Monday, January 25, 2016

ரோஹித், விண்மீன்கள் உனக்கே! எங்களுக்கல்ல!


மனஷ் பட்டாச்சார்ஜீ
(‘தி இந்து’ இதழின் நடுப்பக்கத்தில் 25-01-2016 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

இருட்டில் கிடக்கிறது எதிர்காலம்
நல்லனவற்றின் சக்திகள் பலவீனமாக இருக்கின்றன.
வதைக்கப்படக்கூடிய (உன்) உடலை நீ அழித்தபோது இது
உனக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருந்தது.
- பெர்டோல்ட் பிரெக்ட், அகதி டபிள்யூ.பி-யின் தற்கொலையைக் குறித்து’ என்ற கவிதையிலிருந்து…
ஜெர்மானிய யூதத் தத்துவவாதியும் விமர்சகருமான வால்டர் பெஞ்சமினைப் பற்றிய பெர்டோல்ட் பிரெக்டின் மேற்கண்ட வரிகள், எல்லைப் பகுதியில் இருந்த சோதனைச்சாவடிகளைத் தாண்டிப் போக முடியாத நிலை, நாஜிக்களிடம் தான் ஒப்படைக்கப்படும் அபாயம் இருப்பது குறித்த அச்சம் போன்றவை இருந்தாலும் பெஞ்சமினிடம் இருந்தது வெறும் தெளிவு மட்டுமல்ல; எதிர்காலம் குறித்த இருண்ட ஒரு தோற்றம்தான் பெஞ்சமினின் கண் முன்னே தெரிந்தது. இனவெறி பிடித்த ஒரு அரசு, அவரது நாட்டை ஆண்டுகொண்டிருந்ததும், நம்பிக்கை என்பது முற்றிலும் வறண்டுவிட்டிருந்ததும்தான் இந்தப் பார்வைக்குக் காரணம். ரஷ்யக் கவிஞர் விளாதிமிர் மாயகோவ்ஸ்கியின் கடைசிக் கவிதையில் வெளிப்படும் தெளிவும் நம்மை உறைய வைக்கக்கூடியது. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு இரவுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதை அது. அவரது கவிதைகளைப் பகிஷ்கரித்திருந்த ஸ்டாலினின் ஆட்சிக்கும் காதல் தோல்விக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டதால்தான் இந்தத் தற்கொலை. ஜெர்மானியக் கவிஞர் பால் செலானின் முடிவும் இதைப் போன்றதுதான். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள். செலான் மீது சுமத்தப்பட்ட ‘படைப்புத் திருட்டு’ பழியும், அவர் எடுத்துக்கொண்டிருந்த மனநல சிகிச்சையும்தான் காரணங்கள். அதுமட்டுமல்ல, செனைன் நதிக்குள் குதிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், ‘என்னைச் சுக்குநூறாகக் குணப்படுத்தினார்கள்’என்று அவர் எழுதியது, போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஒரு யூதராக இருந்ததன் நிராதரவான நிலையையே என்று கருத வேண்டும்.
இந்த உலகத்துக்கு ஒரு குறிப்பு
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா என்ற தலித் ஆய்வு மாணவர் தற்கொலை செய்துகொண்டபோதும் தனது நண்பர்களுக்கும் இந்த உலகத்துக்கும் ஓர் தற்கொலைக் குறிப்பை விட்டுச்சென்றிருக்கிறார். யாரையும் உலுக்கக்கூடிய குறிப்பு! சாதியால் செல்லரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கான பாடங்களை அந்தத் தற்கொலைக் குறிப்பு கொண்டிருக்கிறது. அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த சம்பவக் கோவைகள்தான் உண்மையில் வாழ்க்கை முழுவதும் அவரை அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இறுதியாகத்தான் தனது நண்பன் உமா மகேஸ்வரனின் அறையில் தன் வாழ்வை முடித்துக்கொள்ள ரோஹித் முடிவெடுத்தார். தனது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பெரிய இடைவெளி, தான் பெரிய மிருகமாக மாறிவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் ரோஹித் சொல்கிறார். தனது ஆத்மா எதன்மீது தோய்ந்திருக்கிறது என்பதையும் மேற்கொண்டு சொல்கிறார் - கார்ல் சகானைப் போன்ற ஒரு அறிவியல் எழுத்தாளராக ஆவதில். ஆனால், அவரது உடலோ அரசியலில் சிக்கிக்கொண்டிருக்கிறது, அதாவது ஆன்மாவை அகற்றிவிட்டு வெறும் உடலாகத் தன்னை ஆக்கிய அரசியலில். உடலிலிருந்து ஆத்மாவைத் தனிமைப்படுத்துவதைத் தத்துவமாகக் கொண்டிருக்கும் அரசியல் என்பது அவருக்கானது அல்ல. மனிதர்கள் இயற்கையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளாமல், அவர்களைத் தான் நேசித்ததாக அவர் புலம்புகிறார். தத்துவ மேதை ரூசோவுக்கு இருந்ததைப் போன்றதொரு தவிப்பு இது. தொழில்மயமானதற்குப் பிந்தைய காலகட்டத்தின் தவிப்பைப் போன்றது அது. தன்னைச் சுற்றிலும் ரோஹித் கண்டதெல்லாம் இரவல் பெற்ற உணர்வுகள், வலிந்து உருவாக்கப்பட்ட நேசம், சாயம்பூசப்பட்ட நம்பிக்கைகள், போலியான கலை போன்றவற்றைத்தான். தந்திர புத்திக்கு அவரது ஆன்மாவில் இடமில்லை என்பதைத்தான் அவரது தற்கொலைக் குறிப்பு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அரசியல், கலை போன்றவற்றைப் போல இயற்கையிலும் தந்திரத்துக்கென்று ஆத்மாவும் இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அவரது உடலிலிருந்து அவரது ஆன்மாவைப் பிய்த்தெறிந்திருக்கிறது. காயப்படாமல் நேசிப்பது என்பது கடினமாகிவிட்டது என்று ரோஹித் முடித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இயற்கை, கலை, அரசியல் போன்றவற்றைப் போல அன்பும் ஒரு தந்திரமான விஷயம்தான். இதை அறிவியலால் மறுக்க முடியாது. இதுதான் அவருள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
விண்மீன்களை நோக்கிய தேடல்
தற்கொலைக் குறிப்பு அடுத்ததாக அரசியல் விவகாரங்களை நோக்கி நகர்கிறது. ரோஹித் ஒரு தலித். விண்மீன்களை நோக்கிய அவரது தேடலில் இந்த அடையாளம் குறுக்கே வருகிறது. நம்பவே முடியாததுபோல் இருக்கிறதல்லவா! ஆனால், இந்து மதத்தின் சாதிய அமைப்பு இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறது. தலித்தாக இருப்பது என்பது மட்டும்தான் ரோஹித் மீது ஆதிக்க சாதிகள் திணித்திருக்கும் மதிப்பீடு. இந்த மதிப்பீடு என்பது நிராகரிப்பு, அவமானம், காயப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டே அளவிடப்படுகிறது. இனவெறியைப் போன்றதுதான் சாதியமும். நாஜிக்களின் ஆட்சியின் கீழ் பால் செலான் எதிர்கொண்ட இனவெறிக்குச் சற்றும் குறைந்ததல்ல சாதியம். சொல்லப்போனால் அதைவிட அரக்கத்தனமானது சாதியம். சக மாணவர் ஒருவரைத் தாக்கியதாக ரோஹித் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழக நிர்வாகத்தால் ரோஹித் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, ஒட்டுமொத்த உலகமும் தன்னை நெருக்குவதைப் போன்றுதான் ரோஹித் உணர்ந்திருக்க வேண்டும். ‘சாதிய, தீவிரவாத, தேச விரோத’ என்றெல்லாம் மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தது அவரது இதயத்தைச் சுக்குநூறாக உடைத்திருக்கலாம். சாதிவெறியின் பலிகடாவான ஒரு தலித்தே எப்படிச் சாதிவெறியராக இருக்க முடியும்? சாதியம் என்ற பெயரில் அபத்தமான குற்றச்சாட்டுகளை வைத்துவிட முடிகிறதல்லவா! ரோஹித்தின் புத்திக்கூர்மை மிகுந்த மூளையால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.
ஒரு ஓட்டு… ஒரு எண்… ஒரு பொருள்!
முசாபர்நகர் கலவரங்கள் குறித்த ஆவணப்படத்தை டெல்லிப் பல்கலைக்கழகத்தில் திரையிட விடாமல் ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பு தடுத்ததல்லவா! அதை எதிர்த்து நடைபெற்ற சிறிய போராட்டமொன்றில் ரோஹித் பங்கெடுத்துக்கொண்ட பிறகுதான் எல்லாமே ஆரம்பமாயிற்று. மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப் பட்ட கொடும் தாக்குதல்களைப் பற்றிய திரைப்படத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று பீற்றிக்கொள் ளும் ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் திரையிட முடியாதா? பெரும்பான்மையினரின் அட்டூழியத்துக்கு எதிராகப் போராடுவதற்கு அவருக்கு உரிமை உண்டுதானே! அதைத்தான் செய்தார். ஆனால், அந்த உரிமைக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். ஏனெனில், ஏட்டில் இருக்கும் ஜனநாயகத்துக்கும் நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்துக்கும் சம்பந்தமே இருப்பதில்லையே! ரோஹித் தனது குறிப்பில் துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மனிதனின் மதிப்பு என்பது ஒரு ஓட்டாக, ஒரு எண்ணாக, ஒரு பொருளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. முதலாளித்துவ, சாதியப் பொருளாதாரங்களின் அடிப்படை யான தத்துவம் மக்களை எந்த நிலைக்குக் கீழிறக்கிவிட் டிருக்கிறது என்பது குறித்த தீர்க்கதரிசனமான கூற்றுதான் அது. ஜனநாயகமும் சாதியமும் ஒன்றுக்கொன்று திட்டமிட்ட குற்றங்களை நிகழ்த்தும் இந்த அபத்தமான விளையாட்டில், தான் ஒரு எண் என்று கணக்கிடப்படுவதையோ, தனது கழுத்தில் ஒரு அடையாள வில்லை அணிவதையோ ரோஹித் மறுத்துவிட்டார்.
நிழலிலிருந்து விண்மீன்களை நோக்கி…
தனது விதியை நினைத்துப் பார்ப்பதற்கு இடையில், தனது உயிரைத் தன் கைகளாலேயே போக்கிக்கொள்வதென்று முடிவெடுத்த நிலையில், வதைபடக்கூடிய தனது உடலை அழிக்கக்கூடிய அந்த இறுதிச் செயலில்கூட மனிதன் மீதான தன் சொந்த வரையறையை விட்டுச்செல்கிறார் ரோஹித்: “நட்சத்திரத் துகள்களால் உருவான மகத்தான விஷயம். ஒவ்வொரு துறையிலும், ஆய்வுகளிலும் தெருக்களிலும் அரசியலிலும் மரணத்திலும் வாழ்விலும்.” தனக்கும் விண்மீன்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் தன்னிடம் இருக்கும் ‘அளவிடவியலாமை’யை எண்ணி வியக்கிறார். திரையிடலை நிறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும்போதும் சரி, தனக்கும் தனது நண்பர்களுக்கும் கல்லூரியில் அநியாயமாக அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்க்கும்போதும் சரி, தனது அளவிட இயலாமையைத்தான் எங்கும் காண்கிறார். இறப்பின்போதுகூட தன்னால் ‘நட்சத்திரங்களை நோக்கிப் பயணிக்க’ முடியும் என்று நம்புகிறார். ஆனால், பூமியில் இருந்தபோது அவர் உணர்ந்ததென்ன? ‘நிழலிலிருந்து விண்மீன்களை நோக்கி’ என்ற மேற்கோள்தான் இதற்குப் பதில். ஒரு தலித்தின் நிழல் ஆதிக்க சாதியினர் மீது பட்டால் தீட்டு என்றும், தலித்தின் உடலும் தீட்டு என்றும் ஆதிக்க சாதிகளால் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிழல்தான் விண்மீன்களுக்கு ஆசைப்படுகிறது. அளவிலிருந்து அளவின்மை நோக்கி, இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி.
ரோஹித் கண்ட தெளிவு
இருந்தும், தனது பிறப்பே பெரும் இன்னல் என்று நமக்கு நினைவுறுத்துகிறார் ரோஹித்: அவரைப் போன்றவர்களுக்கெல்லாம் பிறப்பே ‘ஒரு சாபம்’. தனது பிறப்பை ‘உயிர்பறிக்கும் ஒரு விபத்து’எனக் காண்கிறார். “எனது குழந்தைப் பருவத்தின் தனிமையிலிருந்து நான் மீளவே இல்லை. யாராலும் பாராட்டப்படாத குழந்தை நான்.” இப்படியாக பிறப்பு, சாதி, தனிமை, யாராலும் பாராட்டப்படாத குழந்தை என்பதையெல்லாம் தாண்டி தனக்குள் இருந்த அளவிடற்கரிய தன்மையை அவர் அறிந்துகொண்டதில்தான் இருக்கிறது அவரது மகத்துவம். இதன்மூலம் பெஞ்சமினிடம் பிரெக்ட்டும், மாயகாவ்ஸ்கி, செலான் ஆகியோர் தங்களிடமும் கண்ட தெளிவை ரோஹித் வெளிப்படுத்துகிறார்.
வரலாற்றின் அரக்கத்தனத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களாகிய தலித் மக்கள், கருப்பினத்தவர்கள், வஞ்சிக்கப்படும் பெண்கள், தொழிலாளர்கள் ஆகியோரே உண்மையான ஒரு பிரபஞ்சத்தன்மையைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டங்களின்போது அவர்களின் பிரபஞ்சத்தன்மை வெளிப்பட்டு நம்மை வசீகரிக்கிறது. அதிகாரத் தரப்பினரான வெள்ளை காலனியாதிக்கவாதிகள், ஆதிக்க சாதியினர் போன்றோர் தங்களிடம் இருப்பதாகக் கருதும் பிரபஞ்சத்தன்மை என்பது உண்மையில் பிரபஞ்சத்தன்மை அல்லாததும், சகிப்புத்தன்மையற்றதும், பாகுபாடு கொண்டதுமேயாகும். பிரபஞ்சத்தன்மை என்பது உலக வேதங்களிலல்ல, அந்த வேதங்களால் பாதிப்புக்குள்ளாகுபவர்களிடம்தான் இருக்கிறது. ரோஹித் தனது தற்கொலைக் குறிப்பில் யார் மீதும் பழிசுமத்தாததே வெறுப்பு விற்பனையாளர்களாக இருக்கும் தேசியவாதிகளுக்கும், சாதிவெறியர்களுக்கும் ஒரு பாடம்.
ஆகவே, ரோஹித்துதான் விண்மீன்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் இந்த உலகுக்கும் மனித ஆத்மாவுக்கும் உரிமை கோர முடியுமே ஒழிய, அவரது எதிர்ப்பாளர்களல்ல. ஏனெனில், அளவிட முடியாத கனவுகளையும் சாத்தியங் களையும் தான் கொண்டிருப்பது அவருக்குத்தான் தெரியும். மரணத்துக்குப் பிறகு விண்மீன்களுக்கிடையே இடம் கிடைக்க ரோஹித்துக்கு இருக்கும் தகுதியைக் கொஞ்சம்கூடக் கொண்டிராத நம்முடைய பொய்களையும் கேலிக்கூத்துகளையும் அம்பலப்படுத்திவிட்டுப் போய் விட்டார் ரோஹித், தனது மரணத்தால்.
- மனஷ் பட்டாச்சார்ஜீ, கவிஞர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் தத்துவ அறிஞர், புதுடெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்).
-‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Z4OUN3

Friday, January 22, 2016

ரோஹித்கள் ஏன் பிறக்கிறார்கள், ஏன் இறக்கிறார்கள்?


கரண் ராகவ்

(கரண் ராகவின் ஃபேஸ்புக் நிலைத்தகவல் எனது மொழிபெயர்ப்பில் 22-01-2016 அன்று ‘தி இந்து’வின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. இதன் முழு வடிவம் இங்கே)

பள்ளிப் பருவத்தில் தலித் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். ஒருமுறை, சற்றே வேடிக்கையாக அவனிடம் நான் இப்படிக் கேட்டேன்: ‘நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஓரளவு வசதிதான். ஆனா, என்னை மாதிரி இல்லாம நீ மட்டும் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறீயே. என் இடத்துக்கு நீயும் உன் இடத்துக்கு நானும் மாறிக்கொண்டால் என்ன?” அதற்கு அந்த நண்பன் சீரியஸாகவே பதில் சொன்னான்: ‘தோழா, ஒரு தலித்தாக இருப்பதுன்னா என்னன்னே உனக்குத் தெரியாது. ஒனக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது.” உண்மையைச் சொல்வதென்றால், தன்மீது மற்றவர்களுக்கு பச்சாதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவன் அப்படிப் பேசுகிறான் என்றுதான் அப்போது நான் நினைத்தேன்.

அதற்கும் பல ஆண்டுகள் கழித்தே அந்த நண்பன் சொன்னதில் இருந்த வலியையும் பரிதவிப்பையும் நான் புரிந்துகொண்டேன். மற்றுமொரு தலித் நண்பன் (அவனுடைய பேர் ராமு என்று சும்மா வைத்துக்கொள்வோம்) தனது தோழி ஒருத்தியுடன் (அவள் பேர் ராணி என்று வைத்துக்கொள்வோம்) பேசிய விஷயத்தைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டபோதுதான் எனக்கு எல்லாமே உறைத்தது.

ராமு நல்ல பையன், என்ன கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தனது சாதிப் பின்னணியை எப்போதுமே மறைக்க முயல்வான். ஆகவே, ராமு ஒரு தலித் என்பது ராணிக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பொதுவான நண்பன் ஷ்யாமுவைப் பற்றி அவர்கள் பேசியது இது:

ராணி: ‘ஏய், ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷ்யாமு ஒரு தலித் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.
ராமு: ‘அப்படியா… அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!’
ராணி: ‘ஆனா, அவள் ஒரு தலித் பொண்ணுப்பா.’
ராமு (தனது மனம் புண்பட்டதை மறைக்கும் விதத்தில்): ‘இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முன்னே போய்க்கிட்டிருக்கு.’
ராணி: ‘இருக்கலாம்பா, ஆனாலும்… ஒரு தலித் பொண்ணைப் போய் எப்படி அவன் கல்யாணம் செஞ்சிக்கிறது?’

இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி உணர்வுள்ள இந்தப் பெண் பிராமண வகுப்பையோ ராஜபுத்திர வகுப்பையோ சேர்ந்தவள் அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். சாதிப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள்கூட இந்த சாதிநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையில் சாதி அமைப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதன் அடையாளம்.

மோசமான அந்த அனுபவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூரும்போது ராமு என்னிடம் சொன்னான், “சகோதரா, இடஒதுக்கீட்டின் காரணமாக நல்ல வேலையைக் கூட ஓரளவு சுலபமாக என்னால் பெற்றுவிட முடியும். ஆனால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவளோட அப்பா அம்மாவை அதுக்கு சம்மதிக்க வைக்கிறதுக்குதான் வாய்ப்பே இல்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் பதவியை நான் வாங்குனாகூட ஆதிக்க சாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறது அவ்வளவு சுலபமில்லை.” அவமானத்துக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால் இன்றுவரை ராமுவுக்கு தோழிகளோ காதலியோ இல்லை. இப்படிப்பட்ட வலி குறித்து அவ்வளவு பயம் அவனுக்கு!

அவமானங்கள், நிராகரிப்புகள் குறித்த அவனது அச்சத்துக்கு முகாந்திரம் கிடையாது என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட மற்றொரு தலித் நண்பன் சொன்ன ஒரு விஷயத்தையும் கேளுங்கள். அவனுடைய சொந்தக்காரப் பையன் ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணைக் காதலித்திருக்கிறான். இந்தக் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் பிரிய வேண்டிவந்திருக்கிறது. இத்தனைக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்தைவிட பையனின் குடும்பத்தினர் வசதியானவர்கள். ‘ஏழை, பணக்காரர் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே இருக்கின்றன’ என்று பல வித்தகர்கள் வாதிடலாம். ஆனால், மேற்கண்ட அனுபவங்கள் சொல்லும் கதையே வேறு.

சாதி அடுக்கின் மேல்நிலையில், உயரிய அந்தஸ்துடன் இருக்கும்நாமெல்லாம் சாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேச்சின் தொடக்கமும்முடிவும் ‘இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும்.நண்பர்களேசாதிரீதியான பாகுபாடு என்பது நம்மால் நினைத்தே பார்க்கஇயலாத அளவுக்குக் கொடுமையானதுஇந்த உண்மையை நாம் ஆழமாகப்புரிந்துகொள்ள வேண்டும்அப்படிப் புரிந்துகொண்டால்தான்ரோஹித்வேமுலாக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ரோஹித் வேமுலாக்கள் ஏன்சாகிறார்கள் என்பதும் ‘மேல்சாதி’ குடும்பங்களில் பிறந்த நமக்குப் புரியும்!
(கரண் ராகவின் ஃபேஸ்புக்: https://www.facebook.com/karan.raghav.963?pnref=story)
கரண் ராகவின் ஃபேஸ்புக் பதிவின் மொழிபெயர்ப்பு; தமிழில்: ஆசை
- நன்றி: ‘தி இந்து’
- ‘தி இந்து’ இணையதளத்தில் இதன் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/vCy086

இந்த வளர்ச்சியால் நன்மை யாருக்கு? சூழலியல் செயல்பாட்டாளர் ஆஷிஷ் கோத்தாரி பேட்டி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 22-01-2016 அன்று வெளியான பேட்டியின் விரிவான வடிவம் இது.)

சுற்றுச்சூழல் செயல்பாடு என்பதைத் தன்னிடமிருந்தே தொடங்கிச் செயல்படுத்துபவர் ஆஷிஷ் கோத்தாரி. புனேவில் தன்னுடைய வசிப்பிடத்திலிருந்து ஆஷிஷ் தினமும் 10 கி.மீ. சைக்கிள் மிதித்தே அலுவலகம் செல்கிறார். மேலும், குளிர்பதனப் பெட்டியையும் அவர் பயன்படுத்துவதில்லை. அவரிடம் கைபேசியும் கிடையாது. இத்தனைக்கும் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் இவர். கல்ப விருக்‌ஷ் என்ற அமைப்பின் நிறுவனரும் கிரீன்பீஸ் இந்தியாவின் தலைவருமான ஆஷிஷ் கோத்தாரியை புனேவில் அவரது அடுக்ககத்தில் சந்தித்தும் மின்னஞ்சல் மூலம் கேள்விகள் கேட்டும் எடுத்த பேட்டி இது…

பள்ளி மாணவராக இருந்தபோதே சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா! அதற்கான உந்துதல் உங்களுக்கு எப்படி வந்தது?

விலங்குகள் மீது எனக்கு பிரியம் அதிகம். பள்ளி இறுதியாண்டுகளில் பறவை நோக்குதலில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என் பள்ளியில் ‘இயற்கை சங்க’த்தின் மூலமாக நிறைய செயல்பாடுகளில் ஈடுபட்டோம். அங்கே எங்களது முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தது. அமெரிக்காவின் ஆய்வகப் பரிசோதனைகளுக்காக செம்முகக் குரங்குகளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவரைச் சந்தித்தோம். டெல்லி ரிட்ஜ் காட்டுப் பகுதியில் அப்போதெல்லாம் நாங்கள் ‘இயற்கை உலா’ செல்வோம். அந்தக் காட்டுப் பகுதி அழிவுக்குள்ளாக்கப்படுவதை எங்களால் காண முடிந்தது. 1979-ல் டெல்லியின் காடுகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து நாங்கள் போராட ஆரம்பித்தோம். துணைநிலை ஆளுநரிடம் ஒரு மனுவையும் அளித்தோம். எனது சுற்றுச்சூழல் செயல்பாடுகள் இப்படித்தான் ஆரம்பித்தன. கூடவே, வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினோம். இதற்கு சிப்கோ போராட்டவாதிகள் எங்களுக்கு உந்துதலாக இருந்தார்கள். காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பாக இயங்கும் பலரின் நட்பும் ஏற்பட்டது. ஆனால், இவர்களில் சிலரிடம் காணப்பட்ட மக்கள் விரோதப் போக்கு காரணமாக அவர்களிடமிருந்து விலகினோம். கூடிய விரைவில் மூத்த சூழலியலாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. பல்வேறு கிராமத்து மக்களிடம் ஏற்பட்ட உறவுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் இயங்கிவருகிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக்கும் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்னென்ன?

சுற்றுச்சூழல் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் இப்போது இருப்பதைவிட குறைவான விழிப்புணர்வே அப்போது இருந்தது. ஆகவே, எங்கள் செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிரமம் இருந்தது. இருந்தும் சில வெற்றிகளை அப்போது எங்களால் பெற முடிந்தது. ஒருமுறை சவூதி அரேபிய இளவரசி இந்தியா வந்திருந்தார். கானல்மயில், வரகுக்கோழி போன்ற அழிவின் விளிம்பில் இருந்த பறவைகளை வேட்டையாட இந்திய அரசு அவருக்கு அனுமதி அளித்திருந்தது. அதை எதிர்த்து இளைஞர்களான நாங்கள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியமானது. சவூதி அரேபியத் தூதரகத்தின் முன்பு நின்றுகொண்டு நாங்கள் 15 பேரும் போராட்டம் நடத்தினோம்.  எங்கள் போராட்டம் பத்திரிகைகள் பலவற்றையும் ஈர்த்தது. இதன் விளைவாக, வேட்டையாடுவதைத் தவிர்க்கும்படி இந்திய அரசு சவூதி இளவரசியிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், தற்காலத்தில் 15 பேர் போராடினால் அநேகமாக யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்து பொதுமக்களிடையேயும் அரசுத்தரப்பிலும் இப்போது விழிப்புணர்வு சற்றே அதிகரித்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே, சுற்றுச்சூழல் தொடர்பான எளிய கோரிக்கைகளைத் தாண்டி சுற்றுச்சூழல்-வளர்ச்சி, சூழலியல் பாதுகாப்பு-வாழ்வாதரம் ஆகியவற்றுக்கான தொடர்புகள் என்று சிக்கலான விஷயங்களை இப்போது நாம் பேச வேண்டியிருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்து எந்த வித லாப நோக்கமுமின்றி செயல்பட முன்வருபவர்கள் இன்று குறைவு. இன்றும் உத்வேகமிக்க இளைஞர்கள் சிலர் இந்தத் துறைக்குள் லட்சிய உணர்வோடு வருகிறார்கள் என்றாலும் அந்த எண்ணிக்கை குறைவே.  

‘பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகள்’ தொடர்பான செயல்பாடுகளும் உங்கள் அக்கறைகளுள் முக்கியமானவை. இதில் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

காட்டுயிரையும் உயிர்ப்பன்மையும் பாதுகாக்கும் செயல் என்பது பழங்குடி மக்கள், உள்ளூர்ச் சமூகங்கள் ஆகியோரின் மரபுகளிலும் நெறிமுறைகளிலும் ஒரு அங்கமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. உயிர்ப்பன்மையைச் சார்ந்த அவர்களின் இந்த வாழ்க்கை முறை அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, பண்பாட்டு அடையாளமும் கூட. இந்த அம்சம் (உலகின் பல பகுதிகளைப் போலவே) இந்திய அரசின் சூழலியல் பாதுகாப்புக் கொள்கைகளால் புறக்கணிக்கப்பட்டது. எங்கெல்லாம் ‘பாதுகாக்கப்பட்ட இயற்கை பிரதேசங்கள்’ என்று அறிவிக்கப்படுகின்றனவோ அங்கிருந்து அந்தப் பகுதியின் பூர்வகுடிகள் துரத்தப்பட்டுவருகின்றனர். அந்தப் பிரதேசங்கள் சார்ந்த அந்த மக்களின் இயற்கை அறிவும் பழக்கவழக்கங்களும் உதாசீனப்படுத்தப்படுகின்றன. காட்டுயிரைப் பாதுகாக்கவும், அங்கே வசிக்கும் மக்கள் சமூகங்களைப் பாதுகாக்கவும் வேண்டுமென்றால் இப்படி அவர்களைத் துரத்தவோ அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டுத் திட்டங்கள் தீட்டவோ கூடாது என்பதை நாங்கள் பல பத்தாண்டுகளாக வலியுறுத்திவருகிறோம். ஒரு இயற்கைப் பிரதேசத்திடமிருந்து அதன் மக்களை அந்நியப்படுத்தினால் வெறுப்பும் அவநம்பிக்கையும் மோதலும்  ஏற்பட்டு இரண்டு தரப்புக்கும் பாதகமாக மாறிவிடும். ஆகவே, எல்லோரையும் உள்ளடக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள்தான் அவசியம். இதற்காக இந்திய அளவிலும் உலக அளவிலும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். உள்ளூர்ச் சமூகங்களை மையமாகக் கொண்ட திட்டங்கள்/ நடைமுறைகள், அரசு/ உள்ளூர்ச் சமூகங்கள்/ பொதுச்சமூகம் ஆகிய மூன்று தரப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு போன்றவற்றை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். இதனால், பல நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவிலோ அதிகாரத்தரப்பும் அதிகார மட்டத்தில் செல்வாக்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் மந்தமாக இருப்பதால் மாற்றங்களும் மந்தமாகவே உள்ளன. வன உரிமைகள் சட்டத்துக்கு இந்த இரண்டு தரப்புகளுமே காட்டிவரும் எதிர்ப்பே ஓர் உதாரணம். இந்தச் சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டால் வனப்பழங்குடியினரின் உதவியோடே காட்டுயிர்ப் பாதுகாப்பைத் திறம்பட மேற்கொள்ள முடியும். அந்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது.   


சுற்றுச்சூழல் தொடர்பாக அரசு நியமித்த வெவ்வெறு குழுக்களில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். உங்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா?

சிலர், நாம் சொல்வதைக் கேட்பார்கள்; சிலருடன் பெரும் போராட்டமாக அமைந்துவிடும். அணைத் திட்டங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்திருந்த குழுவில் நானும் என் சகா ஒருவரும் பட்டபாட்டைச் சொல்லி மாளாது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளுக்கும், கள ஆய்வுக்கும் ஒற்றைக்காலில் நின்று அனுமதி வாங்க வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, மற்ற சில உறுப்பினர்கள் எங்களைப் புரிந்துகொண்டார்கள். எனினும், எங்களை விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தக் குழுவின் ஆயுட்காலம் முடிவதற்குள் எங்களைக் குழுவிலிருந்து விரட்டிவிட்டது. ‘தேசிய உயிர்ப்பன்மை செயல்திட்ட’த்தையும் ‘நடவடிக்கைக்கான பணித்திட்ட’த்தையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நான்கு ஆண்டுகால ஒருங்கிணைத்தது அற்புதமான அனுபவம். ஆனால், இதன் இறுதி வடிவத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் கலந்தாலோசித்த அந்த ஆவணத்தின் புரட்சிகரமான இயல்பை அமைச்சரகத்தால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோல் பல்வேறு குழுக்கள்; ஆனால் அனுபவம் ஒன்றுதான்!          



கிரீன்பீஸ் அமைப்பின் இந்தியத் தலைவர் நீங்கள். இந்தியாவில் கிரீன்பீஸ் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்களேன்! 

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பது, நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்துவது, சுற்றுச்சூழலுக்கு இயைந்த எரிசக்தியைப் பயன்படுத்துவது, அணுசக்தி எதிர்ப்பு, வளம்குன்றாத வேளாண்மையை ஆதரிப்பது போன்றவை கிரீன்பீஸ் அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது குறித்து கிரீன்பீஸ் தொடர்ந்து வலுவாகக் குரல் எழுப்பிவருகிறது. பிஹாரில் உள்ள ஒரு கிராமம் முழுவதற்கும் சூரிய மின்சக்தி இணைப்பைக் கொடுத்து ஒரு முன்மாதிரியையும் கிரீன்பீஸ் காட்டியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் மஹன் பகுதியில் நிலக்கரி வெட்டியெடுப்பதற்கு எதிராக அங்குள்ள மக்களின் போராட்டங்களில் கிரீன்பீஸ் துணைநின்றிருக்கிறது. பாதுகாப்பற்றதும் அதிகம் செலவு பிடிக்கக்கூடியதுமான அணு உலைகளுக்கு எதிராகவும், வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு, மரபணு மாற்றப்பயிர்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் கிரீன்பீஸ் தொடர்ந்து போராடுகிறது.

கிரீன்பீஸ் அமைப்பை இந்திய அரசு முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன?

தாராளமயமாக்கல், கனரகத் தொழில்மயமாக்கல், தனியார் துறையை மையம்கொண்ட வளர்ச்சி போன்றவற்றைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசுக்கும் வித்தியாசமே இல்லை. இது போன்ற வளர்ச்சியை பல்வேறு தரப்பு மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வளர்ச்சியாகவே கருதுவதில்லை. அதனால்தான் எதிர்க்கிறோம். இதுபோன்ற வளர்ச்சி மாதிரியால் இயற்கை பெருமளவில் சூறையாடப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வும் ஏற்படுகிறது; மேலும் மேலும் பல கோடிக்கணக்கானோர் வறுமை நிலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். சிறு எண்ணிக்கையிலானோரிடம் மட்டும் ஒட்டுமொத்த செல்வமும் சென்று குவிகிறது. அரசதிகார தரப்பிலும் அரசுக்கு வெளியில் பெருநிறுவனங்கள் தரப்பிலும் உள்ள சில பணக்காரர்களுக்கும் நகர்ப்புறத்திலும் கிராமப்புறங்களிலும் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் மட்டுமே இது நன்மை தரும் என்பதுதான் உண்மை. ஆகவே, இதற்கெல்லாம் எதிராகவும், இந்த வளர்ச்சி மாதிரிகளில் அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தியும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் பல, குரலெழுப்புகின்றன. அதுமட்டுமல்லாமல், அரசியல்/அதிகார/ பெருநிறுவனத் தரப்புகளுக்குச் சாதகமாகவே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுவதற்கு எதிராகவும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குரலெழுப்புகின்றன. ஆகவே, அரசின் திட்டங்களாலும் கொள்கைகளாலும் பயனடைந்துவரும் ஆதிக்கத் தரப்பினர் இதுபோன்ற எதிர்ப்புக் குரல்களையெல்லாம் அழித்தொழிக்க முயல்கின்றனர். சில சமயம், இதுபோன்ற தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் சில, ஆதிக்கத் தரப்பினரிடம் விலைபோகின்றனர். அடிபணியாதவர்களோ அச்சுறுத்தல், ரத்துசெய்யப்படுதல் போன்ற ஆயுதங்களால் தாக்கப்படுகின்றனர். கிரீன்பீஸ் அடிபணியவில்லை. அதனால் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

வளர்ச்சியை முன்னிறுத்திதான் மோடி வெற்றிபெற்றார். அவருடைய வளர்ச்சி மாதிரி என்பது உண்மையில் சாத்தியமானதா?

சாத்தியமானதே! ஆனால், அதனால் யாருக்கு நன்மை என்பதுதான் கேள்வி! இயற்கை வளத்தைச் சூறையாடாமல் ஏற்படும் வளர்ச்சியா இது என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். ஏற்கெனவே நான் சொல்லியதுபோல் சிறுபான்மை எண்ணிக்கையிலான ஆதிக்கத் தரப்புக்கு மட்டுமே இது நன்மை தரும்; பெருமளவிலான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அரசு தரும் தரவுகளிலிருந்தே இதை நாம் நிரூபிக்க முடியும். எத்தனை கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், புதுப்பிக்க முடியாத வகையில் நம் இயற்கை வளங்களை எப்படி நாம் இழந்திருக்கிறோம் என்பதையும் எங்கள் ‘சர்னிங் தி எர்த்: த மேக்கிங் ஆஃப் குளோபல் இந்தியா’ (http://churningtheearth.in) என்ற புத்தகத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். சொல்லப்போனால், இந்தியாவும் ஒரு காலனியாதிக்க நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பண்ணைகளுக்காகவும், மேய்ச்சல் வெளிகளுக்காகவும் இந்தியப் பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்ததால் அங்குள்ள உள்ளூர்ச் சமூகங்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். நில அபகரிப்பு, வாழிட இழப்பு, வாழ்வாதார இழப்பு, வறுமை, இயற்கைச் சூழல் அழிப்பு போன்ற எல்லாமே இந்த ‘வளர்ச்சி’யின் நேரடி விளைவுகள். நோம் சாம்ஸ்கி போன்றோர் சுட்டிக்காட்டுவதுபோல், இது போன்ற வளர்ச்சி மாதிரியைக் கொண்டு உலக வறுமையை ஒழிப்பதற்கு 200 ஆண்டுகள் ஆகும். அதற்கு உலகப் பொருளாதாரம் 12 மடங்கு அதிகமாக வேண்டும். அப்படியென்றால், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழலியல், பருவநிலை பாதிப்புகள் எவ்வளவு இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்! 

இதே நிலை நீடித்தால் இந்தியா தாக்குப்பிடிக்குமா?

நிச்சயம் தாக்குப்பிடிக்காது. அடுத்த தலைமுறையிடமிருந்தும், தற்போதைய தலைமுறையின் வெவ்வெறு தரப்புகளிடமிருந்தும், மற்ற உயிரினங்களிடமிருந்தும் திருடித்தான் நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். அதுவும் தற்காலிகமாகத்தான். சூறையாடப்படும் இந்தத் தரப்புகள் ஏற்கெனவே திருப்பியடிக்க ஆரம்பித்துவிட்டன. தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகளின் மூலம் இயற்கை காட்டும் எதிர்ப்பும் இவற்றில் முக்கியமானது.


பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகளின்போது ஒருவிதமாகவும், இங்கே இந்தியாவில் வேறுவிதமாகவும் நம் அரசு நடந்துகொண்டிருக்கிறதே…

இரட்டை நாக்கு என்பார்களே அதுதான் இது. பருவநிலை மாற்றங்கள் என்றில்லை, உயிர்ப்பன்மை குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா சற்றே முற்போக்காக இருக்கிறது. ஆனால், தன்னுடைய வார்த்தைகளையே இந்தியாவுக்குள் அது பின்பற்றுவதில்லை. பருவநிலை மாற்றத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய முழுப் பொறுப்பையும் வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொண்டு,  ‘வளர்ந்துவரும்’ நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பது நியாயமே. ஆனால், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் நமது நாட்டின் ஏழை மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்தான் முதலில் பயன்பட வேண்டும்.

பருவநிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கு மாறுவது, உள்ளூர்ச் சமூகங்களின் உதவியோடு காடுகளைப் பாதுகாப்பது, வாகன மோகத்தை விட்டுவிட்டுப் பொதுப்போக்குவரத்துக்கு மாறுவது, ரசாயன வேளாண்மையை விடுத்து இயற்கைவழி வேளாண்மைக்கு மாறுவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதுதான் இயற்கையையும் மக்களையும் காப்பாற்றும். இரண்டாவதாக, விகிதாச்சாரக் கணக்குகளையெல்லாம் காட்டி ‘ஏழைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும்’ செயலை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மை என்னவென்றால், தொழில்வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவுக்கு இந்தியாவில் உள்ள மேல்தட்டுப் பணக்காரர்களும் பொறுப்பாளிகள். இந்தியாவில் கொஞ்சமாக மிச்சமிருக்கும் ‘தூய்மைச் சூழலையும்’ ஆக்கிரமித்துக்கொண்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களாக ஏழைகளை ஆக்குவது இங்குள்ள மேல்தட்டுப் பணக்காரர்களே!      


சொல்லப்படுவதுபோல், இந்தியா ‘பிரகாசமான வளர்ச்சி’ அடையவில்லை என்கிறீர்களா?

‘பிரகாசம்’ என்று எதைச் சொல்கிறீர்கள். எண்ணிக்கையை வைத்து என்றால் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறையை வைத்து அப்படிச் சொல்லலாம். வறுமையை ஒழிப்பதும், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் துயர் துடைத்து மகிழ்ச்சியான, எளிதான வாழ்க்கையை அவர்களுக்கு வழங்குவதும்தான் வளர்ச்சியின் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, ஏதோ ஒருசிலருக்கு மட்டும் சொகுசான, படாடோபமான வாழ்க்கையை சாத்தியப்படுத்துவதல்ல. இந்த வகையில் பார்த்தால் இந்திய வளர்ச்சி என்பது கொஞ்சம்கூட பிரகாசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்ணீருக்காகவும் நிலத்துக்காகவும் இயற்கை வளங்களுக்காகவும் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு மோதல்கள் நடக்கும்? 

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்குத் தீனி போடுவதற்கு இயற்கை வளங்கள் பெருமளவில் தேவை. இந்த இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் அவற்றை நம்பி வாழும் உள்ளூர்ச் சமூகங்களிடையே பெரும் போட்டிகளும் மோதல்களும் மேலும் அதிகரிக்கும். உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் இந்தியா ஓரளவுக்கு அமைதியான நாடுதான். ஆனால், கூடிய சீக்கிரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நிலை மாறும். மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நாம் ஏற்கெனவே பார்த்துவரும் மோதல்களெல்லாம் எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்தின் அறிகுறிதான். தற்போதே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்களுக்குக் கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. தற்போதைய வளர்ச்சி மாதிரி தொடருமென்றால் நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆகும்.

உங்களின் புதுமுயற்சியான விகல்ப் சங்கம் பற்றிச் சொல்லுங்கள்!

அழிவை ஏற்படுத்தும் தற்போதைய வளர்ச்சி மாதிரிக்கு மாற்றாக ஆக்கபூர்வமான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முயற்சி இது. நியாயமான முறைகளில், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஆயிரக் கணக்கான முன்னெடுப்புகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ளன. அரசாங்கமும் பெருநிறுவனங்களும் நமக்காக வடிவமைக்கும் எதிர்காலத்துக்கு மாற்றாக ஆக்கபூர்வமானதும், வரலாற்றுபூர்வமானதும் புதுமையானதுமான உலகப் பார்வைகள் இருக்கின்றன. பழங்குடியினர், தலித் மக்கள், பெண்கள் போன்ற தரப்புகளும் காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளும் இதுபோன்ற மாற்றுச் சிந்தனைக்கு உதாரணங்கள். இதுபோன்ற மாற்றுத்தரப்புச் சிந்தனையாளர்களையும் மரபுகளையும் ஒருங்கிணைக்க விகல்ப் சங்கம் முயல்கிறது. இப்படி ஒருங்கிணைவது, பரஸ்பரம் கற்றுக்கொள்வது, கூட்டுறவை வளர்த்துக்கொள்வது, மாற்றத்துக்குத் தேவையான பெரும் சக்தியை வளர்த்துக்கொள்வது, எதிர்காலம் குறித்த பொதுவான பார்வைகளை உருவாக்குவது போன்றவற்றை விகல்ப் சங்கம் மேற்கொள்கிறது. கைத்தொழில்கள், உழவு, நெசவு, கல்வி, சுகாதாரம், சந்தைப்படுத்துதல், சமூகநீதி.. இப்படிப் பல்வேறு துறைகளில் சூழலுக்கு இயைந்த வகைகளில் இந்தியா முழுவதும் இயங்கும் சிறு குழுக்களை விகல்ப் சங்கம் ஒன்றிணைத்து வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.       

இவ்வளவு சொல்கிறீர்கள். ஆனால், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை மக்களும் சரி அரசும் சரி வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மக்களுக்கு எதிரானவர்களாகவும் பார்க்கிறார்களே…

விகல்ப் சங்கம் மூலம் நாங்கள் செய்துவரும் மாற்றங்களைப் பார்த்தாலே நாங்கள் மக்களின் தேவைகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரியும். மாறாக, இன்றைய வளர்ச்சி மாதிரியைத்தான் நாங்கள் ‘மக்களுக்கு எதிரானது’ என்கிறோம். சுற்றுச்சூழலுக்கு இயைந்த வகையில், சமத்துவமான வழியில், ஜனநாயகபூர்வமாக மனிதர்களின் சுகவாழ்வை அடைவது என்பதுதான் எங்கள் லட்சியம். 
(இந்தப் பேட்டியின் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’வின் அச்சுப்பதிப்பில் வெளியாகியிருக்கிறது.)
 - நன்றி: ‘தி இந்து’
 -  ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Ii99o6 



Monday, January 11, 2016

இந்தியாவின் ‘டா வின்சி கோட்’


 
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் 11-01-2016 அன்று வெளியான விமர்சனத்தின் முழு வடிவம் இது.)

எழுத்தாளர் ஜெயமோகன், ‘நமக்குத் தேவை டான் பிரவுன்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். ‘டா வின்சி கோட்’ என்ற பரபரப்பான வெகுஜன நாவலை எழுதி உலகப் புகழும் (நிந்தனையும்) பெற்றவர் டான் பிரவுன். ஆங்கிலத்தில் டான் பிரவுன்களின் புத்தகங்களும் கோடிக்கணக்கில் விற்கின்றன, ஹாரி பார்ட்டர் நாவல்களும் கோடிக்கணக்கில் விற்கின்றன. அதே நேரத்தில், இன்றுவரை இலக்கியத்தைப் பொறுத்தவரை ஷேக்ஸ்பியரின் படைப்புகள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இப்படியாக, எல்லா இலக்கிய வகைகளிலும் தரமான எழுத்துக்களைக் கொண்டு ஆங்கிலம் உலகாள்கிறது. இந்திய மொழிகளிலோ தீவிர இலக்கியப் படைப்பைத் தவிர மற்ற வகைகளில் சொல்லிக்கொள்ள அநேகமாக ஏதும் இல்லை. அந்தக் குறையைப் போக்க இந்தியாவின் டான் பிரவுனாக உருவாகியிருக்கிறார் மலையாள எழுத்தாளர் ட்டி.டி. ராமகிருஷ்ணன். ஆனால் இரண்டு பேருக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. ராமகிருஷ்ணனின் நாவலில் ஓடும் இலக்கிய நயம்தான் அது.

டான் பிரவுன் தனது நூலில் கூறப்பட்டிருக்கும் தகவல்களும் முழுவதும் உண்மை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பார். ராமகிருஷ்ணனோ உண்மையும் கற்பனையும் கலந்த நாவல் இது. எது உண்மை எது கற்பனை என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என்கிறார்.

15-ம், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாபாரியும், வியாபாரத்துக்காகக் கடல் கடந்து சென்றவனும், கணிதத்தில் அசாதரணமான அறிவைப் பெற்றவனுமான ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவைப் பற்றிய தேடல்தான் இந்த நாவலின் மையம். ஒரு வகையில் டான் பிரவுனின் நாவலில் டாவின்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் இந்த நாவலில் இட்டிக்கோராவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவின் பரம்பரையில் வந்த சேவியர் ஃபெர்னாண்டோ இட்டிக்கோரா என்ற அமெரிக்கவாழ் இளைஞன் தன்னுடைய கேரள வேர்களைத் தேடவும் இழந்துபோன ஆண்மையை மீட்கவும் மூன்று இளம் பெண்களின் உதவியை நாடுகிறான். ரேகா, பிந்து, ரஸ்மி என்ற பெயருடைய அந்தப் பெண்கள் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் ரகசியமாக அதிநவீனப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இட்டிக்கோராவைப் பற்றிய தேடலில் அவர்களுக்கு எதிர்பாராத ஆச்சர்யங்களும் ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இட்டிக்கோராவின் வழிவந்த 18-ம் கூட்டத்தார் என்ற மூடுண்ட, ரகசியச் சடங்குகளைக் கொண்ட குடும்பத்தினர்களைப் பற்றித் தெரியவருகிறது.
பதினெட்டாம் கூட்டத்துக் குடும்பத்தினரின் சடங்குகள் விசித்திரமானவை. கோராப் பாட்டனுக்குக் கொடுத்தல், கோராப் பணம் என்று கிடைக்கும் தகவல்கள் அமானுஷ்யமாக இருக்கின்றன. 18-ஆம் கூட்டத்தாரைப் பற்றி எழுதப் போய் மரணத்தைத் தேடிக்கொண்ட ஒருவரைப் பற்றியும் தெரியவருகிறது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகார மட்டங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நாடாளுமன்ற உறுப்பினர்; இந்தப் பெண் மூன்று பெண்களின் வாடிக்கையாளரும்கூட. 18-ம்கூட்டத்தாரைப் பற்றிய தேடலை அறிந்துகொண்டு இவர்களை அவர் மிரட்டுகிறான். இந்தக் கூட்டத்தார் காலம் காலமாகத் தங்கள் வியாபார லாபத்தில் ஒரு பகுதியைக் கோராப் பணமாகச் சேர்த்துவைத்திருப்பது, எல்லா மர்மங்களுக்கும் பின்னணியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

கதை இப்படிப் போய்க்கொண்டிருக்க கிளைக்கதைகளாகப் பல்வேறு கதைகள் விரிகின்றன. அவற்றில் வரலாற்றின் முதல் பெண் கணிதவியலாளரான ஹைபேஷாவைப் பற்றியது மிகவும் முக்கியமானது. மதவாதிகளால் கொல்லப்பட்ட ஹைபேஷாவின் கணிதத்தை இட்டிக்கோரா முதலானவர்கள் காப்பாற்றிவருவதாகவும், நவீன காலக் கணித மேதைகளான பால் எர்தோஷ், அலெக்ஸாண்டர் குராதெண்டிக் போன்றோர் ஹைபேஷா, இட்டிக்கோராவின் கணிதச் சிந்தனைகளால் தாக்கம் பெற்றவர்கள் என்றெல்லாம் சிறகு விரிக்கிறது. இந்திய, மேற்கத்திய கணிதச் சிந்தனைகளும் இடம்பெறுகின்றன. பை, பி (தங்க விகிதம்) என்றெல்லாம் சிறகு விரித்திருக்கிறது ராமகிருஷ்ணனின் புனைவு. கணிதத்தையும் புனைவையும் ஒன்றுசேர்த்து, வெகுஜன வாசிப்புக்கு ஏற்ப கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. அதை அற்புதமாகச் செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன். எனினும், நாவலில் கணிதம் இடம்பெற்றிருக்கும் அளவு சற்று அதிகமே. முக்கியமாக, ஃபெர்மாட்டின் தொலைந்துபோன தேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கங்கள் அதிகம்.

ரகசியச் சமூகம், விசித்திரச் சடங்குகள், கணிதம் என்று மட்டும் நிற்கவில்லை. இராக் மீது அமெரிக்கா நடத்திய கொடும் போரின் அமெரிக்கப் பிரதிநிதியாக, சாட்சியாக இருப்பவன் இளைஞன் இட்டிக்கோரா. அமெரிக்காவின் அத்துமீறலை அம்பலப்படுத்துவதற்கு நியூயார்க் டைம்ஸின் பால் குருக்மேன் (பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு வாங்கியவர்) இட்டிக்கோராவை ஒரு கூட்டத்துக்கு அழைக்கிறார். சதாம் உசேனுக்கும் ரம்ஸ்ஃபீல்டுக்கும் இடையே நடந்த உரையாடல் அந்தக் கூட்டத்தில் வெளியிடப்படுகிறது. அது மட்டுமா, நாவலின் தொடக்கத்திலேயே அபு கிரையப் சிறையின் நடத்தப்படும் சித்திரவதை குறித்தும் வருகிறது. இப்படியாக, கேரளம், எகிப்து, இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், இராக், அமெரிக்கா என்று உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணிக்கிறது இந்த நாவல். துப்பறியும் நாவல் போலவும், வெவ்வேறு கலாச்சாரங்களின் சடங்குகளுக்கிடையே ஒப்புமை காணும் நாவலாகவும், கணிதப் புனைவாகவும், சமகால அரசியல் நாவலாகவும் ‘ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா’ நாவல் உருவாகியிருக்கிறது. இவற்றில் சில தளங்களில் முழுமையை எட்டவில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றை நாவல் தோண்டி எடுத்தாலும் கதை தொடங்கப் போகும் இடத்தில் முடிந்துபோய்விடுகிறது. கோராப் பணம், 18-ம் குடும்பத்தினரின் ரகசியங்கள் என்று நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நாவல்  தனக்குத் தானே திருப்தி அடைந்துகொண்டு பயணத்தின் தொடக்கத்திலேயே நின்றுவிடுகிறது. இது போன்ற குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்தியாவில் எழுதப்பட்ட முக்கியமான சர்வதேச நாவலாக இதைக் கருதலாம். அவசியமான மலையாள வாடையுடன், வாசிப்பு சுவாரசியத்தை எந்த விதத்திலும் குறைத்துவிடாமல் மலையாளத்திலிருந்து இந்த நாவலை குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

ட்டி. ராமகிருஷ்ணன்,
தமிழில்: குறிஞ்சிவேலன்
விலை ரூ: 275
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை-18.
தொடர்புக்கு: 044-24993448

மின்னஞ்சல்: uyirmmai@gmail.com 

 - நன்றி: ‘தி இந்து’
- 'தி இந்து’ இணையதளத்தில் இந்த விமர்சனத்தின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/SZah5P

Friday, January 8, 2016

1944: ‘கொன்றது நீயல்ல, இந்தப் போர்தான்’ - சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒரு உலா!

ஆசை
(சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை முன்னிட்டு ‘ தி இந்து’ இணையதளத்தில் வெளியான கட்டுரை)

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் புதன் அன்று (06-01-2016) கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்ட ‘1944’ என்ற எஸ்தோனியத் திரைப்படத்தைப் பார்த்தபோது ஈழத் தமிழ்க் கவிஞர் சிவசேகரம் எழுதிய இந்தக் கவிதைதான் நினைவுக்கு வந்தது:
 
துரோகி எனத் தீர்த்து 
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது 
சுடுமாறு ஆணை 
இட்டவனைச் சுட்டது
குற்றம் சாட்டியவனை 
வழக்குரைத்தவனை 
சாட்சி சொன்னவனை 
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது 
தீர்ப்பை ஏற்றவனை சுட்டது 
எதிர்த்தவனை சுட்டது 
சும்மா இருந்தவனையும்
சுட்டது.
 
துப்பாக்கி, பீரங்கி, குண்டு போன்றவற்றுக்கெல்லாம் நாடு, இனம், மொழி, அன்பு, நட்பு, கருணை, புத்தி என்று ஏதும் கிடையாது என்பதைச் சொல்லும் திரைப்படம்தான் ‘1944’. அமோ ங்கானன் (Elmo Nüganen) இயக்கி, வெளிநாட்டுத் திரைப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம்.
 
இரண்டாம் உலகப் போரைப் பற்றி எடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான திரைப்படங்களின் வரிசையில் மேலும் ஒரு தரமான படம். ஆனால், இந்தப் படம் காட்டும் கோணம் ஐரோப்பியரல்லாத நாட்டினருக்கு அவ்வளவாகப் பரிச்சயப்படாத ஒன்று. வரலாற்றின் விசித்திரப் போக்கில் சிக்கிக்கொண்ட தேசம் எஸ்தோனியா. இரண்டாம் உலகப் போரில் எஸ்தோனியாவைப் பலவந்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொண்டது சோவியத் ருஷ்யா. எதிர்த்த எஸ்தோனியர்களை சைபீரியா உள்ளிட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பித் தீர்த்துக்கட்டியது. இந்த நிலையில் ஜெர்மனியின் நாஜிப் படையும் எஸ்தோனியாவில் ஊடுருவுகிறது. அவர்கள் தங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பி எஸ்தோனியர்கள் வரவேற்கிறார்கள். செம்படைக்கும் நாஜிப் படைக்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்பது போகப் போக எஸ்தோனியர்களுக்குத் தெரியவருகிறது. எஸ்தோனியர்கள் விரும்பியோ விரும்பாமலோ இரண்டு தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு போரிடுகிறார்கள். எஸ்தோனியர்களை எஸ்தோனியர்களே சுட்டுக் கொல்கிறார்கள். சுட்டுக்கொல்வதற்கு இருவேறு சித்தாந்தங்கள் அதிகாரமும், உரிமையும் வழங்குகின்றன. வரலாற்றின் இந்தக் கட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது ‘1944’.
 
பதுங்கு குழிகளினூடாக படத்தின் முதல் பாதி செல்கிறது. இடைவிடாத துப்பாக்கிச் சண்டை, பீரங்கிச் சண்டை. நாஜிப் படைகளுக்குச் சார்பாகப் போரிடும், ஆனால் ஹிட்லரை வெறுக்கும் எஸ்தோனியப் போர்வீரர்கள் அந்தப் பதுங்கு குழிகளில் இருந்தபடி செம்படையை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஃபின்னிஸ் படைகளின் பிரிவு அது. சக வீரர்களுக்கிடையிலான நட்பை குறுகிய நேர நட்பாக ஆக்கிவிடுகின்றன சீறிவரும் குண்டுகள். கார்ல் என்பவன் முதல் பகுதியின் பிரதான பாத்திரம். செம்படையினரால் சைபீரிய வதைமுகாமுக்கு அனுப்பப்பட்ட தன் குடும்பத்தினரை நினைத்து ஏங்குபவன் அவன். தான் கவனமாக இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று நினைத்து நினைத்துக் குற்றவுணர்ச்சி கொள்கிறான். இதற்கிடையே அந்தப் படையில் இளம் இரட்டையர்கள் வந்து சேர்கிறார்கள். பால் மணம் மாறாத முகம். இரட்டையர்களில் ‘அரை மணி நேரம்’ மூத்தவன் தன்னுடைய தம்பியைப் பாதுகாப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறான். அடிக்கடி இருவரும் மாறி மாறி கண்காணிப்பு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தம்பியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு துப்பாக்கியின் லென்ஸ் வழியாக எதிர் முனையைப் பார்க்கும் தருணத்தில் ஒரு குண்டு அவனது நெற்றியைத் துளைக்க, அண்ணன் செத்து வீழ்கிறான். இரண்டு நொடி வித்தியாசத்தில் தம்பி தப்பித்துக்கொள்ள அண்ணன் இறந்துபோகிறான். என்ன நடந்தது என்பதை உணர்ந்துகொள்வதகு தம்பிக்குச் சில நிமிடங்கள் ஆகிறது. ஓவென்று அழ ஆரம்பிக்கிறான்.
 
இடையில், நாஜிக்களுக்கு ஆதரவாக இந்தப் படைப்பிரிவினரிடம் பேசுவதற்கு ஒருவன் வருகிறான். “நீண்ட கால அறிவியல் ஆராய்ச்சிக்குப் பிறகு எஸ்தோனியர்களும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நாமெல்லோரும் நாஜிக்களுடன் இணைந்துகொண்டு ஒருங்கிணைந்த ஆரிய இனத்துக்காகப் பாடுபடுவோம்” என்று உரையாற்றுகிறான். வீரர்களுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லோருக்கும் ஹிட்லரின் புகைப்படங்கள் கொடுக்கப்படுகின்றன. ‘ஹிட்லர் வாழ்க!’ என்று சொல்வதற்குப் பணிக்கப்படுகிறார்கள் அந்த வீரர்கள். ஆனாலும் யாரும் அப்படிச் சொல்ல மறுக்கிறார்கள். இரவில் ஹிட்லரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கிண்டலடிக்கிறார்கள். மலம் கழித்துவிட்டுத் துடைத்துக்கொள்ளக் கூட இந்தப் புகைப்படம் பயன்படாது என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்கள்.
 
இதுவரை நேரடியாக நாஜிக்களுடன் இணையாமல் ஃபின்னிஷ் படையினருடன் போரிட்டுக்கொண்டிருந்த அந்த வீரர்கள் இப்போது நாஜிக்களுடன் சேர்ந்து போரிட அழைக்கப்படுகிறார்கள். அதற்காகப் போய்க்கொண்டிருக்கும் வழியில் மக்கள் கூட்டம் ஒன்று சாரைசாரையாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். ஜெர்மனிக்குப் போக வேண்டும் என்று பணிக்கப்பட்ட மக்கள் அவர்கள். சிறுகுழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று சிரமப்பட்டு நடந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். வழியிலேயே செம்படையின் விமானம் அவர்கள் மீது குண்டுவீச சிலர் பலியாகச் சிலர் பிழைக்கிறார்கள். கையில் பொம்மையுடன் இருக்கும் ஒரு சிறுமி தனது தாயை இழக்கிறாள். ஆனால், அதை அவள் அறியவில்லை. அவளைக் காப்பாற்றி ராணுவ வண்டியில் கார்ல் அனுப்பிவைக்கிறான்.
 
ஒரு காடு தொடங்கும் இடத்துக்குப் பக்கத்தில் மறைவிடம் அமைத்து தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறார்கள், கார்ல் உள்ளிட்டோர். செம்படையின் வாகனங்கள் வருவதைப் பார்த்து இவர்கள் தாக்குதலை ஆரம்பிக்க மாறி மாறி சுட்டுக்கொல்கிறார்கள். கார்லை ஒருவர் சுட்டுக்கொன்றுவிட்டு தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். தான் சுட்டுக்கொன்றது தனது சக நாட்டவனைத்தான் என்பதை உணர்ந்து திகைத்துப் போய் நிற்கிறான். மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் தனது பங்காளிகளையே போரிட்டு அழிக்க வேண்டுமா என்று திகைத்துப் போய் நிற்கும் அர்ஜுனன் நினைவுக்கு வருகிறான். கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன உபதேசம் போல சுட்டவனுக்கு அவனது நண்பன் ஆறுதல் சொல்கிறான், “கொன்றது நீயல்ல, இந்தப் போர்தான்.”
 
கீழே விழுந்துகிடக்கும் கார்லின் ஆடைக்குள் துழாவிப் பார்க்கிறான் சுட்டவன். ஒரு கடிதம் சிக்குகிறது. அன்னா என்ற பெண்ணின் முகவரி அதில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாப் போர்வீரர்களும் அப்படித்தான் ஒரு கடிதத்தை எழுதி, தங்கள் சட்டைப் பையில் வைத்திருப்பார்கள். மேற்கொண்டு மற்றவர்களையும் சுட மனதில்லாமல் நிற்கிறார்கள் அந்த செம்படை எஸ்தோனியர்கள். செம்படையில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் எஸ்தோனியத் தளபதி கிரெம்ள் அங்கே வருகிறார். மற்றவர்களைத் தப்ப விட்டதற்காக அவர்களைக் கடிந்துகொள்கிறார். அந்தச் சண்டையில் உயிரிழந்த செம்படையின் எஸ்தோனியர்களையும் நாஜிக்களின் எஸ்தோனியர்களையும் ஒரே இடத்தில் புதைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து நகர்கிறார்கள். இப்போதிலிருந்து திரைப்படம் கார்லைச் சுட்டவனை, அவன் பெயர் யூரி யோகி, மையமிடுகிறது. கார்லின் கடிதத்தில் இருந்த முகவரியைத் தேடிப் போகிறான் யூரி. அந்த வீடு இருக்கும் தெருவே குண்டுவீச்சில் சிதிலமடைந்து கிடக்கிறது. முகவரியில் இருந்த வீட்டின் கதவைத் தட்டுகிறான் யூரி. ஒரு பெண் திறக்கிறாள். ‘அன்னா தம்மிக் நீங்கள்தானே? என்று கேட்கிறான். “ஆமாம்” என்கிறாள் அந்தப் பெண். “உங்கள் கணவர் கார்ல் எழுதிய கடிதத்தை உங்களிடம் கொடுக்க வந்திருக்கிறேன்” என்கிறான் ஜூரி. “கார்ல் எனது அண்ணன்” என்கிறாள். ஜூரியை உள்ளே வரச் செய்து அன்னா அவனை உபசரிக்கிறாள். தன் அண்ணனின் மரணத்தை அறிந்து ஒரு கணம் வாடினாலும் மறுபடியும் வெறுமையான ஒரு புன்முகம் அவளுக்குத் தோன்றுகிறது. “யோகி என்பவன்தான் எங்கள் குடும்பத்தை சைபீரியாவுக்கு அனுப்பும்படிப் பரிந்துரைத்தான்” என்று அன்னா சொல்கிறாள். அவர்களுக்கிடையே மெல்லிய காதல் பூக்கிறது. அவளிடமிருந்து விடைபெறும்போது “உங்கள் குடும்பப் பெயர் என்ன என்பதைச் சொல்லவில்லையே” என்று கேட்கிறாள் அன்னா. ‘யோகி’ என்ற பெயரைச் சொல்லாமல் வேறு பெயரைச் சொல்கிறான் யூரி.
 
தளபதி கிரெம்ள், யூரியின் காதலை மோப்பம் பிடித்துவிடுகிறார். சற்றே மிரட்டலான தொனியில் யூரியிடம் பேசுகிறார். அது தனது தங்கைதான் என்கிறான் யூரி. முகாமுக்குத் திரும்புகிறான் யூரி. இறந்த வீரர்களை ஈடுசெய்வதற்காக முகாமுக்குப் புதுவீரர்கள் வருகிறார்கள். முன்பு பார்த்த இரட்டைச் சகோதரர்களில் உயிர்பிழைத்த தம்பி அவர்களில்  ஒருவன். அவர்களுடைய உடல் அசைவுகளை வைத்து அவர்கள் நாஜிப்படையில் இருந்தவர்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் யூரி. அவர்களின் நாஜித் தொடர்பை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் எச்சரிக்கும்போது பக்கத்து அறையில் இருக்கும் தளபதி கிரெம்ள் அவனைக் கூப்பிட்டு அனுப்புகிறார். செம்படைக்கு எதிரான எந்த விஷயமும் சிறிதுகூட தலையெடுக்கக் கூடாது என்றும் வீரர்களிடம் செம்படைக்கு எதிரான உணர்வுகள் சிறிது தென்பட்டாலும் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார். படைப்பிரிவுத் தலைவர் வீரேஸைப் பற்றி அதிருப்தியை அவர் வெளிப்படுத்துகிறார். “வீரேஸ், வெளியில்தான் சிவப்பு, உள்ளுக்குள்ளே வெள்ளை” என்று சொல்லிவிட்டு, வீரேஸின் இடத்துக்கு யூரி வர வேண்டும் என்கிறார் கிரெம்ள். அவர் சொல்வதையெல்லாம் விருப்பமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறான் யூரி.
 
அடுத்ததாக ஒரு காட்டுக்குள் துழாவல் வேட்டை நடத்துகிறார்கள்செம்படையினர்ஓடை பக்கத்திலிருந்து ஏதோ சலசலப்பு கேட்க அங்கேவந்து பார்த்தால் நாஜிப் படையினரின் சீருடையில் பதின்வயதுஎஸ்தோனியச் சிறுவர்கள் சிலர் தப்பித்து ஓடப் பார்க்கிறார்கள்அவர்களைஇரண்டு திசையிலிருந்தும் வளைக்கின்றனர் செம்படையினர்நாஜிக்கள்படையிலிருந்து தப்பித்து வந்திருக்கிறோம்எங்களை ஏதும்செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள் அந்தச் சிறுவர்கள்அவர்களின்வயதைக் கேட்கிறான் யூரிஎல்லோரும் ‘16’ என்கிறார்கள். “இந்ததுரோகிகளைச் சுட்டுக்கொல்லுங்கள்” என்று யூரியிடம் ஆணையிடுகிறார்கிரெம்ள். “இந்தச் சிறுவர்களைக் கொல்ல என்னால் முடியாது” என்று யூரிமறுத்துவிடவே அவனை சுட்டுக்கொன்றுவிட்டு வீரேஸிடம்ஆணையிடுகிறார்வீரேஸும் தயங்கி நின்றுகொண்டிருக்க அவனைநோக்கித் துப்பாக்கியை நீட்டுகிறார் கிரெம்ள்சட்டென்று எங்கிருந்தோ வரும்துப்பாக்கிக் குண்டு கிரெம்ளை வீழ்த்துகிறதுசுட்டது யூரியின் நண்பன்.எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்சீருடையைக்களைந்தெறிந்துவிட்டு அந்தச் சிறுவர்களைத் தப்பியோடச் சொல்கிறார்கள்.யூரியின் நண்பன் யூரியின் சட்டையைத் துழாவிப் பார்க்கிறான். ‘அன்னாதம்மிக்’ என்ற பெயருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் ஒன்று கிடைக்கிறது.படத்தின் இறுதிக் காட்சியில் அன்னாவின் வீடு தேடிப் போய் கதவைத்தட்டுகிறான் யூரியின் நண்பன்யூரி போனபோது நடந்த காட்சியைப்போலவே இந்தக் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கிறதுஅன்னா, அவனைஉள்ளே கூட்டிச் செல்கிறாள்உள்ளே ஒரு பாட்டியும் அனாதைக் குழந்தைஒன்றும் இருக்கிறார்கள்அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் யூரியின்நண்பன் கடிதத்தை மேசையில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான்படம்முடிகிறது.
 
மனிதர்களை, உணர்வுகளைப் போர் சின்னாபின்னமாக்கிவிடுவது உண்மைதான். ஆனால், மனிதத்துக்கு எதிராக முழு வெற்றியைப் போர்களால் அடைந்துவிட முடியாது என்பதை இந்தப் படம் சொல்கிறது. எல்லாம் ஒரு சங்கிலித் தொடர் போல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. குண்டுகள், மனித உயிர்கள், சித்தாந்தங்களின் ஈவிரக்கமற்ற தன்மை… இவற்றுக்கு இடையிலும் அன்பு துளிர்க்கிறது. ஒரு துளி ஈரம் இருந்தாலும் போதும் அந்த இடத்தில் அன்பு துளிர்த்துவிடும். மெல்லிய வேர்களைக் கொண்டு பெரும் பாறையைப் பிளந்துவிடும். இந்தப் படத்தில் வரும் வீரர்களில் பெரும்பாலானோர் விருப்பப்பட்டுப் போரில் கலந்துகொள்ளவில்லை. நிர்ப்பந்தம் அவர்களை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது. சகோதரர்களுக்கு எதிராகத் துப்பாக்கித் தூக்க வைத்திருக்கிறது. சகோதர எதிரியைச் சுட்டுவிட்டு ஈவிரக்கமின்றிப் போக அவர்களுக்கு மனம் வருவதில்லை. அவர்களைக் குற்றவுணர்ச்சி கொல்கிறது. எல்லா சித்தாந்தங்களும் ஆதிக்கத் தரப்பாகும்போது கொல்கின்றன. அவற்றை எதிர்த்து நிற்கும் அன்பு இன்னும் இந்த உலகத்தைத் தாக்குப்பிடித்து நிற்க வைக்கிறது. அது இருக்கும் வரை இந்த உலகம் அழியாது.
“இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி” என்ற காந்தியின் மேற்கோள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ போன்ற படங்களின் உச்சத்தை ‘1944’ எட்டவில்லை என்றாலும் இரண்டாம் உலகப் போரைப் பற்றிய நல்ல திரைப்படங்களுள் ஒன்று என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.  
 - நன்றி: 'தி இந்து’ இணையதளம்
- ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/HNYmlU