Monday, February 27, 2017

என்றும் காந்தி!-18: சம்பாரண் இறுதி வெற்றி



ஆசை

தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் தேவையான முன்னேற்பாடுகளில் இருந்த காந்திக்கு அவர் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது என்ற செய்தி கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், எந்தவிதத் தடங்கலும் இன்றி காந்தி தனது விசாரணையை நடத்திக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்றும் காந்திக்கு உறுதியளிக்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சி. இந்தியா அளவில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று காந்தி கருதினார்.

ஏப்ரல் 21 அன்று காந்தி கைது செய்யப்படுவார் என்ற எண்ணத்தில் பெருந்திரளாகத் திரண்டு வந்திருந்த விவசாயிகளுக்கு காந்தி மீதான வழக்கு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது என்ற செய்தி அளவில்லாத உற்சாகத்தைக் கொடுத்தது. இந்தச் செய்தி சபர்மதி ஆசிரமத்துக்கும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்த காந்தியின் நண்பர்களுக்கு இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்தது.

விவசாயிகளின் கூற்றுகளைப் பதிவுசெய்யும் பணி மோத்திஹரியில் தொடர்ந்து நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை காந்தியிடமும் காந்தியின் உதவியாளர்களிடம் பதிவுசெய்தனர். ஒரு கட்டத்தில் போதுமான தரவுகள் கிடைத்துவிட்டாலும் அங்கே வந்து தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டுப் போவது அந்த மக்களுக்கு ஆறுதலைத் தரும் என்பதால் கூற்றுகளைப் பதிவுசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்றது. காந்தியின் உதவியாளர்கள் இருந்தாலும் பலரும் தங்கள் மனக்குமுறலை காந்தியிடம் கொட்டினால்தான் ஆறுதல் ஏற்படும் என்ற எண்ணத்தில் எல்லோரும் காந்தியிடம் பேச வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். அது நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே காந்தியிடம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

குறைகேட்பு சுற்றுப்பயணம் 
மோத்திஹரியில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் உள்ள விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று காந்தி சுற்றுப்பயணம் புறப்பட்டார். அவரது பயணத்தின்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டனர்.

சம்பாரண் வரலாற்றில் அப்படியொரு வரவேற்பு அதற்கு முன்பும் சரி பின்பும் சரி யாருக்கும் கிடைத்திருக்காது. பேட்டையா என்று ஊரில் வந்து காந்தி இறங்கியபோது அவரை அழைத்துச் செல்ல குதிரை வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அங்குள்ள விவசாயிகள் ஆர்வ மிகுதி காரணமாகக் குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாங்களே வண்டியை இழுக்க முயன்றனர். அப்படிச் செய்தால் தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போய்விடுவேன் என்று காந்தி மிரட்டிய பிறகு குதிரைகள் மீண்டும் பூட்டப்பட்டன.

காந்தியை சம்பாரணுக்கு அழைத்து வந்த ராஜ்குமார் சுக்லாவின் வீடு பேட்டையாவின் சுற்றுப்புறத்தில்தான் இருந்தது. ஆங்கிலேய தொழிற்சாலை முதலாளியின் ஆட்கள் சுக்லாவின் வீட்டைச் சூறையாடிய செய்தியை அறிந்து காந்தி அங்கே போய்ப் பார்த்து சுக்லாவுக்கு ஆறுதல் கூறினார். அந்த ஊரில் உள்ள விவசாயிகளின் குறைகள் கேட்டுப் பதிவுசெய்யப்பட்டன. இப்படிப் பல ஊர்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளின் கூற்றுகளும் அந்தப் பகுதியின் நிலைமைகளும் பதிவுசெய்யப்பட்டன.

விசாரணைக் குழு
காந்தியின் சுற்றுப்பயணத்தின்போது லெஃப்டினெண்ட் கவர்னர் சர் எட்வர்டு கெய்ட் என்பவர் தன்னை ராஞ்சியில் ஜூன் 4 அன்று சந்திக்கும்படி காந்திக்கு சம்மன் அனுப்பினார். ராஞ்சியிலிருந்து திரும்ப முடியாமல் காந்தி தடுத்துவைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. அப்படி நடக்கும் பட்சத்தில் முஷருல் ஹக் அல்லது மாளவியா இருவரில் ஒருவர் போராட்டத்துக்குத் தலைமை வகித்து முன்செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஜூன் 4 அன்று லெஃப்டினெண்ட் கவர்னரையும் அவரது கவுன்சிலின் உறுப்பினர்களையும் காந்தி சந்தித்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்த சந்திப்புகளின் இறுதியில் ஒரு விசாரணைக் குழு அமைப்பது என்று முடிவு எட்டப்பட்டது. அந்த விசாரணைக் குழுவில் காந்தியும் ஒரு பிரதிநிதியாக இருப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டது. காந்தியின் மீதான வழக்கு திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டதும் விவசாயிகளிடம் தடையின்று அவர் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதும் சம்பாரண் போராட்டத்தின் முதல் கட்ட வெற்றி என்றால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது இரண்டாம் கட்ட வெற்றி!

ஜூன் 13 அன்று விசாரணைக் குழு அறிவிக்கப்பட்டது. மத்திய மாகாணங்களின் ஆணையராக இருந்த எஃப்.ஜி. ஸ்லை அந்தக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஜூலை 15 அன்று அந்தக் குழு கூடும் என்றும் மூன்று மாதங்களுக்குள் அந்தக் குழு தனது பணிகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

குழு அமைக்கப்பட்டதால் ஆதாரங்களைப் பதிவுசெய்யும் பணி ஜூன் 12 அன்று நிறுத்தப்பட்டது. ஜூலை 17 அன்று சாட்சியங்களை விசாரிக்கும் பணியை அந்தக் குழு பேட்டையாவில் தொடங்கியது. பேட்டையாவில் மொத்தம் 5 அமர்வுகள் நடைபெற்றன. விசாரணைக் குழுவின் ஆறாவது, ஏழாவது அமர்வுகள் ஜூலை 25 அன்று மோத்திஹரியில் நடைபெற்றது. அதற்குப் பிறகு பேட்டையாவுக்கு விசாரணைக் குழு திரும்பியது. ஆகஸ்ட் 14 அன்று பேட்டையாவில் விசாரணை முடிவுக்கு வந்தது. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பெறப்பட்ட கூற்றுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் விசாரணைக் குழுவிடம் காந்தி முன்வைத்தார். அடுத்த விசாரணை அமர்வு செப்டம்பர் இறுதியில் ராஞ்சியில் நடைபெறும் என்று முடிவுசெய்யப்பட்டது. இதற்கிடையில் ஒரு மாதம் அகமாதாபாதில் உள்ள தனது ஆசிரமத்துக்கு காந்தி சென்றுவந்தார். அந்த சமயத்தில் சம்பாரண் பணிகளுக்கு ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார்.

இறுதி வெற்றி!

செப்டம்பர் இறுதியில் காந்தி ராஞ்சிக்குத் திரும்பி வந்தார். விசாரணைக் குழுவின் வாத விவாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 3 அன்று இறுதி அறிக்கை ஒருமனதாக சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் கிட்டத்தட்ட அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அரசு அக்டோபர் 18-ல் ஏற்றுக்கொண்டது. நவம்பர் 29-ல்சம்பாரண் விவசாயிகள் மசோதாமுன்வைக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து, மே-1, 1918 அன்று அந்த மசோதாவுக்கு லெஃப்டினெண்ட் கவர்னர் எட்வர்டு கெய்ட் ஒப்புதல் அளித்தார். இப்படியாக இந்தியாவில் காந்தியின் முதல் சத்தியாகிரகம் மகத்தான வெற்றியைப் பெற்றது. சந்தீப் பரத்வாஜ் என்பவர்தி இந்துஆங்கில நாளிதழில் சமீபத்தில் எழுதிய கட்டுரையொன்றில் சம்பாரண் வெற்றியைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: "எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அணிவகுப்புப் போராட்டம், தோட்ட முதலாளிகளுக்கு எதிராக கோபாவேசமான உரை, பத்திரிகைகளில் அரசை விமர்சித்துத் தலையங்கம் போன்றவை ஒன்றுகூட இல்லாமல் இந்தப் போராட்டத்தில் காந்தி வெற்றிபெற்றார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்" (https://goo.gl/TPzBQe). ஆம், இந்தியாவின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் என்பது உண்மையில் வெளிப்படையான போராட்டம் ஏதும் நடைபெறாத போராட்டம்தான்! கத்தியின்றி ரத்தமின்றி மட்டுமல்ல போராட்டம் ஏதும் இன்றியும் கிடைத்த வெற்றி இது. இது போன்ற போராட்டங்கள் உலக வரலாற்றிலேயே மிகவும் அரிது.

வெற்றிதான் கிடைத்துவிட்டதே என்று காந்தி ஓய்ந்துவிடவில்லை. கிடைத்த வெற்றியைவிட அதற்கு நீடித்த பலன் இருக்க வேண்டும் என்பதில்தான் காந்தி எப்போதும் கவனம் செலுத்துவார். சம்பாரண் விவசாயிகளிடத்தில் கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாததுதான் அவர்கள் வஞ்சிக்கப்பட்டதற்குக் காரணம் என்பதைக் காந்தி கண்டறிந்தார்.

இனியும் அவர்கள் அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், சம்பாரணில் காந்தி ஏற்படுத்திய விளைவு எப்படிப்பட்டது என்பதையும் இன்று சம்பாரண் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம். சம்பாரண் போராட்டம் அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்!

-          (நாளை..)

-          தி இந்து’ (https://goo.gl/yCJnnl)

No comments:

Post a Comment