Saturday, April 9, 2016

அஸிமோவுடன் ஓர் அறிவியல் சவாரி!


                     ஐசக் அஸிமோவ்

ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் 09-04-2016 அன்று வெளியான நூல் விமர்சனத்தின் முழு வடிவம் இது.)     
  

அமெரிக்க எழுத்தாளரான ஐசக் அஸிமோவ் (1920-1994) எழுத்துலகம் மிகவும் பிரம்மாண்டமானது. அவர் எழுதிய, தொகுத்த புத்தகங்களின் பட்டியல் மட்டும் ஐநூறைத் தாண்டும். இதில் அறிவியல் புனைகதை, புதிர்க் கதைகள், அறிவியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பைபிள் குறித்த நூல்கள் என்று பல்வேறு வகைகளில் கிட்டத்தட்ட பிரபஞ்சத்துக்கு உட்பட்ட அனைத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். 500 புத்தகங்களுக்கு மேல் எழுதிய சாதனையை ஐசக் அஸிமோவைப் போலப் பலரும் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமாகவும் தரமாகவும் எழுதிய வேறொரு எழுத்தாளரைக் காண்பது அரிது.

ஐசக் அஸிமோவின் சாதனைகளில் மிகவும் முக்கியமானது அறிவியலை மக்களிடம் எளிதில் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான். வழக்கமாக, நிபுணர்களின் எழுத்து நிபுணர்களின் வட்டத்தைத் தாண்டிச்செல்வது அரிது. உயிர்வேதியியல் பேராசிரியராக இருந்தாலும் ஐசக் அஸிமோவின் எழுத்தும் மனதும் பாமரர்களுக்கு நெருக்கமானது. அதனால்தான், அவருடைய புத்தகங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் உள்ள, அறிவியல் தாகமுள்ள சாதாரண மக்களால் கொண்டாடப்படுகின்றன.


ஐசக் அஸிமோவ் அளவுக்குச் சொல்ல முடியாதென்றாலும் நம் தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர் எழுத்தாளர் சுஜாதா. வல்லுநராக இருந்துகொண்டு, சாதாரண மக்களை நோக்கி அவர்களின் மொழியிலேயே அறிவியலை எடுத்துச் சென்றவர் அவர்.    

வெவ்வேறு தலைப்பில் அமைந்த ஐசக் அஸிமோவின் அறிவியல் கட்டுரைகள் ‘அறிவியல் அறிவோம்’ என்ற தலைப்பில் 16 சிறு புத்தகங்களாக மொழிபெயர்க்கப்பட்டு, மலிவு விலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பில் இந்த சிறு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘மொழிபெயர்ப்பு’ என்று குறிப்பிடாமல் ‘மறுகூறல்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட அளவுக்கு சுதந்திரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். அறிவியலை அறிமுகப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட ஒரு மொழியின் வாசகர்களை நோக்கி எழுதப்பட்டதை இன்னொரு மொழிக்குக் கொண்டுவரும்போது இது அவசியம்தான்.

இந்தப் பதினாறு சிறு நூல்களில் பிரபஞ்சத்தையே ஐசக் அஸிமோவ் உள்ளடக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அணு என்றால் என்ன, அண்டம், உயிர்களின் தோற்றம், பரிணாமம், மின்சாரம், சூரிய ஆற்றல், ரத்தம், ஆழ்கடல், வைட்டமின்கள், எண்ணெய்கள் என்று அபாரமான சவாரி செய்திருக்கிறார் ஐசக் அஸிமோவ்.

ஒவ்வொரு விஷயத்தையும் துறையையும் பற்றி எழுதும்போது சமீப காலம் வரை உள்ள மேம்பட்ட தரவுகளை மட்டும் கொடுப்பதோடு அஸிமோவ் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும், விஷயத்துக்கும் உள்ள ஆதிவரலாற்றிலிருந்தே தொடங்குகிறார். அறிவியலைப் பொறுத்தவரை தொடங்கும் இடம் வேறாகவும் வந்துசேரும் இடம் வேறாகவும் இருந்தாலும் ஒரு தொடக்கம் என்பது முக்கியமல்லவா! அந்த வகையில் தொடக்கம் தவறாக இருந்தாலும் அந்த விஷயத்தின், பொருளின் பரிணாம வரலாற்றில் அதுவும் முக்கியமானதே. அணுவைப் பற்றி கி.மு. 450-ல் லெசிப்பஸ் என்ற கிரேக்க ஞானி சொன்னதும் இன்றைய துகள் இயற்பியல் சொன்னதற்கும் எவ்வளவு வேறுபாடுகள்! ஆனாலும், அணு என்ற ஒன்றையே யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த காலத்தில் அப்படி ஒன்று இருக்கக்கூடும் என்று லெசிப்பஸ் முன்வைத்த யூகம் இன்று அணுவை நாம் புரிந்துவைத்திருப்பதற்கு அடித்தளம் இல்லையா? அறிவின் தற்போதைய நிலை மட்டுமல்ல அறிவின் வரலாறு சேர்ந்ததே முழுமையான அறிவு. அந்த முழுமையான அறிவை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற அஸிமோவின் ஏக்கம் இந்தப் புத்தகங்களில் தெரிகிறது.

சூரியன், கடல்கள், பூமி, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றிய ஆரம்ப கால ஊகங்களெல்லாம் இன்று மூடநம்பிக்கைகளாகவும் குழந்தைக் கதைகளாகவும் ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், மனிதர்களின் அறிவுப் பயணம் அது போன்ற கற்பனைகளை ஆதாரமாகக் கொண்டதே. போகப் போக வேறு விதமான கற்பனைகள், விரிந்துகொண்டே போகும் பிரம்மாண்டக் கற்பனைகள் என்று இன்று அறிவியல் வந்து நிற்கும் இடமே கற்பனைகளை ஆதாரமாகக் கொண்டதே. ஆதிகால நம்பிக்கைக் கற்பனைகளையும் தற்கால அறிவியல் கற்பனைகளையும் அஸிமோவ் முன்வைக்கும்போது மானுட அறிவு வளர்ச்சிக்குக் கற்பனை எவ்வளவு இன்றியமையாதது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 

எளிமையும், அளவும் இந்த மொழிபெயர்ப்புச் சிறு நூல்களின் பலம் என்று சொல்ல வேண்டும். சுவாரஸ்மாகவே மறுகூறல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற பெரும் பணிகளை முன்னெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றே கூற வேண்டும். மூல மொழிக் கட்டுரைகளில் இடம்பெற்ற ஒட்டுமொத்தக் கலைச்சொற்களையும் முதலில் வரிசைப்படுத்தி, அவற்றுக்கு இன்று தமிழில் வழங்கப்படும் எளிதான கலைச்சொற்களைக் கண்டறிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, அனைத்துச் சிறுநூல்களிலும் ஒரே விதத்தில் அந்தக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை இங்கே பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, அண்டம், காலக்ஸி, பிரபஞ்சம் என்ற சொற்களெல்லாம் சரியாக இனம்பிரிக்கப்படாமல் ஒரு சிறு நூலில் வருகிறது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமாகச் சொல்லப்படும் ‘பிக் பேங்’ (Big Bang) என்பதற்குத் தமிழில் ‘பெருவெடிப்பு’ என்ற சொல் வந்து, நிலைபெற்றுப் பல காலமாக ஆகிவிட்டது. ஆனால், அண்டத்தைப் பற்றிய ஒரு சிறுநூலில் ‘பெரு மோதல்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் மோதல் எங்கே வந்தது? பிரபஞ்சம் மோதலில் உருவாகவில்லை, வெடிப்பில்தான் உருவானது. ஹீமோகுரோம் (hemochrome) என்பதற்கு ‘மறுகூறல்’ செய்பவர் தரும் சொல் நம்மை அதிரவைக்கிறது: ‘நிறக்கிருமி’. ‘ரத்தநிறமி’ என்ற சொல் அவருக்குப் பிடிபடவில்லை. விஷயம் தெரிந்த யாரிடமாவது ஒருமுறை கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லியிருக்க வேண்டாமா?

அதுபோலவே, குழப்பமான தமிழ் நடை, இலக்கணக் குழப்பங்கள் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. ‘எனினும் சில பதிப்பகங்கள் அவரின் இறப்புக்குப் பின் கிடைக்கப்பட்டன’, ‘இந்த விகிதத்தில் இரத்தத்தை உபயோகப்படுத்தப்பட்டுப் பின் உருவாக்கப்படுவது கடினம்’, இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

முதல் முறையாக ஐசக் அஸிமோவின் எழுத்துக்கள் இவ்வளவு பெரிய அளவில் தமிழில் கொண்டுவரப்பட்டதற்கு நாம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு முக்கியமான பணிக்கு உரிய பொறுப்புணர்வு இந்தப் புத்தகங்களில் அதிகம் தென்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயம். சில சிறு நூல்கள் நன்றாகவும் சில சிறு நூல்கள் மோசமாகவும் ‘மறுகூறல்’ செய்யப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட குறைகள் காரணமாக இந்த நூல் தொகுப்பை வாசகர்களுக்குத் தயக்கத்துடனே பரிந்துரைக்க வேண்டிவந்துவிட்டது.   


அறிவியல் அறிவோம் 
(‘அணுவைப் பற்றி எப்படி அறிந்தாய்?’ முதல் ‘ஒளிச்சேர்க்கை’ வரை 16 சிறு புத்தகங்கள்) 
ஐசக் அஸிமோவ் 
(பத்துக்கும் மேற்பட்டோரின் மொழியாக்கத்தில்) 
எல்லா நூல்களும் சேர்த்து விலை: ரூ. 410 
வெளியீடு: யுரேகா புக்ஸ், சென்னை-14. 

தொலைபேசி: 044 - 2860 1278 
மின்னஞ்சல்: folk.lokesh@gmail.com







- நன்றி: ‘தி இந்து’, ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/T37P8l

No comments:

Post a Comment