Wednesday, December 20, 2023

ஓலம்



நேற்றைய கனவில்
தேவாலயத்தின் பெஞ்சில்
என் பிரார்த்தனையோடு
உறைந்திருக்கிறேன்

தேவாலயத்தின் இடப்பக்கச் சிறகிலிருந்து
ஓடிவரும் மூத்தவனைக் கண்டு
உதறியெழுந்து
சவுக்குக் குச்சியெடுத்துப்
பின்னங்காலில் 
விளாசு விளாசு என்று 
விளாசுகிறேன்
துடிதுடிக்கிறான்
துவண்டுவிழுகிறான்

முன்னே
சுவரில் கீழ்நோக்கிக்
கண்மூடிப் பார்த்தபடி
தொங்குபவரும்
மூத்தவர்தான்
என்ற நினைவு வந்ததும்
வெளியே ஓடுகிறேன்

நடுத்தெருவில் நின்று
பெருங்குரலெடுத்து
ஓலமிடுகிறேன்
ஓலமிடுகிறேன்
அப்படியொரு ஓலம்

டாக்டர் சூஸின்*
தூசி உலகத்து மனிதர்கள்
தம் உலகத்துக் குரலைக் கசிவிக்க 
ஒன்றுசேர்ந்து நிகழ்த்துமொரு
ஓலத்தைவிடப் 
பேரோலம்

ஆயினும் 
என் கனவைத் தாண்டும்
சக்தியில்லை அதற்கு
என் கனவைத் தாண்டிவந்து
அதைக் கேட்கும் சக்தியில்லை
எவருக்கும்

அப்போது பொறாமை கொள்கிறேன்
பூமிக்கடியிலிருந்து
கடவுளுக்குக் கேட்ட
ஆபெலின் ஓலத்தின் மீது

அப்போது பொறாமை கொள்கிறேன்
நிறத்திலிருந்து எல்லோருக்கும் கேட்ட
எட்வர்ட் மூங்க்கின்** 
ஓலத்தின் மீது

அப்போது பொறாமை கொள்கிறேன்
கின்ஸ்பெர்க்*** தன் காலத்தைக் கீறிப்
பீய்ச்சியடித்த ஓலத்தின் மீது 

அப்போதுதான் நினைவுக்கு வருகிறது
நான் ஒரு கடைக்குட்டியென்பது

அப்போதுதான் நினைவுக்கு வருகிறது
கடைக்குட்டிகளுக்கென்று
வேதாகமங்கள் எழுதப்படுவதில்லையென்று

இன்னும் இன்னும்
ஓலமிடுகிறேன்

ஓலமிட்டு ஓலமிட்டுத்
துடிதுடிக்கிறேன்
நடுத்தெருவில்
துவண்டுவிழுகிறேன்

சமயத்தில்
கனவிலிருந்து மூத்திரம்கூட
கசிந்துவிடுகிறது

அந்த
அதிர்ஷ்டமும் இல்லாதது
என் ஓலம்
           -ஆசை


குறிப்புகள்: 
*Doctor Seuss's 'Horton Hears a Who' (Novel and film)
** 'The Scream' a painting by Edvard Munch
*** 'Howl' poem by Allen Ginsberg 

 

No comments:

Post a Comment