Thursday, May 16, 2013

உமாசங்கருக்கு ஒரு கடிதம்


                                                          படம்: நன்றி: தி ஹிந்து  

ஆசை
      
மதிப்புக்கும் அன்புக்கும் உரிய திரு. உமாசங்கர் இ.ஆ.ப. அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் ஆசைத்தம்பி, சொந்த ஊர் மன்னார்குடி. உங்களை நான் இரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன்; நீங்கள் திருவாரூர் ஆட்சியராக இருந்தபோது 'கார்கில் நிவாரண நிதி' அளிப்பதற்காகக் கல்லூரி சார்பில் திருவாரூர் வந்தபோது ஒரு முறை; அதற்குப் பிறகு நான் படித்துக்கொண்டிருந்த மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரிக்கு நீங்கள் வந்தபோது  ஒரு முறை. அப்போதே நீங்கள் அதிரடியான நடவடிக்கைகளுக்காகப் பேசப்படுபவராக இருந்தீர்கள். ஆனால், நான் நம்பவில்லை.  நீங்கள் என்றில்லை, பொதுவாகவே நான் எந்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்புவதில்லை.

     தொடக்கத்தில் நீங்கள் அதிமுகவை ஆட்டம் காண வைத்ததும் தொடர்ந்து திமுக உங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததும் உங்களை திமுக சார்பானவராகவே பார்க்கச் செய்தன. பலரையும்போல நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் நீண்ட காலம். ஆனால்,  சமீபத்திய நிகழ்வுகள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றினூடே வெளிப்படும் உங்களுடைய ஆன்ம பலம் ஆகியவை ஒரு நேர்மையாளனை எனக்கு  அடையாளம் காட்டுகின்றன.
    அதிகாரம், பதவி என்பவை மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், அவையெல்லாம் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் முற்றிலுமாக அவர்களின் நலன்களுக்கானவையாக மட்டும் ஆகிவிட்டன. நேர்மையாகச் செயல்படுவது என்பது நம் சமூகத்தில் முட்டாள்தனமான, பைத்தியகாரத்தனமான செயல்பாடாக மாறிவிட்டது. அரசியலுக்கு அடிபணிதல் என்பது வழிபாடாகிவிட்டது.
    இத்தகைய சூழலில், உங்களுடைய செயல்பாடு எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது. நீங்கள் நினைத்திருந்தால் அரசியல்வாதிகளுக்குப் பணிந்திருக்கலாம். வேண்டிய பதவியையும் வசதிகளையும் பெற்றிருக்கலாம். ஆனால்,  இழப்பும் தோல்வியும் ஏற்படும் என்று தெரிந்தே நீங்கள் அரசியல்வாதிகளின் நேர்மையற்ற செயல்பாடுகளுக்கு எதிராக நின்றிருக்கிறீர்கள். இழப்புகளை எதிர்கொள்கிறீர்கள். மனம் தளராதீர்கள் உமாசங்கர். நீங்கள் எவ்வளவோ இழந்திருக்கலாம். ஆனால்,  விலை மதிப்பற்ற ஆன்ம பலத்தை அவற்றின் வாயிலாகப் பெற்றிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஆன்ம பலத்துக்காக இன்னும் ஆயிரம் மடங்கு நேர்மையாக நடந்துகொள்ளலாம் என்ற ஒரு தன்னம்பிக்கை உங்களால் என்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
       நீங்கள் யாரைப் போல் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டால், இன்றைய இளைஞர்களில் காந்தியின் பெயரை எத்தனைப் பேர் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ரத்தன் டாட்டாக்கள், அஸிஸ் பிரேம்ஜிகள், அமிதாப்  பச்சன்கள், இந்திரா நூயிகளுக்கான உலகம் இது. அறம், தர்மம், நேர்மை... இந்த  வார்த்தைகள் எல்லாம் வாழ்க்கைக்கு முற்றிலும் அப்பாற்பட்டவையாகவே மாறிக்கொண்டிருக்கின்றன.
       இதுபோன்ற சூழலில் உங்களைப் போன்றவர்களின் செயல்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கின்றன. உங்களுக்கு காந்தியைப் பிடிக்குமா, பிடிக்காதா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் உங்களை ஒரு காந்தியவாதியாகவே பார்க்கிறேன். சிலருக்கு நான் இப்படி எழுதுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், நாம் வாழும் காலகட்டத்தில் இதுபோன்ற அரிதான செயல்பாடுகளின் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியும்.
    நீங்கள் மிகவும் நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டவர் என்பதை நான் அறிவேன். ஆனால், நான் அப்படியல்ல. இந்த வாழ்க்கை மிகவும் அநீதியானது என்று நம்புபவன் நான். அப்படிப்பட்ட எனக்கே உங்களின் செயல்பாடு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எனது பிறந்த நாளாகிய இன்று (18 /09) நான் செய்யும் முதல் காரியம் உங்களுக்குக் கடிதம் எழுதுவதுதான். நேர்மையின் ஆன்ம பலம் என்ற அற்புதமான விஷயத்துக்காக ஆசைப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நான் இன்று மேலும் உறுதியாக என்னுள் விதைக்கிறேன்.
    உங்களுக்கு இன்னும் பல துயரங்கள், இடையூறுகள் நேரிடும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து மன உறுதியுடன் இறுதிவரை நீங்கள் நேர்மையாகச் செயல்பட வேண்டும், அப்படிச் செயல்பட்டு என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கத்துடன்...
தே. ஆசைத்தம்பி.
(2010ஆம் ஆண்டில் 'தமிழ் இன்று'  இணைய இதழில் வெளிவந்த கடிதம்)
 

No comments:

Post a Comment