Friday, February 3, 2017

என்றும் காந்தி!- 4: அகிம்சை எனும் உச்சபட்ச வீரம்


ஆசை

காந்தி கடைப்பிடித்த அகிம்சை என்ற கோட்பாடு காலம் காலமாக இருப்பது என்றாலும் சமண மதத்தில் அகிம்சை என்பது மிகவும் முக்கியமான ஒரு வழிமுறையாக இருந்தாலும் அகிம்சையைப் பெரும் அளவிலான மக்கள் பரப்பில் பிரயோகித்து அதன் சக்தியை உலகறியச் செய்தவர் காந்தி. தனது தாயிடமிருந்தும் தனது சொந்த ஊரில் இருந்த சமணச் சூழலிலிருந்தும் அகிம்சை என்ற கோட்பாட்டின் வேர்களை காந்தி பெற்றார். அதன் பின் ‘புதிய ஏற்பாட்’டின் மலைப் பிரசங்கமும் லியோ டால்ஸ்டாயின் ‘விண்ணகத்தின் ராஜ்ஜியம் உங்களுக்குள்’ (Kingdom of Heaven Within You) என்ற நூலும் அகிம்சை என்ற கருத்தாக்கத்தை காந்தியுள் நன்கு வேர் பிடிக்க வைத்தன. காந்தி ஒரு ஆளுமையாக உருவாவதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி திரும்பத் திரும்பப் பிறரையும் தன்னைத் தானும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தக் கேள்விகளின் வழியாகவும் நடைமுறையில் பிரயோகித்ததன் வழியாகவும் அவரது அகிம்சை என்ற கோட்பாடு மேலும் மேலும் மெருகேறிக்கொண்டுவந்தது. அவரது அகிம்சைக் கோட்பாடு பூரணமாகி, அத்துடன் நின்றுபோன ஒன்று அல்ல. நடைமுறையுடன் ஒரு கோட்பாடு மோதும்போது பல முரண்பாடுகள் பிறக்கின்றன. அதன் விளைவாக அகிம்சை தன்னை மேலும் செதுக்கிக்கொள்கிறது. காந்தியின் அகிம்சை செய்தது அதுவே.
எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தைச் சொல்லலாம். 1925-க்கும் 1927-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் தனது ஆன்மிக மேம்பாட்டுக்குத் தன்னை காந்தி ஒப்புக்கொடுத்திருந்தார். அந்த ஆண்டுகள் மௌன ஆண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் காந்தியின் ‘யங் இந்தியா’ இதழில் பெரிதும் ஆக்கிரமித்திருந்த விஷயம் எது தெரியுமா? 'வெறிநாய்களைக் கொல்லலாமா, கூடாதா?' என்பதுதான். காந்தியின் நண்பரும் தொழிலதிபருமான அம்பாலால் சாராபாய், தனது தொழிற்சாலை வளாகங்களில் மிகுந்த தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த 60 தெருநாய்களைக் கொன்றுவிட்டார். நாய்களைக் கொன்றதும் அவருக்கு மனசாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது. காந்தியிடம் வந்து சொல்கிறார். காந்தியோ, 'வேறென்னதான் செய்வது?' என்று பதிலளிக்கிறார். காந்தியின் பதில் வெளியே எல்லோருக்கும் தெரிய வருகிறது. 'எந்த உயிரையும் கொல்வது பாவம் என்று இந்து மதம் சொல்லியிருக்கும்போது, வெறிநாய்கள் மனிதர்களைக் கடித்து, பிற நாய்களையும் கடிக்கின்றன என்பதால் அந்த வெறிநாய்களைக் கொல்வதுதான் சரியென்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று அகமதபாத் மனிதாபிமான சங்கத்தினர் காந்திக்கு விளக்கம் கேட்டு மிகுந்த கோபத்துடன் கடிதம் எழுதுகிறார்கள்.

வேறென்னதான் செய்வது?
'இது மனிதநேயமா?' என்று தலைப்பிட்டு காந்தி அந்தக் கடிதத்தை 'யங் இந்தியா' இதழில் பிரசுரிக்கிறார். அந்தக் கடிதமும் அதற்கு காந்தி எழுதிய கடிதமும் அந்த இதழின் முதல் பக்கத்தையும் அதற்கு அடுத்த பக்கங்களையும் எடுத்துக்கொள்கின்றன. காந்தி தனது பதிலில் இப்படி எழுதுகிறார், "ஆம், அது உண்மைதான். 'வேறென்னதான் செய்வது?' என்று நான் சொன்னது உண்மையே. இதைப் பற்றி நான் நன்றாகச் சிந்தித்துப் பார்த்துவிட்டேன். நான் சொன்ன பதில் முற்றிலும் சரியானது என்றே இப்போதும் கருதுகிறேன்… நாம் எல்லோருமே தவறுகள் செய்யகூடிய மனிதர்களே. வெறிநாய்களைக் கொல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. பிற மனிதர்களைக் கொல்லும் மனிதனையே நாம் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமைகூட அபூர்வமாகச் சில சமயம் நமக்கு ஏற்படலாம்"

இதற்குப் பிறகு நாய் விவாதம் சூடு பிடித்துக்கொள்கிறது. 'வெறிநாயைக் கொல்லலாம்' என்ற கருத்துக்காக காந்தியையே கொல்லலாம் என்ற அளவுக்கு கோபம் பலருக்கும் ஏற்படுகிறது. அந்த ஆண்டு முழுவதும் 'யங் இந்தியா' இதழை ஆக்கிரமித்துக்கொண்டது நாய்ப் பிரச்சினைதான்.
அகிம்சையைப் புனிதமாக்கி வைத்திருப்பவர்களுக்கும் அகிம்சையை ஒரு நடைமுறை சாதனமாக்கிய காந்திக்கும் இங்கேதான் வேறுபாடு இருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் நாய்க்கடிக்குப் பலியாகும் ஒரு நாட்டில் தெருநாய்களை, குறிப்பாக வெறிநாய்களைக் கொல்லக் கூடாது என்று பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தடைவாங்கியதையும் காந்தியின் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தெருநாய்களைக் கொல்லக் கூடாது என்பவர்கள் அந்த நாய்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்தானே! நாய்களையும் பராமரிக்க மாட்டார்கள், நாய்க்கடி மரணங்களையும் பொருட்படுத்த மாட்டார்கள். இப்படிக் கெட்டித்தட்டிப் போன அகிம்சாவாதியல்ல காந்தி. நாய்களைப் பராமரிக்க வக்கில்லாத ஒரு தேசம், ஆதரவற்றுத் தெருநாய்கள் உருவாவதற்குக் காரணமான ஒரு தேசம் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கே லாயக்கில்லாத தேசம் என்றே காந்தி கருதினார்.

இந்த விவாதத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ‘பிற மனிதர்களைக் கொல்லும் மனிதனையே நாம் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமைகூட அபூர்வமாகச் சில சமயம் நமக்கு ஏற்படலாம்’ என்று கூறுகிறார். அதேபோல், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகப் பேசும்போது, ‘உங்கள் மானத்துக்கு இழுக்கு ஏற்படுமெனில் உங்களுக்கு அகிம்சையை நான் பரிந்துரைக்க மாட்டேன்’ என்கிறார். நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொண்டு, மனித நலனைக் கருத்தில் கொண்டு சமரசம் செய்துகொள்ளாத எந்த உயரிய கோட்பாடும் இறுதியில் அர்த்தம் புரியாமல் உச்சரிக்கும் சடங்கு மந்திரம் போல்தான் ஆகிவிடும்.
காந்தி அகிம்சையைத் திரும்பத் திரும்ப வேறு வேறு வடிவங்களில் பரிசோதித்துப் பார்க்கிறார். தனது அகிம்சைக் கோட்பாட்டுக்குப் பெரும் எதிர்ப்பு நேரிடும்போது எதிர்ப்பின் மேல் கோபம் கொள்ளாமல் உள்முகமாகப் பார்வையைத் திருப்பிக்கொள்கிறார். தன்னைக் குறைகூறுகிறவர்கள் உண்மையில் தனக்குச் சேவை செய்வதாகவே காந்தி கருதிக்கொள்கிறார். நாய் விவாதங்களின்போது காந்தி இப்படி எழுதுகிறார்: "என்னை விரோதித்துக் குறை கூறுகிறவர்கள் எனக்கு ஒரு சேவை செய்கிறார்கள்; என்னை நானே சோதனை செய்துகொள்ள போதிக்கிறார்கள்; நானும் பதிலுக்கு கோபம் கொள்ளாதிருக்கிறேனா என்று கண்டுகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களுடைய கோபத்தின் மூல காரணத்தை நான் ஆராயும்போது எனக்கு அன்பைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் உண்டாகவில்லை."

மேலும் சொல்கிறார்: "அகிம்சா தர்மத்தைப் பற்றி ஒருவிதமாக அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்; அந்த அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் என்று என்னை மதித்துவந்திருக்கிறார்கள். இப்போது நான் அதற்கு மாறாக நடப்பதைக் காணும்போது, அவர்கள் என்மீது ஆத்திரம் கொள்கிறார்கள். அவர்கள் கொட்டும் ஆத்திரத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதற்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் பாராட்டுகிறேன்"

ஆக, காந்தி வெறுமனே அகிம்சையை போதிப்பவராக மட்டுமில்லை. அந்த அகிம்சையை நடைமுறையில் பிரயோகித்து அதில் ஏற்படும் முரண்களைச் சமரசம் செய்துகொண்டு அகிம்சையைத் தொடர்ந்து உயிருள்ள ஒரு கோட்பாடாக வைத்திருந்தார். தான் கடைப்பிடிக்காத, தன்னால் கடைப்பிடிக்க முடியாத எதையும் காந்தி பிறருக்கு போதித்ததில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அகிம்சை என்றொரு சத்திய விழிப்பு
ஜோசப் பிரபு எழுதிய 'The Philosophy of Mahatma Gandhi for the Twenty-first Century’ என்ற ஆங்கில நூலைப் பற்றி அர.சு. ராமையா எழுதிய கட்டுரையொன்றில் காந்தியின் அகிம்சை குறித்து ஜோசப் பிரபு முன்வைத்த கோணத்தைப் பற்றி எழுதியிருப்பது நமக்கு அகிம்சையின் மீது வெளிச்சம் பாய்ச்சக்கூடும். அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: ”பொதுவாகவே அகிம்சையை ஒரு நடைமுறை கொள்கையாக அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அதன் அடிப்படையில் உள்ள சமய நம்பிக்கையைப் புரிந்து கொண்டால்தான், காந்தியின் அகிம்சை எப்படிப்பட்டது என்பதை நாம் அறிய முடியும் என்கிறார் ஜோசப் பிரபு. ஜேம்ஸ் ஹார்ட் சொல்வது இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது : ஓரகத் தன்மை கொண்ட அகம் அனைத்தும் தனித்தனியாக அடையாளப்படுத்தப்பட முடியாத இயல்பு கொண்டவை என்று சொல்லும்போது, சத்தியம் ஆன்மிகமாகிறது; இந்த சத்தியத்துக்கு உண்மையாக இருப்பவன் தன்னையும் பிறரையும் பிரித்துப் பார்ப்பதற்கில்லை; இந்த ஆதார சத்தியத்துக்கு ஊறு செய்வதில்லை என்பதால் அகிம்சை உயிரனைத்தும் ஒன்றே என்ற நம்பிக்கையின் செயல் வடிவமாகிறது. இந்த சத்திய விழிப்பே அகிம்சையை மைய முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது… ”

“ஜைனர்களின் அகிம்சை என்பது துன்பங்களை சகித்துக் கொள்வதை வலியுறுத்துகிறது. காந்தியோ, அகிம்சையை ஒரு சக்தியாக, மகத்தான அன்புக்கான ஆயுதமாகப் பிரயோகித்தார் – ‘நான் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறேன் என்றால், தவறு செய்யும் என் தந்தையையும் மகனையும் நேசிப்பதுபோல் நான் என் எதிரியையும் அந்நியனையும் நேசிக்க வேண்டும். சத்தியமும் அச்சமின்மையும் அகிம்சையின் தவிர்க்க முடியாத அங்கங்கள்.’

“சத்தியம், சத்தியாகிரகம், அகிம்சை முதலானவை ஜைன, பௌத்த, இந்து சமய மரபுகளில் இருந்தாலும் காந்தியே அவற்றைத் துறவிகளிடமிருந்து சாமானியர்களை நோக்கிக் கொண்டுசென்றார் என்கிறார் ஜோசப் பிரபு. காந்திக்கு சமயமும் அரசியலும் வெவ்வேறல்ல. அனைத்து உயிர்களையும் நேசித்து அவற்றுக்குப் பணியாற்றுவதுதான் ஆன்மிகம் எனில், அரசியலே அதற்குரிய இடம் - ஏனெனில் அங்குதான் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய முடியும். ஆன்மிகத்தின் அறச் சுத்திகரிப்பு அரசியலின் அதிகார வேட்கை, கட்சி சார்பு என்ற அழுக்கை நீக்குகிறது.” இவ்வாறு எழுதியிருக்கிறார் அர.சு. ராமையா.

அகிம்சையின் இன்றைய தேவை
இன்று உலகம் முழுவதும் தேசம், இனம், மதம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையிலான பிளவுகள், போர்கள், வன்முறைகள் பெருத்துக்கொண்டே போகின்றன. இவற்றுடன், அளவு மீறிச் சுரண்டியதால் இயற்கை வளங்களுக்கான போராட்டங்களும் அதிகரித்திருக்கின்றன. வரும் காலத்தில் நீர், பெட்ரோல் போன்ற வளங்களுக்காகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள் என்றும் இதனால் மூன்றாம் உலகப் போர்கூட ஏற்படலாம் என்றும் கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சிக்கல்கள், பேரழிவுகள் யாவற்றையுமே முதலீடாகக் கொள்வோரும் எப்போதும் உள்ளனர். வல்லரசு நாடுகள், அரசியல்வாதிகள், பெருநிறுவனங்கள், ஆயுத உற்பத்தியாளர்கள், மத-இனப் பிரிவினைவாத சக்திகள் போன்றோருக்கு எப்போதும் சண்டைகள், போர்கள், கலவரங்கள் நடந்தால்தான் லாபம்.

ஏகாதிபத்தியம், பெருநிறுவனச் சுரண்டல், பழங்குடியினர் அழிப்பு போன்றவற்றுக்கு எதிராகப் போராடுவது மிகவும் இன்றியமையாத, நியாயமான செயல்பாடு. ஆனால், இது போன்ற நியாயமான காரணங்களுக்காகவே ஒரு குழு ஆயுதம் ஏந்தினாலும் அந்த ஆயுதங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன? அந்த ஆயுதங்களை அவர்களே உற்பத்தி செய்கிறார்களா? அவர்களின் ஆயுதங்கள் ‘எதிரிகள்’ என்று அவர்களால் கருதப்படுபவர்களை மட்டும்தான் அழிக்கின்றனவா? என்ற கேள்விகளைக் கேட்டுப்பார்ப்போம். இவர்கள் எந்த ஏகாதிபத்திய, சுரண்டல் சக்திகளை எதிர்க்கிறார்களோ அவர்கள்தான் ஆயுதத் தயாரிப்பாளர்களும் போராளிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதற்கான மூலமும். ஆக, இதுபோன்ற ஆயுதப் போராட்டங்கள் நீடிக்க வேண்டுமென்பது ஆயுதத் தயாரிப்பாளர்களின் ஆசையே. ஆயுதம் ஏந்தும் ஒவ்வொருவரும் அந்த ஆசையைப் பூர்த்திசெய்வதன் மூலம் நேரடியாகவே ஆயுதத் தயாரிப்பாளர்களுக்குத் துணைபோவார்கள்.

கோக், பெப்ஸியும் அறவழிப் போராட்டமும்
இப்படி வைத்துக்கொள்வோம். கோக், பெப்ஸி போன்றவற்றை எதிர்க்க வேண்டும் என்று விரும்பும் ஒருவர் அவற்றைக் குடிக்காமல் நிறுத்தித் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் அல்லவா! ஒருவர் குடிக்காமல் இருந்தால் கோக்கும் பெப்ஸியும் வீழ்ந்துவிடாதுதான் என்றாலும் அது தார்மிகரீதியிலான எதிர்ப்பு. இந்தத் தனிமனித எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்கும் பரவி திடீரென்று ஒரு மாநிலமே, ஒரு நாடே கோக், பெப்ஸியைப் புறக்கணித்தால் அது எப்படிப்பட்ட மாற்றத்தை விளைவிக்கும்! சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காகத் திரண்ட கூட்டத்தின் உபவிளைவாக கோக், பெப்ஸி எதிர்ப்பையும் அவற்றைப் புறக்கணித்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டதையும் பார்த்தோமே! எந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவு இது? அகிம்சைப் போராட்டத்தின் வெற்றியல்லவா இது! அகிம்சை என்றால் காந்தியின் பெயர் சிலருக்கு நினைவுக்கு வந்து அவரை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம். காந்தியை விடுங்கள், அகிம்சை என்பது அவரது புதிய கண்டுபிடிப்பு இல்லைதான், மலைகளைப் போலவே அகிம்சையும் தொன்மையானதுதான். அதனால் காந்தியை விடுத்துப் பார்த்தாலும் அகிம்சைதானே இந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது!

அகிம்சை என்பது மிக மிக மெதுவானதாக இருக்கலாம்! உடனடி விளைவுகளை ஏற்படுத்தாததாகவும் கூட இருக்கலாம்! ஆனால், நாசத்தை, பேரழிவை, நீடித்த அழிவை ஏற்படுத்தாதது. அகிம்சையால் ஒருவருக்கு வெற்றி கிடைக்காமல் கூட போகலாம்; ஆனால், பொருளிழப்பையும் உயிரிழப்பையும் இதனால் தவிர்க்க முடியுமே! கூடவே, தார்மிக நியாயத்தையும் உலகத்தினரின் பரிவையும் அகிம்சை ஒருவருக்குப் பெற்றுத்தந்துவிடுகிறது. லாப நோக்கில் ஒருவர் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் அகிம்சையால்தான் அதிக லாபம்!

செயல்படாமை அல்ல!
அதே நேரத்தில் ‘அகிம்சை’ என்பது ‘செயல்படாத நிலை’ என்று அர்த்தமாகாது. உச்சபட்ச செயல்பாட்டையும் வீரத்தையும் கோருவதுதான் அகிம்சை. செயலற்ற நிலையையும் கோழைத்தனத்தையும் மிகவும் வெறுத்தவர் காந்தி. அதனால்தான், ‘கோழைத்தனமா, வன்முறையா என்று கேட்டால் நான் வன்முறையையே தேர்ந்தெடுப்பேன்’ என்று ஒருமுறை காந்தி சொன்னார். காந்தியின் இந்தக் கருத்து பரவலாக அறியப்படாத ஒன்று! இன்னொருவரை அடிப்பதற்குத் தேவையான நெஞ்சுரத்தைவிட இன்னொருவர் நம்மை அடிக்க வருகிறார் என்று தெரிந்தும் அதை அச்சமின்றி எதிர்கொள்ளும் நெஞ்சுரம் எவ்வளவு பெரிது! வன்முறையை நெஞ்சுரத்தால் எதிர்கொள்ளும்போது அந்த வன்முறை கூனிக்குறுகிப் போகும். இதைத்தானே காந்தி உள்ளிட்ட அகிம்சையாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார்கள்.

இந்த அத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நூல்:
காந்தி வாழ்க்கை – லூயி ஃபிஷர், தமிழாக்கம்: தி.ஜ.ர., விலை: ரூ. 500, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14, தொடர்புக்கு: 044-2813 2863.
கட்டுரை:
சத்தியம், சத்தியாகிரகம், அகிம்சை: ஒரு பார்வை – அர.சு. ராமையா, ‘காந்தி இன்று’ தளம் (http://www.gandhitoday.in/2013/06/blog-post_24.html)
(திங்கள்கிழமை சந்திப்போம்…)
 - நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/zylerv)

No comments:

Post a Comment