எஸ். ஹுஸைன் ஜைதி
(‘தி இந்து’ நாளிதழில் 30-07-2015 அன்று, அதாவது யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினத்தன்று, வெளியான கட்டுரையின் முழுவடிவம். மொழிபெயர்ப்பு: ஆசை)
அந்தப் பெண்ணின் பெயர் ஜுபைதா.
அவளுடைய அப்பா அவளுடைய
அம்மாவை ஒரு அந்நியமான, விரோதமான தேசத்தில் அவள் பிறப்பதற்குச் சில நாட்கள்
முன்னதாக விட்டுவிட்டு, முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவதற்காகச் சென்றுவிட்டார்.
சில மாதங்களுக்குள் அந்தக் குழந்தையையும் அதன் அம்மாவையும் வந்து பார்ப்பதாக
வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றார்.
யாகூப் மேமன் தனது மனைவி
ராஹினை கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச
விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை
பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில்
புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.
“பாகிஸ்தானிலிருந்து
திரும்புவதற்கு மேலும் தாமதமானால் இந்தியாவுக்கு வந்து, இந்த வழக்கிலிருந்து எனது
பெயரை நீக்குவதற்கு மேலும் தடங்கல்கள் ஏற்படும் என்று அஞ்சினேன். நான் மனசாட்சி
உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள
விரும்பினேன்,” என்றார் யாகூப் மேமன். பாகிஸ்தானிலிருந்து அவர் தப்பியது குறித்து
விரிவாகச் சொல்லும்படி நான் வற்புறுத்திக் கேட்டபோது அவர் என்னிடம் சொன்ன
வார்த்தைகள்தான் அவை.