Friday, December 18, 2015

மாவட்டமும் சின்னவர் வீட்டு மாடும்


ஆசை

தெருவுக்குள் நுழைவதற்கு முன் இருந்த அந்த வீட்டின் வாசலை நாங்கள் தாண்டிச் செல்ல இருந்தபோது துரைச்சாமி கண்டியர் எங்களை நிறுத்தினார்.
'இருங்கய்யா, செருப்ப இந்த வூட்டு வாசல்லப் போட்டுட்டுப் போவோம்' என்றார்.
'ஏன் மாமா, சின்னவரு வீடு வரைக்கும் செருப்பு இல்லாமயா போவச் சொல்லுற. சித்திர வெயிலு மாமா' என்றேன்.
'நீ ஒருத்தன்டா சின்னவரப் பாக்கப் போற யாராவது செருப்புப் போட்டு நீ பாத்திருக்கியா? சுத்த வெவரங்கெட்டவன்டா நீ' என்று சொல்லிவிட்டு வீட்டு வாசலிலிருந்தபடியே குரல் கொடுத்தார், 'யோவ் ஓந்திரியரே, யோவ் ஓந்திரியரே, வெளியில வாய்யா, என்னய்யா வூட்டுக்குள்ளேருந்து முட்டப் போட்டு அடகாத்துட்டு இருக்கியா'.
இரண்டு குரலுக்குப் பிறகு ஆள் வெளியே வந்தார். 'இவரா, இவரு அம்பலம் ஓந்திரியருல்ல' என்று நினைத்துக்கொண்டேன்.
வெளியே வந்தவர், 'என்னய்யா கண்டியரூட்டு ஆளுங்க ஆர்சுத்திங்க எல்லாம் படை தெறண்டு வந்திருக்கீங்கபோல. சின்னவரு தலமயில கட்சி மாறப் போறீங்களா?' என்று கேட்டார்.
'சும்மாருய்யா, நாங்களே கட்சிக்காரனுவளுக்குத் தெரியாம குந்துனாப்புல வந்துருக்கோம், ஒரு சிபாரிசுக்காவ' என்று சொல்லிவிட்டு 'அது இருக்கட்டும் செருப்பல்லாம் இப்புடி ஓரமாப் போட்டுட்டுப் போறோம்' என்றார்.
'போட்டுட்டுப் போங்க. பேசாம வாடகை செருப்பு கண்காணிப்பு நிலயம் ஆரம்பிச்சிடலாம் போலருக்கு. மாவட்டம் வேற இப்பதான் வண்டிய நிப்பாட்டிட்டுப் போயிருக்காப்புல'ன்னு சொல்லிவிட்டு சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த டாடா சுமோவைக் காட்டினார். ஆமாம், மாவட்டம் வண்டிதான். தூரத்தில் யார் வூட்டு முன்னாலோ நின்றுகொண்டு மாவட்டம் குனிந்தபடி யாருடனோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
    ஓந்திரியரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். நாலு அடி எடுத்து வைப்பதற்குள் துரைச்சாமி கண்டியரு இழுப்பு வந்ததுபோல் சற்று குனிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தார்.
'என்ன மாமா?' என்றேன்.
'ஸ்ஸு. இப்புடித்தான் நடக்கணும். எலேய் ஏகாம்பரம் குனிஞ்சுகிட்டு வாடா' என்றார். நானும் சித்தப்பாவும் மாமா சொன்னபடியே சற்றுக் குறுகி, குனிந்துகொண்டு நடக்க ஆரம்பித்தோம். செல்போனில் பேசி முடித்துவிட்டு மாவட்டம் நடக்க ஆரம்பித்தார். மிகவும் சிரமப்பட்டு மலையேறுபவர்போல குனிந்துகொண்டு நடந்துகொண்டிருந்தார். எனக்கோ சூடு தாங்க முடியவில்லை. வெயில் வேறு கொளுத்தி எடுத்தது.
'என்ன மாமா? இப்புடி ஓத்திரியம் பண்றீங்க' என்றேன்.
'காரியம் நடக்கணும்னா நாலு பேரு சுண்ணிய ஊம்பனும்னாலும் ஊம்பித்தான் ஆவணும், பேசாமா வாடா'ன்னு அதட்டிவிட்டு நடந்தார்.
    அந்தத் தெருவின் சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னே பார்த்துவிட்டு பின்னாலும் திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம்வரை, ஒன்றை அடுத்து ஒன்று என்று பத்தடி இடைவெளி விட்டு வரிசையாகத் தட்டி வைத்திருந்தார்கள். வேறு யாருக்கு? சின்னவருக்குத்தான். ஒன்றில் 'ஆன்மிகச் செம்மளே' என்று இருந்தது; அதில் சின்னவர் நெற்றியில் பட்டையுடன் கண் மூடி இறைவனை வழிபடும் புகைப்படம், இன்னொன்றில் 'கல்விக் கடவுளே' என்றிருந்தது-நியாயம்தான், அவரே சொந்தமாக ஒரு பெண்கள் கல்லூரி நடத்திக்கொண்டிருக்கிறார், அதுமட்டுமல்லாமல் பினாமிகளின் பேரில் எத்தனையோ கல்லூரிகளும் பள்ளிகளும் நடத்திக்கொண்டிருக்கிறார்; இன்னொன்றில் 'சர்வ மதச் சன்மார்க்கரே' என்று இருந்தது; அதில் சின்னவர் கிறித்தவப் பாதிரியார் வேடத்தில், கையில் பைபிளுடனும் நடுவில் காவி வேட்டி காவி சட்டையுடனும் அந்தப் பக்கத்தில் முஸ்லீம் குல்லா போட்டுக்கொண்டும் என்று மூன்று வேடங்களில் காட்சியளித்தார், சின்னவரா மெனக்கட்டு இந்த போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்திருக்கப்போகிறார், எதாவது கிராபிக்ஸ் வேலையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்; அடுத்த தட்டியில் 'இலக்கிய புரவலரே' என்று இருந்தது; இங்குதான் எனது ஞாபகத் திறனுக்குச் சிக்கல் வந்தது; சின்னவர் தினத்தந்தி பேப்பர் படித்துகூட நான் பார்த்ததில்லையே, ஏதாவது கவிஞர் எழுத்தாளருக்குக் காசு கொடுத்தாரா? ஒன்றும் புரியவில்லையே. ஒருவேளை அவருடைய கல்லூரியில் மாணவிகளுக்கிடையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி வைத்துப் பரிசு கொடுத்திருப்பாரோ? இருக்கலாம். அப்புறம் 'அரசியல் பிதாமகரே' என்று ஒரு தட்டி; இதில் சந்தேகமே வேண்டாம், வேறு கட்சிக்காரர்கள் நாங்களே சின்னவரைப் பார்க்க வருகிறோம், அதிலும் சின்னவர் பிரதான எதிர்க்கட்சி வேறு. அப்புறம் திரும்பத் திரும்ப இதே தட்டிகள்தான் மாறிமாறி. தட்டி வைத்தவனுக்குக் கற்பனை தீர்ந்துவிட்டதுபோல. தட்டி வைத்தவன் பேரைப் பார்த்தேன், கா. கீ. கலைக்கோவன், Bsc, ஊராட்சித் தலைவர், மூவாநல்லூர் என்றிருந்தது. இந்தத் தட்டிகளை வைத்தே ஒரு ஊராட்சியில் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை எளிதாகக் கணக்குப் போடலாம் போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன்.
    இப்போதுதான் கவனித்தேன், ஒரு சிலர் எங்களைப் போல் குனிந்துகொண்டும் வேறுசிலர் இயல்பாகவும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மாமாவிடம் கேட்டேன்.
அவர் சொன்னார், 'மாப்புள்ள, இந்தத் தெருக்காரங்க மட்டும்தான் அப்புடிப் போவாங்க. சின்னவரு ஒன்னும் எல்லாம் குனிஞ்சிக்கிட்டு வரணும் போவனும்னு சட்டமெல்லாம் போடல. எல்லாம் கட்சிக்காரப் பயலுங்க ஆரம்பிச்சு வச்சது, இப்ப நம்மக் கால வெயிலு பதம்பாக்குது' என்றார். மாவட்டம் சின்னவரு வீட்டு வாசல் கதவை மெதுவாகவும் பவ்வியமாகவும் திறந்துகொண்டு நுழைவதைக் காண முடிந்தது. நாங்களும் வீட்டை நெருங்கிவிட்டோம். வீடு சாதாரண ரெண்டு மாடி வீடுதான். வாசலில் கா.மே.க கட்சியின் பச்சை வெள்ளைக் கொடி கம்பத்தில் படபடத்துக்கொண்டிருந்தது. அவர் வீ்ட்டுச் சுவரில் மட்டும் எந்த வாசகங்களையும் சுவரொட்டிகளையும் காண முடியவில்லை. மற்றபடி தெருவிலிருந்த எல்லா வீட்டுச் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் 'சென்னை சென்று மன்னை திரும்பிய மன்னனே', என்றும் 'இன்று பிறந்த நாள் காணும் எங்கள் சின்னவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்' என்றும் எழுதியோ சுவரொட்டியை ஒட்டியோ வைத்திருந்தார்கள்.
    வீட்டுக்குத் தெற்குப் பக்கத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தில் யாரோ மாட்டைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது தெரிந்தது. மாவட்டம்கூட அந்தப் பக்கம்தான் போனார். அட, மாட்டைக் குளிப்பாட்டுவது சின்னவர்தான்.
'என்ன சிம்பிளிசிட்டி பாத்தியா மாப்புள்ள' என்றார் மாமா.
    வீட்டு வாசலுக்கு வந்துவிட்டோம். யாரையும் கூப்பிடவில்லை. அது மரியாதையாக இருக்காது என்பதால் அப்படியே நின்றுகொண்டிருந்தோம். மாட்டுத் தொழுவத்துக்குச் சென்ற மாவட்டம் சட்டையைக் கழட்டி அழுக்குப் படாமல் ஓரமாக ஒரு இடத்தில் வைத்தார். அவர் வந்ததைச் சின்னவர் கவனித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை, அவர் பாட்டுக்குத் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நல்ல முரடான பசுமாடு அது. சின்னவர் அதன் கழுத்துப் பகுதியை வைக்கோலை வைத்துத் தேய்த்துக்கொண்டிருந்தார். வெற்றுடம்போடுதான் இருந்தார், ஒரு அழுக்குக் கைலி கட்டியிருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தார் மாவட்டம். தான் வந்திருப்பதைக் காட்டுவதற்காக இருமக் கூட இல்லை. சட்டென்று ஏதோ தோன்றியர்போல மாவட்டம் தான் போட்டிருந்த பனியனையும் கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும்கூட அவிழ்த்துச் சட்டையோடு வைத்துவிட்டுப் பிறகு தன் பங்குக்கு கைக்குள் கொள்ளும் அளவுக்கு வைக்கோலையும் பக்கத்திலிருந்த டப்பாவில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு மாட்டின் சப்பைப் பகுதியைத் தேய்க்க ஆரம்பித்தார். மாடு அலுங்காமல் குலுங்காமல், தேய்ப்பதற்கு அவருக்குக் காலைக் கொடுத்துக்கொண்டு ஒணக்கையாக நின்றுகொண்டிருந்தது. அது மிரளாமல் இருப்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது, மாவட்டம் மாட்டுக்குப் பலமுறை ஒணக்கையாக அழுக்குத் தேய்த்திருக்கிறார் என்பது.      
    நல்லவேளை சின்னவர் வீட்டு வாசலில் பந்தல் போட்டிருந்தார்கள், நிழலுக்குள் நின்றுகொண்டிருந்தோம். பந்தலுக்குள், நாற்காலி, பெஞ்ச் என்று எல்லாம் கிடந்தது. அநேகமாக அதில் மனிதர்கள் யாரும் உட்கார்ந்தே இருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது, குறைந்தபட்சம் சின்னவர் வீட்டு வாசலில் கிடக்க ஆரம்பித்ததிலிருந்து. நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சின்னவரும் மாவட்டமும் மாட்டைக் குளிப்பாட்டிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் வந்ததை இன்னும் கவனிக்கவே இல்லை என்பதுபோல்தான் தெரிந்தது. சாமிக்குப் பூசாரி தீபாராதனை காட்டுவதுபோல் பயபக்தியுடன் மாட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தார் மாவட்டம். அந்த நேரம் பார்த்தா மாட்டுக்குச் சாணி வரவேண்டும். மலைப்பாம்பு எட்டிப்பார்ப்பதுபோல் மாட்டின் சூத்திலிருந்து சாணி முதலில் எட்டி எட்டிப் பார்த்தது. பிறகு பொத்தென்று கீழே விழுந்தது. விழுந்தது கெட்டியான சாணிதான், ஆனால் அது ஏற்கனவே கழிந்து வைத்திருந்த தண்ணியான சாணியின் மீது விழுந்ததால் அது தெறித்து மாவட்டம் முகமெல்லாம் சாணி. இருந்தும் மாவட்டம் ஒரு துரும்பு நகர்ந்ததுபோல்கூடக் காட்டிக்கொள்ளாமல் தன் வேலையில் தீவிரமாக இருந்தார்். பிறகு என்ன தோன்றியது என்று தெரியவில்லை, சப்பையைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு மாட்டுக்குப் பின்னாடி வந்து பார்த்தார். மாடு சாணி போட்டிருந்ததால் கடைசியாக துக்குணிச் சாணி சூத்தில் ஒட்டிக்கொண்டு விழுவேனா விழ மாட்டேனா என்று இருந்தது. அது மட்டுமல்லாமல் முன்பு கழிந்த சாணியால் அங்கங்கே அடைஅடையாக இருந்தது. மாவட்டம் டப்பா தண்ணியை அதன் மேல் அடிக்கலாமா என்று யோசிப்பதுபோல் தெரிந்தது. சின்னவர் மேல் தண்ணீர் தெளித்தாலும் தெளிக்கக் கூடும் என்று எண்ணியவர்போல் தன் கையாலே அந்தச் சாணியை அவர் எடுத்துவிட்டார். அப்போது மாட்டின் குதப்பகுதி சிலிர்த்துக்கொண்டதுபோல் விரிந்துமூடியது. கையால் எடுத்த சாணியைக் கீழே உதறிவிட்டு டப்பாவிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கையாலே எடுத்து குதப்பகுதியையும் சாணி அடைஅடையாக ஓட்டிக்கொண்டிருக்கும் பிற பகுதிகளையும் கழுவிவிட்டார். மாடு அப்போதுதான் சற்று, சற்றுதான், திமிறியது. சின்னவர் கொஞ்சம் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த மாட்டிடம் சென்றார். மாவட்டம் பயந்துபோய், பதற்றத்தில் டப்பாவைக் கீழே போட்டுவிட்டார். டப்பாவை எடுத்துவிட்டு நிமிரும்போது இதையெல்லாம் நாங்கள் கவனித்துக்கொண்டிருந்ததை மாவட்டம் பார்த்துவிட்டார். மாவட்டத்துக்கு முகமெல்லாம் செத்துச் சுண்ணாம்பாகி, மோசமாகக் கோண ஆரம்பித்துவிட்டது.
    இதற்கு மேலும் மாவட்டத்தைச் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் திரும்பிக்கொண்டோம். எங்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றாலும் இன்னொரு பக்கம் சங்கடமாகவும் இருந்தது. மாவட்டம் நமக்குத் தூரத்து உறவுமுறை; அதுமட்டுமல்லாமல் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால் எங்கள் கட்சிக்காரர்களிடம் ஓடுவதைவிட மாவட்டத்திடம்தான் அதிகம் ஓடியிருப்போம். இனிமேல் என்ன செய்வாரோ என்று எங்கள் எல்லாருக்குமே பதட்டம் ஏற்பட்டது. அதை விட நாங்கள் இப்போது வந்திருக்கும் வேலையில் ஏதாவது குதாப்பு பண்ணிவிடுவாரோ என்று வேறு கவலை ஏற்பட்டது. எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், மாவட்டத்தைப் பார்க்க அவர் வீட்டுக்கு வரும் எல்லாரும் இங்கே மாவட்டம் நடந்துவந்ததைப் போல்தான் நடந்து வருவார்கள். அதுமட்டுமல்லாமல் வேண்டுமென்றே மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பார். அதுவும் சொந்தக்காரன் என்றால் காலையில் வந்தால் சாயங்காலம்தான் அவரைப் பார்க்க முடியும்; ஆனால் காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடுவார்.
    யாரும் எதுவும் பேசாமலேயே வெகு நேரம் நின்றுகொண்டிருந்தோம். ஒரு மணி நேரமாவது நின்றிருந்திருப்போம். அப்புறம் உள்ளிருந்து குரல் வந்தது 'வாங்கய்யா' என்று. சின்னவருடைய குரல்தான் அது. எத்தனை திருமணங்களில் தலைமை தாங்கி பேசியிருக்கிறார். அவருடைய குரல் எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.
    நாங்கள் மூவரும் முன்பை விட பவ்யமாகவும் பணிவாகவும், நடக்கிறோம் என்று தெரிய வேண்டும் ஆனால் விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் ஒவ்வொரு அடியாய் முன்னால் வைத்து வீட்டுக்குள் நுழைந்தோம். ஒரே வரியில் நுழைந்தோம் என்று சொல்லி விட முடியாது. நான் முன்பு காதலிக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுகூட நேரம் இந்த அளவு யுகம்யுகமாக எனக்குத் தோன்றியதில்லை. உள்ளுக்குள் போவதற்கு ஜந்து வினாடிகள்தான் ஆகியிருக்கும், ஆனால் அதற்குள் பூமி பத்துத் தடவை சுற்றி ஓய்ந்ததுபோல் இருந்தது. எங்களுக்கு நாடி நரம்பெல்லாம் முடுக்கிவிட்டதுபோல் இறுக்கமாக ஆகிவிட்டிருந்தது. என்னால் சின்னவருக்கு முன்னால் பேச முடியுமா என்று தோன்றவில்லை, பெவிகால் வைத்து ஒட்டியதைப் போல பயத்தில் நாக்கு அண்ணத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டது.        
    வரவேற்பறைக்குள் நாலைந்து நாற்காலிகள் கிடந்தன. சின்னவர் அதில் ஒன்றில், நெற்றியில் பட்டையுடன் வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு மேலே துண்டு மட்டும் போட்டுக்கொண்டு, உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் மாவட்டம், இன்னமும் அவருடைய முகத்துக்கு உயிர் வரவே இல்லை.
'அய்யா வணக்கம்' என்று மாமா சொன்னவுடனே நாங்களும் கோரஸாக 'அய்யா வணக்கம்' என்று அனர்த்தமாகக் கத்தினோம்.
    எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டதுபோல் தலையாட்டிய சின்னவர் அப்புறம் சிரித்துக்கொண்டே 'என்னய்யா கண்டியரே, நம்மள பாக்க வர்றப்ப மட்டும்தான்யா ஒன்னோட கரை வேட்டிக்கு நீ லீவு கொடுப்ப. இடைத் தேர்தல்ல செயிச்சிட்டிங்க போலருக்கு. அதுக்கு ஸ்வீட்டு கொடுக்க வந்தீங்களா?' என்றார்.

மாமா வராத சிரிப்பை மல்லுக்கட்டி வரவழைத்தபடி, 'நமக்குக் கச்சியா முக்கியம் சின்னவரே, சாதி சனங்கதான் முக்கியம். அதான் ஒரு விஷயமா ஒங்களப் பாத்துச் சொல்லிட்டுப் போவலாம்ன்னு' என்று மாமா இழுத்தார்.
'என்ன விஷயம்யா, வக்காலி கண்டியரு வூட்டு ஆளுங்களுக்கு ஏதாவது விஷயம்ன்னாதான் நம்ம நெனப்பு வரும். அது சரி ஒங்க ஊரு ஆளுங்கயல்லாம் ஏன் இ்வ்வளவு புடிவாதமா இருக்காங்க. நான்தான் லட்சலட்சமாப் பணம் தர்றேன்னு சொல்றன்ல. நீங்க எந்தக் கச்சியில வேணும்னா இருந்துக்குங்க, நான் காசு தர்றேன், எலக்சன் வர்றப்ப ஓட்ட மட்டும் நம்மாளுங்களுக்குப் போட்டுக்குங்க. அது கெடக்கட்டும் என்ன வெஷயமா வந்தீங்க' என்றார் சின்னவர்.
'இந்தா நிக்குதுல்ல தம்பி' என்று மாமா என்னைக் காட்டியபோது அதுவரை ஏதேதோ சிந்தனை ஓட்டத்தில் ஆழ்ந்திருந்த நான் சட்டென்று உயிர்பெற்று மறுபடியும் கூனிக் குறுகி வணக்கம் போன்ற ஒன்றை அவருக்குத் தெரிவித்தேன்.
'இந்தத் தம்பியோட அம்மா எனக்குத் தங்கச்சி மொற வேணும். அது கண்டியரு வூட்டுப் புள்ள, வாக்கப்பட்டது ஆர்சுத்தியாரு வூட்டுல. அதோட பையன் இவன். எம்பில்லு' என்று ஆரம்பித்தவர் வாயில் சரியாக வராததால் 'அது என்னடா தம்பி?' என்று என்னைப் பார்த்துக் கேட்டார். 'எம்ஃபில். இங்கிலீஷ் லிட்டரேச்சர்' என்று அவருக்கு எடுத்துக்கொடுத்தேன். தொடர்ந்து அவர் 'ஆங் அந்தப் படிப்புப் படிச்சிருக்கு. அதுவும் மெட்ராசுலேயே பெரிய காலேசுல. படிச்சு முடிச்சிட்டு அங்கயோ ஏதோ இஞ்சினியரிங் காலேசுல டெம்பரரியா வேலை பாத்துட்டு இருந்தது இப்ப நம்ம ஊரோடவே வந்துடிச்சு. சின்னவரு நீங்க நெனச்சா இங்க உள்ள ஏதாச்சும் ஒரு காலேசுல தம்பிக்கு ஒரு வேல பர்மனன்டா வாங்கித் தர முடியும். வயசு வேற முப்பத்தொன்னு ஆச்சு. கல்யாணம் பண்ணனுன்னா எதாச்சும் நல்ல வேலையில இருந்தாத்தான் பொண்ணு கொடுப்பாங்க' என்று ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாகவும் நிறுத்திநிறுத்தியும் பேசினார் மாமா.
'அப்புடியா தம்பி, நம்ம பயல்ல ஒருத்தன் நல்லா படிச்சிட்டு வந்தா சந்தோஷப்படற மொத ஆளு நான்தான். என்னோட காலேஜு வந்து பொட்டப்புள்ளங்களோடது. அதுல ஆம்பள டீச்சரு யாரும் போடறது இல்ல. நீ ஒண்ணும் கவலப்படாத தம்பி. சண்முகத்தோட காலேஜுலேயே ஒண்ண சேத்துவுடறன். அடுத்த வாரம் என்ன வந்து பாரு' என்று சொல்லிவிட்டு 'நீ ஆர்சுத்தியாரு வூடா தம்பி? என்னோட மச்சினன் பொண்ணு எடுத்ததும் ஆர்சுத்தி வூட்லருந்துதான். ஒரு வகயில நாம பங்காளிதான் தம்பி, நீயொன்னும் கவலப்படாத' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார் சின்னவர்.
'ரொம்ப நன்றீங்க' என்று நாங்கள் கையெடுத்துக் கும்பிட்டோம். 'இருக்கட்டும்' என்பதுபோல கையைக் காட்டினார் சின்னவர். சட்டென்று மாமா என் முதுகில் கைவைத்து அழுத்தினார். புரிந்துகொண்டு நான் சின்னவரின் காலில் விழுந்தேன்.
சின்னவரு என்னைத் தன் கைகளால் பிடித்துத் தூக்கிவிட்டு, என் தலையில் கைவைத்து தேவாரம் திருவாசகம் போன்று ஏதோ முணுமுணுத்துவிட்டுக் கண்ணைத் திறந்தார்.
'எந்த விக்கினமும் இருக்காது தம்பி, நீங்க போய்ட்டு வாங்க' என்றார்.
எழுந்து நின்றேன். சின்னவர் தலைக்குப் பின்னால் பெரிய படம் மாட்டியிருந்தது. முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான குமாரி குந்தவையுடன் சின்னவருடைய அண்ணன் கூனிக் குறுகி இருப்பதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. நாங்கள் எந்தப் பணிவுடனும் பயபக்தியுனும் வேகத்துடனும் வந்தோமா அதே பணிவுடனும் பயபக்தியுனும் வேகத்துடனும் வெளியேறினோம்.
    சின்னவர் பெரிய மனசு பண்ணி தெரு முழுக்கப் பந்தல் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தார்ச் சாலையில் காலை வைக்கவே முடியவில்லை. மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். எங்கள் பின்னால் யாரோ ஒடிவருவதுபோல் தெரிந்தது. திரும்பிப் பார்த்தோம். மாவட்டம்தான்.
'துரைச்சாமி அண்ணே, ஒரு நிமிஷம்' என்றார் மாவட்டம்.
நாங்கள் மூவரும் அப்படியே நின்றோம்.
'என்ன தம்பி?' என்று கேட்டார் மாமா.
மூச்சிரைக்க எங்களை நெருங்கி வந்துகொண்டிருந்தார் மாவட்டம். கூனாமல் குனியாமல் வருகிறார் என்றால் ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் வந்ததும் நின்று, ஓரிரு மூச்சு வாங்கிவிட்டு அப்புறம் பேசினார் மாவட்டம் 'யாருட்டயும் சொல்லாதீங்க அண்ணே'
'எதத் தம்பி' என்று நெற்றியைச் சுருக்கிக்கொண்டு கேட்டார் மாமா.
'அங்க நடந்ததத்தான்' என்று மென்று விழுங்கினார் மாவட்டம்.
இன்னமும் புரிபடாதவராக மாமா 'அதான் எதத் தம்பி' என்று கேட்டார் மாமா. மாமா ஈவிரக்கம் கொஞ்சம்கூட இல்லாதவர்போன்று எனக்குத் தோன்றினார்.
'அதான் பாத்தீங்கல்ல' என்று திணறிக்கொண்டு சொன்னார் மாவட்டம்.
'புரியல தம்பி' என்றார் மாமா.
வெறி வந்ததைப் போல் சற்று உரக்கவே கத்திவிட்டார் மாவட்டம், 'கண்டார ஓலி மவன! நான் மாட்டுக்கு சூத்து கழுவுனததான்டா சொல்றன்.'               

                         -2010

உதவி எதிர்பார்க்கிறது காந்தி மையம்!

காயவைக்கப்படும் புதிய நூலின் பிரதிகள்                    வெள்ளம் உண்டாக்கிய சிதிலங்கள்

ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் 18-12-2015 அன்று வெளியான வேண்டுகோள் கட்டுரை) 

சென்னை வெள்ளம் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் சூறையாடிக்கொண்டுச் செல்லவில்லை; ஏராளமான அறிவுச் செல்வங்களையும் கொண்டு சென்றிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்புகளில் காந்தி கல்வி மைய நூல்கள், ஆவணங்கள், உடைமைகள் முக்கியமானவை.
காந்தி கல்வி மையம்!
சென்னையில் மட்டும் அல்ல; தமிழகத்தில் காந்தியர்களின் முக்கியமான அறிவு மையங்களில் ஒன்று காந்தி கல்வி மையம். அரசின் உதவியின்றி காந்திய அன்பர்களின் நன்கொடை உதவியை மட்டுமே கொண்டு செயல்படும் பல்வேறு காந்திய மையங்களில் இதுவும் ஒன்று. காந்தியச் சிந்தனைகளை எல்லோரிடமும் கொண்டுசேர்க்கும் பல்வேறு முயற்சிகளையும் இந்தக் கல்வி மையம் அமைதியாக மேற்கொண்டுவருகிறது.
தமிழகப் பள்ளி மாணவர்களிடையே காந்தியக் கல்வியைக் கொண்டுசெல்வது முதல் முதுநிலை ஆய்வுப் படிப்புகள் வரை இங்கு உண்டு. தமிழகத்தின் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் நரேஷ் குப்தா, டி.கே. ஓஜா போன்றோர் இங்கே காந்தியச் சிந்தனையில் முதுநிலைப் படிப்பை முடித்தவர்களில் சமீபத்திய முக்கியஸ்தர்கள். மேலும், கணக்கில்லா ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த மையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மையத்தின் பொக்கிஷம்
சென்னை காந்தி கல்வி மையத்தின் மிகச் சிறப்பான பொக்கிஷம் இங்கிருந்த நூலகம். காந்தி எழுதிய நூல்கள், காந்தியைப் பற்றிய நூல்கள், காந்தியுடன் தொடர்புள்ள நூல்கள் என்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட அரிய களஞ்சியம் அது. சுதந்திரப் போராட்ட வீரர் டி.டி. திருமலை தன்னிடம் இருந்த காந்தி குறித்த புத்தகங்களைக் கொண்டு 1978-ல் தொடங்கிய இந்த மையம், 1986-ல் தி நகர் தக்கர் பாபா வித்யாலயா வளாகத்துக்கு வந்தது. சமீபத்திய வெள்ளம் அதைச் சர்வநாசம் ஆக்கிவிட்டது.
காந்தி அன்பர்கள் தங்களிடம் இருந்த அரிய புத்தகத் தொகுப்புகளையும் ஆவணங்களையும் வழங்க, காந்தி கல்வி மையத்தின் நூலகம் விரிவடைந்தது. நூல்கள் மட்டுமல்ல, காந்தி நடத்திய ‘யங் இந்தியா’ (1919-1932), ‘ஹரிஜன்’ (1933-1948) பத்திரிகைகளின் பிரதிகளும் இந்த மையத்தின் பொக்கிஷ சேகரங்கள். யாவும் அழிந்துவிட்டன. கிருஷ்ணா கிருபளானி, தான் எழுதிய ‘காந்தி: எ லைஃப்’ என்ற நூலின் ஒரு பிரதியைக் கையெழுத்திட்டு ராஜாஜிக்கு வழங்கியிருந்தார்.
இந்த நூலகத்தில் இருந்த அந்தப் பிரதியும் போய்விட்டது. தான் பெற்ற பிள்ளைகளைவிட தனக்கு முக்கியமானவர் என்று காந்தி குறிப்பிட்ட ‘மகாதேவ் தேசாயின் நாட்குறிப்புகளின் தொகுப்பு’நூலும் மழையில் அழிந்தது பெரிய இழப்பு. ராஜாஜிக்கு மவுன்ட்பேட்டனின் பேத்தி கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகம், லண்டனில் காந்தி தங்கியிருந்தகிங்ஸ்லி ஹாலின் மூரியல் லெஸ்டர் கையெழுத்திட்டுக் கொடுத்த புத்தகம் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு புத்தகம்கூட மிஞ்சவில்லை. புத்தகங்கள் மட்டுமல்ல, முக்கியமான ஆவணங்களும் முற்றிலும் நாசமாயின. 1927-ல் திருச்சிக்கு காந்தி வந்திருந்தபோது அங்கே தொடங்கப்பட்ட ‘யங் மென் இந்தியன் அசோசியேஷன்’ (ஒய்.எம்.ஐ.ஏ) என்ற அமைப்பின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தார். இந்த வெள்ளத்தில் உயிர்விட்ட அரிய ஆவணங்களில் அதுவும் ஒன்று. காந்தியின் அரிய புகைப்படங்களும் இதில் உள்ளடங்கும். மேலும், பொருளாதாரரீதியாகவும் பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது காந்தி கல்வி மையம்.


எப்படி மறுசீரமைப்பது?
பேரழிவுக்குள்ளான காந்தி கல்வி மையத்தை மறுசீரமைப்பதற்கான காந்தியர்களின் ஆலோசனைக் கூட்டம் ஓரிரு நாட்களுக்கு முன் நடந்தது. “நாடு முழுவதும் உள்ள காந்தி தொடர்பான அமைப்புகள், நூலகங்கள் போன்றவற்றிடமிருந்து காந்திய நூல்களைக் கேட்டுப்பெறுவது; காந்திய அன்பர்கள், பொதுமக்கள் போன்றோர் தங்களுடைய புத்தகங்களை மையத்துக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்வது; முக்கியமாக, இனியொரு முறை இதுபோன்ற அழிவு ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பான வகையில் புதிய கட்டிடம் ஒன்று கட்டுவது” எனும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
                                  காந்தி கல்வி மையத்தைப் புனருத்தாரணம் செய்வது குறித்து நடைபெற்ற கூட்டம்  
தேவை உதவும் கைகள்!
இப்படியாகப் புதிய கட்டிடம், புத்தகங்கள், அறைக்கலன்கள், நூல்களை மின்நூல்களாக ஆக்கு வதற்கான தொழில்நுட்பப் பணிகள், பணியாளர்கள் போன்றவற்றுக்கான நிதியைத் திரட்டும் பணி அத்தனை எளிதானது அல்ல.
இந்தியாவின் ஒவ்வொரு சந்தோஷத்தின்போதும் ஒவ்வொரு இன்னலின்போதும் காந்தியை நினைவு கூருகிறோம். எப்போதையும்விட இப்போது காந்தி நமக்கு அதிகம் தேவைப்படுகிறார் என்றால், இளைய தலைமுறையிடம் நாம் காந்தியக் கல்வியை எடுத்துச் செல்வது முக்கியம்; அதற்கு இன்னமும் மிச்சமிருக்கும் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய காந்திய அமைப்புகள் தொடர்ந்து உயிரோடிருப்பது முக்கியம். அதற்கு அவை மூச்சுத்திணறும்போதெல்லாம் நாம் அவற்றுக்கு உதவுவது முக்கியம்!
புத்தகங்களையும் நிதியையும் வழங்குவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: ஒருங்கிணைப்பாளர், காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58, வெங்கட் நாராயணா சாலை, தி நகர், சென்னை 17. செல்பேசி: 99529 52686 . நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு: Gandhi Study Centre, A/C No. : 303501010001140, IFSC : VIJB0003035, MICR : 600029015 (நன் கொடைக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு).
  -நன்றி: ‘தி இந்து’
-‘தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/V91Tl7

Monday, December 14, 2015

புரட்சி அக்காவின் கதை



ஆசை  

(இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை. அதே போல் மேலே உள்ள படமும் சித்தரிப்பு நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கதைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தக் கதை தற்செயலாக எதையாவது யாரையாவது நினைவுபடுத்தினால் மன்னிப்பு கோருகிறேன்)

    நேத்து நடந்த நேர்காணலப் பத்தியா கேக்கற, அது பெரிய கூத்து மாமா. நான் சின்னப்புள்ளயா இருக்கறப்பலருந்தே வாத்தியாரோட ரசிகன். எனக்குப் பத்து வயசா இருந்தப்ப கணக்குக் கேட்டாருன்னு அவரக் கட்சிய உட்டுத் தூக்குனாங்க. வெவரம் புரியாத அந்த வயசிலேயே எங்கப்பாவோட சேர்ந்துகிட்டு 'குள்ளநரி குருசாமியே கணக்குக் காட்டு கணக்குக் காட்டு'ன்னு கோஷம் போட்டுட்டுப் போனேன். கட்சி உறுப்பினரா முப்பது வருஷத்துக்கு மேல இருக்கன் மாமா, நானும் எவ்வளவோ தலையாலத் தண்ணி குடுச்சுப் பாத்துட்டன், கட்சில நல்ல நல்ல பதவியல்லாம் நம்ம கைல மாட்டாம போயிட்டே இருக்கு.

Friday, December 11, 2015

உலகம் அழிந்துபோகாததற்கு இவர்கள்தான் காரணம்!

ஆசை
 (‘தி இந்து’ நாளிதழின் ‘இளமை புதுமை’ இணைப்பிதழில் 11-12-2015 அன்று வெளியான கட்டுரை)

சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும் இந்தப் பேரிடருக்குள் சிக்கிக்கொண்டு தள்ளாடினோம்; தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்; தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறோம், முற்றிலும் வீழ்ந்துபோய்விடவில்லை. இதற்குக் காரணம் மழை, வெள்ளத் தாண்டவத்தின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயத்தைக் காட்டியவர்கள்தான்.
பெரிய பெரிய விஷயத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. மழை ஓய்ந்த பிறகு, நீரின் முற்றுகையில் நான்கு நாட்கள் தவித்த பிறகு நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் மூழ்கிய தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பி நடந்துவந்துகொண்டிருக்கிறார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் ஒரு கார் வந்து நிற்பதுபோல் தோன்றியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காரிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிச் செல்வது தெரிந்திருக்கிறது. நண்பர் மேற்கொண்டு தன் வழியைப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். கார் ஹாரன் சத்தம் கேட்டிருக்கிறது. நண்பர் ஓரமாக நடக்க முயன்றிருக்கிறார். அவரைச் சற்றுக் கடந்து பக்கவாட்டில் வந்து நின்றிருக்கிறது கார்.
கார்காரர் காரின் ஜன்னலை இறக்கிவிட்டுப் பாதசாரி நண்பரை அழைத்து “எங்கே போகணும் சொல்லுங்க, இறக்கிவிடுகிறேன்” என்றிருக்கிறார். நண்பருக்கு பேச்சே வரவில்லை. காருக்குள் ஏறிப் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறார். நம்மிடம் இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டபோது நண்பர் இப்படிச்சொன்னார், “இதுபோன்ற ஒரு உதவியை இதற்கு முன் செய்தது ஒரு மீன்பாடி வண்டிக்காரர்தான். நடு இரவில் குழந்தைகள் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட, என்ன செய்வதென்று நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மீன்பாடிக்காரர் தானாகவே வந்து, என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்தார். அடித்தட்டு மக்கள் எப்போதும் அப்படித்தான். அதில் எந்த அதிசயமும் இல்லை.
ஆனால், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தானாக லிஃப்ட் கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது இந்த மழை, வெள்ளம்தான். காரில் உட்கார்ந்த பிறகுதான் உணர்ந்தேன், எனக்கு முன்னாலும் அவர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து இறக்கி விட்டிருக்கிறார்.”
காரில் லிஃப்ட் கொடுப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த மழை, வெள்ளம் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாய்ந்து, அதன் உள்ளே புதைந்துபோயிருந்த பரிவுணர்வையெல்லாம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பருக்கை பதம் இது.
சிறிய அளவில் இப்படியென்றால் பெரிய அளவில் எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்து, ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களையெல்லாம் குற்றவுணர்வு கொள்ளவும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் முகமற்றவர்கள். அதாவது, சமூகத்தால் அறியப்படாதவர்கள் என்பதுதான் மகத்தான செய்தி. உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் மனிதம் என்ற ஸ்டிக்கரைத் தவிர வேறு ஏதும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். முகம் தெரிந்த மனிதர்களுக்குச் சளைக்காமல் முகம்தெரியாத மனிதர்கள் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளைச் செய்து தமிழக, இந்திய மக்களை மட்டுமல்ல உலகத்தினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.
அடையாறுக்குப் பக்கத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் பகுதியொன்றில் ஒருவர் தனது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, பெரிய பாத்திரத்தில் சூடாகப் பால் காய்ச்சிக்கொண்டு, தண்ணீரில் கவனமாக நடந்துசென்று சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விநியோகித்திருக்கிறார். அவர் யார் என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் முக்கியமில்லாத விஷயம், நான் போய் இன்னும் பால் எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மனிதத்துக்கு சாதி, மதம், மொழி மட்டுமல்ல முகமும் கிடையாது என்பதை அவர் நிரூபித்துவிட்டிருக்கிறார்.
இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. இன்னொரு நண்பர் சொன்ன தகவல். சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.
சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். நேரம் அப்போது இரவு 9.30. அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம்தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது. நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”
அந்தப் பெண்மணியின் வீட்டை வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்துவிட்டது. கணவர், குழந்தைகளெல்லாம் எங்கெங்கோ தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியைச் செய்துவருபவர் அவர். எல்லாவற்றையும் இழந்திருக்கும் நிலையில் அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? பிழைப்பு நடத்தியாக வேண்டுமல்லவா! அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார்.
வேலை முடிந்த பின் எங்கே செல்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “வீட்டுக்குத்தான்” என்று பதில் வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டால், “பாவங்க, ஏழு நாய்களுக்கு நான்தான் சோறு போட்டு வளக்குறேன். நான் இல்லாட்டி அதுங்க அவ்வளவுதான். அதுங்களுக்காக நான் அங்க போய்த்தானே ஆவணும்.”

அதே போல் ஹிப்ஹாப் தமிழன் பகிர்ந்துகொண்ட செய்தி இது: “வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்-ஆர்.ஏ.புரம் பகுதிக்கு நடுவில்தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.
சரி தப்பித்துவிட்டோமே, கிளம்பிவிடலாமா என நினைத்துத் தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப்பெண் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் சமைத்துக்கொண்டிருக்கிறார். “தம்பி ஏரியா பூரா தண்ணிபா, நம்ம ஸ்டூடியோல இருக்குற தண்ணி கேனை எடுத்துக் குடுத்துறலாமா” எனக் கேட்கிறார். இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைஃபாய்டு வேறு. செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பிவிடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சீ என்று தோன்றியது.’

இவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தாலும் தினசரி சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்வு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களுடையது. ஆனால், அந்த நிலையிலும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஒரு நாள் பட்டினி கிடந்து சென்னைக்கு நிவாரணமாக ஒரு லட்சம் அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தால் கொஞ்சம் கூட பொருட்படுத்தப்படாதவர்கள் நரிக்குறவர் இன மக்கள். இந்நிலையில் அவினாசியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணத்துக்காக 100 பாய்களை வழங்கியிருக்கிறார்கள்.
இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர்கள் கொடுப்பது அளவில் எவ்வளவு சிறிதானாலும் மதிப்பில் கோடி கோடி மடங்கு உயர்ந்தது என்பதைப் பாலியல் தொழிலாளிகளும் நரிக்குறவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ‘மகாத்மா’ குணம் உறைந்திருக்கிறது. ஆனால், அதை உசுப்பிவிட்டு உயிர் கொடுத்திருப்பது இவர்கள் மட்டும்தான். ஆகவே, இவர்களை ‘மகாத்மாக்கள்’ என்று அழைப்பதில் எந்தத் தவறுமில்லை.
சென்னை வீழ்ந்துபோகாததற்கு மட்டுமல்ல, உலகம் இன்னும் அழிந்துபோகாததற்கும் இந்த மகாத்மாக்கள்தான் காரணம். ஏனென்றால், இன்னொரு மகாத்மா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள், உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.”
 - நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/SGRWLs 

Thursday, November 26, 2015

ஐன்ஸ்டைனைக் கடவுளாக்கிய 1919-ம் ஆண்டு 


ஆசை

(ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாடு முன்வைக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில் எனது இந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறேன்.)

‘மிகவும் அதிகமான நிறையைக் கடக்கும்போது ஒளி வளையும்’ முதலான கணிப்புகளுடன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915-ல் ஐன்ஸ்டைன் முன்வைத்தார். எனினும் அந்தக் கோட்பாடு உறுதியாக நிரூபிக்கப்பட்டது 1919-ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போதுதான்.
ஐன்ஸ்டைனின் இந்தக் கணிப்பு சரியானதா என்பதை நிரூபிக்க 1917-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் சர் ஃபிராங்க் வாட்சன் டைசன் ஒரு யோசனையை முன்வைத்தார். 1919-ம் ஆண்டில் மே மாதம் 29-ல் முழுமையான சூரிய கிரகணம் நிகழவிருந்தது. அந்தக் கிரகணத்தின்போது சூரியன், ஹயாடெஸ் விண்மீன் கொத்தை (அதாவது ஹயாடெஸ் விண்மீன் கொத்துக்கும் பூமிக்கும் இடையே) கடந்துசெல்லும் என்று கணிக்கப்பட்டது. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தை அந்த விண்மீன் கொத்தின் ஒளி கடந்துசெல்லும்போது கிரகணத்தின் காரணமாக அந்த விண்மீன் ஒளி நமக்குப் புலனாகும்; சூரியனின் ஈர்ப்புப் புலத்தைக் கடக்கும்போது ஒளியின் பாதையில் ஏதாவது விலகல் தென்படுகிறதா என்பதைக் கண்டறியலாம் என்றும் யோசனை கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1919-ல் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் எடிங்டன் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. கிரகணத்துக்கு முன்னதாக 1919-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஹயாடெஸ் விண்மீன்கள் அண்டவெளியில் அமைந்திருக்கும் உண்மையான ஸ்தானங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. ஹயாடெஸ் விண்மீன்களின் ஒளி பூமியை நோக்கி வரும் பாதைக்கு அருகே சூரியன் இல்லாத சமயம், அந்த ஒளியில் விலகல் இருக்காது என்பதால் ஒப்பீட்டுக்காக அந்த விண்மீன்களின் உண்மையான ஸ்தானங்களைக் குறித்துவைத்துக்கொண்டார்கள்.
ஐன்ஸ்டைனின் கணிப்பு உண்மையாக இருந்தால், அந்த சூரிய கிரகணத்தின்போது விண்மீன்களின் ஒளி சூரியனைக் கடக்கும் தருணத்தில் விலகல் இருக்குமல்லவா, அதையும் குறித்துக்கொண்டு இரண்டு அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடுமல்லவா? அதுதான் திட்டம்! (முழுமையான சூரிய கிரகணத்தின்போது நிலா மறைப்பதால் சூரியன் நமக்குத் தெரியாதே தவிர, சூரியன் அந்த இடத்தில்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்).
ஹயாடெஸ் விண்மீன் கொத்து, சூரியன், பூமி இந்தக் கோட்டில் கிரகண நிகழ்வின்போது ஒளிவிலகல் ஏற்படும் என்றால், அதைத் தெளிவாகப் பார்க்கக் கூடிய இடமாக மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டி இருக்கும் பிரின்சிபி தீவைத் தேர்ந்தெடுத்து, தகுந்த உபகரணங் களோடு எடிங்டன் அங்கே பயணமானார். ஆய்வில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்காக வேறொரு குழுவை பிரேசிலின் சோப்ராலுக்கு எடிங்டன் அனுப்பினார்.
நல்லவேளையாக, தடங்கல் இல்லாமல் சூரிய கிரகணத் தின்போது ஆய்வை மேற்கொண்டு தன் அவதானங்களை எடிங்டன் பதிவுசெய்தார். லண்டனுக்குத் திரும்பியவுடன் அவரது அவதானங்கள் பரிசோதிக்கப்பட்டன. சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தைக் கடக்கும்போது ஒளி மிகச் சிறு அளவில் வளைகிறது என்பது உறுதியானது. நவம்பர் 6, 1919 அன்று தனது ஆய்வின் முடிவை எடிங்டன் உலகத்துக்கு அறிவித்தார். அப்புறமென்ன, மறு நாள் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. ஒரு புதிய கடவுளும் உலகத்துக்குக் கிடைத்துவிட்டார். அவர் பெயர் ஐன்ஸ்டைன்!
-  நன்றி: ‘தி இந்து’
 ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: http://goo.gl/t7RRgg

உலகிலேயே அழகான கோட்பாடும் 100 ஆண்டுகளும்


ஃபிலிப் பால்

(ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு வெளியான 99-ம் ஆண்டை முன்னிட்டு நான் மொழிபெயர்த்த கட்டுரை இது.1915-ம் ஆண்டின் நவம்பர் 25 அன்று ஒரு ஆய்வரங்கில் அந்தக் கோட்பாட்டை முன்வைத்த ஐன்ஸ்டைன் ஒரு வாரம் கழித்து டிசம்பர் 2 அன்று கட்டுரையாகத் தனது கோட்பாட்டை வெளியிடுகிறார். அறிவியலாளர்களின் அங்கீகாரத்துடன் 1916 மார்ச் 20-ல் ‘Annalen der Physik’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.)
 
‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ எனும் அற்புதமான கட்டமைப்பில் முதல் தடவையாக ஒரு சிறு பிழையைக்கூட ஒருவர் கண்டறியலாம்.

அறிவியல் வரலாற்றில் பொதுச் சார்பியல் கோட்பாடு அளவுக்குக் கொண்டாடப்பட்ட, வழிபடப்பட்ட கோட்பாடு ஏதும் இல்லைதான். ஆனாலும், அந்தக் கோட்பாடு தவறானது என்று நிரூபிக்கப்படுமானால், குதூகலத்தில் துள்ளிக் குதிப்பவர்களும் அதே இயற்பியலாளர்கள்தான். விசித்திரமாக இருக்கிறதல்லவா? அதுதான் அறிவியல்! பிரமாதமான கருதுகோள் ஒன்றை முன்வைப்பதும், அதற்குப் பிறகு அதை விடாமல் இறுதிவரை பரிசோதித்துப் பார்ப்பதும்தான் அறிவியல்.

முரண்டுபிடிக்கும் 2 நண்பர்கள்
பிழைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தை அவநம்பிக்கையாகவோ, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற குரூரமான எண்ணமாகவோ கருதிவிட முடியாது. ஈர்ப்புவிசையைப் பற்றி ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ சொன்னதை இயற்பியலாளர்கள் யாரும் வேத வாக்கியமாகக் கருதவில்லை என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. அதற்குக் காரணமும் இருக்கிறது. விண்மீன்கள், விண்மீன் திரள் போன்ற பிரம்மாண்டமான அளவில் துல்லியமாகப் பொருத்திப் பார்க்கக்கூடிய இந்தக் கோட்பாடு, குவாண்டம் கோட்பாட்டுடன் மட்டும் இயைந்துபோக மாட்டேன் என்கிறது. பொதுச் சார்பியல் கோட்பாட்டைப் போலவே குவாண்டம் கோட்பாடும் நவீன இயற்பியலின் மற்றொரு பெரும் தூண். பொதுச் சார்பியல் கோட்பாடு, பிரம்மாண்டமானவற்றுக்கானது என்றால், குவாண்டம் கோட்பாடு அணு, அணுத்துகள்கள் போன்ற நுண்மையின் உலகுக்கானது. இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் அடிப்படையாக ‘குவாண்டம் ஈர்ப்புவிசைக் கோட்பாடு’ இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

பொதுச் சார்பியல் கோட்பாடு பிழையாவதற்கு வாய்ப்பிருக்கக் கூடிய ஒரு இடம் பிரபஞ்சத்தின் ஏதாவது மூலை முடுக்கில் இருந்து அதை நாம் கண்டுபிடிப்போம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது ஈர்ப்புவிசையைப் பற்றி விளக்குவதற்குக் கூடுதலாக வேறு என்னதான் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறியலாம் என்று இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள். அந்தக் கூடுதல் அம்சம் குவாண்டம் ஈர்ப்புவிசைக் கோட்பாடாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

நிறை வளைக்கும் இடம்
பொதுச் சார்பியல் விதி என்பது ஐன்ஸ்டைனின் அற்புதமான கருத்தாக்கங்களில் இறுதியானது மட்டுமல்ல, மிகச் சிறந்ததும் அதுதான். ஐன்ஸ்டைனின் ‘அற்புதங்களின் ஆண்டு’ என்று வழக்கமாக 1905-ம் ஆண்டைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த ஆண்டில்தான் குவாண்டம் கோட்பாட்டுக்கான உந்துவிசையை அவர் கொடுத்தார்; சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். ஒளிவேகத்துக்கு அருகில் பயணம் செய்தால் காலமும் இடமும் சுருங்கும் என்பதை அந்தக் கோட்பாட்டில் அவர் முன்வைத்தார். ஆனால், 1915-ல் முன்வைத்த பொதுச் சார்பியல் கோட்பாட்டின் மூலமாக அவர் இன்னும் விசாலமான ஒரு சித்திரத்தைத் தந்தார். வேகத்தை மாற்றக்கூடிய இயக்கத்தை உள்ளே கொண்டுவந்தார். ஈர்ப்புவிசை செறிந்திருக்கும் ஒரு புலத்தின் வழியே விழும் பொருளொன்றில் ஏற்படும் முடுக்கம் இதுபோன்ற இயக்கத்துக்கு ஓர் உதாரணம். ஒரு நிறையின் காரணமாக காலம், வெளி (இடம்) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் ஏற்படும் வளைவுதான் ஈர்ப்புவிசை என்று ஐன்ஸ்டைன் இந்தக் கோட்பாட்டின் மூலம் விளக்கினார். இதுவும் காலத்தை மாற்றியமைக்கிறது: வெறும் வெளியில் ஓடுவதைவிட ஈர்ப்புவிசை வலுவாகச் செறிந்திருக்கும் புலத்தில் கடிகாரம் மெதுவாகவே ஓடுகிறது. காலம் மாறுதலடைகிறது என்ற இந்தக் கூற்று பல தடவை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விண்கலங்களில் துல்லியமான கடிகாரங்களைக் கொண்டு இந்தக் கூற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லப்போனால், ‘புவிநிலை அறிதல் முறை’யில் (ஜிபிஎஸ்) நேரத்தை இந்த மாற்றத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சாப்ளினும் ஐன்ஸ்டைனும்!
பிரஷ்யன் அறிவியல் மன்றத்தின் முன்னே 1915-ல் நவம்பர் மாதத்தில் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை முன்வைத்தார். எனினும், அந்தக் கோட்பாடு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது 1916, மார்ச்-20 அன்றுதான். ஈர்ப்புவிசை வலுவாகச் செறிந்திருக்கும் புலங்களில் ஒளியானது வளையும் என்றும் அந்தக் கோட்பாடு சொன்னது. பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் ஆர்தர் எடிங்டன் 1919-ம் ஆண்டு இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தினார். பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்குப் பின்னால் அமைந்திருக்கும் விண்மீன்களின் ஸ்தானங்களை சூரிய கிரகணத்தின்போது ஆய்வுசெய்து ஒளி வளையும் என்ற கணிப்பை எடிங்டன் உறுதிப்படுத்தினார். ('ஐன்ஸ்டைனைக் கடவுளாக்கிய 1919-ம் ஆண்டு  ') இந்தக் கண்டுபிடிப்புதான் சர்வதேச அளவில் ஐன்ஸ்டைனின் புகழை உறுதிப்படுத்தியது. 1931-ல் சார்லி சாப்ளினை ஐன்ஸ்டைன் சந்தித்தபோது தமாஷாக சாப்ளின் இப்படிக் குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்: “பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் நம் இருவரையும் பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றார்கள். எல்லோருக்கும் புரியும் என்பது நான் பிரபலமானதற்குக் காரணம்; யாருக்குமே புரியாதவர் என்பது நீங்கள் பிரபலமானதுக்குக் காரணம். நமக்குக் கிடைத்த இந்த வரவேற்புக்கு இதுதான் காரணம்.”

10,00,000,00,00,000 கிலோ
எரிபொருள் தீர்ந்து அணையும் நிலையில் இருக்கும் விண்மீன்கள் தங்கள் ஈர்ப்புவிசையாலேயே குலைந்துபோகக் கூடும் என்று பொதுச் சார்பியல் கோட்பாடு கணித்தது. அந்த விண்மீன்கள் மிகமிக அதிகமான அடர்த்தியையும் ஒருசில மைல்கள் மட்டுமே விட்டத்தையும் கொண்டிருக்கும். அந்த விண்மீன்களில் ஒரு தேக்கரண்டி அளவு வெட்டி எடுத்து நிறுத்துப்பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அது 10,00,000,00,00,000 கிலோ நிறை கொண்டதாக இருக்கும். அப்படியென்றால், அது எவ்வளவு அடர்த்தியோடு இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். இப்படிப்பட்டவற்றுக்கு நியூட்ரான் விண்மீன்கள் என்று பெயர். நியூட்ரான் விண்மீன்களாக ஆகவில்லை என்றால், அவை ‘ஒருமைக்கணத்தை’ (Singularity) எட்டிவிடும். அதாவது, ஒளியைக்கூடத் தப்பவிடாத அளவுக்கு ஈர்ப்புவிசையைக் கொண்டிருக்கும் கருந்துளைகளாக அந்த விண்மீன்கள் மாறிவிடும் என்று இதற்கு அர்த்தம். கருந்துளையைச் சுற்றியுள்ள வெளி மிகவும் வளைந்து இருப்பதால்தான் விடுபட முடியாத வகையில் ஒளியும் வளைந்துகொள்கிறது.

பல்சார், கருந்துளைகள்…
வானியல் வல்லுநர்கள் நிறைய நியூட்ரான் விண்மீன்களைக் கண்டிருக்கிறார்கள். இவற்றில் சிலவற்றுக்கு பல்சார் என்று பெயர். இவை சுழன்றுகொண்டே இருப்பவை; தங்கள் காந்தத் துருவங்களிலிருந்து வலுமிக்க மின்காந்த அலைக் கற்றைகளை வெளியிடக் கூடியவை; இந்த அலைக் கற்றைகள் சீரான இடைவெளியில் மினுங்கக்கூடியவை. கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. கருந்துளைகளைச் சுற்றி அளவுக்கதிகமான வெப்பவாயு சூழந்திருக்கும். இந்த வாயுக்களைக் கருந்துளைகள் கபளீகரம் செய்துவிடும். சூழ்ந்திருக்கும் இந்த வெப்பவாயுக்கள் வெளியிடும் ஊடுகதிர்களையும் (எக்ஸ்-ரே), பிற கதிர்வீச்சுக்களையும் கொண்டுதான் கருந்துளை இருப்பதை மறைமுகமான வழியில் கண்டறிய முடியும். இப்படிச் சுற்றிவளைத்துத்தான் கருந்துளைகளைக் கண்டறிய முடியும் என்றாலும், வானியற்பியலாளர்கள் அவை இருப்பது உறுதி என்றே நம்புகிறார்கள்.

சூரியக் குடும்பத்தின் இயக்கங்கள்குறித்து விளக்குவதற்குப் பெரும்பாலும் நியூட்டனின் ‘ஈர்ப்புவிசைக் கோட்பாடே’ போதுமானது. ஆனால், பல்சார்கள், கருந்துளைகள் போன்ற அதீத அடர்த்தி கொண்டவற்றைப் பற்றி விளக்குவதற்கு ஐன்ஸ்டைனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ இல்லாமல் முடியாது. அவற்றைக் கொண்டுதான் இந்தக் கோட்பாட்டின் எல்லைகள் எவை என்ற வானியல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

கண்ணாமூச்சி காட்டும் ஈர்ப்பலைகள்
பொதுச் சார்பியல் கோட்பாடுகுறித்த உச்சபட்ச சோதனைகளுள் ஒன்றுதான் ஈர்ப்பலைகள்குறித்த தேடல். ஏனென்றால், பெருநட்சத்திர வெடிப்பு (சூப்பர்நோவா), பல்சார்களை விண்மீன்கள் சுற்றிவருதல் போன்ற வானியற்பியல் நிகழ்வுகள் கால-வெளியில் (கால-வெளி = காலமும் வெளியும் பிணைந்திருக்கும் நிலை) அலைகளை உருவாக்கும் என்றும், அந்த அலைகள் விரிந்துகொண்டே செல்லும் என்றும் பொதுச் சார்பியல் கோட்பாடு கணித்திருக்கிறது. அதனால், ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பது என்பது பொதுச் சார்பியல் கோட்பாட்டின் நிரூபணத்துக்கு மிகவும் அவசியமாகிறது.
ஈர்ப்பலைகள் உணர்மானிகளைக் கொண்டு இதுபோன்ற ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அமெரிக்காவின் லிகோ, ஐரோப்பாவின் விர்கோ ஆகிய இரண்டு ஈர்ப்பலைகள் உணர்மானிகளின் உணர்திறன் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது. புவியைக் கடந்துசெல்லக் கூடிய ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டையை இந்த இரண்டு உணர்மானிகளும் தொடங்கும். அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய விண்வெளி மையம் விண்வெளியில் ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிப்பதற்காக லிஸா பாத்ஃபைண்டர் என்ற விண்வெளித் துழாவியை (ஸ்பேஸ் புரொப்) இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்புகிறது.

அழகானது; எளிமையானது
நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின் மேன்மைகளும் போதாமைகளும் எவையென்று இந்த ஆண்டில் அறிந்துகொள்ளலாம். எதுவாக இருந்தாலும், இந்தக் கோட்பாட்டின் மேல் உள்ள மரியாதை சற்றும் குறைந்துவிடப்போவதில்லை. “இருக்கும் கோட்பாடுகளிலேயே மிகவும் அழகானது இதுதான்!” என்று ஆஸ்திரிய-ஸ்விஸ் இயற்பியலாளர் வூல்ஃப்கேங் பவுலி இந்தக் கோட்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார். பெரும்பாலான இயற்பியலாளர்கள் (ஐன்ஸ்டைன் உட்பட) இந்தக் கோட்பாட்டை நம்பியதற்குக் காரணம், பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல, அந்தக் கோட்பாடு மிகவும் அழகானது, எளிமையானது என்று அவர்கள் கருதியதால்தான்.
- ஃபிலிப் பால், அறிவியல் எழுத்தாளர், ‘நேச்சர்’ இதழின் முன்னாள் ஆசிரியர். © ‘தி நியூயார்க் டைம்ஸ்’ - | சுருக்கமாகத் தமிழில்: ஆசை , நன்றி: இந்து தமிழ் நாளிதழ்

Saturday, November 14, 2015

இந்தியாவில் எல்லாருக்கும் இடம் இருக்கிறது



ஜவாஹர்லால் நேரு
 அலிகாருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். காலத்தால் மட்டுமல்ல, உத்வேகத்தாலும்  கண்ணோட்டத்தாலும் நமக்கிடையே இடைவெளி இருக்கிறது. நீங்கள் இன்று எங்கே நிற்கிறீர்கள், நம்மில் பெரும்பாலானோரும் எங்கே நிற்கிறார்கள் என்பதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரிய வில்லை. ஏனென்றால், ஏராளமான கொந்தளிப்பு களையும் பெரும் துயரங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதனால், நிகழ்காலம் குழப்பம் நிரம்பியதாகவும், அதைவிட எதிர்காலம் மூட்டமானதாகவும் ஊடுருவிப் பார்க்க முடியாததாகவும் காட்சியளிக்கிறது. இருந்தாலும், நாம் நமது இந்த நிகழ்காலத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; அப்படி எதிர்கொள்வதன்மூலம் எதிர்காலத்தை உருவாக்க முயன்றுதான் ஆக வேண்டும்.
நாம் இப்போது எங்கே நிற்கிறோம் என்பதையும் நாம் எதை அடையாளப்படுத்துகிறோம் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும், நம்மில் ஒவ்வொருவரும் பார்த்தாக வேண்டும். எதிர்காலத்தின்மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் நமது நிகழ்காலத்தில் இலக்கின்றித் திரிய நேரிடுவதுடன் வாழ்க்கையை வாழ்ந்துபார்ப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லாமலும் போய்விடும். 

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்


ஆசை

(நேரு நினைவு தினத்தையொட்டி ‘தி இந்து’ நாளிதழில் 27-05-2015 அன்று வெளியான கட்டுரையின் முழு வடிவம்)

நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’ என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப்பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்ற ரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூட கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம் விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

நிலைமையைச் சமாளிப்பதற்காகவோ, நேருவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ காந்தி சொன்ன வார்த்தைகளில்லை இவை. அப்படியெல்லாம் ஒருபோதும் சொல்லக்கூடியவரல்ல காந்தி. பிறகு ஏன் இப்படிச் சொன்னார்? இங்கே ‘கடவுள்’ என்ற சொல்லையும் அதற்கு காந்தி தன் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் அர்த்தத்தையும் நாம் பார்க்க வேண்டும். சத்தியத்தை மட்டுமே காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கடவுளாகக் கருதியவர். மதங்கள் குறிப்பிடும் கடவுள் தரிசனம் தனக்குக் கிடைத்ததில்லை எனவும், ஆனால் சத்தியத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது எனவும் சொல்லியவர் அவர். அந்த சத்தியத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நேரு என்று தான் கருதியதால் மேற்கண்ட சம்பவத்தின்போது காந்தி அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இந்தியாவின் முதல் பிரதமராகவும் காந்தி தேர்ந்தெடுத்ததை மேற்கண்ட சொற்களின் பின்னணியிலும் வைத்துப்பார்க்கலாம்.

நேருவைப் பற்றிய 5 கட்டுக்கதைகள்


ராமச்சந்திர குஹா

(நேரு நினைவு நாளன்று எனது மொழிபெயர்ப்பில் ‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)  

ஜவாஹர்லால் நேருவின் நினைவு வாரத்தை முன்னிட்டு, அவரைப் பற்றி இதுவரை உருவாகியிருக்கும் கட்டுக் கதைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:
கட்டுக்கதை 1: வாரிசு அரசியலை நேரு ஊக்குவித்தார்
நேருவின் மகள், பேரன் ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக இருந்த காரணத்தாலும் அவருடைய பேரனின் மனைவி அந்தப் பதவியை அடைவார் என்ற நிலை இருந்த காரணத்தாலும் நேருவின் கொள்ளுப்பேரன் வாரிசுரிமை அடிப்படையில் காங்கிரஸில் முன்னிறுத்தப்படும் காரணத்தாலும்தான் இப்படியொரு கட்டுக்கதை உருவாகியிருக்கிறது.
உண்மையில், நேருவுக்கும் ‘வாரிசு அரசிய'லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தனது மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று அவர் நினைத்துப் பார்த்தது மில்லை; அப்படிப்பட்ட விருப்பமும் அவருக்கு இல்லை. இந்திய தேசிய காங்கிரஸைக் குடும்பத் தொழில்போல ஆக்கியது இந்திரா காந்திதான். முதலில் தனது மகன் சஞ்சயை அவர் கொண்டுவந்தார், சஞ்சயின் மரணத்துக்குப் பிறகு, தனது இன்னொரு மகன் ராஜீவைக் கொண்டுவந்தார்.
இரண்டு மகன்கள் விஷயத்திலுமே, இந்திரா காந்திக்குப் பிறகு காங்கிரஸின் தலைவராகவும் பிரதமராகவும் அவருடைய மகன்தான் வருவார் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்த விஷயம். ஆகவே, ‘நேரு-(இந்திரா) காந்திப் பரம்பரை' என்பது முறையாக ‘(இந்திரா) காந்தி பரம்பரை' என்றே அழைக்கப்பட வேண்டும்.

Saturday, October 31, 2015

எங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே? உலகின் அரிய பறவையொன்றுடன் எட்டு ஆண்டுகள்! - பறவையியலாளர் ஜெகநாதன் பேட்டி


ஆசை

(‘தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 31-10-2015 அன்று வெளியான பேட்டி. இந்தப் பேட்டியின் முழுவடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் தற்போது வெளியாகியிருக்கிறது.) 

உலகிலேயே மிகவும் அரிதான பறவைகளுள் ஜெர்டான்ஸ் கோர்ஸரும் ஒன்று. அழிந்துபோய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திரத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்ஸர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தப் பறவையின் இருப்பிடத்துக்குச் சென்று, அந்தப் பறவையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டே, அதன் இருப்பிடத்தைக் காப்பாற்றும் முயற்சிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டவர் பறவையியலாளர் ஜெகநாதன். அந்த ஆண்டுகளில் அவராலேயே ஏழெட்டு முறைதான் அந்தப் பறவையைப் பார்க்க முடிந்திருக்கிறது என்றால் அந்தப் பறவை எந்த அளவுக்கு அரிதானது என்பது நமக்குப் புரியும். அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து…

ஜெர்டான்ஸ் கோர்ஸரின் உலகத்துக்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?
ஆந்திரத்தில் கடப்பாவில் மட்டுமே இருந்த அல்லது இருக்கும் பறவை அது. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பி.என்.எச்.எஸ்-ஸில் ஒரு திட்டத்தை 2000-ல் அறிவித்திருந்தார்கள். அந்தத் திட்டத்தின் கீழ் அந்தப் பறவையைப் பற்றி எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றேன்.
ஜெர்டான்ஸ் கோர்ஸர் (Jerdon’s Courser) என்பது கோர்ஸர் என்றழைக்கப்படும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தது. தெலுங்கில் இதற்கு ‘கலுவிக் கோடி’ என்று பெயர். ‘ஆள்காட்டிப் பறவைகள்’ பிரிவைச் சேர்ந்தது. இந்த கோர்ஸர் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியவை என்றாலும் அதிகம் நடந்தும் செல்லக்கூடியவை. கலுவிக் கோடி இரவில் நடமாடும் பறவை. இந்தப் பறவையைக் குறித்து முதலில் விவரித்தது டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேய பறவையியலாளர்தான். அவருடைய பெயரையே அந்தப் பறவைக்கும் வைத்திருக்கிறார்கள். அந்தப் பறவை அழிந்துபோய்விட்டதாகவே அப்போது நினைத்தார்கள்.
ஹோவர்டு காம்பெல் என்பவர் 1900-ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறார். அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டது அப்போதுதான். அதற்குப் பிறகு 86 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பறவையை மறுகண்டுபிடிப்பு செய்தார்கள். பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத் பூஷண் என்ற ஆராய்ச்சியாளர்தான் அதை மறுபடியும் கண்டுபிடித்தார். பறவை வேட்டையாடுபவர்கள், உள்ளூர் மக்கள் என்று எல்லோரிடமும் கலுவிக் கோடி பறவையின் படத்தைக் கொடுத்துத் தேடல் நிகழ்த்தியபோது அய்த்தண்ணா என்பவரிடம் அந்தப் பறவை அகப்பட்டுக்கொண்டது.
களத்துக்குச் சென்று நீங்கள் எப்போது ஆய்வு ஆரம்பிக்கிறீர்கள்?
1986-ல் அந்தப் பறவை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னும் 2000 வரை அது குறித்து ஆராய்ச்சி எதுவும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. புதர்கள், அவற்றையொட்டி திறந்தவெளி இப்படி இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் அந்தப் பறவைகள் இருக்கும். பகல் முழுவதும் புதர்களில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் திறந்தவெளிக்கு வந்து எறும்புகள், கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து உண்ணும். நான் முதன்முதலில் அந்தப் பறவையைப் பார்த்தது 2000-வது ஆண்டின் இறுதியில். ஆள்காட்டியை விடக் கொஞ்சம் சிறியதாக இருக்கும். டார்ச் அடித்தால் அந்தப் பறவை அப்படியே தரையோடு தரையாக உட்கார்ந்துகொள்ளும். பார்ப்பதற்குக் கல் கிடப்பதைப் போல இருக்கும். அருகே போனால் மேலே பறந்துசென்று வேறு எங்காவது போய் உட்கார்ந்துகொள்ளும்.
கலுவிக் கோடி பற்றிய கணக்கெடுப்புக்குப் புதுமையான ஒரு வழிமுறையை மேற்கொண்டோம். சாலையோர மண்ணை எடுத்துச் சலித்து, அந்த மண்ணைக் கொண்டு 5 மீட்டர் நீளம் மட்டும் கொண்ட பாதைகள் பலவற்றை அந்தப் பறவைகள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் அமைத்தோம். அந்த மணல் பாதைகளின் மீது அந்தப் பறவைகள் நடந்தால் அவற்றின் காலடித் தடம் நன்றாகப் பதிந்துவிடும் வகையில் பாதைகளை அமைத்தோம். அந்தப் பறவையின் காலடித் தடம், குரல்கள் போன்றவை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதல்லவா?

                                          கேமரா டிராப்பும் மணல் பாதையும்


இந்த வழிமுறையின் மூலம் உங்களுக்கு எவ்வளவு நாட்களில் கலுவிக் கோடியின் காலடித் தடம் கிடைத்தது?
ஒரு வாரத்தில் கிடைத்துவிட்டது. எனினும் அது அந்தப் பறவைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எப்படி? அதற்காக அந்தப் பாதைகளின் இரு புறமும் ‘கேமரா டிராப்’ வைத்தோம். அந்தப் பறவை அதன் வழியே நடந்துபோனால் அதன் காலடித் தடமும் கிடைக்கும், அதன் புகைப்படமும் கிடைக்கும். தினமும் காலையில் போய் கேமராக்களை நான் பார்ப்பேன். படச்சுருளைக் கழுவிப் பார்த்த பிறகு அதில் அந்த ‘கலுவிக் கோடி’ பறவை எங்களுக்குக் கிடைத்தது. அதன் புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட பரவசத்துக்கு அளவே இல்லை.
தேடலின் அடுத்த கட்டம் என்ன?
அடுத்ததாகக் குரலைக் கண்டுபிடிக்கும் வேட்டை. ஒரு நாள் இந்தப் பறவையின் குரலும் கேட்டது. வித்தியாசமாக இருக்கிறதே என்று பதிவுசெய்துகொண்டோம். எல்லா பறவைகளின் குரல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எதனுடனும் அந்தக் குரல் பொருந்திப்போகாததால் கலுவிக் கோடியின் குரல்தான் அது என்பது எங்களுக்கு உறுதியானது. புலப்படாத பறவையின் குரலையே பதிவுசெய்ததில் எனக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ‘கலுவிக் கோடியின் குரலைப் பதிவுசெய்திருக்கிறோம்’ என்று இந்தத் திட்டத்தின் முக்கிய உறுப்பினர்களும் டாக்டர் ரிஸ் கிரீனிடம் (Dr. Rhys Green) சொன்னேன். ‘இது குறித்து 99% உறுதிதான் இருக்கிறது உங்களுக்கு. அந்தப் பறவை குரல் கொடுப்பதை நேரில் பார்த்தால் மட்டுமே 100% உறுதியாகும்’ என்று அவர் சொல்லிவிட்டார். நாம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்; இவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை.
தினமும் சாயங்காலம் ஆனதும் களத்துக்குச் சென்றுவிடுவேன். எப்படியாவது அந்தப் பறவை கத்துவதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இரண்டு மாதங்கள் முயன்று பார்த்துவிட்டேன். முடியவில்லை. அப்புறம் ‘பிளே பேக்’ வழிமுறையை மேற்கொண்டோம். நாங்கள் பதிவுசெய்திருக்கும் குரலை ஒலிக்கச் செய்து ஏதாவது பறவையிடமிருந்து பதில் குரல் வருகிறதா என்பதை எதிர்பார்ப்போம். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குரலை ஒலிக்க விடும் உத்தியைப் பின்பற்றலாம்.


சரி, அந்தப் பறவை கத்தியதை நேரில் பார்த்தீர்களா?
பார்த்தோம்! ஒரு முறை எனது உதவியாளருடன் மாலை வேளையில் கள ஆய்வுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பறவை கத்திக்கொண்டிப்பது கேட்டது. இரவு நேரத்தில் கேட்க வேண்டிய சத்தம் இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறதே என்று கலுவிக் கோடி நானும் என் உதவியாளரும் அப்படியே மறைவாகப் படுத்துக்கொண்டோம். எங்களுக்கு எதிரே, ஆனால் ஒரு புதருக்குப் பின்னாலிருந்து கத்திக்கொண்டிருந்தது. அதுதான் கத்துகிறது என்று தெரிந்தாலும் நேரில் பார்க்காவிட்டால் 100% உறுதியாகாது அல்லவா? எனவே, எங்கள் டேப் ரெக்கார்டரில் இருந்த குரலை ஒலிக்கச் செய்தோம். ‘க்விக்கூ... க்விக்கூ...’ என்ற சத்தம் கேட்டதும் புதருக்கு வெளியிலிருந்து ஓடி வந்து பார்த்து அதுவும் ஒலி எழுப்பியது. என் வாழ்க்கையில் மகத்தான மிகச் சில தருணங்களுள் அதுவும் ஒன்று.
உடனே, கிரீனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ‘நீங்கள் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் நான் அசட்டையாக இருந்திருப்பேன். நீங்கள் மறுத்ததால்தான் எனக்கு ஊக்கம் கிடைத்து, அந்தப் பறவையின் குரலை உறுதிப்படுத்தினேன்’ என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன். இப்போது 100% உறுதியாகிவிட்டது. ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் மட்டுமே அந்தப் பறவை இருக்கிறது. ஒரு பெரிய காப்புக்காட்டின் பகுதி அது. இந்தப் பறவை அங்கே காணப்படுவது தெரிந்தவுடன் அதை  லங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயமாக அறிவித்துவிட்டார்கள்.

அப்படியென்றால் அந்தப் பறவையினத்தைக் காப்பாற்றுவதற்கான முறையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்றுதானே சொல்ல வேண்டும்?
அப்படி இல்லை. நாங்கள் செய்ததில் மிகவும் முக்கியமான விஷயம் அந்தப் பறவை எப்படிப்பட்ட இடத்திலெல்லாம் இருக்கும் என்பதை நிர்ணயித்ததுதான். திறந்தவெளிப் புல் பரப்புகளில் அது இருக்காது. அடர்த்தியான புதர்களிலும் இருக்காது. குறிப்பிட்ட உயரமுள்ள பெரிய புதர்கள், சிறிய புதர்கள், இடையில் திடல்கள் என்று வித்தியாசமான வாழிடம் அந்தப் பறவைக்கு அவசியம் என்பதைக் கண்டுபிடித்தோம். மலைக்கு மேலல்ல, ஊரை அடுத்து மலையடிவாரத்தில்தான் இது போன்ற வாழிடங்கள் காணப்படும்.
இது போன்ற வாழிடங்களைச் செயற்கைக்கோளின் உதவியுடன் கண்டுபிடித்து அங்கெல்லாம் அந்தப் பறவையைக் கண்டறிவதற்காக மண் சுமந்துகொண்டுபோவோம். இதன் மூலமாக அந்தப் பறவையின் கால்தடங்கள் அந்த சரணாலயத்துக்குள்ளாகவே மூன்று இடங்களில் எனக்குக் கிடைத்தன.
இப்படியாக 2005-ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக மும்பை போய்விட்டுத் திரும்பிவந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக் காட்டின் உள்ளே ஒரு பொக்லைன் நின்றுகொண்டிருந்தது. தெலுங்கு-கங்கை கால்வாய்க்காக தோண்டப்பட்டுக்கொண்டிருந்தது. அது எந்த இடம் தெரியுமா? முதன்முதலில் கலுவிக் கோடியின் காலடித் தடத்தை நான் கண்டுபிடித்த இடம்; அதன் குரலை நேரடியாகக் கேட்டறிந்த இடம் அது. எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்! எனக்கு உண்மையிலேயே அழுகை வந்துவிட்டது. உடனே பி.என்.எச்.எஸ் இயக்குநருக்கும், சுந்தர் என்ற டி.எஃப்.ஓ-வுக்கும் தகவல் தெரிவித்தேன். அந்த டி.எஃப்.ஓ துணிச்சல் மிக்கவர்.
பாசனத் துறையின் பொறியாளர்களிடம் இருந்தது பழைய வரைபடம். அரிய வகைப் பறவை ஒன்று அங்கே கண்டறியப்பட்டது, அதனால் அந்தப் பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது போன்றவை தொடர்பாகப் பழைய வரைபடத்தில் ஏதும் இல்லை என்பதால், அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரை அந்த இடத்தில் கலுவிக் கோடியை நான் பார்க்கவில்லை.
தண்ணீர் வேண்டும்தான், கால்வாய் வேண்டும்தான். ஆனால், மக்களா, காடா, பறவையா என்று என்னிடம் கேட்டால் முன்னுரிமை காட்டுக்கும் பறவைக்கும்தான். அதற்குப் பிறகுதான் மக்கள். மக்கள் உயிர்வாழ அவைதானே அடிப்படை! துரதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற புரிதல் இன்றுவரை பெரும்பாலானோரிடம் இல்லை. அதற்குப் பிறகு 2005-லிருந்து 2008வரை பதற்றமான ஒரு சூழலில்தான் அங்கே வேலைபார்த்தேன்.
                                          கலுவிக் கோடியின் தடத்தில் தெலுங்கு-கங்கை கால்வாய்

கால்வாய் அந்த வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்த முடிந்ததா?
இது சம்பந்தமாக நிறைய பேரைப் பார்த்து முறையிட்டோம். கடப்பா பகுதி காலஞ்சென்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடையது. தெலுங்கு-கங்கா திட்டத்தை அந்த வழியே கொண்டுசெல்வதில் முனைப்பாக இருந்தார் அவர். அவரிடமும் முறையிட்டோம்.
இதையெல்லாம் பற்றி அறிந்த, சாங்சுவரி ஏசியா (Sanctuary Asia) காட்டுயிர் இதழின் ஆசிரியர் பிட்டு சாகல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கலுவிக் கோடியின் வாழிடம் வழியே இந்தக் கால்வாய் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. கால்வாய் வேறு திசையில் சென்றது. சாதாரணமாக இரண்டு, மூன்று வாக்கியங்களில் சொல்லிவிட்டேன். ஆனால், இதற்கென்று நாங்கள் சந்தித்த இன்னல்களுக்கு அளவே கிடையாது.
தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?
முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது. வனத்துறையினருக்கே சரியான புரிதல் இல்லை. பெரிய திட்டங்களெல்லாம் கொண்டுவரத் திட்டமிட்டால் இதுபோன்ற இடங்கள்தான் முதல் இலக்கு. இதுபோன்ற சமவெளியில் உள்ள தரைக்காடுகள், புதர்க்காடுகள் முதலிய வாழிடங்களை, சரியாக வளராத புதர்கள்தானே என்று நினைத்து இங்கெல்லாம் கைவைத்துவிடுவார்கள்.
இயற்கையைப் பொறுத்தவரை அடர்த்தியான காடுகள் மட்டுமல்ல, புதர்க் காடுகளும், ஒன்றுமே இல்லையே என்று நினைக்கத் தோன்றும் இயற்கையான புல்வெளிகளும்கூட முக்கியம்தான். தமிழ்நாட்டில் இயற்கையான புல்வெளிகளே இப்போது கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அங்கிருந்த வெளிமான்கள், கானல் மயில்கள், சிவிங்கிப் புலிகள் போன்றவையும் மறைந்துவிட்டன.
அது போன்ற இடங்களெல்லாம் அரசாங்கப் பதிவேடுகளில் ‘பாழ்நிலம்’ (waste land) என்று குறிக்கப்பட்டிருக்கும். இயற்கையான நிலப்பரப்புகளில் எது ‘பாழ்நிலம்’? எது நல்ல நிலம்? அது போன்றுதான் கலுவிக் கோடி இருந்த இடங்களையும் ‘பாழ்நிலங்கள்’ என்று குறித்துவைத்திருந்தார்கள். கலுவிக் கோடியின் வாழிடங்களை வனத்துறைக்குக் கீழ் கொண்டுவந்த பிறகு, அந்தப் பறவையை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை.
கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?
2008 ஏப்ரலில்தான் அதன் குரலைக் கடைசியாகக் கேட்டேன். இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா டிராப்களைக் காடு முழுவதும் வைத்தும்கூட இன்றுவரை ஒரு பறவைகூட தென்படவில்லை.
அப்படியென்றால் அந்தப் பறவை முற்றிலும் அழிந்துபோய்விட்டது என்கிறீர்களா?
இப்போதைக்கு அந்த இடத்தில் இல்லாமல் போயிருக்கலாம். அந்த மாதிரி காடுகள் ஆந்திரத்தில் நிறைய இடங்களில் இருக்கின்றன. அந்தக் காடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்தக் காடுகளையெல்லாம் பாதுகாக்க வேண்டும். என்னுடைய அடுத்த முயற்சி அதுதான்.
இவ்வளவும் செய்வது எதற்காக?
அந்தப் பறவையைக் காப்பாற்ற நினைப்பது என்பது காடுகளையும் காப்பாற்றுவதுதான். அந்தக் காடுகளில் மேலும் பல உயிரினங்கள் இருக்குமல்லவா? அது மட்டுமல்லாமல் ஊர் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும், விறகு பொறுக்குவதற்கும் அங்கேதான் வருவார்கள். அதுவும் இல்லையென்றால் அடர் காடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.
நமக்கு இருப்பது ஒரே ஒரு தாஜ்மஹால்தான். தாஜ்மஹால் நமக்குக் கலாச்சாரச் சொத்து. அதுபோல, கலுவிக் கோடி நமக்கு இயற்கைச் சொத்து. இவையெல்லாம் இருப்பது நமக்குப் பெருமை. ஆகவே, இவற்றைக் காப்பாற்றுவது நமது கடமை. இப்படி ஒரு பறவை இருந்தது. அதை எங்கள் காலத்தில் அழித்துவிட்டோம் என்று நமது வருங்காலச் சந்ததியினரிடம் சொன்னால், அதைவிட நமக்கு வெட்கக் கேடு வேறு எதுவும் இல்லை.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதுவும் இந்தப் பறவை உலகிலேயே அரிய பறவைகளுள் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டும். அது நமது கடமை.
இது போன்ற உயிரினங்களுக்காகக் காடுகளைப் பாதுகாப்பதால் நேரடியாக மனிதர்களுக்குப் பயன் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வருகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை வைத்தும் சொல்லலாம். ஆனால், அதைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? உண்மையில், இயற்கையின் எந்த அம்சத்துக்கும் விலை நிர்ணயிக்கவே முடியாது!
- இந்த நேர்காணலின் விரிவான வடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் (2015) வெளியாகியிருக்கிறது.