தொகுப்பு: ஆசை
(‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் 25-05-2016 அன்று வெளியானது)
நம் ஊரில் சாலிம் அலியைப் ‘பறவை தாத்தா’ என்று அழைப்போமல்லவா! அதுபோல் உலகமெல்லாம் ‘பறவை தாத்தா’ என்று அழைக்கப்படுபவர் டேவிட் அட்டன்பரோ. அவர் ‘பறவை தாத்தா’ மட்டுமல்ல. தவளை தாத்தா, குரங்கு தாத்தா, திமிங்கிலம் தாத்தா என்று எல்லா உயிரினங்கள் பேரையும் சொல்லி அழைக்கலாம். அந்த அளவுக்கு இயற்கை உலகில் திரிந்து இயற்கையின் அதிசயங்களை நமக்குத் தொலைக்காட்சி மூலமாக அறிமுகப்படுத்தியவர் அவர்.
பறவைகளின் வாழ்க்கை, பாலூட்டிகளின் வாழ்க்கை, பூமியில் உயிர்வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அவர் தயாரித்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் மிகவும் பிரபலம். ‘காந்தி’ படம் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் டேவிட் அட்டன்பரோ. அவர் தனது 90-வது பிறந்த நாளைத் தற்போது கொண்டாடியிருக்கிறார். இயற்கை உலகில் அவர் வழியாக நமக்குக் கிடைத்த அற்புத தருணங்களில் சில இங்கே.
1. காடழிப்பும் லயர் பறவையும் (‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ், 1998)
லயர் பறவையை ஒளிப்படம் எடுத்தபோது கேமராவின் ஷட்டர் சத்தத்தை அது மிமிக்ரி செய்தது. அடுத்து அது செய்தது அட்டன்பரோவை மட்டுமல்ல பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியது; கூடவே, குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போது, பக்கத்தில் இயந்திர ரம்பத்தைக் கொண்டு மரங்களை யாரோ வெட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த இயந்திர ரம்பத்தின் சத்தத்தையும் லயர் பறவை மிமிக்ரி செய்தது அட்டன்பரோ படம் பிடித்த மகத்தான தருணங்களுள் ஒன்று.