Wednesday, August 23, 2017

வட சென்னை: சென்னை இங்கேதான் தொடங்கியது!


தீபா அலெக்ஸாண்டர்

(சென்னை பிறந்த வாரத்தை முன்னிட்டு ‘தி இந்து’ நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

ஜார்ஜ் டவுனின் இப்ராஹிம் சாஹிப் தெரு. நவீன வாழ்க்கையின் நெரிசல்களுக்கிடையிலும் பழைய காலத்தின் வசீகரத்தைத் தக்கவைத்திருக்கும் சாலை அது. இரைச்சலுடன் விரையும் பேருந்துகள், பிரம்மாண்டமான ஸ்டான்லி மருத்துவமனையை மொய்த்திருக்கும் மக்கள் கூட்டம், பாரதி மகளிர் கல்லூரிக்கு வெளியில் காணப்படும் மாணவர் குழாம், இவை எல்லாவற்றுக்கும் அப்பால் நிற்கிறது அந்தச் சுவர் - வரலாற்றின் உறுதியான, தொட்டுணரக்கூடிய எச்சமாக. அந்த வீதியை ஒட்டிச்செல்லும் அந்தச் சுவரின் பல்வேறு வாயில்களும் கோட்டைக் கொத்தளங்களும் - முன்பொரு காலத்தில் கோட்டைச் சுவர்களால் தடுப்பிடப்பட்டிருந்த - மெட்ராஸ் என்ற நகரத்தின் வடக்கு எல்லையைக் குறிக்கின்றன.

1722-ல் கட்டப்பட்ட கோட்டைக் கொத்தளங்களின் ஒருசில அடையாளங்கள்தான் இப்போது எஞ்சியுள்ளன. ஆயினும், கோட்டைச் சுவர் என்பது நீடித்து நிற்கும் வேறொரு அம்சத்தின் அடையாளச் சின்னமாக நிற்கிறது. சென்னையின் மீள்தன்மை எனும் இயல்புதான் அந்த அம்சம்.

‘ஃபர்ஸ்ட் லைன் பீச்’சின் முடிவில் (தற்போது ராஜாஜி சாலை) இருக்கும் மேம்பாலத்தில் நீங்கள் ஏறினீர்கள் என்றால் விக்டோரிய - கோதிக், இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலை மரபுகளின் பெருமையைப் பறைசாற்றும் கட்டிடங்களின் வரிசைகளை மட்டுமல்ல; ஒருசில நிறுத்தங்களில் நின்றுவிட்டு விரையும் ரயில்கள், கல்நார்க் கூரைகளைக் கொண்ட (முன்பு பர்மாவிலிருந்து திரும்பிவந்தவர்களால் நடத்தப்பட்ட) கடைகள், வங்காள விரிகுடாக் கடலின் மினுக்கம், 17-ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஃப்ரான்ஸிஸ் டேயை இந்தக் கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது போன்ற கட்டுமரங்கள் எல்லாம் துறைமுகத்தின் கிரேன்களைத் தாண்டி உங்கள் கண்களைப் பறிக்கும்.

புனித ஜார்ஜ் கோட்டை

புவியியல்ரீதியாக, கூவத்தின் வடக்குப் பகுதியாகிய வடக்கு மெட்ராஸ் முன்பு மீனவக் குப்பங்களின் தொகுப்பாக இருந்தது. குத்தகைக்குப் பெற்ற ஒரு துண்டு நிலத்தில் ‘புனித ஜார்ஜ் கோட்டை’யை பிரிட்டிஷ்காரர்கள் கட்டியபோது, இந்தக் குப்பங்களின் தொகுப்பு நகரியமாக வளர்ந்தது. கோட்டை கட்டுவதற்காக உள்ளூர் அரசர் ஒருவரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639 அன்றுதான் பிரிட்டிஷார் குத்தகைக்கு வாங்கினார்கள்.

“மெட்ராஸின் பிறந்த நாள் என்பதைத் தாண்டியும் இந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது; இந்தியா என்ற கருத்தாக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கும், நவீன இந்தியாவின் முதல் நகரத்தை இந்தத் தேதி கொண்டாடுகிறது” என்கிறார் சென்னையின் வரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா. “உண்மையில், சென்னை நகரம் தொடங்கிய இடம் வடக்கு மெட்ராஸ்தான். மெட்ராஸின் குடிமக்கள் என்ற நமது அடையாளத்தின் பின்னணியில் வைத்து ஆய்வுசெய்து பார்க்க வேண்டிய முழுமையான பிராந்தியம் இது” என்கிறார் முத்தையா.

கருப்பர் நகரம்

300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, கோட்டை யின் வடக்கு எல்லையை ஒட்டி கருப்பர் நகரம் உருவானது; கோட்டைக்குள் வசித்த புர்ரா சாஹிப்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளையர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ‘கருப்பர்கள்’ என்று அழைக்கப்பட்ட தமிழர்கள் வசிக்கவும், வணிகம் நடப்பதற்குமான பிரதேசம்தான் கருப்பர் நகரம். இன்று, அங்கே ஏராளமான பகுதிகள் இருக்கின்றன. அடிப்படைத் தேவைகள், நெரிசலான சாலைகள், வீழ்ச்சியடைந்த வீட்டுமனைத் தொழில், அதிக அளவிலான குற்றச் சம்பவங்கள், மேட்டுக்குடித் தன்மை இல்லாதது போன்றவற்றுக்காக இந்தப் பகுதிகளைப் பார்த்தாலே பலரும் முகம்சுளிப்பார்கள். ஆனால், சென்னையின் மற்ற பகுதிகளில் இல்லாத, மற்ற பகுதிகள் ஏக்கம்கொள்கிற சில அம்சங்களை இந்தப் பகுதி கொண்டிருக்கிறது: பழங் காலத்தின் வசீகரமும், இந்த நகரத்தின் குணாம்சத்தை வரையறுப்பதில் அடிப்படையாக இருக்கும் வரலாறும்தான் அவை.

புழுங்கி வியர்த்துக்கொட்டும் ஒரு மதியப் பொழுதில் வடக்கு மெட்ராஸைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பெயர் தாங்கியிருக்கும் பிரதேசம் அது. அந்த ஆரவாரமான பகுதியை இன்னமும் அவரது சிலை ஆட்சி செய்துகொண்டுதான் இருக்கிறது. அவர் நோட்டமிடும் எல்லாவற்றுக்கும் அவர்தான் பேரரசர்; அதாவது, இப்போதோ அப்போதோ என்று விழக் காத்திருக்கும் சாலையோரக் கடைகள், பாதசாரிகள், வாகனங்களுக்கு இடையில் விரையும் மாட்டு வண்டிகள் என்று கண், காது, மூக்கு என்று எல்லாப் புலன்களுக்கும் கலந்துகட்டித் தீனிபோடும் அந்தக் காட்சிப் பரப்பு எல்லாவற்றுக்கும் அவர்தான் பேரரசர்.

அவருக்குப் பின்னால் நிற்பது பூக்கடை காவல் நிலையம்: அசாதாரணமான பழமை கொண்ட, சிவப்புநிறக் கட்டிடம் அது. கைதிகளை அருகேயுள்ள நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு வசதியாக அங்கேயே சிறையைக் கொண்டிருக்கும் காவல் நிலையம் அது. அதன் அருகே வரிசையாகத் தெருக்கள். ஒவ்வொரு தெருவிலும் வரிசையாகக் கடைகள். அந்தத் தெருவுக்குள் ஒவ்வொன்றும் புகைப்படச் சட்டங்கள், ஆபரணங்கள், எழுதுபொருட்கள் என்று ஒரு பொருளுக்கோ அல்லது ஒரு விஷயம் சார்ந்த பல பொருட்களுக்கோ பிரசித்தம். இங்குள்ள காற்று வியர்வை நாற்றமும் சிறுநீர் நாற்றமும் சாலையோரச் சிறுதீனிக் கடையின் சுள்ளென்ற மணமும் கலந்து வீசும்.

திமுக பிறந்த இடம்

“அரசியலையும் கலாச்சாரத்தையும் பொறுத்தவரை வடக்கு மெட்ராஸ் என்பது மிகவும் துடிப்பான பகுதி” என்கிறார் முத்தையா. “திமுக நிறுவப்பட்ட இடமும் தொழிற்சங்க இயக்கம் பிறந்த இடமும் வண்ணாரப்பேட்டைதான்” என்கிறார் அவர். குறைந்தபட்சம் 200 ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்துகொண்டிருந்த தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் போன்றவர்கள் மண்ணடிக்கு அப்பால் உள்ள பகுதியில்தான் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.

பாரிமுனைதான் போஹ்ரா முஸ்லிம்களுக்குத் தற்போது தாய்வீடு. யேமன் நாட்டின் கடுமையான வாழ்நிலைகளிலிருந்து விடுபட்டு வந்து, இந்த இடத்தை அவர்கள் தாயகமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து வந்த ஆங்கிலோ -இந்தியர்களுக்கும் இந்தப் பகுதி புகலிடமாக இருந்தது; இறுதியில் அவர்கள் விட்டுச் சென்றது ஜார்ஜ் டவுனில் உள்ள பிஷப் கோரி பள்ளிக்கூடம், புனித கேபிரியல்ஸ் பள்ளிக்கூடம் போன்றவற்றின் தரையில் பாவிய கற்களில் தங்களின் பெயர்களை மட்டும்தான். பழமையான கோயில் கள் இருக்கும் இடங்களிலிருந்து ரிக்ஷாவில் சென்றுவிடக்கூடிய தூரத்தில் காலனிய காலத்துத் தேவாலயங்கள் இருக்கின்றன, இரும்புச் சாமான் கடைகளுக்கு இடையில் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் பொதிந்திருக்கும்.

அங்கிருந்து மேற்கு நோக்கி, மரங்களடர்ந்த ஏழுகிணறு, பேஸின் பிரிட்ஜின் மின்நிலையங்கள், கூடிய விரைவில் சுற்றுச்சுவர் கொண்ட நகரியமாக ஆகவிருக்கும் பின்னி ஆலைகளின் பரந்து விரிந்த மைதானங்கள் போன்றவற்றைத் தாண்டிச் சென்றால் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் நினைவேக்கத்தின் சுவடுகளையும் பழைய ரயில்வே வீடுகளையும் கொண்ட வேப்பேரியும் பெரம்பூரும் நம்மை வரவேற்கும்.

அறியாத தலைமுறை

“நிறைய பணம் சம்பாதிக்கத் தொடங்கியதும் பெரும்பாலானோர் தெற்கு நோக்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே, இப்போது இருக்கும் தலைமுறை இன்னொரு மெட்ராஸைப் பற்றி அறிந்திராத தலைமுறை” என்கிறார் முத்தையா. ‘மெட்ராஸ் தின’த்தின்போது ஒருமுறை வடசென்னைக் குழந்தைகள் தென்சென்னைக்கும், தென்சென்னைக் குழந்தைகள் வடசென்னைக்கும் சென்று, தாங்கள் அறியாத நகரத்தின் பன்முகங்களை அறிந்துகொண்டார்கள். அது பற்றிதான் முத்தையா இந்த இடத்தில் குறிப்பிடுகிறார். “மெட்ராஸ் தினம் தொடர்பான எல்லாச் செயல்பாடுகளும் கொண்டாட்டங்களும் தென் சென்னையிலும் மேற்கு சென்னையிலும்தான் நடைபெறுகின்றன. வடசென்னைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மக்கள் தங்கள் பாரம்பரியம் குறித்து மேலும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும் - ஏனெனில், இந்த இடத்தில்தான் சென்னை பிறந்தது” என்கிறார் முத்தையா.

சென்னையின் வரலாறு, பாரம்பரியம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான பயணத்தைத் தொடங்குவதற்கு வடக்கு நோக்கிச் செல்லும் கடற்கரைச் சாலை பொருத்த மான இடம். சரக்குப் பெட்டக முனையங்களையும் பழங்காலக் கல்லறைத் தோட்டங்களையும் தாண்டி... பிழைக்க வழியில்லாத மக்களெல்லாம் எந்தக் கடற்கரையிலிருந்து கொத்தடிமைகளாகக் கடல்கடந்து தோட்டப் பண்ணை களுக்கு அனுப்பப்பட்டார்களோ அந்தக் கடற்கரை தாண்டி, கருப்பாகவும் கலங்கலாகவும் கடல்நீர் இருக்கும் அந்த இடத்தை அதாவது, உலகப் போரின்போது இந்த நகரத் தைத் தரைமட்டமாக ஆக்க ஒரு கப்பல் முயன்றுபார்த்த அந்த இடத்தையும் தாண்டி போய்க்கொண்டே இருங்கள். கடலுக்குள் மூழ்கியிருக்கும் மண்ணரிப்புத் தடுப்புச் சுவர்களூடே நடந்துசெல்லுங்கள்; பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றிலிருந்து மெட்ராஸின் நிலவிரிவைக் காட்சியுறும் பாக்கியம் பெறுவீர்- நவீன வாழ்க்கையின் சலிப்பூட்டும் அன்றாடத்தன்மைக்கு அந்தக் காலத்திய அருமருந்து அது!

- ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘மெட்ரோ ப்ளஸ்’ இணைப்பிதழில் வெளியான கட்டுரை. தமிழில்: ஆசை

Monday, August 14, 2017

பாக்தாதின் ‘ஞான இல்லம்’: உலகுக்கு இஸ்லாமின் பெரும் பங்களிப்பு!


மினி கிருஷ்ணன்

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 13-08-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

நபிகள் நாயகத்தின் மறைவுக்கு 25 ஆண்டுகளுக்குக்குள் அரேபியர்கள் பாரசீகம், சிரியா, மத்திய ஆசியாவில் கொஞ்சம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். கிழக்கே, சிந்து நதி, சிந்து மாகாணம் வரை வந்துவிட்டார்கள். மேற்கே, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா போன்றவற்றைக் கைப்பற்றினார்கள். கடல்களைக் கடந்து சென்று ஜிப்ரால்டரை அடைந்தார்கள். கூடிய விரைவில் ஸ்பெயினும் அவர்களிடம் வீழ்ந்தது.

கொஞ்ச காலத்தில் அவர்களுக்கு வேறு விதமான அதிகாரமும் வசமானது. கி.பி. 751-ல், சீனக் காகிதத் தயாரிப்பாளர்களை அவர்கள் சிறைபிடித்தார்கள். காகிதத் தயாரிப்பு குறித்து இப்படிப் பெறப்பட்ட அறிவு அதுவரை எழுத்து எப்படிப் பகிர்ந்துகொள்ளப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பதையெல்லாம் புரட்டிப்போட்டது. உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த அவர்கள், நூலகங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். இதனால், அவர்கள் காலடி பட்ட இடங்களெல்லாம் அறிவுத் தாகம் பெருக்கெடுத்தது. தங்கள் கலாச்சாரம் தவிர்த்த ஏனைய கலாச்சாரங்களிலிருந்து நூல்களையும் சுவடிச் சுருள்களையும் மொழிபெயர்ப்பதில் முதன்முதலில் ஆர்வம் காட்டியவர்கள் இஸ்லாமியர்களே. காலீஃப்களின் ஞான சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட அங்கே அடுத்த 500 ஆண்டுகளுக்கு இஸ்லாமிய நூலகக் கட்டமைப்பு நடைபெற்றது.

கடவுளின் பரிசு

ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில், கார்தபா பிரதேசத்திலும் ஸ்பெயினிலும் உள்ள அறிஞர்கள் கெய்ரோ, பக்காரா, சமர்க்கண்ட், பாக்தாத் போன்ற நகரங்களில் உள்ள அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தனர். இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள நகரம் பாக்தாத்! பாரசீக மொழியில் ‘பாக்தாத்’ என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம்.

பாக்தாத் நகரம் கி.பி. 762-ல் உருவானது. இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் வரை விரிந்திருந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த காலீஃப் மன்சூர், டைக்ரிஸ் நதிவழியாகப் பயணித்து, தங்களுக்கென்று ஒரு நிரந்தர இருப்பிடத்தைத் தேடினார். இறுதியாகத் தேர்ந்தெடுத்த இடம்தான் பாக்தாத். அதற்குப் பிறகு தனது தலைநகரை டமஸ்கஸிலிருந்து பாக்தாதுக்கு மாற்றிக்கொண்டார். பல்வேறு அறிவுச் செயல்பாட்டு மையங்களை அவர் ஒன்றிணைத்தார்; ஆய்வுகள் மேற்கொள்ளவும் உலக மொழிகளிலிருந்து அரபு மொழிக்கு நூல்களை மொழிபெயர்க்கவும் அறிஞர்களை அவர் பணிக்கு அமர்த்தினார். இதன் சிறப்பு என்னவென்றால், அந்த மொழிபெயர்ப்புகளைச் செய்த பெரும்பாலான எழுத்தாளர்களின் தாய்மொழி அரபு கிடையாது.

சிரியா, கிரீக், பாரசீகம், யூதம், இந்து, அரிமீனிய மொழிபெயர்ப்பாளர்களின் குழுக்களுக்கு அபாஸித் காலிஃப்கள் ஆதரவளித்தனர். அவர்கள் காலகட்டத்தில், எழுத்தாளர்களும் அறிஞர்களும் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு வந்துகொண்டிருந்தது. கல்வித்துறை சார்ந்த வாழ்க்கை என்பது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகளுக்கு எடைக்கு எடை தங்கம் தரப்பட்டது. போர்களின்போது அரிய சுவடிச் சுருள்களும் தொன்மைவாய்ந்த பிரதிகளும் குறிவைக்கப்பட்டன. குறிப்பாக, அபாஸித்களுக்கும் ஃபைஸாண்டைன் பேரரசுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையின்போது தாலமியின் ‘அல்மஜெஸ்ட்’ என்னும் நூல் பணயமாகக் கேட்கப்பட்டது.

அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் கலாச்சார வளம் கொண்ட இடங்களுள் ஒன்றாக பாக்தாத் புகழ்பெற்றது. அந்த நகரத்தின் கதைசொல்லிகள், அறிவியலாளர்கள், ஓவியர்கள் அறிஞர்களெல்லாம் தொன்மைக் கால உலகின் புகழ்பெற்ற படைப்புகள் பெரும்பாலானவற்றை அரபி மொழிக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

சுவடிகளை வாங்கும் வழக்கம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ‘பிரம்மாஸ்புத சித்தாந்தா’ எனும் கணித நூலை 8-ம் நூற்றாண்டில் அரபிக்கு மொழிபெயர்த்ததிலிருந்து தொடங்கியது. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வானியல், மருத்துவம், தத்துவம், இயற்கை அறிவியல் குறித்த சுவடிகள் எதுவானாலும் எந்த விலை கொடுத்தேனும் வாங்கி வரும்படி அறிஞர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தின் அறிவுப்பரப்பு பரவிய வேகத்தைவிட அதிவிரைவாகவும் விஸ்தீரணமாகவும் அரபுலக அறிவுப் பரப்பு பரவியது. இவ்வாறு, மனித மனம் மீதும் உலகின் எதிர்காலத்தின் மீதும் அரபுலகம் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இந்த உத்வேகம் பெரிதும் பீறிட்டுப் பாய்ந்தது ஒரே ஒரு நகரத்திலிருந்துதான்.

அறிவுலகின் மையம்

கி.பி. 830-ல் ஹாரூண்-அல்-ரஷீதின் மகனான அல்-மாமூன் எல்லாச் சுவடிப் பிரதிகளையும் பாதுகாத்து வைப்பதற்காக ‘பெய்ட் அல்-ஹிக்மா’வை அதாவது ‘ஞானத்தின் இல்ல’த்தைக் கட்டியெழுப்பினார். அந்த நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் வரும் யாரும் அங்கே நுழையலாம். மொழிபெயர்ப்பாளர்கள், எழுதுநர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், பிரதியெடுப்பவர்கள் போன்றோர் கூட்டு மொழிபெயர்ப்புக்காகவும், உரையாடல், விவாதங்கள் போன்றவற்றுக்காகவும் தினமும் அங்கு ஒன்றுகூடுவார்கள். பல்வேறு அறிவியல் துறைகள் தொடர்பான நூல்கள் கூட்டு உழைப்பின் மூலம் தயார் செய்யப்படும். அந்தப் புத்தகங்கள் வேறு மொழிகளில் இருந்தால் அந்த மொழிகளிலிருந்து அரபிக்கும் அரபி மொழியில் இருந்தால் அரபியிலிருந்து வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும்.

அரபி, பாரசீகம், ஹீப்ரூ, அரமைக், சிரியாக், கிரேக்கம், லத்தீன் மொழிப் புத்தகங்களாலும் ஆங்காங்கே சம்ஸ்கிருதப் புத்தகங்களாலும் அங்குள்ள சுவர்கள் நிரம்பியிருக்கும். அரபி-கிரேக்க-பாரசீக-இந்திய மனங்களின் சங்கமத்தின் விளைவாக அரிஸ்டாட்டிலிய தர்க்கம், பிரபஞ்சவியல், மருத்துவம், கணிதச் சிந்தனைகளெல்லாம் வளர்த்தெடுக்கப்பட்டன. அந்த ‘ஞான இல்ல’த்தில் நடைபெற்ற ஆவணக்காப்பு வேலைகள், ஆய்வுகள் போன்றவை இல்லையென்றால், அந்த இல்லத்தின் அறிவுச் சேகரங்கள் பிற்பாடு லத்தீனில் மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் தொன்மையான அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை இன்று நம் கைக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.

ரத்தமும் மையும் கலந்த பேராறு

பிப்ரவரி 10, 1258-ல் மங்கோலியப் பேரரசன் ஹுலாகு கான் தனது தாத்தா செங்கிஸ் கானின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில் பாக்தாத் நகரத்தைச் சூறையாடினான்; பாக்தாத்மீது கையை வைத்தால் மொத்த இஸ்லாமிய உலகமும் அவர்களுக்கு எதிராக ஒன்றுதிரள நேரிடும் என்ற காலீஃபின் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை. கடவுளின் பரிசாகிய இந்த நகரத்தை, மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் இந்த மையத்தை, மனவுலகின் செல்வங்களால் நிரம்பி வழியும் இந்த நகரைச் சூறையாடியது மட்டுமல்லாமல் தீக்கிரையாக்கினான் ஹுலாகு கான். ஆயிரக் கணக்கான மாணவர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் அப்போது உயிரிழந்தார்கள். காலீஃப், அரசருக்கு இணையாகக் கருதப்பட்டதால் ரத்தம் தரையில் சிந்தாதபடி அவர் கொல்லப்பட்டார். அவரை ஒரு கம்பளத்துக்குள் வைத்துச் சுருட்டி, குதிரைகளை அவர் மேல் ஓட விட்டுக் கொன்றார்கள்.

அரண்மனைகளையும் வீடுகளையும் 36 நூலகங்களையும் மங்கோலியர்கள் சூறையாடினார்கள். ‘ஞானத்தின் இல்லம்’ ஓரிரு நாட்களுக்குள் சுவடின்றி அழிக்கப்பட்டது. டைக்ரிஸ் நதி, கொல்லப்பட்டவர்களின் ரத்தத்தால் சிவப்பாக ஓடியதாகவும் அதன் பிறகு புத்தகங்களின் மையால் கருப்பாக ஓடியதாகவும் சொல்லப்படுவதுண்டு. அனைத்து வானியல் நோக்ககங்களும், பிற பரிசோதனை முயற்சிகளும் அந்த நூலகத்துடன் சேர்ந்து சுவடின்றி மறைந்தன. கூடவே, மனித வரலாற்றில் மிகப் பெரிய மொழிபெயர்ப்புத் துறையும்! ஹுலாகு கானின் வாரிசுகள் கலை, கல்வியறிவு போன்றவற்றைப் பிற்காலத்தில் மதிக்கத் தொடங்கியதுதான் இதில் முரண்நகை!

-மினி கிருஷ்ணன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் (ஓ.யூ.பி.) மொழிபெயர்ப்புப் பிரிவில் செம்மையாசிரியராக (எடிட்டர்) இருக்கிறார்.

நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)

Friday, August 11, 2017

இனிமேல் போலிச் செய்திகளின் காலம்தானா?


ஒலிவியா சோலோன்

(‘தி இந்து’ நாளிதழில் கடந்த 06-08-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை) 

இ து ஃபோட்டோஷாப் யுகம், புகைப்பட வடிகட்டிகளின் யுகம், சமூக ஊடகங்களின் யுகம். முறைதவறி மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு நம்மில் பெரும்பாலானோர் பழகிவிட்டிருக்கிறோம்- புகைப்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் இருப்பதைவிட மேலும் மெலிதாகவோ, நளினமாகவோ காணப்படுவார்கள்; அல்லது ஸ்னாப்சாட்டில் வருவதுபோல் நாய்க்குட்டிகள்போல் தோற்றமளிப்பார்கள்.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி, ஒலியையும் காட்சியையும் திருத்தியமைப்பதற்கான புதிய வகை தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்திலும் கணினி வரைகலையிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. பிரபலங்களின் காணொலிக் காட்சிகளை இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தி அவர்கள் பேசாததையும் பேசும்படிக் காட்ட முடியும். நீர்விளையாட்டுகள்மீது தனக்கு நாட்டம் இருக்கிறது என்று ட்ரம்ப் அறிவிப்பது போலவும், கடத்தப்பட்ட குழந்தைகளைத் தனது நிலவறையில் அடைத்துவைத்திருப்பதாக ஹிலாரி கிளிண்டன் சொல்வதைப் போலவும் காட்டிவிட முடியும்.

இதுதான் போலிச் செய்திகளின் எதிர்காலம். படிப்பதையெல்லாம் நாம் நம்பிவிடக் கூடாது என்றுதான் நமக்கு இவ்வளவு நாட்களாகச் சொல்லப்பட்டுவந்தது. இனிமேல், கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும்கூட நாம் கேள்விக்குட்படுத்த வேண்டிவரும்.

ஒருவர் வாயில் இன்னொருவரின் வார்த்தைகள்!

தற்போது, மனித குணாம்சத்தின் பல்வேறுபட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் காணொலிகளையும் ஒலித்துணுக்குகளையும் பதிவுசெய்து, அவற்றை ஒருங்கமைப்பதில் பல ஆராய்ச்சிக் குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பிரபலம் தோன்றும் காணொலியொன்றை எடுத்துக்கொண்டு, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது வாயசைப்புக்கு ஏற்ப இன்னொருவர் பேச முடியும், அதுவும் நிகழ்நேரத்தில். ஒருவரது வாயில் இன்னொருவரின் வார்த்தைகள்!

ஃபேஸ்2ஃபேஸ் என்ற மென்பொருள், இரண்டாம் நபர் ஒருவர் கணினி கேமராவில் பேசும்போது அவரது முக பாவங்களைப் பதிவுசெய்து, மூலக் காணொலியில் உள்ள பிரபலத்தின் முகத்தில் நேரடியாக அவற்றைப் பதிக்கிறது. மேற்கண்ட ஆய்வுக் குழு ஜார்ஜ் டபிள்யு புஷ், விளாதிமிர் புடின், டொனால்டு ட்ரம்ப் ஆகியோரின் வீடியோவுக்குள் பொம்மலாட்டம் நிகழ்த்தித் தங்கள் தொழில்நுட்பத்தின் வல்லமையைப் பறைசாற்றியது.

ஃபேஸ்2ஃபேஸ் என்ற மென்பொருள் ஒரு விளையாட்டுப் பொருள் போன்றது. மீம்கள் உருவாக்கத்திலும் தொலைக்காட்சிகளின் இரவு நேர நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் இந்த மென்பொருள் பயன்படக்கூடியது. ஆயினும், ஒட்டிவெட்டிச் சேர்க்கப்பட்ட குரல் மூலமாக இந்தத் தொழில்நுட்பம் நகைச்சுவை என்ற நிலையைத் தாண்டியும் உண்மை போலத் தோற்றமளிக்கச் செய்கிறது. இந்த டிஜிட்டல் பொம்மை, அரசியல்வாதியைப் போலத் தோற்றம் கொண்டிருப்பது மட்டுமல்ல, அரசியல்வாதியின் குரலிலேயே பேசவும் செய்கிறது.

குரல்போலி

குரலைப் போலிசெய்வது குறித்து பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது. ஒருவருடைய மூன்று அல்லது ஐந்து நிமிடம் வரையிலான பேச்சுகளைக் கொண்ட ஒலித்துணுக்குகள் நேரலையாகவோ அல்லது யூடியூப், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலமாகவோ கிடைத்தால் போதும், ஒரு ஊடுருவாளர் ஒட்டிவெட்டிக் கோக்கப்பட்ட குரலை உருவாக்கி அதன் மூலம் மனிதர்களை ஏமாற்றிவிட முடியும்; வங்கிகளிலும் திறன்பேசிகளிலும் (Smart phone) இருக்கும் உயிரிஅளவீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளையும் (Biometric Security Systems) ஏமாற்றிவிட முடியும். அதன் பிறகு அந்த ஊடுருவாளர் நுண்ணொலிபெருக்கி வழியாகப் பேசி, அதை மென்பொருள் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் தொலைபேசியிலோ வானொலி நிகழ்ச்சியிலோ பேசியதுபோல் ஆக்கிவிட முடியும்.

புதியதாகத் தொடங்கப்பட்ட கனடிய நிறுவனமான லயர்பேர்டு இதுபோன்ற தொழில்நுட்பத் திறன்களை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் பிரபலங்களின் குரலில் புத்தகங்களை ஒலிநூல்களாக மாற்ற முடியும் என்றும், வீடியோ விளையாட்டுகளுக்குப் பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களுடையது நல்ல நோக்கம்தான் என்றாலும் குரல்திருத்தத் தொழில்நுட்பமும் முகம்-மாற்றும் தொழில்நுட்பமும் சேர்ந்ததென்றால் பிரபலங்கள் கூறியது போன்ற போலி அறிவிப்புகளையும் உரைகளையும் உருவாக்கி, எல்லோரையும் நம்ப வைத்துவிடவும் முடியும்.

ஒபாமா என்ன சொல்கிறார்?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ‘சிந்தஸைஸிங் ஒபாமா’ என்ற ஆய்வுத் திட்டத்தைப் பற்றி நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒபாமாவின் உரைகளுள் ஒன்றின் ஒலியை எடுத்து முற்றிலும் வேறொரு காணொலியில் பொருத்தி, முந்தைய உரையின் குரலுக்கு ஏற்ப இந்தக் காணொலியில் ஒபாமாவின் முகபாவம் இருக்கும்படிச் செய்தார்கள். நம்பவே முடியாத துல்லியத்தில் அது இருந்தது! பல மணிநேரக் காணொலிக் காட்சிகளை ஆய்வுசெய்து அதன் மூலம் கிடைத்த பயிற்சியைக் கொண்டு இதை சாதித்தார்கள். இதுபோன்ற பித்தலாட்டச் செயல்பாடு எவ்வளவு தீமையை விளைவிக்கக் கூடியது என்பதைக் காட்டுவதற்காக இப்படிச் செய்துகாட்டினார்கள்.

போலிச் செய்திகளைத் தாண்டி வேறுசில அபாயங்களும் இருக்கின்றன என்கிறார் நிதீஷ் சக்ஸேனா. பர்மிங்காமின் அலபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி அறிவியல் துறையின் ஆய்வு இயக்குநராகவும் துணைப் பேராசிரியராகவும் அவர் இருக்கிறார். “யாரோ ஒருவருடைய அம்மாவைப் போல் நீங்கள் கைபேசியில் குரல் செய்திகளை அனுப்பிவிட முடியும். அல்லது ஒருவரை அவதூறு செய்யும் வகையில் அவரது நகல் குரல்களின் துணுக்குகளை இணையத்தில் பதிவேற்றிவிட முடியும்” என்கிறார் அவர்.

இதுபோன்ற மார்ஃபிங் தொழில்நுட்பங்கள் துல்லியத்தில் இன்னும் முழுமையடைந்துவிடவில்லை. இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொலிகளில் உள்ள நபர்களின் முகபாவங்கள் சற்று கோணல்மாணலாகவோ இயல்பற்றோ காணப்படுகின்றன. குரல்களும் சற்றே இயந்திர மனிதனின் குரல்போலத் தென்படுகின்றன. ஆனால், முறைகேடு நடந்திருக்கிறது என்று மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவில் ஒரு நபரின் தோற்றத்தையும் குரலையும் அப்படியே ஒருங்கிணைக்கக் கூடிய விதத்தில் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் கொஞ்ச காலத்துக்குள் மேம்பாடு அடையும்.

ஊடகங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. சமூக ஊடகங்களிலும் புரளிகளும் போலிச் செய்திகளும் புற்றீசல் போலப் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, செய்திகளாக இடம்பெற வேண்டியவை என்று தோற்றமளிக்கும் காணொலிகளையும் ஒலித் துணுக்குகளையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துச் சலித்தெடுக்க வேண்டியது செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை தலையாய பணியாகிவிடும்.

காணொலியோ ஒலித்துணுக்கோ அவை எங்கே உருவாக்கப்பட்டவை என்பதற்கான தடயங்கள் நிச்சயம் இருக்கும். குறிப்பிட்ட நிகழ்வில் வேறு யார் யார் அங்கே இருந்தார்கள், காணொலியில் உணரப்படும் வானிலையும் சம்பந்தப்பட்ட நாளின் வானிலையும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகின்றனவா என்பது போன்ற விஷயங்களும் இருக்கின்றன.

காணொலியில் உள்ள ஒளியமைப்பையும் நிழல்களையும் உற்றுக் கவனித்தும் பார்க்க வேண்டும். காட்சியின் சட்டகத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லாப் பொருட்களும் அம்சங்களும் சரியான உருவ அளவில் இருக்கின்றனவா, ஒலியும் காட்சியும் சரிவரப் பொருந்திப்போகின்றனவா என்பதையெல்லாமும் உற்றுநோக்க வேண்டும் என்கிறார் மாண்டி ஜென்கின்ஸ். செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கக் கூடிய ‘ஸ்டோரிஃபுல்’ என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர் இவர்.

பேரழிவுக்கும் வழிவகுக்கும்!

மாற்றியமைக்கப்பட்ட காணொலி போன்றவற்றை செய்தியறையில் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தினால் தவறானவை சிக்காமல் இருக்க முடியாது. ஆனால், புள்ளிபுள்ளியாகத் தெரியும் காணொலியைக் கூட சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவை பரபரவென்று பரவி, அதனால் சமூக அளவிலும் அரசியல் அளவிலும் ராஜாங்க அளவிலும் பேரழிவுகளே ஏற்படக்கூடும். வடகொரியாவின் மீது ட்ரம்ப் போர் அறிவிப்பது போன்ற போலி வீடியோ வெளியாகி, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பற்றிக்கொண்டால் என்னவாகும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

“ட்ரம்பைப் போல ஒருவர் இருந்து ட்ரம்பைப் போலவே பேசினால் எல்லோரும் அவரை ட்ரம்ப் என்றுதானே நினைப்பார்கள்!” என்கிறார் சக்ஸேனா. “பொய்யான ஒன்றை மக்கள் நம்பும்படிச் செய்வதற்கு இதுபோன்ற போலிக் காணொலிகளும் ஒலித்துணுக்குகளும் இல்லாமல்கூட செய்துவிட முடியும் என்பதை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம். நிலைமை இப்படி இருக்கும்போது இந்தப் புதிய தொழில்நுட்பம் மேலும் அந்த நிலைமையை மோசமாக்கிவிடக்கூடும்” என்கிறார் ஜென்கின்ஸ்.

- நன்றி: ‘தி கார்டியன்’,

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Thursday, August 10, 2017

முரசொலி: திராவிட முரசு!

புகைப்பட உதவி: யோகா

ஆர். கண்ணன்
(முரசொலியின் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி 'தி இந்து’ நடுப்பக்கத்தில் என் மொழிபெயர்ப்பில் 10-08-2017 அன்று வெளியான கட்டுரை)

திமுகவின் கட்சி இதழான ‘முரசொலி’ தனது 75-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. 60 ஆண்டு காலம் ஒரு நாள் விடாமல் தினசரி இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. கட்சியின் தலைவரான மு.கருணாநிதி தான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். அச்சு ஊடகம் வழியாக அரசியல்ரீதியாகக் குரல் கொடுப்பதென்பது நவீன யுகத்தில் அமெரிக்காவில் வெளியான ‘ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்’ கட்டுரைகளின் மூலம் குறிப்பிடத் தகுந்த விதத்தில் தொடங்கியது. 1861-ல், பிற்பாடு பிரான்ஸின் பிரதமராக ஆகவிருந்த ஜோர்ஜ் க்ளமான்ஸோ தனது இடதுசாரிக் கருத்தியலைப் பரப்புவதற்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 1900-ல் லெனின் ‘இஸ்க்ரா’ என்ற பெயரில் கம்யூனிஸ இயக்கத்துக்கான பத்திரிகையைத் தொடங்கினார். இந்தியாவில், தொழிற்சங்கத்திலும் கம்யூனிஸத்திலும் முன்னோடியான சிங்காரவேலர் 1923 வாக்கில் மாதம் இருமுறை வெளியாகும் இதழைத் தொடங்கினார். தனது சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதற்காக பெரியார் ‘குடிஅரசு’ இதழை 1925-ல் தொடங்கினார். 1953-ல் திமுக நிறுவனர் அண்ணா ‘நம் நாடு’ என்ற இதழை திமுகவுக்காக நிறுவினார்.

முதல் குழந்தை

மு.கருணாநிதி தனது வழிகாட்டிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் பாணியை அச்சு ஊடகத்தில் பின்பற்றினார்; ஆழமாக வேரூன்றியிருந்த சமூக நடை முறைகளுக்குச் சவால் விடுப்பதையும், தமிழ் கலாச்சார தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதையும் முக்கால் நூற்றாண்டாக அவர் செய்துவந்திருக்கிறார். 90 வயதைக் கடந்தவரான கருணாநிதி ‘முரசொலி’யைத் தனது ‘முதல் குழந்தை’ என்று அடிக்கடி குறிப்பிட்டதில் எந்த ஆச்சரிய மும் இல்லை. திராவிட இயக்கம், திமுக ஆகியவற்றின் லட்சியங்களுக்குப் பயன்படும் விதத்திலான தனது எழுத்துவன்மையை கருணாநிதி ‘முரசொலி’யில் பறைசாற்றினார்; இவ்விதத்தில், ‘முரசொலி’யில் கருணாநிதி யின் எழுச்சிமிகு பேனா வெளிப்படுத்திய சாதுரியமான கவர்ச்சியை அவருடைய எதிரிகளால்கூட அவ்வளவு எளிதில் புறம்தள்ளிவிட முடியவில்லை.

தொண்டர் படையும் அறிவுஜீவிக் குழுவும்

இந்திய அரசியல் வரலாற்றிலேயே திராவிட இயக்கத் தின் அளவுக்கு மேடைப் பேச்சையும் எழுத்துத் திறனை யும் பயன்படுத்திய கட்சி வேறு எதுவும் இல்லை. மேடை நாடகங்களும் திரைப்படங்களும் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான களத்தைக் கொடுத்தன என்றால், கட்சிப் பத்திரிகைகள் கொள்கைரீதியிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தன. மக்களிடமும் தொண்டர்களிடமும் வாசிப்பை ஒரு இயக்கமாகக் கொண்டுசெல்ல ஆரம்ப நாட்களில் திமுகவின் படிப்பகங்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டன. வேலை நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதுகளில் தொண்டர்கள் ஒன்றுகூடி பத்திரிகைகளை வாசித்தனர். பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள், தலையங்கங்கள், கவிதைகள், நாடகங்கள், அறிக்கைகள், சிறுகதைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் விவாதிக்க இந்தப் படிப்பகங்களே களம் அமைத்துக்கொடுத்தன. இயக்கத்தில் இருந்தவர்களே ஏராளமான பத்திரிகைகளையும் கொண்டுவந்தனர். இந்தப் பத்திரிகைகளின் மூலம் தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர் படைகளையும், கூடவே அறிவுஜீவிகளின் அணியையும் கட்டியெழுப்பி, கட்சிக்கு அமைப்புரீதியான ஒரு அரணை உருவாக்கியது இயக்கம்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட வெவ்வேறு காலச் சூழல் மாற்றங்களால் அந்தப் படிப்பகங்களெல்லாம் இன்று கடந்த கால நினைவுகளாக ஆகிவிட்டன; திராவிட இயக்கத்தாரால் கொண்டுவரப்பட்ட ஏராளமான பத்திரிகைகள் நின்றுவிட்டன என்றாலும், சில பத்திரிகைகள் காலத்தில் நங்கூரம் பதித்து நீடித்து நின்றன. அவற்றில் தனித்துயர்ந்து நின்றது ‘முரசொலி’. தனது தொடக்கக் காலத்தில் விசுவாசமிக்க தொண்டர்களைத் தன்னகத்தே ஈர்த்துவைத்துக்கொண்டு, கட்சியின் செயல்திட்டங்கள் குறித்த உறுதிப்பாட்டைப் பல்லாயிரக்கணக்கானோரிடம் ஏற்படுத்தியதன் மூலம் காலம் செல்லச் செல்ல, திமுகவினர் மத்தியில் ‘முரசொலி’ வாசிப்பு ஒரு பழக்கமாக, அதாவது அன்றாடச் சடங்கு போல ஆகிவிட்டது. இன்றும் பல திமுக குடும்பங்களில் ‘முரசொலி’ ஒரு அடையாளமாகவே நீடிக்கிறது.

‘அன்புள்ள உடன்பிறப்பே..’

ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கே உரித்தான சில பிரத்யேக அடையாளங்களைப் பெற்றிருப்பதுபோல, ‘முரசொலி’யில் வாசகர்கள் முதல் கவனத்தை ஈர்ப்பது சமீப காலம் வரை கருணாநிதி தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு எழுதிவந்த கடிதங்கள்தான். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள புனித பவுலின் கடிதங்கள்போல, முரசொலியின் நீண்ட கடிதங்கள் ஒரே நேரத்தில் போதனை செய்யக்கூடியவையாகவும் விவாதிப்பவையாகவும் இருப்பதால், வாசகரைப் பொறுத்தவரை அந்தக் கடிதங்கள் பிரத்யேகமாக அவர்களுக்கென்றே எழுதப்பட்டவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

தமிழர்களின் நலன்கள், தமிழ் மொழி - பண்பாடு, சமூகநீதி, இந்தித் திணிப்பு, மாநில சுயாட்சி, விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைகள், பெண்கள் முன்னேற்றம், நிலச் சீர்திருத்தங்கள், சமூக, பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள், உழைக்கும் வர்க்கம், தேசிய, சர்வதேச நிகழ்வுகள், கட்சியின் நிகழ்ச்சிகள் என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி அந்தக் கடிதங்கள் விவாதித்தன. திமுக ஆட்சியில் இருந்தபோது, கட்சியின் சாதனைகளை ‘முரசொலி’ பறைசாற்றியது; மதுவிலக்கை நீக்கியது உள்ளிட்ட விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அது நியாயப்படுத்தியது; ஆட்சியைக் குறித்தும் திமுகவைக் குறித்தும் எதிர்க் கட்சியினர் செய்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தது. கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற முன்னாள் பொதுச்செயலாளர் இரா. நெடுஞ்செழியனைக் கட்சிக்குத் திரும்பி அழைத்துகூட 1978-ம் ஆண்டு ‘திறந்த மடல்’களை கருணாநிதி எழுதியதுண்டு.

அரசியல் கனம்மிக்க இதுபோன்ற நீண்ட கடிதங்கள் ‘முரசொலி’யில் 1954 வாக்கிலேயே தொடங்கிவிட்டன. கடிதங்களின் சக்தியைக் கண்டுகொண்டது கருணாநிதி யின் வழிகாட்டியான அண்ணாதான். 1955-ல் அவர் தனது கடிதப் பகுதியைத் தொடங்கினார்; ‘அன்புள்ள தம்பி’ என்று அவரது கடிதங்கள் ஆரம்பிக்கும். அந்தக் கடிதங்களெல்லாம் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின கூடவே, தொண்டர்களைப் போய்ச்சேர்வதற்கான கட்சியின் மிகப் பிரபலமான வழிமுறை அந்தக் கடிதங்கள்தான். அண்ணாவின் அகால மரணம் அவரது கடிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கருணாநிதி ஆரம்பத்தில் ‘நண்பா’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்; 1971-லிருந்து ‘உடன்பிறப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுநாள்வரை அந்தச் சொல் சபை வழக்கில்கூடப் பெரிய புழக்கத்தில் இல்லை. அதுதான் கருணாநிதியின் புத்திக்கூர்மை.

மூப்பின் காரணமாக கருணாநிதி ஒதுங்கிக்கொண்டபோது, கட்சிக்கு ‘முரசொலி’யும் கடித மரபும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவராகவே கருணாநிதியின் மகனும் கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்தப் பணியைத் தொடர்பவரானார். அண்ணா, கருணாநிதியின் மரபைப் பின்பற்றிக் கடிதங்கள் எழுதத் தொடங்கியிருக்கும் ஸ்டாலின், தனது கடிதங்களில் தன்னை ‘உங்களில் ஒருவன்’ என்று குறிப்பிட்டுக்கொள்வதன் மூலம், தொண்டர்களுடன் மேலும் நெருக்கமாக்கிக்கொள்ள முனைகிறார்.

முரசொலியும் எம்ஜிஆரும்

திமுக தொண்டர்களுடன் உயிரோட்டமாகத் தன் உறவை வைத்துக்கொள்ள கருணாநிதி ‘முரசொலி’யை எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் கீழே தொண்டர்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள விரும்பிய கீழ்நிலைத் தலைவர்களும் ‘முரசொலி’யை எப்படி ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. தங்கள் பெயர் வராதா என்ற ஏக்கம் எப்போதுமே கட்சிக்குள் இருந்தது. 1954-லிருந்து கட்சிக் குள் எம்ஜிஆரைச் சக்திவாய்ந்த தலைவராக வளர்த்ததில்கூட ‘முரசொலி’க்கும் ஒரு பங்கு இருந்தது என்று சொல்லப்படுவதிலிருந்து ‘முரசொலி’யின் செல்வாக்கு எவ்வளவு பெரியது என்பது புரியும். அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரின் தர்ம காரியங்கள், சமூக, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ‘முரசொலி’யில் செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாகவே திமுகவினரின் நெருக்கமான பத்திரிகையாக இருந்தாலும், 1969 முதலாகவே திமுகவின் அதிகாரபூர்வ ஏடாக ‘முரசொலி’ செயல்படத் தொடங்கியது (அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அப்போதுதான் கட்சியின் தலைவராகி இருந்தார் கருணாநிதி). கட்சிக்குள் நடைபெறும் நியமனங்கள், கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவற்றை வெளியிடுவதன் மூலம் அரசியல்வாதிகளை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் காணாமலடிப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதானது. கட்சியினர் இடைநீக்கமோ நீக்கமோ செய்யப்படும்போது ‘முரசொலி’யில் கட்டம்கட்டி வெளியாகும் செய்தி மரபே பின்னாளில் ‘கட்டம்கட்டு’ என்ற அரசியல் சொல்லாடலுக்கான காரணமாகயிருந்தது என்று சொல்பவர்கள் உண்டு.

நெருக்கடிநிலையின் நெருப்பாற்றில்…

பொதுச் சமூகத்தில் ‘முரசொலி’ பெரிய கவனத்தை ஈர்த்ததும் அதன் நெடிய வரலாற்றில் மிக காத்திரமான பங்களிப்புமானது நெருக்கடிநிலைக் காலகட்டத்தின்போது, அடக்குமுறைக்கு எதிராக ‘முரசொலி’ காட்டிய தீவிர எதிர்ப்புநிலை! அதன் 75 ஆண்டு கால வரலாற்றின் உச்சம் அது. இந்த எதிர்ப்பையும் சாதுர்யமாகவே அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், நெருக்கடிநிலையின் மூர்க்கத்தனமான தணிக்கை எல்லாவற்றிலும் கத்தரியை வைத்தது. பத்திரிகையை மூடுவதற்கான சாத்தியங்களைத் தேடிக்கொண்டிருந்தது. அரசியல்ரீதியிலான எழுத்துகளை நோக்கி நெருக்கடிகால இந்திரா அரசு கோபப் பார்வை வீசியதால், ‘வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்’, ‘விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்’ என்றெல்லாம் தலைப்பிட்டு கடிதங்களை வெளியிட்டார் கருணாநிதி. அப்போது மிசா சட்டத்தின் கீழ் திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் செய்தியை நேரடியாக வெளியிட்டால் தணிக்கையில் சிக்கிவிடும் என்பதற்காக பிப்ரவரி 3, 1976 அன்று, அதாவது அண்ணா வின் நினைவு நாள் அன்று, வெளியிட்ட செய்தியின் தலைப்பு இதுதான்: ‘அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’.

இடர் கால ஆபத்பாந்தவன்

ஆட்சியிலிருந்தாலும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி; ஒரு பேரிடரை நாடு எதிர்கொள்ளும்போது நிவாரணத்தில் தன்னை உடனடியாக ஈடுபடுத்திக்கொள்வது ‘முரசொலி’யின் மரபு. வாசகர்களிடம் நிதி திரட்டி அரசுக்கு அளித்துவிடும். ‘முரசொலி’ மீதான விமர்சகர்களின் விமர்சனங்களில் முதன்மையானதும் தொடர்ச்சியானதும் எதுவென்றால், எதிராளிகள் மீதான கொச்சையான விமர்சனங்களை வெளியிடுவதும் தரக்குறைவான மொழியைத் தேர்ந்தெடுப்பதும்.

தனது 75-வது ஆண்டிலும், தொழில்நுட்பத்தின், தகவல் தொடர்பின் யுகத்திலும் காலத்திற்கேற்ப ‘முரசொலி’ மாற்றமடைந்திருப்பதுபோல் தோன்றுகிறது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பராமரிப்பு சார்ந்தும், மரம் நடுதல், மாசுபாடு போன்றவை சார்ந்தும் கட்சியினரின் செயல்பாடுகளைப் பற்றி ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. மேலும், தமிழ்க் கலாச்சார தேசியம் தொடர் பான தனது அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாமல் இந்த நவீன காலத்துச் சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ‘முரசொலி’ தனது பக்கங்களில் கவனப்படுத்துகிறது. தமிழ்ப் பெருமிதத்தின் மீதும் தமிழின மேன்மையின் மீதும் தீவிரமான பிடிப்பு கொண்டிருப்பதுபோல் சிறப்பான அரசு நிர்வாகம், சேவைகள் மக்களைச் சென்றடைதல், வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பசுமையான எதிர்காலம், வளம் போன்றவற்றின் மீதும் பிடிப்பு கொண்டிருப்பதால், வருங்காலத்திலும் ‘முரசொலி’ மிக முக்கியமான கட்சி இதழாக நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆர்.கண்ணன், இராக்குக்கு உதவுவதற்கான ஐ.நா.வின் குழுவின் தலைவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியவர்.

தமிழில்: ஆசை
- நன்றி: ‘தி இந்து’