Tuesday, January 5, 2016

பருவ நிலை மாற்றம் சிறப்புக் கட்டுரை: ஊழித் தீயின் முதல் பொறி?


ஜார்ஜ் மான்பியோ
('தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழில் 19-12-2015 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

சூழலியல் பிரளயம் ஒன்று ஏற்பட்டிருந்தால் ஊடகங்கள் அதை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. என்ன, செய்தி நிகழ்ச்சிகளில் சுருக்கமான, பரபரப்பான செய்தியறிக்கைகளைக் கொடுப்பார்கள். ஆனால், ஏன் அப்படி நிகழ்ந்தது என்றோ, அதை எப்படித் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றோ அவர்களால் சொல்லியிருக்க முடியாது.
அப்புறம், செய்திகளின் பார்வை பொருளாதாரத்தை நோக்கித் திரும்பும். இந்தப் பேரழிவால் பங்குச் சந்தை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர்களின் வணிகச் செய்தியாளர்களிடம் கேட்பார்கள். அப்புறம் விளையாட்டுச் செய்திகள், அவ்வளவுதான். நான் இப்படி எழுதுவதன் மூலம் நான் பணிபுரியும் இதழியல் துறையின் மீதே, எனக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
சுற்றுச்சூழல் பேரழிவு
புவியின் பெரும் நிலப்பரப்பு ஒன்று தீப்பற்றி எரிகிறது. அது நரகத்தைப் பற்றி நாம் கற்பனை செய்வதுபோலவே தோன்றுகிறது. காற்று பழுப்பு மஞ்சள் நிறமாக ஆகிவிட்டது: சில நகரங்களில் பார்வைப் புலப்பாடு வெறும் முப்பது மீட்டர் தூரத்துக்கு வந்துவிட்டது. பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து போர்க்கப்பல்களில் குழந்தைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே, பல குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து போய்விட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உயிரினங்கள் தீக்கிரையாகிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு இதுதான்.
ஆனால், ஊடகங்கள் என்ன செய்கின்றன? இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படச் சிறப்புக் காட்சிக்கு என்ன உடை உடுத்திக்கொண்டு வந்தார், ரியாலிட்டி ஷோ ஒன்றில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெளியேறியது போன்ற விஷயங்கள்தான் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா, ஜப்பானைவிட அதிகம்
உலகின் வேறொரு மூலையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்தோனேசியாவின் 5,000 கி.மீ. நீள நிலப்பரப்பைத் தீ சூறையாடிக்கொண்டிருக்கிறது. உலகில் தற்போதைய எந்த நிகழ்வை விடவும் மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது. என்னைப் போன்ற ஒரு பத்தி எழுத்தாளர் சொல்லித்தான், இதைப் பற்றித் தெரிய வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லோருடைய அன்றாட வாழ்க்கையின் தலைப்புச் செய்தியாக அல்லவா, அது இருந்திருக்க வேண்டும்!
அந்த நரகத் தீயின் தீவிரத்தை வார்த்தைகளில் வடிப்பது கடினம். ஆனால், இந்த ஒப்பீடு நமக்கு உதவலாம்: அமெரிக்கப் பொருளாதாரத்தைவிட அதிக அளவில் இந்த காட்டுத் தீ கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. மூன்று வாரத் தீ, ஜெர்மனியின் வருடாந்திர கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டைவிட அதிக அளவில் இருந்திருக்கிறது.
இந்த ஒப்பீட்டையெல்லாம் கொண்டு நிலைமையின் தீவிரத்தை, நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் தொல்லியல் சின்னங்களைப் போலவே மீட்டெடுக்க முடியாத, விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை இந்தத் தீ சூறையாடியிருக்கிறது. ஒராங்ஊத்தன்கள், திட்டுடல் சிறுத்தைகள், வெளிர் மார்புக் கரடிகள், நீளக்கை குரங்குகள் (கிப்பன்), சுமத்ரா காண்டாவிலங்குகள், சுமத்ரா புலிகள் போன்ற உயிரினங்கள் ஏற்கெனவே அழியக்கூடிய ஆபத்துக்குத் தள்ளப்பட்டவை. இந்தத் தீயால் அவை தங்கள் வாழிடங்களைவிட்டுத் துரத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான விலங்குகள், ஏன் லட்சக்கணக்கில்கூட இருக்கலாம், வாழிடங்களைவிட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றன.
கண்ணீர் விடுகிறேன்
தீயின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும் பிரதேசங்களுள் ஒன்று மேற்கு பப்புவா. 1963-லிருந்து இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தேசம் அது. எனக்கு 24 வயது நடந்தபோது, அங்கே ஒரு ஆறு மாத காலம் இருந்தேன். இப்படிப்பட்ட பேரழிவுகளுக்கான காரணம் என்ன என்பதை, அங்கே அப்போது ஆராய்ந்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் அது ஓர் அற்புத உலகம். ஒவ்வொரு சதுப்பு நிலத்திலும், பள்ளத்தாக்கிலும் ஏராளமான ஓரிட வாழ்விகளைக் கொண்டிருந்த சொர்க்கம் அது. அவற்றில் எத்தனை உயிரினங்கள் கடந்த சில வாரத் தீயில் அழிந்துபோயினவோ? அங்கே எனக்கு மிகவும் பிடித்த இடங்களெல்லாம் இப்போது வெறும் சாம்பலாக மாறிவிட்டிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களைப் பார்த்து, நான் கண்ணீர் விடுகிறேன்.
இந்தப் பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை புரியவைப்பது சற்றே கடினம். 1997-ல் ஏற்பட்ட கொள்ளைத் தீக்குப் பிறகு இந்தோனேசியாவில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 15,000 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இவர்களின் இறப்புக்குக் காற்று மாசுபாடுதான் காரணம். இதுதான் மிக மோசமானது. சூரிய ஒளியே ஊடுருவாத புகைமூட்டத்தில் வாழ்ந்துவருபவர்களிடம் அறுவைசிகிச்சை முகமூடிகளை விநியோகிப்பதால் என்ன பிரயோஜனம்? இந்தோனேசியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட போர்னியோவின் நாடாளுமன்றத்திலேயே காப்பு முகமூடிகள் அணிந்து கொண்டுதான் உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கிறார்கள். நாடாளுமன்றக் கூடத்தில் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக அருகில் இருப்பவர்களைக்கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பற்றி எரியும் நிலம்
எரிந்துகொண்டிருப்பது மரங்கள் மட்டுமல்ல, அந்த நிலமும்தான். பெரும்பாலான வனப் பரப்புகளுக்குக் கீழே முதிரா நிலக்கரிப் படிவங்கள் (peat) இருக்கின்றன. நிலத்தை நெருப்பு ஊடுருவுவதால் வாரக் கணக்கில் தீ கனன்றுகொண்டிருக்கும்; சமயங்களில் மாதக்கணக்கில்கூட. இதனால் மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு, ஓசோன், அமோனியம் சயனைடு போன்ற விசித்திர வாயுக்கள் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன. புகைப்படலங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு நீள்கின்றன. இதனால் அண்டை நாடுகளுடன் வெளியுறவுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
ஏன் இப்படி நடக்கிறது? இந்தோனேசியாவின் காடுகளெல்லாம் பல தசாப்தங்களாக வெட்டுமர நிறுவனங்களால் துண்டாடப்பட்டுவருகின்றன. காடுகளில் உள்ள நீரை வெளியேற்றி வடிப்பதற்காக, முதிரா நிலக்கரி நிரம்பிய மண்ணின் ஊடாகக் கால்வாய்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.
காகிதம் தயாரிப்பதற்கான மரங்கள், வெட்டுமரங்கள், பாமாயில் போன்றவற்றுக்காகப் பணப்பயிர்த் தோட்ட நிறுவனங்கள் இந்தக் காடுகளுக்குள் நுழைந்து, அவற்றை அழிக்கின்றன. நிலத்திலிருந்து தாவரங்களை அப்புறப்படுத்துவதற்கான எளிமையான வழி, அவற்றைத் தீக்கு இரையாக்கிவிடுவதுதான். இந்தச் செயல்பாடுகள்தான் ஆண்டுதோறும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஓராண்டில் நடக்கும் மேற்கண்ட காடழிப்புச் செயல்பாடு, இந்த ஆண்டில் பருவநிலை தாறுமாறாக மாறுவதற்குக் காரணமாக உள்ள தீவிர எல் நீன்யோவைப் (El Nio) போல சூழலியல் பேரழிவுக்கான தெளிவான சூத்திரமாக மாறிவிடும்.
அரசின் முரண்கள்
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விதோதோ ஒரு ஜனநாயகவாதி, அல்லது அப்படி ஆக விரும்புபவர். ஆனால், பாசிசமும் ஊழலும் செல்லரித்திருக்கும் ஒரு நாட்டை அவர் ஆண்டுகொண்டிருக்கிறார். காடழிப்பு உள்ளிட்ட குற்றங்கள், அந்நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. இதற்கெல்லாம் 30 லட்சம் பேரைக் கொண்ட துணைநிலை ராணுவமொன்று உறுதுணையாக இருக்கிறது. அவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு மோசமான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. அதில் இயற்கைக்கு எதிரான குற்றமும் உள்ளடங்கும். இந்த ராணுவத்தினர்தான் அங்கு பொதுமக்களாலும் ஊடகங்களாலும் நாயகர்களாகப் போற்றப்படுகின்றனர்.
தீயைத் தடுத்து நிறுத்த ஜோகோ விதோதோ முயல்வதுபோல் தெரிந்தாலும், அவரது சக்திக்கும் ஒரு அளவு இருக்கிறது. அவரது அரசின் கொள்கைகளே முரண்பாடுகள் நிறைந்தவை: பாமாயில் உற்பத்திக்கு வழங்கும் புதிய மானியங்களே காட்டெரிப்புக்கு மேலும் மேலும் எண்ணெயை ஊற்றக்கூடியவை. வாடிக்கையாளர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் சில நிறுவனங்கள் மழைக்காடுகளை எரிப்பதை நிறுத்திவிடுகிறோம் என்று உறுதி அளித்திருக்கின்றன.
ஆனால், அரசு அதை கடுமையாக எதிர்த்திருக்கிறது. அப்படி நிறுத்தினால் வளர்ச்சி எப்படி சாத்தியம் என்பதே அரசின் வாதம். வரைபடத்தில் அந்த தேசத்தையே கருப்பாக்கிவிட்டது, பெருந்தீயின் புகை. இந்தத் தீயால் ஏற்பட்ட இழப்பு 3,000 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடி). இதுதான் அவர்கள் கண்ட வளர்ச்சி!
நாம் என்ன செய்யலாம்?
நமது இயங்குமுறைகள் பலவீனப்பட்டுப் போயிருக்கின்றன. ஆனால், நம்மால் சில விஷயங்களைச் செய்ய முடியும். பாமாயிலைப் பயன்படுத்தும் சில நிறுவனங்கள், தங்களுக்கு பாமாயிலை விநியோகிக்கும் நிறுவனங்கள் சூழலியல் அழிப்பில் ஈடுபடுகின்றனவா என்பதைக் கண்காணிக்கின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஸ்டார்பக்ஸ், பெப்ஸிகோ, கிராஃப்ட் ஹெய்ன்ஸ், யுனிலீவர் உள்ளிட்டவை, இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு சில உதாரணங்கள். இவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையென்றால், இவர்களின் தயாரிப்புகளை புறக்கணியுங்கள். நம்மால் செய்ய முடிவது அதுதான்!
அப்புறம் பிரச்சினைகளை ஊடகங்கள் புறக்கணிக்கும்போது, அரசுகளும் புறக்கணிக்கின்றன. ஊடக உலகில் திறமையற்றவர்கள் அதிக அளவில் ஊடுருவியிருப்பது, ஊடக உலகின் மீதான கார்ப்பரேட் உலகின் செல்வாக்கு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம். ஆக, ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவை எடுக்கின்றன: இந்தச் சூழலியல் பேரழிவை ஒரு பிரச்சினையாகக் கருதுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. இப்படி ஒரு பேரழிவு நடப்பதாகக் காட்டிக்கொள்ளாமல், ஊடகங்கள் அவற்றின் போக்கில் போய்க்கொண்டிருக்கும். தனது வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு மோசமாக சேவை செய்யும் துறை, வேறு எதுவும் இருக்குமா?
கட்டுரையாளர், பிரபல சூழலியல் எழுத்தாளர் 
©தி கார்டியன் 
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Xp3axd

No comments:

Post a Comment