Wednesday, August 19, 2015

அணைக்குத் தடை போடுமா பறவை?


நேஹா சின்ஹா

(‘தி இந்து’ நாளிதழின் உயிர்மூச்சு இணைப்பிதழில் 15.08.2015 அன்று வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை. சுருக்கமாகத் தமிழில்: ஆசை)

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் இந்தியாவின் அதானி தொழிற்குழுமம் நிலக்கரி தோண்டியெடுப்பதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதியை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று மறுத்திருக்கிறது. அதற்கான காரணத்தை நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது: இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள அரிய வகை அரணை இனம் ஒன்றுக்கும் பாம்பு இனம் ஒன்றுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.
கூச்ச சுபாவமுள்ள, சரசரவென்று ஊர்ந்துசெல்லக்கூடிய உயிரினம் ஒன்றினால் பெரிய திட்டப்பணி ஒன்றைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது நம்பவே முடியாத ஒரு விஷயமாகப் பலருக்கும் தோன்றலாம்; குறிப்பாக, விரைவான தொழில் வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால், ஒரு நாடு தனது உயிரினங்கள் மீது அக்கறை காட்டுவது அவசியம் என்ற செய்தியை அந்த நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது. உயிரினங்களின் அழகு, தோற்றம், சிறப்புத்தன்மை போன்றவற்றைக் காட்டிலும் உயிரினங்கள் உயிர்த்திருக்க வேண்டியதன் அவசியத்துக்குத்தான் ஆஸ்திரேலிய நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

இந்தியாவில்...
வட கிழக்கு இந்தியாவில் உள்ளதும், அழிவதற்குச் சாத்தியம் உள்ளதுமான இமாலயக் கொக்கு (பிளாக்-நெக்டு கிரேன்) விவகாரமும் அதே மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. அழகிய பறவை அது; கட்டுக்கடங்காதது; பளிச்சென்று இருப்பது; குறிப்பிட்ட பகுதி சார்ந்து இருப்பது; இந்த இமாலயக் கொக்கு புத்த மதத் தொன்மங்களில் மைய இடம்பிடித்திருப்பது.
சீனா, பூடான், இந்தியா ஆகிய நாடுகளில் மட்டும் காணப்படும் இந்தக் கொக்கு, குளிர்காலத்தில் அருணாசலப் பிரதேசத்தின் சங்தி, ஜெமிதாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு வருகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் ஜெமிதாங் பல காலமாக பவுத்த சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவருகிறது. ஆனால், தற்போது உத்தேசிக்கப்பட்டிருக்கும் நியம்ஜங் ச்சு அணை கட்டப் படுமானால், அந்தப் பகுதி மூழ்கிவிடும்.
அணைக்கு எதிரான வழக்கு
இந்த அணைத் திட்டத்துக்கு எதிராக தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. அந்த நீர்மின் திட்டத்துக்கு ஆதரவாக வாதிடுவோரின் வாதம் இதுதான்: இந்தத் திட்டத்தை நிறுத்தும் அளவுக்குப் போதுமான எண்ணிக்கையில் இமாலயக் கொக்குகள் அங்கே வருவதில்லை. இதன் எதிர்த்தரப்பு வாதம் அந்தக் கொக்கு குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கையையும், குளிர்கால வலசை இடமாக ஜெமிதாங்க் பகுதியை அந்தக் கொக்கு தேர்ந்தெடுத்திருப்பதையும் குறித்ததாகத்தான் இருக்கிறது.
பல்வேறு பிரச்சினைகளை இந்த வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது: 1. ஜெமிதாங்கில் காணப்படும் இமாலயக் கொக்கும் அங்குள்ள உயிர் பல்வகைமையும் (பயோடைவர்சிட்டி), ஒரு திட்டத்தைத் தடுத்து நிறுத்தப் போதுமானவையா? 2. இதுபோன்ற திட்டப் பணிகளைச் செயல்படுத்தும்போது ஆன்மிக, மத அக்கறைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியமா? 3. இதுபோன்ற கோரிக்கைகள் வெளிச்சத்துக்கு வரும்போது, சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதிகளைத் தருவதற்காக மேற்கொள்ளப்படும் ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வு’ (ஈ.ஐ.ஏ.) மறுபடியும் செய்யப்பட வேண்டுமா? அங்கு மேற்கொள்ளப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்’வில் இமாலயக் கொக்கு குறித்து, சுத்தமாக எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
கொக்கும் புத்தமும்
குளுமையான, உயரமான இடங்களை மட்டும் நாடக்கூடியது இந்தப் பறவை. சரியாக இது தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் புத்த மதமும் காணப்படுகிறது. புத்த மதத்தின் செவிவழிக் கதைகளிலும் தொன்மங்களிலும் இந்தப் பறவைகள் தலாய் லாமாவின் துணைகளாகக் கருதப்படுகின்றன.
அந்தக் கொக்கு இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே காணப்பட்டிருக்கிறது: லடாக்கில் இனப்பெருக்கம் செய்து (கிட்டத்தட்ட நூறு பறவைகள்தான்) அருணாசலப் பிரதேசத்தின் இரண்டு பகுதிகளில் குளிர்காலத்தில் இந்தப் பறவைகள் வலசை போகின்றன. உலக அளவில் இந்தப் பறவைகள் வலசை போகும் இடங்கள் 10-க்கும் குறைவுதான்.
இந்தப் பறவைகள் தற்போது அங்கே வருவதில்லை என்று வாதிடுகிறது அந்தத் திட்டப் பணிக்கு ஆதரவான வழக்கறிஞர் குழு. அந்தப் பறவைகள் அங்கே இன்னும் வருகின்றன என்பதற்கு ஜெமிதாங்கைச் சுற்றிலும் காணப்படும் புத்த மதத்தினரிடமும் ‘உலக இயற்கை நிதியம் (W.W.F.) போன்ற அமைப்புகளிடமும் புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன. இந்தப் பறவைகள் ஐந்து அல்லது ஏழு என்ற எண்ணிக்கையில்தான் அருணாசலப் பிரதேசத்துக்கு வருகின்றன. எனினும், அவற்றின் வருகை உள்ளூர் மக்களால் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
கணக்கில் இல்லை
இமாலயக் கொக்கு மட்டுமல்ல, சாடைர் டிராகோபான், மிஷ்மி ரென் சிலம்பன், அழகிய மரமிறங்கிக் குருவி (பியூட்டிஃபுல் நத்தாச்) போன்ற மற்ற ஓரிட வாழ்விகளும் இங்கே காணப்படுகின்றன
ஒரு திட்டப் பணிக்காக உத்தேசிக்கப் பட்டிருக்கும் இடத்தில் உள்ள தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவை குறித்தும், சம்பந்தப்பட்ட திட்டப் பணி அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டால் தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விரிவாக விவரங்களை வழங்க வேண்டியவைதான் ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வுகள்.’ 780 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்காக உத்தேசிக்கப்பட்ட நியம்ஜங் ச்சு அணையை எடுத்துக் கொண்டால், உயிர்ப்பல் வகைமை கேந்திரமொன்றில் இருக்கும் அந்தப் பறவையின் வாழிடங்கள் மூழ்குவது முதன்மையான பாதிப்பாக இருக்கும். ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்’வில் இது கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை.
இயற்கை அதிசயம்
இமாலயக் கொக்கோடு தொடர்புபடுத்தப்படும் ஆன்மிக அம்சம் என்பது அதன் கவர்ந்திழுக்கும் அழகால் மட்டும் உருவானதல்ல, எளிதில் காண முடியாத தன்மையாலும் அதன் தரிசனம் கிடைப்பது குறித்த எதிர்பார்ப்பாலும்தான் உருவானது. இயற்கையின் அதிசயங்கள் குறித்த உருவகம்தான் இந்த எண்ணங்கள்.
அருணாசலப் பிரதேசத்துக்கு வரும் கொக்குகளின் எண்ணிக்கை மட்டும் அல்ல, அந்த மாநிலத்துக்கு மட்டுமே அவை வருகின்றன என்பதே முக்கியமானது என்று டஹன் அருணாசலப் பிரதேசத்தின் டவாங் பள்ளத்தாக்கில் வாழும் துறவி என்னிடம் சொன்னார்.
இப்போது நம் முன்னால் ஒரு இறுதிக் கேள்வியொன்று எழுகிறது: நமது திட்டமிடல்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான முடிவுகளிலும் மக்களின் உணர்வுபூர்வமான நம்பிக்கைகளும், தொன்மங்களும் எந்த அளவுக்கு பரிசீலிக்கப்படுகின்றன? பவுத்தர்களைப் பொறுத்தவரை, தொலைதூரத்தில், பனிபடர்ந்து இருக்கும் அவர்களுடைய வாழிடத்தைத் தேடி இமாலயக் கொக்கு வருவதென்பது அவர்களது மதநம்பிக்கையின் நிரூபணம்; கண்கண்ட சாட்சி. சுற்றுச்சூழல் பாதுகாவலர்களைப் பொறுத்தவரை, தொலைதூரங்களைக் கடந்து குளிர்காலத்தில் அங்கே வந்து, அந்த இடங்களையே மாற்றியமைக்கும் அந்தப் பறவைகள் இயற்கையையும் அதன் அதிசயங்களையும் மேன்மைப்படுத்தும் மதச்சார்பற்ற நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு.
நமது நிலப்பரப்புகளில் என்ன திட்டங்கள் கொண்டுவருவது என்பதை முடிவுசெய்ய ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வுக’ளை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. அந்த மதிப்பாய்வுகள் எப்போதும் உண்மை யான தகவல்களை மறைத்துவிடும். இறுதியாக ஒன்று. அருணாசலப் பிரதேசத்துக்கு வரும் கொக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கை என்பது எப்போதும் எண்ணிக்கையைச் சார்ந்தது மட்டுமல்லவே.
நேஹா சின்ஹா, ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழக’த்தைச் சேர்ந்தவர்.
- நன்றி: ‘தி இந்து’
‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க: அணைக்குத் தடை போடுமா பறவை?

1 comment:

  1. இக்கட்டுரையை ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன். மனதில் கொள்ள வேண்டிய தற்காலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete