Monday, August 4, 2014

புலம்பெயர்வு பெரும் நெருக்கடியாக மாறும் - சஞ்சய் சுப்பிரமண்யம் நேர்காணல்


வைஜு நரவாணே

(தமிழில்: ஆசை)


வரலாற்றாசிரியர், பேராசிரியர் சஞ்சய் சுப்பிரமண்யம் சமீபத்தில் ‘கலெஜ் தெ பிரான்ஸ்’-ல் ‘தொடக்கக் கால நவீன உலக வரலாற்றுத் துறை’க்கான இருக்கைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது நேர்காணலிலிருந்து…
நவீனத்துவத்தின் வரலாற்றாசிரியர் நீங்கள். எந்த மாதிரியான மாறுதல்களையும் தலைகீழ் மாற்றங்களையும் நாம் தற்போது காண்கிறோம்?
அரசியலைப் பொறுத்தவரை நிறைய மாறுதல்களும் தலைகீழ் மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனது ஆய்வுக்கு நான் உட்படுத்தியிருக்கும் 17-வது நூற்றாண்டின் உலகம் என்பது இன்னமும் முடியாட்சிகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால், இன்று போக்குவரத்து மற்றும் இடப்பெயர்ச்சி போன்றவை சார்ந்த தொழில்நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், தொலைவு என்ற கருத்தாக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், சமூக உறவுகளில் குறிப்பாக சமூகக் குழுக்கள் என்றால் என்ன என்பதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், மற்றும் குடும்பம் என்ற நிலைவரை ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இவை எல்லாமே தெள்ளத்தெளிவு.
புலம்பெயர்வு என்பதைக் கடந்த கால நோக்கிலும் தற்கால நோக்கிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்? காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? புலம்பெயர்வைக் குறித்த விவாதங்கள் எந்த வகையில் மாறியிருக்கின்றன?
ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கவும் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்தவும் பெரும் அளவிலான புலம்பெயர்வுகள் நிகழ்ந்தன. எடுத்துக்காட்டாக, காலனிய அமெரிக்காவை நோக்கி 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் இறுதியிலும் நிகழ்ந்த புலம்பெயர்வுகளையெல்லாம் ஏகாதிபத்திய விரிவாக்கம் என்ற விஷயத்தோடே சேர்த்துவிடலாம். இன்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத சில வாதங்கள் அப்போது இருந்தன: ‘தரிசு நிலங்க’ளாக இருந்தவற்றில்தான் தாங்கள் குடியேறினோம் என்றெல்லாம் 1940-களிலும் 1950-களிலும் கூட ஆஸ்திரேலியாவில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதல் உலகப் போருக்கும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கும் பிறகு, ஐரோப்பாவிலிருந்து பிற இடங்களை நோக்கிய புலம்பெயர்வோ வெள்ளையரின் புலம்பெயர்வோ சிறுபான்மை நிகழ்வாகிவிட்டது. ஐரோப்பா அல்லாத பிரதேசங்களிலிருந்து நிகழும் புலம்பெயர்வுகளையே நாம் தற்காலத்தில் பார்க்கிறோம். இவையெல்லாம் அரசியல் மறுகட்டமைப்பின் பேரில் நிகழ்வதில்லை. இவ்வாறாக, அரசுகள் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாகவும், வளர்ச்சியை வடிவமைக்க விரும்பி ஒரு வகை புலம்பெயர்வுக்கு மாறாக வேறு வகை புலம்பெயர்வை, அது இனரீதியாக இருக்கலாம் அல்லது தொழில்முறை சார்ந்ததாக இருக்கலாம், விரும்பக்கூடியனவாகவும் இருக்கின்றன. இன்றைய உலக மக்கள்தொகை அடர்த்தி, சீரற்று இதுபோலவே இருக்குமென்றால் சில சமன்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். இதைப் பற்றிய விரிவான விவாதங்கள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதுபோலவே, மக்கள் எவ்வாறு புலம்பெயர்கிறார்கள், புலம்பெயர எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
வரக்கூடிய காலங்களில் சர்வதேச அளவில் மிகவும் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அதற்கும் இஸ்லாம் மீதான அச்சம், புலம்பெயர்வு போன்றவற்றுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்பட்ட, இரட்டை நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ளப்போகிறோமா?
நிச்சயமாக அப்படித்தான். தற்போது அமெரிக்கர்கள் பெரும் கவலை கொண்டிருப்பது லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து பெரும் அளவிலான மக்கள்தொகை அமெரிக்காவை நோக்கி புலம்பெயர்வது குறித்துதான். ஆனால், ஐரோப்பாவில் இந்தப் பிரச்சினை வேறு விதமாக இருக்கிறது. சில நேரங்களில் இஸ்லாம் என்ற வாதம் ஒரு நொண்டிச்சாக்கு மட்டுமே. ரோமா நாடோடி இனத்தவர் தொடர்பான பிரச்சினையைப் பாருங்கள். இதற்கும் இஸ்லாத்துக்கும் என்ன சம்பந்தம்? ரோமா இனத்தவரெல்லாம் பிள்ளை பிடிப்பவர்கள் என்ற முட்டாள்தனமான எண்ணமும் மத்தியக் காலத்தைச் சேர்ந்த நம்பிக்கையும் மறுபடியும் தலைதூக்குகின்றன. பெரிய அளவிலான வேறொரு அச்சத்தின் அடையாளமே இது. எடுத்துக்காட்டாக, பிரான்ஸிலும் இத்தாலியிலும் வங்கதேசத்தினர் பெருமளவில் இருக்கிறார்கள். யாரும் அவர்களை இஸ்லாமியர்களாகக் கருதுவதில்லை. ஆனால், துருக்கியர் விவகாரத்தைப் பாருங்கள். மேற்குலகோடு துருக்கிக்கு நெடுங்காலமாகத் தொடர்பு இருந்துவந்திருக்கிறது. துருக்கியரும் தங்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியைத் தூக்கியெறிந்துவிட்டு ‘மேற்கத்தியர்’களாக ஆக 20-ம் நூற்றாண்டில் முயன்றனர்; ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தோடு சேர முற்பட்டபோது அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியவில்லையே. உண்மையில், ஐரோப்பாவுடன் சேர்த்து அடையாளம் காணும்படியான கூறுகள் துருக்கியைவிட கிரேக்கத்தில் அதிகம்.
புலம்பெயர்தல்குறித்த கேள்வி, மதச்சார்பின்மையைக் குறித்தும் என்னைக் கேட்க வைக்கிறது. உங்கள் அக்கறைகளுள் அதுவும் ஒன்றுதானே. இந்தியாவில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மைக்கும் பிரான்ஸில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என்ன?
முதலாவதாக, மதச்சார்பின்மை, ‘மதம்-அரசியல் குறுக்கீட்டின்மை’ ஆகிய கோட்பாடுகளுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. இரண்டாவதாக, அமைப்பு ரீதியில் தற்போதைய அவற்றின் நடைமுறைகளில் வேறுபாடுகள் உள்ளன. ‘மதம்-அரசியல் குறுக்கீட்டின்மை’ என்பதன் எழுச்சிக்குக் காரணமான சூழல்களை மதரீதியிலான போர்களின் அடிப்படையில் பார்க்க வேண்டும்; பின்னோக்கி இந்த வரலாற்றைப் பார்த்தால் பிரெஞ்சு புரட்சி மற்றும் அதன் பிறகான காலகட்டம் என்று நீளும்; அந்தக் காலகட்டத்தில்தான் கத்தோலிக்க மதமானது அதிகாரத்தின் மீது தன் பிடியை இறுக்கியிருந்ததோடு அதனால் பல்வேறு தளங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவேதான், தேவாலயத்தின் (மதத்தின்) பிடியிலிருந்து அரசை விடுவிக்க வேண்டியிருந்தது என்ற வாதத்தை நாம் கேட்க நேர்கிறது. இன்றும்கூட, இஸ்லாம், இஸ்லாமியர் என்ற பேச்சு வரும்போதெல்லாம், பிரெஞ்சுக்காரர்களின் ஆழ்மனத்தில் அது கத்தோலிக்க மதம் சார்ந்த ஒரு பிரச்சினை என்றுதான் பதிகிறது. ‘முகத்திரை’ குறித்த பேச்சு வரும்போதெல்லாம் அவர்கள் உண்மையில் எண்ணுவது கத்தோலிக்கப் பெண் துறவிகளையே. பெரும்பாலான பிரெஞ்சுக்காரர்கள் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் அடையாளமாகவே இஸ்லாத்தைக் காண்கிறார்கள். கிறித்தவ மதத்தையும் முன்பு இப்படித்தான் கருதினார்கள்.
இந்தியாவில் நாம் எதிர்கொண்டிருப்பது வேறுவிதமான சூழல்; வெகு காலமாக அதாவது முதல் இஸ்லாமிய அரசுகள் அமைந்ததிலிருந்தே, பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையே மாறிமாறி இருந்துகொண்டிருந்த சமநிலையை நாம் கண்டுவந்திருக்கிறோம். முறையாக உருவாக்கப்பட்ட இந்து மதம் என்ற ஒன்றோ அதை வரையறை செய்யும் அதிகாரபூர்வ அமைப்புகள் என்றோ எதுவும் இல்லாததால் மதத்திலிருந்து அரசாங்கத்தை வெளியேற்றுவது போன்ற பிரச்சினைகள் இல்லை. வெவ்வேறு சமூகங்கள், குழுக்களிடையிலான சமநிலையைக் கண்டறிவதும் சமரசம்செய்துகொள்வதும்தான் உண்மையான பிரச்சினை. அரசர் என்பவர் மருத்துவர் என்றும் ராஜ்ஜியம் என்பது உடல் என்றும், மருத்துவர் உடலின் வாத, பித்த, சிலேட்டுமங்களைக் கட்டுப்படுத்துகிறார் என்றும் ஒரு உருவகம் உண்டு.
பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இஸ்லாத்துக்கு எதிராகவும் மசூதிகளுக்கு எதிராகவும் அடுக்கடுக்காகச் சட்டங்கள் கொண்டுவரப்படுவது அதீதத்தின் அடையாளம் என்று கருதலாமா? ஒரு சமூகத்தை உருவாக்கும் வெவ்வேறு இனங்கள், சக்திகள் ஆகியவற்றுக்கிடையிலான சமநிலையை மதிக்காத தன்மை என்று எடுத்துக்கொள்ளலாமா?
ஆம். அவர்களுடைய சிந்தனைப் போக்கைத் தங்கள் நலனுக்காக அவர்கள் மாற்றிக்கொள்வார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி. பிரான்ஸ், குறிப்பாக, இந்த ‘மதம்-அரசியல் குறுக்கீட்டின்மை’யின் பிணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமா? ஏனென்றால், சமூகங்களுக்கிடையிலான உறவுகள் குறித்துப் பேசுவதற்கு அது (அதாவது, ‘மதம்-அரசியல் குறுக்கீட்டின்மை’) சரியான மொழியல்ல. பிரெஞ்சுக் குடியரசுக் கோட்பாடு உருவாக்கியிருப்பது வளைந்துகொடுக்காத போக்கின் தீவிர வடிவமே; இதில் கிறித்தவ மதம் நீங்கலான சிறுபான்மையினத்தவரைக் கையாள்வதற்கான கோட்பாட்டுக் கருவிகள் கிடையாது. அமைப்புகள் தொடர்பான தீர்வுகளுக்கு இந்தியாவை பிரான்ஸ் பார்க்க வேண்டியிருக்கும் என்று ஒருமுறை நான் குறிப்பிட்டது பிரான்ஸில் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை

'தி இந்து’ நாளிதழின் இணையதளத்தில் இந்த நேர்காணலைப் படிக்க:

புலம்பெயர்வு பெரும் நெருக்கடியாக மாறும் - சஞ்சய் சுப்பிரமண்யம் நேர்காணல்

No comments:

Post a Comment