Monday, August 18, 2014

குழந்தைகளை விட்டுவிடுங்கள்!


ஆசை

(‘தி இந்து’ நாளிதழில் வெளியான கட்டுரை)


குழந்தைகள் இந்த உலகத்துக்குத் தேவையற்றவர்கள் ஆகிவிட்டார்களா? கைவிடப்பட்ட காருக்குள் விளையாடப் போனபோது கதவு தாழிட்டுக்கொண்டதால் உள்ளுக்குள் சிக்கி, மூச்சுத் திணறி நான்கு குழந்தைகள் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மேற்கண்ட கேள்விதான் என்னுள் எழுந்தது.

ஆழ்துளைக் கிணறு மரணங்கள், குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள், பிள்ளைகளை விற்றுத் தகப்பன்கள் குடிப்பது, பெண் சிசுக்கள் கொல்லப்படுவது, அதிகார மட்டத்தின் பொறுப்பற்றதனத்தால் பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகிச் சாவது என்றெல்லாம் நீண்டுகொண்டேபோய் காஸா, சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் நடக்கும் போர்களில் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் கொல்லப் படுவது என்று முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகமே ஒன்றுசேர்ந்து குழந்தைகளுக்கு எதிராகப் போரை நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சற்றும் குறையாத விதத்தில் நவீன வாழ்வும், அதன் பிரிக்க முடியாத அம்சமான உலகமயமாதலும், உலகமயமாதலின் முகவர்களான பெருநிறுவனங்களும் குழந்தைகள் மீது போர் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

நம்பிக்கையற்றவர்களின் உலகம்
ஒரு குழந்தை பிறக்கும்போது உள்ளூர அது இந்த உலகத்தின் மேல் ஏதோ நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. பிறக்கும்போது இந்த உலகம் அதற்குப் பரிச்சயமே இல்லாத ஒரு இடமாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால், அதற்கு உள்ளூர நம்பிக்கை என்ற ஒரு விஷயம் ஏற்படுவதற்கு முன்பே அது கொல்லப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அப்படிப் பிறந்துவிட்டாலும்கூட, பத்து வயதுக்குள் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சாத்தியங்களும் அதிகம். அந்தக் குழந்தை யார் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறதோ அவர்களாலேயே அப்படிப்பட்ட கொடுமைக்குள்ளாக்கப்படுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம்.

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ கருவுலகில் வெற்றி பெற்று வெளியுலகுக்கு உயிருடன் வந்துசேர்ந்த பிறகு நோய், இயற்கைச் சீற்றம் போன்றவற்றையும் தாண்டிப் பிழைத்திருக்குமென்றாலும், இந்த உலகில் அவர்களைக் கொல்வதற்குக் காத்திருக்கும் விஷயங்கள் ஏராளம். சாலையிலோ, வாய்க்கால் வரப்புகளிலோ நடக்கும்போது பெரியவர்கள் எப்போதும் மிகுந்த கவனத்துடன் நடப்பார்கள். அவர்களுக்கு இந்த உலகின் நயவஞ்சக வலைகளைப் பற்றி நன்கு தெரியும்: எந்த இடத்திலும் பாதாளச் சாக்கடை திறந்திருக்கலாம்; எந்த நேரத்திலும் பைக் ரேஸ்கள் பொதுச் சாலையில் நிகழலாம்; குடித்துவிட்டு யார் வேண்டுமானாலும் கார் ஓட்டிக்கொண்டு வரலாம்; வரப்புகளை ஒட்டிக் கிணறுகள் இருக்கலாம்; எங்காவது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்… இப்படியாக இந்த உலகின் மீது ஏராளமான அவநம்பிக்கைகளை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். உயிர் வாழ்வதற்குச் சக மனிதர்களின் மீது நம்பிக்கை கொள்வதைவிட, அவநம்பிக்கை கொள்வது மிகவும் அவசியமாகிறது.

ஆனால், இவையெல்லாம் பெரியவர்களான நமக்குத்தான். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த உலகமே விளையாட்டுக் களம்தான், வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான். அதனால்தான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கடுமையாகப் போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட அவர்களால் விளையாட முடியும். எந்த இடத்தையும் தாங்கள் விளையாடுவதற்கான இடமாக மாற்றிக்கொள்ள அவர்களால் முடியும். எதையும் தங்களுடைய விளை யாட்டுப் பொருளாக ஆக்கிக்கொள்ள அவர்களால் முடியும். நிறுத்தியிருக்கும் காருக்குள் நுழைவதும், சிறு குழியென்று குதித்து விளையாட நினைத்து ஆழ் துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடுவதும், ‘ஐ! ஏதோ கம்பி கிடக்கிறதே' என்று மின்னோட்டமுள்ள கம்பியைத் தவறுதலாகத் தொட்டுவிடுவதும் என்று எல்லாமே விளையாட்டுதான்; எல்லாமே விளையாட்டுப் பொருட்கள்தான். அந்த அளவுக்கு இந்த உலகத்தை அவர்கள் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே, அல்லது அதற்குத் தண்டனையாகவே உயிரிழக்கிறார்கள்.

எளிய இலக்குகள்
இந்த அளவுக்கா உலகம் குழி தோண்டி வைத்திருக்கும், குழந்தைகளைக் காவுகொள்ள? அதுவும் நாம் கற்பனையே செய்துபார்க்க முடியாத விதங்களிலெல்லாம் குழந்தைகளை இந்த உலகம் காவு கொள்கிறது. நவீன காலத்துக்கு ஏற்ப, குழந்தைகளைக் காவுகொள்வதில் உலகம் தன்னை மிகவும் நுட்பத்துடன் ‘அப்டேட்' செய்துகொள்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஆழ்துளைக் கிணறு மரணங்களோ, காருக்குள் சிக்கிக்கொண்டு ஏற்படும் மரணங்களோ, அணுகுண்டு மரணங்களோ, விஷவாயுக் கசிவு மரணங்களோ, கொத்துக்குண்டு மரணங்களோ, ஏவுகணை மரணங்களோ, விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதால் ஏற்படும் மரணங்களோ எதுவும் கிடையாது. முட்டாள்தனமான பெரியவர்களின் பொறுப்பற்ற செயல்களாலும், அலட்சியத்தாலும் இவற்றுக்கெல்லாம் சிறிதும் தொடர்பற்றவர்களான குழந்தைகள் பலியாவதுதான் பெரும் துயரம். எல்லா முட்டாள்தனங்களுக்கும் கொடூரங்களுக்கும் எளிய இலக்குகளாகக் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். உலகம் தன்னைப் பல்லாயிரக் கணக்கான மடங்கு ‘அப்டேட்' செய்துகொண்டிருப்பதன் விளைவுதான் இது.

விதிவிலக்கில்லை
அப்பா கொல்கிறார், அம்மா கொல்கிறார், அரசு கொல்கிறது, மதம் கொல்கிறது, இயற்கை கொல் கிறது. குழந்தைகளைக் கொல்வதில் யாருக்கும் எதற்கும் விதிவிலக்கில்லை. அப்பா தோண்டும் ஆழ்துளைக் கிணற்றிலேயே குழந்தை தவறி விழுந்து இறந்துவிடுகிறது. கடன் பிரச்சினையில் பிள்ளைக்கும் விஷம் கொடுத்துவிட்டு அம்மா சாகிறார். சமீபத்தில் தனது பெண்ணையே கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர், அந்தக் கர்ப்பத்தை மறைக்கும் முயற்சியில் அவளைக் கொலை செய்த சம்பவம் நினைத்தே பார்க்க முடியாத கொடூரம். குழந்தை பிறந்தபோது அதை ஆசையாகத் தூக்கிக் கொஞ்சிய தந்தைதான் பிறகு இப்படிச் செய்கிறார் என்பதை நம்பக்கூட முடியவில்லை.

காரில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் இறந்துபோன சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை அலட்சியங்கள் ஒன்றுசேர்ந்து அந்தக் குழந்தைகளைக் கொன்றிருக்கின்றன. கைப்பற்றிய காரை நான்கு ஆண்டுகளாக அங்கேயே, அதே நிலையில் விட்டு வைத்திருந்த வங்கியின் அலட்சியம், இப்படி ஒரு கார் இவ்வளவு நாட்களாக இங்கே நிற்கிறதே என்று எட்டிப்பார்க்காத காவல் துறையினர், உள்ளாட்சித் துறையினர், ஊர்ப் பெரியவர்கள் ஆகியோரின் அலட்சியம், காருக்குள் மாட்டிக்கொண்ட குழந்தைகள் கதவைத் தட்டும் சத்தம் யாருக்கும் கேட்காதபடி பக்திப் பாடல்களை உலகுக்கே ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கச் செய்தவர்களின் அலட்சியம் (எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இதே கலாச்சாரம்தான். சுற்றுவட்டாரத்தில் இருதய நோயாளிகள் இருக்கலாம், மாணவர்கள் பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கலாம், சில வீடுகளில் மரணம் நிகழ்ந்திருக்கலாம், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகக்கூடச் சிலர் அபயக் குரல் எழுப்பிக்கொண்டிருக்கலாம்…) இப்படியாக, எல்லா அலட்சியங்களும் கூடிவந்த ஒரு தருணம்தான் அந்தக் குழந்தைகளின் உயிரைப் பறித்திருக்கிறது.

இனி குழந்தைகளிடம் நாம் சொல்லலாம், வெளியில் போய் விளையாடாதே! வாய்க்கால் வரப்பு களுக்குப் போகாதே! அப்பாவிடம் போகாதே! மாமாவிடம் போகாதே! இந்த உலகத்தை நம்பாதே! இப்படி, படிப்படியாக அவர்களுக்கு உருவேற்றலாம். இந்த உலகத்தை நம்பாத ஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் நமது அக்கறைகள், மதங்கள், கோட்பாடுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை நோக்கமா?

பூங்கொத்துகள்
நிச்சயமாக, எந்த மரணத்துக்கும் ஆறுதல் சொல்லி விட முடியாதுதான். என்றாலும் குழந்தைகளின் மரணத்தை நம்மால் சற்றும் நினைத்துப் பார்க்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. பூங்கொத்துபோல் ஏந்திக்கொள்ள வேண்டியவை குழந்தைகள். ஆனால், ஏவுகணைத் தாக்குதலால் உருச்சிதைந்து, தலை குடையப்பட்ட பிணமாகத் தன் குழந்தையை ஒரு தந்தை ஏந்திக்கொண்டு அழும் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் எல்லோரும் பார்த்து மனம் வெம்பினோம். அதேபோல், ஈழப் போரின் இறுதித் தருணத்தில் கயிற்றில் தொங்கவிடப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும்… போர்களின் உக்கிரத்தை குழந்தைகளின் புகைப்படங்களைக் கொண்டு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நிலை!

வாழ்க்கையும் உலகமும் வாழ்வதற்கு உகந்தவை என்பதைச் சுட்டிக்காட்டும் சுட்டிகள்தான் குழந்தைகள். ஆழ்துளைக் கிணற்றுக்குள் அகப்பட்டும், தலை சிதறியும் இறப்பதுதான் அந்தச் சுட்டிகளின் தலையெழுத்து என்றால், இந்த உலகின் மீது எதை வைத்து நம்பிக்கை கொள்ள? 
          - ‘தி இந்து’ இணையதளத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க:
http://tamil.thehindu.com/opinion/columns/குழந்தைகளை-விட்டுவிடுங்கள்/article6327957.ece?ref=sliderNews

1 comment:

  1. அறிவியல் வளர்ச்சி என்று ஒரு புறம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் ஒரு சிலரின் பேராசையால் குழந்தைகளின் உயிர்கள் மதிப்பின்றி போவதைக் காணும் போது வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியுள்ளது.

    ReplyDelete