Thursday, April 16, 2015

நாளையும் பறவைகள் பாடுமா? - சாப்ளின் பிறந்த நாள் கட்டுரை


ஆசை
(16.04.2015 அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரை)

சாப்ளின் திரைப்பட உலகத்துக்குள் நுழைந்து 100 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திரையுலகைப் பொறுத்தவரை சாப்ளின் அடியெடுத்து வைத்த காலம் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கலாம், நிஜ உலகில் அப்படியல்ல. ஆம். சாப்ளினின் வருகையும் முதல் உலகப் போரின் தொடக்கமும் ஒரே ஆண்டில்தான் (1914) என்பது விசித்திர முரணாகத்தான் தோன்றுகிறது.
புது அறிவியல், புது யுகம் ஆகிவற்றின் சாத்தியங்களை அந்த உலகப் போரில்தான் பரிசோதித்துப்பார்க்க ஆரம்பித்தார்கள். மனிதர்களை இணைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானொலிகள் போன்றவையெல்லாம் நேர்மாறாக மனிதர்களை அழித்தொழிப்பதில் அந்தப் போரில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. சாப்ளின் இதையெல்லாம் கண்டு மனம் நொந்துபோயிருக்க வேண்டும். இதன் வெளிப்பாடுதான், இரண்டாம் உலகப் போரின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் இடம்பெறும் இந்த வசனம்:
“வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப் படுத்தியிருக்கிறோம். ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங் களைவிட நமக்கு அதிகம் தேவை மனிதமே. புத்திசாலித் தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும்.”
சாப்ளின் அறிவியலைக் குறைகூறவில்லை. அறிவியல் என்பது முதலாளித்துவத்தின் கருவியாக மாறிவிட்டதால்தான் எல்லாத் துயரங்களும் என்பது அவரது எண்ணம். கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவத்துக்கு எதிராகத் தனது திரைப் படங்களில் சாப்ளின் குரல் எழுப்பிக்கொண்டிருந்த காலகட்டம் என்பது தற்போதைய காலகட்டம் போன்று முதலாளித்துவம் பழுத்த காலகட்டம் அல்ல. முதலாளித்துவம் அப்போதுதான் குழந்தைப் பருவத்தில் இருந்தது. எனினும் சாப்ளின் தனது தீர்க்கதரிசனத்தால் அதன் அபாயங்களைக் கண்டுணர்ந்தார்.
சாப்ளின் என்றொரு தீர்க்கதரிசி
சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தை முதலாளித்துவத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியே தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்களை ஆட்டு மந்தையைப் போல் காட்டுகிறது. ஆம், தனிநபர், மனிதத்தன்மை என்ற அடையாளங்களை அழிப்பதுதான் முதலாளித்துவத்தின் லட்சியம். இயந்திரமயமாதல், முதலாளித்துவம் ஆகிய வற்றின் கொடுமையை இதைவிட யாரால் அழகாகச் சொல்ல முடியும்.
அந்தத் திரைப்படத்தில், தொழிலாளி சாப்பாட்டுக்குப் போகும் நேரத்தையும் மிச்சப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற நோக்கத்தில் உணவு ஊட்டும் இயந்திரம் ஒன்றை தொழிலாளி ஒருவரிடம் (சாப்ளின்) வெள்ளோட்டம் விடுகிறார் அவரது முதலாளி. அது சரிவர இயங்காமல்போய் சாப்ளினைத் துவம்சம் செய்துவிட, அவருக்கு மனநிலை பிறழ்ந்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், சிசிடிவி போன்ற கண்காணிப்பு அமைப்பின் மூலமாக எப்போதும் தொழிலாளிகளைக் கண்காணிக்கும் அந்த முதலாளி இன்றைய யுகத்தின் முன்னோடி. அதிலும் அந்த சிசிடிவி திரை மனிதக் கண்ணைப் போல சாப்ளினைப் பின்தொடர்வதும் சாப்ளினுக்கு ஆணையிடுவதும்தான் உச்சம். மேலும், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயர் பெல்ட்டில் இயந்திர பாகங்களை வேகவேகமாகத் திருகித் திருகி, வேலை பார்க்காத நேரத்திலும் கைகள் அதே போல் இழுக்கும் நிலைக்கு ஆளாகும் தொழிலாளி, இன்றைய தொழிலாளிகளுக்கெல்லாம் ஒரு முன்னோடித் தொழிலாளி. முதலாளித்துவத்தில் ஊறிய அமெரிக்காவால் இந்தத் திரைப்படத்தை அன்று ஜீரணிக்க முடியவில்லை என்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், இன்று பார்க்கும்போது இன்னும் அர்த்தம் பொருந்தியதாக இருக்கிறது இந்தப் படம்.
வேட்டையாடப்பட்ட கலைஞன்
இயந்திரங்களின் வருகை நிலப்பிரபுத்துவக் காலகட்டத்துக்கு முடிவுகட்டி, நவீன காலத்துக்கு உலகைக் கொண்டுசென்றது. அதுவரையிலான மதிப்பீடுகளையெல்லாம் நவீன யுகம் புரட்டிப் போட்டது. ஆனால், நவீன யுகம் தனக்கே உரிய புது நிலப்பிரபுத்துவத்தைக் கொண்டுவந்தது, அதுதான் முதலாளித்துவம். மனிதர்களின் வேலைப் பளுவைக் குறைக்கவும், பெருகிவரும் மக்கள்தொகையைச் சமாளிக்கவும் இயந்திரங்களைக் கொண்டு ‘பெரும் உற்பத்தி’ செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், இந்த ‘பெரும் உற்பத்தி’யின் நன்மையெல்லாம் சமூகத்தின் ஆதிக்கத் தரப்பினரையும், தீங்குகள் அனைத்தும் ஏழைகளையும் சென்று சேர ஆரம்பித்தன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என்ன ஆகும் என்ற கடுமையான எச்சரிக்கைதான் ‘மாடர்ன் டைம்ஸ்’. ஆனால், அமெரிக்காவும் சரி, உலகமும் சரி, அதைப் பொருட்படுத்தவேயில்லை. படம் வெற்றி பெற்றாலும் அதன் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன/ புறக்கணிக்கப்படுகின்றன.
மெக்கார்த்தி யுகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்ட காலத்தில், உலகின் மகத்தான திரைக்கலைஞன் சாப்ளின் தன் சொந்த நாட்டினராலேயே துரத்தப்படுகிறான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா தனது கலாச்சார சொத்துகளின் பட்டியலில் தற்போது வைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் அவரது திரைப்படங்கள், ‘கம்யூனிஸ வேட்டை’ காலங்களில் அந்தச் சமூகத்தாலேயே புறக்கணிக்கப்பட்டன. ஆனால், குழந்தைகளும், அன்பையே வாழ்வின் தத்துவமாகக் கொண்டவர்களும் சாப்ளினை என்றுமே புறக்கணிக்க வில்லை. “நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை” என்று சொன்னவரை எப்படிப் புறக்கணிக்க முடியும்?
அன்பென்ற பொதுவுடைமை
முதலாளித்துவத்துக்கு மாற்றாகவும் இன்றைய உலகின் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் வேறெந்த சித்தாந்தத்தையும் அல்ல, அன்பைத்தான் சாப்ளின் முன்வைத்தார். சாப்ளினின் ‘தி கிட்’ திரைப்படத்தில் ஒரு கனவு வரும். (இந்தத் திரைப்படத்தின் நகல்தான் எம்ஜிஆரின் ‘பெற்றால்தான் பிள்ளையா?’). அந்தக் கனவில் எல்லோருமே தேவதைகளாக இருப்பார்கள். எல்லோருக்குமே இறக்கை முளைத்திருக்கும். எல்லோருமே பறந்துவருவார்கள். யதார்த்தத்தில் கடுமையாக இருக்கும் போலீஸ்காரர்கூட அந்தக் கனவில் கனிவானவராக வருவார். அவருக்கும் வெள்ளை இறக்கை இருக்கும். யதார்த்தத்தில் சாப்ளினுடன் சண்டையிடுபவருக்கும் அந்தக் கனவில் இடம் இருக்கும். அவரும் இறக்கையுடன் வருவார். அவருடைய காதலிக்கு சாப்ளின் முத்தம் கொடுப்பதைக்கூட அவர் உற்சாகத்துடன் அனுமதிப்பார். அன்பின் உலகத்தில் பொறாமையோ, தன் உடைமை என்ற உணர்வோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அழகிய கனவு அது. அந்த உலகத்தில் தீமை நுழையும் போதுதான் எல்லாம் தலைகீழாகிவிடுகிறது.
‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. பெரும் பணக்காரர் ஒருவர், வாழ்க்கையில் துயரம் ஏற்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்ள வருவார். அவரது தற்கொலையைத் தடுக்க முயற்சிக்கும் சாப்ளின், வாழ வேண்டும் என்பதற்கான காரணமாக என்ன சொல்வார் தெரியுமா? “நாளைக்கும் பறவைகள் பாடும்.” உலகின் ஒட்டுமொத்த தற்கொலைகளையும் தடுக்கும் வாசகமல்லவா இது. இதைத்தான், இந்த நம்பிக்கையைத்தான், இந்த அன்பைத்தான் இந்த உலகுக்கு சாப்ளின் தனது செய்தியாக விட்டுச் சென்றிருக்கிறார்.
‘காலம் எனக்குப் பெரிய எதிரி' என்றார் சாப்ளின். ஆனால், கடந்த நூறு ஆண்டுகளாகப் புதுமை குறை யாமல் பல தலைமுறைகளை உற்சாகப்படுத்திய பின்னும், புதிதாக வரும் தலைமுறைகளையும் மயக்கிக் கொண்டுதான் இருக்கிறார் சாப்ளின். உண்மையில், ‘சாப்ளின்தான் காலத்துக்கு மிகப் பெரிய எதிரி’.
      - நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்.
 ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: நாளையும் பறவைகள் பாடுமா? 

சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

(தமிழில்: ஆசை. அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை)

 டிசம்பர் 25, 1949-ல் அரசியல் சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

ஜனவரி 26, 1950 அன்று முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அரசியலில் சமத்துவமும் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையையும் ஒருங்கே அடையவிருக்கிறோம். அரசியலைப் பொறுத்த வரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம்.
அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்? நமது சமூக, பொருளாதார வாழ்வில் இன்னும் எவ்வளவு காலம்தான் சமத்துவத்தை நாம் புறக்கணிக்கப்போகிறோம்? இப்படியே நாம் வெகு காலமாக அதைச் செய்தால் கடைசியில் நமது அரசியல் ஜனநாயகத்தைப் படுகுழியில்தான் போய்த் தள்ளிவிடுவோம்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் மக்களெல்லாம் அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பை, அதாவது நாமெல்லாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அந்தக் கட்டமைப்பை, தகர்த்தெறிந்துவிடக் கூடும்.
ஒரே தேசமா?
அடுத்ததாக நாம் விரும்புவது, சகோதரத்துவம் என்ற தத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே. சகோதரத் துவம் என்றால் என்ன? எல்லா இந்தியர்களும் சகோதரர்களே என்ற உணர்வு. அதாவது, இந்தியர்கள் ஓரினத்தவராக இருப்பார்கள் எனில். இந்தத் தத்துவம்தான் சமூக வாழ்க்கைக்கு ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தருகிறது. எனினும் அடைவதற்கு மிகவும் கடினமானது அது. அது எவ்வளவு கடினமானது என்பதற்கு ஜேம்ஸ் பிரைஸின் நூலிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புராட்டஸ்டண்டு திருச்சபை ஒன்று தனது பிரார்த்தனைகளை மறுபார்வையிட்டுக் கொண்டிருந்தது. பிரார்த்தனை வாசகங்களில் எல்லா மக்களுக்குமான பிரார்த்தனை வாசகத்தைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். ‘ஓ தேவனே, எமது தேசத்தை ஆசிர்வதியும்!’ என்ற வாசகத்தை ஒரு குருமார் பரிந்துரைத்தார்.
இந்த வாசகத்தைச் சட்டென்று ஏற்றுக்கொண்டார்கள். அடுத்த நாள் இந்த வாசகம் மறுபரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டபோது ‘தேசத்தை’ என்ற சொல்லுக்குச் சாதாரண மக்களிடமிருந்து நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. தேசிய ஒருமைப்பாடு என்பதை அந்தச் சொல் மிகவும் குறுக்குவதாகக் கருதினார்கள். எனவே, அந்தப் பிரயோகம் தவிர்க்கப் பட்டது, அதற்குப் பதிலாக ‘ஓ தேவனே, ஐக்கிய (அமெரிக்க) மாகாணங்களை ஆசிர்வதியும்’ என்ற வாசகம் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.”
அந்தச் சமயத்தில் அமெரிக்க மக்களிடையே மிகவும் குறைவாகவே ஒருமைப்பாடு நிலவியது. அமெரிக்க மக்களே தங்களை ஒரே தேசமாக நினைக்காதபோது, இந்தியர்கள் தங்களை ஒரே தேசத்தினராக நினைப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்! ‘இந்திய மக்கள்’ என்ற பிரயோகத்தை அரசியல் பார்வை கொண்ட இந்தியர்கள் பலர் வெறுத்த நாட்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பிரயோகத்தைவிட ‘இந்திய தேசம்’ என்ற பிரயோகத்தை அவர்கள் விரும்பினார்கள். நாமெல்லாம் ஒரே தேசத்தினர் என்று நம்புவதன் மூலம் பெரும் மாயையையே நாம் போஷிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
ஆயிரக் கணக்கான சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கும் மக்கள் எப்படி ஒரே தேசமாக ஆவார்கள்? தேசம் என்ற சொல்லின் சமூகவியல்ரீதியிலான அர்த்தத்திலும் உளவியல்ரீதியிலான அர்த்தத்திலும் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவெடுக்கவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரம் உணர்கிறோமோ அவ்வளவுக்கு நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரே தேசமாக நாம் உருவாவதன் அவசியத்தை உணர்வதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் தீவிரமாக நாம் சிந்திப்போம்.
இந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக இருக்கும், அமெரிக்காவை விடவும். அமெரிக்காவில் சாதிப் பிரச்சினை என்பதே இல்லை. இந்தியாவிலோ சாதிகள் இருக்கின்றன. சாதிகள் என்பவை தேசத்துக்கு எதிரானவை. சமூக வாழ்வில் அவையெல்லாம் பிளவை ஏற்படுத்துகின்றன என்பதே அதற்கு முதற்காரணம். அது மட்டுமல்லாமல், அந்த சாதிகளுக்கிடையே பொறாமையையும் ஆழ்ந்த வெறுப்பையும் உருவாக்குவதாலும் சாதிகள் தேசத்துக்கு எதிரானவையாக இருக்கின்றன.
உண்மையிலேயே ஒரு தேசமாக நாம் உருவெடுக்க விரும்பினால் இந்த முட்டுக்கட்டைகளையெல்லாம் நாம் தாண்டிவந்தாக வேண்டும். ஏனென்றால், தேசம் என்ற ஒன்று இருந்தால் தான் சகோதரத்துவம் என்பது நிதர்சனமாகும். சகோதரத்துவம் என்பது இல்லையென்றால் சமத்துவம், சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் மேற்பூச்சுக்களைப் போலவே ஆகிவிடும்.
ஆற்ற வேண்டிய பணிகள்
நாம் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்த என் சிந்தனைகள் இவைதான். இந்தச் சிந்தனைகள் சிலருக்கு உவப்பாக இல்லாமல் போகலாம். ஆனால், அரசியல் அதிகாரம் என்பது நீண்ட காலமாக ஒருசிலரின் ஏகபோகமாக இருந்தது என்றும், மக்களில் பலர் சுமை சுமக்கும் விலங்குகள் போல மட்டுமல்ல, இரையாகும் விலங்குகள் போலவும் நடத்தப்பட்டார்கள் என்றும் சொன்னால் அதை யாரேனும் மறுக்க முடியுமா? இந்த ஏகபோகம்தான், மேலான வாழ்வுக்கான சாத்தியங்களை அந்த மக்களிடமிருந்து பறித்தது.
அது மட்டுமல்ல, வாழ்க்கை என்பதன் சாரம் எதுவோ அதையும் அவர்களிட மிருந்து உறிஞ்சியெடுத்துவிட்டது. நசுக்கப்பட்ட இந்த மக்களெல்லாம் காலம்காலமாக மற்றவர்களால் ஆளப் படுவதில் களைத்துப்போய்விட்டார்கள், தாங்களே ஆள்வதற்கு அவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எது நல்லது?
நசுக்கப்பட்ட இந்த மக்களிடையே ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வு வர்க்கப் போராட்டமாகவோ வர்க்கப் போராகவோ மாறிவிட அனுமதிக்கக் கூடாது. அது நாடாளுமன்றத்திலும் பெரும் பிளவை ஏற்படுத்திவிடும். அதுவே ஊழி முடிவாகவும் ஆகிவிடும். பிளவுண்ட மக்கள் மன்றம் என்பது வெகு நாட்கள் நீடிக்க முடியாது. எனவே, அந்த மக்களின் லட்சியங்கள் சீக்கிரம் நிறைவேற்றப்படுவதென்பது குறிப்பிட்ட அந்த சிலருக்கும் நல்லது; தேசத்துக்கும் நல்லது; நாம் சுதந்திரத்தைப் பேணுவதற்கும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பைத் தொடர்வதற்கும் நல்லது. வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிறுவுவதன் மூலமே இதைச் சாதிக்க முடியும். அதனால்தான் இதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறேன்.
அவைக்கு இதற்கு மேலும் களைப்பூட்ட நான் விரும்ப வில்லை. சுதந்திரம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்பதில் சந்தேகமேயில்லை. என்ன பிரச்சினை என்றாலும் ஆங்கிலேயரின் மீது பழிபோடும் வாய்ப்பை சுதந்திரத்தின் மூலம் நாம் இழந்துவிட்டோம். இனிமேல் என்ன பிரச்சினை என்றாலும், அதற்கு நம்மையன்றி வேறு யாரும் பொறுப்பல்ல.
எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாத அபாயம் இப்போது நிலவுகிறது. காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நமது மக்கள் புதுப்புதுச் சிந்தாந்தங்களால் உந்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்களுக்கான அரசை அமைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களே நடத்தும் அரசாக இருப்பதில் அவர்களுக்கு ஈடுபாடு ஏதும் இல்லை.
‘மக்களால், மக்களே, மக்களுக்காக நடத்தும் அரசு’ என்ற தத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பை நாம் பாதுகாக்க விரும்பினால், நமது பாதையில் குறுக்கே கிடக்கும் தீமைகளை அடையாளம் காண்பதை நாம் தாமதப்படுத்தக் கூடாது, அவற்றை அகற்றுவதில் நாம் பலவீனமாக இருந்துவிடக் கூடாது. ஏனென்றால், அந்தத் தீமைகள்தான் மக்களால் நடத்தப்படும் அரசைவிட, மக்களுக்காக நடத்தப்படும் அரசை நாட வைத்துவிடும். எனவே, நாட்டுக்குப் பணியாற்றுவதற்கு அந்தத் தீமைகளை அகற்றுவதே வழி!
 -நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். 
 ‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க:  சமத்துவம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை

அம்பேத்கர் பேசுகிறார்


(தொகுப்பு: ஆசை, அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது)

வாழ்க்கை முறை
ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை. அனைத்துக் கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.

ஆவணம் அல்ல; ஆன்மா!
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வெறுமனே வழக்கறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய ஆவணம் அல்ல; அது வாழ்க்கைக்கான வாகனம். அதன் ஆன்மா என்பது எப்போதுமே இந்த யுகத்தின் ஆன்மாதான்.

அக மேம்பாடு
கடலோடு சேரும் நீர்த் துளி தனது அடையாளத்தை இழக்கும். ஆனால், மனிதன் தான் வாழும் சமூகத்தின் அங்கமாக இருப்பதால் தனது அடையாளத்தை இழப்ப தில்லை. மனிதனுடைய வாழ்க்கை என்பது சுதந்திரமானது. அவன் பிறந்தது சமூகத்தின் மேம்பாட்டுக்காக மட்டுமல்ல, அவனது அக மேம்பாட்டுக்காகவும்தான்.

முன்நிபந்தனை
மனம், ஆத்மா ஆகியவற்றின் விடுதலைதான் அரசியல்ரீதியாக மக்கள் வலுவடைவதற்கு அவசியமான முன்நிபந்தனை.

உயிர்ப்பின் அடையாளம்
சுதந்திரமான சிந்தனைதான் உண்மையான விடுதலை. ஒருவன் அகவிடுதலை அடைய வில்லை என்றால், உயிருடன் இருந்தாலும் அவன் பிணம் மாதிரிதான்.

பெண்கள்தான் அளவுகோல்
ஒரு சமூகத்தின் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே அந்தச் சமூகம் எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை அளவிடுவேன்.

எந்த மதம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்… மதம் என்பது மனிதனுக்காகத்தான். மதத்துக்காக மனிதன் அல்ல!

விசித்திர முரண்
இன்றைய இந்தியர்களை இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்கள் ஆட்கொண்டிருக் கின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டிருக்கும் அரசியல் லட்சியமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. ஆனால், அவர்களுடைய மதத்தில் வேர்கொண்ட அவர்களின் சமூக நெறிகளோ மேற்கண்ட மூன்றையும் மறுக்கிறது.

ஆட்சிக் கோட்பாடு
சமத்துவம் என்பது ஒரு கற்பனையாக இருக்கலாம், ஆனாலும் அதை ஒரு ஆட்சிக் கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

தனிமனித வழிபாடு
மதத்தைப் பொறுத்தவரை பக்தி என்பது ஆத்ம ஈடேற்றத்துக்கான பாதையாக இருக்கலாம். ஆனால், அரசியலைப் பொறுத்தவரை, பக்தியோ தனிமனித வழிபாடோ சீரழிவுக்கான பாதையாகி, கடைசியில் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும்.

இயந்திரங்களும் நவீன நாகரிகமும்
விலங்கைப் போல் மனிதன் வாழ்வதிலிருந்து அவனை விடுவிக்க இயந்திரங்களும் நவீன சமூகமும் மிகவும் அத்தியாவசியமானவை. அது மட்டுமல்லாமல், இயன்ற அளவுக்கு அவனுக்கு ஓய்வு நேரத்தையும் கலாச்சார வாழ்க்கையையும் தருவதற்கு அவை அவசியம். ‘இயந்திரங்கள், மேலும் இயந்திரங்கள்; நாகரிகம், மேலும் நவீன நாகரிகம்’ என்பதே ஜனநாயகச் சமூகத்தின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

முதலும் முடிவுமாக இந்தியரே!
இந்தியர் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் காட்ட வேண்டிய பற்றுக்கு நமது மதப்பற்று, கலாச்சாரப் பற்று, மொழிப்பற்று போன்ற எந்தப் பற்றாலும் துளிகூடப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. முதலும் முடிவுமாக நாம் எல்லோரும் இந்தியர்களாகவே இருக்க வேண்டும், வேறு எதுவாகவும் அல்ல!
நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ நாளிதழில் படிக்க: அம்பேத்கர் பேசுகிறார்

டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

(அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளில் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான தலையங்கம்)

இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்?” அன்றைக்கு, அதாவது 65 ஆண்டுகளுக்கு முன்னால், அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கேள்வியாக இன்றும் நிற்கிறது.
இந்தியாவில் சமூக ஜனநாயகம் கிடைக்காமல் அரசியல் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்காது என்பதைத் தனது வாழ்க்கையின் செய்தியாக வெளிப்படுத்திய அவர், சாதியை அழித்தொழிப்பதை ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையாகத் தனது கருத்துகளின் மூலம் வலியுறுத்தினார். அவரது கருத்துகள் தோற்றத்தில் தீவிரமானதாக இருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் மனிதர்களின் மனதில் உள்ள அறத்தைத் தட்டி எழுப்பும் ஆழமான ஆன்மிக உணர்ச்சியைக் கொண்டிருப்பவை.
உண்மையில், சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்ட ஒரு இந்திய சமூகத்தையே அவர் கனவு கண்டார். இந்த சகோதரத்துவத்தின் நீட்சியாகவே சமத்துவத்தையும் அம்பேத்கர் கண்டார். அதன் விளைவாகத்தான் இந்து மதச் சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள அம்பேத்கர் முயற்சித்தார். அதன் மூலம் இந்து சமூகத்தில் பெண் களுக்குச் சம உரிமையை நிலைநாட்ட முயன்றார். எனினும் இந்து அமைப்புகள், இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பால் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர முடியாமல் போனது.
அம்பேத்கருக்கு நேரு எவ்வளவோ உறுதுணையாக இருந்தும் கடைசியில் நேருவாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கோபத்தில் அம்பேத்கர் சட்டத் துறை அமைச்சர் பொறுப்பையே ராஜிநாமா செய்தார் என்றால், ஒடுக்கப்பட்ட இன மக்களைப் போலவே இந்து மதப் பெண்களின் உரிமைக்கும் அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது புலனாகும்.
நல்லவேளை, அம்பேத்கர் உருவாக்கிய இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் பெரும் பகுதியை அவரது வாழ்நாளுக்குள்ளாகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கினார் நேரு. அம்பேத்கர்தான் அந்தச் சீர்திருத்தத்தின் தலைமகன் என்பதையும் நேரு மறக்காமல் குறிப்பிட்டார்.
தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை எதிர்த்த அம்பேத்கர் அதன் சீர்திருத்தங்களில் பெருமளவு பங்காற்றினார் என்பதுதான் அவர் மகத்தான ஜனநாயகவாதி என்பதன் அடையாளம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். வாழ்நாளுக்குப் பிறகும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள மாக மாறி, இன்னும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருப்பவர் அம்பேத்கர். இதனால்தான், அந்த மக்களின் ஈடிணையற்ற தலைவராக அவர் இருக்கிறார். அதே காரணத்துக்காகத்தான் அவர் எல்லோருக்குமான தலைவராகிறார். கருப்பின மக்களுக்காகப் போராடினாலும் நெல்சன் மண்டேலாவை எல்லா மக்களும் தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்வது எதனால்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் சமத்துவத்தை நிறுவுவதற்கும் எந்த மனிதர் பாடுபடுகிறாரோ அந்த மனிதரே உலகம் முழுமைக்குமான தலைவராகிறார்.
ஏனெனில், சமூகநீதியின் திசை நோக்கி ஒரு சமூகத்தை அவர் விழிக்க வைப்பதே அந்தச் சமூகத்தைப் பல மடங்கு மேம்படுத்துகிறது. சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கி நம் சமூகம் சில அடிகளையாவது எடுத்துவைத்திருக்கிறது என்றால், அதற்கு அம்பேத்கரும் முக்கியமான காரணமல்லவா! இதற்காகவே, அம்பேத்கருக்கு நாம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அம்பேத்கர் நம் எல்லோருக்குமான தலைவர். நாம் அனைவரும் இதை உணரும் காலத்தில்தான் சமூகநீதியின் உச்சத்தில் நாம் இருப்போம்!
         - நன்றி ‘தி இந்து’.
 ‘தி இந்து’ இணையதளத்தில் படிக்க: டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்