Friday, March 1, 2024

பிறன்மனை விழையும் ஆமையின் கனவுக் குறிப்புகள்

ஓவியம்: சல்வதோர் டாலி

என் புதிய கவிதைத் தொகுப்பான ‘பிறன்மனை விழையும் ஆமையின் கனவுக் குறிப்புகள்’ நூலுக்கான இந்தக் கவிதைகளை நேற்று எழுதத் தொடங்கியபோது நான் பெரிதும் நினைத்துக்கொண்டது தற்போது காலமான எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களின் ‘புற்றிலுறையும் பாம்புகள்’ கதையைப் பற்றித்தான். இந்தக் கவிதைகளை எழுதலாமா, எல்லோரும் எப்படி எதிர்கொள்வார்கள் என்றெல்லாம் தயங்கியபோது 40 ஆண்டுகளுக்கு முன்பே இராசேந்திர சோழன் இப்படியொரு கதையை எழுதிவிட்டார் நாம் ஏன் தயங்க வேண்டும் என்று எழுதத் தொடங்கிவிட்டேன். இன்று காலையில் பார்த்தால் அவர் காலமான செய்தி. எனக்குப் பெரும் தற்செயல் துயரம். தன்னை விட 35 வயது குறைவான ஒரு படைப்பாளிக்கும் எதையும் பற்றிக் கவலை வேண்டாம் என்ற துணிச்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றிருப்பதால்தான் அவர் முன்னோடி ஆகிறார். அதனால்தான் இன்று இவற்றை வெளியிட்டு இந்தக் குறிப்பை எழுத வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். எழுதிக்கொண்டிருக்கும் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் கீழே...

1. ஆணுறை

யார்யாரையெல்லாம்
எத்தனையெத்தனை பேரையெல்லாம்
புணர்வது என்ற
கணக்குவழக்கு
இல்லாமல் போய்விட்டது
இந்தக் கனவுக்கு
அப்படியும்
ஒன்றில் கூட
ஆணுறை அணிந்திருக்கவில்லை
அல்லது
குனிந்து நான்
பார்க்கவில்லை

2. இரட்டை வாழ்க்கை

அவ்வளவு நெருக்கமில்லாத
நண்பரின் மனைவியைப்
புணர்வதுபோல் கனவு

எழுந்த பிறகு
பதறுகிறேன்

கனவில் அப்படியல்ல
அவ்வளவு நிதானம்
அவ்வளவு லயிப்பு

அந்தப் பெண்ணும்கூட
பதறவேயில்லை

அவ்வப்போது
பார்த்துக்கொள்ளக் கூடியவர்கள்தான்
நாங்கள்

இனி இரட்டை வாழ்க்கை 
வாழ வேண்டும்
நானும்
அந்தப் பெண்ணும்


3. புல்

எனக்குள் இருந்த
ஒரு புல்வெளியில்
நடந்தது 
நமக்குள் அந்தக் கலவி

எனக்குள்தான்
என்னுடையதுதான்
என்றாலும்
இனி தேடிக் கண்டுபிடிக்க
முடியாத இடம்

உன் முதுகுதான்
தரையில் படுத்தது என்றாலும்
ஒரு புல்லாவது
ஒட்டியிருக்கிறதா
என்று இனி பார்க்க முடியாது
         
ஆனால்
ஒரு புல்போல்
நீ அசைந்துபோவதை
உறுத்தாமல் நான்
பார்த்திருப்பேன்


4. முக்கலவி

ஒருமுறை
கனவுக்குள்
முக்கலவி
நன்றாக இருக்கும்
என்றாய்

உடனே
மூன்றாம் ஆளின்
உருவம் அங்கே தெரிந்தது

அதுவரை
வெறுமனே களமாய்
வெளியில் படுத்திருந்த நான்தான்
அதுவும் என்று தெரிந்தது

அந்த நானை
அவன் என்று
இதற்கு மேல் குறிப்பிட்டால்தான்
முக்கலவிக்கு இன்பம்

அவன் கனவுக்குள்
நுழைந்த வேகத்தில்
அதுவரை அவனால்
கழற்ற முடியாததையெல்லாம்
சூறாவளியாய்க் கழற்றி
வெளியே எறிந்துவிட்டான்

கழற்றி எறிந்த வேகத்தில்
மூர்க்கமாய்
என்னைப் புணர
ஆரம்பித்துவிட்டான்

திடுக்கிட்டுப் போனாலும்
உனக்கு
இவ்வேடிக்கையும் கிளர்ச்சிதானே
    

5. பிறன்மனையின் கூற்று

உங்கள்
பிறன்மனைக் கவிதைகள்
படித்தேன்
நானும் உங்கள் நண்பரின்
மனைவியே
அவ்வப்போது பார்த்துக்கொள்கிறோம்
என்பதால்
எனக்குள்ளொரு குறுகுறுப்பு
நானாக இருப்பேனோ
என்று

இன்னொருவர்
கனவிலும்
கவிதையிலும்
என்னையறியாமல்
நான் கலவி கொண்டதில்
எனக்கு ஆனந்தமே

நேரில் கேட்டிருந்தால்
மறுத்திருப்பேன்தான்

ஆனால்
உங்கள் கனவு
எனக்கும்
நேற்று வந்தது
அதே புல்வெளி

முன்பெல்லாம்
ஒரு ஊரில் 
ஓடி முடிந்த புதிய படத்தை
அதன்பின்
பக்கத்து ஊரில் போடுவார்களே
அதுபோல

லயித்தேன்
என்றுதான்
சொல்ல வேண்டும்
கணவரிடம்
சொல்லி இன்புற
ஏங்குகிறேன்

அதற்குப் பதில்
என் முதுகில்
புல்லேதும்
ஒட்டியிருக்கிறதா
என்று
தேடிப்பார்க்கிறேன்


6. பிறன்மனைக்கு மறுமொழி

என் கனவின்
பிறன்மனையை
என் கவிதை
போய்ச் சேர்ந்தது மகிழ்ச்சிதான்
அதை எதிர்பார்த்து
நான் எழுதவில்லை என்றாலும்கூட

அதனினும் மகிழ்ச்சி
ஒரு செடியில்
ஒரே பூ
பல முறை பூக்கும் என்பதையும்
அதே பூ 
வேறொரு செடியிலும் போய்ப்
பூக்கும் என்பதையும்
அறிந்துகொண்டதில்

பிறன்மனை நேசம்
இப்படிப்
பிரபஞ்ச விதிகளை
மாற்றியெழுதும்

ஆகையால்
அதற்கெதிராய்
யாரும் அதிகாரம்
இயற்றிவிட வேண்டாம்


7. மதித் தேன்

உன்னை எப்படி
வெளியிலிருந்து
நீ கொண்டுவருவதில்லையோ
அதே போல்தான்
நானருந்தும்
உன் உடலின் திரவங்களும்

உன் எச்சில்
என் மூளையில்
உன் அதிகாரத்தை நிறுவும்
தேனைக் கொண்டிருக்கிறது

அந்த அதிகாரத்தை
அது நிறுவியபின்
உன்னுடலின்
எந்தத் திரவமும்
எப்படி எனக்கு
விலக்காகும்

மதிமயங்கிக் கிடக்கிறேன் 

8. சரிவு
என்ன செய்வதிந்தப்
பேரிளம்பெண்ணின்
சரிந்த முலைகளை
கனவின் இரு இதயங்களாகிக்
கட்டுக்கடங்கா வேகத்தில்
குருதி பாய்ச்சுகின்றனவே
வேகம் போய் முட்டுமிடம்
குறியாகிச்
சரிகின்றதே
என்ன செய்வதிந்தப்
பேரிளம்பெண்ணின்
சரிந்த முலைகளை

9. மூவர் கனவு
இவ்வுலகில்
பிறன்மனைக்கும் கனவுண்டு
பிறனுக்கும் கனவுண்டு
எனக்கும் கனவுண்டு
சமயத்தில் மூவர் கனவிலும்
பறக்கும் ஒரே பொன்வண்டு

10. புலரி
உன் கணவனொடு மூவரானோம்
அருகருகே உறக்கம்
ஓருடல் என்னுடல் மட்டும்
நிர்வாணம்

அக்கனவு ஒரு குமிழ்
அதில் நீ விட்ட மூச்சையே
எல்லோரும்
இழுத்து விடுகிறோம்
அதில் பொலிகிறது
நிர்வாணம்

ஒவ்வொரு
முறையும்
உன் படுக்கறையறையிலிருந்து
ஓடி வரும்போது
பொன்புலரியாகிறேன்

No comments:

Post a Comment