Sunday, November 26, 2023

*புகைப்பிடித்தல் கனவுக்குக் கேடு



சிகரெட்
முறிந்துபோவதைவிட
துயரமானது
சிகரெட்
முறிந்துபோவதுபோல்
கனவு வருவது

மறுசிகரெட் வாங்குவதற்கு
கனவு நம்மை
அனுமதிப்பதே இல்லை
       -ஆசை 

Wednesday, November 22, 2023

சொன்னால் கேள்



உண்டாலம்ம
உன்னாலில்லை இவ்வுலகு
உனக்காகவும் இல்லை
இவ்வுலகு
மாபெரும் இயந்திரமும்
இல்லை நீ
மாபெரும் இயந்திரத்தின்
முட்டாள்தனமான பற்சக்கரமும்
இல்லை நீ
அதன் பற்களிலொன்றும்
இல்லை நீ
இரண்டு பற்சக்கரங்களுக்கிடையே
அரைபடும்
கரும்புமில்லை
துரும்புமில்லை நீ
இன்னொன்று சொன்னால்
கோபம் கொள்வாய் நீ
இரண்டு பற்சக்கரங்கள்
வெறுமனே ஓடும்போது
இடையே பிதுங்கி
இல்லாமல் ஆகும்
வெறுமையும் இல்லை
நீ
       -ஆசை 

Friday, November 17, 2023

ஓர் அறிவிப்பு!



க்ரியா ராமகிருஷ்ணனின் மூன்றாவது நினைவு நாள் இன்று! இந்த நாளை ஒட்டி என் வாழ்வின் முக்கியமான ஓர் அறிவிப்பு இதோ. ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பில் நான் எழுதிவரும் நெடுங்காவியத்தின் பெயரை ‘காவிரியம்’ என்று மாற்றியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலாக ‘மாயக்குடமுருட்டி’ வெளிவரும். எப்போது வெளிவரும் என்ற தகவல் பிறகு அறிவிக்கப்படும். 

**

என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியவரும் முக்கியமான விழுமியங்களை எனக்குக் கற்றுத்தந்தவருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைந்து இன்று மூன்று ஆண்டுகாள் நிறைவடைகின்றன. 20 ஆண்டுகால நட்பு எங்களுடையது. இதில் 10 ஆண்டுகாலம் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். செய்யும் செயலையே முக்கியமானதாகக் கருதி, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர் அவர். தினசரி அவரிடம் படித்த பாடங்கள் எவ்வளவோ. ஒருமுறை ‘க்ரியா’ அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ராமகிருஷ்ணன் எடுப்பதற்கு முன்பு நான் எடுத்துவிட்டேன். மறுமுனையில் ஏதோ கேட்டதற்கு நான் ‘என் பாஸ் ராமகிருஷ்ணனைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று பதில் அளித்தேன். நான் பேசியதை கவனித்த ராமகிருஷ்ணன். மதியம் சாப்பிட்ட பிறகு பால்கனியில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தபோது (இறப்புக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே சிகரெட்டை நிறுத்திவிட்டார்) என்னை அழைத்தார். ‘ஆசைத்தம்பி, இனிமே யார் கேட்டாலும் என்னை பாஸ் (முதலாளி) என்று சொல்லாதீர்கள், Colleague (சக பணியாளர்) என்று சொல்லுங்கள்’ என்றார். இது ஒரு பானை சோற்றில் ஒரு பதம்தான். அவருடன் எத்தனையோ விஷயங்களில் நான் வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எங்கள் ரசனையிலும் நிறைய மோதல் உண்டு. என்றாலும் வாழ்க்கைக்கான முக்கியமான படிப்பினைகள் பலவற்றையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். வாழ்க்கை குறித்த, கலை, இலக்கியம் குறித்த என் பார்வைகளை விரிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய தாக்கத்திலிருந்து உரிய இடங்களில் உரிய நேரத்தில் விடுபடுவதும் என் ஆளுமை வளர்ச்சிக்கு அவசியம் என்று விடுபட்டும் வந்திருக்கிறேன்.

எனக்கு 24 வயது நடக்கும்போதே என் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான பதிப்புப் பணிகளிலும் அகராதிப் பணியிலும் அவர் என்னை ஈடுபடுத்தியது எனக்கு ரொம்பவும் பெரிய விஷயம். சிறிய ஊரிலிருந்து சென்னைக்கு வந்து, தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு எங்கும் செல்லாமல் யாருடனும் பழகாமல் இருந்த ஒருவன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துப் பெரும் பொறுப்புகளை ஒப்படைத்தது எனக்குப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008-ம் பதிப்பு), ‘A Handbook of Tamil Verbal Conjugation’ (2009) ஆகிய பெருநூல்களின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பை எனக்கு வழங்கினார். இத்தனையும் எனது முப்பது வயதுக்குள். என் கவிதைகள் மீது என்னை விட அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர்.

அவர் மறைந்ததை என் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அவர் இன்றும் என்னுடன் இருப்பதுபோன்ற உணர்வுதான். ஆனாலும், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே, அவர் குரலைக் கேட்ட முடியவில்லையே என்ற ஏக்கமும் சூழ்ந்துகொள்கிறது. தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் பணியாற்றிவிட்டுச் சென்றிருக்கும் அவரை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்!

‘காவிரியம்’ (மாயக்குடமுருட்டி) நெடுங்காவியம் நோக்கி நான் வந்திருப்பதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆகவே, அதற்குப் பெயர் சூட்டுவதற்கு அவருடைய நினைவுநாளான இன்றைய நாளைவிட  மிகவும் பொருத்தமான ஒன்று வேறெதுவும் இருக்காது. ‘காவிரியம்’ விரியும்!

Saturday, November 11, 2023

சிங்காரத்தின் மாபெரும் சிக்ஸர்



உள்ளூர்ப் போட்டியில்
சிக்ஸர்களாய் அடித்து
எங்கள் தெருவுக்கு
வெற்றிதேடித் தந்தவன் சிங்காரம்
பரிசாய்க் கிடைத்த
மூன்னூறு ரூபாயில்
தெருவுக்கே புது மட்டை
வாங்கிக்கொடுத்தவன்
சிங்காரம்
பகலில்
கிரிக்கெட் மைதானமாகவும்
இரவில்
கேரம் மைதானமாகவும்
மாறிப் போகும்
அவன்
வீட்டு வாசல்
எல்லா நேரத்திலும்
இளமையின்
வர்ணனை மைதானமாக
இருக்கும் அது
கிரிக்கெட்டையும்
இளமையையும்
தெருவையும்
ஒன்றாகப் பறித்துக்கொண்டதன்
பெயர் என்னவென்று தெரியவில்லை
ஊருக்குப் போகும்போது
எப்போதாவது
சிங்காரத்தைப் பார்ப்பதோடு சரி
படிப்பு இல்லையென்றாலும்
வெளிநாடு போய்ச் சம்பாதித்து
அதில் பாதி இழந்து
பின் சொந்தமாய் ஒரு மர இழைப்பகம்
பெரிய கோயிலுக்கு அருகில்
கணினியில் வடிவமைத்து
ஆணையைத் தட்டும்போது
உள்ளே அவனுடைய சிஎன்ஸி இயந்திரம்
சிக்ஸர்களாய் அடிக்க ஆரம்பிக்கும்
வாழ்வை
அப்படித்தான் அனுதினமும்
வென்றுகொண்டிருந்தான்
கடைசியாய் ஊருக்குப் போனபோது
சிங்காரத்தின் மரணச் செய்தி
தடுக்கிப் பின்பக்கமாக விழுந்து
தலையில் அடிபட்டுச்
செத்துப்போனதாய்க் கேள்வி
இளம் மனைவி
வயிற்றில் பிள்ளை
அது இன்னேரம் பிறந்திருக்கும்
ஆணோ பெண்ணோ
எங்கிருக்கிறது தெரியவில்லை
தன் அப்பா அடித்த
சிக்ஸர்களை
அது பார்த்திருக்க வேண்டுமே
அது இருந்திருந்தால்
பரிசில் பங்கு பிரித்துக்கொண்டு
பொம்மை வாங்கிக்கொடுத்திருப்பான்
சிங்காரம்
மிச்சப் பணத்தில்
தண்ணி அடித்திருப்போம்
நாங்கள்
இப்படித்தான் பல நேரங்களில்
நேரிடுகிறது
சிங்காரம் சிக்ஸர் அடித்ததைப் பார்க்க
அப்போது அவன் குழந்தை இல்லாததைப் போலவும்
அவன் அடித்த சிக்ஸர்
அவனது எல்லைக்கோட்டைத் தாண்டிப்போய்
எங்கோ இப்போது கொட்டக் கொட்டக்
கண்ணை உருட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க
சிங்காரம் இல்லாததைப் போலவும்

-ஆசை 

(மறைந்த நண்பன் சிங்காரத்தின் பிறந்தநாள் கவிதை)

Friday, November 10, 2023

நான் வெறுங்கையால் பறப்பது உங்களுக்கு வியப்பில்லையா



ஏரிக் கரை மீதமர்ந்த சாலைக்கு
இணையாக
விசைப் படகு செலுத்தினான்
அவன்

அவனைப் பார்த்து
எழுந்து இரு கைகளையும் அசைத்துப்
பறக்க ஆரம்பித்து
அந்தரம் சென்று
அதன் பின் 
தரைமனிதர்களை
மனம்நிறை செருக்குடன்
ஒரு நோட்டம் விட்டேன்

யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை

ஒரு மனிதன்
வெறுங்கைகள் வீசிப் பறப்பதொன்றும்
வியப்புக்குரிய நிகழ்வில்லையா
என்பதுதான்
எனக்கு வியப்பு

அவன் 
அப்படியில்லை
படகு செலுத்திக்கொண்டே
தலைநிமிர்த்தி
ஆம் தலைநிமிர்த்தி
என்னைப் பார்த்தான்
அவன் புன்னகை 
இவ்வளவு உயரத்திலிருந்தும் 
தெரிகிறது

நான் பறப்பது தெரிகிறதா
என்று கூவிக் கேட்டேன்
தலையாட்டினான்

எனக்காக ஒன்று செய்ய முடியுமா
நான் பறப்பது 
இவர்களுக்குத் தெரியவில்லை

இன்னும் சொல்லப்போனால்
இவர்களுக்குத் தெரியாததாலோ
அல்லது
இவர்கள் பொருட்படுத்தாதாலோ
நான் பறக்கிறேன்
என்பது குறித்து
எனக்கே ஐயம் ஏற்படுகிறது

உன் கைபேசியில்
என் பறத்தலைப்
படம் பிடிக்கிறாயா
என்று கேட்டதற்கு
மறுப்பேதும் பேசாமல்
புன்னகை மாறாமல்
ஒரு கையால் படகு செலுத்திக்கொண்டு
இன்னொரு கையால் 
கைபேசியில்
படமெடுக்க ஆரம்பித்தான்

அவன் படமெடுக்கிறான் என்ற
மகிழ்ச்சியே
மிச்ச தொலைவின் பறத்தலுக்குக்
கையசைக்கும் தேவையை
இல்லாமலாக்கியது

ஆழ்போலிக் காலத்தில்
இப்படத்தை 
என் பறத்தலை 
யார் வேண்டுமானாலும் மறுக்கலாம்
ஆனால் என்னால் இனி 
மறுக்க முடியாது
அதற்குத்தான் இந்தப் படம்

அவனுக்கு முன்பே ஏரியைத் 
தாண்டிவிட்டேன்

மகிழ்ச்சியிடமிருந்து
என்னை விடுவித்துக்கொண்டு
என் பறத்தலை
அதில் மட்டும் இருக்கும்
என் இருத்தலை
மெய்ப்பிக்க மட்டும் காத்திருக்கும்
தரைக்கு வந்த பிறகு
அவன் என்னிடம் வந்து
கைபேசி தந்தான்

படத்தை ஓட விட்டபோது
தொடக்கத்தில்
கோணச் சமனின்மையில்
ஆடிய காட்சிகள்
பிறகு நிலைபெற்றன
ஒரு தவக்களையின் மீது

தரையில் உள்ள
தவக்களையின் மீது

அது தவ்வித் தவ்வி
ஒரே இடத்தில்
குதித்துக்கொண்டிருந்தது

அதன் பின்
முழுப் படமும் அதேதான்

நான்
நான்
நான் எங்கே

நாக்குழறி
தடுமாறித் தடுமாறிக் கேட்டேன்
அவனிடம்

நீதான்
அது என்றான் அவன்

நான் தவக்களை அல்லவே
மேலும்
நான் பறந்தேனே
நீயும் ஒப்புக்கொண்டாயே
என்று கேட்டதற்கு

ஆமாம் நீ தவக்களை அல்லதான்
மேலும்
நீ பறந்தாய்தான்
நானும் ஒப்புக்கொண்டேன்தான்
என்றான்

அப்படியென்றால்
இதில்
இதில்
இதில்
தவக்களையல்லவா
இருக்கிறது
விடாமல் தவ்வித் தவ்விக் குதிக்கிறது
என்று கேட்டதற்கு

நீ உன்னை நம்புகிறாயா
என்னை நம்புகிறாயா
இந்தத் தவக்களையை நம்புகிறாயா
என்று திருப்பிக் கேட்டான்
           - ஆசை
           - நன்றி: ‘காலா பாணி’ வலைத்தொடருக்கு  

Tuesday, November 7, 2023

கமல்: தமிழ் சினிமாவின் ராஜபார்வை

 


ஆசை

(கமலின் 60-வது பிறந்த நாளுக்கு எழுதிய கட்டுரை)

கமலுக்கு 60 வயது. நம்புவதற்கு மனம் மறுக்கிறது. நம்மில் 30 வயதைக் கடந்தவர்களில் ஆரம்பித்து 60 வயதை எட்டியவர்கள் உட்பட பலருடைய இளமைப் பருவத்துக் கனவுகளின், காதலின், சாகசத்தின் திரைவடிவமாக உலவிய ஒருவருக்கு 60 வயது ஆகிவிட்டது என்பது நம் இளமைக்கு எதிராகக் காலம் செய்த சதி என்றுதானே சொல்ல வேண்டும்! அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினருக்கு உவப்பானவராக கமல் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் உள்ளிட்ட பலரின் இளமைக் காலமல்லவா கமல்!

தன்னுடைய 6-வது வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி, தற்போதைய ‘பாபநாசம்’ வரையிலான 54 ஆண்டு காலப் பயணம் என்பது குறுகிய காலம் அல்ல. அப்போது சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’ பார்த்த ஒருவர், இப்போது ‘பாபநாசம்’ படத்தைப் பார்க்க, தன் பேரன், பேத்திகளோடு போகக் கூடும். இந்த நீண்ட காலகட்டத்தில் (சிறுவனாக நடிக்க ஆரம்பித்து, பதின்பருவம் வரையிலான காலம் நீங்கலாக), கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில், தமிழர்களின் வாழ்க்கையில் கமல் தவிர்க்க முடியாத ஒரு பாகமாக இருந்துவந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகச் சிலர்தான் அந்தத் தலைமுறையின் நினைவுகளின் தொகுதியாக இருப்பார்கள். அந்த வகையில் கமல் இரண்டு தலைமுறைகளின் நினைவு.

புதுமையின் நாயகன்

தமிழ்த் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் கமலும் புதுமையும் பிரிக்க முடியாத இரண்டு பெயர்கள். நாடக மரபிலிருந்து வந்தவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் வெகு காலமாக ஆட்சிசெய்துகொண்டிருந்ததால், கமலின் வருகைக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களெல்லாம் நாடகங்களாகவே இருந்தன. கமலும் நாடகப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். ஆனாலும், மாறும் காலத்தின் ஒரு பிரதிநிதி அவர். அவர் திரைத் துறையில் நட்சத்திரமாக வலம்வர ஆரம்பித்த காலத்தில் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, இளையராஜா போன்றவர்களும் தங்கள் கணக்கைத் தொடங்கியது பெரும் வியப்பு. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் களமிறங்கிய காலத்தில்தான் தமிழ் வெகுஜன சினிமாவில் புதுமையின் பொற்காலம் ஆரம்பித்தது. மேற்கண்ட பெயர்களில் மகேந்திரன் தவிர, அனைத்துக் கலைஞர்களின் ஆரம்ப கால முயற்சிகளில் கமலும் இருந்திருக்கிறார். அந்தக் காலத்தில், நல்ல திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் வருபவர்கள் இயல்பாகவே கமலை நாடுவார்கள். அவர்களால் கமலும், கமலால் அவர்களும் பலனடைந்தார்கள்.

கமல் தரும் பொறி

நடிப்பு மட்டுமே திரைப்படம் இல்லை என்பதை அறிந்திருந்ததால், திரையுலகின் பெரும்பாலான துறைகளில் கமலுக்குத் தேர்ச்சி இருந்தது. காலம்தோறும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே வந்தார். தான் கற்றுக்கொண்டதைத் திரையிலும் பிரதிபலித்தார். இந்தப் புதுமைகள் வழியாகத் தனது ரசிகர்களின் அறிவையும் ரசனையையும் மேலே மேலே கொண்டுசென்றபடியே இருக்கிறார் கமல். ‘ஓடிவிளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாடல்களைத் தாண்டி, பாரதியின் பாடல்கள் பரிச்சயமாகாதிருந்த பலருக்கு ‘மகாநதி’யில் கமல் சொன்ன ‘தேடிச் சோறு நிதம் தின்று’ கவிதை பாரதி மீது பைத்தியம் கொள்ள வைத்தது. இப்படியாகப் பல விஷயங்களில் கமல் ஒரு பொறியைத் தருவார். அந்தப் பொறியை ஊதி ஊதிப் பெரும் தீயாகப் பெருக்கும் ஒருவர், ஒரு கட்டத்தில் கமலை விட்டு விலகிப் போய்விடுவார் என்பது நியதி. அதேபோல், கமல் கொடுத்த பொறியையே பெரிதாக நினைத்துக்கொண்டிருப்பவர் கமல்தான் உலகின் உச்சம் என்று கருதுவார்.

கமலின் விருந்து

தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கமலின் திரைப்படங்களோடு கழித்த ஒருவருக்குச் சந்தேகமில்லாமல் கமல் பெரும் விருந்தே படைத்திருக்கிறார். இதில் வெகுஜன திரைப்படம், கலைத்தரம் மிக்க வெகுஜனத் திரைப்படம், மாற்றுத் திரைப்பட முயற்சிகள் எல்லாமே அடங்கும். இந்த மூன்று வகைகளிலும் கமல் ரசிகர்களுக்கு அதிகமாகத் தீனி போட்டவை என்று இந்த 20 படங்களைக் குறிப்பிடலாம்: 16 வயதினிலே, அவள் அப்படித்தான், சிகப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, நினைத்தாலே இனிக்கும், ராஜபார்வை, சகலகலா வல்லவன், சலங்கை ஒலி, நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், இந்தியன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி.

கமலால் ஏன் முடியவில்லை?

உலக சினிமா எல்லோருடைய பென் டிரைவுக்குள்ளும் வந்துவிட்டது. எனவே, எல்லோருமே சினிமா விமர்சகராக மாறி, கமலைக் குறைகூறுவது வழக்கமாகிவிட்டது. சராசரி ரசிகர்களுக்கு உலக சினிமா எட்டாமல் இருந்த காலத்தில்சினிமா ரசனையையும் உலக சினிமாவையும் பற்றி, வெகுஜன சினிமாவுக்குள்ளேயிருந்து பேசிக்கொண்டிருந்த ஒருசிலருள் கமலும் ஒருவர் என்பதை மறந்துவிட முடியாது.

‘முழுக்க உலகத் தரத்திலான ஒரு திரைப்படத்தை கமலால் ஏன் எடுக்க முடியவில்லை?’ என்பதுதான் அவருடைய விமர்சகர்கள் பெரும்பாலானோருடைய கேள்வி.

இது போன்ற கேள்வியை அவர்கள் அநேகமாக கமலிடம் மட்டுமே எழுப்பினார்கள் என்பதைக் கொண்டு அதை ஒரு ஆதங்கமாகவும், கமல்மீது உள்ள உரிமையில் எழுந்த கோபம் என்றும் கருத முடியும்.

கலைப் படங்களை எடுக்க விரும்பியவர் அல்ல கமல். கலைப்படங்களை உள்வாங்கிக்கொள்ளும் கலாச்சாரங்களில் ஒன்றோ, கலைப்படங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடுகளில் ஒன்றோ அல்ல நம்முடையது. சிறுபான்மையினராக இருக்கும் அறிவுஜீவிகள் சினிமாவைத் தூய்மையான கலை வடிவமாகப் பார்க்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கோ சினிமா என்பது கொண்டாட்டம், துயரங்களின் வடிகால், கனவுகளின் பதிலீடு. இங்குதான் கமல் வருகிறார். வெகுமக்களைத் தூக்கியெறிந்து

விடாமல் அவர்களின் உலகத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பார்க்கும் வெகுஜனத் திரைப்படங்களுக்குக் கலையம்சத்தைக் கூட்டினார் அவர். இதில் வெற்றியும் தோல்வியும் சரிபாதி கிடைத்திருக்கிறது அவருக்கு. தமிழில் ஜனரஞ்சகத் திரைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சூழலில், கமல் அதன் அடுத்த கட்டமே தவிர, உச்சக்கட்டம் அல்ல. அதைச் செய்ய வேண்டியவர்கள் அடுத்தடுத்து வருபவர்கள்தான்.

    - நன்றி: இந்து தமிழ்திசை

கமல் தொடர்பான பிற பதிவுகள்:


Friday, November 3, 2023

நாயகனுக்குக் கண்டிப்பா ஆஸ்கார் கொடுத்திருக்கணுங்க (கேசட்டுக் கடை கவிதைகள்)



மழையில நனைஞ்சுகிட்டே
நானும் சித்தியும்
தஞ்சாவூர் விஜயா தியேட்டர்ல
நுழைஞ்சப்போ
சரியா
நான் அடிச்சா நீ செத்துருவே’ன்னு
பிரதீப் சக்திகிட்ட கமல்
வசனம் பேசுற சீனு
அது என்னைப் பாத்து
சொன்ன மாதிரி இருந்ததால
ரொம்பவே பயந்துட்டேன்
அதுனாலதான்
இன்னை வரைக்கும் கமலை
நேரில பார்க்கவே இல்லை
ஒருதடவ கூப்புட்டு அனுப்புனாரு
இலக்கியவாதிய சினிமாக்காரங்கதான்
வந்து சந்திக்கணும்’னு
தெனாவட்டா சொல்லிட்டேன்
அப்புறம் அதை எல்லாருக்கும் சொல்லிட்டேன்
அவரை சந்திக்கக் கூடாதுன்னுலாம்
எந்த வைராக்கியமும் இல்லீங்க
ரஜினி விஜய் கூப்புட்டா
ஓடோடிப் போய் நிப்பேன்
ஆனா
கமல் பேசுன அந்த வசனம்தான்
இன்னைக்கு வரைக்கும்
என்னைத் தடுக்குது
அது இருக்கட்டும்
கமல் ரசிகனா
எனக்குப் பெரிய வருத்தம் என்னன்னா
நாயகனுக்கு
ஆஸ்கார் குடுக்கலங்குறதுதான்
போலீஸ்காரரான பிரதீப் சக்தி
செத்த பிறகு அவரோட துப்பாக்கியை
காவல் துறை வாங்கியிருக்கும்னும்
அந்தத் துப்பாக்கியை வைச்சுப்
பின்னாடி அவரோட பையன் டினு ஆனந்த்
கமலை சுடுற மாதிரி காமிச்சதால
லாஜிக்கல் மிஸ்டேக்குன்னு சொல்லி
ஆஸ்கார் கொடுக்கலன்னும்
எங்க தெரு பாலா அண்ணன்
சொன்னாங்க
அப்புறம் தேவர் மகன்ல
வயல்ல செருப்பு போட்டு நடக்குற மாதிரி
ஒரு சீனு வச்சதால
அதுக்கும் கெடைக்கலன்னு
அந்த அண்ணன் சொன்னாங்க
இப்படி வாழ்க்கையில்
எத்தனையோ கமல் படங்கள் வர்றப்பல்லாம்
அடுத்த வருஷம்
ஆஸ்கார் வாங்கும் ஆஸ்கார் வாங்கும்னு
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்திருக்கேன்
ஹே ராம் படத்துல
ராணி முகர்ஜி புட்டத்தை
கமல் கடிக்கிற சீனப் பாத்து
உறுதியா நம்புனேன்
அடுத்த வருஷம்
ஹே ராமுக்குத்தான் ஆஸ்காருன்னு
அப்பவும் கிடைக்கல
என்ன பண்ணுனாதான்
கொடுப்பாய்ங்கன்னு தெரியலை
ஒருநாள் இல்லன்னா ஒருநாள் பாருங்கடா
கமல் தன்னோட புட்டத்த
தானே கடிக்கிற மாதிரி ஒரு சீனு எடுப்பாரு
அந்தப் படத்துக்கு
நீங்க கண்டிப்பா
ஆஸ்கார் கொடுக்கத்தான் போறீங்க
அப்போ மேடையில ஏறி
ஐயாம் த கிங் ஆஃப் த வேர்ல்டு
எல்லாப் புகழும் இறைவனுக்கே’ங்கிற மாதிரி
கமலும்நான் அடிச்சா நீங்கல்லாம்
செத்துடுவீங்கடா’ன்னு
வசனம் பேசணும்
அதான் என்னோட ஆசை

          -ஆசை

Thursday, November 2, 2023

அப்படித்தான் பேசுவீங்களா ஸ்ரீதேவி (கேசட்டுக் கடை கவிதை வரிசை)



ஜானி படப்பிடிப்பு
நடந்துகிட்டு இருந்திச்சு
சரியா
‘ஆமாம் நான் அப்படித்தான் பேசுவேன்’னு
ஸ்ரீதேவி பேசுற காட்சியைப்
படமாக்கி முடிச்சாங்க
அதுக்கு என்ன பண்ணுறது
எப்படி நடிக்கிறதுன்னு தெரியாம
ரஜினி திகைச்சுப் போக
அதையும் சேத்துதான் படமாக்குனாங்க
முடிஞ்சி காருக்குள்ள வந்து
உக்காந்தாங்க ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி நமக்கு அவ்வளவு பக்கத்துல
உக்காந்தா
ஒரு மேட்டுநிலத்துல
நமக்காக மட்டும் ஒரு பியானோவை
யாரோ வாசிக்கிற மாதிரியும்
அதுலருந்து பெய்யுற மழையில
நனைஞ்சு செம்மறியாடு மாதிரி
சிலுப்பிக்கிட்டு
ஸ்லோமோஷன்ல துள்ளி ஓடணுங்கிற
மாதிரியும்தான்
யாருக்குமே தோணும்
உள்ளே என்னப் பாத்ததும்
முகம் இருண்டுபோயி
தலைகுனிஞ்சிக்கிட்டாங்க
அவங்ககிட்ட கேட்டேன்
‘முடியவே முடியாதா’ அப்புடின்னு
‘வாழ்க்கை என்னை
வேற திசையில கொண்டு போற மாதிரி இருக்கு
என்னை மன்னிச்சிடுங்க’ அப்படின்னாங்க
இல்லை இல்லை
அப்புடி சொன்னமாதிரி
அவங்க கண்ணுகலங்குச்சு
‘ஜானியா’ன்னு கேட்டேன்
‘போனி’ன்னு சொன்னாங்க
அது ஆச்சு
இருவத்தஞ்சு வருஷம்
அப்போ என்ன
எனக்கு ஒரு 19 வயசு இருக்குமா
ஜானி வந்தப்போ
11 மாசக் குழந்தையா இருந்திருப்பேன்
நான் தாமதமா பொறந்ததும்
நான் தாமதமா ஜானி பார்த்ததும்
என் தப்பான்னு தெரியலை
ஆனா
ஸ்ரீதேவி மட்டும்
ஜானிக்கும்
போனிக்கும் நடுவுல
கனவோட காலத்துல
இன்னும் வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க
அந்தக் கனவு ஒரு
குமிழி மாதிரி
அதுக்குள்ள இருக்குற வரைக்கும்
மூச்சுக்காத்துக்கு
எந்தக் குறையும் இருக்காது
அந்தக் குமிழி
எந்தத் தண்ணியிலயும்
மூழ்கவும் மூழ்காது
உடையவும் உடையாது
அதுக்குள்ள இருந்துக்கிட்டு
என்னோட ஸ்ரீதேவி என்கிட்ட
எப்போதும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க
‘ஆமாம் நான் அப்படித்தான் பேசுவேன்’
அப்படின்னு
-ஆசை

Wednesday, November 1, 2023

மகிழ் ஆதன் - 500



நம் வீட்டுக் குட்டிக் கவிஞர் மகிழ் ஆதன் ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டிருந்தார், ‘அப்பா நான் ஐநூறு கவிதை எழுதுனதும் என்னை பனிமலைக்கு அழைச்சிட்டுப் போகணும்’னு. கடந்த ஓராண்டாக அவர் எழுதியது எதையுமே டைப் செய்யவில்லை. சமீபத்தில் உட்கார்ந்து எல்லாவற்றையும் டைப் செய்தேன். நேற்று ஒரு கவிதை எழுதிக்கொடுத்துவிட்டு அதே வசனத்தைக் கூறினார், ‘அப்பா நான் ஐநூறு கவிதை எழுதுனதும் என்னைப் பனிமலைக்கு அழைச்சிட்டுப் போகணும்’. அதற்கு இன்னும் நாள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அதையும் டைப் செய்துவிட்டு இறுதியில் ஒட்டுமொத்தக் கவிதைகளுக்கும் எண்கள் இட்டுக்கொண்டே வந்தேன். என்ன ஒரு ஆச்சரியம், நேற்று மகிழ் எழுதியது சரியாக 500ஆவது கவிதை.
நான்கு வயதில் கவிதை சொல்ல ஆரம்பித்து 11 வயதுக்குள் 500 கவிதைகள் (நான் சரியாக 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்). ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (2021, வானம் வெளியீடு), ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ (2022, எதிர் வெளியீடு) இரண்டு கவிதைத் தொகுப்புகள். இந்த 500 கவிதைகளில் நூல் வடிவில் இடம்பெற்றவை 125 மட்டுமே. அது மட்டுமல்லாமல் அவன் சொல்லி, பின் மறந்துபோன கவிதைகள், எழுதித் தொலைத்த கவிதைகள் என்று எப்படியும் இன்னும் ஒரு 50 கவிதைகளாவது இருக்கும். 500 என்பது நான் தொகுத்து இப்போது கையில் உள்ளவை மட்டுமே.

மகிழ் ஆதனையும் அவனது கவிதைகளையும் அள்ளி அணைத்துக்கொண்ட நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும், மகிழின் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களுக்கும், வடிவமைப்பு, ஓவியங்கள் என்று உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

பனிமலையே காத்திரு, ஒரு குட்டிக் கவிஞனின் கவிதையாக ஆவதற்கு!
*

மகிழின் 500ஆவது கவிதை:

மரத்தின் இறப்பு

மரத்தின் இறப்பில் பறவைகள்
கூடுகட்டும்
இறப்பில் ஒளிந்திருக்கும் நிழல்
மறு உலகத்தில் ஒளிகளைப் பூட்டியது
மரங்களுக்கு வரும் கனவு
எதிர்கால கனவுகளுடன் சண்டை போட்டது
மரத்தின் இறப்பு வரையும் ஓவியத்தின் அர்த்தம்
நிறங்களுக்குத்தான் தெரியும்
மரத்தின் இறப்பு
உதிரும் இலைகளின் நிமிடத்தைப் பார்த்து
பயப்பிடும்

*

மகிழ் குறித்த பதிவுகளில் சில:

எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கை: https://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்: https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்: https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமி: https://tinyurl.com/yu3y94jk

ஆசை: https://tinyurl.com/mr9vn367

The New Indian Express: https://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’: https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்: https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki



நீ பார்த்த பார்வையின் குடல் (கேசட்டுக் கடை கவிதைகள்)

  


என் பிள்ளைகளைப்
பொறுத்தவரை
கொடுத்துவச்சவன் நான்
அப்பா கேசட்டுக் கடை வைக்கப்போறேன்னு
சொன்னதும்
ங்கொப்பன் ஒங்களையெல்லாம்
நடுத்தெருவுல நிக்கவைக்கிறதுக்குத்தான்
இந்தக் கங்காச்சில்லாம் பண்ணப்போறான்’னு
அவனுங்க ஆத்தா வச்ச ஒப்பாரியையெல்லாம்
காதுல வாங்காம
ஐய்யா ஜாலி ஐய்யா ஜாலி”ன்னு
ஆர்ப்பாட்டம் பண்ணிக் குதிச்சது
அவனுங்கதான்
கேசட்டுகளோட அருமை தெரிஞ்சது
அவனுங்கதான்
கடைசியா
ஹேராம் குடலை உருவி
வெளிய போட்டதும்
அவனுங்கதான்
வெளியில கிடந்தது
நீ பார்த்த பார்வையா
இசையில் தொடங்குதம்மாவான்னு
தெரியல
ரெண்டு சைடுங்கிறதால
ஒரே நேரத்துல ரெண்டோட
குடலாகவும் இருக்கலாம்
கடை வச்சா
எல்லா கேசட்டையும்
போணி பண்ணப்போறதும்
இவனுங்களாத்தான் இருக்கும்
கமலஹாசன் வெரலால
பியானோ கட்டையில நடந்து
வாசிக்கிறத
இவனுங்க
நாடாவை உருவி
வெளியில வரவைச்சி
வாசிப்பானுங்க
அது ஒரு தனி அழகுதான்
அதுக்காகவே
எத்தனை கடைவேணா
வைக்கலாம்தான்
     - ஆசை