Monday, January 4, 2016

கொல்லும் மருந்துகள்!


அஸீம் மல்ஹோத்ரா

('தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் என் சுருக்கமான மொழிபெயர்ப்பில் 01-02-2016 அன்று வெளியான கட்டுரை)

என்னிடம் உடல்நல ஆலோசனை பெறுவதற்காக மேரி என்ற பெண் வந்திருந்தார். வயது, அறுபதுகளின் தொடக்கத்தில் இருக்கும். நீரிழிவு நோயாளி. தனது கால் தசையில் வலி ஏற்படுவதாகவும், கொழுப்பைக் குறைப்பதற்காகத் தான் எடுத்துக்கொள்ளும் ஸ்டேட்டின் மருந்து காரணமாக அப்படி இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். “ஆனால், அதை நிறுத்துவதற்கும் எனக்குப் பயமாக இருக்கிறது,” என்றார்.
மகாதமனியிலிருந்து ரத்தக் கட்டி ஒன்று புறப்பட்டு, அவரது மூளைக்குச் சென்று மோசமான பக்கவாதத்தை ஏற்படுத்திவிடலாம் என்று ஒரு செவிலியர் தன்னிடம் சொன்னதாக என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
தீவிர இதயநோய் கொண்டவர்கள், அதுவும் மருந்துகளை உட்கொள்வதன் பலன் கிடைக்கப்பெறவிருப்பவர்கள், மருந்து உட்கொள்வதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தினாலும்கூட 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலேயே மரணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று அந்தப் பெண்ணிடம் நான் உறுதிபடக் கூறினேன்.
லாபம் எனும் கடமை
தவறான தகவல்களையும் அச்சத்தையும் பரப்பிவிடுவதும்தான் நம்மிடையே அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களில் மருந்து நிறுவனங்களின் வணிக நோக்கமும் ஒன்று.
“மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய பங்குதாரர்களுக்கு லாபம் கொடுத்தாக வேண்டிய தார்மிகக் கடமையையும் சட்டரீதியிலான பொறுப்பையும் அவை கொண்டிருக்கின்றன. ஆனால், சிறப்பான மருத்துவத்தை நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அளிப்பதில், அவற்றுக்கு அதே பொறுப்பும் கடமையும் இருப்பதில்லை. எல்லாவற்றையும்விட மோசம் எதுவென்றால் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தோல்வியும் மருத்துவர்கள், நிறுவனங்கள், மருத்துவ இதழ்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ரகசியக் கூட்டும்தான்” என்று ஆதாரத்தின் அடைப்படையிலான மருத்துவத்துக்கான மையத்தின் இதய மருத்துவர் பீட்டர் வில்ம்ஷர்ஸ்ட் கடந்த ஆண்டு ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்.
மரணத்துக்குக் காரணம்
கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீட்டர் காட்ஷ் சொல்லும் தகவலோ, இன்னும் அதிர்ச்சியளிக்கிறது: இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் அடுத்தபடியாக மரணத்துக்குக் காரணமாக இருப்பது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள்தான் என்பதே, அந்த முக்கியத் தகவல்! பி.எம்.ஜே. என்ற மருத்துவ இதழில் அவர் தந்திருக்கும் தரவுகளின்படி மன அழுத்தத்துக்கும் மூப்பு மறதி நோய்க்கும் கொடுக்கப்படும் மருந்துகள் உட்பட்ட மனநல மருந்துகளால் 65 வயதுக்கும் மேற்பட்ட 5 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.
2007-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் முன்னணி 10 மருந்து நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய பித்தலாட்டங்களுக்காகப் பெருமளவிலான அபராதத் தொகையைக் கட்டியிருக்கின்றன. அங்கீகரிக்கப்படாத மருந்துப் பரிந்துரைகளுக்காக மருந்துகளை விற்பது, ஆய்வு முடிவுகளைத் தவறாக முன்வைப்பது, மருந்துகளால் ஏற்படக்கூடிய தீங்குகளை மறைப்பது போன்றவை இந்த முறைகேடு களில் அடங்கும். ஆனால், இந்தக் குற்றச் செயல்கள் மூலம் தொடர்ந்து லாபம் கிடைக்கும்வரை, அவர்கள் இவற்றை நிறுத்திக்கொள்ளப் போவதே இல்லை.
பாதி ஆய்வு பொய்
மருத்துவ இதழ்களும் ஊடகங்களும் மருந்து நிறுவனங்களின் பித்தலாட்டங்களுக்குத் துணைபோவது மட்டுமல்ல, அறிவியல் தரவுகளை நியாயமான, சுதந்திரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்பவர்களின் குரல்களை அடக்குவதிலும் அவை கூட்டு சேர்கின்றன.
லான்செட் இதழின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்ட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொன்ன ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவம் சார்ந்து எழுத்துகளில் பாதி பொய்யே; இருட்டுக்கு இட்டுச்செல்லும் பாதையை நோக்கி, இன்றைய அறிவியல் திரும்பியிருக்கிறது என்கிறார் அவர்.
யாருக்கும் துணிவில்லை
மருந்துகள் எந்த அளவுக்கு ஆபத்தற்றவை என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி டேம் சாலி டேவீஸ் சமீபத்தில் உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. மக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் செயல்தான் இது. ஆனால், இந்த ஆய்வை நடத்துவதற்கு மருத்துவ அறிவியலுக்கான அகாடமியை அவர் கேட்டுக்கொண்டிருப்பதுதான் இதில் ஏமாற்றமளிக்கும் விஷயம்.
கோழிகளுக்குப் பாதுகாவலாகக் குள்ளநரியை நியமிக்கும் கதைதான் இது. ஏனெனில், அந்த அகாடமி சுதந்திரமாக இயங்கக்கூடியது அல்ல. எல்லா மருத்துவ வெள்ளோட்ட ஆய்வு முடிவுகளையும் அனைத்து மருத்துவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்று கோரி சமீபத்தில் ஓர் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு அந்த அகாடமி ஆதரவளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அரசியல்ரீதியிலான துணிவு சுத்தமாக யாருக்கும் இல்லை என்பதுதான் இவற்றிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.
நோயாளிகளுக்கு என்ன தேவை?
“நோயைக் கண்டறிவதில் மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவதில், அதே அளவிலான அளவுகோலைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு” என்று பேராசிரியர் கிறிஸ் ஹாம் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.
கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டிருந்த மேரி என்ற பெண்மணி யின் கதைக்கு வருவோம். தான் உட்கொண்ட ஸ்டேட்டின் மருந்துகளை நிறுத்திய ஒரு வாரத்தில் அவரது கால்தசை வலி மறைந்து, தான் ஒரு புதிய பெண்ணாக உருவெடுத்தது போல் உணர்வதாகக் கூறினார்.
அவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. முன்பைவிட வீரியம் குறைந்த மருந்தைக்கொண்டு தற்போது அவர் சமாளித்துவருகிறார். மருந்துகளுக்குப் பதில் அவருக்கு நான் பரிந்துரைத்த சில உணவு முறைகளைக் கடைப்பிடித்துவருவதால், இரண்டு கிலோ எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும் அவரால் முடிந்திருக்கிறது.
தரம் மிக்க சிகிச்சை
பெருநிறுவனங்களின் பேராசையும் அரசியல்ரீதியிலான தோல்வியும் மருத்துவப் பராமரிப்பையே இன்றைக்கு நிலைகுலையச் செய்திருக்கின்றன. தவறான மருத்துவ அறிவு கொண்ட மருத்துவர்களும், தவறான மருத்துவத் தகவல்கள் கிடைக்கப்பெற்ற நோயாளிகளும்தான் இன்று பல்கிப் பெருகியுள்ளனர்.
மிக மிக வெளிப்படையான அணுகு முறையையும் பொறுப்பேற்பையும் பின்பற்ற வேண்டிய காலம் இது. அப்படிச் செய்தால்தான் மருத்துவமனையிலேயே மிகவும் முக்கியமான நபரான நோயாளிக்குத் தரம் மிக்க சிகிச்சையை மருத்துவர்களாலும் செவிலியர்களாலும் வழங்க முடியும்.
“சமூகத்தின் கடைமட்டத்தில் இருப்போருக்கு அறிவைப் பெறுவதற் கான வழிமுறைகள் அனைத்தையும் உத்தரவாதப்படுத்துவதுதான், நாட்டில் உள்ள அனைத்துப் பணக்காரர்களின் செல்வங்களைவிடவும் முக்கியமானது” என்று அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, மருந்துகளை அதீதமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது!
- அஸீம் மல்ஹோத்ரா, லண்டனைச் சேர்ந்த இதய மருத்துவர், � தி கார்டியன்,
 நன்றி: ‘தி இந்து’
தி இந்து இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/aPQZiI

No comments:

Post a Comment