Wednesday, May 6, 2015

நியூட்டன் அறிவியலின் வெற்றி


ரெபெக்கா ஹிக்கிட்
(தமிழில் சுருக்கமாக: ஆசை, ‘தி இந்து’ நாளிதழில் 06-05-2015 அன்று வெளியான கட்டுரை)

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1715-ல், இதே வாரத்தில் மே 3-ம் தேதி நிகழ்ந்த முழு சூரிய கிரகணம், அறிவியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. நியூட்டனின் பிரபஞ்ச ஈர்ப்பியல் விதியை அடிப்படையாகக் கொண்டு முதன்முதலில் கணிக்கப்பட்ட நிகழ்வு அது. அப்போது, அந்த சூரிய கிரகணத்தின் பாதையை சித்தரிக்கும் வரைபடம் முன்கூட்டியே பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தச் சூரிய கிரகணம் லண்டன், கேம்பிரிட்ஜ் முதலான இடங்களில் தெரிந்தது. வானியலாளர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் அந்த நிகழ்வைப் பார்த்ததுடன் புதிய வானவியலின் கணிப்புத் திறனையும் கண்டு வியந்துபோனார்கள்.
அந்தக் கிரகணத்தின் பெயர் ‘ஹாலியின் கிரகணம்’ என்று விக்கிபீடியா நமக்குக் கூறும். வானியலாளர் எட்மண்டு ஹாலியின் நினைவாக அந்தப் பெயர் வைக்கப்பட்டது. அவர்தான் அந்தக் கிரகணத்தின் நேரத்தைப் பற்றித் துல்லியமாக கணித்தார். மேலும், எளிமையாகப் புரியும் விதத்தில் அந்தக் கிரகணப் பாதையின் வரைபடத்தையும் அவர் உருவாக்கியிருந்தார். ஹாலியின் மற்றொரு கணிப்பு, ஹாலி வால் நட்சத்திரம் 1759-ல் மீண்டும் வரும் என்பது. நியூட்டானிய அறிவியலுக்குக் கிடைத்த வெற்றிதான் அந்தக் கணிப்பும். அந்தக் கணிப்பு நிரூபணமாவதைப் பார்ப்பதற்கு அவர் உயிரோடு இல்லை. ஆனால், கிரகணம் குறித்த கணிப்பின் வெற்றியை அவர் தன் வாழ்நாளிலேயே அனுபவித்தார். ‘கிரேன் கோர்ட்’டில் இருந்த ராயல் சொசைட்டியின் கட்டிடத்திலிருந்து தனது வானியல் அவதானத்தை அவர் மேற்கொண்டார். அந்தக் காலைப் பொழுதின் வானம், ‘பளிச்சென்ற நீலத்துடன் மிகவும் துலக்கமாகக் காட்சியளித்தது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


கிரகணத்தைப் பற்றிய ஹாலியின் முதல் வரைபடம் அந்தக் கிரகணத்துக்குச் சில நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்டது. தகவல்களைத் தெளிவாகவும் பயனுள்ள வகையிலும் வழங்கும்விதத்தில் வரைபடக் கலையை ஹாலி எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதன் முதன்மையான உதாரணம் இந்த வரைபடம் (காந்தப்புல மாறுபாடுகள், முறைக்காற்று [டிரேட் விண்ட்ஸ்] போன்றவை குறித்த அவரது வரைபடங்களும் இப்படியே). பொதுநோக்கத்துக்காக உருவாக்கித் தரப்பட்ட வரைபடம் அது. அறிவியல் தரவுகளின் தேவைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளாகவும் அந்த வரைபடத்தைக் கருதலாம். ஆர்வமுடையோர் அந்த கிரகணத்தை அவதானித்து, எதிர்காலக் கணிப்புகளை மேம்படுத்துவதில் உதவ வேண்டும் என்றும் ஹாலி வேண்டுகோள் விடுத்தார். இந்த அவதானங்களை மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், கவனம் என்பது கண்ணுக்குத் தீங்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதைவிட, அவதானிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. அப்படியே அவர்கள் செய்திருப்பார்கள் என்று நாம் நம்புவோமாக!

பாமரர்களுக்கும் இதைப் பற்றி எடுத்துச்சொல்லவும் இயற்கை அறிவியலின் வெற்றிகளைத் தம்பட்டமடிக்கவும் ஹாலி இந்த வரைபடத்தைப் பயன்படுத்திக்கொண்டார்:
“திடீரென்று ஏற்படும் இருட்டு, சூரியனைச் சுற்றிலும் நட்சத்திரங்கள் தெரிவது போன்றவையெல்லாம் பலருக்கும் திகைப்பூட்டக் கூடும். இதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குச் சரியாக எடுத்துக் கூறவில்லையென்றால் அபசகுனங்களாகவே இவற்றை அவர்கள் கருதுவார்கள். கடவுளால் பாதுகாக்கப்படும் ஜார்ஜ் மன்னரின் சாம்ராஜ்யத்துக்கு அரசாங்கத்துக்கும் ஏதோ தீங்கு நேரப்போகிறது என்றுகூட அவர்கள் அஞ்சக்கூடும். இந்த கிரகணம் என்பது இயற்கையான நிகழ்வு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதையும், சூரியன், நிலா ஆகிய இரண்டின் இயக்கங்களின் விளைவைத் தவிர இது வேறொன்றுமில்லை என்பதையும் இந்த வரைபடத்தின் மூலம் மக்கள் அறிந்துகொள்ளலாம். இதைப் பற்றியெல்லாம் எந்த அளவுக்கு அறிந்துவைத்திருக்கிறோம் என்பது இந்தக் கிரகணத்தில் புலனாகும்.”

கிரகணங்கள் குறித்த கணிப்புகள் ஆதி காலத்திலிருந்து செய்யப்பட்டுவருகின்றன. இதில் சூரிய கிரகணங்கள் குறித்த கணிப்புகளைவிட சந்திர கிரகணங்கள் குறித்த கணிப்புகள்தான் அதிகம். (சந்திர கிரகணம்: நிலவின் மீது பூமியின் நிழல் விழுவதால் ஏற்படுவது. சூரிய கிரகணம்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவதால் சூரியன் மறைக்கப்படும் நிகழ்வு.) சூரிய கிரகணங்களைவிட சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன என்பதுடன் அவற்றைக் கணிப்பது ஒப்பீட்டளவில் சுலபம். சூரிய கிரகணங்களைக் கணிப்பதற்கு நிலவின் சிக்கலான இயக்கத்தை கவனிப்பது அவசியம். மேலும், சூரிய கிரகணங்களை அவதானிப்பதற்கு ஏகப்பட்ட பொறுமை தேவை. 17, 18-ம் நூற்றாண்டுகளில் பிரிட்டனில் புலனான கிரகணங்களின் பட்டியலைப் பார்த்தால் ஒன்று நமக்குத் தெரியும். ராயல் விண்நோக்ககத்தில் (அப்சர்வேட்டரி) நிலவின் இயக்கத்தை அவதானிக்க ஆரம்பித்த பிறகும், நிலவின் இயக்கம் குறித்த கோட்பாட்டோடு நியூட்டன் தனது பிரின்சிபியா மேத்தெமேட்டிகா நூலில் கடுமையாகப் போராடிய பிறகும் இப்படியொரு பொருத்தமான கிரகணம் நிகழ்ந்ததென்பது பெரும் அதிர்ஷ்டமே.

சூரிய கிரகண வரைபடத்தை முதன்முதலில் உருவாக்கிய பெருமை ஹாலியைச் சேராது. இதுபோன்ற வரைபடங்கள் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனினும் அந்த வரைபடத்தில் வெளிப்பட்ட அவருடைய உள்ளுணர்வு, கணிப்பின் துல்லியம், தனது கணிப்புக்காக நியூட்டனின் கோட்பாட்டைப் பயன்படுத்தியது ஆகியவற்றால்தான் அவருக்குப் பெருமை. அதே நேரத்தில் 1915 கிரகணத்தைக் குறித்த துல்லியமான கணிப்பை ஹாலி மட்டும் செய்திருக்கவில்லை.

வானியலாளர் பெருந்தகை ஜான் ஃபிளேம்ஸ்டீடின் சந்திர அவதானங்கள் நியூட்டனின் ஆய்வுகளுக்கு இன்றியமையாத விதத்தில் உதவிபுரிந்தன. தனக்கு உரிய நன்றியை நியூட்டன் தொடர்ந்து காட்டத் தவறிவிட்டார் என்பது ஃபிளேம்ஸ்டீடின் வருத்தம். அவரது அவதானங்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தியதற்காக நியூட்டனையும் ஹாலியையும் அவர் கடைசிவரை மன்னிக்கவே இல்லை. அதேபோல், அவரது உழைப்பில் உருவான நட்சத்திரங்கள் பட்டியலின் திருட்டுப் பதிப்பை 1712-ல் வெளியிட்டதற்காகவும் ஹாலியை ஃபிளேம்ஸ்டீடு மன்னிக்கவே இல்லை. ஆனால், கிரீன்விச் நகரத்தைப் பொறுத்தவரை அவர்தான் ராஜா, ‘ஓல்டு ராயல் நேவல்’ கல்லூரிக்குச் சென்றால் ஃபிளேம்ஸ்டீடு இடம்பெற்றிருக்கும் ஓவியத்தைக் காணலாம், கிரகணத்தை வெற்றிகொண்ட தோரணையில் அந்த ஓவியத்தில் அவர் இருப்பார்.

ஃபிளேம்ஸ்டீடின் சந்திர அவதானங்களின் பட்டியலை பிற்பாடு வில்லியம் விஸ்டன் பயன்படுத்திக்கொண்டார். நியூட்டனின் கோட்பாடுகளுக்கேற்ப சரிசெய்யப்பட்டு மற்றுமொரு கிரகண கணிப்பு வரைபடத்தை உருவாக்க அது பயன்பட்டது. இந்த வரைபடம் மார்ச், 1715-ல் வெளியிடப்பட்டது. விஸ்டனின் விவரிப்பு ஹாலி அளவுக்கு எளிமையாகவும் இல்லை ஆய்வில் விருப்பம் கொண்டோரையும் ஈர்க்கும் விதத்தில் இல்லை. எனினும் முந்திக்கொண்டவர் விஸ்டன்தான்.

தனது ஆளுமையையும் அறிவையும் பறைசாற்றிக்கொள்வதற்காகத்தான் ஃபிளேம்ஸ்டீடு கிரகணத்தைப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், கிரகணத்தைக் கொண்டு சம்பாதித்தது ஹாலியும் விஸ்டனும்தான். முக்கியமாக விஸ்டன். மதம் குறித்து தான் கொண்டிருந்த மரபை மீறிய பார்வையால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியிலிருந்து துரத்தப்பட்டவர் அவர். தனது திறன்களைச் சரியாக பயன்படுத்திக்கொள்வதற்காக வாய்ப்புகளைத் தேடி லண்டன் வந்தார். புத்தகங்கள் வெளியிடுவது, பேருரையாற்றுவது, வானியல் கருவிகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பது, திட்டயோசனைகளை முன்வைப்பது ஆகியவற்றில் அவர் ஈடுபட்டார். கடல் நடுவே இருக்கும்போது தீர்க்கரேகையைக் கண்டுபிடிக்கும் வழியைச் சொல்பவற்களுக்குப் பரிசு என்பது 1714-ல் முன்மொழிந்த யோசனைகளுள் ஒன்று. 1715-ல் நிகழ்ந்த கிரகணத்தை வைத்து அவர் 120 பவுண்டுகள் சம்பாதித்ததாகப் பின்னர் குறிப்பிடுகிறார்.

நிலவின் இயக்கம் குறித்த கோட்பாட்டை மேம்படுத்துவது என்பது உண்மையில் தீர்க்கரேகை பிரச்சினைக்கு வழிகாணவே மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில், புதிய அறிவியலில் திடீர் புரட்சிக்கும் அது வழிவகுத்தது. இதன் பங்குதாரர்கள் சிலருக்குப் பணத்தையும் அது சம்பாதித்துக்கொடுத்தது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

C தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை
‘தி இந்து’ நாளிதழில் இந்தக் கட்டுரையைப் படிக்க: நியூட்டன் அறிவியலின் வெற்றி  

No comments:

Post a Comment