்டம். காலராவுக்கும் போருக்கும் சற்றும் தீவிரத்தில் குறையாத காதல் நோய் வயப்பட்ட ஃப்ளோரண்டினோ அரிஸோவின் காதல் கதையை இந்த நாவல் சொல்கிறது. தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் 18 வயது ஃப்ளோரண்டினோ ஒரு தந்தி கொடுக்கச் சென்ற வீட்டில் கண நேர அளவுக்குக் காட்சி தருகிறாள் அவ்வீட்டுப் பெண் ஃபெர்மினா டாஸா. அவளைக் கண்டதும் காதலில் விழுகிறான் ஃப்ளோரண்டினோ. 13 வயது ஃபெர்மினா டாஸா பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள பூங்காவில் தினமும் அவளைப் பார்ப்பதற்காகப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கிறான். ஃபெர்மினாவுக்கும் அவன் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்களது காதல் அடுத்த கட்டமாக கடிதங்களில் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகள் இப்படிக் கடிதங்கள் மூலமாகவும் வெறும் பார்வை வழியாகவும் தொடரும் காதல் ஃபெர்மினா டாஸாவின் அப்பாவுக்குத் தெரிந்துவிடுகிறது. ஃபெர்மினாவை அவளது இறந்துபோன தாயின் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார் அவளது அப்பா. இரண்டு ஆண்டுகள் அங்கே இருந்தாலும் தந்தி வழியாக இருவரது காதல் தொடர்கிறது. முதிர்ச்சி பெற்ற பெண்ணாக ஊருக்குத் திரும்பி வரும் ஃபெர்மினா தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சந்தைக்குச் செல்கிறாள். அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடரும் ஃப்ளோரண்டினோ அவளுக்கு மிக அருகில் வந்து, ‘மகுடம் சூடிய இறைவிக்கான இடமல்லவே இது’ என்கிறான். ஃபெர்மினா டாஸாவுக்கு திடீரென்று ஒரு உணர்வு ஏற்பட்டு அந்தக் காதலை முற்றிலுமாக மறுக்கிறாள். அது வெறும் மாயையே என்று கருதுகிறாள்.

நிலைகுலைந்துபோகிறான் ஃப்ளோரண்டினோ. தந்தையற்ற அவனை அவனது தாய் தேற்றுவதற்கு எவ்வளவோ முயல்கிறாள். அந்த நிராகரிப்பிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. இதற்கிடையே ஊரிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த இளம் டாக்டர் யூவெனல் அர்பினோவுக்கும் ஃபெர்மினாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஃபெர்மினாவுக்குத் திருமணம் நடைபெற்றாலும் அவள் என்றாவது ஒரு நாள் தன்னுடையவளாவாள் என்று நம்பிக்கை கொள்கிறான் ஃப்ளோரண்டினோ. அதற்காக, டாக்டர் யூவெனலின் இறப்பு வரைக்கும் காத்திருக்க நேரிட்டாலும் சரி என்று உறுதிகொள்கிறான். அதே போல் காத்திருக்கிறான் ஃப்ளோரெண்டினோ. ஒன்றல்ல, இரண்டல்ல, 51 ஆண்டுகள், 9 மாதங்கள், 4 நாட்கள் காத்திருக்கிறான். 81 வயது டாக்டர் அர்பினோ மரத்தில் மேல் ஒளிந்துகொண்டிருந்த தனது செல்லக்கிளியை ஏணியின் மீது ஏறிப் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து மரணமடைகிறார்.

அந்த துக்க நிகழ்வுக்கு 76 வயது முதியவரான ஃப்ளோரண்டினோ செல்கிறார். எல்லோரும் துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றபின் 71 வயது விதவையான ஃபெர்மினாவைப் பார்த்து, “ஃபெர்மினா, உன்னிடம் எனது மாறாத பிரமாணிக்கத்தின் உறுதிமொழியையும் என் நீடித்த காதலையும் சொல்வதற்கான இந்த வாய்ப்புக்காக நான் அரை நூற்றாண்டு காலம் காத்திருந்தேன்” என்கிறார். கணவனை இழந்து ஒரு நாள் கூட ஆகாத ஃபெர்மினா, “வீட்டை விட்டு வெளியே போ. இன்னும் மிச்சமுள்ள உனது ஆயுள் காலம் முழுக்க உன் முகத்தை இங்கு வந்து காட்டாதே” என்று திட்டி அனுப்பிவிடுகிறாள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலே பொறுமையுடன் கட்டிவைத்திருந்த மனக்கோட்டை ஃப்ளோரண்டினோவுக்குச் சிதைந்துவிட்டது. மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவரது காதல் தள்ளப்பட்டிருக்கிறது. சில நாட்கள் கழித்து ஃப்ளோரண்டினோவுக்கு ஃபெர்மினாவிடமிருந்து ஆவேசமாக ஒரு கடிதம் வருகிறது. இதையே காதலாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக ஃப்ளோரெண்டினோ சிக்கெனப் பற்றிக்கொள்கிறார். ஃபெர்மினாவுக்குக் கடிதம் எழுதுகிறார். இளம் வயதில் எழுதியதுபோது மிகை உணர்ச்சி ததும்பாமல் வாழ்க்கை, மரணம், முதுமை ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கிறது அந்தக் கடிதம். தொடர்ந்து இதுபோல் கடிதங்களை ஃப்ளோரெண்டினோ அனுப்புகிறார். கணவனை இழந்த ஃபெர்மினாவுக்கு இந்தக் கடிதங்கள் ஆறுதல் தருகின்றன. இருவருக்கிடையே மறுபடியும் நட்பு உருவாகிறது. இந்தத் தருணத்தில் ஒரு முறை ஃபெர்மினாவை சந்திக்க ஃப்ளோரண்டினோ அவரது இல்லத்துக்குச் செல்கிறார். அந்த நேரம் பார்த்து வயிற்றில் வாயு உருவாக அதை வெளியிடாமல் இருக்க மிகவும் சிரமப்படுகிறார் ஃப்ளோரண்டினோ. ஃபெர்மினா வருகிறார். மிகவும் தர்மசங்கடமாக இந்த நிலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, வாயுவை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு மறுபடியும் சந்திக்க நாள் கேட்கிறார் ஃப்ளோரண்டினோ.

இப்படியாக அவர்களது சந்திப்பு தொடர்கிறது. இதை நட்பு என்ற தளத்திலேயே வைத்திருக்க ஃபெர்மினா விரும்பினாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காதல் நோக்கி எடுத்துச் செல்வதற்கே ஃப்ளோரண்டினோ முயல்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே கிடைக்கிறது. இருவரது நட்பையும் ஃபெர்மினாவின் மகள் விரும்பவில்லை; ஆனால், மகனோ இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறார். ஃபெர்மினா தனது கணவனை இழந்து ஓராண்டுக்குப் பிறகு மகதலீனா நதியில் ஃப்ளோரண்டினோவுடன்  படகுப் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் ஃப்ளோரண்டினோவின் காதலை ஃபெர்மினா ஏற்றுக்கொள்கிறார். எழுபது வயதுக்கு மேற்பட்ட அந்த இருவரும் உறவுகொள்கின்றனர். அந்தப் படகுப் பயணம் முடிவற்றதாக மாறுகிறது.

காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸ்


ஸ்பானிய மொழியில் ‘காலரா’ என்பது ‘காலரா’ நோயையும் வேட்கையையும் குறிக்கக்கூடியது. இந்த நாவலில் காதல் ஒரு வேட்கை மிகுந்த நோயாக வெளிப்பட்டிருக்கிறது. அதுவும் ஃப்ளோரண்டினோவின் வேட்கை நீடித்து நிற்கக்கூடியதாக, கட்டற்றுப் பாயக்கூடிய நதியாக இந்த நாவலில் காட்டப்பட்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதிலிருந்து முதிய வயதில் அது ஈடேற்றம் காண்பதுவரை ஃப்ளோரண்டினோ 622 பெண்களுடன் உறவு கொள்கிறான்.  13 வயது இளம் பெண்ணில் தொடங்கி முதிய பெண்மணிகள் வரை அவன் உறவு  கொண்ட பெண்கள் பல வகைப்பட்டவர்கள். உடலின் வேட்கையை இந்தப் பெண்களுக்காக ஃப்ளோரண்டினோ ஒதுக்கிவைத்தாலும் அவனது உளப்பூர்வமான வேட்கை ஃபெர்மினாவுக்கே உரியது. ஃபெர்மினா மீது ஃப்ளோரண்டினோ கொண்டிருப்பது ஆழமான காதல் என்றாலும் அவனது பெண் வேட்டையில் பலியாகும் சில பெண்கள் ஃப்ளோரண்டினோவின் காதல் எவ்வளவு சுயநலமிக்கது, கண்மூடித்தனமானது, பிறருடைய வலி குறித்து அக்கறை கொள்ளாதது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.

டாக்டர் யூவெனல் அர்பினோ கதை நடக்கும் நகரத்தில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தியவராகக் காட்டப்படுகிறார். எனினும் அருகிலுள்ள மற்ற பிரதேசங்களில் கொள்ளைநோய் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை நாவலில் சில பகுதிகள் உணர்த்துகின்றன. கொள்ளைநோயால் இறந்தவர்கள் நதியில் ஊதிப்புடைத்து மிதந்துபோகும் காட்சி ஒரு முறை வருகிறது. கொள்ளைநோயால் சில ஊர்களே வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றன. இத்தனைக்கும் இடையில் வாழ்வை வாழ்வதற்கான ஒன்றாக மாற்றுவது காதல்தான். அதனால்தான் ‘காலரா காலத்தில் காதல்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் மார்க்கேஸ்.  

 காதல் மட்டுமல்ல, மரணம், முதுமை போன்றவற்றைப் பற்றிய அற்புதமான தியானமாக இந்த நாவல் அமைந்துள்ளது. வயதாகிவிட்டால் ஒருவர் தனது கல்லீரலின் வடிவத்தைக் கூட அதைத் தொடாமல் உணர முடியும் என்கிறார் மார்க்கேஸ் ஒரு இடத்தில். முதுமை நம்மை உறுப்புகளின் தொகுப்பாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நாவலின் இறுதிப் பகுதியில் ஃப்ளோரண்டினோவும் ஃபெர்மினாவும் ஒருவருக்கொருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்ளும்போது இருவரும் மற்றவரின் வாய் துர்நாற்றத்தை உணர்கிறார்கள். எனினும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஏக்கம் ஒரு புது மணம் கொள்கிறது.

கொத்துக்கொத்தாகக் கொல்லும் கொள்ளைநோய் மரணம் போல நம் உடலிலேயே உறைந்திருக்கும் மரணம் காலத்தின் ரூபம் கொண்டிருக்கிறது. ஃப்ளோரண்டினோ 40 வயதிலேயே தன் முதுமையை உணர்கிறான். காலத்தின் மாற்றங்கள் பேரழகியான ஃபெர்மினா டாஸாவிடம் நிகழ்கின்றன. தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ நாவலை இது நினைவுபடுத்துகிறது. பாபுவுக்கு தெய்வீக அழகின் உருவாகக் காட்சியளித்த யமுனா 40 வயதில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள்.  ‘யமுனாவுக்கு எப்படி வயதாகும்?’ என்று தி.ஜாவின் மீது கோபத்துடன் முதல் மூன்று முறை அந்த நாவலை வாசிப்பதை முக்கால்வாசியோடு நிறுத்தியது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் ‘ஃபெர்மினா டாஸாவுக்கு எப்படி வயதாகலாம்?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது. வாழ்க்கை மீதான காதலை இரண்டு முதியவர்களின் காதல் மூலம் இறுதியில் சித்தரித்து நம் கேள்வியைக் கடக்கிறார் மார்க்கேஸ். கரோனா காலத்திலும் வாழ்வின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்த காதல் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த நாவலின் மறுவாசிப்பில் ஏற்படுகிறது.

1985-ல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு எடித் கிராஸ்மன் என்ற அற்புதமான மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் 1988-ல் ஆங்கிலத்தில் வெளியானது. இந்த நாவலின் திரைப்பட வடிவம் அதே தலைப்பில் 2007-ல் வெளியாகித் தோல்வியுற்றது. இங்கே, ‘மோக முள்’ நாவலுக்கு நிகழ்ந்த விபத்து அங்கே இந்த நாவலுக்கு நிகழ்ந்தது. எனினும், அந்தப் படத்தில் கதை நிகழும் இடங்களின் காட்சிப்படுத்தல், பேரழகுக் கதாநாயகி ஜோவன்னா மெஸ்ஸொஜோர்னா ஆகிய விஷயங்களுக்காக இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்.
- 19-04-2020 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை. 

Wednesday, April 8, 2020

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!


ஹர்ஷ் மந்தர்

(எனது மொழிபெயர்ப்பில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 03-04-20 அன்று வெளியான கட்டுரை)

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

ஊரடங்குக்கு உத்தரவிடும்போது கோடிக்கணக்கான முறைசாராப் பணியாளர்களையும் நிராதரவான மக்களையும் அரசு நினைத்துப் பார்த்ததா? இவர்களில் பலர் பல்வேறு இடங்களுக்குச் சுற்றிச் சுற்றிப் புலம்பெயர்பவர்கள். இந்தியா முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் 10 கோடி இருக்கலாம். இவர்களில் பலருடைய ஒருநாள் வருமானம் அவர்களுடைய உணவுக்கே போதுமானதாக இருப்பதில்லை. நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளோடு பட்டினி கிடந்து தாமாகவே சாக முன்வர வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? ஒவ்வொரு நகரத்திலும் நடைபாதையையோ பாலங்களுக்கு அடியில் உள்ள அசுத்தமான இடங்களையோ மட்டுமே தங்கள் வீடாகக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களை அரசு மறந்துவிட்டதுபோல் தெரிகிறது.

கைவிடப்பட்ட வறியவர்கள்

‘சமூக விலக’லையும் ‘சுயதனிமை’யையும் மேற்கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சேரிகளில் குறுகலான ஒற்றை அறைகளில் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் குடியிருப்புகளிலும் இது எப்படி சாத்தியமாகும்? அல்லது அளவுக்கதிகமானோர் தங்கியிருக்கும் சுகாதாரமற்ற அரசுக் காப்பகங்களில் இருக்கும் வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்களில் இருக்கும் நிராதரவான மக்கள் என்ன செய்வார்கள்? நெரிசல் மிகுந்த சிறைகளில் உள்ள கைதிகளின் நிலை?

கொள்ளைநோய் இந்தியாவை மூழ்கடிக்கக்கூடிய சூழல் வருமானால் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு திறன் கொண்டதாக இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். பொதுச் சுகாதாரத்தில் இந்தியாவின் முதலீடு உலகத்திலேயே மிகவும் குறைவு. மேலும், பெரும்பாலான நகரங்களில் எந்த விதமான ஆரம்ப சுகாதார மையங்களும் இருப்பதில்லை. பல மாவட்ட மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகளோ ஊழியர்களோ பிற வசதிகளோ இருப்பதில்லை. மிகச் சில மருத்துவமனைகள் தலா ஒரு வென்டிலேட்டரைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பொதுச் சுகாதார அமைப்பை நாடுவதையே விட்டுவிட்டார்கள். இருக்கும் மோசமான, குறைந்த அளவிலான சேவைகளை ஏழைகளுக்கு விட்டுவிட்டார்கள். இந்தக் கொள்ளைநோயானது விமானத்தில் பயணிக்கும் வசதி கொண்டோரால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதுதான் இதில் உள்ள முரண்நகை.

ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகுப்பைப் பாருங்கள். வெறும் இரண்டு நாள் சம்பளம், 5 கிலோ தானியத்தையும் கொண்டு வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டால், நமக்கு எதிர்காலம் எப்படிக் காட்சியளிக்கும்? ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையும் உணவும் திடீரென்று இல்லாமல்போன நிலையில், நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு நடந்துசெல்லும் காட்சி இந்த ஊரடங்கு எந்த அளவுக்குத் திறனற்றது என்பதைத் தெளிவாக நமக்குக் காட்டிவிடுகிறது.

இந்தக் கொள்ளைநோய் இந்தியாவை அடைந்து பல்கிப் பெருகும்வரை மருத்துவக் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, அதன் மூலம் சோதனைகள் மேற்கொள்வது போன்ற எதையுமே இந்திய அரசு சில மாதங்கள் செய்யாமல் சும்மா இருந்தது. உணவு, வேலை போன்றவற்றுக்கு அரசு அப்போதே திட்டமிட்டிருக்க வேண்டும்; ஏழை மக்கள் பாதுகாப்பு, அவர்கள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டுக்குச் செல்வது, முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், நிராதரவானவர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பாதுகாப்பு போன்றவற்றையும் பற்றி யோசித்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
இரண்டு மாதங்களுக்கு நகரங்கள், கிராமங்களில் உள்ள முறைசார்ந்த பொருளாதாரத்துக்கு உட்படாத ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதமொன்றுக்கு 25 நாட்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இரண்டு மடங்காக வழங்கப்பட வேண்டும். சேரிப் பகுதிகளுக்கு விலையில்லாத் தண்ணீர் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை இரண்டு மடங்காக்க வேண்டும். கூடுதலாக, வீடில்லாத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்களுக்கும் சமைத்த உணவை வழங்குவது அவசரத் தேவை. சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் மிகக் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களைத் தவிர அனைத்து விசாரணைக் கைதிகளும், சின்னச் சின்னக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றுவரும் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்தியா உடனடியாகத் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%-ஐ மருத்துவக் கட்டமைப்புக்குச் செலவிடுவதற்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டம் அனைவருக்கும் இலவசமாக ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை மருத்துவ சேவையை வழங்குவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தேவை உடனடியானது என்பதால், ஸ்பெயினும் நியூசிலாந்தும் தங்கள் தனியார் மருத்துவக் கட்டமைப்பை நாட்டுடைமையாக்கியதை இந்திய அரசாங்கமும் பின்பற்ற வேண்டும். எந்த நோயாளியும் கரோனாவுக்கான பரிசோதனைக்காகவோ சிகிச்சைக்காகவோ தனியார் மருத்துவமனிகளிலிருந்து திருப்பியனுப்பப்படவும், அதற்காகக் கட்டணம் வசூலிக்கப்படவும் கூடாது என்பதற்காக அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.

ஒரு தரப்பு மக்கள் பணிப் பாதுகாப்பும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் மருத்துவக் காப்பீடும் உலகத் தரமான வீட்டுச் சூழலும் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பாதுகாப்பற்ற சூழலில், வேலைக்கு உத்தரவாதமற்ற நிலையில், அசுத்தமான வீட்டுச்சூழலில், தூய்மையான தண்ணீருக்கும் சுகாதார நிலைக்கும் மருத்துவ வசதிக்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். கரோனா பாதிப்புக்குப் பிந்தைய இந்தியாவில் இந்த நிலையை அகற்ற நாம் பாடுபடுவோமா? நம் நாட்டை மேலும் கருணை கொண்டதாக, நியாயமானதாக, சமத்துவம் கொண்டதாக இப்போதாவது ஆக்குவோமா?