அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் மருத்துவப் பராமரிப்பு என்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த நேர்காணலிலிருந்து…
வேலை செய்வதற்கான உரிமை, உணவு பெறுவதற்கான உரிமை ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியாவில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைக்காகச் சட்டம் இயற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக! நாம் இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
பணக்கார நாடுகளில் அநேகமாக அமெரிக்காவைத் தவிர எல்லா நாடுகளிலும் மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமை என்பதை மக்களின் மிக அடிப்படையான உரிமையாக அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இதை ஒரு சட்டத்தின் மூலம் கொண்டுவர வேண்டும் என்ற நிலையே நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
உலக வரலாற்றைக் கொஞ்சம் பாருங்கள். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் ஐரோப்பிய நாடுகள் மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமையைத் தங்கள் மக்களுக்கு வழங்கின. ஆசிய நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் அந்தத் திசையில் சென்றன. ஜப்பானிடம் அதற்கு முன்பே வெற்றிகரமான ஒரு மருத்துவ அமைப்பு இருந்தது, அதை ஜப்பான் மேலும் விரிவுபடுத்தியது. சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்வான் ஆகியவற்றிலும் இது அமலில் இருந்தது.
சீனத்திலும் ‘எல்லாருக்கும் மருத்துவப் பராமரிப்பு’ என்பது அமலில் இருந்தது. 1979-ல் அதைச் சந்தைமயமாக்கியபோது குடிமக்கள் யாவரும் தங்கள் மருத்துவக் காப்பீட்டைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. 1979 வரை எல்லாருக்குமான மருத்துவக் காப்பீடு என்பது 100% இருந்த நிலை மாறி 12 % ஆக ஆனது. அது எப்பேர்ப்பட்ட பிழை என்பதை அவர்கள் 2004-ல் ஒப்புக்கொள்வதற்கு 25 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அனைவரையும் இதில் உள்ளடக்க முயன்று இப்போது 96% மக்கள்தொகையை உள்ளடக்கியிருக்கிறார்கள்.
அடிப்படையில் தன்மதிப்பு உள்ள எந்த நாடும் இது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்று கருதிவந்திருக்கிறது. எனவேதான், இந்திய அரசு இதைப் பற்றி நினைத்துப்பார்க்கவே இல்லை என்பது நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது. மனித ஆற்றல் வளர்ச்சியும், அதுதான் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கும் மிகவும் சாதகமானது என்று புரிந்துகொண்டதும்தான் ஆசியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்துவிசையாக இருந்திருக்கின்றன.
வளர்ச்சி வீதம் என்பதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது நம் நாடு. உயர் வளர்ச்சி வீதம் நீண்ட காலம் நீடிப்பதற்கு ஆரோக்கியமான, படிப்பறிவு மிக்க ஒரு சமூகத்தைவிட வேறெதுவும் காரணமாகிவிட முடியாது.
உங்கள் கேள்விக்கே நான் திரும்பி வருகிறேன். அரசாங்கம் இதைச் செய்யாத பட்சத்தில் மருத்துவப் பராமரிப்பு பெறுவதற்கான உரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் இதைச் செய்ய அரசாங்கத்தை வற்புறுத்தலாமா?
ஆமாம், அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால், அரசு இதை ஏன் செய்யவில்லை? இது மிகப் பெரிய பொதுப் பிரச்சினை இல்லையா? ஆம் ஆத்மி கட்சிகூட இதைப் பற்றிக் கேள்வி எழுப்பவில்லையே? இந்த விவகாரத்தில் ஊடகங்கள் முக்கியப் பங்குவகிக்க வேண்டும். பொதுவாக, ஊடகங்கள் இந்த விஷயம் குறித்து மேலதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
வளர்ச்சிக்கும் மனிதர்களின் திறன்மேம்பாட்டுக்கும் இடையிலான இருவழிப் பாதைபற்றிய கேள்வி இது. கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா என்பது மாதிரியான இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?
இல்லையில்லை. அப்படிப்பட்ட நிலையல்ல இது. இரு தரப்புக்குமே வெற்றி என்பது போன்ற நிலைதான் இது. வளர்ச்சியின் ஒவ்வொரு துளியும் வருமானத்தை மேலும்மேலும் பெருக்குகிறது. அதைக் கொண்டு மருத்துவத்துக்கும் கல்விக்கும் நாம் செலவிட முடியும். மருத்துவத்துக்கும் கல்விக்கும் எந்த அளவுக்குச் செலவு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சியின் அடித்தளம் உறுதியாக அமைகிறது. இவற்றில் நீங்கள் எங்கே தொடங்கினாலும் எப்போது தொடங்கினாலும் நிச்சயம் பலனளிக்கும்.
அரசியல் பொருளாதாரத்தை எதற்காக நாட வேண்டும் என்று ஆடம் ஸ்மித்திடம் கேட்டபோது, அவர் சொன்ன பதிலை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “அதுதான் ஒரு பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. அதனால் என்ன பலன்? முதலாவதாக, அது மக்களின் வருவாயைப் பெருக்குகிறது. அதிக வருவாய் என்பது, தாங்கள் செய்வது முக்கியம் என்று மக்கள் நினைக்கும் செயல்களைச் செய்வதற்கு வழிவகுக்கிறது. அது, அரசின் வருவாயை அதிகரிப்பதுடன் அதன்மூலம் கல்வி முதலான விஷயங்களில் அரசாங்கம் மேலும் அக்கறை செலுத்த உதவுகிறது.”
ஆனால், இந்தியாவில் விசித்திரமான ஒரு நிலைமை நிலவுகிறது. கல்வி, மருத்துவப் பராமரிப்பு போன்ற துறைகளில் அரசின் பங்கு என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய் அவை தனியார்வசம் விடப்பட்டிருக்கின்றன. தனியாரிடம் விடவேண்டிய எஃகு உற்பத்தி, எண்ணெய்ச் சுத்திகரிப்பு போன்ற துறைகளை அரசே நிர்வகிக்கிறது….
தெளிவற்ற சிந்தனை என்பது இதுதான். ஒவ்வொரு முறையும் நான் இந்தியாவுக்கு வரும்போது நிறைய பேர் என்னிடம் சொல்வார்கள்: “அரசாங்கத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே, கல்வியும் மருத்துவப் பராமரிப்பும் தனியார்வசம் விடப்பட வேண்டும்.” அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மருத்துவப் பராமரிப்புக்காக மக்கள் செய்யும் ஒட்டுமொத்தச் செலவில் இந்திய அரசின் பங்களிப்பு என்பது உலகிலேயே மிகக் குறைந்த மூன்று பங்களிப்புகளுள் ஒன்று; ஹைதியும் சியாரா லியோனும் பிற இரண்டு நாடுகள்.
மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம், சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. அடிப்படை மருத்துவப் பராமரிப்பு விஷயத்தில் நடப்பதே வேறு. அரசின் சுகாதாரத் திட்டங்கள் தடுப்பு மருத்துவத்தையோ தடுப்பு மருத்துவப் பராமரிப்பையோ உள்ளடக்குவதில்லை. ஆனால், உங்கள் உடல்நலம் மிக ஆபத்தான நிலையை எட்டினால் அரசாங்கம் உங்களுக்காகப் பணம் கொடுக்கும், பெரும்பாலான சமயங்களில் இந்தப் பணம் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான், அதாவது உங்களுக்கு அவை சிகிச்சையளிப்பதற்காகப் போய்ச்சேரும்.
பொதுமக்களுக்கான மருத்துவப் பராமரிப்பை மேற்கொள்ளும் அழகல்ல இது. அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னால், தமிழ்நாடு, கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய உதாரணங்களைப் பாருங்கள். இந்த மாநிலங்களெல்லாம், இந்த விஷயத்தில், நன்றாகச் செயல்படுகின்றன என்று வெகு நாட்களுக்கு முன் விவாதித்தபோது மோசமான பொருளாதார நிலைமைகளால் அவற்றால், முக்கியமாகக் கேரளத்தால், நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்று சொன்னார்கள். தற்போது, இந்தியாவிலேயே அதிகமான தனிநபர் வருமானத்தை (வரி நீங்கலாக) கொண்ட மாநிலம் கேரளம்தான்.
உங்கள் வாழ்க்கையின் தரத்தை அதிகரிக்கும் அதே விஷயம்தான் பொருளாதார முன்னேற்றத்துக்கும் காரணமாகிறது. இந்தச் செய்தியைக் கேட்க யாரும் தயாராக இல்லை. நரேந்திர மோடி மற்ற மாநிலங்களைவிட அதிக வளர்ச்சி வீதம் கொண்ட மாநிலமாகத் தன் மாநிலத்தை மாற்றியிருக்கிறார் என்ற கதையைத்தான் நாம் கேட்க விரும்புகிறோம். சமீபத்தில் ஒரு புயல் வந்தது. நம் ஊடகங்களில் ஒரு மாதத்துக்கு இடம்பெறும் அளவுக்கு இந்தப் புயல் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், பத்து லட்சம் மக்களைக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அரசாங்கம் அனுப்பியதால் புயல் பாதிப்பு முதல் நாளோடு ஓய்ந்துவிட்டது. காத்ரினா புயலைவிட ஐந்து மடங்கு பெரிய புயல் இது.
பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக்கொள்கிறோம்.
சமீபத்திய தேர்தல்களில் ஆச்சரியமூட்டும் சில நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக உருவெடுத்திருக்கும் கட்சி, வாக்காளர்களைத் தன்வசம் ஈர்த்திருப்பதைக் கண்டோம்; மிதமான வலதுசாரி அரசியலின் எழுச்சியை பா.ஜ.க-வின் வெற்றியில் கண்டோம். இதையெல்லாம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கடந்த காலத்தில் மக்கள் புறக்கணித்திருந்த பல விஷயங்களை முன்னுக்குக் கொண்டுவந்திருந்ததால் டெல்லி தேர்தல் மிகவும் சுவாரசியமான ஒன்றாக ஆகியிருக்கிறது. நாம் முக்கியத்துவம் கொடுக்க நினைத்த எல்லா விஷயங்களையும் அது முன்னுக்குக் கொண்டுவரவில்லை. கல்வி மீதான உதாசீனத்தையோ மருத்துவப் பராமரிப்பில் உள்ள குறைபாட்டையோ இன்னும் பிறவற்றையோ அது முன்வைக்கவில்லை.
ஏற்கெனவே இருக்கும் சேவைகளை, திறமை வாய்ந்த, ஊழலில்லாத முறையின் மூலமாக வழங்குவதிலேயே அது அதிக அக்கறை கொண்டிருந்தது. இதுவும் முக்கியமானதே, ஆனால் இன்னும் விரிவான ஒரு செயல்திட்டம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நான் விரும்புகிறேன். இருப்பினும், ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் செய்துவிட முடியாதுதான். தேர்தல் அரசியலுக்குள் சில பொது அக்கறைகளை ஆம்ஆத்மி கட்சி கொண்டுவந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. மதம், சாதி போன்றவற்றை மையமிடாமல் மக்களை இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தச் செய்தது ஆ.ஆ.க-விடம் உள்ள பாராட்டத் தக்க அம்சம். சாதி, மத அரசியலைக் கையிலெடுக்காமல் டெல்லியில் பல இடங்களை அவர்கள் வென்றதும் பாராட்டுக்குரியது.
மற்ற இடங்களில் நடந்த தேர்தல்களிலோ புதிதாக ஏதும் இல்லை. அந்தத் தேர்தல் முடிவுகளில் சாதியும் மதமும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. பா.ஜ.க-வின் தலைமை குறித்து பல்வேறு கேள்விகள் பலர் மனதிலும், என் மனது உட்பட, இருந்தபோதிலும், திறமையான கட்சி என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்க அதனால் முடிந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியோ கடிவாளம் இல்லாத குதிரை போன்று காட்சியளிக்கிறது. ஆர்வமூட்டும் அம்சங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதற்கு இதுதான் அடையாளமா? இது, காங்கிரஸை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரஸை எழுப்ப முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை
No comments:
Post a Comment