Sunday, June 28, 2020
உலகை அன்புமயமாக்கும் கலை- தி.ஜா. நூற்றாண்டு
ஆசை
நவீனத் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத்துக்கு நிகரான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது சிறுகதையில்தான் என்ற கருத்து இங்கே வெகு காலமாக நிலவுகிறது. அது உண்மைதான் என்பதை புதுமைப்பித்தன், மௌனி, குபரா தொடங்கி நீளும் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியல் நிரூபிக்கிறது. இவர்களில் தி.ஜானகிராமனின் பங்களிப்பும் மிக முக்கியமானது. நெகிழ்ச்சியும் காதலும் மீறல்களும் நிரம்பிய தனது நாவல்களாலே அதிகம் வெகுஜன வாசகர்களிடையே அறியப்படும் தி.ஜானகிராமனின் சிறுகதைகளையே அவரது முதன்மையான சாதனையாக தமிழிலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவதுண்டு.
ஒரு எழுத்தாளருக்கு நாவல்தான் பரந்த களத்தை அமைத்துக்கொடுக்கும். சிறுகதையில் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், தி.ஜானகிராமன் விஷயத்தில் இது நேரெதிர் என்று தோன்றுகிறது. அவர் தனது நாவல்களில் எழுதிய விஷயங்களை காதல், மரபை மீறிய பாலுணர்வு, இசை என்று ஒரு சில வகைமைகளுக்குள் அடக்கிவிடலாம. அவையும் கூட ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாகவே இருக்கும். ஆனால், சிறுகதைகளில்தான் அவர் விரிவான பொருள்களைப் பேசியிருக்கிறார். மேற்கண்ட மூன்று கருப்பொருள்களுடன் அன்பு, நம்பிக்கை துரோகம், வன்மம், அறம், கருணை, (இரக்கத்திலிருந்து மாறுபட்ட) பரிவு, வீம்பு, அந்தஸ்தின் போலித்தன்மை, மரணம், குற்றவுணர்வு, நகைச்சுவை என்று பல்வேறு கருப்பொருள்களும் உணர்வுகளும் அவரது சிறுகதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அவருடைய சமகால (பிராமண) எழுத்தாளர்கள் அநேகமாகத் தொடாத சாதி என்ற கருப்பொருளும்கூட ஒரு கதையில் (இசைப்பயிற்சி) இடம்பெற்றிருக்கிறது.
சிற்சில கதைகளில் கூறல் முறையில் தி.ஜா. பரிசோதனை முயற்சிகள் செய்திருந்தாலும் அவர் ஒரு மரபான கதைசொல்லியே. ‘நாடகத்தின் முதல் அங்கத்தில் ஒரு துப்பாக்கி காட்டப்பட்டால் நாடகம் நிறைவுக்கு வருவதற்கு முன்பு அது வெடித்தாக வேண்டும்’ என்ற ஆண்டன் செகாவின் இலக்கணத்தையே தி.ஜா. பெரிதும் தனது சிறுகதைகளில் பின்பற்றியிருக்கிறார். ஒரு துரோகம், வஞ்சம், ஏமாற்று வேலை, குற்றம், கொடுமை அவரது கதை பேசும் என்றால் அந்தக் கதை முடிவதற்குள் அதற்கான பரிகாரம் கிடைத்துவிடும். அது பழிவாங்குதல், தண்டனை போன்றவற்றின் மூலம் ஈடுகட்டாமல் பெரிதும் மன்னிப்பு, குற்றவுணர்வு போன்றவற்றின் மூலம் ஈடுகட்டப்படுவதுதான் தி.ஜா. கதைகளின் சிறப்பு. இதற்கு கடன் தீர்ந்தது, கங்கா ஸ்நானம், கண்டாமணி போன்ற கதைகள் சிறந்த உதாரணம். ‘பாயசம்’ கதையில் கூட சாமநாது தன் வஞ்சத்தைக் கதையின் இறுதியில் வெளிப்படுத்தினாலும் உடனேயே அவருக்குக் குற்றவுணர்வு ஏற்படுத்தும் முள் ஒன்றும் அவர் மனதில் செருகப்படுகிறது. இது போன்ற மனித மனத்தின் அடிப்படை உணர்வுகள் நிகழ்த்தும் விளையாட்டைத் தன்னுடைய நெகிழ்வான, மொழியழகு மிக்க நடையால் கதை என்ற பெயரில் தி.ஜா. செதுக்கித் தருபவைதான் அவரது சிறுகதைகள்.
தி.ஜா.வின் கதைகளைப் படித்து முடிக்கும்போது கிட்டத்தட்ட வெறுக்கத் தக்கவர்கள் என்று யாருமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். ஒருவர் மோசமானவராகக் காட்டப்படுகிறார் என்றால் அவரது நெஞ்சில் ஒரு துளி அன்பைச் சேர்த்து அவரை நெகிழ்த்திவிடுகிறார் தி.ஜா. அவரது புகழ்பெற்ற ‘பரதேசி வந்தான்’ கதையில் வரும் வக்கீல் இப்படிப்பட்டவர்தான். எப்பேர்ப்பட்ட படுபாதகக் கொலை வழக்கையும் தன் வாதத் திறமையால் வெல்லக்கூடிய வக்கீல் அவர். பெரிய சங்கீத ரஸிகரும் கூட. எந்த அபஸ்வரத்தையும் சங்கீதத்திலும் வாழ்க்கையிலும் பொறுக்க முடியாதவர். அவருடைய ஒரே பிள்ளையின் கல்யாணத்தின் விருந்தின்போது வீட்டுக் கூடத்தில் முக்கியஸ்தர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடும் பந்தியில் ஒரு பிச்சைக்காரரை அவர் பார்த்துவிடுகிறார். அவரைத் தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளிவிடுகிறார் வக்கீல். அடுத்த மாதம் அதே நாள் இங்கே வந்து சாப்பிடுவதாக சாபமிட்டுச் செல்கிறார் அந்தப் பிச்சைக்காரர். அதே நாள் மாலையில் கொல்லைக்குப் போய்விட்டுத் திரும்பிய மணமகன் மயக்கம் போட்டுவிழுகிறான். என்ன செய்தும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. பிச்சைக்காரர் தான் சொன்ன தேதியில் வாசலில் வந்து நிற்கிறார். அவர் சாபமிட்டது நடந்துவிட்டது என்கிறார் வக்கீல். ‘என் பசி சாபமிட்டது’ என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். “அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் நான் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க உமக்கு… தெம்பு இல்லை. உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை… உம்முடைய கல்நெஞ்சம் வெறும் வலுவில்லாத கல்நெஞ்சம். துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக நிற்கும்” என்கிறார் அந்தப் பிச்சைக்காரர். இது அந்த வக்கீலுக்கு எவ்வளவு பெரிய கண் திறப்பாக இருந்திருக்கும்! அதனால்தான் அந்தப் பிச்சைக்காரரை ‘காலதேவரே’ என்று அழைக்கிறார்.
தி.ஜா.வின் இன்னொரு முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத கதை ‘இசைப்பயிற்சி’. அநேகமாக தி.ஜா. எழுதிய ஒரே அரசியல் கதை இதுவாகத்தான் இருக்கக் கூடும். இதில் நேரடியான அரசியல் கிடையாது. சென்னையிலெல்லாம் பலருக்கும் சங்கீதம் சொல்லிக்கொடுத்துவிட்டு திருப்தியடையாமல் கிராமத்து அக்கிரகாரத்தில் வந்து குடியிருக்கும் பாகவதர் மல்லிக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்க எந்த சிஷ்யரும் கிடைக்கவில்லை என்ற குறை உண்டு. தற்செயலாக ஒரு இளைஞருக்கு நல்ல குரல் வளம் இருப்பதை மல்லி கண்டடைகிறார். அந்த இளைஞர் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இளைஞர். அந்த இளைஞரை வெள்ளிக்கிழமை தன் வீட்டுக்கு வரச் சொல்கிறார். இந்த விஷயம் அக்கிரகாரத்திலும் ஊர் முழுவதும் பரவி பயங்கரக் கேலிக்குள்ளாகிறார் மல்லி. தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற குழப்பம் அவருக்கு. எனினும் சொன்னது சொன்னதுபோல் வெள்ளிக்கிழமை அந்த இளைஞனைத் தன் வீட்டுக் கொல்லைக்கு வரச் சொல்கிறார். தனக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே 40 அடி இடைவெளி விட்டு சங்கீதம் சொல்லித் தருகிறார். ஒரு பக்கத்தில் சேரி மக்களும் இன்னொரு பக்கத்தில் அக்கிரகாரவாசிகளும் இதையெல்லாம் வேடிக்கைபார்க்கிறார்கள். பயிற்சி முடிந்ததும் “மீசையிலே படாம கூழும் குடிச்சாச்சு” என்று அக்கிரகாரவாசி ஒருவர் சொல்ல, “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லியா பாருங்கடா, ஒழிச மக்களா” என்று சொல்லிவிட்டு சுருதிப் பெட்டியைத் தூக்கியெறிகிறார். சக மனிதர் மீதான கருணை, இரக்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும்போது ஒருவர் தன்னை மேலேயும் இரக்கத்துக்குப் பாத்திரமானவர்களைக் கீழேயும் வைத்துப் பார்க்கும் மனநிலையை இந்தக் கதை உடைக்கிறது. இரக்கம் (சிம்பதி) அல்ல, பரிவுணர்வே (எம்பதி) சாதிய மனநிலையை அகற்ற உதவும் என்பதை உணர்த்தும் கதை இது. நுட்பமாகக் கவனித்தால், கேலி பேசிய ஊராரைவிட சங்கீதம் கற்றுத்தரும் மல்லிதான் இந்தக் கதையின் வில்லன் என்பது புலப்படும்.
சிறுகதையின் பக்க அளவும் கால அளவும் குறைவு என்பதால் தி.ஜா.வின் நாவல் அளவுக்கு அவரது சிறுகதைகளில் வர்ணனை இடம்பெறுவதில்லை. எனினும் சில வரிகளில் ஒருவரின் தோற்றத்தை, குணநலனைச் சொல்லிவிடும் வித்தை அவருக்கு சிறுகதைகளில் கைகூடியிருக்கிறது. கதையை நடத்திச் செல்வதில் உரையாடல்கள் மிக முக்கியப் பாத்திரங்கள் வகிக்கின்றன. அவரது நாவல்களும் சரி சிறுகதைகளும் சரி அலாதியான வாசிப்பனுபவத்தைத் தருபவை. கடந்த 70- ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்திய தி.ஜா.வின் எழுத்துக்கள் இனி வரும் பல நூற்றாண்டுகளும் அப்படியே செய்யும் என்பது உறுதி!
- (தி.ஜானகிராமன் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம்)
Friday, June 19, 2020
க்ரியா ராமகிருஷ்ணன்-75 : 2
ஆசை
அப்போது நான்
சினிமா கனவுகளில் இருந்தேன். சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்து சத்யஜித்
ரே மாதிரி பெரிய இயக்குநராகும் கனவு. மன்னார்குடியில் இருக்கும்போது கூடப் படித்த நண்பர்
ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சில முறை ராமகிருஷ்ணனை சந்திக்க வந்தேன். என் குடும்பத்தினர்
சாதிக்காததை அவர் சாதித்தார். எனது சினிமா கனவுகளிலிருந்து உலுக்கி என்னை வெளியே கொண்டுவந்தார்.
எனக்கு இருந்தது கனவு மட்டுமே தவிர அதற்காக பாடுபடக் கூடிய தைரியம் இல்லை என்பது புரிந்தது.
“ஒரு மாஸ்டர்ஸ் டிகிரி செய்யுங்கள்” என்றார். மன்னார்குடியில் அப்போது முதுகலை இல்லை
என்பதால் 2001-ல் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அண்ணனின்
ஆதரவில் விக்டோரியா விடுதியில் தங்கிப் படித்தேன். அவ்வப்போது க்ரியாவுக்கோ அப்போது
ராயப்பேட்டையில் இருந்த அவரது வீட்டுக்கோ சென்றுவருவேன். நல்ல இசை, நல்ல திரைப்படம்,
நல்ல இலக்கியம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தினார். சில முறை கடற்கரைக்கோ வேறுசில
இடங்களுக்கோ சென்று பேசுவதுண்டு. அப்போது ஒருமுறை “சுந்தர ராமசாமி பிராமணர் என்று தெரிந்தது
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றேன். “அப்படியெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது.
செயல்களைத்தான் பார்க்க வேண்டும்” என்றார். அவரும் பிறப்பால் பிராமணர்தான் என்றாலும்
சாதி சார்ந்த அடையாளங்களை இளம் வயதிலேயே துறந்தவர்.
என்னிடம்
என்ன கண்டாரோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை சந்திக்கும்போது எனக்கென்று தாராளமாக நேரத்தை
ஒதுக்கினார். நான் தத்துப்பித்து என்று உளறியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
அவருடைய நேரத்தை நாம் திருடுகிறோம் என்ற குற்றவுணர்ச்சி மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும்.
ஆனால், அவரோ என்னுடன் பேசியதை விரும்பியே செய்தார். அவர் வீட்டில்தான் முதல்முதலாக
சைக்காவ்ஸ்கியின் இசையைக் கேட்டேன்; ராவெலின் போலரோவைக் கேட்டேன். அவர்தான் எனக்கு
பிஸ்மில்லா கானை அறிமுகப்படுத்திவைத்தார். கேட்டதும் உடனே பிடித்துவிட்டது. “இவர்கள்தான்
எனக்கு உண்மையில் கடவுள்கள்” என்றார், கடவுள் நம்பிக்கையற்ற ராமகிருஷ்ணன்.
விடுதியில்
தங்கிப் படித்துக்கொண்டிருந்த எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஆசை.
திருவல்லிக்கேணியில் நிறைய சாலையோரப் புத்தகக் கடைகள் இருக்கும். எனக்குக் கொடுக்கப்பட்ட
மாதாந்திரத் தொகையைச் சிக்கனப்படுத்தி பழைய புத்தகங்கள் நிறைய வாங்குவேன். அப்படியும்
பணம் போதவில்லை என்று ஒருமுறை ராமகிருஷ்ணனிடம் குறிப்பிட்டேன். “நான் வேண்டுமானால்
உங்களுக்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் தரட்டுமா?” என்றார். அதேபோல், சிறிது காலம் கொடுக்கவும்
செய்தார். எனக்கு, சங்கோஜமாகவே இருந்தது.
(தொடரும்...)முதல் பகுதி: http://writerasai.blogspot.com/2020/06/75.html
Thursday, June 18, 2020
க்ரியா ராமகிருஷ்ணன்-75
ஆசை
நுழைவாயில்
நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 75-வது பிறந்த நாள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து தமிழுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரைப் போல ஒருவர் மேலைச் சமூகத்தில் இருந்திருந்தால் அவரை அந்தச் சமூகம் கொண்டாடியிருக்கக்கூடிய விதமே வேறு. அவரைப் போல பல சாதனையாளர்களுக்கும் வாழும் காலத்தில் புறக்கணிப்பையே தந்துவந்திருக்கிறோம். க்ரியா ராமகிருஷ்ணனைப் பொறுத்தவரை அதிகார பீடங்களிலிருந்து விலகி இருப்பதாலும், தன்னை முன்னிறுத்துவதில் அவருக்குச் சிறிதும் ஆர்வம் இருப்பதில்லை என்பதாலும் இந்தப் புறக்கணிப்பில் அவருக்கும் ஒரு பங்குண்டு. க்ரியா பதிப்பகத்தின் மூலம் சி.மணி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், மௌனி, ஜி. நாகராஜன், எஸ்.வி. ராஜதுரை, சுந்தர ராமசாமி, பூமணி, திலீப் குமார், இமையம் முக்கியமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். காஃப்கா, காம்யு, அந்த்வான் து எக்சுபரி உள்ளிட்ட உலகப் படைப்பாளிகள் பலரின் புத்தகங்களின் நேரடி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்ட ‘டாக்டர் இல்லாத இடத்தில்…’ நூல் மிகவும் பிரபலமானது. தமிழின் தொன்மையை நிறுவும் ஐராவதம் மகாதேவனின் ‘Early Tamil Epigraphy’ என்ற நூலும் (ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது) க்ரியாவின் மைல்கற்களுள் ஒன்று. கூத்துப்பட்டறை, மொழி ட்ரஸ்ட், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் போன்றவற்றை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (முதல் பதிப்பு 1992, விரிவாக்கப்பட்ட பதிப்பு 2008) தமிழுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு. க்ரியா ராமகிருஷ்ணன் தனது 75-வது வயதை நிறைவு செய்திருக்கும் இத்தருணத்தில் அவருடன் 20 ஆண்டுகாலம் பழகியவன் என்ற முறையில் எனக்கென்று சொல்வதற்குச் சில அனுபவங்களும் விஷயங்களும் உள்ளன. அவற்றைக் குறுந்தொடர் வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவருடன் பழகியவர்களும் அவர் மீது மதிப்பு கொண்ட பிறரும் கூட இத்தருணத்தில் அவரைப் பற்றி எழுதலாம். 'பெரியோரை வியத்தலும் இலமே’ என்பது மிகச் சரியானதுதான் என்றாலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று நான் கருதியதால் இந்தக் குறுந்தொடர்.
1.
க்ரியா ராமகிருஷ்ணனை நான் சந்தித்து இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அப்போது, மன்னார்குடியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். சென்னையில் காலச்சுவடு பதிப்பகம் ‘தமிழினி-2000’ என்ற நிகழ்வை நடத்தினார்கள். அதுவரை இலக்கிய இதழ்களிலும் புத்தகங்களிலும் மட்டுமே நான் சந்தித்திருந்த எனது அபிமான எழுத்தாளர்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நிகழ்வை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என் சித்தி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த 500 ரூபாயை எனக்குக் கொடுத்து அந்த நிகழ்வுக்கு அனுப்பிவைத்தார். சென்னையில் சைதாப்பேட்டையில் சித்தப்பா வீட்டில் தங்கியபடி ‘தமிழினி’ நிகழ்ச்சிக்கு தினமும் போய்வந்தேன். அங்கே, பிரம்மராஜன், அம்பை, பெருமாள் முருகன், சாரு நிவேதிதா என்று பலரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். நான் முக்கியமாக அந்த நிகழ்வுக்கு வந்தது என்னுடைய அப்போதைய ஹீரோ சுந்தர ராமசாமியைப் பார்த்துப் பேசத்தான். ஆனால், அவர் அந்த நிகழ்வில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒரு மனத்தடை என்னைத் தடுத்துவிட்டது. மனுஷ்யபுத்திரன் ஒருவருடன் மட்டும்தான் பேசினேன். அங்கே நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியில் என் பட்ஜெட்டுக்கு உட்பட்டு ஒருசில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றிரண்டு க்ரியா புத்தகங்களும் அடக்கம்.
க்ரியா பதிப்பகத்துக்கே சென்று சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அந்தப் பதிப்பகத்தின் தொலைபேசி எண்ணை அழைத்தேன். எடுத்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். எனக்கு அப்போது தொலைபேசியில் அதிகம் பேசிப் பழக்கமில்லை. மேலும், புதிய மனிதர்களுடன் பெரிய ஆட்களுடன் பேசுவதில் ஒருவகை பீதியும் (phobia) உண்டு. ஆகவே, அவருடன் பேச ஆரம்பித்தபோது எனக்கு ‘திக் திக்’ என்றது. சைதாப்பேட்டையில் நான் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதில் தொடங்கி, திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி எப்படி வர வேண்டும் என்பதுவரை கையில் தெளிவான வரைபடத்தைக் கொடுப்பதுபோல் அவர் நான் வர வேண்டிய வழியை விவரித்தார். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் என்னால் ஒழுங்காக வழி சொல்லத் தெரியாது, யாரும் சொல்லும் வழியையும் மனதில் சித்திரமாக மாற்றிக்கொள்ளவும் தெரியாது. ஆனாலும் என்ன ஆச்சரியம்! திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இறங்கி யாரையும் விசாரிக்காமலேயே அவர் சொன்ன வழியைப் பின்பற்றி க்ரியா அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.
அலுவலகத்தில் அவரே என்னை வரவேற்றார். மிகக் குறைவானவர்களே அங்கு இருந்தார்கள். எங்கிருந்து வருகிறீர்கள், என்ன (படிப்பு) படிக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டார். மன்னார்குடி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறேன் என்று சொன்னதும் “ ஓ தங்க.ஜெயராமன் மாணவரா? ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் அவர் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கேட்டார். “அதில் வேலை பார்த்திருக்கிறார் என்பதை அறிவேன்?” என்றேன். க்ரியாவின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பற்றி எனக்கு விளக்க ஆரம்பித்தார். நான் வைத்துள்ள சொற்ப பணத்தில் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதால் ’அந்நியன்’, ‘விசாரணை’ உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். “ஏன் இது வேண்டாமா?” என்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து நீட்டினார். தயக்கத்துடன் “பணம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றேன். இத்தனைக்கும் அப்போது அதன் விலை 40 ரூபாய் மட்டும்தான். “பரவாயில்லை, எடுத்துக்கொள்ளுங்கள். ஊருக்குப் போய்ப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் பணத்தை மணியார்டர் செய்யுங்கள். ஆனால், தவற விடக்கூடாத புத்தகம்” என்றார். எடுத்துக்கொண்டேன். ஊர் திரும்பிய பிறகு ‘குட்டி இளவரசன்’ படித்தேன். அது எவ்வளவு அழகான பரிசு என்பதை உணர்ந்தேன். க்ரியாவுக்கு 36 ரூபாயை மணியார்டர் செய்தேன். ஒரு சிறுநகரத்திலிருந்து சென்னைக்கு வந்த, வெளியுலகமே ஏதும் தெரியாத ஒரு இளைஞனுக்கு அவருடைய இந்த எளிய செய்கைகள் எவ்வளவு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
(தொடரும்)
Tuesday, June 2, 2020
அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
ஆசை
கரோனாவால் நிலைகுலைந்துபோயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது.
வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
கடைசி நிமிடங்கள்
மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்டு. அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த அங்காடியின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இடத்துக்கருகே ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தன் நண்பர்கள் இருவருடன் இருந்த ஃப்ளாய்டைக் கைதுசெய்து போலீஸ் காரில் ஏற்ற முயல்கிறார்கள். தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்டு. எனினும், போலீஸ்காரர்களுக்கு அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதிலிருந்து இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட் சாவின் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று தொடர்ந்து கத்துகிறார் ஃப்ளாய்டு. எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் டேவிட் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃப்ளாய்டு அசைவற்றுப்போகிறார். அவரது நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும்படி நடைபாதையில் இருக்கும் ஒருவர் கூறவே ஒரு போலீஸ்காரர் ஃப்ளாய்டின் நாடியைப் பரிசோதிக்கிறார். துடிப்பு இல்லை.
செல்பேசியில் பலரும் படம் பிடித்து இதை சமூக ஊடகங்களில் வெளியிட, மக்களின் கோபம் தீயாகப் பரவியது. அடுத்த நாள் அந்தக் காவலர்கள் நால்வரும் விடுப்பில் அனுப்பப்பட்டதாக மினியாபொலிஸ் காவல் துறை தெரிவித்தது. அன்று மாலையே அவர்கள் நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றாலும், நான்கு நாட்கள் கழித்துதான் டேவிட் சாவின் கைதுசெய்யப்பட்டார். இதற்குள் மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் தாரக மந்திரமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவது ஒரு சின்ன ஆசுவாசம்.
தொடரும் பாகுபாடு
போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுதான் தருணம் என்று போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் கடைகளைச் சூறையாட ஆரம்பித்தனர். அதிபர் ட்ரம்ப் ‘லூட்டிங் (சூறையாடுதல்) ஆரம்பித்தால் ஷூட்டிங்கும் (துப்பாக்கியால் சுடுதல்) ஆரம்பித்துவிடும்’ என்று ட்வீட் போட இது வழிவகுத்தது. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை விலங்குகளைப் போலவே அமெரிக்கர்கள் நடத்தினார்கள். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, கறுப்பினத்தவருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கறுப்பினப் பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அவர்கள் கீழே வைத்துப் பார்க்கப்படுவது தொடர்கிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 12% கறுப்பினத்தவர்கள்; 61% வெள்ளையினத்தவர். ஆனால், காவல் துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் வெள்ளையினத்தவரைப் போல மூன்று மடங்கு கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு பதம்தான்.
அமெரிக்காவின் நிறவெறி தொடர்பில் பேசுகையில், இந்தியாவில் சாதிவெறி தொடர்பில் சிந்தனை செல்கிறது. அமெரிக்காவில் ஒருபுறம் நிறவெறி இன்னும் நீடித்தாலும் மறுபுறம் அதற்கு எதிராக நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களும், அதற்கான ஊடகங்களின் ஆதரவும், பல்லாயிரக்கணக்கான வெள்ளை இனத்தவரும் அதில் தன்னெழுச்சியாகத் திரள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கே சாதிவெறியால் நடத்தப்படும் கொலைகளுக்கான நம்முடைய எதிர்வினை என்ன என்று ஒரு கேள்வி எழுகையில் தலைகுனிவதைத் தவிர நமக்கு வழியில்லை. ஒவ்வொரு உயிருக்குமான முக்கியத்துவமே ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கி நடத்தும் பயணத்தில் முக்கியமான உந்துசக்தி. நாமும் அதைப் பெற வேண்டும்.
(02--06-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரை)
Monday, June 1, 2020
மின்சாரம் இல்லையென்றால், தமிழக விவசாயம் நாசமாகிவிடும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
ஆசை
கரோனா பாதிப்புகளுக்கு விவசாயமும் விதிவிலக்கு அல்ல. அடி மேல் அடி விழுவதுபோல இந்தச் சமயத்தில் விவசாயத்துக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது இந்திய அரசு. ஒருபுறம் இதைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொன்னாலும், மறுபுறம் விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நோக்கி நகர்கிறது தமிழக அரசு. அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழக விவசாயம் எந்த அளவுக்கு மின்சாரத்தைச் சார்ந்திருக்கிறது? தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியனுடன் பேசினேன்...
விவசாயிகளுக்கான மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?
விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கான முன்னோட்டம் இது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். என்றைக்கு ‘உதய் மின் திட்ட’த்தில் தமிழக அரசு கையெழுத்துப் போட்டதோ அன்றைக்கே தொடங்கிவிட்டது இதற்கான அச்சாரம். அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, இவர்கள் அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான் இன்று மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்டதே.
எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்று அரசு கூறுகிறதே?
இப்படித்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்! நாங்கள் பார்க்காததா? தமிழக அரசு உண்மையாகவே இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது என்றால், உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ‘புதிய மின்சார சீர்திருத்த வரைவு மசோதா-2020’ஐ மத்திய அரசு கைவிடும்படி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் ரத்துசெய்வதையும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டு அரசு திட்டவட்டமாகக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒரு ஏக்கர்; நான் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம்; ஆனால், மின் பயன்பாட்டைத் தீர்மானிப்பது நிலத்தின் அளவு மட்டும் அல்ல; நீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதே மின் பயன்பாட்டைத் தீர்மானிக்கும். நூறு அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் ஆயிரம் அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் எப்படி மின் பயன்பாட்டைச் சமன்படுத்துவீர்கள்? போர்செட்டில் சுவிட்ச் போர்டு இருக்கும் இல்லையா, அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்ஸார் வைத்துவிட்டார்கள். எந்தெந்த விவசாயி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்ற விவரம் மின் வாரியத்துக்குப் போய்விடும். இப்போது மீட்டர் பொருத்துவதன் பின்னணியில் மின்சாரத்தை விலையாக்கும் நோக்கம் எதுவும் இல்லையென்றால், நீங்கள் மீட்டர் பொருத்துவதன் நோக்கம்தான் என்ன?
தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியில் மின்சாரம் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கிறது?
தமிழகத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் இது நீர்ப் பற்றாக்குறை மாநிலம். கேரளம், பஞ்சாப், உத்தர பிரதேசம் போல வளம் கொழிக்கும் மாநிலம் அல்ல. தாமிரபரணி நீங்கலாக ஏனைய நதிகள் அண்டை மாநிலங்களின் தயவோடு பிணைந்திருப்பவை. இதை உணர்ந்துதான் நிலத்தடி நீராதாரத்தைப் பயன்படுத்தி, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த நம்முடைய முன்னாள் முதல்வர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இன்றைக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகை உணவு உற்பத்தி மாநிலமாகத் தமிழ்நாடு திகழக் காரணம் நிலத்தடி நீராதாரம்தான். தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகையையே எடுத்துக்கொள்ளுங்கள்,. 10 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது; இதில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் மொத்த விவசாயமும் பாதிக்கப்படும்போது, பயனடையும் நிலங்களில் அளவு அதிகரிக்கும்; விவசாயிகள் நீரைப் பகிர்ந்துகொள்வதும் உண்டு. கட்டணமில்லா மின்சாரம்தான் இதையெல்லாம் சாத்தியப்படுத்துகிறது. வேளாண்மைக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் 9 மணி நேரம்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிலும் ஏராளமான தடங்கல்கள். இப்போதைய குறுக்கீடு விவசாயத்தை மொத்தமாகவே நாசமாக்கிவிடும்.
கரோனா காலகட்டத்தில் அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன?
நம்முடைய பல பலவீனங்களை கரோனா காலகட்டம் அம்பலப்படுத்திவிட்டது. இனியாவது அரசு மாற வேண்டும் என்று நினைக்கிறோம். கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தன்னுடைய பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். விவசாயத்தை அதன் பழைய செல்வாக்குக்கு மீட்டெடுக்காமல், கிராமங்களில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால், இந்த நெருக்கடியான சூழலிலும்கூட அரசு சோதிக்கவே செய்கிறது. கஷ்டமான சூழலிலும் உணவு உற்பத்தியைத் தொடர்கிறார்கள் விவசாயிகள். ஆனால், விளைபொருட்கள் விநியோகம், சந்தைப்படுத்தலில் அரசு எங்களுக்கு உதவியாக இல்லை. எவ்வளவு விளைபொருட்கள் வீணாகின்றன தெரியுமா? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் விவசாயிகள். கேட்டால், ‘கிடங்கு கட்டியிருக்கிறோம்; குளிர்சாதன வசதியுள்ள கிடங்கு, இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பார்கள். அந்தக் கிடங்குகள் எங்கே இருக்கின்றன என்று விவசாயிகள் யாருக்குமே தெரியாது. தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் இது; இந்தக் காவிரிப் படுகையில் எத்தனை கிடங்குகளை அமைத்திருக்கிறீர்கள்? கிராமத்துக்கு ஒன்றுகூட தேவைப்படலாம்; மாவட்டத்துக்கு எத்தனை அமைத்திருக்கிறீர்கள் என்று பட்டியல் கொடுங்களேன்! எல்லாம் வாய்ப்பந்தல்! விவசாயிகளையும் மதியுங்கள். எங்கள் குரலுக்கு மதிப்பளியுங்கள்!
Subscribe to:
Posts (Atom)