Monday, August 14, 2017

பாக்தாதின் ‘ஞான இல்லம்’: உலகுக்கு இஸ்லாமின் பெரும் பங்களிப்பு!


மினி கிருஷ்ணன்

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 13-08-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)

நபிகள் நாயகத்தின் மறைவுக்கு 25 ஆண்டுகளுக்குக்குள் அரேபியர்கள் பாரசீகம், சிரியா, மத்திய ஆசியாவில் கொஞ்சம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார்கள். கிழக்கே, சிந்து நதி, சிந்து மாகாணம் வரை வந்துவிட்டார்கள். மேற்கே, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா போன்றவற்றைக் கைப்பற்றினார்கள். கடல்களைக் கடந்து சென்று ஜிப்ரால்டரை அடைந்தார்கள். கூடிய விரைவில் ஸ்பெயினும் அவர்களிடம் வீழ்ந்தது.

கொஞ்ச காலத்தில் அவர்களுக்கு வேறு விதமான அதிகாரமும் வசமானது. கி.பி. 751-ல், சீனக் காகிதத் தயாரிப்பாளர்களை அவர்கள் சிறைபிடித்தார்கள். காகிதத் தயாரிப்பு குறித்து இப்படிப் பெறப்பட்ட அறிவு அதுவரை எழுத்து எப்படிப் பகிர்ந்துகொள்ளப்பட்டது, எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பதையெல்லாம் புரட்டிப்போட்டது. உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்த அவர்கள், நூலகங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். இதனால், அவர்கள் காலடி பட்ட இடங்களெல்லாம் அறிவுத் தாகம் பெருக்கெடுத்தது. தங்கள் கலாச்சாரம் தவிர்த்த ஏனைய கலாச்சாரங்களிலிருந்து நூல்களையும் சுவடிச் சுருள்களையும் மொழிபெயர்ப்பதில் முதன்முதலில் ஆர்வம் காட்டியவர்கள் இஸ்லாமியர்களே. காலீஃப்களின் ஞான சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட அங்கே அடுத்த 500 ஆண்டுகளுக்கு இஸ்லாமிய நூலகக் கட்டமைப்பு நடைபெற்றது.

கடவுளின் பரிசு

ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில், கார்தபா பிரதேசத்திலும் ஸ்பெயினிலும் உள்ள அறிஞர்கள் கெய்ரோ, பக்காரா, சமர்க்கண்ட், பாக்தாத் போன்ற நகரங்களில் உள்ள அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தனர். இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள நகரம் பாக்தாத்! பாரசீக மொழியில் ‘பாக்தாத்’ என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம்.

பாக்தாத் நகரம் கி.பி. 762-ல் உருவானது. இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் வரை விரிந்திருந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த காலீஃப் மன்சூர், டைக்ரிஸ் நதிவழியாகப் பயணித்து, தங்களுக்கென்று ஒரு நிரந்தர இருப்பிடத்தைத் தேடினார். இறுதியாகத் தேர்ந்தெடுத்த இடம்தான் பாக்தாத். அதற்குப் பிறகு தனது தலைநகரை டமஸ்கஸிலிருந்து பாக்தாதுக்கு மாற்றிக்கொண்டார். பல்வேறு அறிவுச் செயல்பாட்டு மையங்களை அவர் ஒன்றிணைத்தார்; ஆய்வுகள் மேற்கொள்ளவும் உலக மொழிகளிலிருந்து அரபு மொழிக்கு நூல்களை மொழிபெயர்க்கவும் அறிஞர்களை அவர் பணிக்கு அமர்த்தினார். இதன் சிறப்பு என்னவென்றால், அந்த மொழிபெயர்ப்புகளைச் செய்த பெரும்பாலான எழுத்தாளர்களின் தாய்மொழி அரபு கிடையாது.

சிரியா, கிரீக், பாரசீகம், யூதம், இந்து, அரிமீனிய மொழிபெயர்ப்பாளர்களின் குழுக்களுக்கு அபாஸித் காலிஃப்கள் ஆதரவளித்தனர். அவர்கள் காலகட்டத்தில், எழுத்தாளர்களும் அறிஞர்களும் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு வந்துகொண்டிருந்தது. கல்வித்துறை சார்ந்த வாழ்க்கை என்பது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புகளுக்கு எடைக்கு எடை தங்கம் தரப்பட்டது. போர்களின்போது அரிய சுவடிச் சுருள்களும் தொன்மைவாய்ந்த பிரதிகளும் குறிவைக்கப்பட்டன. குறிப்பாக, அபாஸித்களுக்கும் ஃபைஸாண்டைன் பேரரசுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையின்போது தாலமியின் ‘அல்மஜெஸ்ட்’ என்னும் நூல் பணயமாகக் கேட்கப்பட்டது.

அந்தக் காலத்தில் உலகிலேயே மிகவும் கலாச்சார வளம் கொண்ட இடங்களுள் ஒன்றாக பாக்தாத் புகழ்பெற்றது. அந்த நகரத்தின் கதைசொல்லிகள், அறிவியலாளர்கள், ஓவியர்கள் அறிஞர்களெல்லாம் தொன்மைக் கால உலகின் புகழ்பெற்ற படைப்புகள் பெரும்பாலானவற்றை அரபி மொழிக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

சுவடிகளை வாங்கும் வழக்கம் என்பது சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ‘பிரம்மாஸ்புத சித்தாந்தா’ எனும் கணித நூலை 8-ம் நூற்றாண்டில் அரபிக்கு மொழிபெயர்த்ததிலிருந்து தொடங்கியது. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வானியல், மருத்துவம், தத்துவம், இயற்கை அறிவியல் குறித்த சுவடிகள் எதுவானாலும் எந்த விலை கொடுத்தேனும் வாங்கி வரும்படி அறிஞர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தின் அறிவுப்பரப்பு பரவிய வேகத்தைவிட அதிவிரைவாகவும் விஸ்தீரணமாகவும் அரபுலக அறிவுப் பரப்பு பரவியது. இவ்வாறு, மனித மனம் மீதும் உலகின் எதிர்காலத்தின் மீதும் அரபுலகம் செலுத்திய தாக்கம் அளப்பரியது. இந்த உத்வேகம் பெரிதும் பீறிட்டுப் பாய்ந்தது ஒரே ஒரு நகரத்திலிருந்துதான்.

அறிவுலகின் மையம்

கி.பி. 830-ல் ஹாரூண்-அல்-ரஷீதின் மகனான அல்-மாமூன் எல்லாச் சுவடிப் பிரதிகளையும் பாதுகாத்து வைப்பதற்காக ‘பெய்ட் அல்-ஹிக்மா’வை அதாவது ‘ஞானத்தின் இல்ல’த்தைக் கட்டியெழுப்பினார். அந்த நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் வரும் யாரும் அங்கே நுழையலாம். மொழிபெயர்ப்பாளர்கள், எழுதுநர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், பிரதியெடுப்பவர்கள் போன்றோர் கூட்டு மொழிபெயர்ப்புக்காகவும், உரையாடல், விவாதங்கள் போன்றவற்றுக்காகவும் தினமும் அங்கு ஒன்றுகூடுவார்கள். பல்வேறு அறிவியல் துறைகள் தொடர்பான நூல்கள் கூட்டு உழைப்பின் மூலம் தயார் செய்யப்படும். அந்தப் புத்தகங்கள் வேறு மொழிகளில் இருந்தால் அந்த மொழிகளிலிருந்து அரபிக்கும் அரபி மொழியில் இருந்தால் அரபியிலிருந்து வேறு மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும்.

அரபி, பாரசீகம், ஹீப்ரூ, அரமைக், சிரியாக், கிரேக்கம், லத்தீன் மொழிப் புத்தகங்களாலும் ஆங்காங்கே சம்ஸ்கிருதப் புத்தகங்களாலும் அங்குள்ள சுவர்கள் நிரம்பியிருக்கும். அரபி-கிரேக்க-பாரசீக-இந்திய மனங்களின் சங்கமத்தின் விளைவாக அரிஸ்டாட்டிலிய தர்க்கம், பிரபஞ்சவியல், மருத்துவம், கணிதச் சிந்தனைகளெல்லாம் வளர்த்தெடுக்கப்பட்டன. அந்த ‘ஞான இல்ல’த்தில் நடைபெற்ற ஆவணக்காப்பு வேலைகள், ஆய்வுகள் போன்றவை இல்லையென்றால், அந்த இல்லத்தின் அறிவுச் சேகரங்கள் பிற்பாடு லத்தீனில் மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் தொன்மையான அறிவுச் செல்வத்தில் பெரும்பாலானவை இன்று நம் கைக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.

ரத்தமும் மையும் கலந்த பேராறு

பிப்ரவரி 10, 1258-ல் மங்கோலியப் பேரரசன் ஹுலாகு கான் தனது தாத்தா செங்கிஸ் கானின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில் பாக்தாத் நகரத்தைச் சூறையாடினான்; பாக்தாத்மீது கையை வைத்தால் மொத்த இஸ்லாமிய உலகமும் அவர்களுக்கு எதிராக ஒன்றுதிரள நேரிடும் என்ற காலீஃபின் எச்சரிக்கையை அவன் பொருட்படுத்தவில்லை. கடவுளின் பரிசாகிய இந்த நகரத்தை, மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் இந்த மையத்தை, மனவுலகின் செல்வங்களால் நிரம்பி வழியும் இந்த நகரைச் சூறையாடியது மட்டுமல்லாமல் தீக்கிரையாக்கினான் ஹுலாகு கான். ஆயிரக் கணக்கான மாணவர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் அப்போது உயிரிழந்தார்கள். காலீஃப், அரசருக்கு இணையாகக் கருதப்பட்டதால் ரத்தம் தரையில் சிந்தாதபடி அவர் கொல்லப்பட்டார். அவரை ஒரு கம்பளத்துக்குள் வைத்துச் சுருட்டி, குதிரைகளை அவர் மேல் ஓட விட்டுக் கொன்றார்கள்.

அரண்மனைகளையும் வீடுகளையும் 36 நூலகங்களையும் மங்கோலியர்கள் சூறையாடினார்கள். ‘ஞானத்தின் இல்லம்’ ஓரிரு நாட்களுக்குள் சுவடின்றி அழிக்கப்பட்டது. டைக்ரிஸ் நதி, கொல்லப்பட்டவர்களின் ரத்தத்தால் சிவப்பாக ஓடியதாகவும் அதன் பிறகு புத்தகங்களின் மையால் கருப்பாக ஓடியதாகவும் சொல்லப்படுவதுண்டு. அனைத்து வானியல் நோக்ககங்களும், பிற பரிசோதனை முயற்சிகளும் அந்த நூலகத்துடன் சேர்ந்து சுவடின்றி மறைந்தன. கூடவே, மனித வரலாற்றில் மிகப் பெரிய மொழிபெயர்ப்புத் துறையும்! ஹுலாகு கானின் வாரிசுகள் கலை, கல்வியறிவு போன்றவற்றைப் பிற்காலத்தில் மதிக்கத் தொடங்கியதுதான் இதில் முரண்நகை!

-மினி கிருஷ்ணன், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் (ஓ.யூ.பி.) மொழிபெயர்ப்புப் பிரிவில் செம்மையாசிரியராக (எடிட்டர்) இருக்கிறார்.

நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)

No comments:

Post a Comment