Friday, January 22, 2016

இந்த வளர்ச்சியால் நன்மை யாருக்கு? சூழலியல் செயல்பாட்டாளர் ஆஷிஷ் கோத்தாரி பேட்டி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் 22-01-2016 அன்று வெளியான பேட்டியின் விரிவான வடிவம் இது.)

சுற்றுச்சூழல் செயல்பாடு என்பதைத் தன்னிடமிருந்தே தொடங்கிச் செயல்படுத்துபவர் ஆஷிஷ் கோத்தாரி. புனேவில் தன்னுடைய வசிப்பிடத்திலிருந்து ஆஷிஷ் தினமும் 10 கி.மீ. சைக்கிள் மிதித்தே அலுவலகம் செல்கிறார். மேலும், குளிர்பதனப் பெட்டியையும் அவர் பயன்படுத்துவதில்லை. அவரிடம் கைபேசியும் கிடையாது. இத்தனைக்கும் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் இவர். கல்ப விருக்‌ஷ் என்ற அமைப்பின் நிறுவனரும் கிரீன்பீஸ் இந்தியாவின் தலைவருமான ஆஷிஷ் கோத்தாரியை புனேவில் அவரது அடுக்ககத்தில் சந்தித்தும் மின்னஞ்சல் மூலம் கேள்விகள் கேட்டும் எடுத்த பேட்டி இது…

பள்ளி மாணவராக இருந்தபோதே சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டீர்கள் அல்லவா! அதற்கான உந்துதல் உங்களுக்கு எப்படி வந்தது?

விலங்குகள் மீது எனக்கு பிரியம் அதிகம். பள்ளி இறுதியாண்டுகளில் பறவை நோக்குதலில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என் பள்ளியில் ‘இயற்கை சங்க’த்தின் மூலமாக நிறைய செயல்பாடுகளில் ஈடுபட்டோம். அங்கே எங்களது முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தது. அமெரிக்காவின் ஆய்வகப் பரிசோதனைகளுக்காக செம்முகக் குரங்குகளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவரைச் சந்தித்தோம். டெல்லி ரிட்ஜ் காட்டுப் பகுதியில் அப்போதெல்லாம் நாங்கள் ‘இயற்கை உலா’ செல்வோம். அந்தக் காட்டுப் பகுதி அழிவுக்குள்ளாக்கப்படுவதை எங்களால் காண முடிந்தது. 1979-ல் டெல்லியின் காடுகளைப் பாதுகாப்பதற்காக மாணவர்களையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து நாங்கள் போராட ஆரம்பித்தோம். துணைநிலை ஆளுநரிடம் ஒரு மனுவையும் அளித்தோம். எனது சுற்றுச்சூழல் செயல்பாடுகள் இப்படித்தான் ஆரம்பித்தன. கூடவே, வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினோம். இதற்கு சிப்கோ போராட்டவாதிகள் எங்களுக்கு உந்துதலாக இருந்தார்கள். காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பாக இயங்கும் பலரின் நட்பும் ஏற்பட்டது. ஆனால், இவர்களில் சிலரிடம் காணப்பட்ட மக்கள் விரோதப் போக்கு காரணமாக அவர்களிடமிருந்து விலகினோம். கூடிய விரைவில் மூத்த சூழலியலாளர்களின் அறிமுகமும் கிடைத்தது. பல்வேறு கிராமத்து மக்களிடம் ஏற்பட்ட உறவுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் இயங்கிவருகிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக்கும் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்னென்ன?

சுற்றுச்சூழல் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் இப்போது இருப்பதைவிட குறைவான விழிப்புணர்வே அப்போது இருந்தது. ஆகவே, எங்கள் செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிரமம் இருந்தது. இருந்தும் சில வெற்றிகளை அப்போது எங்களால் பெற முடிந்தது. ஒருமுறை சவூதி அரேபிய இளவரசி இந்தியா வந்திருந்தார். கானல்மயில், வரகுக்கோழி போன்ற அழிவின் விளிம்பில் இருந்த பறவைகளை வேட்டையாட இந்திய அரசு அவருக்கு அனுமதி அளித்திருந்தது. அதை எதிர்த்து இளைஞர்களான நாங்கள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியமானது. சவூதி அரேபியத் தூதரகத்தின் முன்பு நின்றுகொண்டு நாங்கள் 15 பேரும் போராட்டம் நடத்தினோம்.  எங்கள் போராட்டம் பத்திரிகைகள் பலவற்றையும் ஈர்த்தது. இதன் விளைவாக, வேட்டையாடுவதைத் தவிர்க்கும்படி இந்திய அரசு சவூதி இளவரசியிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், தற்காலத்தில் 15 பேர் போராடினால் அநேகமாக யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் சார்ந்து பொதுமக்களிடையேயும் அரசுத்தரப்பிலும் இப்போது விழிப்புணர்வு சற்றே அதிகரித்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே, சுற்றுச்சூழல் தொடர்பான எளிய கோரிக்கைகளைத் தாண்டி சுற்றுச்சூழல்-வளர்ச்சி, சூழலியல் பாதுகாப்பு-வாழ்வாதரம் ஆகியவற்றுக்கான தொடர்புகள் என்று சிக்கலான விஷயங்களை இப்போது நாம் பேச வேண்டியிருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்து எந்த வித லாப நோக்கமுமின்றி செயல்பட முன்வருபவர்கள் இன்று குறைவு. இன்றும் உத்வேகமிக்க இளைஞர்கள் சிலர் இந்தத் துறைக்குள் லட்சிய உணர்வோடு வருகிறார்கள் என்றாலும் அந்த எண்ணிக்கை குறைவே.  

‘பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகள்’ தொடர்பான செயல்பாடுகளும் உங்கள் அக்கறைகளுள் முக்கியமானவை. இதில் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

காட்டுயிரையும் உயிர்ப்பன்மையும் பாதுகாக்கும் செயல் என்பது பழங்குடி மக்கள், உள்ளூர்ச் சமூகங்கள் ஆகியோரின் மரபுகளிலும் நெறிமுறைகளிலும் ஒரு அங்கமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. உயிர்ப்பன்மையைச் சார்ந்த அவர்களின் இந்த வாழ்க்கை முறை அவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, பண்பாட்டு அடையாளமும் கூட. இந்த அம்சம் (உலகின் பல பகுதிகளைப் போலவே) இந்திய அரசின் சூழலியல் பாதுகாப்புக் கொள்கைகளால் புறக்கணிக்கப்பட்டது. எங்கெல்லாம் ‘பாதுகாக்கப்பட்ட இயற்கை பிரதேசங்கள்’ என்று அறிவிக்கப்படுகின்றனவோ அங்கிருந்து அந்தப் பகுதியின் பூர்வகுடிகள் துரத்தப்பட்டுவருகின்றனர். அந்தப் பிரதேசங்கள் சார்ந்த அந்த மக்களின் இயற்கை அறிவும் பழக்கவழக்கங்களும் உதாசீனப்படுத்தப்படுகின்றன. காட்டுயிரைப் பாதுகாக்கவும், அங்கே வசிக்கும் மக்கள் சமூகங்களைப் பாதுகாக்கவும் வேண்டுமென்றால் இப்படி அவர்களைத் துரத்தவோ அவர்களை ஒதுக்கிவைத்துவிட்டுத் திட்டங்கள் தீட்டவோ கூடாது என்பதை நாங்கள் பல பத்தாண்டுகளாக வலியுறுத்திவருகிறோம். ஒரு இயற்கைப் பிரதேசத்திடமிருந்து அதன் மக்களை அந்நியப்படுத்தினால் வெறுப்பும் அவநம்பிக்கையும் மோதலும்  ஏற்பட்டு இரண்டு தரப்புக்கும் பாதகமாக மாறிவிடும். ஆகவே, எல்லோரையும் உள்ளடக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள்தான் அவசியம். இதற்காக இந்திய அளவிலும் உலக அளவிலும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். உள்ளூர்ச் சமூகங்களை மையமாகக் கொண்ட திட்டங்கள்/ நடைமுறைகள், அரசு/ உள்ளூர்ச் சமூகங்கள்/ பொதுச்சமூகம் ஆகிய மூன்று தரப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பு போன்றவற்றை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். இதனால், பல நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவிலோ அதிகாரத்தரப்பும் அதிகார மட்டத்தில் செல்வாக்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்களும் மந்தமாக இருப்பதால் மாற்றங்களும் மந்தமாகவே உள்ளன. வன உரிமைகள் சட்டத்துக்கு இந்த இரண்டு தரப்புகளுமே காட்டிவரும் எதிர்ப்பே ஓர் உதாரணம். இந்தச் சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டால் வனப்பழங்குடியினரின் உதவியோடே காட்டுயிர்ப் பாதுகாப்பைத் திறம்பட மேற்கொள்ள முடியும். அந்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது.   


சுற்றுச்சூழல் தொடர்பாக அரசு நியமித்த வெவ்வெறு குழுக்களில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். உங்கள் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனவா?

சிலர், நாம் சொல்வதைக் கேட்பார்கள்; சிலருடன் பெரும் போராட்டமாக அமைந்துவிடும். அணைத் திட்டங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்திருந்த குழுவில் நானும் என் சகா ஒருவரும் பட்டபாட்டைச் சொல்லி மாளாது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளுக்கும், கள ஆய்வுக்கும் ஒற்றைக்காலில் நின்று அனுமதி வாங்க வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, மற்ற சில உறுப்பினர்கள் எங்களைப் புரிந்துகொண்டார்கள். எனினும், எங்களை விரும்பாத சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தக் குழுவின் ஆயுட்காலம் முடிவதற்குள் எங்களைக் குழுவிலிருந்து விரட்டிவிட்டது. ‘தேசிய உயிர்ப்பன்மை செயல்திட்ட’த்தையும் ‘நடவடிக்கைக்கான பணித்திட்ட’த்தையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நான்கு ஆண்டுகால ஒருங்கிணைத்தது அற்புதமான அனுபவம். ஆனால், இதன் இறுதி வடிவத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் கலந்தாலோசித்த அந்த ஆவணத்தின் புரட்சிகரமான இயல்பை அமைச்சரகத்தால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோல் பல்வேறு குழுக்கள்; ஆனால் அனுபவம் ஒன்றுதான்!          கிரீன்பீஸ் அமைப்பின் இந்தியத் தலைவர் நீங்கள். இந்தியாவில் கிரீன்பீஸ் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்களேன்! 

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பது, நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்துவது, சுற்றுச்சூழலுக்கு இயைந்த எரிசக்தியைப் பயன்படுத்துவது, அணுசக்தி எதிர்ப்பு, வளம்குன்றாத வேளாண்மையை ஆதரிப்பது போன்றவை கிரீன்பீஸ் அமைப்பின் முக்கியச் செயல்பாடுகள். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது குறித்து கிரீன்பீஸ் தொடர்ந்து வலுவாகக் குரல் எழுப்பிவருகிறது. பிஹாரில் உள்ள ஒரு கிராமம் முழுவதற்கும் சூரிய மின்சக்தி இணைப்பைக் கொடுத்து ஒரு முன்மாதிரியையும் கிரீன்பீஸ் காட்டியிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் மஹன் பகுதியில் நிலக்கரி வெட்டியெடுப்பதற்கு எதிராக அங்குள்ள மக்களின் போராட்டங்களில் கிரீன்பீஸ் துணைநின்றிருக்கிறது. பாதுகாப்பற்றதும் அதிகம் செலவு பிடிக்கக்கூடியதுமான அணு உலைகளுக்கு எதிராகவும், வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு, மரபணு மாற்றப்பயிர்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் கிரீன்பீஸ் தொடர்ந்து போராடுகிறது.

கிரீன்பீஸ் அமைப்பை இந்திய அரசு முடக்க நினைப்பதன் நோக்கம் என்ன?

தாராளமயமாக்கல், கனரகத் தொழில்மயமாக்கல், தனியார் துறையை மையம்கொண்ட வளர்ச்சி போன்றவற்றைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசுக்கும் வித்தியாசமே இல்லை. இது போன்ற வளர்ச்சியை பல்வேறு தரப்பு மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வளர்ச்சியாகவே கருதுவதில்லை. அதனால்தான் எதிர்க்கிறோம். இதுபோன்ற வளர்ச்சி மாதிரியால் இயற்கை பெருமளவில் சூறையாடப்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வும் ஏற்படுகிறது; மேலும் மேலும் பல கோடிக்கணக்கானோர் வறுமை நிலையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். சிறு எண்ணிக்கையிலானோரிடம் மட்டும் ஒட்டுமொத்த செல்வமும் சென்று குவிகிறது. அரசதிகார தரப்பிலும் அரசுக்கு வெளியில் பெருநிறுவனங்கள் தரப்பிலும் உள்ள சில பணக்காரர்களுக்கும் நகர்ப்புறத்திலும் கிராமப்புறங்களிலும் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் மட்டுமே இது நன்மை தரும் என்பதுதான் உண்மை. ஆகவே, இதற்கெல்லாம் எதிராகவும், இந்த வளர்ச்சி மாதிரிகளில் அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தியும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் பல, குரலெழுப்புகின்றன. அதுமட்டுமல்லாமல், அரசியல்/அதிகார/ பெருநிறுவனத் தரப்புகளுக்குச் சாதகமாகவே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுவதற்கு எதிராகவும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குரலெழுப்புகின்றன. ஆகவே, அரசின் திட்டங்களாலும் கொள்கைகளாலும் பயனடைந்துவரும் ஆதிக்கத் தரப்பினர் இதுபோன்ற எதிர்ப்புக் குரல்களையெல்லாம் அழித்தொழிக்க முயல்கின்றனர். சில சமயம், இதுபோன்ற தன்னார்வத் தொண்டுநிறுவனங்களில் சில, ஆதிக்கத் தரப்பினரிடம் விலைபோகின்றனர். அடிபணியாதவர்களோ அச்சுறுத்தல், ரத்துசெய்யப்படுதல் போன்ற ஆயுதங்களால் தாக்கப்படுகின்றனர். கிரீன்பீஸ் அடிபணியவில்லை. அதனால் தாக்குதலுக்கு உள்ளாகிறது.

வளர்ச்சியை முன்னிறுத்திதான் மோடி வெற்றிபெற்றார். அவருடைய வளர்ச்சி மாதிரி என்பது உண்மையில் சாத்தியமானதா?

சாத்தியமானதே! ஆனால், அதனால் யாருக்கு நன்மை என்பதுதான் கேள்வி! இயற்கை வளத்தைச் சூறையாடாமல் ஏற்படும் வளர்ச்சியா இது என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். ஏற்கெனவே நான் சொல்லியதுபோல் சிறுபான்மை எண்ணிக்கையிலான ஆதிக்கத் தரப்புக்கு மட்டுமே இது நன்மை தரும்; பெருமளவிலான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அரசு தரும் தரவுகளிலிருந்தே இதை நாம் நிரூபிக்க முடியும். எத்தனை கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், புதுப்பிக்க முடியாத வகையில் நம் இயற்கை வளங்களை எப்படி நாம் இழந்திருக்கிறோம் என்பதையும் எங்கள் ‘சர்னிங் தி எர்த்: த மேக்கிங் ஆஃப் குளோபல் இந்தியா’ (http://churningtheearth.in) என்ற புத்தகத்தில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். சொல்லப்போனால், இந்தியாவும் ஒரு காலனியாதிக்க நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பண்ணைகளுக்காகவும், மேய்ச்சல் வெளிகளுக்காகவும் இந்தியப் பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்ததால் அங்குள்ள உள்ளூர்ச் சமூகங்கள் அவர்களின் வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். நில அபகரிப்பு, வாழிட இழப்பு, வாழ்வாதார இழப்பு, வறுமை, இயற்கைச் சூழல் அழிப்பு போன்ற எல்லாமே இந்த ‘வளர்ச்சி’யின் நேரடி விளைவுகள். நோம் சாம்ஸ்கி போன்றோர் சுட்டிக்காட்டுவதுபோல், இது போன்ற வளர்ச்சி மாதிரியைக் கொண்டு உலக வறுமையை ஒழிப்பதற்கு 200 ஆண்டுகள் ஆகும். அதற்கு உலகப் பொருளாதாரம் 12 மடங்கு அதிகமாக வேண்டும். அப்படியென்றால், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழலியல், பருவநிலை பாதிப்புகள் எவ்வளவு இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்! 

இதே நிலை நீடித்தால் இந்தியா தாக்குப்பிடிக்குமா?

நிச்சயம் தாக்குப்பிடிக்காது. அடுத்த தலைமுறையிடமிருந்தும், தற்போதைய தலைமுறையின் வெவ்வெறு தரப்புகளிடமிருந்தும், மற்ற உயிரினங்களிடமிருந்தும் திருடித்தான் நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். அதுவும் தற்காலிகமாகத்தான். சூறையாடப்படும் இந்தத் தரப்புகள் ஏற்கெனவே திருப்பியடிக்க ஆரம்பித்துவிட்டன. தொடர்ச்சியான இயற்கைப் பேரழிவுகளின் மூலம் இயற்கை காட்டும் எதிர்ப்பும் இவற்றில் முக்கியமானது.


பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகளின்போது ஒருவிதமாகவும், இங்கே இந்தியாவில் வேறுவிதமாகவும் நம் அரசு நடந்துகொண்டிருக்கிறதே…

இரட்டை நாக்கு என்பார்களே அதுதான் இது. பருவநிலை மாற்றங்கள் என்றில்லை, உயிர்ப்பன்மை குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியா சற்றே முற்போக்காக இருக்கிறது. ஆனால், தன்னுடைய வார்த்தைகளையே இந்தியாவுக்குள் அது பின்பற்றுவதில்லை. பருவநிலை மாற்றத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய முழுப் பொறுப்பையும் வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொண்டு,  ‘வளர்ந்துவரும்’ நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பது நியாயமே. ஆனால், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் நமது நாட்டின் ஏழை மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும்தான் முதலில் பயன்பட வேண்டும்.

பருவநிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்திக்கு மாறுவது, உள்ளூர்ச் சமூகங்களின் உதவியோடு காடுகளைப் பாதுகாப்பது, வாகன மோகத்தை விட்டுவிட்டுப் பொதுப்போக்குவரத்துக்கு மாறுவது, ரசாயன வேளாண்மையை விடுத்து இயற்கைவழி வேளாண்மைக்கு மாறுவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதுதான் இயற்கையையும் மக்களையும் காப்பாற்றும். இரண்டாவதாக, விகிதாச்சாரக் கணக்குகளையெல்லாம் காட்டி ‘ஏழைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும்’ செயலை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மை என்னவென்றால், தொழில்வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவுக்கு இந்தியாவில் உள்ள மேல்தட்டுப் பணக்காரர்களும் பொறுப்பாளிகள். இந்தியாவில் கொஞ்சமாக மிச்சமிருக்கும் ‘தூய்மைச் சூழலையும்’ ஆக்கிரமித்துக்கொண்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களாக ஏழைகளை ஆக்குவது இங்குள்ள மேல்தட்டுப் பணக்காரர்களே!      


சொல்லப்படுவதுபோல், இந்தியா ‘பிரகாசமான வளர்ச்சி’ அடையவில்லை என்கிறீர்களா?

‘பிரகாசம்’ என்று எதைச் சொல்கிறீர்கள். எண்ணிக்கையை வைத்து என்றால் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறையை வைத்து அப்படிச் சொல்லலாம். வறுமையை ஒழிப்பதும், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் துயர் துடைத்து மகிழ்ச்சியான, எளிதான வாழ்க்கையை அவர்களுக்கு வழங்குவதும்தான் வளர்ச்சியின் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர, ஏதோ ஒருசிலருக்கு மட்டும் சொகுசான, படாடோபமான வாழ்க்கையை சாத்தியப்படுத்துவதல்ல. இந்த வகையில் பார்த்தால் இந்திய வளர்ச்சி என்பது கொஞ்சம்கூட பிரகாசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தண்ணீருக்காகவும் நிலத்துக்காகவும் இயற்கை வளங்களுக்காகவும் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு மோதல்கள் நடக்கும்? 

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்குத் தீனி போடுவதற்கு இயற்கை வளங்கள் பெருமளவில் தேவை. இந்த இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் அவற்றை நம்பி வாழும் உள்ளூர்ச் சமூகங்களிடையே பெரும் போட்டிகளும் மோதல்களும் மேலும் அதிகரிக்கும். உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் இந்தியா ஓரளவுக்கு அமைதியான நாடுதான். ஆனால், கூடிய சீக்கிரத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நிலை மாறும். மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நாம் ஏற்கெனவே பார்த்துவரும் மோதல்களெல்லாம் எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்தின் அறிகுறிதான். தற்போதே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்களுக்குக் கடும் போட்டாபோட்டி நிலவுகிறது. தற்போதைய வளர்ச்சி மாதிரி தொடருமென்றால் நிலைமை மேலும் மோசமாகத்தான் ஆகும்.

உங்களின் புதுமுயற்சியான விகல்ப் சங்கம் பற்றிச் சொல்லுங்கள்!

அழிவை ஏற்படுத்தும் தற்போதைய வளர்ச்சி மாதிரிக்கு மாற்றாக ஆக்கபூர்வமான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முயற்சி இது. நியாயமான முறைகளில், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஆயிரக் கணக்கான முன்னெடுப்புகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ளன. அரசாங்கமும் பெருநிறுவனங்களும் நமக்காக வடிவமைக்கும் எதிர்காலத்துக்கு மாற்றாக ஆக்கபூர்வமானதும், வரலாற்றுபூர்வமானதும் புதுமையானதுமான உலகப் பார்வைகள் இருக்கின்றன. பழங்குடியினர், தலித் மக்கள், பெண்கள் போன்ற தரப்புகளும் காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளும் இதுபோன்ற மாற்றுச் சிந்தனைக்கு உதாரணங்கள். இதுபோன்ற மாற்றுத்தரப்புச் சிந்தனையாளர்களையும் மரபுகளையும் ஒருங்கிணைக்க விகல்ப் சங்கம் முயல்கிறது. இப்படி ஒருங்கிணைவது, பரஸ்பரம் கற்றுக்கொள்வது, கூட்டுறவை வளர்த்துக்கொள்வது, மாற்றத்துக்குத் தேவையான பெரும் சக்தியை வளர்த்துக்கொள்வது, எதிர்காலம் குறித்த பொதுவான பார்வைகளை உருவாக்குவது போன்றவற்றை விகல்ப் சங்கம் மேற்கொள்கிறது. கைத்தொழில்கள், உழவு, நெசவு, கல்வி, சுகாதாரம், சந்தைப்படுத்துதல், சமூகநீதி.. இப்படிப் பல்வேறு துறைகளில் சூழலுக்கு இயைந்த வகைகளில் இந்தியா முழுவதும் இயங்கும் சிறு குழுக்களை விகல்ப் சங்கம் ஒன்றிணைத்து வெற்றிகரமாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.       

இவ்வளவு சொல்கிறீர்கள். ஆனால், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை மக்களும் சரி அரசும் சரி வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மக்களுக்கு எதிரானவர்களாகவும் பார்க்கிறார்களே…

விகல்ப் சங்கம் மூலம் நாங்கள் செய்துவரும் மாற்றங்களைப் பார்த்தாலே நாங்கள் மக்களின் தேவைகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்பது உங்களுக்குப் புரியும். மாறாக, இன்றைய வளர்ச்சி மாதிரியைத்தான் நாங்கள் ‘மக்களுக்கு எதிரானது’ என்கிறோம். சுற்றுச்சூழலுக்கு இயைந்த வகையில், சமத்துவமான வழியில், ஜனநாயகபூர்வமாக மனிதர்களின் சுகவாழ்வை அடைவது என்பதுதான் எங்கள் லட்சியம். 
(இந்தப் பேட்டியின் சுருக்கமான வடிவம் ‘தி இந்து’வின் அச்சுப்பதிப்பில் வெளியாகியிருக்கிறது.)
 - நன்றி: ‘தி இந்து’
 -  ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/Ii99o6 No comments:

Post a Comment