ஒரு ஊருல வளவன்னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு கையி ரொம்பச் சின்னதா, வளைஞ்சு இருக்கும். அதனால அவன யாருமே வெளையாட்டுக்குச் சேத்துக்க மாட்டாங்க. அதை நெனைச்சு பல தடவை வளவன் அழுதிருக்கான். அப்புறம் யாரோடயும் சேராம தானாவே வெளையாட ஆரம்பிச்சான்.
ஒரு நாள்… வீட்டுக்கு முன்னால ஓரமா இருந்த தண்ணித் தொட்டியில வெளையாடிக்கிட்டு இருந்தான். அப்போ, யாரோ கையசைக்கிற மாதிரி தண்ணியில தெரிஞ்சது. கையை அசைச்சுக்கிட்டே வளவன்கிட்டே அந்த நிழல் பேச ஆரம்பிச்சிச்சு. அப்புறம் மேலே பார்த்தா… அது ஆளில்லை. யானை! கை மாதிரி தெரிஞ்சது தும்பிக்கைதான். ‘ஐ.. வானத்துல யானை, வானத்துல யானை’ன்னு வளவன் தண்ணிக்குள்ளே குதியாட்டம் போட்டான். தண்ணியில தெரிஞ்ச யானையும் குதியாட்டம் போட்டது.
அப்புறம் என்ன? யானையும் வளவனும் நெருங்கின நண்பர்களாயிட்டாங்க. தினமும் பள்ளிக்கூடம்விட்டு வந்ததும் யானையோட வெளையாடுவான். “நான் உன்மேல ஏறி வெளையாடணும்னு ஆசையா இருக்கு. கீழ வருவியா”ன்னு வளவன் ஒரு நாள் யானைகிட்ட கேட்டான்.
“நாளைக்குக் குளத்துக்கு வா. அங்க நம்ம ரெண்டு பேரும் வெளையாடலாம்”ன்னு யானை சொன்னிச்சு. வளவனுக்கு சந்தோஷம் தாங்க முடியல.
யானை வருது கீழே
ஏறிப்போவேன் மேலே
வானத்துக்குப் போயி
வானவில்லப் பாப்பேன்
தம்பிப் பையன் எனக்கு
தங்கக் கையைக் கேப்பேன்
தும்பிக்கையைப் போலே
நீண்ட கையைக் கேப்பேன்”
என்று பாடிக்கொண்டே சுற்றிச்சுற்றி ஆடினான்.
மறுநாள், ஞாயிற்றுக் கெழமை. காலையில சாப்புட்டு முடிச்சதும் வளவன் வேகவேகமாக் குளத்துக்கு ஓடினான். கொஞ்ச நேரத்துல யானையும் வந்துடுச்சு. அது வந்தவுடனே தும்பிக்கையால வளவனக் கட்டிப்பிடிச்சுக்கிடிச்சு. அப்படியே தன் மேல தூக்கி வச்சுக்கிச்சு.
வளவன் பாட ஆரம்பிச்சான்:
தண்ணியில் சவாரி
தாமரைப் பூ சவாரி
ஆனை மேல சவாரி
அல்லிப்பூ சவாரி
யானையும் வளவனும் சந்தோஷமா வெளையாடுனாங்க. அப்போ யானை வளவன்கிட்ட, “எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல பொறந்த நாளு வருது. எனக்கு என்ன பரிசு தரப்போற?” அப்புடின்னு கேட்டிச்சு.
அதைக் கேட்டதும், “யானைக்குப் பொறந்த நாளு! யானைக்குப் பொறந்த நாளு!”ன்னு வளவன் தண்ணிக்குள்ள ஆட்டம் போட்டான். “நான் உனக்கு அருமையா ஒரு பரிசு தரேன். ஆனா, என்னாங்குற ரகசியத்த நாளைக்கு நீயே தெரிஞ்சுப்பே” அப்படின்னான். சொல்லு, சொல்லுன்னு யானை கெஞ்சுனாலும் வளவன் சொல்லவேயில்ல. வெளையாடி முடிச்சதும் ரெண்டு பேரும் ‘டாட்டா’ காட்டிட்டு கெளம்பிட்டாங்க.
வீட்டுக்கு வந்ததும் வளவனுக்கு ஒரே யோசனை. “யானை பரிசு கேட்டுச்சு. ஆனா, என்ன தர்றது?”ன்னு யோசனை. அப்போ, ஏதோ ஒண்ணு அவன் மேல விழுந்துச்சு. என்னன்னு பாத்தா… கிளி இறகு! மேல கிளி ஒண்ணு பறந்து போய்க்கிட்டு இருந்துச்சு. வளவனுக்கு சரியான யோசனை சிக்கிடிச்சு! இறகுகளைத் தைச்சு யானைக்கு அழகா சட்டை செய்யலாம்!
நல்ல யோசனை சிக்கினவுடனே மளமளன்னு வேலையில எறங்குனான் வளவன். மயில்கிட்ட கெஞ்சி அதோட தோகையிலருந்து அழகான இறகு ரெண்டு வாங்குனான். நெறைய பறவைங்ககிட்டேருந்து இறகு வாங்குனான். எல்லாம் தயாராச்சு, சட்டைய எங்க போயி தைக்கிறது? வளவனுக்கு கொல்லைப் பக்கம் கூடுகட்டியிருக்குற தையல்சிட்டு ஞாபகம் வந்துச்சு. தையல்சிட்டுக்கிட்டப் போயி சட்டையைத் தைச்சுத்தரச் சொன்னான். தையல்சிட்டும் சட்டையை தைச்சி கொடுத்துச்சு. சட்ட முழுக்க சின்னச் சின்னப் பூவெல்லாம் பதிச்சு, பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருந்துச்சு!
அப்புறம் வீட்டுக்குள்ள வந்து ஒரு பெரிய பட்டம் செஞ்சான் வளவன். பட்டத்தோட முனையில சட்டைய பத்திரமா வைச்சு, ‘அன்புள்ள யானைக்குப் பிறந்த நாள் பரிசு!’ன்னு எழுதிப் பட்டத்தப் பறக்கவிட்டான். பட்டம் பறந்து உச்சிக்குப் போச்சு. ரொம்ப மேலே போனவுடனே அறுந்தும் போச்சு.
வளவனுக்கு அழுகை அழுகையா வந்துச்சு. எவ்வளவு ஆசையா, கஷ்டப்பட்டு யானைக்கு சட்டை தைச்சோம். இப்புடி ஆச்சே. பரிசு இல்லாம நாளைக்கு யானைய எப்புடிப் பாக்குறதுன்னு வளவன் அழுதான். ராத்திரி முழுக்க அவனுக்குத் தூக்கமே வரலை. விடியற்காலையிலதான் தூங்குனான்.
காலையில வளவனுக்கு ஜுரம். “யானை, யானை”ன்னு புலம்பிக்கிட்டே இருந்தான். அப்போ, “வளவன், வளவன்”ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. யானையோட குரல் மாதிரி இருந்துச்சு. ஜுரத்தையெல்லாம் மறந்துட்டு வெளியே ஓடிவந்தான் வளவன். வெளியில லேசா மழை தூறிக்கிட்டு இருந்துச்சு. வெயிலும் அடிச்சுச்சு. வானத்துல அண்ணாந்து பாத்தான் வளவன். அங்கே…
அவன் அனுப்புன சட்டையை போட்டுக்கிட்டு யானை அழகா நின்னுகிட்டுருந்துச்சு.
வளவன் குதிக்க ஆரம்பிச்சான்.
"யாரு தைச்ச சட்டை
குருவி தைச்ச சட்டை
யானை போட்ட சட்டை
வளவன் தந்த சட்டை"
அப்புடின்னு பாடிக்கிட்டே கும்மாளம் போட்டான். பக்கத்து வீட்டுப் பசங்கள்லாம் ஓடிவந்து, என்னன்னு வளவன்கிட்ட கேட்டாங்க.
"என்னோட நண்பன் யானைக்கு இன்னைக்குப் பொறந்த நாளு. நான் பரிசா குடுத்த சட்டையை போட்டிக்கிட்டுருக்கு பாருங்க!" அப்புடின்னு அந்தப் பையங்ககிட்ட சொல்லிட்டு வானத்துல கையக் காட்டுனான். வளவன் கையைக் காட்டுன திசையில அந்தப் பசங்க பாத்தாங்க. அங்கே...
கருகருன்னு ஒரு மேகம், அதோட ஓரத்துலேருந்து ஒரு வானவில் கெளம்பி வானம் முழுக்க விரிஞ்சி இருந்துச்சு! அவ்வளோ அழகா இருந்துச்சு!
- சிந்து, தொடர்புக்கு: sindhu.makizh@gmail.com
‘தி இந்து நாளிதழின் இணையதளத்தில் இந்தக் கதையைப் படிக்க:
வண்ணச் சட்டை யானை
வண்ணச் சட்டை யானை
குழந்தை உலகிற்கு எங்களை அழைத்துச் சென்ற தங்களின் மனைவிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
Deleteஅன்புடன்
ஆசை