Monday, January 11, 2016

இந்தியாவின் ‘டா வின்சி கோட்’


 
ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘நூல்வெளி’ பகுதியில் 11-01-2016 அன்று வெளியான விமர்சனத்தின் முழு வடிவம் இது.)

எழுத்தாளர் ஜெயமோகன், ‘நமக்குத் தேவை டான் பிரவுன்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். ‘டா வின்சி கோட்’ என்ற பரபரப்பான வெகுஜன நாவலை எழுதி உலகப் புகழும் (நிந்தனையும்) பெற்றவர் டான் பிரவுன். ஆங்கிலத்தில் டான் பிரவுன்களின் புத்தகங்களும் கோடிக்கணக்கில் விற்கின்றன, ஹாரி பார்ட்டர் நாவல்களும் கோடிக்கணக்கில் விற்கின்றன. அதே நேரத்தில், இன்றுவரை இலக்கியத்தைப் பொறுத்தவரை ஷேக்ஸ்பியரின் படைப்புகள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இப்படியாக, எல்லா இலக்கிய வகைகளிலும் தரமான எழுத்துக்களைக் கொண்டு ஆங்கிலம் உலகாள்கிறது. இந்திய மொழிகளிலோ தீவிர இலக்கியப் படைப்பைத் தவிர மற்ற வகைகளில் சொல்லிக்கொள்ள அநேகமாக ஏதும் இல்லை. அந்தக் குறையைப் போக்க இந்தியாவின் டான் பிரவுனாக உருவாகியிருக்கிறார் மலையாள எழுத்தாளர் ட்டி.டி. ராமகிருஷ்ணன். ஆனால் இரண்டு பேருக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. ராமகிருஷ்ணனின் நாவலில் ஓடும் இலக்கிய நயம்தான் அது.

டான் பிரவுன் தனது நூலில் கூறப்பட்டிருக்கும் தகவல்களும் முழுவதும் உண்மை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பார். ராமகிருஷ்ணனோ உண்மையும் கற்பனையும் கலந்த நாவல் இது. எது உண்மை எது கற்பனை என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் என்கிறார்.

15-ம், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாபாரியும், வியாபாரத்துக்காகக் கடல் கடந்து சென்றவனும், கணிதத்தில் அசாதரணமான அறிவைப் பெற்றவனுமான ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவைப் பற்றிய தேடல்தான் இந்த நாவலின் மையம். ஒரு வகையில் டான் பிரவுனின் நாவலில் டாவின்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் இந்த நாவலில் இட்டிக்கோராவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோராவின் பரம்பரையில் வந்த சேவியர் ஃபெர்னாண்டோ இட்டிக்கோரா என்ற அமெரிக்கவாழ் இளைஞன் தன்னுடைய கேரள வேர்களைத் தேடவும் இழந்துபோன ஆண்மையை மீட்கவும் மூன்று இளம் பெண்களின் உதவியை நாடுகிறான். ரேகா, பிந்து, ரஸ்மி என்ற பெயருடைய அந்தப் பெண்கள் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் ரகசியமாக அதிநவீனப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இட்டிக்கோராவைப் பற்றிய தேடலில் அவர்களுக்கு எதிர்பாராத ஆச்சர்யங்களும் ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இட்டிக்கோராவின் வழிவந்த 18-ம் கூட்டத்தார் என்ற மூடுண்ட, ரகசியச் சடங்குகளைக் கொண்ட குடும்பத்தினர்களைப் பற்றித் தெரியவருகிறது.
பதினெட்டாம் கூட்டத்துக் குடும்பத்தினரின் சடங்குகள் விசித்திரமானவை. கோராப் பாட்டனுக்குக் கொடுத்தல், கோராப் பணம் என்று கிடைக்கும் தகவல்கள் அமானுஷ்யமாக இருக்கின்றன. 18-ஆம் கூட்டத்தாரைப் பற்றி எழுதப் போய் மரணத்தைத் தேடிக்கொண்ட ஒருவரைப் பற்றியும் தெரியவருகிறது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகார மட்டங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நாடாளுமன்ற உறுப்பினர்; இந்தப் பெண் மூன்று பெண்களின் வாடிக்கையாளரும்கூட. 18-ம்கூட்டத்தாரைப் பற்றிய தேடலை அறிந்துகொண்டு இவர்களை அவர் மிரட்டுகிறான். இந்தக் கூட்டத்தார் காலம் காலமாகத் தங்கள் வியாபார லாபத்தில் ஒரு பகுதியைக் கோராப் பணமாகச் சேர்த்துவைத்திருப்பது, எல்லா மர்மங்களுக்கும் பின்னணியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

கதை இப்படிப் போய்க்கொண்டிருக்க கிளைக்கதைகளாகப் பல்வேறு கதைகள் விரிகின்றன. அவற்றில் வரலாற்றின் முதல் பெண் கணிதவியலாளரான ஹைபேஷாவைப் பற்றியது மிகவும் முக்கியமானது. மதவாதிகளால் கொல்லப்பட்ட ஹைபேஷாவின் கணிதத்தை இட்டிக்கோரா முதலானவர்கள் காப்பாற்றிவருவதாகவும், நவீன காலக் கணித மேதைகளான பால் எர்தோஷ், அலெக்ஸாண்டர் குராதெண்டிக் போன்றோர் ஹைபேஷா, இட்டிக்கோராவின் கணிதச் சிந்தனைகளால் தாக்கம் பெற்றவர்கள் என்றெல்லாம் சிறகு விரிக்கிறது. இந்திய, மேற்கத்திய கணிதச் சிந்தனைகளும் இடம்பெறுகின்றன. பை, பி (தங்க விகிதம்) என்றெல்லாம் சிறகு விரித்திருக்கிறது ராமகிருஷ்ணனின் புனைவு. கணிதத்தையும் புனைவையும் ஒன்றுசேர்த்து, வெகுஜன வாசிப்புக்கு ஏற்ப கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. அதை அற்புதமாகச் செய்திருக்கிறார் ராமகிருஷ்ணன். எனினும், நாவலில் கணிதம் இடம்பெற்றிருக்கும் அளவு சற்று அதிகமே. முக்கியமாக, ஃபெர்மாட்டின் தொலைந்துபோன தேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கங்கள் அதிகம்.

ரகசியச் சமூகம், விசித்திரச் சடங்குகள், கணிதம் என்று மட்டும் நிற்கவில்லை. இராக் மீது அமெரிக்கா நடத்திய கொடும் போரின் அமெரிக்கப் பிரதிநிதியாக, சாட்சியாக இருப்பவன் இளைஞன் இட்டிக்கோரா. அமெரிக்காவின் அத்துமீறலை அம்பலப்படுத்துவதற்கு நியூயார்க் டைம்ஸின் பால் குருக்மேன் (பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு வாங்கியவர்) இட்டிக்கோராவை ஒரு கூட்டத்துக்கு அழைக்கிறார். சதாம் உசேனுக்கும் ரம்ஸ்ஃபீல்டுக்கும் இடையே நடந்த உரையாடல் அந்தக் கூட்டத்தில் வெளியிடப்படுகிறது. அது மட்டுமா, நாவலின் தொடக்கத்திலேயே அபு கிரையப் சிறையின் நடத்தப்படும் சித்திரவதை குறித்தும் வருகிறது. இப்படியாக, கேரளம், எகிப்து, இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், இராக், அமெரிக்கா என்று உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணிக்கிறது இந்த நாவல். துப்பறியும் நாவல் போலவும், வெவ்வேறு கலாச்சாரங்களின் சடங்குகளுக்கிடையே ஒப்புமை காணும் நாவலாகவும், கணிதப் புனைவாகவும், சமகால அரசியல் நாவலாகவும் ‘ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா’ நாவல் உருவாகியிருக்கிறது. இவற்றில் சில தளங்களில் முழுமையை எட்டவில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றை நாவல் தோண்டி எடுத்தாலும் கதை தொடங்கப் போகும் இடத்தில் முடிந்துபோய்விடுகிறது. கோராப் பணம், 18-ம் குடும்பத்தினரின் ரகசியங்கள் என்று நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நாவல்  தனக்குத் தானே திருப்தி அடைந்துகொண்டு பயணத்தின் தொடக்கத்திலேயே நின்றுவிடுகிறது. இது போன்ற குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்தியாவில் எழுதப்பட்ட முக்கியமான சர்வதேச நாவலாக இதைக் கருதலாம். அவசியமான மலையாள வாடையுடன், வாசிப்பு சுவாரசியத்தை எந்த விதத்திலும் குறைத்துவிடாமல் மலையாளத்திலிருந்து இந்த நாவலை குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்திருக்கிறார். 

ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா

ட்டி. ராமகிருஷ்ணன்,
தமிழில்: குறிஞ்சிவேலன்
விலை ரூ: 275
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை-18.
தொடர்புக்கு: 044-24993448

மின்னஞ்சல்: uyirmmai@gmail.com 

 - நன்றி: ‘தி இந்து’
- 'தி இந்து’ இணையதளத்தில் இந்த விமர்சனத்தின் சுருக்கமான வடிவத்தைப் படிக்க: http://goo.gl/SZah5P

1 comment:

  1. தங்களால் ஒரு நல்ல நூலைப் பற்றிய விமர்சனத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூலைப் பற்றிய தங்களின் எழுத்து நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.

    ReplyDelete