Tuesday, January 21, 2020
கவிதை தீப்பந்தம் போன்றது! குட்டி ரேவதி பேட்டி
ஆசை
(18-01-20 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி)
இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதையுலகில் தீவிரமாகச் செயல்பட்டுவருபவர் குட்டி ரேவதி. இதுவரை இவரது 12 கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. தற்போது குட்டி ரேவதியும் ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுதி வெளியாகியிருக்கிறது. கவிஞர், சிறுகதையாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர் என்று பல முகங்களைக் கொண்ட குட்டி ரேவதியுடன் உரையாடியதிலிருந்து...
கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்?
அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால் எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்தமருத்துவத்தில் தமிழ் மொழிப்பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை அள்ளிவந்து எனக்கு வழங்கியது. கூடவே, 90- களில் திருநெல்வேலியில் நிலவிய இலக்கியப் பண்பாடு எனப் பல காரணங்கள் ஒன்றிணைந்துதான் கவிதைக்குள் நுழைந்தேன்.
நீங்கள் எழுத வந்த காலத்தின் பெண் கவி மொழியும் தற்போதைய பெண் கவி மொழியும் மாறியிருக்கிறது ௭ன்று நினைக்கிறீர்களா?
பெண் கவி மொழி காலந்தோறும் நிறைய மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய பரிமாணம் பெறுகிறது. உள்ளடக்கங்களில், கவிதை எழுத வேண்டிய நோக்கங்களில், மொழியின் திறத்தில் என எல்லாவற்றிலும். தற்போதைய பெண் கவிஞர்கள் மொழியை எளிதான ஓர் ஊடகமாகப் பயன்படுத்தமுடிகிறது. நாங்கள் எழுத வந்தபோது, அது ஒரு போராட்டத்திற்கான வேகத்துடன் இருந்தது. எழுதுவதே விடுதலையாக இருந்த காலகட்டத்திலிருந்து விடுதலைக்கான குரலாய் கவிதையை ஆக்கும் சவால், இன்றைய பெண் கவிஞர்களின் செயல்பாட்டில் இருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக ௧விதை எழுதி வருகிறீர்கள். இந்தப் பயணத்தில் கவிதை உங்களுக்கு என்ன விதமான சாத்தியங்களை, திறப்புகளைத் தந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். பெருவாரியான ஆண் எழுத்தாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்த என் கவிதைகளை தற்போது ஜீரோ டிகிரி பதிப்பகம் 900 கவிதைகள் கொண்ட இரு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. இந்தக் கவிதைகளை ஒரு கல்லூரி மாணவன் எந்த மனத்தடையும் சுய இறுக்கமும் இன்றி வாசிக்கத் தொடங்குகிறான்.
தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறேன். கவிதைகள் வழியாக, நம் தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு போராட்ட காலகட்டங்களின் ஊடாக நான் என் மொழியின் துணை கொண்டு கடந்து வந்திருக்கிறேன். இயன்றவரை, கவிதை மொழி சார்ந்த அத்தனை சாத்தியங்களையும், விடுதலைக்கான வழிகளையும் தொடர்ந்து கண்டறிந்துகொண்டே இருக்கிறேன்.
புனைவை முயன்று பார்த்தாலும் கவிதை உங்கள் பிரத்யேக தேர்வாக இருக்கிறது அல்லவா? அது ஏன்?
ஆமாம்! ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. மூன்றாவதாக, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘மீமொழி’, வெளிவரவிருக்கிறது.
உயிர்வாழ, தனிமனித மறுமலர்ச்சிக்கு எப்போதும் கவிதையுடன்தான் ஏதேனும் செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. கவிதை, தீப்பந்தம் போன்றது. எனக்கு நானே வழியைக் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் கவிதை தரும் ஊக்கம் எல்லா காலங்களிலும் தேவையாக இருக்கிறது. சமூக மாற்றங்களை உணர்ந்துகொள்ள, அநீதிகளை எதிர்க்க, தனிமனித வாழ்வைத் தாண்டிச் சமூக உறவுகளைப் பேண என எல்லாவற்றுக்கும். கவிதைக்குள் ஒரு குரல், தீவிரத்தின் தீவிரமான குரல் ஒன்று தீப்பிழம்பு போல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
இலக்கிய உலகில் பெண்களுக்கான இடம், அங்கீகாரம் எப்படி இருக்கின்றது?
எப்போதுமே இலக்கிய உலகம் பெண்களுக்கான அங்கீகாரத்தையும் இடத்தையும் கொடுப்பதில் தயக்கத்துடன் மனத்தடையுடன்தான் செயல்படுகிறது. ஆனால், அதை எதிர்பார்த்து இன்று எந்தப் பெண் எழுத்தாளரும் செயல்படுவதில்லை. கறாரான சமூக விமர்சனங்களை பெண்கள் தங்கள் எழுத்தில் முன்வைத்துக்கொண்டேயிருப்பதும், அதற்கான வாய்ப்புகளைத் தம் அளவில் உருவாக்கிக்கொண்டே இருப்பதும், சமூகத்தை அதை நோக்கி இணங்கச் செய்வதும்தான் அங்கீகாரங்களில் சேரும். எனில், பெண் எழுத்து பெருமளவில் இதை வென்றிருக்கிறது.
'முலைகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது கடும் எதிர்ப்பை சந்தித்தீர்கள். அதனுடன் ஒப்பிடும்போது இன்றைய சூழல் எப்படி இருக்கிறது?
இருபது ஆண்டுகளில் பொதுச்சமூகம் பெண் எழுத்தை அணுகுவதில் நிறைய மாறியுள்ளது. பெண் எழுத்துதான் இன்று இலக்கியத்தில் முதன்மையானதாக இருக்கிறது. பெண் வாசகர்கள் இந்தப் புத்தகக் காட்சியில் அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனில், பெண் எழுத்தின் செயல்பாடும், பெண்கள் மொழியை நோக்கி வேகமாக நகரும் சமூக அசைவும்தான் காரணம்.
இன்று வெகு எளிதாக, ஒரு பெண் தன் கவி ஆளுமையைக் கையாள முடிகிறது. கவிதையில் சமூகக் கட்டமைப்பை எழுதுவது அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றைய பெண் கவிதை, சாதி, மதம், கடவுள், திருமணம் என எந்தச் சமூக நிறுவனத்தையும் கவிதையில் விமர்சிக்கும் பொதுவெளியும் பயிற்சியும் அழகு நிலையும் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றி நிறைய பெண் கவிஞர்கள் நிலைத்த தீவிரத்துடனும், பொதுப்பொருள் சார்ந்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், பெண் எழுத்தைக் கவனப்படுத்துகின்றன. பதிப்பாளர்கள், பெண் படைப்புகளை முன்னணிப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். சமூகத்தில் பெண் கவிதை ஒரு முழக்கம் போல், அழியாத பாடல்போல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் இன்னும் கவிதை வழியாக நாம் மாற்றியமைக்க வேண்டிய சிந்தனைகளும் போக்குகளும் நிறைய இருக்கின்றன.
உங்கள் திரைப் பயணம் எப்படி இருக்கிறது?
சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. ‘சிறகு’, என்ற என் முதல் படத்தை இயக்கிவருகிறேன். எப்போதுமே திரைத்துறையில் நான் இயங்க விரும்பினேன். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் பணியாற்றத் தொடங்கிய பின்பு அது சீரான தொழில் துறை சார்ந்த பயணமாக மாறியது. எதைச் செய்தாலும் எப்படிச் சிறப்பாக செய்வது என்று கற்றுக்கொடுக்க, அவருக்கு நிகர் அவரே. விரைவில், எனது ‘சிறகு’, திரையைத் தொடவிருக்கிறது.
உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார்? சமகாலத்தில் நம்பிக்கை தருபவர்கள் யார்?
என் ஆதர்ச எழுத்தாளர் கவிஞர் பிரமிள்தான். காரணங்கள், நான் எழுத வந்தபோது சந்தித்த எதிர்ப்பின் அரசியலை, சாதிய ஒடுக்குமுறை அரசியலை அவர் எழுத்து வழியாகவே தெளிந்தேன். கவிதை மொழியை அவர் அளவுக்குக் கூர்மையான சமூக ஆயுதமாக மாற்றியவர் எவரும் இல்லை. கவிஞர் தேவதேவனின் சமரசமின்மை, அரிய ஒரு சமூக விழுமியம். எவரிடமும் காணக் கிடைக்காதது. நான் என்றென்றும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒன்று.
என்னுடன் எழுத வந்தவர்களை, இன்றைய இளங்கவிஞர்களைத் தொடர்ந்து நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் திசையும் மொழியின் போக்கும் எங்கே மாறுகின்றன என்பதை உணர்த்த வல்ல அரிய உரைகற்களாக தற்காலக் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறென். பெண் கவிஞர்களில், சஹானா, மனுஷி, முபீன் சாதிகா, தனசக்தி, யாழினி ஶ்ரீ, தீபு ஹரி, தென்றல் சிவக்குமார், கயல், சிங்கப்பூர் கனகலதா என்று நிறைய பெண் கவிஞர்களைப் பின்தொடர்கிறேன். சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து கவிஞராக உருவெடுத்திருக்கும் சுபா செந்தில்குமாரின் கவிதைகள் நவீனக் கவிதையின் அடுத்த தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. புதிய தலைமுறையினர் ஒவ்வொருவரின் கவிதை வெளிக்குள்ளும் பயணிப்பது, நான் மேற்சென்று எழுதிச்செல்ல உதவுகிறது.
Friday, January 17, 2020
பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது!
ஜெயரஞ்சன் பேட்டி
ஆசை
(17-01-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான பேட்டி இது)
பொருளாதாரம் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கிறது, அரசின் பொருளாதார முடிவுகளெல்லாம் எப்படிக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எல்லோருக்கும் புரியும் விதத்தில் எழுதுவதில் வல்லவர் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன். பணமதிப்பு நீக்கத்தின்போது இவர் எழுதிய ‘கருப்புப் பணமும் செல்லாத நோட்டும்’ நூல் பெரும் புகழ்பெற்றது. தற்போது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற இவரின் புதிய புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலில் அவருடன் உரையாடியதிலிருந்து...
தமிழில் பொருளாதாரம் சார்ந்த எழுத்துகளின் நிலை எப்படி இருக்கிறது?
ரொம்பவும் குறைவுதான். நான் படிக்கும்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தமிழ் வழிக்கல்விக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தது. முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை ஒருசில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்தார்கள். அதற்குப் பிறகு படிக்கவே முடியாத அளவுக்கு மோசமான மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு பொருளாதாரம் சார்ந்த எழுத்துகள் இரண்டு வகையாக இருந்தன. முதல் வகை நிதி ஆலோசகர்களின் எழுத்து. பங்குச் சந்தையில் எப்படிப் பணம் போடுவது, தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்பது போன்று எழுதுபவர்கள் அதிகம். அதை விட்டால் இரண்டாவதாக, இடதுசாரி சிந்தனையாளர்களின் எழுத்து. இதைத் தாண்டி, பொருளாதாரத்தைத் தமிழில் விரிவாக விளக்கி எழுதியதுபோல் எனக்கு யாரும் நினைவில் இல்லை.
எழுத ஆரம்பித்தது எப்படி?
மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்தான் என்னை எழுத வைத்தன. 1980-களில் ‘எம்ஐடிஎஸ்’-ல் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். என்னைச் சந்திக்க வரும் ஊடக நண்பர்கள் பொருளாதாரத்தைப் பற்றிக் கட்டுரை கேட்பார்கள். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். குறிப்பாக, வேளாண் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் பற்றி அதிகம் எழுதினேன். நான் மாணவனாக இருந்தபோது காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது காவிரியைப் பற்றி எழுதினேன். இதெல்லாம்தான் தொடக்கப் புள்ளி. அதற்குப் பிறகு, முப்பதாண்டு காலம் தேசிய, சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனங்களில் முழுநேர ஆய்வுப் பணியில் இருந்துவிட்டேன். ஆனால், வெகுஜன மக்களுக்குப் பொருளாதார சிந்தனையைக் கொண்டுசெல்லாமல் மேல்மட்ட நிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தேன். அந்தச் சூழலில், தொலைக்காட்சி ஊடகங்கள் என்னை இழுத்துக்கொண்டுபோய் விவாதங்களில் உட்கார வைத்தன. அதன் தொடர்ச்சியாக, ‘மின்னம்பலம்’ இணையதளத்தில் எழுதலானேன். அப்படித்தான், பணமதிப்பு நீக்கத்தின்போது 60 நாட்களில் 100 கட்டுரைகள் எழுதினேன். பின்னால், அது புத்தகமாகவும் வந்தது. நான் எழுதிய பிற பொருளாதாரக் கட்டுரைகளையும் தொகுத்து ‘இந்தியப் பொருளாதார மாற்றங்கள்’ என்றொரு புத்தகத்தையும் வெளியிட்டோம்.
சமீப காலமாக நிறைய பொருளாதாரப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் படுகின்றன அல்லவா?
நல்ல புத்தகங்கள் வருகின்றன. தாமஸ் பிக்கட்டியின் நூல் தமிழில் வந்திருக்கிறது. ஒரு சாதாரண வாசகரால் பிக்கட்டியை எடுத்தவுடன் படிக்க முடியாது. ஆகவே, இது போன்ற புத்தகங்களில் நான்கைந்து பக்கங்களில் ஒரு எளிமையான அறிமுகம் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய வளர்ச்சி என்கிறோம், ஆனால் இந்த வளர்ச்சியால் யாருக்குப் பயன் என்று கேட்டுப் பார்க்க வேண்டும், கடந்த 20 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது, இதில் சாதாரண மக்களின் வருமானம் எப்படி இருக்கிறது, செல்வந்தர்களின் வருமானம் எத்தனை மடங்காக ஆகியிருக்கிறது; இதைப் பற்றித்தான் தாமஸ் பிக்கெட்டி எழுதியிருக்கிறார் என்று சொன்னால் வாசகர்கள் உள்ளே வருவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
யாருடைய பொருளாதாரச் சிந்தனைகள் தமிழுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
வலதுசாரிச் சிந்தனைகளும், அதற்கு மாற்றாக இருக்கும் இடதுசாரிச் சிந்தனைகளும் வர வேண்டும். இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான மோதல்கள்தான் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை மக்களே முடிவுசெய்துகொள்வார்கள். வலதுசாரிச் சிந்தனையைப் பொறுத்தவரை, அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று யார் சொன்னார்களோ அவர்களே, ‘நாம் ரொம்பவும் அதிகமாகப் போய்விட்டோமோ’ என்று கவலை தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் பணக்காரர் களான பில் கேட்ஸ் போன்றவர்கள், ‘எங்களிடம் அளவுக்கதிகமாகப் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும்’ என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பன்னாட்டு நிதியமே, ‘நாம் ரொம்பவும் அதீதமாகப் போய்விட்டோமோ’ என்று அவர்களுடைய பத்திரிகையில் எழுதுகிறது. கட்டுக்கடங்காத ஏற்றத்தாழ்வு இருக்கும்போது முதலாளித்துவமே தன்னைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் ஒன்றும் அற உணர்ச்சியால் இப்படிக் கவலைப்படவில்லை. அமைப்புக்கே ஆபத்து வந்துவிடும்போல் இருக்கிறதே என்றுதான்.
தமிழ்நாட்டின் பொருளாதார முன்னெடுப்புகள் எப்படி இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்திருக்கின்றன என்ற முறையில் விரிவாகப் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?
தமிழ்நாடு இவ்வளவு வளர்ந்த மாநிலமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம் சமூக நீதிதான். அது இல்லை என்றால் கேரளம், தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் இருப்பதுபோல் வெகுசிலருக்கான வளர்ச்சியாக மட்டுமே இருந்திருக்கும். அதுதான் மக்களை அடுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியபடி போய்க்கொண்டே இருக்கிறது. அப்படி நகர்த்தும்போது அவர்கள் பல பிரச்சினைகளிலிருந்து விடுபடுகிறார்கள். அப்படி விடுபடும்போது அவர்களுடைய பணமும் சக்தியும் நேரமும் அவர்கள் அடுத்த கட்டங்களை நாடிச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. அதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் சாப்பாட்டுக்கு மற்றவர்களை சார்ந்திருந்த சூழல் இருக்கிறதல்லவா! எங்கள் ஊர் திருவையாறு பக்கத்தில், காவிரிக் கரையில் இருக்கிறது. தண்ணீர் அவ்வளவு ஓடும் அந்தப் பகுதியிலேயே வருஷத்தில் 110 அல்லது 120 நாட்கள்தான் விவசாய வேலை இருக்கும். மீதி நாள் வேலை இருக்காது. வேலை இருந்தால்தான் சம்பளம். அந்த மாதிரி சூழல் இருந்த காலத்தில் ஏப்ரல் வந்தால் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கும். ஜூன் 1-ம் தேதியெல்லாம் சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றும் இருக்காது. அப்போது ஆண்டை வீட்டுக்குப் போய்தான் தலையைச் சொறிந்துகொண்டு நிற்க வேண்டும். அவர்களும் உடனேயே கொடுத்துவிட மாட்டார்கள். கூனிக் குறுக வைத்து ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அதற்கப்புறம்தான் இரண்டு கலம் நெல் தருவார்கள். அண்ணாவும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுமாகச் சேர்ந்து அந்தச் சூழல் அடியோடு புரட்டிப்போடப்பட்டது. சாப்பாட்டுக்காக யாரும் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை என்றானது. பசி, பட்டினியைத் தமிழகம் விரட்டியடித்த வரலாறு முக்கியமானது. ‘எல்லோரையும் சோம்பேறிகளாக ஆக்கிவிட்டார்கள். யாரும் வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள்’ என்று சொல்வது மேல்குடிப் பார்வை மட்டுமல்ல, மத்தியதர வர்க்கத்துக்கும் அந்தப் பார்வை ரொம்பவும் வசதியாக இருக்கிறது. இப்படி இருக்கும்போதுதான் திராவிட இயக்கத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
உங்களது ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ புத்தகம் பல முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. எப்படி வந்தது இந்த யோசனை?
நான் ‘எம்ஐடிஎஸ்’-ல் சேர்ந்தபோதிலிருந்தே ஒரு விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்தது. அது நிலச்சீர்திருத்தம் தொடர்பானது. அப்போதெல்லாம் நிலச்சீர்திருத்தம் என்றால் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. இப்போது சீர்திருத்தம் என்றால் இல்லாதவர்களிடம் பிடுங்கி இருப்பவர்களுக்குக் கொடுப்பதாக மாற்றிவிட்டார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாதில் உள்ள ‘தேசிய ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்’ ஒரு நல்கை கொடுத்தது. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் குத்தகைதாரர்களின் வாழ்க்கை நிலை என்னவாகியிருக்கிறது என்பதுதான் எனது ஆய்வு. அதற்காகப் போய் பார்க்கும்போது எப்படி எல்லாம் தலைகீழாக மாறிப்போயின என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பெரிய அறிக்கை ஒன்று எழுதினேன். அதன் தமிழாக்கம்தான் ‘தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை’ என்ற புத்தகம். யாரிடமிருந்து யாருக்கு நிலம் போனது, எந்தக் காலகட்டத்தில் போனது, சட்டங்கள் என்ன செய்தன, சட்டங்களைத் தாண்டி சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையெல்லாம் இதில் சொல்லியிருக்கிறேன்.
உங்களின் அடுத்தடுத்த எழுத்துத் திட்டங்கள் என்னென்ன?
என்னுடைய ஆய்வுப் பணிகளைக் குறைத்துக்கொண்டு எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது. அடுத்த புத்தகக்காட்சிக்குள் தமிழகப் பொருளாதார நிலை பற்றி இரண்டு நல்ல புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற யோசனை இருக்கிறது.
Monday, January 13, 2020
ஆன்மா என்னும் புத்தகம்: நாமே புத்தர்
என்.கௌரி
(13 டிசம்பர், 2018-ல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரை)
அமைதியை அடைய வேண்டுமென்றால், நாமே அமைதியாக இருக்க வேண்டும். இந்த எளிமையான உண்மையைத்தான், பவுத்தத் துறவியும் அறிஞரும் கவிஞரும் அமைதிக்கான செயல்பாட்டாளருமான திக் நியட் ஹான். Being Peace (‘அமைதி என்பது நாமே’) புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் 1987-ம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 2,50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் இந்த ஆண்டு (2018) வெளியான இந்தப் புத்தகத்தை ஆசைத்தம்பி மொழிபெயர்த்திருக்கிறார்.
நாம் உலகத்தை மாற்ற விரும்பினால், முதலில் அதை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று திக் நியட் ஹான் சொல்கிறார். நமக்குள் எப்போதுமே இருக்கும் உண்மையான அமைதியை, அதாவது நமது புத்த இயல்பை விழிப்படையச் செய்வதைப் பற்றி அவர் இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்.
இந்த விழிப்புணர்வு எவ்வளவு வலிமையானது என்பதை அவரது தெளிவான விளக்கங்கள் நமக்குப் புரியவைக்கின்றன. நம் மன அமைதிதான் நம் அனைத்துச் செயல்களுக்குமான வழிகாட்டியாக இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. பவுத்தம், தியானம் பற்றிய அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
மலரென மலர முடியும்
“நாம் மனத்தில் அமைதியுடன் இருந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், மலரென மலர முடியும் நம்மால், நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும், நம் சமுதாயம் முழுவதற்கும் நமது அமைதியால் பயன் கிடைக்கும்” என்று திக் நியட் ஹான் விளக்குகிறார்.
இந்தப் புத்தகம், ‘துன்பப்படுதல் மட்டும் போதாது’, ‘மூன்று ரத்தினங்கள்’, ‘உணர்வுகளும் புலனறிவும்’, ‘பயிற்சியின் அடிப்படை’, ‘சமாதானத்துக்காகப் பாடுபடுதல்’, ‘சகவாழ்வு’, ‘தினசரி வாழ்க்கையில் தியானம்’ என்ற ஏழு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கிறது.
நாம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இல்லாவிட்டால், நம்மால் நம் அமைதியையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. வாழ்க்கை என்பது அச்சமூட்டக்கூடியது, அற்புதமானது என இரண்டுமானதாகவும் இருக்கிறது. நாம் தியானம் செய்வதன் நோக்கம் என்பது இந்த இரண்டு அம்சங்களையும் எதிர்கொள்வதற்காகத் தான் என்று அவர் விளக்குகிறார். நாம் புன்னகைப்பதாலும் மூச்சு விடுவதாலும் அமைதியாக இருப்பதாலும்தான் நம்மால் நமக்குள் அமைதியைக் கொண்டுவர முடியும்.
புன்னகையும் மூச்சுப் பயிற்சியும்
நாள் முழுவதும் நாம் புன்னகைசெய்வதைப் பயிலலாம். புன்னகைக்க முயலும்போது முதலில் நமக்கு அது கடினமானதாகத் தோன்றலாம். அப்படி இருந்தால் நாம் அது ஏன் என்று யோசிக்க வேண்டும். புன்னகைத்தல் என்பது நம்மைக் குறித்த உணர்வுடன் நாம் இருக்கிறோம், அதாவது நம்மேல் நமக்கு முழு ஆளுமை இருக்கிறது, நாம் மறதியில் மூழ்கிவிடவில்லை என்பது ஆகும்.
இந்தப் புன்னகையை நாம் புத்தரின் முகத்திலும் போதிசத்துவர்களின் முகங்களிலும் காணலாம். மூச்சுப் பயிற்சியின்போதும் புன்னகைக்கும்போதும் நாம் உச்சாடனம் செய்யும் வகையில், இந்தக் கவிதையை அவர் விளக்குகிறார்:
“மூச்சை இழுக்கும்போது, நான் உடலையும் மனதையும்
அமைதியடையச் செய்கிறேன்.
மூச்சை விடும்போது, நான் புன்னகைக்கிறேன்.
தற்கணத்தில் நிலைக்கும்போது
நான் உணர்கிறேன்
இக்கணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்று.”
இந்தக் கவிதை புன்னகையின் வல்லமையை நமக்குப் புரியவைக்கிறது.
புத்தர்கள் என்பது நாம்தான். ‘புத்’ என்ற வேர்ச்சொல், விழிப்புணர்வு பெறுதல், அறிதல், புரிந்துகொள்ளுதல்’ என்று பொருள்படும். விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும் ஆண் அல்லது பெண் புத்தர் எனப்படுவர். இந்த விழிப்புணர்வு பெறும், புரிந்துகொள்ளும், அன்பு காட்டும் திறன் என்பதுதான் புத்தர் இயல்பு என்று அழைக்கப்படுகிறது.
சீனர்களும், வியத்நாமியர்களும், ‘நான் என்னில் உள்ள புத்தரிடம் திரும்பிச்சென்று அதன்மேல் நம்பிக்கை கொள்கிறேன்’ என்று சொல்வார்கள். ‘என்னில்’ என்று சேர்ப்பது நீங்களேதான் புத்தர் என்பதை மேலும், தெளிவாக்குகிறது என்பதை அவர் விளக்குகிறார்.
இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சமாக இதில் விளக்கப்பட்டிருக்கும் பதினான்கு விதமான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளைச் சொல்லலாம். ‘வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல்’, ‘எந்தப் பார்வையுடனும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருத்தல்’, ‘சுதந்திரமான சிந்தனையுடன் இயங்குதல்’, ‘துன்பத்தைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருத்தல்’, ‘எளிமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்தல்’, ‘கோபத்தைக் கையாள்தல்’, ‘தற்கணத்தில் மகிழ்ச்சியாக இருத்தல்’, ‘பிறருடனும் சமூகத்துடனும் தொடர்பில் இருத்தல்’, ‘உண்மையாகவும் அன்புடனும் பேசுதல்’, ‘பெருந்தன்மை’ உள்ளிட்ட பதினான்கு வகையான மனம்நிறை கவனத்துக்கான பயிற்சிகளை இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது.
அமைதியால் உலகத்தை நிறைக்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
திக் நியட் ஹான்:
1926 –ம் ஆண்டு வியத்நாமில் பிறந்தார். தன் பதினாறாவது வயதில் பவுத்த துறவியானார். வியத்நாம் போர் பாதிப்பிலிருந்து அகதிகளை மீட்பதற்காக ‘engaged Buddhism’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். தன் நாற்பதாவது வயதில் வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டில் ‘ப்ளம் வில்லேஜ்’ மையத்தில் தற்போது பவுத்தத்தைக் கற்பித்து வருகிறார். எந்த ஒரு சித்தாந்தத்தையும் அது பவுத்தமாக இருந்தாலும், விடாப்பிடியாக அதைப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை இவர் போதித்துவருகிறார். ‘TheMiracle of Mindfulness’, ‘The Sun My Heart’, ‘Living Buddha’, ‘A Guide to Walking Meditation’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.
வியத்நாம் போரில் சேவையாற்றிக்கொண்டிருந்த பவுத்தத் தன்னார்வலர்கள் பலரும் உயிரிழந்தார்கள். அவர்கள் வன்முறையற்ற வழியில், வெறுப்பில்லாமல் இறப்பது எப்படி என்று திக் நியட் ஹான் எழுதிய கவிதை இது. அந்தக் கவிதையின் தலைப்பு – ‘பரிந்துரை’
எனக்கு வாக்குறுதி கொடு
எனக்கு வாக்குறுதி கொடு இன்றே,
எனக்கு வாக்குறுதி கொடு இப்போதே,
தலைக்கு மேலே சூரியன்
துல்லியமாக உச்சியில் இருக்கும்போதே
எனக்கு வாக்குறுதி கொடு:
மலையளவு வெறுப்பையும் வன்முறையையும் கொண்டு
அவர்கள் உன்னை அடித்து வீழ்த்தினாலும்,
ஒரு புழுவை மிதிப்பதுபோல்
உன்மீது ஏறி நின்று நசுக்கினாலும்,
உன்னைக் கொன்று கண்டதுண்டமாக வெட்டிப்போட்டு
உன் குடலை உருவினாலும்,
நினைவில் கொள், சகோதரா,
நினைவில் கொள்:
மனிதன் நம் எதிரியல்ல.
உன் தகுதிக்கு ஏற்றது காருண்யம்தான்.
அது வெல்ல முடியாதது,
மனிதனில் உள்ள மிருகத்தைக் காண
வெறுப்பு உன்னை ஒருபோதும் விடாது.
ஒரு நாள், இந்த மிருகத்தைத் தன்னந்தனியாக நீ சந்திக்கும்போது,
உன் துணிவு தளராமல், உன் கண்கள் கருணையுடன்
சற்றும் கஷ்டப்படாமல்
(அவற்றை யாரும் பார்க்கவில்லையெனினும்),
உன் புன்னகையிலிருந்து
பூவொன்று பூக்கும்.
பிறப்பு இறப்பின் ஆயிரமாயிரம் உலகங்களினூடாக
உன்னை நேசிப்பவர்கள்
உன்னைக் காண்பார்கள்.
மறுபடியும் தன்னந்தனியாக,
தாழ்ந்த தலையுடன் நான் செல்வேன்,
அன்று நித்தியத்துவமாக மாறிவிட்டது என்பதை அறிந்தவாறு,
நீண்ட, கரடுமுரடான சாலைமீது,
சூரியனும் நிலவும்
தொடர்ந்து ஒளிரும்.
-நன்றி: ‘இந்து தமிழ் திசை’, என்.கௌரி
Wednesday, January 8, 2020
பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது- ஆசையின் கவிதைகள்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
(ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு விருது வழங்கப்பட்டபோது கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் ஆற்றிய உரை இது)
சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின் சார்பில் விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தன் மற்றும் கவிஞர் ஆசைக்கு எனது வாழ்த்துகள். ரவி சுப்ரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன், சந்தியா நடராஜனுக்கு எனது வணக்கம்.
புத்தகப் பதிப்பில் நேர்த்தியையும் தொழில்முறை ஒழுங்கையும் கொண்டுவந்த க்ரியா பதிப்பகத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் கவிஞர் ஆசை. க்ரியாவின் புகழ்பெற்ற தற்காலத் தமிழ் அகராதிப் பணியிலும், பதிப்புப் பணிகளிலும் மிகுந்த அனுபவம் பெற்றவர். க்ரியா வெளியிட்ட உமர் கய்யாம் கவிதைகளை தங்க.ஜெயராமனுடன் இணைந்து இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது முதல் கவிதைத் தொகுதியான சித்து நூலில் உள்ள கவிதைகள், தமிழ் புதுக்கவிதை மரபின் பல்வேறு கூறல்முறைகளை வரித்துக்கொண்டு, நேர்த்தியான மொழியில் தத்துவ விசார நோக்குடன் அமைதியான த்வனியுடன் எழுதப்பட்டவை. 90 களின் இறுதியில் விசாரம் துறந்த, புனைவுத்தன்மை அதிகம் கொண்டு சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்கள் கொண்டு வெளிப்பட்ட நவீன கவிதைகளின் புதிய தன்மையையும், உக்கிர உணர்வையும் ஆசையின் கவிதைகளில் பார்க்க முடியவில்லை. ஒரு பழைய மனம், ஒரு பழைய கவிதையோடு உரையாடும் அனுபவம்தான் எனக்கு வாய்த்தது. இப்போது ஒருசேரப் படிக்கும்போதும் அந்த எண்ணப்பதிவு மாறவில்லை.
விதம்விதமான பறவைகளின் புகைப்படங்களுடன், ஒவ்வொரு பறவைக்குமான இயல்போடு ஒட்டி உறவாடும் கவிதைகளுடன் வெளிவந்த கொண்டலாத்தி என்ற கவிதைத் தொகுப்பு என்னை மிகவும் ஈர்த்தது. வெவ்வேறு பறவைகள் பற்றிய வெவ்வேறு விவரணைகள் என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததும் நினைவில் உள்ளது. கவிஞனைப் பொருத்தவரை பூனையையும், பறவையையும் பாம்பையும் தொட்டுவிட்டால் அது நிச்சயமாக கவிதையாகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பொதுவாக நாம் காணும் காகம், குருவி, தவிட்டுக்குருவி, குயில், ஆந்தை போன்ற பறவைகளைத் தவிர வேறு பறவைகளை அதிகம் பார்த்தறியாத, பார்த்தாலும் அதன் பெயர் சொல்லி உரையாட முடியாத கோடிக்கணக்கான பேர்களில் நானும் ஒருவன். ஆனால் கவிதை என்ற வடிவத்துடன் இயங்குபவனாக எனக்கு நிறைய பறவைகளின் பெயர் தெரியாதது குறித்து வருத்தம் இருக்கிறது. ஆனால் இதற்காக வெட்கப்பட இயலாது. இந்த அறியாமை நமது காலத்தின் பிரதிபலிப்பு. நமக்கு துப்பாக்கிகளின் பல வடிவங்கள் தெரிந்திருக்கின்றன. கொத்து வெடிகுண்டுகள் என்கிறோம். கையெறி குண்டு என்கிறோம். கண்ணிவெடி என்கிறோம்.
பொதுவாக தமிழ் புதுக்கவிதையில் பறவைகள் சுதந்திரத்தின் படிமமாக, விடுதலை ஏக்கத்திற்கான படிமமாகவே பெரும்பாலும் சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்டன. அவை ஆசையின் கவிதைகளைப் போல பல வண்ணச் சிறகுகள், அலகுகள், பழக்கங்கள், குஞ்சுகளுடன் சிறிய, பெரிய, குட்டியான அளவுகளில் இடம்பெறவே இல்லை.
ஒருவகையில் இயற்கையும், பறவைகளும் அருகிவரும் நிலையில்தான் அவற்றை கலையிலும், புகைப்படங்களிலும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் பதற்றத்துடன் நடைபெறுகின்றன. பறவைகள் வெறும் படிமங்களாக இருந்தபோது வேறு வேறு அளவுகளில் வேறு வேறு பெயருள்ள பறவைகள் அவற்றின் பிரபஞ்சத்தில் மனித இடையூறு இல்லாமல் வாழ்ந்துகொண்டுதான் இருந்தன.
ஒருவகையில் ஆசையின் கொண்டலாத்தியும் பறவைகளைத் தொலைத்து விடுவோம் என்ற பதற்றத்தில் எழுதப்பட்டவைதான். மனிதர்களுக்குதான் இயற்கை வேண்டும். மனிதர்களுக்குத்தான் பறவைகள் வேண்டும் என்ற பணிவிலிருந்தும், ஆதூரத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் அவை. பறவைகள் வழியாக எனது வாழ்வை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், ஞானமாகவும் ஆக்கமுடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கவிதைகளாக இவை இருக்கின்றன. கொண்டலாத்தியின் கவிதைகள் குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் அதிகம் பயனுள்ளது. ஏனெனில் இயற்கையாகவே குழந்தைகள் பறவைகளுக்கு அருகிலோ, பறவைகளாகவோதான் இருக்கின்றன.
கவிஞர் ஆசை நவீன தமிழ் கவிஞர்களுக்கான மூலவளத்தை, விதை வங்கியை பறவைகளின் பெயர்களாலும், அவை தொடர்பான சித்தரிப்புகள், விசாரணைகளாலும் நிரப்பியுள்ளார். அதற்கு அவருக்கு நாம் முதலில் நன்றி சொல்லவேண்டும்.
கவிஞர்கள் எல்லாருக்குமே அவர்கள் எழுதும் எல்லா கவிதைகளும் தேன்சிட்டைப் போலப் பறக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசையின் கொண்டலாத்தியில் பறவைகளுடனேயே பறக்கும் கவிதைகள் நிறைய உண்டு.
சிறிய உடல் கொண்ட ஒரு பறவையின் சுறுசுறுப்பைப் பார்க்கும் போது, ஒரு பட்டாம்பூச்சியின் பறத்தலைப் பார்க்கும்போது, இந்தச் சின்ன உடலுக்குள் எங்கே உயிர் இருக்கிறது, அதன் நிகழ்ச்சி நிரல் எந்தப் புள்ளியில் பதியப்பட்டுள்ளது என்ற ஆச்சரியமே ஆசையின் கவிதைகளுக்கான அடிப்படை. வாழ்வியக்கமும், மகிழ்ச்சியும் தனித்தனியாக இல்லாத நிலையில் உள்ள பறவைகளைப் பார்த்து வியப்பு தீரவில்லை அவருக்கு.
ஒருநிலையில் நமக்கு பரிச்சயமான ஆனால் கிட்டத்தட்ட பரிச்சயமே ஆகாத ஒரு உயிரைக் கடவுளின் இடத்தில் வைத்து வியக்கிறார் ஆசை.
மனிதர்கள் சிறியதைப் பார்த்து, சிறியதை வியந்து, சிறியதாக வாழவேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது கொண்டலாத்தி.
கவிஞர் ஆசைக்கு இந்த விருது தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தைத் தரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
-ஷங்கர்ராமசுப்ரமணியனின் வலைத்தளத்தில் படிக்க: https://www.shankarwritings.com/2014/01/blog-post_13.html
Friday, January 3, 2020
என்றும் காந்தி - 2019-ன் சிறந்த புத்தகங்கள்- 3
எஸ்.ராமகிருஷ்ணன்
(எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு)
இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள் ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது.
அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது.
ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள் இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன.
“காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.
நேர்மையாக இருப்பதற்குக் காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாகக் காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை.“ எனத் தனது கட்டுரையில் ஆசை காந்தி பற்றித் தெரிவிக்கிறார். இந்த நூலின் சாராம்சத்திற்கு இந்த இரண்டு பத்திகளே எடுத்துக்காட்டு
காந்தியை அறிந்து கொள்வதற்கான சிறந்த நூல்.
ஆசைக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
- எஸ்.ராமகிருஷ்ணனின் வலைதளத்தில் படிக்க: shorturl.at/lHPX5
Subscribe to:
Posts (Atom)