Monday, June 4, 2018

அவரவருக்கான இசை! அவரவருக்கான ராஜா!




ஆசை
(இளையராஜா-75-ஐ முன்னிட்டு 04-06-18 அன்று ‘தி இந்து’ தமிழில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது)

நெடுந்தொலைவு போவது என்றால் பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் வசதியானது மட்டுமல்ல அழகானதும் கூட. ஒருமுறை சென்னையிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் விதவிதமான நிலங்களை அந்த ரயில் பயணம் என் கண்களுக்குள் தொடர்ச்சியாகக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தது. பேருந்துகள் பெரும்பாலும் ஊர்களுக்கு உள்ளே செல்பவை. ரயில்களோ ஊர்களின் புறப்பகுதி வழியே செல்பவை. பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் கொல்லைப்புறம் வழியாகச் செல்பவை என்று சொல்லலாம். அப்படிச் செல்லும்போது எத்தனையோ விதமான மனிதர்கள், கிழிந்த உடைகள், அழுக்கு உடைகள், வெறித்த பார்வை, ஒவ்வொரு ஊரிலும் ரயிலுக்கு டாட்டா காட்டும் குழந்தைகள்… கூடவே, ஒவ்வொரு ஊரின் நிறத்தையும் காட்டும் வயல்கள், தரிசு நிலங்கள், இடையிடையே காடுகள், குன்றுகள், மலைப்பரப்புகள். மனிதர்கள் தென்படாவிட்டாலும் அந்த நிலப்பரப்புகள் ஏதேதோ உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டும், நம்மிடமிருந்து உணர்வுகளை எழுப்பிக்கொண்டும் இருக்கும். அங்கே நாம் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் அந்தக் காட்சிகள் ஏற்படுத்தும். இங்கே இருந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மை அங்கேயும் இருக்க வைப்பது அந்தக் காட்சிகளின் தன்மை. ரயில் பயணத்தின் தன்மை. ஆகவேதான், இளையராஜாவின் இசையை நீண்ட ரயில் பயணத்துடன் ஒப்பிடவே நான் விரும்புவேன். நம் மனதுக்குள் அவருடைய இசை காட்டும் நிலப்பரப்புகள், எழுப்பும் உணர்வுகள், கற்பனைகள், இங்கே இருக்கும் நம்மை அங்கே இருக்க வைத்தல் என்று எல்லாவற்றையும் வைத்துத்தான் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

இளையராஜாவின் இசையைப் பொறுத்தவரை அவருடைய மகத்தான சாதனையாக அவரின் இசை நுணுக்கங்கள், இனிமை, ராகங்கள், பாடகர் தேர்வு போன்றவற்றையல்ல, நம் மனதில் அவர் இசை எழுப்பும் கற்பனையைத்தான் பிரதானமான சாதனையாகச் சொல்வேன். ஏனென்றால், அவருடைய இசையில் வெளிப்படும் தொழில்நுட்பம் கேட்கும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால், அவர் இசை நம் மனதில் எழுப்பும் உணர்வுகளும் கற்பனைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்கேயான நினைவுகளை, கற்பனைகளை, உலகைப் படைப்பதற்கான இடைவெளிகளைக் கொண்டிருக்கும் இசை அவருடையது. இடைவெளி என்றால் ஒரு இசைக்கு இடையே நிசப்தத்தைத் தவழ விடுவது என்ற அர்த்தத்தில் அல்ல. இழையோடும் அந்த இசை நம் மனதை நிரப்புவதுபோல் அதற்குள்ளும் நம் மனதை நாம் நிரப்பிக்கொள்ளும் வகையிலான இடைவெளி. அதாவது, அங்கே இளையராஜா இசை நிகழ்த்துபவராகவும் நாம் அதைப் பெற்றுக்கொள்பவர்களாகவும் இல்லாமல் இளையராஜாவுடன் சேர்ந்து நாமும் இசை நிகழ்த்துகிறோம். இசைக்குறிப்புகள் அவருடையவை. அவற்றில் நம் மனதும் அதன் கற்பனைகளும் போய் உட்கார்ந்துகொள்கின்றன. ஒரே இளையராஜா தன் இசை வழியாக அவரவருக்கான இளையராஜாவைத் தருவதுதான் அவருடைய மகத்தான சாதனையாக நான் கருதுகிறேன்.

வாசகருக்குள் விதவிதமான கற்பனைகளைத் தருவதற்கு இடமளிக்கும் எழுத்துக்களை உயர்ந்த எழுத்துக்களாக இலக்கியத்துக்குள் கருதுவதுண்டு. இசையிலும் அதுபோல்தான், மகத்தான இசைக்கலைஞர்கள் பலரும் இப்படிச் செய்வதுண்டுதான். ஆனால், நம் மண்ணில் நமக்கு அதை விதவிதமாகச் செய்துக்காட்டியவர் இளையராஜாதான். அந்த அளவுக்கு இசை கேட்பவரின் படைப்பூக்கத்துக்கான இடைவெளியை உருவாக்கித் தந்தவர்.

அந்த வகையில் 1975-லிருந்து 1981-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் இளையராஜா அளித்த விருந்துதான் மகத்தானது என்று கருதுகிறேன். இதனால் அதற்குப் பிறகு அவர் அளித்தவை நல்ல இசை இல்லை என்று அர்த்தமாகாது. அந்தக் காலகட்டத்தைவிட நேர்த்தியான இசையை அதற்குப் பிறகான காலகட்டத்தில் அவர் தந்திருக்கிறார். கணக்கற்ற இனிமையான பாடல்கள். பிரமிக்க வைக்கும் இசைக்கோலம். ஆனால், 81-க்கு முந்தைய காலத்தின் பிசிறடிக்கும், நேர்த்தியாக இல்லாததுபோல் வெளித்தோற்றத்துக்குத் தெரியும், ஆனால் முழுக்கவும் ரசிகருக்கான கற்பனை சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இசை 81-க்குப் பிறகு குறைவுதான்.

எடுத்துக்காட்டாக, ‘உதிரிப்பூக்கள்’ (1979) படத்தில் வரும் ‘அழகிய கண்ணே’ பாடலையும் ‘கோழி கூவுது’ (1982) படத்தில் வரும் ‘ஏதோ மோகம்’ பாடலையும் தேர்ந்த இசை ரசிகரிடம் போட்டுக்காட்டி இசையமைப்பில் சிறந்த பாடல் எது என்றால் துல்லியமான ஒலி, நேர்த்தியான, இனிமையான இசை போன்றவற்றின் அடிப்படையில் அவர் நிச்சயமாக ‘ஏதோ மோகம்’ பாடலைத்தான் சுட்டிக்காட்டுவார். ஆனால், ‘அழகிய கண்ணே’ பாடல் நமக்குத் தரும் கற்பனைகளுடன் ஒப்பிட்டால் உண்மையில் ‘ஏதோ மோகம்’ பாட்டு சாதாரணமானதுதான். மிகச் சாதாரணமான வரிகளைக் கொண்டது ‘அழகிய கண்ணே’ பாடல். ஆனால், ராஜாவின் இசைக்குள் அந்த வரிகள் போய் உட்கார்ந்த பிறகு வரிகளை ஒரு சம்பிரதாயத்துக்கு நாம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தைப் பொருட்படுத்தாமல் வேறொரு பிராந்தியத்துக்குப் பயணப்படுகிறோம். இந்தப் பாடல் முழுவதும் விசாலமான மேட்டுநிலத்தை என் மனதில் கட்டியெழுப்பும். அழகிய காட்சி, ஆனால் அதில் இழையோடும் சோகம். உங்களுக்கு இந்தப் பாடல் வேறொரு நிலக்காட்சியையும் வேறொரு உணர்வையும் தரலாம். அதுதான் அதன் தனித்துவம்.

கல்லூரிக் காலகட்டத்தில் எங்கள் நண்பர்கள் குழுவுக்குள்ளே இளையராஜா இசை சார்ந்து இரண்டு பிரிவுகள் உண்டு. ‘மெட்டி ஒலி காற்றோடு’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’, ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’, ‘பருவமே புதிய பாடல் பாடு’ போன்ற ராஜா பாடல்களை அதிகமாகக் கேட்கும் எங்கள் குழு. ‘ஏதோ மோகம்’ போன்ற பாடல்களைக் கேட்கும் தனிநபர் குழுவாக ஒரு நண்பர்! “உங்களை வித்தியாசமானவங்களாக் காட்டிக்கணும்னு அந்தப் பாடல்களையெல்லாம் தூக்கிப்பிடிக்கிறீங்க” என்று அந்த நண்பர் எங்களைக் குற்றம்சாட்டுவார். கொஞ்ச காலம் கழித்து அந்த நண்பர் எங்களிடம் சொன்னார், “ஆமாம், அந்தப் பாடல்கள்ல என்னமோ இருக்குடா.”

‘என்னமோ இருக்கு’, ‘என்னமோ செய்யுது’, ‘எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போவுது’ என்று சொல்வதெல்லாம் இசையறிவை வைத்தோ, தொழில்நுட்பத்தை வைத்தோ அல்ல. சொற்களில் திட்டவட்டமாக விவரிக்க முடியாத வகையில் ராஜாவின் இசை நமக்கு அளிக்கும் உணர்வையும் அது எழுப்பும் கற்பனையையும் வைத்து.

இளையராஜாவைப் பிடிக்கும் என்று சொல்வது அவ்வளவு வழக்கமாகிப் போய்விட்ட விஷயம். அப்படி இருக்கும்போது நண்பர் ஒருவர் இளையராஜாவைப் பிடிக்காது என்று சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். ஏன் பிடிக்காது என்று அவரிடம் கேட்டேன். “நினைவுகளைத் தருகிறார். அந்த நினைவுகள் யாவும் ஏங்கித் தவிக்க வைக்கும் நினைவுகள்” என்றார். உண்மையில் இதை நான் ராஜாவுக்கான பாராட்டாகவே கருதுகிறேன். நடந்தவற்றின் நினைவுகளை மட்டுமல்ல, நடக்காதவற்றின் நினைவுகளையும் இல்லாதவற்றின் நினைவுகளையும் தரக்கூடியவை ராஜாவின் பாடல்கள்.

நம் கனவுகள் ஏன் நமக்கு அற்புதமாகத் தோன்றுகின்றன? நம் கனவுகளில் பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக இருப்பதில்லை. மனிதர்கள், காலம், இடம், சம்பவங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று குழம்பிப்போய், ஒரு கலங்கலான உணர்வு தோன்றுவதால் கனவுகள் நமக்கு ஏற்படுத்தும் அற்புத உணர்வு உருவாகிறது. கனவுகள் அவற்றைக் காணும் நேரத்தில் அல்ல, உண்மையில் அவற்றை நினைவுகூரும் நேரத்தில்தான் அற்புதமாகத் தோன்றும். ஏனெனில், விழித்தபின் அவற்றில் பெரும்பாலான பகுதிகள் நமக்கு மறந்துபோய் இனம்புரியாத ஒரு உணர்வு மட்டும் நீடிக்கும். அந்த உணர்வை இழைபிடித்துக்கொண்டு போகும்போது இங்கொன்றும் அங்கொன்றும் கனவின் விஷயங்கள் நமக்கு நினைவுக்கு வரும். பேருந்தில் பயணிக்கும்போதோ அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதோ நாம் காணும் பொருளும் காட்சிகளும்கூட கனவின் மறக்கப்பட்ட ஒரு பகுதியை நமக்கு மீட்டுத்தரும். பெரும்பாலும், கனவை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. ஆனால், அதை நினைவுகூர முயலும் தருணங்கள் ரொம்பவும் அழகானவை. இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் பெரும்பாலானவை கனவை நினைவுகூர்வதற்கான தருணங்களைப் போன்றவை. சமயத்தில் அது கனவாக இல்லாமல் பூர்வஜென்ம வாசனை போன்ற நினைவுகளை (பூர்வஜென்மம் என்று ஒன்று இருக்குமானால்) நமக்குள் மீட்டுத்தருவது போல் இருக்கும். ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’ போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அப்படித்தான் தோன்றும் எனக்கு.

‘குவாண்டம் உயிரியல்’ என்ற புதிய அறிவியல் துறையைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன் (https://www.youtube.com/watch?v=q4ONRJ1kTdA&t=1618s). நமது மூக்கு எப்படி வாசனையை உணர்கிறது என்பதை குவாண்டம் அறிவியல் அடிப்படையில் விளக்கினார்கள். மூக்கும் காதைப் போலக் கேட்கிறது என்றார்கள். அதாவது, வாசனையின் இசையை மூக்கில் உள்ள வாசனை ஏற்பிகள் கேட்கும் நிகழ்வுதான் முகர்தல் என்றார்கள். இதில் விநோதம் எது தெரியுமா? வந்து சேரும் வாசனை அணுக்கள் தங்களுக்கிடையில் பிணைப்புகளை தந்திக் கம்பிகள் போல் கொண்டிருக்கும்; அவற்றை நம் மூக்கின் ஏற்பியில் உள்ள எலெக்ட்ரான்கள் மீட்டும். அவையே மீட்டி அவையே இசையைக் கேட்கின்றன என்று அந்த ஆவணப்படம் விவரித்தது. வாசனை அணுக்களும் அவற்றில் நம் எலெக்ட்ரான் மீட்டும் இசையும் மூளையில் வெவ்வேறு பகுதியில் சென்றுசேர்ந்து அது தொடர்பான நினைவுகளையும் நம்மிலிருந்து எழுப்பிவிடுகின்றன என்றும் ஆவணப்படம் விளக்கியது. இளையராஜாவின் இசையை அறிவியல்பூர்வமாக விளக்கியது போல் இருந்தது இந்த விளக்கம். இளையராஜாவின் இசையும் வாசனைதான். அதை நம் செவியின் அணுக்கள் மீட்டி நினைவுகளாக நமக்குத் தருகின்றன. நாம் மீட்டுவதற்கு இளையராஜா தரும் தந்திதான் அவருடைய இசை. அவரவருக்கான இசை. அவரவருக்கான ராஜா!

Thursday, December 14, 2017

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’: முதல் மனப் பதிவுகள்


ஆசை

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ (யாவரும் பதிப்பக வெளியீடு, 2017) சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய என் முதல் மனப்பதிவுகளை, அது வெளியான சூட்டுடன், எழுதுகிறேன்.

நிறைகள்:
  1. சுனிலுக்குத் தங்கு தடையில்லாமல் எழுத வருகிறது. அலுப்பூட்டவில்லை. முதல் தொகுப்பு எழுத்தாளர் போன்று தெரியவில்லை.
  2. தான் நினைத்ததைத் தெளிவாகச் சொல்லத் தெரிகிறது சுனிலுக்கு. அவருடைய துறை சார்ந்த அறிவும் பல்வேறு ஈடுபாடுகளும் கதைகளுக்குக் கைகொடுக்கின்றன.
  3. ஒரே மாதிரியான கதைகளை எழுதாமல் வகைமை ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் மாறுபடும் வகைகளில் எழுதியிருக்கிறார். காந்தி பற்றிய ஆரோகணம் கதை, தொன்மத்தைப் பற்றிய ‘குருதிச் சோறு’ கதை, பெரும்பாலும் உரையாடல் வடிவில் அமைந்த ஜார்ஜ் ஆர்வெலின் பாத்திரத்தைச் சந்திப்பது குறித்த ‘2016’ கதை, அறிவியல் புனைகதையான ‘திமிங்கிலம்’ கதை, அதிநவீனச் செயலிகளினதும் நுகர்வோரை வேட்டையாடுவதுமான நவீன உலகில் எளிய மனித மனம் சிக்கிக்கொள்வதைப் பற்றிய ‘பேசும் பூனை’ கதை, ராஜா காலத்து மாயயதார்த்த உருவக பாணி கதையான ‘கூண்டு’, யதார்த்த பாணியிலான ‘பொன் முகத்தை…’ கதை என்று தன் முதல் தொகுப்பின் 10 கதைகளுக்குள் சற்று வேறுவேறு மாதிரி எழுதிப் பார்த்திருக்கிறார்.
  4. ‘ப்ளூவேல்’ விளையாட்டு போன்ற அபாயமான செயலிகள், வெறுமை ஊடுருவியிருக்கும் மனித மனதை எப்படி ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை மட்டுமல்லாமல்  நுகர்வு கலாச்சாரத்தின் வணிக உத்திகள் தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி நம்மை வேட்டையாடுகின்றன என்பதையும் உணர்த்தியிருப்பதன் மூலம் ‘பேசும் பூனை’ முக்கியத்துவம் பெறுகிறது. முடிவு சற்று சாதாரணமாக இருப்பது போல் தோன்றுகிறது.
  5. ‘பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்’ கதை சற்று நழுவினாலும் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ கதையைப் போன்று ஆகியிருந்திருக்கக் கூடும். நல்லவேளை, காவிய சோகமாக ஆக்காமல் பகடியாக முடித்திருக்கிறார் சுனில்.
  6. ‘அம்புப் படுக்கை’யில் கதையில் நாடியைப் பிடிக்கும்போது வரும் உணர்வுகள், படிமங்கள் அழகாக இருக்கின்றன. காலத்தில் இடத்தையும் இடத்தில் காலத்தையும் கட்டியெழுப்பும் புனைவு அந்த இடத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
  7. ‘குருதிச் சோறு’ கதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதை. ஒரு நிகழ்காலம், அதற்கு வித்திட்ட கடந்த காலம், கடந்த காலமானது பிராமணியத் தொன்மமாக்கப்படுதல் என்று நீளும் சிறுகதை. ஒரு நாட்டார் தொன்மமாகியிருக்க வேண்டிய பாலாயி அவளால் பிராமணக் குடும்பம் காப்பாற்றப்பட்டதால் பல காலங்களுக்குப் பிறகு பிராமணப் பெண்ணாகக் கட்டமைக்கப்பட்டு பிராமணியத் தொன்மமாக ஆக்கப்படுகிறாள். இதை அவ்வளவு விரிவாகக் கொடுத்திருக்கத் தேவையில்லை. ஆங்காங்கே வரும் குறிப்புகளாலேயே உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையில் வரும் மருலாளியைச் சுற்றிலும் உள்ள மவுனமும் புதிரும்தான் கதையை மேலே உயர்த்துகின்றன. மருலாளி யார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிவது வாசகருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.


குறைகள்
  1. மிகவும் தெளிவாக இருக்கிறார் சுனில். அதனால் அவருடைய கதைகள் கச்சிதமான பாதையில் நடந்துசெல்கின்றன. வழிதவறலும், அதன் மூலம் நிகழச் சாத்தியமான அற்புதங்களும் இல்லாமல் போகின்றன. தனக்குச் சாத்தியமானதையே செய்துகொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது முதல் தொகுப்புதான் என்பதால் இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் சுனில் இன்னும் மேலெழுந்து பறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஏனெனில், மொழி, கதைசொல்லல் எல்லாம் இயல்பாக வாய்த்திருப்பதால் அவற்றையெல்லாம் கொண்டு அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான சாத்தியமும் வெகு இயல்பாகக் காத்திருக்கிறது. அதை சுனில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.   
  2. தூயனின் தொகுப்புக்கு நான் முன்வைத்த விமர்சனத்தை சுனிலுக்கும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே ஜெயமோகன் தெரிகிறார். ஆரம்ப கால எழுத்துகளில் பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்புகளில் அவரவர் முன்னோடிகளின் தாக்கம் இயல்பாகவே இருக்கும். ஆகவே, அதைப் பற்றிப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளில் அதை உதற வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை சுனில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
  3. கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் புதுமை உணர்வு சற்றே குறைபடுவதுபோல் தோன்றுகிறது. இது முதல் மனப் பதிவுதான், அடுத்தடுத்த வாசிப்புகளில் மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


சுனில் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறார். தன் சக இளம் எழுத்தாளர்களைக் குறித்தும் தொடர்ந்து எழுதுகிறார். (என் போன்ற வருங்கால எழுத்தாளர்களையும் பற்றி எழுதுவார்!). ஆகவே, சுனிலின் வருங்கால இலக்கியச் செயல்பாடு என்பது தன்னையும் புதுக்கிக்கொண்டு தன் சகாக்களுடன் சேர்ந்து வளர்வதாக இருக்கும் என்பதன் கீற்று இப்போதே வெளிப்படுகிறது. படைப்பில் மேலே மேலே சென்றுகொண்டிருக்க சுனிலுக்கு வாழ்த்துத்  தெரிவித்துக்கொள்கிறேன்.  

Monday, December 11, 2017

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்


ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் பாரதி நினைவு வாரத்தையொட்டி 12.09-2015 அன்று வெளியான கட்டுரை)

பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?

‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’

சூரியனின் வெளிச்சம் எங்கு பார்த்தாலும் வந்து விழுகிறது. தன் மனம் மட்டும் இருளில் புழுங்குவது ஏன் என்று கேட்கிறார். அமைதியான தொனியில் தன் வேதனையைச் சொல்ல ஆரம்பிக்கும் பாரதியை அவரது வழக்கமான வேகம் வந்து ஆட்கொண்டுவிடுகிறது. சோதியின் பாய்ச்சலை, அழகை சன்னத நிலையில் பாடுகிறார்.
'சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!'

சோதியைக் கரையெற்ற வெள்ளம் என்று சொல்லும் பாங்கு என்ன! சோதிச்சூறை, சோதியனந்தம் என்று உளறும் கவிப்பித்துதான் என்ன! இந்தப் பகுதியின் முடிவில் தனது இருள் பற்றி அவருக்கு நினைவு வந்துவிட ஏக்கம் மறுபடியும் வந்து சேர்ந்துகொள்கிறது.

‘டேஸ்ட் ஆர் செர்ரி’ என்ற ஈரானியத் திரைப்படத்தில் ஒரு காட்சி இங்கு நினைவுக்கு வருகிறது. காரில் வரும் ஒருவன் தனது தற்கொலைக்கு உதவுமாறு ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு அவரை காரில் அழைத்துச்செல்கிறான். அந்தப் பெரியவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவருக்குத் திருமணம் ஆன சில காலம் கழித்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்வதற்காகச் செல்கிறார். மல்பெரி மரமொன்றில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அவர் எறியும் கயிறு கிளையில் மாட்டிக்கொள்ளாமல் கீழே விழுகிறது. மரத்தின் மீது ஏறி, கிளையில் இறுக்கமாக முடிச்சுப்போடும்போது அவரது கையில் மிருதுவான ஏதோ ஒன்று படுகிறது. என்னவென்று பார்த்தால் நன்றாகப் பழுத்த மல்பெரி பழம். சாறு நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கிறது. இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மலைக்கு மேலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருக்கிறது. ‘என்ன அழகான சூரியன், என்ன அழகான காட்சி, என்ன பசுமையான நிலப்பரப்பு’ என்று பரவசத்துடன் விவரிக்கிறார். அப்புறம் மல்பெரிகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அவர் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். எழுந்த பிறகு அவரும் மல்பெரியை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார். அதற்குப் பிறகு அவருக்கு வாழ்க்கை முன்பைவிட லேசாக ஆகிறது.

பாரதியின் இந்தக் கவிதையைப் பார்க்கும்போதும் அப்படி ஒரு தற்கொலை மனநிலையில் மரத்தின் மேல் ஏறியவர் போல்தான் தோன்றுகிறார். மரத்தின் மீது ஏறியிருக்கும் கணத்தில்கூட பாரதியின் கண் முன்னே திரைகொண்டு பாயும் சோதி விரிகிறது. அதைப் பார்த்ததும் ஏக்கமும் கரைமீறுகிறது. அதற்கு இடையிலும் சூரிய ஒளியின் வெள்ளத்தை அள்ளிக் குடித்து அதைப் பற்றிப் பாடாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவருடைய மல்பெரி ‘ஒளி’தான். அந்த ஒளியை அவர் கண் முன்னே கண்டுவிட்டார். ஆனால், தன் அகத்தில் அது வந்துசேரவில்லையே என்கிறார்.
இந்தப் பாடலின் தொடர்ச்சியாக ‘ஞாயிறு-ஸூர்ய ஸ்துதி’ என்ற கவிதையை நாம் நமது வசதிக்காக ஒட்டிவைத்துப் புரிந்துகொள்ளலாம். சூரியனை நோக்கி இப்படிப் பாடுகிறார்:
‘… … …
உடல் பரந்த கடலும்தன் உள்ளே
ஒவ்வோர் நுண்துளியும் விழியாகச்
சுடரும், நின்தன் வடிவை உள்கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே.
என்தன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்அடிக் கீழே
நின்று தன்அகத்து ஒவ்வோர் அணுவும்
நிந்தன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!’
(எளிமை கருதி சந்தி பிரிக்கப்பட்டிருக்கிறது)

கடல் தனது ஒவ்வோர் அணுவிலும் சூரியனை உள்வாங்கிச் சுடர்வதுபோலே தனது ஒவ்வோர் அணுவும் சூரியனின் ஜோதியை உள்வாங்கிச் சுடர்விட வேண்டும் என்கிறார். முதல் கவிதையின் விரக்தி மனப்பான்மை இந்தக் கவிதையில் மட்டுப்பட்டுத் தெரிகிறது.

இப்படியாகத் தன்னுள்ளே நிலைபெறும் சுடர் ஒன்றை பாரதி தவிப்புடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். பாரதிக்கு மல்பெரி கிடைத்ததா இல்லையா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், நம்மில் பலருக்குப் பல்வேறு தருணங்களில் சூரியனைச் சுட்டிய மல்பெரியாக பாரதியின் கவிதைகள் அமைந்திருப்பது நம் பெரும் பேறு!
 - நன்றி: ‘தி இந்து’
 -‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: 

பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும்

Monday, December 4, 2017

ஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்



ஆசை

(‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒமர் கய்யாம் நினைவு நாளின்போது வெளியான என் கட்டுரை)

ஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது? இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:

ஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள் அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை; எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,
யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால்
                  சிதைக்கப்பட்டன அவை?

போர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு?

ஒமர் கய்யாமின் வாழ்க்கை

1941 வரை ஒமர் கய்யாம் பிறந்த தேதி உறுதிப் படுத்தப்படாமலே இருந்தது. சுவாமி கோவிந்த தீர்த்தர் தனது ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்: ஒமர் கய்யாம்’ஸ் லைஃப் அண்டு வொர்க்ஸ்’ என்ற நூலில் கய்யாம் பிறந்த தேதியாக கி.பி. 1048-ம் ஆண்டின் மே மாதத்தின் 18-ம் நாளைக் குறிப்பிடுகிறார். இந்தக் கணிப்பு ஒமர் கய்யாமின் ஜாதகத்தை வைத்துச் செய்யப்பட்டது. பிற்பாடு, அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றத்தின் வானியல் துறை இந்தக் கணிப்பு சரியானதே என்று உறுதிசெய்தது. அதேபோல், ஒமர் கய்யாம் இறந்த தேதியும் கி.பி. 1131, டிசம்பர்-4, என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

முந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக விளங்கிய நிஷாபூரில் ஒமர் கய்யாம் பிறந்தார். கய்யாம் தனது காலத்தில் மிகுந்த புகழ் பெற்ற வராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல. தத்துவம், வானவியல், கணிதம் அதிலும் குறிப்பாக, இயற்கணிதம் போன்ற துறைகளுக்காக. கணிதத்தில் அவருடைய பங்களிப்பின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. செல்ஜுக் மன்னனுக்காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் பங்குபெற்ற வானியலாளர்களுள் கய்யாமும் ஒருவர். மொத்தத்தில், கய்யாம் தன் காலத்தில் ஒரு ‘தனிமனிதப் பல்கலைக்கழகமாக’ இருந்தார் என்று தெரிகிறது. ஆனால், ஒரு கவிஞராக கய்யாமின் புகழ் தெரியவருவதற்கு ஃபிட்ஜெரால்டு (1809 -1883) என்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வர வேண்டி யிருந்ததுதான் விசித்திரம்.

ஒமர் கய்யாம் மரபு

சில அறிஞர்கள் ஒமர் கய்யாமுடையது என்று 1200-லிருந்து 1400 ருபாயிகள்வரை (ருபாயி - ஒரு வகை நான்கு வரிக் கவிதை) அடையாளமிட்டுக் கூறுகிறார்கள். வேறு சில அறிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகளையும், இன்னும் சிலர் நூற்றுச் சொச்சம் கவிதைகளையும் மட்டும் கய்யாமுடையதாகக் கருதுகிறார்கள். நிறைய இடைச்செருகல்கள் இருப்பதால் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்தப் பாடல்களை கய்யாம் எழுதவில்லை என்றே கொண்டாலும் கய்யாமின் மரபைப் பின்பற்றிப் பலர் எழுதியதாகவும் கொள்ளலாம். கய்யாமின் மரபு என்பதால், அதற்கு அவருடைய முகத்தைக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை.

ஒமர் கய்யாமின் மரபு உண்மையிலேயே ஒரு புகலிடம் தான். தன் காலத்தின் அடிப்படைவாதம், போர்கள், சம்பிரதாயம், கபடம் எல்லாவற்றுக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைத்தவர்களுக்கு, புகழ்பெற்ற கய்யாமின் பேரில் ஒளிந்துகொள்வது பாதுகாப்பைக் கொடுத்திருக்கலாம் என்று ஒமர் கய்யாம் ஆய்வாளர் மெஹ்தி அமின்ரஜாவி கருதுகிறார். இன்றைய வாசகர் ஒருவர், கய்யாமின் கவிதைகளைப் படிக்கும்போது இஸ்லாம் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழக்கூடும். இஸ்லாமுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களின் காரணமாக எழும் கேள்வி அது. இஸ்லாம் எல்லாப் போக்குகளையும் சகிப்புத்தன்மையுடன் அணுகக்கூடியது என்பதற்கு ஓர் உதாரணம்தான் ஒமர் கய்யாம் என்ற சுதந்திரச் சிந்தனையாளர்.

ஒமர் கய்யாமுக்கும் முந்தைய நூற்றாண்டிலிருந்து 15-ம் நூற்றாண்டு வரை பாரசீகமும் அதை ஒட்டிய பிற பகுதிகளும் உலகின் தலைசிறந்த அறிவுக் கலாச்சாரத்தை, பண்பாட்டு வளத்தைக் கொண்டிருந்தன. சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சமூகத்தில், இவ்வளவு கலாச்சார மேம்பாடு நடந்திருக்குமா? அடிப்படைவாதிகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதேபோல், அவர்களுக்கு எதிரான போக்கும் எங்கும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு போக்குதான் கய்யாம்.

ஒமர் கய்யாமின் மதம்

எல்லாப் போக்குகளிலும் உள்ள அடிப்படைவாதிகள் ஒமர் கய்யாமை வெறுத்ததற்கு, வெறுப்பதற்குக் காரணம், அவர் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குவதே. வாழ்க்கை என்பது எல்லாக் கோட்பாடுகளையும் பிரதி களையும் மீறி நிகழக்கூடியது என்பதை அறிந்தவர் கய்யாம். ‘நிலவைச் சுட்டிக்காட்டும் விரலையே நிலவாகக் கருதிவிடக் கூடாது’ என்று சொல்லும் ஜென் பழமொழிக்கு மிகவும் நெருக்கமானவை கய்யாமின் இந்த வரிகள்:

குடிப்பதும் களித்திருப்பதும்தான் வாழ்க்கைக்கான எனது
                இலக்கணம்,
மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும்
                விடுபட்டிருப்பதுதான் எனது மதம்.
விதியென்ற மணப்பெண்ணிடம் கேட்டேன் அவளின் பரிசப் பணம்
                 என்னவென்று
‘மகிழ்ச்சியான உன் இதயம்தான்’, என்றாள் அவள்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டிலிருந்தும் விடுபட்டிருப்பது’ என்ற வரி, முரண்களை வைத்துச் செய்யப்பட்ட வார்த்தை விளையாட்டு போன்று தோன்றும். உண்மையில் அப்படியல்ல. ஒரு நம்பிக்கையின் மீது தீவிரப் பற்றுள்ளவர் தனது நம்பிக்கையைத் தவிர, வேறு எதையும் காணத் தவறுகிறார்; நம்பிக்கையின்மையில் தீவிரப் பற்றுள்ளவரும் தனது நம்பிக்கையின்மையைத் தவிர வேறு எதையும் காணத் தவறுகிறார். இந்த இரண்டுமே நம் கண்களை மறைப்பவை. இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட ஒருவர்தான் கய்யாம்.

பாரசீகச் சித்தர்

ஒரு வகையில், நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் மரபுக்கு நெருங்கியவர் கய்யாம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

கனிவோடு விளிம்பில் அழுத்தி நூறுநூறு முத்தங்கள் கொடுத்து,
படைப்பு-ஞானம் வனையும் பாண்டம் இது;
இப்படியொரு அருமையான பாண்டத்தை உருவாக்கி,
பிறகு மண்ணில் வீசுகிறான் பிரபஞ்சக் குயவன் மீண்டும் அதனை.

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஒரே ஒரு வித்தியாசம், சித்தர் பாடலில் ஆண்டி பாண்டத்தை உடைக்கிறார். கய்யாமின் பாடலில் உடைப்பது குயவன் (அதாவது படைத்தவன்).

மனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும், உண்மையில் இந்தப் பிரபஞ்சம்கூட ஸ்திரமானது அல்ல என்கிறார் கய்யாம்:

மனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்,
நமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்,
வானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு,
               பார்க்கப்போனால்,
உன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.

இதுபோன்ற பாடல்கள் மூலமாகக் கடவுளின் இருப்பை கய்யாம் மறுப்பதில்லை. மாறாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தாங்களே பொறுப்பாக வேண்டும் என்று சொல்கிறார். கய்யாமை மேலோட்டமாகப் படிக்கும் பலரும், அவர் ஒரு அவநம்பிக்கைவாதி என்ற முடிவுக்கு வரக்கூடும். அது உண்மையல்ல. வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லி, இந்தக் கணத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றவர் அவர். இந்தக் கணத்தை வாழாமல் எந்தக் கணத்தை நீங்கள் வாழ முடியும் என்று கேள்வி கேட்டவர் அவர். கடவுளையும் வாழ்க்கையின் பொருளையும் இங்கேதான் தேட வேண்டுமே தவிர, நிச்சயமற்ற மறு உலகில் அல்ல என்று வலியுறுத்துகிறார்:

வாழ்வின் பொருள் இதயத்துக்கு எட்டுமெனில்,
இறப்பின்போது கடவுள் என்ற ரகசியமும் அறியக்கூடும் அது;
இன்று உன்வசம் நீ இருக்கும்போது நீ அறிந்திருப்பது ஏதுமில்லை,
நாளை உன்னை நீ விட்டுச் செல்லும்போது எதைத்தான்
          அறிந்துகொள்ளப்போகிறாய்?


(இங்கே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்களை ஆங்கிலம் வழியாக பேரா. தங்க. ஜெயராமனும் நானும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறோம்)


தொடர்புடையவை:
ருபாயியத் நூல் குறித்து வெங்கட் சாமிநாதனின் விமர்சனம்: http://writerasai.blogspot.in/2015/10/blog-post_21.html

ருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்க: http://www.crea.in/publicationsdetails.php?id=18&customer=inr&page=0&category=7

ருபாயியத் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில பக்கங்கள்: http://crea.in/pdf/Rubaiyat.pdf



Wednesday, November 29, 2017

தாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்



ஆசை

பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் 2008-ல் வெளியானது. அப்போது, முதல் இரண்டு அத்தியாயங்களைப் படித்தேன். ஏற்கெனவே, கோணங்கி போன்றோரின் படைப்புகளைப் படிக்க முயன்று தோற்றுப்போயிருந்த என்னை ‘தாண்டவராயன் கதை’ நாவலும் பிடித்து வெளியில் தள்ளியது. அதன் அந்நியத் தன்மையும் இயல்பற்றதாக எனக்குத் தோன்றிய நீண்ட வாக்கியங்களும்தான் அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அந்த நாவலைப் படித்ததற்கு ஒரே காரணம் ‘பாகீரதியின் மதியம்’ நாவல்தான். தற்போது அச்சில் இல்லாத ‘தாண்டவராயன் கதை’யை அதன் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனிடம் கேட்டு எப்படியோ ஒரு பிரதியை மார்ச் மாதத்தில் வாங்கிவிட்டேன். ஏப்ரல் மாதம் அந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இந்த முறையும் அதே அனுபவம்தான். எனினும், பொறுமையைக் கடைப்பிடித்து 400 பக்கங்கள் வரை வந்துவிட்டேன். அப்படியும் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கொண்டு படிப்பதை விட்டுவிட்டேன். இந்த நாவல்மீது அசாத்தியமான காதலைக் கொண்ட சில இளம் வாசக நண்பர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தவே ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மறுபடியும் கையிலெடுத்தேன். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். இந்த முறை நாவல் வெகு வேகமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நேற்று இரவு 10.15-க்கு நாவலை முடித்துவிட்டு, ‘அப்பா கதை சொல்லுறேன் வா, அப்பா கதை சொல்லுறேன் வா’ என்று நாவலைப் படிக்க விடாமல் இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த என் மகனின் அழைப்பை ஏற்று அவனிடம் கதை கேட்கப் போவதுவரை படைப்புச் சூறாவளியாக என்னுள் ‘தாண்டவராயன் கதை’ சுழன்றடித்து மாயங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.

படித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட சில மனப் பதிவுகளைச் சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.



நிறைகள்

  1. என் வாசிப்புக்குட்பட்டு தமிழில் இதற்கு நிகரான படைப்புப் பெருவெடிப்பை (Creative big bang) தமிழ் இலக்கியத்தின் பாரதிக்குப் பிந்தைய பரப்பில் நான் கண்டதில்லை. ‘தாண்டவராயன் கதை’யை பா.வெங்கடேசன் தாண்டவம் ஆடிய கதை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட படைப்பை எழுதிவிட்டு பா.வெங்கடேசன் ஆரவாரம் இல்லாமல் இருப்பது முதலில் ஆச்சரியத்தைத் தந்தாலும் இப்படிப்பட்ட படைப்பை எழுதுபவரின் இயல்பு அதுதான் என்று பிறகு எனக்குத் தோன்றியது.
  2. அசாத்திய கற்பனைகளின் தொடர்ச்சியான அணிவகுப்பு நாவல் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
  3. அந்நியத் தன்மை, இந்தியப் புராணிக நடை, 18-ம் நூற்றாண்டின் தமிழ் நடை என்று எல்லாம் கலந்த நடையில் அலாதியான வாசிப்பனுபவத்தை நாவல் கொடுக்கிறது.
  4. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் உள்ளதைப் போல இந்த நாவலிலும் ‘நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்தது. மற்றும் நிகழ்த்திக்கொண்டிருந்தது.’ நாவலில் வரும் காலம், இடம், மனிதர்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போன்ற ‘காலவெளி ஊடுதுளை’யை (worm hole) ஒத்த தருணம் இந்த நாவலில் வருகிறது. இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி பா. வெங்கடேசனுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நாவலில் அதுபோன்ற புனைவு அற்புதமாக உருக்கொண்டிருக்கிறது.
  5. நாவலில் வரும் ‘நீலவேணியின் பாதை’, 40 பக்கங்கள் கதைப்பாடலாக நீளும் ‘தாண்டவராயன் கதை’ போன்ற பகுதிகள் தமிழ்ப் புனைகதை மொழியின் உச்சபட்ச சாதனைகளுள் வைக்க வேண்டியவை.
  6. என் தனிப்பட்ட வாசிப்பின் சிறுபரப்பைப் பொறுத்தவரை காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை விட இது மகத்தானது. சீரொழுங்கு என்றால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குப் பக்கத்தில் ‘தாண்டவராயன் கதை’ வர முடியாது. ஆனால், இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும் படைப்புப் பெருவெடிப்புதான் இதை மார்க்கேஸின் நாவலை விட மேலானதாக ஆக்குகிறது. இது என் தனிப்பட்ட ரசனையின் அளவுகோல்படி உருவான கருத்து என்பதையும் நாவலைப் படித்து முடித்த பரவசத்தில் இதை நான் சொல்கிறேன் என்பதையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.


குறைகள்:
  1. நாவல் எந்த வகையிலும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தவே இல்லை. இது மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கும் பொருந்தும். ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் வலியை, காதலை, காமத்தைக் குத்திக் கிளறிவிடும் தன்மை நெடுக இருந்துகொண்டே இருக்கும். ‘தாண்டவராயன் கதை’யில் அந்தத் தன்மை அநேகமாக இல்லை. ஒரு புனைவு சாகசத்தை வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. படித்து முடித்தவுடன் துக்கமோ துயரமோ பேரன்போ அல்லது ஜெயமோகன் வழக்கமாகச் சொல்வதுபோல் ‘மகத்தான அறவுணர்ச்சி’யோ என் மனதில் வந்து கவிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றைப் படித்ததுபோன்ற உணர்வுதான் இருந்தது. பூர்வகுடிகளின் கதி, புரட்சி போன்றவற்றைப் பற்றி நாவலில் விஸ்தாரமாக எழுதப்பட்டிருந்தாலும் சாகசப் புனைவும் அசாத்தியமான மொழி வீச்சும் முன்னவை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
  2. அசட்டுத் தித்திப்பு என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. திகட்ட வைக்கும் அதீத இனிப்பைக் குறிப்பது அது. அதைப் போன்று, மலைக்க வைக்கும் சாகசப் புனைவைத் தொடர்ந்து கட்டவிழ்த்துக்கொண்டே வருவதால் அதீதங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பையும் ஏற்படுத்துகின்றன. பத்து நாவல்களுக்கான கதைகளை, புனைவை, சாகசங்களை, மொழியை இந்த ஒரே நாவலில் இறக்கியிருக்கிறார். இதைப் பாராட்டாகவும் வைத்துக்கொள்ள முடியும். விமர்சனமாகவும் வைத்துக்கொள்ள முடியும். ‘மரத்தை மறைத்த மாமத யானை’யைப் போல் படைப்பை மறைத்து நிற்கிறது பா.வெங்கடேசனின் மலைக்க வைக்கும் அதிசய ஆளுமை.
  3. நாவலில் குறைந்தது இருநூறு பக்கங்களை நீக்கிவிடலாம். இதற்குத் தெளிவான எல்லைக்கோடு இல்லை என்பதால் கதைத் தொடர்ச்சியை விட்டுவிடாமல் சில பகுதிகளைச் சுருக்கமாக எழுதியிருக்கலாம். முதல்  இருநூற்றைம்பது பக்கங்களை, அவற்றில் அற்புதமான பகுதிகள் சில இருந்தாலும், கடப்பதற்கு இப்போதும் சிரமமாகவே இருக்கிறது. நானூறு பக்கங்களுக்கு மேல்தான் வெங்கடேசன் விஸ்வரூபம் எடுக்கிறார்.
  4. தொடர்ச்சியான அதீத சாகசப் புனைவின் காரணமாக நாவலின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சற்றே அலுப்பு ஏற்படுகிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் முடிவைப் போலில்லாமல் அழுத்தமே இல்லாத ஒரு இடத்தில் நாவல் முடிந்துவிடுவதைப் போல் தோன்றுகிறது.
  5. பா.வெங்கடேசனுக்கு நீளமான வாக்கியங்கள் மீது அளவுகடந்த காதல் இருப்பது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. உத்தி என்பது ஒரு கருவி. அதுவே படைப்பல்ல. உத்தியையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கும் இடங்கள் ‘பாகீரதியின் மதியம்’ நாவலை விட இதில் அதிகம். வாக்கியங்கள் தன்னளவில் நிறைவுபெற்றிருந்தாலும் அவற்றின் இறுதியில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைக்காமல் காற்புள்ளியையே வைத்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் இதற்கு என்னால் உதாரணங்களைக் காட்ட முடியும். இங்கும் ‘மரத்தை மறைத்த மாமத யானை’ கதைதான்.


இன்னும் சில…     

  1. ‘தாண்டவராயன் கதை’ நாவல் பரவலாகப் படிக்கப்படவில்லையென்றாலும் ஒரு சிறு வாசகப் பரப்பு, அதிலும் இளைஞர்கள் பலர், அதைக் கொண்டாடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் சூரியனுக்கு மேலும் கீழும் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இப்படி ஒரு நாவல் வந்திருப்பதாகவோ அதைத் தாங்கள் படித்திருப்பதாகவோ காட்டிக்கொள்ளாததைத் தமிழ் நவீன புனைகதை வரலாற்றின் மாபெரும் இலக்கிய ஊழல்களுள் ஒன்றாகவே கருதுகிறேன். இந்த நாவலைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தால்கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். முழு பூமியைச் சோற்றில் மறைப்பதுபோல் இந்த நாவலை மறைத்துவிட்டு, தங்களுக்கு உரிய கவனிப்போ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்டால் வேடிக்கையாகவே இருக்கிறது.
  2. நான் பா.வெங்கடேசனை அளவுக்கு மீறித் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறேனா? கொண்டாடுகிறேன், ஆனால், அளவுக்குக் குறைவாகத்தான். என் மொழியில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆளுமை பிறந்திருக்கும்போது அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? வாழும்போது கொண்டாடத் தவறிய பாரதியை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் சமூகம் அல்லவா நம்முடையது. பா.வெங்கடேசனை மட்டுமல்ல, அவருக்கு நிகரான, அல்லது அவரைத் தாண்டிச்செல்லும் யாரையும் நான் கொண்டாடுவேன். கற்பனை சக்தியின் சாத்தியத்தை எந்த அளவுக்கெல்லாம், அதுவும் நம் மொழியிலேயே, விரிக்க முடியும் என்று பா.வெங்கடேசன் காட்டியிருப்பது தனிப்பட்ட முறையில் எனது நன்றிக்குரியது.


கடைசியாக ஒன்று! ‘தாண்டவராயன் கதை’ நாவலைப் படித்து முடித்த கையோடு இந்தக் குறிப்புகளை நான் எழுதுகிறேன். ஆகவே, விமர்சனப் பார்வையைவிட பரவசத்தின் ஆதிக்கமே அதிகம் இருக்கக்கூடும். இந்த நாவலை இரண்டாவது முறையாகப் படித்துவிட்டு அப்போது விரிவாக எழுதுகிறேன். எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கொப்ப, எனக்கு இப்போது பா.வெங்கடேசனின் படைப்புகள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த உணர்வை நான் கொண்டாடுகிறேன். பிடிக்காமல் போகும்போது (அப்படி நிகழ்வதற்கு சாத்தியம் குறைவு என்றாலும்) அதையும் வெளிப்படுத்துவேன்.

Thursday, November 23, 2017

பா. வெங்கடேசனை நோக்கி நான் வந்தது எப்படி?

 

ஆசை

1999-ல் என்று நினைக்கிறேன், பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலம், காலச்சுவடில் ‘மழையின் குரல் தனிமை’ சிறுகதையைப் படித்துவிட்டுப் பிரமித்துப்போய் நின்றேன். ஆனால், ஏனோ பா.வெங்கடேசனைப் பின்தொடராமல் போய்விட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு ‘ராஜன் மகள்’  தொகுப்பு வாங்கினேன். படிக்காமலே வைத்திருந்தேன். ‘தாண்டவராயன் கதை’ நாவல் வந்தபோது இரண்டு மூன்று அத்தியாயங்கள் படித்துவிட்டு ‘அய்யய்யோ சாமி’ என்று தூக்கி அந்தப் பக்கம் போட்டுவிட்டேன். அதன் பிறகு பா.வெங்கடேசன் பெயரைப் பார்த்தாலே ‘ஆஹா, கோணங்கி வகையறா’ என்று என் தலை காததூரம் தன்னைத் தானே திருப்பிக்கொள்ளும். வாங்கிவைத்திருந்த ‘ராஜன் மகள்’ தொகுப்பையும் படிக்கவே இல்லை. நிற்க! நான் மதிக்கும் கவிஞர் ஒருவர் என்னிடம் அப்போதுதான் வெளியாகியிருந்த பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ நாவலைத் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும் ‘மேஜிக்கல்!’ என்றும் கூறினார். ‘என்னங்க பா.வெங்கடேசனைப் போய் அப்படிச் சொல்லுறீங்க. சரியான பம்மாத்தாயிற்றே அவர்’ என்றேன். அப்படி இல்லை, படித்துப் பாருங்கள் என்றார் நண்பர். அவரின் இலக்கிய ரசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒன்று; ஆகவே, அவருடைய கருத்துக்கு மதிப்பு கொடுத்து ‘பாகீரதியின் மதியம்’ நாவலைக் கையில் எடுத்தேன். எந்த முன்னபிப்பிராயமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஸரமாகூவின் நாவல்களில் நீளமான சொற்றொடர்களை நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். எனினும், தமிழில் அப்படி எழுதப்படுபவை அதுகாறும் எனக்கு அந்நியமாகவே தோன்றின. கோணங்கியின் ‘பாழி’, ‘உப்புக்கத்தியில் இறங்கும் சிறுத்தை’ போன்ற நூல்களைக் காசில்லாக் காலத்திலேயே சாகச முயற்சியாக விலை கொடுத்து வாங்கிப் படிக்க முயன்று தோற்றதும் இது போன்ற உணர்வுக்குக் காரணம். அந்த உணர்வையும் நான் அந்தப் பக்கம் தள்ளிவைத்துவிட்டு முதல் வரியிலிருந்து நாவலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தேன். ‘Now you see me’ என்பதைப் போல ஒருசில பக்கங்களிலேயே பா.வெங்கடேசன் திறந்துகொண்டார். இது போன்ற படைப்புகளைப் படிக்க வேறொரு மன அமைப்பு, வேறொரு பார்வை வேண்டும் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. ‘பாகீரதியின் மதியம் நாவலை இரண்டு முறை படித்துவிட்டு விமர்சனம் எழுதினேன்.

பலரும் நான் பா.வெங்கடேசனுக்கு வேண்டியவன் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். உண்மையில் நாவலின் 150-வது பக்கத்தைத் தாண்டியவுடன் அசந்துபோய் முதன்முதலில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டினேன், ‘நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அற்புதம்’ என்று (நாவலில் அவருடைய கைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது). அவர், ‘யாரென்று தெரிந்துகொள்ளலாமா?’ என்று பதில் செய்தி அனுப்பினார். நான், ‘ஜெமினி’ என்று பதில் அனுப்பினேன். அதற்குப் பிறகு நாவலைப் படித்த பிறகுதான் பா.வெங்கடேசனுடன் தொலைபேசியில் பேசினேன். அது பரவச உணர்வின் மிகுதியால் நிகழ்ந்த தொலைபேசி உரையாடல். இன்றுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை.

நாவலைப் படித்து முடித்த பரவசத்திலேயே என் மதிப்புரையை எழுதினேன். அதனால் அந்தப் பரவசத்தின் கொண்டாட்டத்தையே அதில் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த நாவலையும் மதிப்புரையையும் பாராட்டிய நண்பர்கள் சிலர் நாவலைக் குறித்த விமர்சனப் பார்வையையும் என் கட்டுரையில் முன்வைத்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கள். உண்மையில், பா.வெங்கடேசனின் எழுத்து வீச்சு, நாவலில் கருத்தியல்ரீதியாக நான் கடுமையாக மாறுபடக்கூடிய இடங்களைப் பற்றிய உணர்வை அப்போது ஆக்கிரமித்திருந்தது. நாவல் படித்துக் கொஞ்ச காலம் கடந்த பிறகு அதன் மீதான பிரமிப்பு சற்றும் குறையாமலேயே, அதன் மீதுள்ள விமர்சனங்கள் எனக்குள் துலக்கமாக ஆரம்பித்தன. குறிப்பாக, திராவிட இயக்கம் தொடர்பான பகுதிகள் நாவலில் எனக்குச் சங்கடத்தைக் கொடுப்பவை. அவற்றை நான் பா.வெங்கடேசனிடம் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவசியம் விமர்சித்து எழுதுங்கள் என்று அவர் கூறிவருகிறார். இன்னொரு முறை படித்துவிட்டுதான் அப்படி எழுத வேண்டும்.

‘பாகீரதியின் மதியம்’ முடித்துவிட்டு ‘ராஜன் மகள்’ தொகுப்பைப் படித்தேன். ஒவ்வொரு குறுநாவலையும் பெரிய நாவல்களாக எழுதியிருக்கலாமே என்று ஏக்கம் கொள்ள வைக்கும் அசாதாரணமான தொகுப்பு அது. குதூகலத்தைக் கொடுக்கும் கற்பனை வளம் பா.வெங்கடேசனுடையது என்பதை அந்தத் தொகுப்பு எனக்கு உணர்த்தியது. அதன் பிறகு, ஆழி செந்தில்நாதனைக் கேட்டு எப்படியோ ‘தாண்டவராயன் கதை’ நாவலை வாங்கிவிட்டேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். எந்தப் புத்தகத்தால் பா.வெங்கடேசன் புத்தகங்களையே இனி திரும்பிப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேனோ அதே புத்தகத்தை இப்போது படித்துக்கொண்டிருப்பதுதான் காலச் சுழற்சியின் விந்தை.

இதையெல்லாம் நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் உண்டு! ஒவ்வொன்றையும் அணுக வேறொரு பார்வை தேவைப்படுகிறது என்பதை பா.வெங்கடேசனின் படைப்புகள் எனக்கு உணர்த்தின. இதற்கு என் நண்பர் முக்கியமான காரணம். நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘பாகீரதியின் மதியம்’ நாவல் கையில் கிடைத்திருந்தால் ஐந்து பக்கங்கள் கூடப் படித்திருக்க மாட்டேன். பம்மாத்து என்று சொல்லியிருப்பேன். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மௌனி, அசோகமித்திரன் என்று பழகிய பாட்டையிலேயே தமிழில் முன்பு என் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு திறப்பு என்னில் நிகழ்ந்ததுதான் பா.வெங்கடேசனை நோக்கி நான் வந்திருப்பதற்கான காரணம். அதுவரை இருந்தது சட்டென்று வேறொன்றாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எந்த ஒரு படைப்பையும் முழுமனதுடன், திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்ற உணர்வும் இப்போது வந்திருக்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, பா.வெங்கடேசனை நான் படிப்பதென்பது எனக்கு, என் கற்பனைக்கு நான் செய்துகொள்ளும் பேருதவி என்பதை நான் இப்போது உணர்கிறேன்.