Monday, August 4, 2014

இந்த தினத்தின் பெயர்

ஆசை

எருக்கஞ்செடியில்
தேன்சிட்டு
பார்த்துக்கொண்டிருந்த
உன்னிடம் கேட்டேன்

‘இன்றைக்கு
என்ன கிழமை?’
ஏதோ நினைவில்
‘தேன்சிட்டு’ என்றாய்.
ஆம்
நீ சொன்னது சரிதான்
இந்த தினத்தின் பெயர்
தேன்சிட்டுதான்.
நாளைய தினத்தை இப்போதே அழைக்கிறேன்
குக்குறுவான் தினமென்று.
வாரத்தில் ஒரு நாள்
வாலாட்டி தினமும் இருக்க வேண்டும் என்று
நீ வைக்கும் வேண்டுகோளைக்
கொண்டலாத்தியும் கொண்டைக்குருவியும்
எதிர்க்காமல் இருக்க வேண்டும்.
பைனாகுலரிலிருந்து கையையும்
கண்ணையும் எடுக்காமலே கேட்கிறாய்
‘எந்த நாள் எந்தப் பறவையின் நாள்
என்று எப்படி அறிவது?’ என்று.
‘நீ கண் விழிக்கும்போது எந்தப் பறவை
உன்னிடமிருந்து அந்த தினத்தைச்
திருடிச் செல்கிறதோ
அந்தப் பறவையின் பெயரையே
அந்த தினத்துக்கு வைத்துவிடு’ என்றேன்.
‘அப்படியென்றால் உனக்கென்றொரு பறவை தினம்
எனக்கென்றொரு பறவை தினமென்று
நாம் தனித்தனியாகவே பெயர்வைப்போம் மாமா’
என்கிறாய்
இன்று காலை
எனக்கு நீ கற்றுக்கொடுத்தாய்
கிழமைகளுக்கு
உண்மையாகப் பெயர் வைக்க.
அது மட்டுமல்லாமல்
இன்று காலை
கிழமைகளுக்கு நீ கற்றுக்கொடுத்தாய்
உண்மையாகப் பறக்க…

                     - ‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கவிதையைப் படிக்க: இந்த தினத்தின் பெயர்

No comments:

Post a Comment