Saturday, July 31, 2021

நாட்சுமே சொசெகி: கனவுகளை தியானிக்கும் எழுத்து


 

ஆசை

1.

கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களைக் கனவுகள் வெகு காலமாகக் குழம்ப வைத்தும், ஆச்சரியப்பட வைத்தும் வந்திருக்கின்றன. சீன தாவோயிச ஞானி சுவாங் ட்சுவின் கனவு மிகவும் புகழ் பெற்றது. ஒருமுறை சுவாங் ட்சு ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தார். மிகவும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் விரும்பிய இடமெல்லாம் பறந்து திரிந்தார். ஆனால், கனவில் வண்ணத்துப்பூச்சியாக வந்த சுவாங் ட்சுவுக்கு, தான்தான் சுவாங் ட்சு என்பது தெரியாது. திடீரென்று விழிப்பு வந்துவிட அந்த வண்ணத்துப்பூச்சி தான்தான் என்று அறிந்துகொள்கிறார். ஆனால், அவருக்கு ஒரு சிக்கல்: தான்தான் சுவாங் ட்சு என்பதை அறியாத வண்ணத்துப்பூச்சியைத் தான் கனவுகண்டேனா அல்லது தன்னை சுவாங் ட்சுவாக எண்ணி வண்ணத்துப்பூச்சியொன்று தன்னைக் கனவுகண்டுகொண்டிருக்கிறதா?

உலக-இந்திய வேதங்கள், புராணங்களிலும் கனவுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. சங்க இலக்கியத்திலும் கனவுகள் இடம்பெறுகின்றன. 

கேட்டிசின் வாழி தோழி, அல்கல்
பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே, குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியேன் மன்ற, அளியேன் யானே.
     (குறுந்தொகை 30, கச்சிப்பேட்டு நன்னாகையார்)

என்ற பாடலில் பொய் சொல்லுதலில் வல்லவனான தலைவன் தன்னைத் தழுவுவது போல தலைவி கண்ட ஒரு கனவானது மருட்சியை ஏற்படுத்த அதை உண்மையென்று நினைத்து அவள் மெத்தையைத் தடவிக்கொண்டிருக்கிறாள். 

ஆண்டாளின் ‘நாச்சியார் திருமொழி’யில், 

‘வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்’

என்று தொடங்கும் பாடலிலிருந்து பத்துப் பாடல்களும் கண்ணனை ஆண்டாள் மனம் முடிப்பது போன்ற கனவுகளை அழகாகப் பாடுகின்றன.

நவீனத் தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கத்திலேயே சாத்தனின் கனவுடன் வருகிறார் புதுமைப்பித்தன் (சிற்பியின் நரகம்). கனவுக்கும் நனவுக்கும் இடையே கோடு அழிந்ததுபோன்ற கதைகளை எழுதியவர் மௌனி. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலில் அலங்காரத்துக்கு வரும் கனவுகளை அவளது கணவன் தண்டபாணி இப்படி வியப்பார்: “நமக்குக் கனவு வந்தால் பொத்தாம் பொதுவாக ஏதோ உருவம் வருகிறது – போகிறது. இவளுக்கு மட்டும் எப்படி இத்தனை நுணுக்கமாக வர்ணங்கள், நகைகள், எல்லாம் வருகின்றன என்று ஆச்சரியப்படுவார். தேவர்கள், தோட்டங்கள், நட்சத்திரங்கள், கடல், கோபுரம், கப்பல், ஐந்தாறடித் தாமரைகள் – இப்படித்தான் வரும்.’ பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’யில் கனவுக்கும் நனவுக்கும் இடையிலான மயக்கம் போன்று எழுதப்பட்டிருக்கும் ‘நீலவேணியின் பாதை’ உலக இலக்கியத்தின் அற்புதமான பகுதிகளுள் ஒன்றாக வைக்கப்பட வேண்டியது. அவரது ‘பாகீரதி மதியம்’ நாவலில் பாகீரதிக்கு வரும் கனவில் பெரிய நதிக் கரையின் மணற்படுகையில் (ஏற்கெனவே இருந்த நதிக்கரையல்ல, இனிமேல் உருவாகப்போகும் நதிக்கரைக்கென்று முன்கூட்டியே இருக்கும் மணற்படுகை!) அவளுக்கும் உறங்காப்புலிக்கும் இடையே நிகழும் புணர்ச்சி மாயாஜாலமாக இருக்கும்.  

கனவுகளைப் பற்றி விரிவான அலசலை நவீன அறிவியலில் முதலில் செய்தது சிக்மண்டு ஃப்ராய்டுதான். அவரது ‘கனவுகளின் விளக்கம்’ நூலில் கனவுகளைப் பற்றித் தான் நடத்திய ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் வெளியிட்டார். கனவுகள் என்பவை அடக்கிவைக்கப்பட்ட அல்லது நிறைவேறாத ஆசைகளின் வெளிப்பாடு என்பது அவரது முடிவு. ஃப்ராய்டு காலத்திலிருந்து இன்றைய அறிவியல் வெகு தூரம் நகர்ந்துவிட்டது. நியூரான்கள், உயிர் வேதியியல் போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் இன்னும் மூளை, மனது, கனவு போன்றவற்றை மனிதர்கள் மிகக் குறைந்த அளவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். கனவுகளின் மர்ம வசீகரமும் பிடிபடாத்தன்மையும்தான் படைப்பாளிகளைக் கவர்ந்துவந்திருக்கிறது. கனவு என்றால் போர்ஹேஸின் படைப்புகள் நினைவு வராமல் இருக்க முடியாது. கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றி பெற்ற வெகு சிலரில் அவரும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள் இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். நிகோஸ் கஸன்சாகிஸும் தனது புனைவுகளில் பலவற்றுக்குக் கனவுகள் முக்கியத் தூண்டுதல் என்று கூறியிருக்கிறார். 

2. 

ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவர் நாட்சுமே சொசெகி (1867-1916). ஹருகி முரகாமிக்கு மிகவும் பிடித்த ஜப்பானிய எழுத்தாளர் நாட்சுமே சொசெகிதான். முரகாமியின் ‘காஃப்கா கடற்கரையில்’ நாவலின் நாயகனான காஃப்காவுக்கும் பிடித்த எழுத்தாளர் சொசெகிதான் என்று முரகாமி எழுதிய பிறகு உலகம் முழுதும் அவருடைய படைப்புகளின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சொசெகியின் ‘பத்து இரவுகளின் கனவுகள்’ நூல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் மரபில் ஆழமாக வேர்கொண்டிருக்கும் ஒரு ஜப்பான், மேற்கத்தியக் கலாச்சாரத்தை எதிர்கொள்ளும் ஒரு சந்திப்பில் எழுதப்பட்ட கனவுக் கதைகள் இவை. இறந்துபோன காதலி மீண்டும் வருவாள் என்று அவள் கல்லறைக்கு அருகே காத்திருக்கும் காதலன், துறவியர் மடத்தில் ‘அகவொளி’ (satori) அடையத் துடிக்கும் சாமுராய், பார்வையற்ற சிறுவனைச் சுமந்துசெல்லும் தந்தை, தனது ‘உந்தி’க்குள் வாழ்பவரும் ‘அப்பால்’ நோக்கிச் செல்பவருமான கிழவர், கடவுள்களின்  யுகத்தில் போரில் தோற்கடிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பவன் – அவனைத் தேடிக் குதிரையில் வரும் மனைவி, தொன்மச் சிற்பி உன்கேயைப் பின்பற்றி சிற்பம் வடிக்க நினைக்கும் ஒருவன், கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்பவன், சிகையலங்கார நிலையத்தில் சர்ரியல் அனுபவங்களை எதிர்கொள்பவன், தன் கணவன் கொல்லப்பட்டது தெரியாமல் அவனுக்காகக் குழந்தையுடன் பிரார்த்தனை செய்பவள், ஒரு யுவதியின் பின்னால் சென்று தொலைந்துபோய்த் திரும்பிவந்தவன் ஆகியோரைப் பற்றியவைதான் இந்தப் பத்துக் கனவுகள்.

நாட்சுமே சொசெகி இந்தக் கனவுகளைக் கதைகளாக முன்வைக்கவில்லை; என்றாலும் அவை ஓரளவு கதைத் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. கனவைப் பொறுத்தவரை கதையின் சம்பவத் தொடர்ச்சியை விட மூட்டமான கனவுச் சூழலும் அதிலிருந்து எழும் அனுபவமும் முக்கியம். இந்த வேறுபாட்டை உணர்ந்துகொண்டால்தான் சொசெகியின் பத்துக் கனவுகளையும் ரசிக்க முடியும்.

இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கனவுகள் ஜப்பானிய மரபின் கூறுகளை ஆழமாகக் கொண்டிருக்கின்றன. சாமுராய், புத்த மடம், ஜப்பானிய தொன்மப் பாத்திரங்கள், ஜென் படிமங்கள், ஜப்பானிய ஆண்டுகள் போன்றவைத் திரும்பத் திரும்ப இந்தக் கனவுகளில் இடம்பிடிக்கின்றன. சொசெகியின் மொழி நடை எளிமையான, அழகான, கச்சிதமான சொற்களால் கவிதைக்கு அருகில் பல இடங்களில் சென்றிருக்கிறது. ‘வாளின் நுனியை நோக்கிக் கொலைவெறி ஒரு புள்ளியாகச் சுழன்றது’, ‘நீர்ப்பல்லியின் வயிற்றுப் பகுதியில்  காணப்படும் செம்புள்ளிகளைப் போல சிவந்திருந்த வரிவடிவங்கள் அவை.’ இவை போன்ற அழகான பல சொற்றொடர்கள் வாசிப்பின்பத்தைக் கூட்டுகின்றன.

முதல் கனவில் காதலி இறந்துகொண்டிருக்கிறாள். தான் இறந்த பிறகு சிப்பியொன்றால் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டு, அங்கே அடையாளமாக விண்மீன் துண்டொன்றை நட்டுவைக்கச் சொல்கிறாள். காத்திருந்தால் நூறு ஆண்டுகள் கழித்துத் தான் வருவதாகக் கூறுகிறாள். நாட்கள், ஆண்டுகளின் கணக்கை இழந்து காதலன் காத்திருக்கிறான். மெய் வாழ்க்கையில் சாத்தியமற்ற ஒன்றைக் கனவு வழங்குகிறதல்லவா! ஒருவேளை யதார்த்தத்தின் லட்சிய வடிவம்தான் கனவு வாழ்க்கையோ?

ஒரு கனவில் அகவொளி அடைய விரும்பும் சாமுராய் ‘இன்மை’ என்ற சொல்லைப் பலமுறை உச்சரிக்கிறான். அப்படி உச்சரிக்கும்போதெல்லாம் ஊதுபத்தியின் நறுமணம் அவனது நாசியைத் துளைக்கிறது. இனிய மணம்தான். ஆனால், இன்மையை அடைவதற்கு எத்தகைய இடையூறு செய்கிறது. இனிய மணம் என்பதற்குப் பதிலாக ‘இனிய மனம்’ என்று படித்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. மனம்தானே மணம்! 

இன்னொரு கனவில் தன் விடுதிக்கு வந்து மதுவருந்தும் கிழவனிடம் ‘எங்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று அந்த விடுதியின் சொந்தக்காரி கேட்கிறாள். அந்தக் கிழவன், ‘நான் அப்பால் செல்கிறேன்’ என்கிறார் அவர். படிப்பவருக்கு நொடி நேர ‘அகவொளி’யைத் தரும் பதில் இது. இப்படித்தான் ஜென் குருக்கள் தங்கள் சீடர்களுக்குக் குயுக்தியான பதில்களால் அகவொளியை ஏற்படுத்துவார்கள்.

ஒரு கதையில் அந்தகனாகிய தன் 6 வயது மகனைச் சுமந்துகொண்டுசெல்கிறான் ஒருவன். அந்தச் சிறுவன் முக்காலமும் அறிந்த முனிவன் போல் பேசிக்கொண்டே செல்கிறான். கண்ணாடியின் துல்லியத்துடன் எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் அவன், தனது தகப்பனின் ‘கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தின் மீது இரக்கமற்ற ஒளியைப்’ பாய்ச்சுகிறான். கனவின் இறுதியில் அவன் காட்டும் கடந்த காலம் அவனுடைய தகப்பனின் மீது  கற்சிலையாக அழுத்துகிறது. 

இரண்டாவது கனவின் சாமுராயால் இன்மையை அடைய முடியவில்லை என்றால் ஆறாவது கனவில் வரும் உன்கேய் சிற்பி இன்மையை அடைந்ததால்தான் பன்னெடுங்காலமாக உயிர்வாழ்கிறான். அந்தச் சிற்பி நியோ சிற்பங்களைச் செதுக்குவதை வேடிக்கை பார்க்கும் பாத்திரமும் மரத் துண்டுகளிலிருந்து நியோ சிற்பங்களைச் செதுக்க முயன்று தோற்றுப் போகிறான். அதற்குக்  காரணம் அவனும் இன்மையை அடையவில்லை. தான் இல்லாமல் போகும் சிற்பியால்தான் தனது உளிக்குப் பார்வை கொடுக்க முடியும்; அப்படிப்பட்ட உளியால்தான் எந்த மரத்திலும் சிற்பத்தைப் பார்க்க முடியும்.

பத்தாவது கனவின் நாயகன் ஷொடாரோ மார்கெரித் யூர்ஸ்னாரின் ‘மோகினிகளை நேசித்த மனிதன்’ கதையில் வரும் இளைஞன் பனோஜ்யோடிஸை நினைவுபடுத்துகிறான். அழகிய யுவதியின் பின்னால் சென்று மாயமான ஷொடாரோ ஒரு வாரம் கழித்து வீடு திரும்புகிறான். அந்த யுவதி அவனை மலை விளிம்புக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே குதிக்கச் சொல்கிறாள், இல்லையென்றால் அவன் முகத்தைப் பன்றி நக்கிவிடும் என்று எச்சரிக்கிறாள். ஆயிரக்  கணக்கான பன்றிகளுடன் அவன் போராடுவது ஒரே நேரத்தில் திகில் உணர்வையும் மாய உணர்வையும் ஊட்டுகிறது.    

கனவுகளுக்கு அறிவியலர்கள் எந்த விளக்கத்தை வைத்திருந்தாலும் சொசெகி கனவுகளை ஒரு ஜென் தியானம் போல் ஆக்கியிருக்கிறார். இந்தக் கனவுகளினூடாக காதல், காலம், மரணம், ஆன்மிகத்தின் உச்சவிழிப்பு (அகவொளி) போன்றவற்றை சொசெகி தியானித்திருக்கிறார்.  

மொழிபெயர்ப்பாளர் கே.கணேஷ்ராம் இந்தக் கனவுகளை அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். ‘பைன் மரத்தின் பச்சை இலைப் பரப்பும், வாயிற்கதவின் மினுமினுக்கும் சிவப்பு மெருகுப் பூச்சும் , முரண்படும் நிறவேற்றுமையில் முயங்கி அழகாகத் தோற்றமளித்தன.’ என்பது போன்ற அழகிய சொற்றொடர்கள் இந்தத்  தொகுப்பு முழுவதும் உள்ளன. ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் வந்த பிறகு அழகும் எளிமையும் எஞ்சியிருப்பது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. அதேபோல், புத்தகத் தயாரிப்பு இந்தப் புத்தகத்தை வாசிப்பதை மட்டுமல்லாமல் பார்ப்பதையும் இனிய அனுபவமாக ஆக்குகிறது.பத்து இரவுகளின் கனவுகள்

நாட்சுமே சொசெகி

தமிழில்: கே.கணேஷ்ராம்

நூல்வனம் வெளியீடு

விலை: ரூ.150

தொடர்புக்கு: 9176549991 


No comments:

Post a Comment