Thursday, May 7, 2015

பேறுகால வழிகாட்டி, தந்தையர்க்கும் சேர்த்து…மகி (ஆசை)
(‘தி இந்து’ நாளிதழில் 02.05.2015 அன்று வெளியான மதிப்புரையின் சுருக்கப்படாத வடிவம் இது)

புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவதற்கு அந்தப் புத்தகத்தைப் படிப்பதுதான் அடிப்படை. ஆனால், வெகுசில புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்லாமல் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதமுடியும். அப்படிப்பட்ட ஒரு புத்தகம்தான் டாக்டர் கீதா அர்ஜூனின் ‘ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி’ புத்தகம். வாசகராக மட்டுமல்லாமல் ஒரு பயனாளியாகவும் இருந்த இந்தக் கட்டுரையாளரின் அனுபவங்கள் வழியே இந்தப் புத்தகத்தைப் பார்ப்பது கூடுதல் மதிப்பைச் சேர்க்கும்.   

டாக்டர் கீதா அர்ஜூன், சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்களில் ஒருவர். மருத்துவத் துறையில் அறத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் கீதா அர்ஜூனின் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவங்களின் விளைவாகவும் தொடர்ச்சியாகவும் வெளியான ஆங்கிலப் புத்தகம்தான் ‘பாஸ்போர்ட் டூ எ ஹெல்தி பிரெக்னென்சி’. இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு திருமகள் புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

பேறுகாலம் என்னும் போராட்டம்
பேறுகாலம் என்பது மன உளைச்சல், உடல் உபாதைகள், எண்ணற்ற சந்தேகங்கள் போன்றவை மட்டுமல்ல சந்தோஷங்களும் அரிய தருணங்களும் நிரம்பியதுகூட. இப்படிப்பட்ட முக்கியமான காலத்தில் கர்ப்பிணிப் பெண்ணை அவருடைய தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…’ என்கிறரீதியில் இருக்கும் ஆண்கள் ஏராளம். பிரசவ நாள் நெருங்கிய பிறகோ, பிரசவம் முடிந்த பிறகோ, தூரத்து உறவினரின் திருமணத்தில் தலைகாட்டிவிட்டுச் செல்வதுபோலத்தான் ஆண்களில் பலரும் செய்வது வழக்கம். பேறுகாலம் என்பது ஏதோ கர்ப்பிணிப் பெண்களும் அவர்கள் வீட்டாருக்கும் மட்டுமேயான பொறுப்பு என்பதுபோல் இருக்கும் பழமைவாத மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் கீதா அர்ஜூன். பேறுகாலத்துக்கு முழுக்க முழுக்க கணவர்தான் பொறுப்பு என்கிறார். குழந்தை பிறந்ததற்குப் பிறகல்ல, குழந்தை உருவாகும் தருணத்திலேதான் தந்தை என்ற ஸ்தானம் ஒருவருக்குக் கிடைக்கிறது. எனவே, அவருடைய பொறுப்பும் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.

கருத்தரித்த ஒருசில வாரங்களுக்குள் பெண்களின் உடலிலும் மனத்திலும் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் விசித்திரமானவை. கர்ப்பிணியை மட்டுமல்ல அவரது கணவரையும் பல சமயங்களில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடக் கூடியவை. அந்தத் தருணங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாவிட்டால் பேறுகாலம் முழுவதுமே மனைவி- கணவன் இருவருக்கும் பெரும் போராட்டமாகப் போய்விடும். மருத்துவர் எப்போதும் நம் கூடவே இருக்க முடியாதல்லவா? ஆகவே, அது போன்ற தருணங்களில் மருத்துவரின் மிகச் சிறந்த பிரதிநிதியாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.

சில பெண்களுக்குப் பேறுகாலத் தொடக்கத்தில் வாந்தி என்பது அவ்வளவாகப் பிரச்சினை ஏற்படுத்தாது. ஆனால், சில பெண்களுக்கு கதையே வேறு, வாட்டி வதைத்துவிடும். பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும்போது ஏற்படும் தவிப்பைப் போன்ற உணர்வு அந்தப் பருவத்தில் கணவன்மார்களுக்கு ஏற்படும். ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட முறை வாந்தி, சாப்பாட்டைக் கண்டாளே எரிந்துவிழும் மனைவி, தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் மோசமான உடல் எடை குறைவு எல்லாம் சேர்ந்து தீராத மன உளைச்சலைக் கணவன்மார்களுக்கு ஏற்படுத்திவிடும். மனைவி சாப்பிடாவிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை என்னவாகும் என்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெரிய தவிப்பாக இருக்கும். அப்படியெல்லாம் பயப்படவே தேவையில்லை, வயிற்றில் உள்ள சிசுவுக்குத் தேவையான சத்துகளும் தடையில்லாமல் சென்று சேரும் என்பது போன்ற விஷயங்களை மருத்துவர் எப்படித் தெளிவுபடுத்துவாரோ அதே அளவில் இந்தப் புத்தகமும் தெளிவுபடுத்துகிறது.

முதல் உதை தரும் பரவசம்
பேறுகாலம் ஏற்படுத்தும் எல்லாப் பிரச்சினைகளையும் மறக்கடிக்கக் கூடியது வயிற்றுக்குள் அந்த சிசு கொடுக்கும் முதல் உதை. அதிலிருந்து வயிற்றுக்குள் நடக்கும் கால்பந்தாட்டம் பெரும் அதகளமாக இருக்கும். தாயால் மட்டுமல்ல தந்தையாலும் அந்த ஆட்டத்தையெல்லாம் நன்றாக உணர முடியும். தாயின் வயிற்றில் ஒரு பக்கத்திலிருந்து மேடு ஒன்று அந்தப் பக்கத்துக்கு நகரும். பேறுகாலம் தரும் பரவசங்களில் இதுவும் ஒன்று. சிசுவின் அசைவுகள் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 20 முறையாவது அசைவுகள் இருக்க வேண்டும். அப்படி அசைவுகள் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த நூலில் குறிப்பிட்டிருப்பது மிகவும் இந்தக் கட்டுரையாளருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

கட்டுரையாளரின் மனைவிக்குப் பிரச்சினைக்குரிய பிரசவமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சிசுவின் அசைவுகள் தினமும் கவனிக்கப்பட்டன. அசைவே அற்ற ஒரு நாளில் கட்டுரையாளருக்கும் அவரது மனைவிக்கும் சொல்லவே முடியாத அளவு பதற்றம் ஏற்பட்டது. அப்போது இந்தப் புத்தகமே உதவிக்கு வந்தது. குழந்தை மீண்டும் அசைய ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது. துள்ளலான இசை, குழந்தையின் அசைவைத் தூண்டும் என்று மருத்துவர் குறிப்பிட்டதற்கிணங்க அந்தக் கட்டத்தில் கென்னி-ஜியின் இசையும் பாடல்களும் உதவிக்கு வந்தன. இசை கேட்டு சிசு உதைத்தது அந்த சிசுவின் பிறப்புக்கு ஒப்பான பரவசத்தைத் தந்தது.

கரு வளர்ச்சியின் நிலை, அப்போது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை வார அடிப்படையில் இந்தப் புத்தகம் பதிவுசெய்கிறது. மருத்துவர் நம் அருகில் எப்போதும் இருக்கிறார் என்ற உணர்வை அதிகமாகக் கொடுப்பது இந்தப் பகுதி.

பேறுகாலம் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பதுபேறுகாலத்தில் பின்பற்ற வேண்டிய ணவுப்பழக்கம் முதலானவற்றைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பது போன்றவையும் இந்தப் புத்தகத்தின் சிறப்பானஅம்சங்கள்இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு பொறுப்பான தந்தைமை உணர்வை ஆண்களுக்குஏற்படுத்துவது இந்த ூலின் சாதனை எனலாம்.


ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு ஒரு வழிகாட்டி
டாக்டர் கீதா அர்ஜூன்
தமிழில்: ஹேமா நரசிம்மன்
விலை: ரூ. 350
வெளியீடு: திருமகள் நிலையம்,
புதிய எண்: 13, சுகான்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ்,
சிவப்பிரகாசம் சாலை, தி.நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 044-24342899

 -நன்றி ‘தி இந்து’
‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்த மதிப்புரையைப் படிக்க: பேறுகால வழிகாட்டி, தந்தையர்க்கும் சேர்த்து…
 
    


No comments:

Post a Comment