யோனி மேடுகளின்
இணையற்ற காதலன் நான்
இந்த நற்காலையில்
என் முன்னே வருகிறாள்
ஒரு பெண்
ஒரு இனிய ஏந்தலாய்
யோனி மேடு சுமந்து
ஓடுதளமாகிறது
என் மனம்
ஏறிப் பறக்கிறது
அவ்விமானம்
விமானத்தின்
கால்களைப் பிடித்துத் தொங்குபவனுக்கு
விமானத்தின் அடிவயிறே வானம்
வானமே மழை பொழிக
வாய் திறந்து காத்திருக்கிறேன்
வானமுது நானருந்தியபின்
கைப்பற்றுதல்
தேவையில்லை எனக்கு
*
2.
யோனி மேடு
என்முன்னே நடந்துவருகிறது
கைகுவித்த பக்தன் நோக்கி
கர்ப்பகிரகமே
நடந்துவருதற்போன்று
அதுவரை கைகுவித்த பக்தன்
கண்விரித்து
அடிவயிற்றின்
தீபமாகிறான்
*
3.
யோனிச் சுடர்
எரிந்து முடியும் இடம்
வானம்
தொடங்குகிறது
*
4.
மெத்திட்ட யோனிமேட்டின்
குத்திட்டு நிற்கும் புற்கள் கண்டு
யோனிப் படுக்கையை
ஆணிப் படுக்கையாய் மாற்றும்
தவமியற்றி
அதன்மேல் படுக்கிறேன்
*
5.
உடை இருந்தால் என்ன
உள்ளே இருக்கும் சுடரின்
மனதை மறைக்க
அதனால் முடியவில்லை
சுடரின் மனது
முன்செல்கிறது
பின்னுள்ள பெண்ணைப்
பெருவெளியாக்கி
*
6.
கருவறைக்கு மேல் வைத்த
பெருமலர்
நான்
பெருமலர் பக்தன்
சிறுமன வண்டாய்ச்
சுற்றிச் சுழல்கிறேன்
பெருமலர் பரப்பே
நறுமணம் என்றும்
அறிகிறேன்
*
7.
யோனி மேட்டைக் கவனி
அதன் ஆட்படுத்தும் சக்தியைக்
கவனி
கீழுள்ள பிளவுசக்தியைப்
பார்க்காதே
மேலேயே இரு
உன் உடல் அதில்
படியும்போது
முன்னே போய்
மனம் படிகிறது
அதில் புல்வெளி முளைக்கிறது
*
8.
யோனிமேடு இனிய வரம்
இரு இதழ் குவித்து
யோனி செய்த தவம்
தவத்துக்குள் கால்வைத்துப்
படியேறி
வரத்துக்குள் சென்று
வாழ்வேன்
*
9.
யோனிமேட்டை
நான் பொருள்மயப்படுத்துகின்றேனா
உயிரில்லாத பொருளில்லை
அவனியிலே
யோனி மேடு
பொருளென்றால்
உன்னதப் பொருள்
உயிரென்றால்
உன்னத உயிர்
*
10.
எதிர்வரும் பெண்
தன் உடை திறந்து
யோனிமேடு
காட்ட வேண்டாம்
அதில் நான் முகர்ந்து
முகர்ந்த மணமதில்
துயிலுறங்க வேண்டாம்
அவ்விடம்
அது இருத்தல் போதும்
இவ்விடம்
நான் இருத்தல் போதும்
உலகம்
ஒரு இனிய யோனிமேடாக
விரியும்
*
11.
ஆழ்மனதில்
கும்மிருட்டின்
கொடுங்கனவு விரியும்
மேல்மனதின் கனவில்
விண்மீன்கள் பிறக்கும்
நானும் சேர்ந்தே
அங்கு பிறப்பேன்
*
12.
உண்மையான யோனிமேட்டை
நீங்கள் இக்கவிதைகளில்
காணவில்லை
நானும் முன்வைக்கவில்லை
அதுதான்
உடைகொண்டு நடக்கின்றதே
அதன் வெளிஒய்யாரத்துக்குத்தான்
இத்தனை மாறுவேடம்
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/register ) திரட்டியிலும் இணையுங்கள்.
ReplyDelete