ஆசை
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததிலிருந்து இன்று வரை தனது கலையுலக வாழ்க்கையில் 57 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் கமல். தமிழில் கதாநாயகனாக அவர் முதன்முதலில் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. தேசிய விருது தொடங்கி செவாலியே விருது வரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நீண்ட கலைப்பயணம் மேற்கொண்ட ஒரு படைப்பாளியாக அவரைத் தொகுத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. கடந்த 40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாகவும் கலை முயற்சிகளைச் செய்துவருபவராகவும் ஒரே நேரத்தில் விளங்குகிறார். தமிழில் இது ஓர் அபூர்வமான கலவை. இந்திய சினிமாவில் கமலுக்குப் பிறகு அப்படியொரு ஆளுமையாக உருவெடுத்திருப்பவர் ஆமிர் கான். முன்னோடிக் கலைஞர் என்ற நிலையை சிவாஜி இருக்கும் காலத்திலேயே கமல் அடைந்துவிட்டிருந்தார். அவரது சாதனைகள், விருதுகள், வெற்றிதோல்வி எல்லாம் கடந்து கமலைப் பார்க்கும்போது அவரே சொல்வதுபோல் ‘அவர் செய்ய வேண்டியது இனிதான் நிறைய உள்ளது’ என்றே சொல்லத் தோன்றுகிறது.
தொழில்நுட்பம், கலை என்று எல்லாவற்றிலும் எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை அவர் செய்துபார்த்திருக்கிறார். என்றாலும் ஒரு உலக சினிமா ரசிகரை அவர் எந்த அளவுக்குத் திருப்திபடுத்தியிருக்கிறார் என்ற கேள்வியும் மிக முக்கியமான ஒன்று. தன்னை வெறும் மசாலாப் படக் கலைஞராக அவரோ அவரது ரசிகர்களோ கருதிக்கொண்டிருந்தார்கள் என்றால் நமக்குப் பிரச்சினையே இல்லை. உலக நாயகன், உலகத் தரத்தை நோக்கி தமிழ் சினிமாவைக் கொண்டுசெல்பவர் என்றே அவரது ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.
அவரும் உலக சினிமாவை நோக்கித் தமிழ் சினிமாவை எடுத்துச் செல்வது குறித்துக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பேசிவந்திருக்கிறார். ஆகவே, ‘எந்த அளவுக்குத் தமிழில் நீங்கள் ஒரு உலக சினிமாவை எடுத்திருக்கிறீர்கள்?’ என்று கமலை நோக்கிக் கேள்வி கேட்பதற்கான எல்லா நியாயங்களையும் அவரே உருவாக்கியிருக்கிறார்.
சுந்தர ராமசாமி தனது வாசகர்களைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்: “எனது நாவல்களைப் படிக்கும் வாசகர் ஒருவர் அவை உலகத் தரத்தில் இருப்பதாகச் சொல்வார். அதே வாசகர்கள் என் விமர்சனங்களையெல்லாம் படித்த பிறகு ‘உலகத் தரத்திலான ஒரு நாவலைக் கூட நீங்கள் ஏன் எழுதவில்லை’ என்று என்னிடம் கேட்பார். அந்த சுதந்திரத்தை அவருக்கு நான் அளித்திருக்கிறேன்.” சுந்தர ராமசாமி சொன்னதும் கமலுக்குப் பொருந்தும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. உலக சினிமாவைப் பற்றித் தமிழில் கமல் பேச ஆரம்பித்தபோது மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்ற ஒருசிலரே அதை நோக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று அப்படியில்லை. பெரும்பாலான இயக்குநர்கள் வரும்போதே உலக சினிமாவைக் கரைத்துக் குடித்துவிட்டோ, அல்லது தங்கள் படைப்புகளில் கொஞ்சம் உலக சினிமாவின் டிக்காஷனை இறக்கிவிட்டோதான் தங்கள் வருகையை அறிவிக்கிறார்கள். பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று பார்க்கும்போது பூஜ்ஜியத்திலிருந்து சில அங்குலங்கள் நகர்ந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அந்த நகர்வில் கமலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்றாலும் இது மெதுவான நகர்வாகவே தோன்றுகிறது. இன்று தமிழ் சினிமாவில் கலை முயற்சிகள் சிறுசிறு வெற்றிகள் அடைவதில் கமல் போன்றவர்கள் போட்ட பாதையும் முக்கிய காரணம் என்றாலும் கமலிடம் எதிர்பார்த்த அற்புதம் ஏன் நிகழவில்லை இதுவரை?
கமலின் சிந்தனை ரொம்பவும் ‘பெரியதாக’ இருப்பதுதான் அவரது வெற்றி, தோல்வி இரண்டுக்கும் காரணமோ என்று தோன்றுகிறது. உலகத் தரத்தை நோக்கிய பயணத்தில் மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் குறைகள் உள்ளதாயினும் எளிய, சிறிய முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலத்தில் கமல் பிரம்மாண்டமான முன்னெடுப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். இன்னும் அப்படியே யோசித்துக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மேற்குறிப்பிட்ட படைப்பாளிகளின் முயற்சிகளில் கமலுக்கும் பங்கு இருந்திருக்கிறது என்பது கூடுதலாக நல்ல விஷயம். இதில் மணிரத்னத்தின் ‘நாயகன்’, சிங்கீதம் சீனிவாசராவின் ‘பேசும் படம்’ (கன்னடம்தான் மூலம்) போன்ற முயற்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆக, உலக சினிமாவை நோக்கிய ஒரு இயக்கம் போல்தான் அப்போது கமல் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
தொண்ணூறுகளில் ‘குணா’வின் மூலம் அடுத்த கட்டப் பயணம் ஆரம்பித்தது. ‘ராஜபார்வை’ படத்துக்குப் பிறகு நடிகராக மட்டுமல்லாமல் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்திய படம் அது. அதாவது அவர் இயக்காவிட்டாலும் அவரது படங்களை உருவாக்கும் கலைஞராக அவர் அதிகம் செயல்பட ஆரம்பித்தது அப்போதிருந்துதான். இப்போது பார்க்கும்போது பல வகைகளில் நிறைவு அளித்தாலும் கலைரீதியாக முழுமை பெறாத ஒரு படைப்பாக ‘குணா’ தோன்றுகிறது. அந்தப் படத்தின் சாதகமான அம்சமும் பாதகமான அம்சமும் கமல்தான். படம் முழுவதையும் அவர் ஆக்கிரமித்திருந்தது கலைரீதியான தோல்வியே. ‘குணா’வில் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘பாபநாசம்’ வரை பெரும்பாலான படங்களில் அவரது இந்த அம்சமே தூக்கலாகத் தெரிகிறது. ‘தான் அற்புதமாக நடிக்கிறேன்’ என்ற பிரக்ஞை அவரிடம் இருப்பதுபோல் தோன்றுகிறது. தமிழ் சினிமா சிவாஜி பாணி நடிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லையோ என்ற எண்ணத்தை கமல் ஆங்காங்கே ஏற்படுத்தத்தான் செய்கிறார். மரபுக்கும் மாற்றத்துக்கும் இடையே ஒரு பாலம் போல் இருக்கும் கலைஞராக இன்று கமலை நம்மால் அடையாளம் காண முடிகிறது.
‘குணா’வுக்குப் பிறகு வந்த சில ஜனரஞ்சகமான கலை முயற்சிகளிலும் ‘குணா’வின் சாதகபாதகங்களே தொடர்ந்தன. கமல் நடிப்பைப் பொறுத்தவரை ‘மகாநதி’ மிகவும் முக்கியமான மைல்கல். தன்னை அதிகம் முன்னிறுத்திக்கொள்ளாத அடங்கிய நடிப்பு அதில்தான் கமலுக்கு வாய்த்தது. வாழ்ந்து கெட்ட மனிதராகவும், பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்ணின் தந்தையாகவும் அவர் அதில் அவ்வளவு அற்புதமாகவும், அமைதியாகவும் நடித்திருப்பார். இனம் புரியாத பெரிய சக்திகளுக்கு முன்பு சக்தி ஏதுமற்ற மனிதன் பணிந்து, குனிந்து எப்படியெல்லாம் அவமானத்தை ஏற்றுக்கொண்டு, ஏதும் செய்ய முடியாமல் குமைவானோ அதை அப்படியே நடிப்பில் கொண்டுவந்தார் கமல். தான் ஒரு நடிகன் என்பதை மறந்து ஒரு பெண்ணின் தகப்பனாக அவர் வாழ்ந்ததன் வெற்றிதான் ‘மகாநதி’. ஆனாலும், உச்ச நட்சத்திரம் ஒருவர் கடைசிவரை தோல்வியடைவதை எந்த ரசிகர் ஏற்றுக்கொள்வார் என்று நினைத்து ஹீரோயிசத்தில் இறங்கும் இடத்தில் ‘மகாநதி’ தோற்றுப்போகிறது. கமல் ஏன் எளிய முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதத்திலான படம் ‘மகாநதி’. அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது கமலின் தோல்வி மட்டுமல்ல, நம் தோல்வியும்தான்.
‘தேவர் மக’னில் நடிகர் கமலைவிட படைப்பாளி கமலே முன்நிற்கிறார். ஆழமான வசனங்கள், சக நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைக் கறப்பது (உறுதுணை: பரதன்), தொழில்நுட்பம், இசை போன்றவற்றிலும் சிறந்தவற்றைப் பெறுவது என்றெல்லாம் சாதகமான அம்சங்கள் பல அந்தப் படத்தில் இருந்தாலும், படம் பெரு வெற்றி அடைந்தாலும் அது முன்வைத்த சாதிப் பெருமிதம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பின்விளைவு கமலின் கலை வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளி!
சில படங்கள் வெளியாகும் தருணத்தில் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் புறக்கணிக்கப்படும். காலப்போக்கில் அது கொண்டாடப்படும் நிலையை அடையும். அப்படிப்பட்ட படங்களுள் ஹே ராமும் ஒன்று. காந்தி கொலையின் பின்னணியில் உள்ள இந்துத்துவ அரசியலை நுட்பமாகக் காட்டியது, பிரிவினையின் இருபக்கக் கொடூரங்கள், இடையே துளிர்க்கும் மனிதம் என்று படத்தில் பல விஷயங்கள் அற்புதமாக வந்திருந்தாலும் முழுமை கூடாத ஒரு படமாகவே எஞ்சி தோல்வி அடைந்தது. சீரான திரைக்கதையில் கமல் கவனம் செலுத்தி இன்னும் கொஞ்சம் செதுக்கி எடுத்திருந்தால் (ஓடியிருக்காவிட்டாலும்) அற்புதமான கலைப்படைப்பாக உருவாகியிருக்கும்.
‘ஆளவந்தான்’ படத்தில் பொது ரசிகர்களுக்குத் தேவையானது (மொட்டை கமலின் தோற்றத்தைத் தவிர) ஏதும் இல்லை. கலைரீதியாகவும் வெற்றி பெறவில்லை. எனினும், கலையின் கிறுக்குத்தனம் சில இடங்களில் அற்புதமாக அந்தப் படத்தில் வெளிப்பட்டிருக்கும். போதை மருந்து உட்கொண்ட நிலையில் கமல் வரும் இடங்கள் வெகுஜன ரசிகர்களுக்கானவை அல்ல என்றாலும் கலைரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. கனவின் தன்மையை அவர் பரிசோதித்துப் பார்த்திருப்பார். சித்தியுடன் சிறுவயதில் ஏற்படும் பகை அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு விநோத மனநிலையில் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.
‘குணா’, ‘மகாநதி’ போன்ற தரமான முயற்சிகளுக்கு நேர்ந்ததே ‘அன்பே சிவம்’ படத்துக்கும் நேர்ந்தது. இன்று வந்திருந்தால் வெற்றியடைந்திருக்கும் என்று நினைக்கக்கூடிய படம்தான் ‘அன்பே சிவம்’. கம்யூனிஸம், மனிதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள், அழகான, ஆழமான உரையாடல்கள் போன்றவற்றை வைத்து ஒரு பயணம் போல் அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனரஞ்சகமாக எடுப்பதா, கலைரீதியில் எடுப்பதா என்ற ஊடாட்டத்துக்குப் பலியானது போல் தோன்றுகிறது அந்தப் படம். ஆயினும், கமலின் முக்கியமான முயற்சிகளில் அதுவும் ஒன்று.
‘அன்பே சிவம்’ படத்துக்குப் பிறகு கமலின் சொந்த முயற்சிகள் பலவும் ஹாலிவுட்தனமானவை என்பது பெரும் சோகம். ஹாலிவுட் நமது உரைகல் அல்ல என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தாலும் ஹாலிவுட்தனம்தான்
அவரது இலக்கோ என்ற ஐயத்தை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில்தான் ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்கள் அமைந்திருக்கின்றன.
விதிவிலக்காக, ‘உத்தம வில்ல’னில் சில
தருணங்கள் மட்டுமே அமைந்திருந்தன. அதுவும், அவரது முந்தைய தோல்விப் படங்கள் அளவு கூட திருப்தியளிக்கவில்லை.
எழுபதுகளின் இறுதியில் கமல் எல்லோருடனும் இணைந்து, எல்லோருக்கும் ஊக்கம் கொடுத்து, ஒரு இயக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இன்று கமல் கிட்டத்தட்ட தனித்து நிற்பதைப் போலத் தெரிகிறார். புதிய திறமைசாலிகளுடன் கமல் கைகோப்பதே இல்லை. அப்படியே கைகோத்தாலும் ராஜேஷ் எம். செல்வா போன்று தனது நிழல்களையே தேர்ந்தெடுக்கிறார் (முன்பு சந்தானபாரதி). கமல் போன்ற ஒரு படைப்பாளிக்கு விமர்சனம் என்ற பேரில் யாரும் அறிவுரை சொல்லிவிட முடியாதுதான். அதே நேரத்தில், மனதைத் திறந்துவைத்திருப்பதன் மூலம் ஒரு படைப்பாளி மேலும் மேலும் மேலே முன்னே செல்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மைதானே! ‘கமல், நீங்கள் அளித்த நம்பிக்கைக்கு ஏற்ப ஏன் இன்னும் ஒரு படம் கூட தரவில்லை?’ என்று கேட்பவர்கள் கமலின் எதிரிகள் அல்ல. கமலால் ஊக்கம் பெற்றவர்கள், உலக சினிமாவை நோக்கிக் கமலால் அழைத்துவரப்பட்டவர்கள்தான் அவர்கள். அவர்கள் கமலிடமிருந்து ‘உலக தரத்திலான அல்ல’, தரமான, ஒரு கலைப்படைப்பை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
“இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன்” என்று செவாலியே விருது பெற்றதையொட்டி கமல் சொல்லியிருந்தார். ஆம், கமலின் உண்மையான ரசிகர்கள் அவரிடமிருந்து இனிதான் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
(கமல் செவாலியே விருது பெற்றதை முன்னிட்டு எழுதிய கட்டுரை.)
- நன்றி: ‘தி இந்து’
கமல் தொடர்பான பிற கட்டுரைகள், கவிதைகள்:
சரியான எதிர்பார்ப்பு. நன்றி.
ReplyDeleteGood one
ReplyDeleteGreat blogg
ReplyDeleteபெரும்பாலான கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக எழுதியிருக்கிறீர்கள். இடையில் அரசியலில் வீணடித்த 6 வருடங்கள்தான் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.
ReplyDelete