Wednesday, March 11, 2020

நீரை அடைத்த வரலாறு!

படம்: வினிதா கோவிந்தராஜன்

ஆசை
(இந்து தமிழ் நாளிதழில் இன்று [11-03-20] அன்று வெளியான என் கட்டுரை)

சமீபத்தில் நடந்த தண்ணீர் கேன் நிறுவனங்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். குடிதண்ணீர் கிடைக்கப்பெறுதல் என்பது அடிப்படையான உரிமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. ரூ.35-க்கு முன்பு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் வேலைநிறுத்தத்தின்போது ரூ.70 வரை விற்கப்பட்டது. தமிழகமெங்கும் 1,700 அடைக்கப்பட்ட தண்ணீர் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. உரிமம் பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகமெங்கும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதன் விளைவுதான் இந்த வேலை நிறுத்தம். மாநிலமெங்கும் உள்ள அடைக்கப்பட்ட தண்ணீர் நிறுவனங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் தங்களின் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளவும் புதிதாக உரிமம் பெறவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அடுத்து வேலைநிறுத்தம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் நாம் அலட்சியமாக கடந்துசெல்லும் ஒரு முக்கியமான பிரச்சினையை நம் கவனத்துக்கு எடுத்து வருகிறது: நாம் குடிக்கும் தண்ணீர் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? நம்முடைய அரசு எந்த அளவுக்கு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?


ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பென்றால் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் தண்ணீர் தவித்தால் எந்த வீட்டிலும் வாங்கிக் குடிக்கலாம். பெரும்பாலும் அது கிணற்று நீராகத்தான் இருக்கும். ஆனால், தற்போது யார் வீட்டுக்குச் சென்றாலும் தண்ணீர் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, நீர் மாசடைந்தது போன்ற காரணங்கள்தான் மக்களை அடைக்கப்பட்ட தண்ணீரை நாடவைத்தது. தற்போது சிறுநகரங்களில்கூட அடைக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் வந்துவிட்டன.

முறைசாராத் தொழில்
அடைக்கப்பட்ட தண்ணீர் வணிகம் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்திருந்தாலும் இன்னும் அதை முறையான தொழில் என்று சொல்வதற்கில்லை. ஆனால், உலக அளவில் இது முறை சார்ந்த தொழிலாக உருவெடுத்திருக்கிறது. 2019-ல் அடைக்கப்பட்ட தண்ணீர் வர்த்தகம் உலக அளவில் 20.26லட்சம் கோடியாக இருந்தது. 2020-ல் இந்த வணிகம் 22.11 லட்சம் கோடியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-ல் 25.79 லட்சம் கோடியாக இருக்குமென்று கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி லிட்டர் என்ற அளவில் அடைக்கப்பட்ட நீரின் விற்பனை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குளிர் பானங்களின் விற்பனையைக் குடிநீர் விற்பனை ஏற்கெனவே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.  உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் ஒரு ஆண்டில் தண்ணீருக்குச் செலவிட்ட தொகை 2017-ல் ரூ. 2,380. இதுவே, 2021-ல் ரூ. 3,338-ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017-ல் செய்த ஆய்வின் படி ஆசிய-பசிபிக் பகுதியில்தான் அடைக்கப்பட்ட குடிநீர் அதிகம் நுகரப்படுகிறது. உலக அளவிலான நுகர்வில் இது 42% ஆகும். சீனா, இந்தியா என்ற உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகள் இருக்கும் பிரதேசம் இது. அதிக மக்கள்தொகையும் வறுமையும் சுகாதாரமின்மையும் பின்னிப்பிணைந்தவை. ஆகவே, இந்தப் பிரதேசங்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் வணிகம் சூடுபறக்கிறது. அடைக்கப்பட்ட தண்ணீர் நுகர்வில் இரண்டாவதாக இருப்பவை வட, தென் அமெரிக்க கண்டங்கள்.

அடைக்கப்பட்ட நீரை மக்கள் நாடுவதற்குப் பிரதான காரணம் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்ததும், கிடைக்கும் நீர் குடிக்கும் தன்மையில் இல்லாததும்தான். உள்ளூரில் மட்டுமல்ல உலக அளவிலும் இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துவருகிறது. இதனால் உலகில் நீர் இல்லை என்று அர்த்தம் இல்லை. பல கோடி ஆண்டுகளாக புவியில் இருக்கும் நீரின் அளவில் பெரிதும் மாற்றம் இல்லை. ஆனால், தற்போது மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது; நீரின் தொழிற்துறை பயன்பாடும் அதிகரித்திருக்கிறது; நீரின் இருப்பிடத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பயன்படுத்தப்படும் நீர் ஏதாவது ஒரு சுழற்சியில் மீண்டும் புவிக்கே வந்து சேரும். அதே அளவில் நீர் இருந்தாலும் பகிர்மானம் அதிகமாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புவியின் பரப்பில் 70% நீரால் சூழப்பட்டிருந்தாலும் இதில் நன்னீரின் பங்கு வெறும் 2.5%-தான். இதில் பெருமளவிலான நீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும் பனியாறுகளாகவும் உறைந்து கிடக்கிறது. ஆக, இந்த நன்னீரில் மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைப்பது 0.007%தான். இந்த நீரும் குடிப்பதற்கு முழுமையாக உகந்தததாக இருப்பதில்லை என்பதுதான் பெருந்துயரம்.

நீர் கொண்டுவரும் நோய்கள்
உலகெங்கும் 200 கோடி மக்கள் தூய்மையற்ற தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமன்றி, பாக்டீரியா, வைரஸ் போன்றவை கலப்பதால் நீர் மாசடைகிறது. கூடவே, மனிதர்களின், விலங்குகளின் கழிவுகளும் குடிநீரில் கலந்துவிடுகின்றன. இதனால் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்படுகின்றன. டைஃபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, ஈ.கோலை பாக்டீரியா தொற்று, ஹெப்படைட்டஸ்-ஏ போன்றவை அவற்றுள் சில. உலக அளவில் 8.3 லட்சம்பேர் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் மரணமடைகிறார்கள். இவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். சுத்தமான நீரை அருந்தினால் தேவையற்ற இறப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், ஏழ்மை, போர்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு, வறட்சி போன்றவற்றின் காரணமாக கணிசமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. இதற்கிடையேதான் குடிநீர் வணிகம் தழைத்துக்கொண்டிருக்கிறது.

சென்னையின் தாகம்
மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் வழங்கப்படும் தண்ணீரின் தரம் குறித்து மக்களுக்கு அச்சம் இருக்கிறது. இந்த அச்சத்தைதான் அடைக்கப்பட்ட தண்ணீர் விற்பனையாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சம் தண்ணீர் கேன்கள் விநியோகிக்கப்படுகின்றன. நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு வாரம் குறைந்தபட்சம் நான்கு தண்ணீர் கேன்கள் தேவைப்படுகின்றன. சென்னையின் குடிநீர்த் தேவையை ஈடுகட்ட சென்னையிலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் சுமார் 250-க்கும் மேற்பட்ட அடைக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றை முறையான கண்காணிப்புக்கு அரசு உட்படுத்துவதில்லை. இவற்றில் கணிசமானவை உரிமம் பெறாமலோ உரிமத்தைப் புதிப்பிக்காமலோ நடத்தப்படுபவை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறுகிறது.

சுத்தமான குடிநீர் வேண்டும் என்றுதான் மக்கள் இந்த அடைக்கப்பட்ட தண்ணீரை நாடுகிறார்கள். இவற்றில் எத்தனை நிறுவனங்கள் தரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குறியே. நாம் அருந்தும் தண்ணீர் நல்ல தண்ணீர்தான் என்ற நம்பிக்கையில் மக்கள் தண்ணீர் அருந்திகொண்டிருக்கிறார்கள். இந்த அடைக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் பலவற்றைப் பார்த்தாலே அவற்றை சுத்தம் செய்கிறார்களா என்ற சந்தேகம் வருகிறது. எதிர்திசை சவ்வூடு பரவல் முறையில் (Reverse Osmosis) சுத்திகரிக்கப்படும் இந்த தண்ணீரில் ‘முழுவதும் கரைந்துள்ள திண்மங்கள்’ (Total Dissolved Solids) 500 புள்ளிகளுக்குக் குறைந்துவிடக் கூடாது. ஆனால், பல தண்ணீர் கேன்களை சோதனையிட்டதில் இந்தத் திண்மங்கள் 175 புள்ளிகள் வரை இருக்கின்றன. இது உடல்நலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

சுத்தமான காற்று, சுத்தமான வாழிடம் போலவே சுத்தமான குடிநீரை வழங்குவதும் அரசாங்கத்தின் கடமை. நிலத்தடி நீர் ஏன் குடிக்கத் தகுதியற்றுப்போனது என்று பதில் சொல்லக் கடமைப்பட்டது அரசு. நிலத்தடி நீராதாரம் குன்றிவிட்ட நிலையில் மக்கள் விலை கொடுத்து வாங்கும் கேன் தண்ணீரின் தரத்தையேனும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

Friday, February 14, 2020

மறைந்துகிடக்கும் யாழ்



ரூமி

இவ்வுலகின் யாழையெல்லாம்
நீ உடைத்தாலுமென்ன மௌலா?
வேறுவேறு யாழுண்டு
ஆயிரமாயிரமாய் இங்கே.

காதல் யாழின் பிடிக்குள் விழுந்த நமக்கு
என்ன கவலை, நமது யாழும் குழலும் தொலைந்தால்.

இவ்வுலகின் யாழும் துந்தனாவும் எரிந்துபோனாலும்
மறைந்துகிடக்கும் யாழுண்டு பல, நண்பா.

செவிடுகளின் காதை எட்டவில்லையென்றாலும்
மீட்டொலியும் டங்காரமும் விண்ணைத் தொடும்.
இவ்வுலகின் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும்
அணைந்துபோகட்டுமே,
சிக்கிமுக்கிக் கல்லும் இரும்பும்
இங்கே இருக்கும் வரை என்ன கவலை?

கீதங்கள் யாவும் கடலின் சருமத்தில் நுரைத்துளிகளே
முத்துக்கள் மிதப்பதில்லை கடலின் சருமத்தில்.
ஆயினுமறிவாய் நுரைத்துளிகளின் வனப்பு
முத்துக்களிடமிருந்து வந்ததென்பதை,

அவனது ஜொலிப்பின் பிரதிபிம்பத்தின் பிரதிபிம்பம் நம் மீது.
கூடல் ஏக்கத்தின் கிளைகளே பாடல்கள் யாவும்
எனினும் வேருக்குக் கிளை என்றும் நிகராகுமோ?

உதடுகள் மூடி இதயத்தின் ஜன்னல் திற
ஆன்மாக்களுடன் பேச அதுதான் வழி.
(தமிழில்: ஆசை)

Thursday, February 13, 2020

வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப் போர்




ஆசை
(‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 13-02-2020 அன்று வெளியான என் கட்டுரை)

பரிதவித்துக்கொண்டிருக்கிறது ஆப்பிரிக்கா. யேமன், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் அப்படியே. கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டுப் போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும்.
பச்சை நிறம் கொண்ட இந்தப் பூச்சிகளை கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தினமும் பார்ப்பதுண்டு. தனித்தனிப் பூச்சிகளாக இவற்றால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், தனித்தனிப் பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக அவை பறக்கும்போது வழியிலுள்ள வயல்களில் எந்த தானியமும் மிஞ்சாத வகையில் வயல்களை மொட்டையடித்துவிடுபவை. இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. தற்போது படையெடுத்திருப்பவை இவைதான்.

வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை
பாலைவன வெட்டுக்கிளிகளின் ஆயுட்காலம் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் வரை என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி மூன்று கட்டங்களால் ஆனது. முட்டை, இளம் பூச்சி, வளர்ந்தது. ஒவ்வொரு பெண் வெட்டுக்கிளியும் ஒரு தடவைக்கு நூறு முட்டைகளுக்கும் மேல் இடும். ஒரு பெண் வெட்டுக்கிளி தன் ஆயுட்காலத்தில் மூன்று முறை முட்டையிடும். இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அவற்றின் இனப்பெருக்கத்துக்கு உகந்த மழைக்காலத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் படையெடுக்காத காலகட்டம் ‘அமைதிக் காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் ஓரளவு தரிசாகவும், பாலைவனமாகவும் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஆசியப் பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் தங்கிவிடுகின்றன. இது 30 நாடுகளையும்  1.6 கோடி சதுர கி.மீ. பரப்பையும் உள்ளடக்கியது. ஆனால், மழை பெய்து அவற்றுக்கு உகந்த தட்பவெப்ப நிலை ஏற்பட்டால் வெட்டுக்கிளிகள் 2.9 கோடி சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பரவக்கூடியவையாகும். இது 60 நாடுகளை உள்ளடக்கும். இந்த சமயத்தில் உலக மக்கள்தொகையில் 10%-ன் வாழ்வாதாரத்தை வெட்டுக்கிளிகள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.  

நூறு கோடி பூச்சிகள் சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமிக்கும். இந்தப் படை ஒவ்வொரு நாளும் 20 லட்சம் கிலோ பயிர்களை உட்கொள்ளக்கூடியவை. சிறிய அளவிலான வெட்டுக்கிளிகளின் படை கூட 35 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு உட்கொள்ளக்கூடிய அளவு உணவை உட்கொள்கிறது. இதுவரை வடகிழக்குப் பகுதியில் 5,000 சதுர கி.மீ. பரப்பளவில் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. கென்யாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் 100 சதுர கி.மீ. அளவு கொண்டது.

தள்ளாடும் ஆப்பிரிக்கா
தற்போதைய வெட்டுக்கிளி படையெடுப்பு செங்கடலை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் யேமன், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தும் தொடங்கியது. வெட்டுக்கிளிகள் பல்கிப் பெருகுவதற்கு புயலும் அதனால் ஏற்படும் மழையும் பெரும் உதவிபுரிகின்றன. அதுவும் முக்கியமாகப் பாலைவனப் பகுதிகளில் புயலுக்குப் பிந்தைய மழையில் தாவரங்கள் துளிர்க்கத் தொடங்குகின்றன. அந்தப் பிரதேசங்கள்தான் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் உருவாவதற்குத் துணைபுரிகின்றன. இப்படி 2018-லிருந்து 2019 வரையிலான குளிர்காலத்தில் யேமனிலும் ஓமனிலும் மழைபெய்து வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்தது. அங்கிருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் மேற்கே செங்கடலைத் தாண்டி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ என்று அழைக்கப்படும் சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதிக்குப் புலம்பெயர்ந்தன. பிறகு, ஜபூடி, எரித்ரியா, தெற்கு சூடான், உகாண்டா, கென்யா பகுதிகளில் ஊடுருவி டான்சானியா வரைக்கும் தற்போது வந்துவிட்டன. மேற்கில் இப்படியென்றால் கிழக்கே, பாகிஸ்தான் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துவிட்டன. இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் வரை வந்துவிட்டன.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது புதிய விஷயம் அல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்துவரும் ஒன்றுதான். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதேபோல் விவிலியத்திலும் பின்னாளில் குர்ஆனிலும் வெட்டுக்கிளிகள் இடம்பெற்றிருக்கின்றன. வரலாறு நெடுக வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 1900-க்குப் பிறகு இதுவரை ஆறு முறை மிக மோசமான பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் எடுத்துக்கொண்டால் 1926-1934, 1940-1948, 1949-1963, 1967-1969, 1986-1989 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிகழ்ந்திருப்பதுதான் மிக மோசமான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு என்கிறார்கள்.

பாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் ஓட்டத்தில் பறக்கக்கூடியவை. ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ. தொலைவைக் கடக்கக் கூடியவை. ஒரு நாளில் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டுக்கிளியால் கடக்க முடியும். தனி வெட்டுக்கிளியாக இருக்கும்போது அதன் பறக்கும் திறனும் கடக்கும் தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். கூட்டமாகச் சேர்ந்தால்தான் அது அசுரத்தனமான உத்வேகம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக,  1988-ல் ஒரு வெட்டுக்கிளி கூட்டம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கரீபியன் தீவுகளுக்கும் இடையிலான 5,000 கி.மீல் தொலைவை பத்தே நாட்களில் கடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, தனிப்பட்ட வெட்டுக்கிளி இரவில் பறக்கும் என்றால் கூட்டமாகச் சேர்ந்த வெட்டுக்கிளிகள் பகல் நேரத்தில் பறக்கும்.

என்ன செய்வது?

ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கெனவே உள்நாட்டுப் போர்களாலும் பசி, பட்டினியாலும் சிதைந்தும் சீரழிந்தும்போயிருக்கின்றன. இந்த நேரத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நிகழ்ந்திருப்பதால் பல கோடிக் கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போர்களால் செயலிழந்துபோன அரசு நிர்வாகங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கும் நிலையில் இல்லை.

வெட்டுக்கிளிகளின் படையெடுப்புகளுக்குப் பேசப்படும் தீர்வுகள் பல்வேறு காலங்களிலும் பல விஷயங்களை முன்வைத்தாலும் உள்ளபடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முழுமுற்றான வழிமுறை என்று ஒன்றில்லை. இப்போதும், ‘வெட்டுக்கிளிகள் சிறகு முளைக்காத நிலையில் உள்ளபோதே அவை கூட்டம் கூட்டமாக எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்; மழை பெய்து தாவரங்கள் முளைக்கத் தொடங்கிய இடங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசப்படுகின்றன. ஆனால், எது ஒன்றும் எளிதல்ல. இப்படிப் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. அதனால் நிலமும் மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆகவே, உயிரி பூச்சிக்கொல்லிகளைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கிடையே ஐநாவுக்கான ‘உணவு மற்றும் விவசாய அமைப்பு’ வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை சமாளிப்பதற்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 500 கோடியை அமெரிக்காவிடம் கோரியுள்ளது. என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் படைபடையாகத் திரண்டுவரும் வெட்டுக்கிளிகளை சமாளிப்பது சிரமம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். அவை தங்கள் வேட்டையை ஆடிவிட்டுத்தான் செல்லும். அப்படி ஆடிவிட்டுச் செல்லும்போது வெட்டுப்பட்டுக் கிடப்பவை பயிர்களும் ஏனைய தாவரங்களும் மட்டுமல்ல பல கோடிக் கணக்கானோரின் வாழ்க்கையும்தான்.

Wednesday, February 5, 2020

அம்பேத்கரின் ‘குரலற்றவர்களின் தலைவருக்கு’ நூற்றாண்டு


ஆசை

(டாக்டர் அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ இதழின் நூற்றாண்டையொட்டி 05-02-2020 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான எனது கட்டுரை)

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து எந்த ஒரு இயக்கமும் தனக்கான ஒரு ஊடகத்தைக் கொண்டிருப்பதை முக்கியமென்று கருதிவந்திருக்கிறது. அந்த நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்/ இருப்பவர்கள் தலித் மக்களே! அம்மக்களின் குரல் ஒலிப்பதற்கான அச்சு ஊடகமோ, காட்சி ஊடகமோ இன்றுவரை குறைவாகத்தான் இருக்கின்றன. ஊடகங்களில் பலவும் முற்பட்ட சமூகத்தினரால் நடத்தப்படுவதால், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவை பெரிதும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு காலமாகவே இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் மேற்கொண்ட முன்னோடி இதழியல் முயற்சிகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது நமக்குப் புலப்படுகிறது.

அது 1920, ஜனவரி 31. டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய மாதமிருமுறை மராத்தி இதழான ‘மூக் நாயக்’கின் முதல் இதழ் வெளியான நாள். ‘மூக் நாயக்’ என்றால், மராத்தி மொழியில் ‘குரலற்றவர்களின் தலைவர்’ என்று பொருள். இந்தப் பெயரை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மராத்திய பக்திக் கவிஞர் துக்காராமின் பாடல் ஒன்றிலிருந்து டாக்டர் அம்பேத்கர் தழுவிப் பயன்படுத்தினார். ‘மூக் நாயக்’ என்ற பெயருக்குக் கீழாக, அந்தப் பாடலும் இடம்பெற்றிருந்தது.

மூக் நாயக்கின் பின்னணி
முன்னதாக அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த அம்பேத்கர், லண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பரோடா மாகாண கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு, இந்தியாவுக்கு 1917-ல் வந்தார். மீண்டும் தனது ஆய்வைத் தொடரும் கனவோடு அதற்கு ஆகக்கூடிய செலவுக்குத் தொகையைச் சேமிப்பதற்காக ஒரு அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சில அனுபவங்கள்தான் அவரை சொந்தமாகப் பத்திரிகை நடத்தத் தூண்டின.

1918-19 ஆண்டுகளில் சவுத்பரோ கமிட்டி இந்தியாவுக்கு வந்தது. அது தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில், டாக்டர் அம்பேத்கரையும் முற்பட்ட பிரிவினர் சார்பில் சமூக சேவகர் வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் தங்கள் தரப்புகளின் வாதங்களை எடுத்துவைக்க அழைத்தது. இந்த விஷயத்தில் வித்தல் ராம்ஜியின் தரப்பு வாதங்களுக்குப் பத்திரிகைகள் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை என்று அம்பேத்கரின் மனம் வாடியது. கூடவே, ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை எடுத்துக்கூறி ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்தக் கடிதம் பிரசுரிக்கப்படவேயில்லை. இதெல்லாம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி பத்திரிகை வேண்டும் என்ற திசையை நோக்கி அம்பேத்கரை நகர்த்தின.

நிதி வசதி ஏதும் இல்லை என்றாலும் ஒரு லட்சிய உத்வேகத்துடன்தான் அம்பேத்கர் ‘மூக் நாயக்’ பத்திரிகையைத் தொடங்கினார். அவர் பத்திரிகை தொடங்கும் செய்தியை அறிந்த கோலாப்பூரின் சத்திரபதி ஷாஹு மகாராஜா அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2,500 நன்கொடையைத் தந்தார். பத்திரிகையின் தொடக்க நிலையில் இந்தத் தொகை பெரும் ஊக்கமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘மூக் நாயக்’ பத்திரிகையை அம்பேத்கர் தொடங்கினாலும் அதன் ஆசிரியர் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்ததில்லை. அரசுப் பணியில் இருந்ததுவும் இதற்கு ஒரு காரணம். மாதம் இருமுறை இதழாக ஒரு சனிக்கிழமை விட்டு அடுத்த சனிக்கிழமையில் அந்த இதழ் வெளியானது. ஆரம்பத்தில் பாண்டுரங் நந்தராம் பட்கர் அந்த இதழின் அதிகாரபூர்வ, பெயரளவிலான ஆசிரியராக இருந்தார். பிறகு, தின்யந்தேவ் கோலப் ஆசிரியர் பொறுப்பேற்றார். சில காலம் கழித்து அம்பேத்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோலப் பதவி விலகினார்.

மூக் நாயக் இதழின் முகப்பு

படிகளற்ற கோபுரம்
‘மூக் நாயக்’கின் முதல் இதழில்தான் தற்போது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அம்பேத்கரின் வரிகள் இடம்பெற்றன. “இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது. ஆகவே, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது. ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார். கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை. அதேபோல், மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை.” ‘

மூக் நாயக்’ அதன் பெயருக்கு ஏற்ப குரலற்றவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் ஊடகமாக விளங்கியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் எதிர்கொண்ட சாதிக் கொடுமைகளைப் பற்றி அந்த இதழுக்குக் கடிதம் எழுதினார்கள். அது சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்துக்கொண்டிருந்த காலம். ‘மூக் நாயக்’ பத்திரிகை இந்திய தேசியவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் அம்பேத்கரோ ‘மூக் நாயக்’ பத்திரிகையோ இந்திய சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அந்நியரின் கொடுமைகளை, ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இந்திய தேசியவாதம் நமக்குள்ளே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்பதால்தான் அது அம்பேத்கரால் தாக்குதலுக்கு உள்ளானது. இன்னொரு இதழில் அம்பேத்கர் இப்படி எழுதுகிறார்: “இந்தியா ஒரு சுதந்திர நாடாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. ஒரு நல்ல அரசாகவும் உருவாக வேண்டும். அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பானவற்றில் சம உரிமை என்பது உறுதிசெய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பிராமணர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதைவிட நூறு மடங்கு நியாயம், ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பிராமணர் கைகளுக்கு மட்டும் மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கியிருக்கிறது.”

புறக்கணிப்பு
‘மூக் நாயக்’ இதழ் தொடங்கப்பட்டபோது, பால கங்காதர திலகரின் ‘கேசரி’ பத்திரிகைக்கு மூன்று ரூபாய் பணத்துடன் விளம்பரம் அனுப்பப்பட்டது. விளம்பரம் செய்ய மறுத்துவிட்டு பணத்தைத் திருப்பி அனுப்பியது அந்தப் பத்திரிகை. இப்படியாக, தொடக்கத்திலேயே அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ புறக்கணிப்பை எதிர்கொண்டது. 1920-ல் 700 சந்தாதாரர்களைக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகை, 1922-ல் ஆயிரத்தைத் தொட்டது. இதற்கிடையில் பாதியிலேயே நின்றுபோன தனது பொருளாதார முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றுவிட ‘மூக் நாயக்’ பத்திரிகை தள்ளாடியது. அதற்கு முன்னதாக ஆறு மாதங்களில் 12 இதழ்களின் பெயர் குறிப்பிடப்படாத ஆசிரியராக இருந்து அம்பேத்கரே எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.
சில ஆண்டுகளில் ‘மூக் நாயக்’ நின்றுபோனது. ஆனாலும், பின்னாளில் பஹிஷ்க்ரிட் பாரத், ஈக்குவாலிட்டி ஜன்ட்டா ஆகிய இதழ்களை டாக்டர் அம்பேத்கர் தொடங்கி நடத்தினார். அம்பேத்கரின் ‘மூக் நாயக்’ தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவுக்கு வந்தாலும் அந்தக் காலத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று வலுவான ஊடகம் இல்லாதது இன்றும் தொடர்கிறது. அப்படிப்பட்ட ஊடகம் அமையும்போது அது ‘மூக் நாயக்’ இட்ட அடித்தளத்தின்மீதுதான் அமையும் என்பது டாக்டர் அம்பேத்கரின் தியாகத்துக்கும் துணிவுக்கும் சான்று!

Tuesday, January 21, 2020

கவிதை தீப்பந்தம் போன்றது! குட்டி ரேவதி பேட்டி


ஆசை
(18-01-20 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி)
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதையுலகில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் குட்டி ரேவதி. இதுவரை இவரது 12 கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. தற்போது குட்டி ரேவதியும் ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுதி வெளியாகியிருக்கிறது. கவிஞர், சிறுகதையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர் என்று பல முகங்களைக் கொண்ட குட்டி ரேவதியுடன் உரையாடியதிலிருந்து...

கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்?

அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால் எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்தமருத்துவத்தில் தமிழ் மொழிப்பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை அள்ளிவந்து எனக்கு வழங்கியது. கூடவே, 90- களில் திருநெல்வேலியில் நிலவிய இலக்கியப் பண்பாடு எனப் பல காரணங்கள் ஒன்றிணைந்துதான் கவிதைக்குள் நுழைந்தேன்.

நீங்கள் எழுத வந்த காலத்தின் பெண் கவி மொழியும் தற்போதைய பெண் கவி மொழியும் மாறியிருக்கிறது ௭ன்று நினைக்கிறீர்களா?

பெண் கவி மொழி காலந்தோறும் நிறைய மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய பரிமாணம் பெறுகிறது. உள்ளடக்கங்களில், கவிதை எழுத வேண்டிய நோக்கங்களில், மொழியின் திறத்தில் என எல்லாவற்றிலும். தற்போதைய பெண் கவிஞர்கள் மொழியை  எளிதான ஓர் ஊடகமாகப் பயன்படுத்தமுடிகிறது. நாங்கள் எழுத வந்தபோது, அது ஒரு போராட்டத்திற்கான வேகத்துடன் இருந்தது. எழுதுவதே விடுதலையாக இருந்த காலகட்டத்திலிருந்து விடுதலைக்கான குரலாய் கவிதையை ஆக்கும் சவால், இன்றைய பெண் கவிஞர்களின் செயல்பாட்டில் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக ௧விதை எழுதி வருகிறீர்கள். இந்தப் பயணத்தில் கவிதை உங்களுக்கு என்ன விதமான சாத்தியங்களை, திறப்புகளைத் தந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். பெருவாரியான ஆண் எழுத்தாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்த என் கவிதைகளை தற்போது ஜீரோ டிகிரி பதிப்பகம் 900 கவிதைகள் கொண்ட இரு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இந்தக் கவிதைகளை ஒரு கல்லூரி மாணவன் எந்த மனத்தடையும் சுய இறுக்கமும் இன்றி வாசிக்கத் தொடங்குகிறான்.

தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன். கவிதைகள் வழியாக, நம் தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு போராட்ட காலகட்டங்களின் ஊடாக நான் என் மொழியின் துணை கொண்டு கடந்து வந்திருக்கிறேன். இயன்றவரை, கவிதை மொழி சார்ந்த அத்தனை சாத்தியங்களையும், விடுதலைக்கான வழிகளையும் தொடர்ந்து கண்டறிந்துகொண்டே இருக்கிறேன்.

புனைவை முயன்று பார்த்தாலும் கவிதை உங்கள் பிரத்யேக தேர்வாக இருக்கிறது அல்லவா? அது ஏன்?

ஆமாம்! ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. மூன்றாவதாக, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘மீமொழி’, வெளிவரவிருக்கிறது.

உயிர்வாழ, தனிமனித மறுமலர்ச்சிக்கு எப்போதும் கவிதையுடன்தான் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. கவிதை, தீப்பந்தம் போன்றது. எனக்கு நானே வழியைக் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் கவிதை தரும் ஊக்கம் எல்லா காலங்களிலும் தேவையாக இருக்கிறது. சமூக மாற்றங்களை உணர்ந்துகொள்ள, அநீதிகளை எதிர்க்க, தனிமனித வாழ்வைத் தாண்டிச் சமூக உறவுகளைப் பேண என எல்லாவற்றுக்கும். கவிதைக்குள் ஒரு குரல், தீவிரத்தின் தீவிரமான குரல்  ஒன்று தீப்பிழம்பு போல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.  

இலக்கிய உலகில் பெண்களுக்கான இடம், அங்கீகாரம் எப்படி இருக்கின்றது?

எப்போதுமே இலக்கிய உலகம் பெண்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் கொடுப்பதில் தயக்கத்துடன் மனத்தடையுடன்தான் செயல்படுகிறது. ஆனால், அதை எதிர்பார்த்து இன்று எந்தப் பெண் எழுத்தாளரும் செயல்படுவதில்லை. கறாரான சமூக விமர்சனங்களை பெண்கள் தங்கள் எழுத்தில் முன்வைத்துக்கொண்டேயிருப்பதும், அதற்கான வாய்ப்புகளைத் தம் அளவில் உருவாக்கிக்கொண்டே இருப்பதும், சமூகத்தை அதை நோக்கி இணங்கச் செய்வதும்தான் அங்கீகாரங்களில் சேரும்.  எனில், பெண் எழுத்து பெருமளவில் இதை வென்றிருக்கிறது.  


'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது கடும் எதிர்ப்பை சந்தித்தீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது இன்றைய சூழல் எப்படி இருக்கிறது?

இருபது ஆண்டுகளில் பொதுச்சமூகம் பெண் எழுத்தை அணுகுவதில் நிறைய மாறியுள்ளது. பெண் எழுத்துதான் இன்று இலக்கியத்தில் முதன்மையானதாக இருக்கிறது. பெண் வாசகர்கள் இந்தப் புத்தகக் காட்சியில் அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனில், பெண் எழுத்தின் செயல்பாடும், பெண்கள் மொழியை நோக்கி வேகமாக நகரும் சமூக அசைவும்தான் காரணம்.

இன்று வெகு எளிதாக, ஒரு பெண் தன் கவி ஆளுமையைக் கையாள முடிகிறது. கவிதையில் சமூகக் கட்டமைப்பை எழுதுவது அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றைய பெண் கவிதை,  சாதி, மதம், கடவுள், திருமணம் என எந்தச் சமூக நிறுவனத்தையும் கவிதையில் விமர்சிக்கும் பொதுவெளியும் பயிற்சியும் அழகு நிலையும் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றி நிறைய பெண் கவிஞர்கள் நிலைத்த தீவிரத்துடனும், பொதுப்பொருள் சார்ந்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், பெண் எழுத்தைக் கவனப்படுத்துகின்றன. பதிப்பாளர்கள், பெண் படைப்புகளை முன்னணிப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தில் பெண் கவிதை ஒரு முழக்கம் போல், அழியாத பாடல்போல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் இன்னும் கவிதை வழியாக நாம் மாற்றியமைக்க வேண்டிய சிந்தனைகளும் போக்குகளும் நிறைய இருக்கின்றன.

உங்கள் திரைப் பயணம் எப்படி இருக்கிறது?

சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. ‘சிறகு’, என்ற என் முதல் படத்தை இயக்கிவருகிறேன்.  எப்போதுமே திரைத்துறையில் நான் இயங்க விரும்பினேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் பணியாற்றத் தொடங்கிய பின்பு அது சீரான தொழில் துறை சார்ந்த பயணமாக மாறியது. எதைச் செய்தாலும் எப்படிச் சிறப்பாக செய்வது என்று கற்றுக்கொடுக்க, அவருக்கு நிகர் அவரே. விரைவில், எனது ‘சிறகு’, திரையைத் தொடவிருக்கிறது.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்? சமகாலத்தில் நம்பிக்கை தருபவர்கள் யார்?

என் ஆதர்ச எழுத்தாளர் கவிஞர் பிரமிள்தான். காரணங்கள், நான் எழுத வந்தபோது சந்தித்த எதிர்ப்பின் அரசியலை, சாதிய ஒடுக்குமுறை அரசியலை அவர் எழுத்து வழியாகவே தெளிந்தேன். கவிதை மொழியை அவர் அளவுக்குக் கூர்மையான சமூக ஆயுதமாக மாற்றியவர் எவரும் இல்லை. கவிஞர் தேவதேவனின் சமரசமின்மை, அரிய ஒரு சமூக விழுமியம். எவரிடமும் காணக் கிடைக்காதது. நான் என்றென்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒன்று.

என்னுடன் எழுத வந்தவர்களை, இன்றைய இளங்கவிஞர்களைத் தொடர்ந்து நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் திசையும் மொழியின் போக்கும் எங்கே மாறுகின்றன என்பதை உணர்த்த வல்ல அரிய உரைகற்களாக தற்காலக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறென். பெண் கவிஞர்களில், சஹானா, மனுஷி, முபீன் சாதிகா, தனசக்தி, யாழினி ஶ்ரீ, தீபு ஹரி, தென்றல் சிவக்குமார், கயல், சிங்கப்பூர் கனகலதா என்று நிறைய பெண் கவிஞர்களைப் பின்தொடர்கிறேன். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து கவிஞராக உருவெடுத்திருக்கும் சுபா செந்தில்குமாரின் கவிதைகள் நவீனக் கவிதையின் அடுத்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. புதிய தலைமுறையினர் ஒவ்வொருவரின் கவிதை வெளிக்குள்ளும் பயணிப்பது, நான் மேற்சென்று எழுதிச்செல்ல உதவுகிறது.

Friday, January 17, 2020

பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது!




ஜெயரஞ்சன் பேட்டி


ஆசை
(17-01-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி இது)

பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...

தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?

ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.

எழுத ஆரம்பித்தது எப்படி?
மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்தான் என்னை எழுத வைத்தன. 1980-களில் ‘எம்ஐடிஎஸ்’-ல் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். என்னைச் சந்திக்க வரும் ஊடக நண்பர்கள் பொருளாதாரத்தைப் பற்றிக் கட்டுரை கேட்பார்கள். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, வேளாண் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் பற்றி அதிகம் எழுதினேன். நான் மாணவனாக இருந்தபோது காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது காவிரியைப் பற்றி எழுதினேன். இதெல்லாம்தான் தொடக்கப் புள்ளி. அதற்குப் பிறகு, முப்பதாண்டு காலம் தேசிய, சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியில் இருந்துவிட்டேன். ஆனால், வெகுஜன மக்களுக்குப் பொருளாதார சிந்தனையைக் கொண்டுசெல்லாமல் மேல்மட்ட நிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தேன். அந்தச் சூழலில், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னை இழுத்துக்கொண்டுபோய் விவாதங்களில் உட்கார வைத்தன. அதன் தொடர்ச்சியாக, ‘மின்னம்பலம்’ இணையதளத்தில் எழுதலானேன். அப்படித்தான், பணமதிப்பு நீக்கத்தின்போது 60 நாட்களில் 100 கட்டுரைகள் எழுதினேன். பின்னால், அது புத்தகமாகவும் வந்தது. நான் எழுதிய பிற பொருளாதாரக் கட்டுரைகளையும் தொகுத்து ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’ என்றொரு புத்தகத்தையும் வெளியிட்டோம்.

சமீப காலமாக நிறைய பொருளாதாரப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் படுகின்றன அல்லவா?

நல்ல புத்தகங்கள் வருகின்றன. தாமஸ் பிக்கட்டியின் நூல் தமிழில் வந்திருக்கிறது. ஒரு சாதாரண வாசகரால் பிக்கட்டியை எடுத்தவுடன் படிக்க முடியாது. ஆகவே, இது போன்ற புத்தகங்களில் நான்கைந்து பக்கங்களில் ஒரு எளிமையான அறிமுகம் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய வளர்ச்சி என்கிறோம், ஆனால் இந்த வளர்ச்சியால் யாருக்குப் பயன் என்று கேட்டுப் பார்க்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது, இதில் சாதாரண மக்களின் வருமானம் எப்படி இருக்கிறது, செல்வந்தர்களின் வருமானம் எத்தனை மடங்காக ஆகியிருக்கிறது; இதைப் பற்றித்தான் தாமஸ் பிக்கெட்டி எழுதியிருக்கிறார் என்று சொன்னால் வாசகர்கள் உள்ளே வருவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.

யாருடைய பொருளாதாரச் சிந்தனைகள் தமிழுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
வலதுசாரிச் சிந்தனைகளும், அதற்கு மாற்றாக இருக்கும் இடதுசாரிச் சிந்தனைகளும் வர வேண்டும். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான மோதல்கள்தான் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவுசெய்துகொள்வார்கள். வலதுசாரிச் சிந்தனையைப் பொறுத்தவரை, அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று யார் சொன்னார்களோ அவர்களே, ‘நாம் ரொம்பவும் அதிகமாகப் போய்விட்டோமோ’ என்று கவலை தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் பணக்காரர் களான பில் கேட்ஸ் போன்றவர்கள், ‘எங்களிடம் அளவுக்கதிகமாகப் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பன்னாட்டு நிதியமே, ‘நாம் ரொம்பவும் அதீதமாகப் போய்விட்டோமோ’ என்று அவர்களுடைய பத்திரிகையில் எழுதுகிறது. கட்டுக்கடங்காத ஏற்றத்தாழ்வு இருக்கும்போது முதலாளித்துவமே தன்னைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் ஒன்றும் அற உணர்ச்சியால் இப்படிக் கவலைப்படவில்லை. அமைப்புக்கே ஆபத்து வந்துவிடும்போல் இருக்கிறதே என்றுதான்.

தமிழ்நாட்டின் பொருளாதார முன்னெடுப்புகள் எப்படி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கின்றன என்ற முறையில் விரிவாகப் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?
தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்த மாநிலமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் சமூக நீதிதான். அது இல்லை என்றால் கேரளம், தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருப்பதுபோல் வெகுசிலருக்கான வளர்ச்சியாக மட்டுமே இருந்திருக்கும். அதுதான் மக்களை அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபடி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி நகர்த்தும்போது அவர்கள் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்கள். அப்படி விடுபடும்போது அவர்களுடைய பணமும் சக்தியும் நேரமும் அவர்கள் அடுத்த கட்டங்களை நாடிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் சாப்பாட்டுக்கு மற்றவர்களை சார்ந்திருந்த சூழல் இருக்கிறதல்லவா! எங்கள் ஊர் திருவையாறு பக்கத்தில், காவிரிக் கரையில் இருக்கிறது. தண்ணீர் அவ்வளவு ஓடும் அந்தப் பகுதியிலேயே வருஷத்தில் 110 அல்லது 120 நாட்கள்தான் விவசாய வேலை இருக்கும். மீதி நாள் வேலை இருக்காது. வேலை இருந்தால்தான் சம்பளம். அந்த மாதிரி சூழல் இருந்த காலத்தில் ஏப்ரல் வந்தால் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கும். ஜூன் 1-ம் தேதியெல்லாம் சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது. அப்போது ஆண்டை வீட்டுக்குப் போய்தான் தலையைச் சொறிந்துகொண்டு நிற்க வேண்டும். அவர்களும் உடனேயே கொடுத்துவிட மாட்டார்கள்.  கூனிக் குறுக வைத்து ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அதற்கப்புறம்தான் இரண்டு கலம் நெல் தருவார்கள். அண்ணாவும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுமாகச் சேர்ந்து அந்தச் சூழல் அடியோடு புரட்டிப்போடப்பட்டது. சாப்பாட்டுக்காக யாரும் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை என்றானது. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது. ‘எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கிவிட்டார்கள். யாரும் வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்வது மேல்குடிப் பார்வை மட்டுமல்ல, மத்தியதர வர்க்கத்துக்கும் அந்தப் பார்வை ரொம்பவும் வசதியாக இருக்கிறது. இப்படி இருக்கும்போதுதான் திராவிட இயக்கத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

உங்களது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ புத்தகம் பல முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. எப்படி வந்தது இந்த யோசனை?
நான் ‘எம்ஐடிஎஸ்’-ல் சேர்ந்தபோதிலிருந்தே ஒரு விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தது. அது நிலச்சீர்திருத்தம் தொடர்பானது. அப்போதெல்லாம் நிலச்சீர்திருத்தம் என்றால் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. இப்போது சீர்திருத்தம் என்றால் இல்லாதவர்களிடம் பிடுங்கி இருப்பவர்களுக்குக் கொடுப்பதாக மாற்றிவிட்டார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாதில் உள்ள ‘தேசிய ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்’ ஒரு நல்கை கொடுத்தது. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் குத்தகைதாரர்களின் வாழ்க்கை நிலை என்னவாகியிருக்கிறது என்பதுதான் எனது ஆய்வு. அதற்காகப் போய் பார்க்கும்போது எப்படி எல்லாம் தலைகீழாக மாறிப்போயின என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பெரிய அறிக்கை ஒன்று எழுதினேன். அதன் தமிழாக்கம்தான் ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகம். யாரிடமிருந்து யாருக்கு நிலம் போனது, எந்தக் காலகட்டத்தில் போனது, சட்டங்கள் என்ன செய்தன, சட்டங்களைத் தாண்டி சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் இதில் சொல்லியிருக்கிறேன்.

உங்களின் அடுத்தடுத்த எழுத்துத் திட்டங்கள் என்னென்ன?
என்னுடைய ஆய்வுப் பணிகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது. அடுத்த புத்தகக்காட்சிக்குள் தமிழகப் பொருளாதார நிலை பற்றி இரண்டு நல்ல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற யோசனை இருக்கிறது.

Monday, January 13, 2020

ஆன்மா என்னும் புத்தகம்: நாமே புத்தர்



என்.கௌரி
(13 டிசம்பர், 2018-ல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரை)

அமைதியை அடைய வேண்டுமென்றால், நாமே அமைதியாக இருக்க வேண்டும். இந்த எளிமையான உண்மையைத்தான், பவுத்தத் துறவியும் அறிஞரும் கவிஞரும் அமைதிக்கான செயல்பாட்டாளருமான திக் நியட் ஹான். Being Peace (‘அமைதி என்பது நாமே’) புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் 1987-ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 2,50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் இந்த ஆண்டு (2018) வெளியான இந்தப் புத்தகத்தை ஆசைத்தம்பி மொழிபெயர்த்திருக்கிறார்.

நாம் உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் அதை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று திக் நியட் ஹான் சொல்கிறார். நமக்குள் எப்போதுமே இருக்கும் உண்மையான அமைதியை, அதாவது நமது புத்த இயல்பை விழிப்படையச் செய்வதைப் பற்றி அவர் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.

இந்த விழிப்புணர்வு எவ்வளவு வலிமையானது என்பதை அவரது தெளிவான விளக்கங்கள் நமக்குப் புரியவைக்கின்றன. நம் மன அமைதிதான் நம் அனைத்துச் செயல்களுக்குமான வழிகாட்டியாக இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. பவுத்தம், தியானம் பற்றிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.

மலரென மலர முடியும்

“நாம் மனத்தில் அமைதியுடன் இருந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், மலரென மலர முடியும் நம்மால், நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும், நம் சமுதாயம் முழுவதற்கும் நமது அமைதியால் பயன் கிடைக்கும்” என்று திக் நியட் ஹான் விளக்குகிறார்.

இந்தப் புத்தகம், ‘துன்பப்படுதல் மட்டும் போதாது’, ‘மூன்று ரத்தினங்கள்’, ‘உணர்வுகளும் புலனறிவும்’, ‘பயிற்சியின் அடிப்படை’, ‘சமாதானத்துக்காகப் பாடுபடுதல்’, ‘சகவாழ்வு’, ‘தினசரி வாழ்க்கையில் தியானம்’ என்ற ஏழு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கிறது.

நாம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லாவிட்டால், நம்மால் நம் அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. வாழ்க்கை என்பது அச்சமூட்டக்கூடியது, அற்புதமானது என இரண்டுமானதாகவும் இருக்கிறது. நாம் தியானம் செய்வதன் நோக்கம் என்பது இந்த இரண்டு அம்சங்களையும் எதிர்கொள்வதற்காகத் தான் என்று அவர் விளக்குகிறார். நாம் புன்னகைப்பதாலும் மூச்சு விடுவதாலும் அமைதியாக இருப்பதாலும்தான் நம்மால் நமக்குள் அமைதியைக் கொண்டுவர முடியும்.

புன்னகையும் மூச்சுப் பயிற்சியும்

நாள் முழுவதும் நாம் புன்னகைசெய்வதைப் பயிலலாம். புன்னகைக்க முயலும்போது முதலில் நமக்கு அது கடினமானதாகத் தோன்றலாம். அப்படி இருந்தால் நாம் அது ஏன் என்று யோசிக்க வேண்டும். புன்னகைத்தல் என்பது நம்மைக் குறித்த உணர்வுடன் நாம் இருக்கிறோம், அதாவது நம்மேல் நமக்கு முழு ஆளுமை இருக்கிறது, நாம் மறதியில் மூழ்கிவிடவில்லை என்பது ஆகும்.

இந்தப் புன்னகையை நாம் புத்தரின் முகத்திலும் போதிசத்துவர்களின் முகங்களிலும் காணலாம். மூச்சுப் பயிற்சியின்போதும் புன்னகைக்கும்போதும் நாம் உச்சாடனம் செய்யும் வகையில், இந்தக் கவிதையை அவர் விளக்குகிறார்:

“மூச்சை இழுக்கும்போது, நான் உடலையும் மனதையும்

அமைதியடையச் செய்கிறேன்.

மூச்சை விடும்போது, நான் புன்னகைக்கிறேன்.

தற்கணத்தில் நிலைக்கும்போது

நான் உணர்கிறேன்

இக்கணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்று.”

இந்தக் கவிதை புன்னகையின் வல்லமையை நமக்குப் புரியவைக்கிறது.

புத்தர்கள் என்பது நாம்தான். ‘புத்’ என்ற வேர்ச்சொல், விழிப்புணர்வு பெறுதல், அறிதல், புரிந்துகொள்ளுதல்’ என்று பொருள்படும். விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும் ஆண் அல்லது பெண் புத்தர் எனப்படுவர். இந்த விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும், அன்பு காட்டும் திறன் என்பதுதான் புத்தர் இயல்பு என்று அழைக்கப்படுகிறது.

சீனர்களும், வியத்நாமியர்களும், ‘நான் என்னில் உள்ள புத்தரிடம் திரும்பிச்சென்று அதன்மேல் நம்பிக்கை கொள்கிறேன்’ என்று சொல்வார்கள். ‘என்னில்’ என்று சேர்ப்பது நீங்களேதான் புத்தர் என்பதை மேலும், தெளிவாக்குகிறது என்பதை அவர் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சமாக இதில் விளக்கப்பட்டிருக்கும் பதினான்கு விதமான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளைச் சொல்லலாம். ‘வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல்’, ‘எந்தப் பார்வையுடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருத்தல்’, ‘சுதந்திரமான சிந்தனையுடன் இயங்குதல்’, ‘துன்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருத்தல்’, ‘எளிமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்தல்’, ‘கோபத்தைக் கையாள்தல்’, ‘தற்கணத்தில் மகிழ்ச்சியாக இருத்தல்’, ‘பிறருடனும் சமூகத்துடனும் தொடர்பில் இருத்தல்’, ‘உண்மையாகவும் அன்புடனும் பேசுதல்’, ‘பெருந்தன்மை’ உள்ளிட்ட பதினான்கு வகையான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளை இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது.

அமைதியால் உலகத்தை நிறைக்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

திக் நியட் ஹான்:

1926 –ம் ஆண்டு வியத்நாமில் பிறந்தார். தன் பதினாறாவது வயதில் பவுத்த துறவியானார். வியத்நாம் போர் பாதிப்பிலிருந்து அகதிகளை மீட்பதற்காக ‘engaged Buddhism’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தன் நாற்பதாவது வயதில் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டில் ‘ப்ளம் வில்லேஜ்’ மையத்தில் தற்போது பவுத்தத்தைக் கற்பித்து வருகிறார். எந்த ஒரு சித்தாந்தத்தையும் அது பவுத்தமாக இருந்தாலும், விடாப்பிடியாக அதைப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை இவர் போதித்துவருகிறார்.  ‘TheMiracle of Mindfulness’, ‘The Sun My Heart’, ‘Living Buddha’, ‘A Guide to Walking Meditation’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.



வியத்நாம் போரில் சேவையாற்றிக்கொண்டிருந்த பவுத்தத் தன்னார்வலர்கள் பலரும் உயிரிழந்தார்கள். அவர்கள் வன்முறையற்ற வழியில், வெறுப்பில்லாமல் இறப்பது எப்படி என்று திக் நியட் ஹான் எழுதிய கவிதை இது. அந்தக் கவிதையின் தலைப்பு – ‘பரிந்துரை’

எனக்கு வாக்குறுதி கொடு

எனக்கு வாக்குறுதி கொடு இன்றே,

எனக்கு வாக்குறுதி கொடு இப்போதே,

தலைக்கு மேலே சூரியன்

துல்லியமாக உச்சியில் இருக்கும்போதே

எனக்கு வாக்குறுதி கொடு:

மலையளவு வெறுப்பையும் வன்முறையையும் கொண்டு

அவர்கள் உன்னை அடித்து வீழ்த்தினாலும்,

ஒரு புழுவை மிதிப்பதுபோல்

உன்மீது ஏறி நின்று நசுக்கினாலும்,

உன்னைக் கொன்று கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு

உன் குடலை உருவினாலும்,

நினைவில் கொள், சகோதரா,

நினைவில் கொள்:

மனிதன் நம் எதிரியல்ல.

உன் தகுதிக்கு ஏற்றது காருண்யம்தான்.

அது வெல்ல முடியாதது,

மனிதனில் உள்ள மிருகத்தைக் காண

வெறுப்பு உன்னை ஒருபோதும் விடாது.

ஒரு நாள், இந்த மிருகத்தைத் தன்னந்தனியாக நீ சந்திக்கும்போது,

உன் துணிவு தளராமல், உன் கண்கள் கருணையுடன்

சற்றும் கஷ்டப்படாமல்

(அவற்றை யாரும் பார்க்கவில்லையெனினும்),

உன் புன்னகையிலிருந்து

பூவொன்று பூக்கும்.

பிறப்பு இறப்பின் ஆயிரமாயிரம் உலகங்களினூடாக

உன்னை நேசிப்பவர்கள்

உன்னைக் காண்பார்கள்.

மறுபடியும் தன்னந்தனியாக,

தாழ்ந்த தலையுடன் நான் செல்வேன்,

அன்று நித்தியத்துவமாக மாறிவிட்டது என்பதை அறிந்தவாறு,

நீண்ட, கரடுமுரடான சாலைமீது,

சூரியனும் நிலவும்

தொடர்ந்து ஒளிரும்.

-நன்றி: ‘இந்து தமிழ் திசை’, என்.கௌரி

Wednesday, January 8, 2020

பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது- ஆசையின் கவிதைகள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

(ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு விருது வழங்கப்பட்டபோது கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் ஆற்றிய உரை இது)

சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின் சார்பில் விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தன் மற்றும் கவிஞர் ஆசைக்கு எனது வாழ்த்துகள். ரவி சுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன், சந்தியா நடராஜனுக்கு எனது வணக்கம்.

புத்தகப் பதிப்பில் நேர்த்தியையும் தொழில்முறை ஒழுங்கையும் கொண்டுவந்த க்ரியா பதிப்பகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் கவிஞர் ஆசை. க்ரியாவின் புகழ்பெற்ற தற்காலத் தமிழ் அகராதிப் பணியிலும், பதிப்புப் பணிகளிலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். க்ரியா வெளியிட்ட உமர் கய்யாம் கவிதைகளை தங்க.ஜெயராமனுடன் இணைந்து இவர் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது முதல் கவிதைத் தொகுதியான சித்து நூலில் உள்ள கவிதைகள், தமிழ் புதுக்கவிதை மரபின் பல்வேறு கூறல்முறைகளை வரித்துக்கொண்டு, நேர்த்தியான மொழியில் தத்துவ விசார நோக்குடன் அமைதியான த்வனியுடன் எழுதப்பட்டவை.  90 களின் இறுதியில் விசாரம் துறந்த, புனைவுத்தன்மை அதிகம் கொண்டு சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்கள் கொண்டு வெளிப்பட்ட நவீன கவிதைகளின் புதிய தன்மையையும், உக்கிர உணர்வையும் ஆசையின் கவிதைகளில் பார்க்க முடியவில்லை. ஒரு பழைய மனம், ஒரு பழைய கவிதையோடு உரையாடும் அனுபவம்தான் எனக்கு வாய்த்தது. இப்போது ஒருசேரப் படிக்கும்போதும் அந்த எண்ணப்பதிவு மாறவில்லை.

விதம்விதமான பறவைகளின் புகைப்படங்களுடன், ஒவ்வொரு பறவைக்குமான இயல்போடு ஒட்டி உறவாடும் கவிதைகளுடன் வெளிவந்த கொண்டலாத்தி என்ற கவிதைத் தொகுப்பு என்னை மிகவும் ஈர்த்தது. வெவ்வேறு பறவைகள் பற்றிய வெவ்வேறு விவரணைகள் என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததும் நினைவில் உள்ளது.  கவிஞனைப் பொருத்தவரை பூனையையும், பறவையையும் பாம்பையும் தொட்டுவிட்டால் அது நிச்சயமாக கவிதையாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பொதுவாக நாம் காணும் காகம், குருவி, தவிட்டுக்குருவி, குயில், ஆந்தை போன்ற பறவைகளைத் தவிர வேறு பறவைகளை அதிகம் பார்த்தறியாத, பார்த்தாலும் அதன் பெயர் சொல்லி உரையாட முடியாத கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன். ஆனால் கவிதை என்ற வடிவத்துடன் இயங்குபவனாக எனக்கு நிறைய பறவைகளின் பெயர் தெரியாதது குறித்து வருத்தம் இருக்கிறது. ஆனால் இதற்காக வெட்கப்பட இயலாது. இந்த அறியாமை நமது காலத்தின் பிரதிபலிப்பு. நமக்கு துப்பாக்கிகளின் பல வடிவங்கள் தெரிந்திருக்கின்றன. கொத்து வெடிகுண்டுகள் என்கிறோம். கையெறி குண்டு என்கிறோம். கண்ணிவெடி என்கிறோம்.

பொதுவாக தமிழ் புதுக்கவிதையில் பறவைகள் சுதந்திரத்தின் படிமமாக, விடுதலை ஏக்கத்திற்கான படிமமாகவே பெரும்பாலும் சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்டன.  அவை ஆசையின் கவிதைகளைப் போல பல வண்ணச் சிறகுகள், அலகுகள், பழக்கங்கள், குஞ்சுகளுடன் சிறிய, பெரிய, குட்டியான அளவுகளில் இடம்பெறவே இல்லை.

ஒருவகையில் இயற்கையும், பறவைகளும் அருகிவரும் நிலையில்தான் அவற்றை கலையிலும், புகைப்படங்களிலும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் பதற்றத்துடன் நடைபெறுகின்றன. பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது வேறு வேறு அளவுகளில் வேறு வேறு பெயருள்ள பறவைகள் அவற்றின் பிரபஞ்சத்தில் மனித இடையூறு இல்லாமல் வாழ்ந்துகொண்டுதான் இருந்தன.
ஒருவகையில் ஆசையின் கொண்டலாத்தியும் பறவைகளைத் தொலைத்து விடுவோம் என்ற பதற்றத்தில் எழுதப்பட்டவைதான். மனிதர்களுக்குதான் இயற்கை வேண்டும். மனிதர்களுக்குத்தான் பறவைகள் வேண்டும் என்ற பணிவிலிருந்தும், ஆதூரத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் அவை. பறவைகள் வழியாக எனது வாழ்வை  அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், ஞானமாகவும் ஆக்கமுடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக இவை இருக்கின்றன. கொண்டலாத்தியின் கவிதைகள் குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் அதிகம் பயனுள்ளது. ஏனெனில் இயற்கையாகவே குழந்தைகள் பறவைகளுக்கு அருகிலோ, பறவைகளாகவோதான் இருக்கின்றன.

கவிஞர் ஆசை நவீன தமிழ் கவிஞர்களுக்கான மூலவளத்தை, விதை வங்கியை பறவைகளின் பெயர்களாலும், அவை தொடர்பான சித்தரிப்புகள், விசாரணைகளாலும் நிரப்பியுள்ளார். அதற்கு அவருக்கு நாம் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

கவிஞர்கள் எல்லாருக்குமே அவர்கள் எழுதும் எல்லா கவிதைகளும் தேன்சிட்டைப் போலப் பறக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசையின் கொண்டலாத்தியில் பறவைகளுடனேயே பறக்கும் கவிதைகள் நிறைய உண்டு.

சிறிய உடல் கொண்ட ஒரு பறவையின் சுறுசுறுப்பைப் பார்க்கும் போது, ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தலைப் பார்க்கும்போது, இந்தச் சின்ன உடலுக்குள் எங்கே உயிர் இருக்கிறது, அதன் நிகழ்ச்சி நிரல் எந்தப் புள்ளியில் பதியப்பட்டுள்ளது என்ற ஆச்சரியமே ஆசையின் கவிதைகளுக்கான அடிப்படை. வாழ்வியக்கமும், மகிழ்ச்சியும் தனித்தனியாக இல்லாத நிலையில் உள்ள பறவைகளைப் பார்த்து வியப்பு தீரவில்லை அவருக்கு.

ஒருநிலையில் நமக்கு பரிச்சயமான ஆனால் கிட்டத்தட்ட பரிச்சயமே ஆகாத ஒரு உயிரைக் கடவுளின் இடத்தில் வைத்து வியக்கிறார் ஆசை.

மனிதர்கள் சிறியதைப் பார்த்து, சிறியதை வியந்து, சிறியதாக வாழவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது கொண்டலாத்தி.

கவிஞர் ஆசைக்கு இந்த விருது தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தைத் தரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

-ஷங்கர்ராமசுப்ரமணியனின் வலைத்தளத்தில் படிக்க: https://www.shankarwritings.com/2014/01/blog-post_13.html

Friday, January 3, 2020

என்றும் காந்தி - 2019-ன் சிறந்த புத்தகங்கள்- 3



எஸ்.ராமகிருஷ்ணன்

(எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு)

இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள்   ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது.

அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது.

ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள்  இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன.

“காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

நேர்மையாக இருப்பதற்குக் காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாகக் காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை.“ எனத் தனது கட்டுரையில் ஆசை காந்தி பற்றித் தெரிவிக்கிறார். இந்த நூலின் சாராம்சத்திற்கு இந்த இரண்டு பத்திகளே எடுத்துக்காட்டு

காந்தியை அறிந்து கொள்வதற்கான சிறந்த நூல்.

ஆசைக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
- எஸ்.ராமகிருஷ்ணனின் வலைதளத்தில் படிக்க: shorturl.at/lHPX5

Friday, April 12, 2019

ஜாலியன்வாலா பாக் சுவடுகள்!

 அட்டன்பரோவின் ‘காந்தி’ படத்தில் இடம்பெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலை காட்சி


ராமசந்திர குஹா

(ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நூற்றாண்டையொட்டி 12-04-19 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)  

ஜாலியன்வாலா பாக். அந்த இடம் அமிர்தசரஸ் பொற்கோயிலிலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. அங்கே, கூடியிருந்த கூட்டத்தைச் சுடும்படி ரெஜினல் டையர் என்ற பெயருடைய பிரிட்டிஷ் பிரிகேடியர்-ஜெனரல் ஒருவர் தனது துருப்புகளுக்கு 1919 ஏப்ரல் 13 அன்று — சரியாக இப்போதிலிருந்து நூறாவது ஆண்டு — ஆணையிட்டார். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்கள். அங்குள்ளவர்களோ ஆயிரம் பேர் அல்லது இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக நம்புகின்றனர். இது ஒரு கொடூரமான கொலை. ஏனெனில், சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நிராயுதபாணிகள் என்பதோடு முழுக்க முழுக்க அமைதிவழியிலானவர்கள். டையரின் வெறித்தனத்துக்கு வழிவகுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வெறித்தனத்தை அதிகப்படுத்தியது பஞ்சாபின் சர்வாதிகார லெஃப்டினென்ட் கவர்னரான மைக்கேல் ஓ’ட்வையரின் நடவடிக்கைகள்தான்.

ஜாலியன்வாலா பாகில் நடைபெற்ற படுகொலைக்கு பிரிட்டிஷ் வரலாற்றிலும் சரி, இந்திய தேசியத்தின் வரலாற்றிலும் சரி முக்கியமான இடம் உண்டு. இதுகுறித்து எண்ணிலடங்காத புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்கள் தீவிரத்தன்மையும் ஆய்வுத்தன்மையும் கொண்டவை, மற்றவை உணர்ச்சிகரமாகவும் இலக்கியரீதியிலும் இருப்பவை. இந்த இரண்டு வகையிலும் வரக்கூடிய புத்தகத் தொகுப்பொன்று வெளியாகியிருக்கிறது. ‘விடுதலைக்குச் செய்யப்பட்ட தியாகம்: ஜாலியன்வாலா பாகின் 100 ஆண்டுகள்’ (Martyrdom to Freedom: 100 Years of Jallianwala Bagh) என்பது அத்தொகுப்பின் பெயர். பஞ்சாபின் மிகவும் பழமையானதும் மிகவும் மதிப்புக்குரியதுமான ‘தி ட்ரிப்யூன்’ பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் ராஜேஷ் ராமச்சந்திரன்தான் இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.

டையரின் நடவடிக்கைகளின் பின்னணி

புத்தகத்தின் முதல் பகுதி இத்தொகுப்புக்கென்றே (இந்தக் கட்டுரையாசிரியர் உட்பட) ஆய்வறிஞர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியது. அதில் நடுநாயகமாக விளங்குவது மூத்த வரலாற்றாசிரியரான வி.என்.தத்தாவின் நேர்காணல். நேர்காணல் கண்டவர் அவரது மகளும் நன்கு அறியப்பட்ட அறிஞருமான நோனிகா தத்தா. அமிர்தரசரஸில் படுகொலைக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் வி.என்.தத்தா. ஜாலியன்வாலா பாகிலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில்தான் அவர் தன் இளமைப் பருவத்தைக் கழித்தார். ஜாலியன்வாலா பாக் என்பது 1919 ஏப்ரல் வாக்கில் உண்மையில் தோட்டமாக (பாக்) அல்ல, குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உரிய காலத்தில் தத்தா அந்தப் படுகொலையின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக உருவெடுத்தார். அந்த நேர்காணலில் அவர் இப்படிச் சொல்கிறார், “டையரின் நடவடிக்கைகளின் பின்னணியை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலாம் உலகப் போரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பிரிட்டிஷாரின் தன்னம்பிக்கை உச்சத்துக்கே சென்றது. தங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குத் துணிவுபெற்றிருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், டெல்லியில் ஒரு கலவரத்தை டையர் ஏற்கெனவே கலைத்திருக்கிறார், வடகிழக்குப் பிராந்தியத்தில் அவர் பெற்றிருந்த பயிற்சியும் அவர் வசமிருந்தது… [ஜாலியன்வாலா பாகில்] டையர் அந்தத் துருப்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக, நேராக, வலமும் இடமுமாக, கிணற்றுக்கு அருகாக என்றெல்லாம் உத்தரவிட்டுச் செலுத்தினார். தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த முழுமையான புரிதல் அவருக்கு இருந்தது.”

ஒரு எரிமலையின் வெடிப்பைத் தூண்டிவிட்ட நிகழ்வாகவே இந்தப் படுகொலைச் சம்பவத்தைப் பற்றி ஒருவகையில் சொல்லலாம் என்கிறார் வி.என்.தத்தா. ஏனெனில், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரின் ஆட்சியை இனிமேலும் சட்டபூர்வமானதாகக் கருத முடியாது என்ற எண்ணத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்தியது. அந்தப் படுகொலைக்குப் பிறகுதான், ‘இனவெறியைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதையும் டையர்தனமும் ஓ’ட்வையர்தனமும் எவ்வகையிலாவது போய்த்தொலைந்தாக வேண்டும் என்றும் இந்தியர்கள் உணர்ந்தார்கள். நாகரிகச் சமூகத்தில் அந்த இருவருக்கும் எந்த இடமும் இல்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு இப்படுகொலைதான் வித்திட்டது. மாறாக, தேசிய அளவில் காந்தி புதிய தலைவராக உருவெடுத்தார்.” அல்லது, கவிஞராகிய வி.என்.தத்தாவின் தந்தையின் சொற்களில் சொல்வதானால் அந்தப் படுகொலைக்குப் பிறகு இந்தியர்களுக்கு எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரிந்தது, கூடவே அவர்கள் அதற்கு மேலும் ஆமாம்சாமிகளாக இருக்க மாட்டார்கள்.

இந்நூலின் இரண்டாவது பகுதி ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்நாட்களில் அந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் காளிநாத் ராய் என்ற வங்காளி. அவரைப் பற்றி அவரது சமகாலத்தவர் ஒருவர் சொல்லும்போது, “கம்பளிக் குல்லாய் அணிந்த குள்ளமான மனிதர். அவர் அணிந்திருந்த கம்பளி ஆடையின் பெரும்பாலான கம்பளி நூல் பல ஆண்டுகளுக்கு முன்பே உதிர்ந்துபோய்விட்டது. மீன் குழம்பு, பால் டம்ளர்கள், ரசகுல்லா, பருப்பு போன்றவற்றை மறதியுடன் கையாளும்போது அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களை அப்படியே அந்தக் கம்பளி ஆடை சுமந்திருக்கும். கண்ணாடியின் தடிமனான லென்ஸுக்குப் பின்னால் அவரது கண்கள் ஒளிந்திருக்கும். கண்ணாடியானது இரும்பு வளையத்தைக் கொண்டதாக, அது குறைந்தபட்சம் மூன்று இடங்களில் நூலால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதாக இருக்கும். அவர் பேசுவதோ வெகு அரிது.”

உண்மையை வெளிக்கொண்டுவந்த ‘தி ட்ரிபியூன்’ இதழ்

கூச்ச சுபாவமும் கவர்ந்திழுக்காத தோற்றமும் கொண்டிருந்தாலும்கூடத் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவராக இருந்தார் காளிநாத் ராய். மிகவும் சிரமமான அந்நாட்களில் அவரது இந்தப் பண்புகளெல்லாம் ‘தி ட்ரிபியூன்’ இதழை அவர் எப்படியெல்லாம் வழிநடத்தினார் என்பதிலேயே நமக்குத் தெரிகிறது.

அந்த இதழிலிருந்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கும்போது அந்தச் சம்பவங்கள் நம் கண் முன் அப்படியே விரிகின்றன, பல இடங்களில் மிகவும் நெகிழவும் வைக்கின்றன. பஞ்சாபில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திட்ட ரௌலட் சட்டத்தைப் பற்றி ‘தி ட்ரிப்யூன்’ இப்படிச் சொல்கிறது: “ஏற்கெனவே கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய உரிமைகளெல்லாம் இச்சட்டத்தின் அமலாக்கத்தால் முற்றிலும் பொருளற்றுப்போகின்றன. கூடவே, ஆள்வோரின் எதேச்சாதிகாரமும் பூரணமாகிறது.” ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை வழிநடத்திய சுதந்திர வேட்கை கொண்ட தேசப்பற்றாளரைப் பற்றி அந்த இதழ் இப்படி எழுதியது: “காந்தியைப் பற்றி கோகலே ஒருமுறை இப்படிச் சொன்னார்: காந்தியிடத்தில் இந்தியர்களின் மனிதநேயம் அதன் பூரணத்தன்மையை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட காந்தி தன் மக்களைப் பற்றி மிகவும் ஆழமாக அறிந்துவைத்திருக்கிறார், இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் புனிதத்தன்மை கொண்டிருப்பதுடன் மிகவும் பிரபலமான தலைவரும் அவரே…”.

காந்தியைப் பற்றிய மேற்கண்ட குறிப்பு வெளியானது 1919, ஏப்ரல் 6, ஞாயிறு அன்று. அடுத்த ஞாயிற்றுக்கிழமைதான் படுகொலை நிகழ்த்தப்பட்ட தினம். ராணுவச் சட்டம் அமலில் இருந்ததால் அந்தப் படுகொலையைப் பற்றிய செய்திகளும் வெளியாகவில்லை. பத்திரிகைகள் மீதிருந்த தணிக்கை விலக்கப்பட்ட பிறகே, இந்த ஒட்டுமொத்த அநியாயத்தைப் பற்றியும் விசாரிப்பதற்கு ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஹன்ட்டர் கமிஷனின் விசாரணைகளை ‘தி ட்ரிப்யூன்’ கூர்ந்து கவனித்து தினமும் எழுதியது.

நியாயமான கேள்விகளைக் கேட்கத் தவறியது ஏன்?

கமிஷனின் முன்பு ஜெனரல் டையர் ஆஜரானபோது, அந்த இதழ் தங்கள் பக்கங்களில் நேரடியாக ஐந்து கேள்விகளை டையரிடம் முன்வைத்தது.

1. கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்கு டையர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

2. எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் சுட்டதற்கு என்ன நியாயம் கூறுவார்?

3. துப்பாக்கிச்சூடு தொடங்கியவுடனே கூட்டம் கலைந்தோட ஆரம்பித்தும்கூடத் துப்பாக்கிச்சூட்டை நிறுத்தாததன் காரணம் என்ன?

4. தோட்டாக்கள் தீரும் நிலையிலும் ஏற்கெனவே ஐநூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும்கூட நிறுத்தாதது ஏன்?

5. காயப்பட்டவர்களை நிர்க்கதியாக விட்டுச்சென்றது ஏன்?

ஆனால், இதுபோன்ற நேரடியான தொனியில் இதுபோன்ற கேள்விகளை டையரிடம் ஹன்ட்டர் கமிஷன் முன்வைக்காமல் போனதுதான் துயரம்.

இறுதியில், ‘அமிர்தசரஸின் கசாப்புக்காரர்’ வெறுமனே பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதைப் பற்றிச் சொல்லும்போது தண்டனை ‘போதாதென்று அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று ‘தி ட்ரிப்யூன்’ எழுதியது. இதற்கிடையே, டையரின் கொடூரமான மேலதிகாரியான மைக்கேல் ஓ’ட்வையர் சிறு தண்டனைகூட இன்றித் தப்புகிறார். ஆகவே, ‘கண்துடைப்பு ஆவணம்’ என்று ஹன்ட்டர் அறிக்கை குறித்து காளிநாத் ராய் குறிப்பிட்டதில் வியப்பொன்றும் இல்லை.

இப்புத்தகத்தில் ஜாலியன்வாலா பாக் நினைவிடம் பற்றிய வேறு சில முக்கியமான தகவல்களும் கிடைக்கின்றன. தியாகிகளின் ரத்தம் சிந்தப்பட்டதால் புனிதத்துவம் பெற்ற மண்ணைத் தாங்கிய நிலத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வாங்கி, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருக்கும் புதிய தேசத்தின் சொத்தாக மாற்றியது. இந்த நினைவிடத்துக்காக நிதி திரட்டியவர்களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்: காந்தி, டாக்டர் சைஃபுதீன் கிச்லூ, பண்டிட் மதன்மோகன் மாளவியா, சுவாமி ஷ்ரத்தானந்தா.

ஒற்றுமையின் தேசியச் சின்னம்

இன்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வைக்கப்படும் நினைவிடங்கள் எண்ணிலடங்காது; தேர்தல் நெருங்கும் சமயத்திலெல்லாம் பேராசை கொண்ட அரசியல்வாதிகளால் அப்படிப்பட்ட நினைவிடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன; அவற்றுக்கான நிதியும் தனியார் நிறுவனங்களிடமிருந்தோ பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தோ வலுக்கட்டாயமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஜாலியன்வாலா பாக் நினைவிடம்தான் இந்திய வரலாற்றில் மிகவும் ஜனநாயகபூர்வமாக நிதி திரட்டப்பட்டு முதன்முதலில் கட்டப்பட்ட நினைவிடம். அந்த நினைவிடத்துக்கான நிதியானது பஞ்சாபிலும் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடமிருந்தும் திரட்டப்பட்டது. லூதியானாவைச் சேர்ந்த மக்கள் ரூ.7,000; வார்தா மக்கள் ரூ. 7,500; பம்பாய் மக்கள் ரூ 20,000; கல்கத்தா மக்கள் ரூ.26,000 என்று அள்ளியள்ளிக் கொடுத்தார்கள். (இந்தத் தொகையெல்லாம் அன்று மிகவும் அதிகம். மேலும், இன்றைய பணமதிப்பைவிட அன்றைய பணமதிப்பு மிகவும் அதிகம் என்பதையும் கணக்கில் கொண்டு பார்க்க வேண்டும்).

தனது ‘யங் இந்தியா’ இதழில் இந்த நிதித்திரட்டலைப் பற்றி எழுதும்போது காந்தி இப்படிக் கூறுகிறார், ‘இறந்துபோன அப்பாவிகளைப் பற்றிய நினைவுதான் புனிதமான அறக்கட்டளையாகக் கருதப்பட வேண்டியது. மேலும், உயிர் பிழைத்த உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தேசத்திடம் கேட்கும் உரிமையும் பெற வேண்டும். இந்த நினைவிடத்தின் முக்கியமான அர்த்தம் இதுதான்.’

மேலும், அவர் எழுதினார்: ‘முஸ்லிமின் ரத்தம் இந்துவின் ரத்தத்தோடு கலந்துவிடவில்லையா? சீக்கியரின் ரத்தம் சனாதனியின் ரத்தத்துடனும் சமாஜத்தினரின் ரத்தத்துடனும் கலக்கவில்லையா? இந்த நினைவிடமானது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடைவதற்கான நேர்மையான, நீடித்த முயற்சியின் தேசியச் சின்னமாக இருக்கட்டும்.’

இப்படி எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய, பன்மைத்துவம்கொண்டதாக காந்தி எதிர்நோக்கிய பேருணர்ச்சியானது தேசப் பிரிவினையின்போது பஞ்சாபில் சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்பட்டது. அப்படி உடைத்து நொறுக்கப்பட்டதை, ‘தி ட்ரிப்யூன்’ இதழின் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மீட்டுருவாக்க முயன்றுகொண்டிருக்கிறோம்போல!
-தமிழில் : ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’