Wednesday, March 15, 2017

என்றும் காந்தி!- 28: காந்தி என்றொரு பத்திரிகையாளர் (பகுதி-1)




ஆசை

காந்தியின் வாழ்க்கையைப் பார்க்கும்போது பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று அவர் செயல்பட்ட வேகம்! தீவிரமான அரசியல் செயல்பாடுகள், பயணங்கள், பிரச்சாரம், ஆசிரம நிர்வாகம், சிறை வாழ்க்கை என்று முழுக்க முழுக்க தீவிரமான, பிரம்மாண்டமான செயல்பாடுகள் நிறைந்த அவரது வாழ்க்கையில் அவர் சுறுசுறுப்பான பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். அவர் எழுதிய பத்திரிகைகள், அவர் நிறுவி நடத்திய பத்திரிகைகள், முதுகெலும்பாய் இருந்து செயல்படுத்திய பத்திரிகைகள், ஆசிரியராக இருந்த பத்திரிகைகள், அவரது தாக்கத்தால் உருவான பத்திரிகைகள், அவரது தாக்கம் காணப்பட்ட பத்திரிகைகள் கணிசமானவை.

பத்திரிகை உலகுக்குள் அறிமுகம்

இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்குப் போகும்வரையில் தான் செய்தித்தாளே படித்ததில்லை என்கிறார் காந்தி. லண்டனுக்கு வந்த பிறகுதான் அவர் செய்தித்தாளே படிக்க ஆரம்பிக்கிறார். ‘டெய்லி டெலகிராஃப்’, ‘டெய்லி நியூஸ்போன்ற பத்திரிகைகளை மணிக்கணக்கில் காந்தி படித்திருக்கிறார். பத்திரிகையாளராக அவரது வாழ்க்கை தொடங்கியதும் அவரது இங்கிலாந்து நாட்களில்தான். அந்த நாட்களில்லண்டன் சைவ உணவாளர் சங்கத்துடன் காந்திக்கு நட்பு ஏற்பட்டது. அவர்கள் நடத்திவந்தவெஜிட்டேரியன்என்ற பத்திரிகையிலும் காந்தி எழுத ஆரம்பித்தார். இங்கிலாந்தில் இருந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ஒன்பது கட்டுரைகளை காந்தி எழுதினார். உணவுப் பழக்கம், இந்திய கலாச்சாரம், இந்திய பண்டிகைகள் போன்றவற்றைப் பற்றிய கட்டுரைகள் அவை. இப்படித்தான் பத்திரிகையாளர் காந்தி பிறக்கிறார்.

இந்தியன் ஒப்பீனியன்

தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற பிறகு காந்தி இந்தியர்களின் உரிமைகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் போராடியபோது இந்தியர்களுக்கென்று ஒரு பத்திரிகை இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தார். அதன் காரணமாகப் பிறந்ததுதான்இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகை. இதன் உரிமையாளராக மதன்ஜித் வியவஹாரிக் இருந்தார். பத்திரிகையின் முதல் ஆசிரியராக மன்சுக்லால் நஸர் இருந்தார். எனினும் பொருளாதார ரீதியிலும், கட்டுரைகள், பதிப்பு, அச்சாக்கம், சிந்தனை, ஒருங்கமைப்பு, உடலுழைப்பு என்று பல வகையிலும் காந்தியே அந்தப் பத்திரிகையின் முதுகெலும்பாக இருந்தார். ஜூன் மாதம் நான்காம் தேதி, 1903 அன்று இந்தப் பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. இந்தப் பத்திரிகையின் நோக்கங்கள்: 1. இந்தியச் சமூகத்தின் பல்வேறுதரப்பட்ட மக்களுக்கும் அவரவர் மொழிகளில் செய்திகள் கிடைக்க வழிசெய்தல், 2. அவர்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தல், 3. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர்களுக்குத் தகவல்கள் கொடுத்தல், 4. திறமைவாய்ந்த இந்தியர்களின், அதைப் போலவே ஐரோப்பியர்களின் எழுத்துக்களைப் பிரசுரித்தல், 5, சமூகம், தர்மம், அறிவுலகம் தொடர்பான விஷயங்களுக்கு இடம் அளித்தல்.

முதலில் ஆங்கிலம், குஜராத்தி, தமிழ், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் பத்திரிகை வெளியானது. நான்கு மொழிகளில் என்றால் தனித்தனியாக அல்ல. ஒரே இதழில் நான்கு மொழியில் செய்திகளும் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. சரியான பங்களிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இல்லாததால் தமிழ், இந்திப் பகுதிகள் சிறிது காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டன. ‘இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகை மொத்தம் எட்டுப் பக்கங்கள் கொண்டிருந்தது. காந்தியின்ஃபீனிக்ஸ் பண்ணையில் இருந்தவர்கள் பலரும் அந்தப் பத்திரிகை அச்சாக்கத்திலும் இன்ன பிற பணிகளிலும் பங்களிப்பு செய்தனர். எனினும் பிரதான பங்களிப்பு என்பது காந்தியுடையதே. ஆங்கிலம், குஜராத்தியில் கட்டுரைகள் எழுதுதல் (பெரும்பாலானவற்றில் காந்தியின் பெயர் இருக்காது), தலையங்கம் எழுதுதல் என்று தொடங்கி அச்சாக்கம், விநியோகம் என்று எல்லாவற்றிலும் அசாத்திய உழைப்பை காந்தி செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் நஷ்டத்தை ஈடுகட்ட காந்தி கணிசமான தொகையை அந்த இதழுக்காக அளித்தார். இந்த வகையில் அவருக்கு அப்போது ரூ. 26 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் மன்சுக்லால் நஸர், ஹெர்பெர்ட் கிட்சின், ஹென்றி போலக், ஆல்பெர்ட் வெஸ்ட் போன்றோர்இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகையின் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். 1920-ல் காந்தியின் மகன் மணிலால்இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 36 ஆண்டுகள் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மணிலால் 1956-ல் காலமானார். அதன் பிறகு மணிலாலின் மனைவி சுசிலா மஷ்ருவாலா அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். எனினும், 4 ஆகஸ்ட் 1961-ல்இந்திய ஒப்பீனியன்பத்திரிகை தன் நெடிய பயணத்தை முடித்துக்கொண்டது. ஆரம்ப காலங்களில் இந்தியர்களின் நலன்களைப் பிரதானப்படுத்திய அந்தப் பத்திரிகை பிற்காலத்தில் ஆப்பிரிக்கர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்தது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

யங் இந்தியா

1919-ல் தொடங்கப்பட்டயங் இந்தியாஇதழுக்கு காந்தி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்த இதழ் குஜராத்தி மொழியில்நவஜீவன்என்ற பெயரில் முதலில் வெளிவர ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்துதான்யங் இந்தியாஆங்கிலத்தில் வெளியானது. ‘இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகையைப் போலல்லாமல் இந்த பத்திரிகைகள் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஒரு கட்டத்தில் 40 ஆயிரம் பிரதிகள் வரைநவஜீவன்பத்திரிகை விற்றிருக்கிறது.

யங் இந்தியாவும்நவஜீவன்பத்திரிகையும் 1919-லிருந்து 1931வரை வெளிவந்தன. இந்த காலகட்டத்துக்குள் இந்தியாவில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் முதல் உப்பு சத்தியாகிரகம் வரை பல்வேறு நிகழ்வுகளையும் விஷயங்களையும் இந்தப் பத்திரிகைகள் பிரதிபலித்தன.

1922-ல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது சௌரி சௌரா என்ற இடத்தில் காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதில் சுமார் 20 காவலர்கள் உயிரிழந்தார்கள். அதையடுத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். அதைத் தொடர்ந்துயங் இந்தியாபத்திரிகையில் பிரிட்டிஷ் அரசைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார்.

அதிகாரத்தின் செந்நிற மதுவை அருந்தியும்,பலவீனமான இன மக்களைச் சுரண்டியும் போதையேறிய எந்த சாம்ராஜ்யமும் இவ்வுலகில் நீண்ட காலம் நீடித்ததாகச் சரித்திரம் இல்லை. நியாயமான கடவுளின் ஆட்சி என்பது இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பது உண்மையென்றால் இவ்வுலகில் உடல்ரீதியாகப் பலவீனப்பட்டிருக்கும் மனித இனங்கள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்டச் சுரண்டலையும் தொடர்ச்சியான, மூர்க்கமான பலப்பிரயோகத்தையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தபிரிட்டிஷ் சாம்ராஜ்யம்நீண்ட நாள் நீடித்திருக்காதுஎன்றெல்லாம் அவர் எழுதியது அவர் மீது தேசத்துரோக வழக்கு பாய்வதற்குக் காரணமானது. காந்திக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவரது உடல்நிலை காரணமாக 1924லிலேயே விடுவிக்கப்பட்டார். இப்படியாக, காந்திக்குள் இருந்த பத்திரிகையாளர் அவரைச் சிறைக்குள்ளும் தள்ளியிருக்கிறார்.

நவஜீவன்இதழில் தொடராக வெளியாகிப் புகழ்பெற்றதுதான்சத்தியசோதனை’. இதுயங் இந்தியாஇதழிலும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. மற்ற பத்திரிகைகளும் இந்தத் தொடரின் சில பகுதிகளை வெளியிட்டிருக்கின்றன. காந்தி காப்புரிமை என்பது அவசியமில்லை என்று கருதியதால் தன் எழுத்துக்களை வெளியிடுவதில் யாருக்கும் அவர் தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் தன் எழுத்துக்கள் திரிக்கப்படக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தார்.

- நன்றி: ‘தி இந்து’ (https://goo.gl/rpL587)


(நாளை…)

No comments:

Post a Comment