Saturday, May 14, 2016

இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு! - டேவிட் அட்டன்பரோ பேட்டி


('தி இந்து’ நாளிதழின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் 14-05-2016 அன்று எனது மொழிபெயர்ப்பில் வெளியான பேட்டி)

இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’, ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.
புகழ்பெற்ற ‘பிளானட் எர்த்’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் அவரே குரல் கொடுக்கப்போகிறார் என்று பி.பி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தயாரிப்பாளர், எழுத்தாளர், நிகழ்ச்சி வழங்குபவர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அவர் வழங்கிய ஆவணப்படங்களும் தொடர்களும் 100-ஐத் தாண்டும். அவரது புத்தகங்களின் எண்ணிக்கையும் 25-ஐத் தாண்டும். எனினும் அவரது ஆர்வமும் உத்வேகமும் சற்றும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து:
பூச்சிகளைப் பற்றி பெரும்பாலானோர் புரிந்துகொள்ளத் தவறும் விஷயங்கள் என்ன?
அறிவு என்பது மகத்தான விஷயம், மூடநம்பிக்கைதான் அதன் எதிரி. எல்லா சிலந்திகளும் கடிக்கும் என்பதும், அவை எல்லாமே விஷம் கொண்டவை என்பதும் மூடநம்பிக்கைகள்தான். ஆகவே, இவற்றைப் பற்றி மேலும்மேலும் தெரிந்துகொள்வது நமக்கு நன்மை தரும். மரவட்டை என்பது உண்மையில் தாவர உண்ணி என்றும், அதன் வாய்ப்பகுதி மிகவும் நுண்ணியதாக இருப்பதால் அதனால் நம்மைக் கடிக்க முடியாது என்றும் நமக்குத் தெரிந்திருந்தால் நம் உடலின் மீது மரவட்டை ஊர்வதைப் பற்றி நாம் எந்தக் கவலையும் பட மாட்டோம்.
இன்னொரு புறம் பூரான்கள். மரவட்டைகளைவிட குறைவான கால்களைக் கொண்டவை அவை. ஆனால், வேகமாக நகரக்கூடியவை. வேட்டை இயல்பு கொண்ட பூரான்கள் கடித்தால் விஷம் என்பது நமக்குத் தெரிந்ததால்தானே, அவற்றை நாம் அண்டுவதில்லை!

உங்களின் நீடித்த ஆர்வத்துக்கும் ஆற்றலுக்கும் என்ன காரணம்?
இயற்கை வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டிராத ஒரு குழந்தையைக்கூட நான் சந்தித்ததே இல்லை. ரொம்பவும் சாதாரண விஷயம் இது, ஐந்து வயதுக் குழந்தையொன்று ஒரு கல்லைப் புரட்டிப் பார்த்து அதற்கு அடியில் இருக்கும் நத்தையொன்றைப் பார்த்துவிட்டு ‘ஹை! அருமையான புதையல்!’ என்று சொல்லிவிட்டு ‘இது எப்படி வாழ்கிறது, இதன் முன்னே நீட்டிக்கொண்டிருப்பது என்ன?’ என்றெல்லாம் கேட்டுக்கொள்ளுமல்லவா, அப்படித்தான் நானும்.
குழந்தைகளுக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும். இயற்கை என்பது மிகவும் ஆச்சரியமூட்டக்கூடியது என்று குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். இயல்பாகப் பெற்ற, ‘இயற்கையின் மீதான அந்த ஆர்வத்தை நாம் எப்படி, எப்போது இழக்கிறோம்?’ என்பதுதான் நாம் அவசியம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
இயற்கை இன்று எதிர்கொண்டிருக்கும் மோசமான பிரச்சினைகள் என்ன?
பருவநிலை மாற்றத்தால் புவிவெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பது மிகவும் கவலை ஏற்படுத்தும் விஷயம். நமக்குக் கிடைத்த உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உலகம்தான் இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கப்போகிறது. அதாவது முன் எப்போதையும்விட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியதாக அந்த உலகம் இருக்கும்.
அது மட்டுமல்லாமல், நான் குழந்தையாக இருந்த காலகட்டத்தில் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்காத அளவில் கடுமையான பிரச்சினைகளைக் கொண்ட உலகத்தைத்தான் இன்றைக்கு நாம் விட்டுச்செல்கிறோம். புதுப்பிக்கத் தகுந்த வளங்களைக் கொண்டு மின்னாற்றலை உருவாக்கி அதைச் சேமிப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.
அப்படிக் கண்டறிந்தால் எண்ணெய், கரி மற்றும் இதர கரிம எரிபொருட்களால் எழும் பிரச்சினைகள் தீரும் என்று நம்புகிறேன். பொருளாதாரரீதியிலும் மற்ற வழிமுறைகளை நாடவே விரும்புகிறோம். அப்படிச் செய்வதை பூமியைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திசையை நோக்கி பெரும் பாய்ச்சல் என்றே கருத வேண்டும்.
இப்போது 90 வயதைத் தொட்டிருக்கிறீர்கள், உங்கள் சாதனைகளின் உச்சம் என்று நீங்கள் கருதுபவை எவை?
காட்சி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது தொலைக்காட்சி. ஈடில்லாத விதத்தில் இயற்கை வரலாற்றை நமக்கு தொலைக்காட்சி வழங்கியிருக்கிறது. இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகளை நான் தயாரித்து வழங்கியதுதான், தொலைக்காட்சியின் மணிமகுடத்தில் ஒரு மாணிக்கக் கல் என்று சொல்வேன். தொலைக்காட்சித் துறைக்குள், குறிப்பாக இயற்கை வரலாற்றுக்குள் நான் நுழைந்ததற்கு முக்கிய காரணம், அது ரொம்பவும் உற்சாகமூட்டுவதாக இருந்ததுதான். இந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். ஆகவே என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘ஆமாம், நாம் செய்தது உருப்படியான விஷயம்தான்’ என்று என்னால் சொல்ல முடிகிறது.
ரஷ்யா, சீனா, ஹங்கேரி என்று எல்லா நாடுகளிலிருந்தும் எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எங்களுக்குக் கடிதங்கள் வரும். இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துத் தாங்கள் மிகவும் நெகிழ்ந்துபோனதாகவும் தொலைக்காட்சியின் மூலம்தான் இயற்கை வரலாற்றின் அருமையைத் தாங்கள் உணர்ந்துகொண்டதாகவும் அவர்கள் சொல்வார்கள். இதுதான் எனக்கு மிகவும் முக்கியம்!
- © நியூயார்க் டைம்ஸ், 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
- நன்றி: ‘தி இந்து’ (http://goo.gl/b04dth)

1 comment:

  1. இயற்கை மீதான ஈர்ப்பை நம்முள் மேம்படுத்துவதை இவரது பேச்சு உணர்த்துகிறது.

    ReplyDelete