Friday, December 29, 2023

ஹார்லே-டேவிட்சன்


'போடா' என்று
சொல்லிவிட்டுப்
பறந்துவிட்டான்
அந்த இளைஞன்
சாலையை அவசரமாய்க்
கடந்துவிட்டு
'போடாவா
நாயே நீ போடா' என்று
நான் கத்தியது
ஒருபோதும்
முந்திச்செல்லாது
ஹார்லே-டேவிட்சனை
அவன்
பற்றவைத்த தீக்குச்சியைக்
கீழே போட்டானோ
வாய்க்குள் செருகிக்கொண்டானோ
வானில் செருகிச் சென்றானோ
அறிந்துகொள்ள
இனி
வழியேதுமில்லை
அவனாலேயே
அணைக்க முடியாத தீ
நான் வாங்கிக்கொள்ள
வேண்டாத தீ
வாங்கிக்கொண்டேன்
என்னால் மட்டுமே
அணைக்க முடிந்த தீ
ஆனால்
கொண்டுவந்து
வீட்டை எரிக்கிறேன் -ஆசை 

Wednesday, December 27, 2023

அலங்கோலம்


1.

அலங்கோலம்

அது புறப்பட்ட இடம்
ஆபரேட்டர் அறையின்
சிறு ஒளிப்பொந்து

விழும் இடம்
ஐமேக்ஸின்
பெருந்திரை

நடுவே மாட்டிக்கொண்ட நான்
என்ன செய்வது

ஆப்பரேட்டர்
ஆப்பரேட்டர்
அலறல்
அவர் காதில் விழுவதில்லை

உண்மையில் 
அவர் இருக்கிறாரா

ஒளிப்பொந்தைக்
கையால் 
அடைக்கிறேன்
அப்படியும் 
திரையில் பேரொளி
பேரலங்கோலம்

அப்படி
என்ன ஒளி அது

அச்சிறு
அப்பொந்தை
உடல் கொண்டு
அடைக்க முயன்றும் 
தோற்கிறேன்

ஒரே ஒரு தீக்குச்சி 
இருந்தால்
திரையைக் கொளுத்தலாம்

நானோ
ஒரே ஒரு தீக்குச்சி கொண்டுவரும்
அதன் ஒரு உரசலில்
என்னைக் கொளுத்திவிடும்
ஒரே ஒரு தேவதைக்காக
ஒளிப்பொந்துக்கும்
ஒளித்திரைக்கும் இடையே
இருளில் தவம்கிடக்கிறேன்

2.
அலங்கோலம்

வீடு முழுவதும் 
அலங்கோலம்

அலமாரிகளைப் பலமடங்கு மீறிய
புத்தகங்கள்
துணிமணிகள்

விளக்குமாற்றையும்
தரைத்துடைப்பானையும் மீறிய
குப்பைகள்
தூசிகள்

மெத்தை போர்வைகளை
மீறிய
சின்னவன் மூத்திரத்தின்
முடைநாற்றம்

அலங்கோலத்தின்
வழிகளையே 
தம் விளையாட்டுத் திடலாய்
மாற்றிக்கொள்ளும் பிள்ளைகள்

தலைச்சுற்றி வெடிக்கிறது

ஒரு மனைவி
ஒரு அம்மா
ஒரு பணிப்பெண்
ஒரு நண்பர்
சற்றே வளர்ந்த மூத்தவன்
அல்லது
முன்பு வரத் தவறிய தேவதை

யார் நினைத்தாலும் 
ஒரு கை நீட்ட முடியும்
நீட்டுகிறார்கள்தான்
ஆனால்
அவர்கள் கையைப் பெற்றுக்கொள்ள
என்னிடம் 
மறு கை இல்லை

ஒரு மனதை வைத்துக்கொண்டுதான்
எல்லா அலங்கோலத்தையும்
துடைத்தெறிய முடியும்
என்று 
எவ்வளவு நாள்தான்
நினைத்துக்கொண்டிருப்பது
கையே 
இல்லாமல்
         -ஆசை

Tuesday, December 26, 2023

பஞ்சவர்ணத்தின் பருக்கைகள் - ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யிலிருந்து...

ஓவியங்கள்: ஜோ.விஜயகுமார்

(புகைப்படமாகக் கூட மிஞ்சாத என் ஆத்தா பஞ்சவர்ணத்தின் நினைவு நாள் இன்று)

  “Family is all”

        Don Hector Salamanca, Breaking Bad

1. முந்தைய பிரபஞ்சத்தின் நினைவு

நினைவை நம்பியே
எழுதத் தொடங்கினேன்

பொய் நினைவோ
அரைநினைவோ
கால்நினைவோ
பிசகிய நினைவோ
மங்கல் நினைவோ
இரவல் நினைவோ
முந்தைய பிரபஞ்சத்தின்
எஞ்சிய நினைவோ
என்று போகப் போக
எனக்கே குழப்பம்

அப்போது
என்முன்
இரண்டு தொலைநோக்கிகள்
இருந்தன

ஒன்று
வெகு தொலைவில் இருக்கும்
எளிதில் புலப்படாத
விண்மீனைப் பார்ப்பதற்கான
தொலைநோக்கி

Saturday, December 23, 2023

மகிழ் ஆதனுக்கு முதல் விருது!

  

‘சிறாருக்கான மேடை அகாடமி விருது’ மகிழ் ஆதனுக்கும் இன்னொரு குட்டீஸ் தமிழ் இனியனுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது அமைப்பாளர்களுக்கும் விருதுக்குப் பரிந்துரைத்தவர்களுக்கும் நன்றியும் அன்பும். மகிழ் ஆதனின் நூல்களை வெளியிட்டிருக்கும் வானம் பதிப்பகத்துக்கும் எதிர் வெளியீட்டுக்கும் மிக்க நன்றி! 

சக விருதாளர் தமிழ் இனியனுக்கும் ஏனைய பிரிவுகளில் விருது பெறுபவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! கவிஞரை (அதான் மகிழ் ஆதனை) தேனியில் சந்திக்க விரும்புபவர்கள் வரும் வாரம் சந்திக்கலாம்! (அவரைச் சந்திக்க விரும்புபவர்கள் எனக்கு ஃபாரீன் சாக்லேட் வாங்கிவர வேண்டும், ஆமாம்!). 

விருது வழங்கும் விழா நடக்கும் நாள்: 31.12.2023, ஞாயிறு, காலை 9 மணி. இடம்: ஹோட்டல் வெஸ்டர்ன் காட்ஸ், தேனி.



மகிழ் ஆதன் குறித்த பதிவுகளில் சில:

எஸ். ராமகிருஷ்ணன்:

https://tinyurl.com/4tswh7pu

https://tinyurl.com/sy24wtt3

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்https://tinyurl.com/3anudu2f

சுந்தர் சருக்கைhttps://tinyurl.com/yrrt7vk3

டாக்டர் கு.கணேசன்https://tinyurl.com/3bredys2

மு.இராமநாதன்https://tinyurl.com/bdaavhjj

ந. பெரியசாமிhttps://tinyurl.com/yu3y94jk

ஆசை: https://tinyurl.com/mr9vn367

The New Indian Expresshttps://tinyurl.com/543wx4zj

இந்து தமிழ் திசையின் ‘மாயாபஜார்’https://tinyurl.com/5bzpcdts

குங்குமம்https://tinyurl.com/4ak3pmwh

தமிழ் விக்கி: மகிழ் ஆதன் - Tamil Wiki

மகிழ் ஆதன் - 500



Friday, December 22, 2023

உடல்காடு



திருவனந்தபுரத்தின்
விலங்கியல் பூங்கா

தன் உடலைவிட
சில மடங்குகளே 
பெரியதொரு கூண்டில்
ஒரு புலி

சொல்லிச் சொல்லிச் சலித்த
அம்மண்ணின்
நினைவில் காடுள்ள மிருகம் வரியே
நினைவுக்கு வந்தது

குறுக்கும் நெடுக்குமாய்
மடக்கி மடக்கி உலவுவதையும்
அசைவற்றுக் கிடப்பதையும்
பார்த்தபோது
நினைவிலல்ல 
புலியின் உடலில்தான் காடு என்பது
உரக்கப் புரிந்தது

பூங்காவை விட்டு
வெளியே போகும்போது
உடல்தான் நினைவு என்று
உரக்கக் கத்த வேண்டுமென
அப்போதே
தீர்மானித்துக்கொண்டேன்
        - ஆசை 

Thursday, December 21, 2023

குட்டிச் சாட்டை



இவ்வளவு சின்ன சாட்டையுடன்
இவ்வளவு சின்னப் பையனைப் பார்ப்பது
இதுதான் முதல் முறை

வெறுமனே தோளில் போட்டுக்கொண்டு
சாலையோரம் புகைப்பிடிப்பவர்களைப் போய்த்
தொட்டுத் தொட்டுத் 
தன் கையைத் 
தன் தாடைக்கருகில் 
சடங்குபோல் கொண்டுசெல்கிறான்

பக்கத்திலேயே
அவன் அம்மா
தோளில் அழுக்குத் துணியில்
தூளி கட்டி 
ஒரு ஆண் குழந்தையுடன்

அதற்கென்றும்
ஒரு குட்டிச் சாட்டை
தக்க தருணத்தில்
வழங்கப்படும்

அது எந்தக் கருவறைக்குள்
சுருண்டு
தூங்குகிறதோ
       -ஆசை

Wednesday, December 20, 2023

ஓலம்



நேற்றைய கனவில்
தேவாலயத்தின் பெஞ்சில்
என் பிரார்த்தனையோடு
உறைந்திருக்கிறேன்

தேவாலயத்தின் இடப்பக்கச் சிறகிலிருந்து
ஓடிவரும் மூத்தவனைக் கண்டு
உதறியெழுந்து
சவுக்குக் குச்சியெடுத்துப்
பின்னங்காலில் 
விளாசு விளாசு என்று 
விளாசுகிறேன்
துடிதுடிக்கிறான்
துவண்டுவிழுகிறான்

முன்னே
சுவரில் கீழ்நோக்கிக்
கண்மூடிப் பார்த்தபடி
தொங்குபவரும்
மூத்தவர்தான்
என்ற நினைவு வந்ததும்
வெளியே ஓடுகிறேன்

நடுத்தெருவில் நின்று
பெருங்குரலெடுத்து
ஓலமிடுகிறேன்
ஓலமிடுகிறேன்
அப்படியொரு ஓலம்

டாக்டர் சூஸின்*
தூசி உலகத்து மனிதர்கள்
தம் உலகத்துக் குரலைக் கசிவிக்க 
ஒன்றுசேர்ந்து நிகழ்த்துமொரு
ஓலத்தைவிடப் 
பேரோலம்

ஆயினும் 
என் கனவைத் தாண்டும்
சக்தியில்லை அதற்கு
என் கனவைத் தாண்டிவந்து
அதைக் கேட்கும் சக்தியில்லை
எவருக்கும்

அப்போது பொறாமை கொள்கிறேன்
பூமிக்கடியிலிருந்து
கடவுளுக்குக் கேட்ட
ஆபெலின் ஓலத்தின் மீது

அப்போது பொறாமை கொள்கிறேன்
நிறத்திலிருந்து எல்லோருக்கும் கேட்ட
எட்வர்ட் மூங்க்கின்** 
ஓலத்தின் மீது

அப்போது பொறாமை கொள்கிறேன்
கின்ஸ்பெர்க்*** தன் காலத்தைக் கீறிப்
பீய்ச்சியடித்த ஓலத்தின் மீது 

அப்போதுதான் நினைவுக்கு வருகிறது
நான் ஒரு கடைக்குட்டியென்பது

அப்போதுதான் நினைவுக்கு வருகிறது
கடைக்குட்டிகளுக்கென்று
வேதாகமங்கள் எழுதப்படுவதில்லையென்று

இன்னும் இன்னும்
ஓலமிடுகிறேன்

ஓலமிட்டு ஓலமிட்டுத்
துடிதுடிக்கிறேன்
நடுத்தெருவில்
துவண்டுவிழுகிறேன்

சமயத்தில்
கனவிலிருந்து மூத்திரம்கூட
கசிந்துவிடுகிறது

அந்த
அதிர்ஷ்டமும் இல்லாதது
என் ஓலம்
           -ஆசை


குறிப்புகள்: 
*Doctor Seuss's 'Horton Hears a Who' (Novel and film)
** 'The Scream' a painting by Edvard Munch
*** 'Howl' poem by Allen Ginsberg 

 

Sunday, December 17, 2023

முதலறியான்



மறுபடியும் தீயை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் சக்கரம் செய்வதை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் வெடிமருந்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் அமெரிக்காவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஹேம்லட்டை
முதல் ஆளாக எழுதத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் பியானோவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஈர்ப்புவிசையை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் டகேரியோடைப் கேமராவை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் மின்சாரத்தை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் முதல் ஆளாக
பீகிள்ஸ் கடற்பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் ஒளியின் துகள் வடிவை
முதல் ஆளாக நிரூபிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் நிலவுக்கு
முதல் ஆளாகப் போகத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுள்துகளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கத்தான் வேண்டியிருக்கிறது
மறுபடியும் கடவுளை
முதல் ஆளாகக் கண்டுபிடிக்கவும்
முதல் ஆளாகக் கைகழுவவும்
வேண்டியிருக்கிறது

கவிஞனாய்
இருப்பதற்கு
இவ்வளவும்
செய்ய வேண்டியிருக்கிறது

வாழ்வதற்கோ
இவ்வளவு சிரமப்பட
வேண்டியதில்லை
நாம் முதல் இல்லை என்ற
எளிய அறிவு
ஒன்றே போதும்
      -  ஆசை 

Monday, December 11, 2023

பாரதீ: எம் கவிஞன் நீ!


ஆசை

‘மேன்மேலும் புதியகாற்று எம்முள் வந்து/ மேன்மேலும் புதியஉயிர் விளைத்தல் கண்டீர்’ என்று எழுதித் தமிழ் மொழி மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் புதிய காற்றைப் படச் செய்தவர் பாரதி. வடிவத்தால் மரபுக் கவிஞராகவும் உள்ளடக்கத்தால் நவீனக் கவிஞராகவும் பாரதி காட்சியளிக்கிறார். மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இனம், மொழி, நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள், பிற நாட்டின் விடுதலைப் போராட்டங்கள், பிற நாட்டுத் தமிழர்களின் இன்னல்கள், வானியல் நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல கருப்பொருள்கள் பாரதியிடம்தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் முதன்முதலில் எட்டிப்பார்த்தன.

பாரதியின் சமத்துவக் கனவு

‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்/ எல்லாரும் இந்தியா மக்கள்/ எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை/ எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற சமத்துவக் குரலை இந்தியாவிலேயே அநேகமாக முதலில் எழுப்பியவர் பாரதி. அதுமட்டுமன்றி ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்/ ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சத்திய ஆவேசத்துடன் பாடியவர் யார்? ‘இடம்பெரிது உண்டு வையத்தில் – இதில்/ ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?’ என்ற வரிகளுக்கும், பாரதி இறந்து 19 ஆண்டுகள் கழித்து வெளியான, சார்லி சாப்ளினின் ‘த கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில் சாப்ளின் ஆற்றும் உரையில் வரும் ‘இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது’ என்ற வார்த்தைகளுக்கும் இடையில் எத்தனை ஒற்றுமை!

‘பாருக்குள்ளே சமத்தன்மை… சகோதரத் தன்மை’ மட்டுமே புவி எங்கும் விடுதலை செய்யும் என்று பாடியவர் பாரதி. ‘… குடியரசு என்று/ உலகறியக் கூறி விட்டார்’ என்று ‘புதிய ருஷியா’வைப் பற்றி எழுதுகிறார். இந்தியாவை ‘முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்/ முழுமைக்கும் பொதுவுடைமை’ என்கிறார். இப்படியாக, சமத்தன்மை, சகோதரத் தன்மை, குடியரசு, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களையும் அவற்றின் கருத்துகளையும் தமிழ்ச் சமூகத்தில் ஊன்றியவர் அவர். அதனால்தான் ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் பாரதியை ஆரத்தழுவிக்கொண்டனர்.

பாரதியின் தமிழ்க் கனவு

தமிழ்ச் சமூகத்துக்கு பெரும் பார்வை நோக்கை 20-ம் நூற்றாண்டில் வழங்கிய பேராளுமைகளில் பெரியார், பாரதியார், அண்ணா ஆகிய மூவரும் தலையாயவர்கள். மேலைநாடுகளில் புத்தம் புதிய கலைகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன; தமிழில் அவையெல்லாம் இல்லை; ஆகவே, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த/ மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று ஒரு பேதை கூறியதைக் கேட்டு பாரதி கொதித்துப் போகிறார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்த ‘கம்ப்யூட்டரை’ காண 1965-ல் பெரியார் சென்றிருக்கிறார். அந்தச் சாதனத்துக்குத் தமிழ்ப் பெயர் என்ன என்று தன்னுடன் வந்தவரைக் கேட்டிருக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. “நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால்தானே அதற்குப் பெயர் இருக்கும்” என்று அவரிடம் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பெரியார். பாரதிக்கு ஏற்பட்டதும் அதேபோன்றதொரு சீற்றமும் ஆதங்கமும்தான். அதேபோல், புவியைக் கடந்த ஹாலி வால்நட்சத்திரத்தைப் பற்றி பாரதி எழுதிய ‘சாதாரண வருஷத்துத் தூமகேது’ கவிதையிலும் அந்த வால்நட்சத்திரத்தைப் பற்றிகூட ‘அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்’ என்று குறைபட்டுக்கொள்கிறார்.

பன்மைத்துவக் கவிஞன்

தாயின் மணிக்கொடியைப் புகழ்ந்து பாடும்போது ‘இந்திரன் வச்சிரம் ஓர்பால்- அதில்/ எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்’ என்று எழுதுகிறார். பாரதி கற்பனை செய்த நாடு இந்துகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதே. தமிழில் முதன்முதலில் ஏசுவைப் பற்றிப் பாடிய கிறிஸ்தவரல்லாத கவிஞர், அல்லாவைப் பற்றிப் பாடிய இஸ்லாமியரல்லாத கவிஞர், குரு கோவிந்தரைப் பற்றிப் பாடிய கவிஞர் பாரதிதான். தமிழின் முதல் பன்மைத்துவக் கவிஞர் என்று சந்தேகமில்லாமல் பாரதியை நாம் கூறிவிடலாம். அப்பேர்ப்பட்ட பன்மைத்துவக் கவிஞருக்கு, பல வண்ணங்கள் கொண்ட கவிஞருக்குக் காவி நிறத்தை மட்டும் பூசி பிறர் அவரை அபகரிக்க நாம் விடலாகாது.

காதல் கவிதைகள்

பாரதியின் காதல் கவிதைகள் அலாதியானவை. காதலின் உச்சத்தில் காதலனின் முகமே மறந்துபோய்விடும் கொடுமை எங்கேயும் உண்டோ? பாரதியின் கவிதைத் தலைவி பாடுகிறாள், ‘ஆசை முகம் மறந்துபோச்சே – இதை/ ஆரிடம் சொல்வேனடி தோழி?’ தன்னைக் கண்டதும் நாணிக் கண் புதைக்கும் காதலியைப் பார்த்து, ‘நீட்டும் கதிர்களொடு நிலவுவந்தே – விண்ணை/ நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?’ என்று தலைவன் கேட்கிறான். ஆனால், பெண் அப்படித்தான். முதலில் நிலவாகிய ஆண், விண்ணாகிய பெண்ணிடம் வந்து ‘எப்படி இருக்கிறாய், உன் பட்டுக் கருநீலப் புடவை அழகு, அதில் பதித்த நல்வயிரங்கள் அழகு’ என்றெல்லாம் வர்ணித்துவிட்டுத்தான் ‘மருவ’ வேண்டும். ஆண்கள் அப்படியில்லை, அவர்களைப் பொறுத்தவரை வாய்ச்சொல்லில் பயனில.

காதல் இந்த உலகத்துக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. உலக இயக்கத்துக்கு உந்துவிசை அது. ஆகவேதான், ‘காதலினால் உயிர் வாழும்;-இங்கு/ காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்;/ காதலினால் அறிவு உண்டாம்,-இங்கு/ காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’ என்கிறார் பாரதி. ‘காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்’ என்ற வரி நம்முள் முறுக்கேற்றுகிறது.

புதிய பாலம்

பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் கெடுவாய்ப்பானது. எனினும், பின்னாளில் பாரதியை ‘மக்கள் கவி’ என்று பெயர்சூட்டித் தமிழ்ச் சமூகத்தின் உடைமையாக அண்ணா மாற்ற முயன்றது ஆரோக்கியமான முன்னெடுப்பு. ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கும் வாளும்’ என்ற பாரதியின் வரியிலிருந்து கருணாநிதி தன் சுயசரிதைக்குத் தலைப்பைப் பெற்றுக்கொண்டார் என்பது பாரதி மீது அவருக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவது. இப்போது, பாரதியார் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ என்று கொண்டாடுவது, பாரதி நினைவு நூற்றாண்டை ஓராண்டு கொண்டாடுவது, மாணவர்களிடம் பாரதியைக் கொண்டுசெல்வது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் பாரதிக்கும் திராவிட இயக்கத்தவருக்கும் இடையில் இருந்த பிளவைச் சரிசெய்வது மட்டுமல்ல ‘பாரதி தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ என்று எல்லோருக்கும் உணர்த்தும் செயலாகும். பாரதி அன்பர்களும் தமிழ் மக்களும் எப்போதைக்கும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

‘ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்/ பொற்பைகள் ஜதிபல்லக்கு,/ வயப்பரிவாரங்கள் முதல் பரிசளித்துப்/ பல்ஊழி வாழ்க நீயே!’ என்று எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதி வைத்த மிரட்டலான விண்ணப்பத்தை அவரும் நிறைவேற்றவில்லை; பாரதி வாழ்ந்த காலத்தில் நம் தமிழ்ச் சமூகமும் நிறைவேற்றவில்லை. ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே முரசறைந்து கொண்டிருக்கிறது, ‘எம் கவிஞன் நீ!’ என்று! 

- பாரதி நினைவு நூற்றாண்டு கட்டுரை (2021), நன்றி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 


பாரதி குறித்த ஆசையின் பிற கட்டுரைகளும் பதிவுகளும்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை


மக்கள் கவி பாரதியின் மகத்துவம்! அறிஞர் அண்ணாவின் கட்டுரை


அறிஞர் அண்ணா
(தமிழில்: ஆசை)

‘மக்களின் கவி’ என்னும் பதமே கவர்ச்சியானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் இருக்கிறது. எனினும் இது அந்தக் கவிஞருக்கு மட்டுமே புகழ் சேர்க்கும் பட்டம் அல்ல. ஏனெனில், மக்களெல்லோரும் மன்னாதி மன்னர்களையும் மந்திரிமார்களையும் தானைத் தளபதிகளையும் ஆபத்பாந்தவன்களையும் முக்காலமும் உணர்ந்த முனிவர்களையும் புனிதர்களையும் மாயமந்திரவித்தைக்காரர்களையும் புரோகிதர்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கான கவிஞர்களை அவர்கள் கண்டதே இல்லை. காலம்காலமாக மாபெரும் கவிஞர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களெல்லாம் வேதங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் வளம் சேர்ந்தவர்கள், அரண்மனைகளைத் தங்கள் கவித்திறமையால் அலங்கரித்தவர்கள். ஆனால், மக்களுக்காக மக்களின் மொழியில் கவிபாடியவர்கள் மிக மிக அரிது. 

கோயில் மணி செய்யும் வேலையையோ அரசவை முரசு செய்யும் வேலையையோதான் கவிஞர்களின் குரல் செய்துவந்திருக்கிறது. வெகு அரிதாகத்தான் மக்களின் மனதில் கிடப்பவற்றைக் கவிஞர்களின் குரல் பேசியிருக்கிறது. அப்போதும்கூட, மக்களெல்லாம் எவ்வளவு பேராசைக்காரர்களாகவும் சிற்றின்ப நாட்டமுடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள் என்றும் வெள்ளி என்பது எவ்வளவு பாவப்பொருள் தங்கம் என்பது கடவுளுக்கு எதிரான பொருள் என்பதுபோலெல்லாம் மக்களை இடித்துரைப்பதாகத்தான் இருக்கும். இந்தப் பிரசங்கங்களுக்கு அரச செங்கோலின் ஆசிர்வாதம் தாராளமாகக் கிடைத்தது. இப்படி கவிபாடியவர்களுக்கு தர்பாரிலும் அரசரின் பரிவாரத்திலும் உரிய காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு இடம் கிடைத்தது. தாங்கள் எங்கிருந்து கிளம்பிவந்தார்களோ அந்த மக்கள் கூட்டத்தை அவர்கள் வெறுத்ததோடு மட்டுமல்லாமல் அரசவையில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான கருவியாகத் தங்கள் கவித்திறனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அங்கு அனுமதி கிடைத்ததும் வார்த்தைகளால் விதவிதமான மாலைகள்செய்து அரசர்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் சூடினார்கள். அவர்களுக்குச் சன்மானமாகக் கிடைக்கும் தங்கம் சொக்கத்தங்கமாக இருக்க வேண்டுமென்பது இதில் முக்கியம். சங்ககாலக் கவிஞர்கள் இந்த வருந்தத்தக்க நிலைக்கு விதிவிலக்கானவர்கள், ஆனால் இன்றைய நம் மக்களால் அவ்வளவாக அறியப்படாத கவிஞர்கள் அவர்களே.

கவிஞர்கள் அறம், தர்மம் போன்றவற்றின் விற்பனையாளர்களாக தங்களின் கவிதைகளில் மாறினார்கள். அல்லது இன்ப உணர்ச்சியின் வணிகர்களாக மாறினார்கள். மக்களின் கவிஞர்களாக இருப்பதென்பது அவ்வளவாக லாபகரமானது அல்ல என்பதை அறிந்திருந்தார்கள். சங்ககாலத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் பிரமாதமான மக்கள் கவிஞர் எவரையும் நாம் காணவில்லை என்பதற்கு அதுதான் காரணம்.

அறம், தர்மம் போன்றவையெல்லாம் அவ்வுலகு வாழ்வின்பத்துக்கான முதலீடாகப் பார்க்கப்பட்டன. அதனால்தான் இந்தப் பொய்யான, தீங்கான வேதாந்தத்தைப் பிரச்சாரம் செய்தவர்களுக்குப் பிறகு வந்தவர்களும் அதைப் பின்பற்றி, அதற்குத் தங்களைத் தாங்களே முகவர்களாக நியமித்துக்கொண்டார்கள். இப்படி வந்தவர்களின் கவிதைகளெல்லாம் மிகவும் தரமானவையாகவும் சிறப்பானவையாகவும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. எதுகை, மோனை, சொல்வீச்சு எல்லாம் அபாரம்தான். பகுத்தறிவுதான் அடிபட்டுப் போனது. மக்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கவிஞர்கள் கருதிக்கொண்ட நிலை அது. இந்தச் சூழலில்தான் பாரதியின் வருகை நிகழ்கிறது.


இரண்டு யுகங்களுக்கு நடுஎல்லையில் பாரதி பிறக்கிறார். தனது சொந்தப் பிராந்தியத்தில் நிலவுடைமை முழுவீச்சில் இருக்கிறது. குடிசைகள் சூழப்பட்டதாக இருக்கிறது எட்டயபுர சமஸ்தானத்தின் அரண்மனை. காலங்காலமாகத் தொடர்ந்துவரும் சாதியச் சமூகமும் முழு அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பக்கம் நிலவுடைமை அந்தப் பக்கம் சனாதனம் என்ற சூழலில் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறக்கிறார் பாரதி. இத்துடன், நவீனத்துவமும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் வேளை, தொழில்புரட்சியின் அதிகாலைப் பொழுதும்கூட. புதிய யுகத்தைப் பழைய யுகம் துயர் நிரம்பிய கண்களுடன் எதிர்கொள்கிறது. புதுயுகத்தின் தோற்றமே பழைய யுகத்துக்குச் சவால் விடுக்கிறது. அப்படிப்பட்ட யுகத்தில் பிறந்த பாரதி பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போர்க்களத்தின் மாபெரும் போராளியாக உருவெடுப்பார் என்று யாராலும் அப்போது கற்பனை செய்திருக்க முடியாது. ஏனெனில், பழைய சமூகத்தின் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஒரு இடத்திலேயே அவரது பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பாரதி பிறந்தேவிட்டார், இப்படிப்பட்ட ஒரு நாட்டில், வரலாறு மிக மெதுவாக நகரும் ஒரு நாட்டில், அதற்கு விசையுடனான ஒரு உந்தித்தள்ளல் கிடைத்தால் வேகமாக நகரும் என்ற நிலை கொண்ட ஒரு நாட்டில். மக்களின் கவிஞராக இப்படிப்பட்ட வேகமான ஒரு உந்தித்தள்ளலை அவர் நம் நாட்டின் வரலாற்றுக்குக் கொடுத்தார் என்பதில்தான் அவரது மகத்துவம் பெரும்பாலும் அடங்குகிறது.

பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல. அவர் மக்கள் கவிஞர் என்பதால் அவர் நிச்சயமாக மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும் கூட. அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு கொதித்துப்போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண் முன்னால் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்தார். மக்களெல்லாம் அச்சத்தில் உறைந்திருக்கக் கண்டார். ஒவ்வொருவரின் முகத்திலும் அச்சமானது அச்சிடப்பட்டிருந்தது. ‘அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’. துப்பாக்கி வைத்திருக்கும் அந்நியர்களைப் பார்த்து மட்டுமே அவர்கள் அஞ்சவில்லை. சுலோகங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் சகோதரர்களைக் கண்டும் அஞ்சினார்கள். பேய்களையும் ஆவிகளையும் கண்டு அஞ்சினார்கள்.

இப்படிப்பட்ட மக்களால் தங்கள் நாட்டுக்கான விடுதலைப் போராட்ட வீரர்களாக ஆக முடியாது. ஆகவே, தன் நாட்டு மக்களை அச்சத்திலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விடுவிக்க முனைந்தார் பாரதி. அவர்கள் மனதில் நம்பிக்கையையும் துணிவையும் விதைத்தார், அவர்களுக்கும் மறைந்துகிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளியில் எடுத்துவந்து அவர்கள் முன்னே வைத்துக்காட்டினார். இப்படிப்பட்ட உள்ளார்ந்த ஆற்றலானது மக்கள் கூட்டத்தின் உறக்கத்தாலும் அப்பட்டமான அறியாமையாலும் மூடநம்பிக்கையாலும் அவர்களின் தாழ்வு மனப்பான்மையாலும் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டுவந்திருக்கிறது! இதையெல்லாம் மிகத் தெளிவாகக் கண்டுகொண்ட பாரதி இந்தத் தீமைகளின் ஆணிவேர்களைப் பிடுங்கியெறிய துணிவுகொண்டார். மக்கள் கவிஞர் ஒருவரால் மட்டுமே மக்களின் இப்படிப்பட்ட பிரச்சினைகளின்மேல் இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொள்ள முடியும்.

பாரதிக்கு நன்றாகத் தெரியும், இது எளிய மனிதர்களின் யுகம் என்பதும் ஜனநாயகத்தின் யுகம் என்பதும். ஆகவே, விடுதலைக்காக மக்கள்தான் போராட வேண்டும் என்று விரும்பினார். அவர் வெறுமனே கடவுளர்களை நோக்கிப் பக்தி பாமாலைகளாக வீசிக்கொண்டிருக்கவில்லை; சமஸ்தானங்களை நோக்கி சீட்டுக்கவி மட்டுமே எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஏருழும் உழவனை நோக்கிப் பாடினார், தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்த தாயை நோக்கிப் பாடினார், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையை நோக்கிக்கூட பாடினார். தாயகத்தின் விடுதலைக்காக வேதங்களிலிருந்தோ பழங்கால இலக்கியங்களிலிருந்தோ –பழங்காலக் கவிஞர்களைப் போல- மேற்கோள் காட்டிப் பேசவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த உலக நிகழ்வுகள், தொலைதூர நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் போன்றவற்றை சாதாரண மக்கள் முன்னே எடுத்துவைத்துப் பேசினார். பெருமக்கள் திரட்சியின் எழுச்சியினூடாக, மாஜினியின் பெருமுயற்சியின் பேரில், இத்தாலியில் சுதந்திரப் போராட்டத்தில் விடிவெளிச்சம் எப்படி விழுந்தது என்பதை பாரதி தன் மக்களுக்கு எடுத்துக்கூறினார். 

புரட்சிக்குப் பிந்தையை பிரான்ஸைக் குறித்து வண்ண வண்ணச் சொற்சித்திரம் தீட்டினார். ஜார்களின் கொடுங்கோன்மையிலிருந்து தளையறுத்துவிட்டுப் புத்தம் புதியதாக மினுக்கிய ரஷ்யாவின் புதுச் சித்திரத்தை முன்வைத்தார். இப்படியே சுதந்திர பெல்ஜியம், சுதந்திர பிரான்ஸ், செங்கொடி பறக்கும் ரஷ்யா என்பவைதான் பாரதி முன்வைத்த சித்திரங்களே தவிர இந்திரன் அல்லது பிரம்மனின் ஆன்மிக நாட்டின் சித்திரத்தையல்ல. மேலும் தன்நாட்டு மக்கள் ஃபிஜி தீவுகளில் படும் துயரத்தைக் கண்டும் ஒரு எழுத்துச் சித்திரம் தீட்டி, ஷேக்ஸ்பியரைப் போலவே கேள்வி எழுப்பினார், ‘கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே/ அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே!’ என்று. 

அவன்தான் மக்கள் கவிஞன். தன் நாட்டு மக்களின் தவறுகளையும் தீயகுணங்களையும் சுட்டிக்காட்டுவதற்கும் துளியளவு கூட அச்சம் கொள்ளாதவன், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் எவ்வளவு வேகமாக மேன்மையான ஒரு எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்க நாமெல்லாம் சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவன். சமூக அடுக்கில் மேல்நிலையில் இருப்பவர்களைக் கண்டு அவர் அஞ்சவில்லை. மக்களுக்கு முன்னால் எல்லா உண்மைகளையும் எடுத்துவைப்பதிலும் தடுமாறவில்லை.

மக்களின் கவிஞராக அவரது கடமையென்பது எப்போதெல்லாம் கபடமும் வஞ்சகமும் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் அவற்றைத் தோலுரித்துக் காட்டுவது, அதை பாரதி மிகுந்த துணிவுடனும் உற்சாகத்துடனும் செய்தார்.

உள்நோக்கம் கொண்ட சிலர் பாரதியின் சித்திரத்தை விரிவானதாக, அதாவது தேசிய கவியாக, விரிக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்தச் சித்திரத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அல்ல, மக்களின் கவிஞர் என்ற பாரதியின் இன்னொரு சித்திரத்தை தேசிய கவி என்ற பிரம்மாண்டமான சித்திரம் மறைக்க உதவும் என்பதற்காகத்தான் இம்முயற்சி.  

பாரதியின் கவிதைகள் கொட்டும் குளவிகள் மட்டுமல்ல. இந்த மக்கள் கவியானவர் தனது நாட்டின் பழைமைவாத மரபுகள், சிந்தனைகள் போன்றவற்றைத் தோலுரித்துக் காட்டத் தயங்கியதே இல்லை. பழமையில் ஊறியவர்களை ‘அறிவீலிகாள்’ என்று கடுமையான சொற்களைக் கொண்டே வசைபாடுகிறார். மாயாவாதத்தையும் கடுமையாக எதிர்த்து மரபுவாதிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். மாயாவாதம் நம்மைச் செயலற்றுப் போகச் செய்துவிடும் என்கிறார்.

பசி, வறுமை, அறியாமை இவை மூன்றையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். பணம்படைத்தோரின் கொடுமைகளுக்கு எதிராகத் தனது ஆற்றல்மிகுந்த குரலை எழுப்புகிறார், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார். தனது நாட்டு மக்கள் நிறைவாழ்வு வாழ்ந்து, தங்கள் அறிவுப் புலன்களை மேம்படுத்திக்கொண்டு, வணிகத்தில் சிறந்து விளங்கி, தங்கள் மண்ணைத் தொழில்மயமாக்கி, புதுயுகத்தின் எல்லாப் பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மதம் என்பது அர்ச்சகர்கள், சுலோகங்கள் பாடுதல் போன்றவற்றைச் சார்ந்ததன்று, மானுடத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் சேவை செய்வதே அதன் விரிவான பொருளில் அவருக்கு மதமாகப் பொருள்படும்.

மக்கள் கவிஞனுக்கு முன்னுள்ள பணி, மிகவும் பெரியது. புது உண்மையை மக்கள் உணரும்படிச் செய்வது, புதுப் பாதையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது, எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்குப் புதுவழிமுறையைத் தேர்ந்தெடுக்கச் செய்வது ஆகியவைதான் ஒட்டுமொத்தமாக அவனது பணிகள். ஜோசியர் கையிலிருந்து விடுவித்து வானியல் அறிஞர் முன்பு மக்களை நிறுத்துவதுதான் அவருடைய வேலை. மக்களின் மனதிலிருந்து ரசவாதியை விரட்டிவிட்டு ரசாயன அறிவியல் அறிஞரை அங்கு குடிபுகச் செய்வதுதான் அவருடைய வேலை. புரோகிதர்களைப் புறக்கணித்துவிட்டு அந்த இடத்தில் ஆசிரியர் வந்தமர்ந்துகொள்ள வழிவகை செய்வதுதான் அவருடைய வேலை. சித்துவேலைக்காரர்களை விரட்டிவிட்டு அந்த இடத்துக்கு உண்மையான மருத்துவர்களை வரச் செய்வதுதான் அவருடைய மாபெரும் வேலை. மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடினால்தான் அறிவியல் தழைத்தோங்கும். சுருங்கச் சொல்வதெனில், மக்களின் கவிஞருக்கு ஒரு புரட்சியாளரின் பணி முன்னிற்கிறது, இன்னும் சொல்லப்போனால் புரட்சியாளரைவிட கடினமான பணி அது. ஏனெனில், மக்கள் பொதுவாகக் கொடுங்கோலர்களையே தங்களின் ரட்சகர்களோ என்று தவறாக நினைத்துவிடக்கூடியவர்கள். இந்தப் போரில் மிகுந்த தீரத்துடன் பாரதி போரிட்டார். 

போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்றாலும் அவர் தற்போது உயிரோடு இல்லையெனினும் அவர் நமக்குச் சிந்தனையின் ஆயுதசாலையைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இந்தப் போரை முடித்துவிடக்கூடிய கையளிப்பு அது. மக்களின் கவிஞருக்கு ஒருவர் செய்யக்கூடிய மிகச் சிறந்த புகழாஞ்சலி எதுவாக இருக்குமென்றால் இந்தப் போரைத் தொடர்வதில்தான், மக்கள் விடுதலைக்காகப் போரிடுவதில்தான், அதன் மேன்மையான, முழுமையான அர்த்தத்தில். இதைச் செய்துமுடிக்கும் திறன் படைத்தோர் நம்மிடையே இருக்கிறார்கள், போர் முடிக்கப்படும் உறுதியாக!  


பாரதி குறித்த ஆசையின் கட்டுரைகள்:

1. பாரதியும் சூரியனைச் சுட்டிக்காட்டிய மல்பெரியும் 

2. பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்

3. பாரதீ: எம் கவிஞன் நீ!