Monday, July 24, 2017

ஷிவ்குமார் பதல்வி: பஞ்சாபியின் முதல் நவீனக் கவிஞர்


ஆசை
(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 23-072017 அன்று, ஷிவ்குமார் பதல்வியின் பிறந்த நாளன்று வெளியான என் கட்டுரை)

சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம்உட்தா பஞ்சாப்’. அமித் திரிவேதியின் அற்புதமான இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்களும் பெரு வெற்றி அடைந்தன. குறிப்பாக, ‘இக்கு குடிஎன்ற பாடலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். பஞ்சாபி மொழியின் நவீனக் கவிதை முன்னோடிகளில் முக்கியமானவரான ஷிவ்குமார் பதல்வியின் (1936 –1973) பிரபலமான கவிதை இது. தற்போதுஉட்தா பஞ்சாப்திரைப்படம் மூலமாக அந்தப் பாடல் மேலும் புகழடைந்திருக்கிறது.

பிரிவினையின் குழந்தை

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இருக்கும், சியால்கோட்டில் 1936-ல் பிறந்தவர் ஷிவ்குமார் பதல்வி. தேசப் பிரிவினையால் இந்தியப் பகுதியில் உள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பட்டாலா நகரம் நோக்கி அவரது குடும்பம் நகர்ந்தது. இளம் வயதிலேயே பாடல்கள், நாடகம் போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. படிப்பை முடித்ததும் கணக்காளர் பணியில் சேர்ந்தாலும் அவரது மனம் கவிதையில்தான் தோய்ந்திருந்தது.

ஷிவ்குமார் பதல்வியின் முதல் தொகுப்பானபீதான் கா பராகா’ (மூடாக்கு நிறைய துயரங்கள்) 1960-ல் வெளியானது. என்றாலும், 1965-ல் வெளியானலூனாஎன்ற தொகுப்புதான் அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டுசேர்த்தது. அந்தத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதை 1967-ல் ஷிவ்குமார் பதல்வி பெறும்போது அவருக்கு வயது 31-தான். எனினும் அந்தப் புகழை நீண்ட நாட்கள் அவரால் அனுபவிக்க முடியவில்லை. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஷிவ்குமார் பதல்வி 1973-ல் தனது 37-வது வயதில் மரணமடைந்தார். மருத்துவமனையில் மரணத்தைச் சந்திக்க மாட்டேன் என்று கூறி தன் உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கி, அங்கேயே உயிர்விட்டார் ஷிவ்குமார்.

இளம் வயதிலேயே மறைந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களால் நவீன பஞ்சாபி இலக்கியத்தில் முக்கியமான இடத்தில் ஷிவ்குமார் வைக்கப்பட்டிருக்கிறார். பஞ்சாபி மொழியின் முதல் நவீனக் கவிஞராக மதிக்கப்படுபவர் அவர். நவீன வாழ்க்கையின் இருத்தலியல் சிக்கல்களைப் பற்றி அவரது கவிதைகள் பலவும் பேசினாலும் அவரது பிரதான பேசுபொருள் காதல். எக்காலத்திலும் பிரதான பேசுபொருள்களில் ஒன்றல்லவா அது!

இக்கு குடிஎன்ற கவிதை நாட்டுப்புறப் பாடல், கஜல், பாப் இசை, சினிமா பாடல் என்று பல்வேறு வடிவங்களில் பாடப்பட்ட சிறப்பைப் பெற்றது. ‘உட்தா பஞ்சாப்படத்தில் அந்தக் கவிதையின் ஒரு பகுதி மட்டுமே பாடலாக்கப்பட்டது. ஷிவ்குமார் பதல்வியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவுகூரும் விதத்தில்இக்கு குடிமுழுக் கவிதையின் மொழிபெயர்ப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது

பெண்ணொருத்தி

அவள் பேர் காதல்

அவளைக் காணவில்லை.

அலங்காரப் பூச்சற்ற அழகு

அழகென்றால் அழகு

அவளைக் காணவில்லை.


விண்ணுலக
அழகு,

மறுவில்லா மரியாள்,

அவள் சிரிப்பு, பூக்களின் உதிர்வு,

கஜல் பாடலே அவள் நடை.

நெகுநெகுவென்று ஊசியிலை மரமாக

இன்னும்

அனலாகாத இளந்தணலாகஆனாலும்

விழி பேசும் மொழி அறிவாள்.


என்றோ
தொலைந்துபோனாள்-

எனினும், நேற்று நடந்ததோ

இன்று நடந்ததோ

இப்போதுதான் நடக்கிறதோ

என்றல்லவா இருக்கிறது!

சற்று முன்தான் அவளிருந்தாள் என்னருகில்

பார்த்தால் காணவில்லை.

என்ன மாயம்? என்ன ஜாலம்?

குழம்பிப்போகிறேன்.


கடந்து
போகும் முகமெல்லாம்

என் கண்கள் துருவித் துருவி

அவளைத் தேடி அலைபாயும்.

மாலை வந்து வீதியில் கவிந்த நேரம்

ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும்

எழுந்துவரும் நறுமணம்,

அலைக்கழிப்பும் களைப்பும்

சோர்வும் சேர்ந்துகொள்ளும்;

ஓசையிடும் அந்தத் தனிமையில்

என்னை அரித்துத் தின்றது

அவள் இல்லை என்கிற வெறுமை.


காணாமல்
போனவளைக் காண்கிறேன்

கணமெல்லாம்

நாளெல்லாம்

இந்தக் கூட்டத்திலிருந்து

கதவுகளின் வெள்ளத்திலிருந்து

அவள் என்னைக் கூப்பிடுவாள்

நானும் அவளைக் காண்பேன்

அவளும் என்னைக் காண்பாள்

என்ற எதிர்பார்ப்பிலேயே உழல்கிறேன்.


இந்த
ஓசை வெள்ளத்திலிருந்து

யாரும் அழைக்கவில்லை என்னை,

யாரும் பார்க்கவில்லை என்னை.

பிறகு, ஏன்தானோ-

உள்மனதில், புகைவழியே பார்ப்பதுபோல்

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு கூட்டத்திலும்

அவளது உருவம் என்னைக் கடந்து செல்வது

அவளோ என் கண்களுக்கு அகப்படவில்லை.


தொலைந்துபோய்
நிற்கிறேன் அவள் முகத்துக்குள்

தொலைந்துபோய் நிற்பேன்

என்றென்றும் அதற்குள்

கரைந்துகொண்டே இருப்பேன் இந்த சோகத்தில்.

உருகிக்கொண்டே இருப்பேன் இந்தத் துயரத்தில்.


இறைஞ்சுகிறேன்
அவளைஎன்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளைஅவள்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

பார்ப்பவர்மீதெல்லாம் ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

இவ்வுலகின்மீது ஆணை

இறைஞ்சுகிறேன் அவளை

ஆண்டவன்மீது ஆணை

எங்கிருந்தாலும்

அவள் இதைப் படித்தாலோ,

அவள் காதில் இது விழுந்தாலோ

அவள் இருந்தாலும் இறந்துகொண்டிருந்தாலும்

வந்தென்னைச் சந்திக்க வேண்டுகிறேன்

உதறித்தள்ளிவிட வேண்டாம்

இந்த ஆத்மாவின் துடிப்பை.


இது
நடக்காதென்றால்

வாழ்வுமில்லை

கவிதையுமில்லை

எனக்கு!


பெண்ணொருத்தி

அவள் பேர் காதல்

அவளைக் காணவில்லை.

- (ஆங்கிலம் வழி மொழிபெயர்ப்பு)

பின்னிணைப்பு:
‘இக்கு குடி’ பாடலின் நான்கு இசை வடிவங்கள்...

‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தில்:
https://www.youtube.com/watch?v=ZbX_nlzv7uU


ஷிவ்குமார் பதல்வியின் குரலில்:
https://www.youtube.com/watch?v=orYbuEW21zQ


ஜக்ஜித் சிங் ஸிர்வியின் குரலில்...
https://www.youtube.com/watch?time_continue=3&v=hP21UFajuvo


ரபி ஷெர்கிலின் குரலில்...
https://www.youtube.com/watch?v=DAgGHe5fHWE

- ஆசைதொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in1 comment:

  1. ஷிவ்குமாரைப் பற்றிய அறிமுகம் இப்போதுதான் கிடைத்தது. ரசனையோடு கூடிய கவிதை.

    ReplyDelete