வரத்துப் பறவைகளின்
வழித்தடத்தின் கீழமைந்த
மொட்டை மாடியின்
அதிகாலை நடையை
இடறுகிறாள் தினமும்
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா
புறக்கணிக்கப்பட்ட
உள்ளூர்ப் பறவையாய் மாறி
வரத்துப் பறவைகளை
வழிமறித்துக் கலைத்துத்
துரத்துகிறாள்
நள்ளிரவுக்குரியவள்
கோழித் தொண்டை கடித்துக்
குருதி குடிப்பவள்
சுடுகாட்டின் கபாலமெடுத்து
சாராயம் ஊற்றிக் குடிப்பவள்
போதையும்
வெறியும்
இன்னும் தணியாமலிப்படி
அலங்கமலங்க வைக்கிறாள்
அதிகாலையை
எல்லாக் கூத்தும்
முடித்துவிட்டு
மொட்டை மாடிச் சுவரில்
அமைதியாய் வந்தமர்ந்திருக்கிறாள் இன்று
காகத்தின் உருவெடுத்து
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா
எலிக்குதத்தின் வழியாய்ப்
பிதுக்கி எடுத்து வந்த
எலிக்குடலைக் காலடியில்
அமுக்கிக்கொண்டு
அமர்ந்தபடி
எல்லையற்ற தரிசனம் காட்டினாள்
இன்றெனக்கு
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா
கோபம் அகற்றி
அவளிடம் காட்ட வேண்டிய
கருணையை
அவளே தந்தருளினாள்
அதிகாலையைப் படைத்தவளே
அதில் மொட்டை மாடி அமைத்தவளே
அதன் மேல் வரத்துப் பறவைகளின்
வழித்தடம் அமைத்தவளே
அங்காளம்மா
எங்கள் அங்காளம்மா
எல்.ஆர். அங்காளம்மா
No comments:
Post a Comment