பாலசுப்ரமணியன் பொன்ராஜ் இதுவரை, ‘கனவு மிருகம்’ (பாதரசம் வெளியீடு), ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ (யாவரும் பப்ளிஷர்ஸ்) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார்.
பாலசுப்ரமணியனின் சிறுகதைகள் பல வகைகளிலும் உற்சாகப்படுத்துகின்றன. கூடவே, நம் மனஅடுக்கின் இயல்பான அமைப்பில் இடையூறும் ஏற்படுத்துகின்றன. உற்சாகப்படுத்துவதற்கு முதன்மையான காரணம், பாலசுப்ரமணியனிடம் வெளிப்படும் சிந்தனை வீச்சு. தத்துவம், அரசியல், உலக இலக்கியம், இசை, அறிவியல் என்ற பல துறைப் பரிச்சயத்தையும் சரியாக உள்வாங்கித் தனது படைப்புகளில் ஆழமான சுயவெளிப்பாடுகளாக வெளியிட்டிருக்கிறார். இதற்கு உதாரணமாக ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பல்’ தொகுப்பில் பல இடங்களையும் காட்ட முடியும்.
‘அருகருகேயிருக்கும் இரண்டு நபர்களுக்கு இடையே விழும் கடக்க முடியாத அந்த இடைவெளியே இவ்வுலகின் மிக நீண்ட தொலைவாகிறது’ (‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’) எனும் வரிகளைப் பொருளாதார மந்தநிலையின் காரணமாக ஒருவன் வேலையிழக்கும் சூழலில் அவனுக்கும் அவனது மனைவிக்கும் பொருத்திப்பார்க்கும்போது இந்த உலகின் பொருளாதாரத்தோடும் பங்குச்சந்தைக் குறியீடுகளோடும் அன்பு, காதல், உடலுறவு போன்றவையெல்லாம் எந்த அளவுக்குப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பது விளங்குகிறது. ‘வலை’ கதையில் உணர்த்தப்படும் இந்த பிரபஞ்சத்தின் ‘ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கும் இயற்கை நிலை’யுடன் (interconnectedness) மனிதர்களால் நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட, உலகம் முழுவதையும் ஒன்றுக்கொன்று இணைக்கும் செயற்கை இணைப்பு நிலையுடன் ஒப்பிட்டுப்பார்க்கத் தோன்றுகிறது. இந்தத் தன்மை பல இடங்களில் பாலசுப்ரமணியன் கதைகளில் வெளிப்படுகிறது. ‘ஜங்க்’ சிறுகதையில், இணையத்தில் நீலப்படங்கள் பார்ப்பதற்கு அடிமையாக இருக்கும் ஒருவன் அப்படிச் செய்வதை நிறுத்திய இரண்டாம் நாள், நீலப்பட அடிமைகளை மீட்பதற்கென்றே ஒரு ரகசியச் சங்கம் இருப்பதாக, நள்ளிரவைத் தாண்டி ஒரு குறுஞ்செய்தி அவனுக்கு வருகிறது. ‘எனக்கு என்ன தேவையென்பதை பிரபஞ்சத்தின் மூலையில் யாரோ அறிந்திருக்கிறார்கள்’ என்று
நினைக்கிறான்.
‘வலை’ கதை தமிழ்ச் சிறுகதைகளின் சாதனைகளுள் ஒன்று. ‘ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்திருக்கும் நிலை’ குறித்து இதைவிடச் சிறப்பாகவும் புனைவழகுடனும் தமிழ்ச் சிறுகதைகளில் யாரும் எழுதியதில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கதையில் எது தொடக்கம் என்று நினைக்கிறோமோ அது வேறொன்றின் முடிவாக இருக்கிறது. அந்த வேறொன்று இன்னொன்றின் தொடக்கமாக இருக்கிறது. கடவுள் என்று நாம் நினைப்பவரும் பிரபஞ்சத்தின் விதிவலையில் சிக்கிக் கையறு நிலையிலும், ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து உருவான புனைவாகவும் இருக்கிறார். அறுதி என்று அறியப்படும் கடவுள், தானும் அறுதி அல்ல என்று கூறுகிறார். (வெளிப்படையாகக் கடவுள் என்று சொல்லப்படுவதில்லை). ஒமர் கய்யாமின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நமக்கு ஏதாவது வந்தால் வானகத்தை நோக்கி அபயப் பார்வை பார்ப்போம். அந்த வானகம் எவ்வளவு நிர்க்கதியானது தெரியுமா? ஒமர் கய்யாம் இப்படிச் சொல்கிறார்:
‘மனிதனின் இதயத்திலுள்ள நன்மையும் தீமையும்
நமது அதிர்ஷ்டமும் விதியுமான மகிழ்ச்சியும் துக்கமும்
வானகச் சக்கரத்தைப் பொறுப்பாக்காதே அவற்றுக்கு, பார்க்கப்போனால்,
உன்னைவிட ஆயிரம் மடங்கு சக்தியற்றது அந்தச் சக்கரம்.’
‘ஜங்க்’ கதையில் இடம்பெறும் ஒரு மேற்கோளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது: ‘எதன் அர்த்தத்தையும் ஒவ்வொன்றினதும் அபத்தத்தைக் கொண்டு அளவிட வேண்டும்’. இந்த உலகை, வாழ்க்கையை அளந்துபார்க்க அழகான, குரூரமான அளவுகோல் ஒன்றை இந்த வரிகளில் பாலசுப்ரமணியன் நமக்குத் தருகிறார். தனது கதைகளிலும் அதையே அவர் செய்கிறார் என்று தோன்றுகிறது. ‘நாளை இறந்து போன நாய்’ கதையின் பிரதானப் பாத்திரம் வாகனங்களுக்கான காப்பீட்டு நிறுவனப் பணியாளராக இருப்பவன். “உடைந்து நொறுங்கியிருக்கும் கார்களுக்குள்ளே இறந்தவர்களின் ஆவிகள் உலவுவதைப் பார்த்திருக்கிறேன். உயிர்விட்டவர்கள் உலகை விட்டு நீங்கினாலும் அவர்களது கார்களை விட்டு நீங்க மாட்டார்கள்” என்கிறான். இதுதான் அபத்தத்தைக் கொண்டு அர்த்தத்தை அளவிடுதல்! அந்த கார்களில் சிந்தியிருக்கும் ரத்தம் குறித்து அவன் இப்படிச் சொல்கிறான்: “நான் பயணம் செய்யத் தேவையில்லாத பேருந்தை எப்படிப் பார்ப்பேனோ அப்படித்தான் உறைந்திருக்கும் மனித இரத்தத்தையும் பார்ப்பேன்.”
பாலசுப்ரமணியனின் சித்தரிப்பு கச்சிதம் என்ற தன்மையுடன் நின்றுவிடாமல் அதனிலிருந்து கிளைவிட்டு, கச்சிதத்தைக் கலைத்துக் கலைத்துப் பெரும் கற்பனை விரிவை ஏற்படுத்துகிறது. சாதாரணக் கத்தரிக்கோலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “பிரிக்கப்படாத கத்தரிக்கோல்களின் முனைகள் சேர்ந்து மீன் வாயாக மாறும்… வெட்டும்போது அந்த மீன் அசைந்து அசைந்து துணிகளிலோ, காகிதங்களிலோ அதற்கான பாதையை உருவாக்கும்.” (‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’). அதே கதையில், துப்பாக்கிச் சூட்டை உதாரணமாகக் கொண்டு பிரபஞ்சத்தின் வரலாற்றைப் பெருவெடிப்பில் தொடங்கி இறுதியான ‘ஒருமை’ (singularity) வரை இரண்டு பத்திகளில் சொல்லிவிடுகிறார். ‘வெற்றுவெளியின் அர்த்தம் என்னவோ அதுவேதான் வாழ்க்கையின் அர்த்தமும்’ எனும் வரி நம்மை அதே இடத்தில் பிடித்து நிறுத்துகிறது. பிரபஞ்சவியலில் மிகவும் அழகான, விவரிக்கச் சிரமமான ‘ஒருமை’ எனும் கருத்தாக்கத்தைத் தமிழில் ஒரு படைப்பாளியின் வரிகளில் பார்க்கும்போது உற்சாகம் ஏற்படுகிறது. தமிழில் இதுபோன்று வெவ்வேறு படைப்புநிலைகள் தோன்ற வேண்டும்.
இந்தத் தொகுதியில் மொத்தம் பத்துக் கதைகள்தான் இருக்கின்றன. ‘தந்திகள்’, ‘வலை’ ஆகிய இரண்டும் பிரமாதமான கதைகள். ‘பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு’ கதை, கதையாக இல்லாமல் ஆழமான, அழகான எண்ணங்களின் தொகுப்பாக வியப்பூட்டுகிறது. கதையாக வெற்றிபெறாத கதைகளிலும் தீவிரமான ஒரு மூளையின் வெளிப்பாடுகளைக் காண முடிகிறது.
பாலசுப்ரமணியனின் பலமும் பலவீனமும் அவரது தத்துவப் பார்வை. தனது பார்வைகளை முன்வைப்பதற்குக் கதைகள் ஒரு சாக்கு. நல்லவேளை, அவர் முன்வைக்கும் பார்வைகள் வியப்பூட்டும் உள்ளிழைவுகளைக் கொண்டதால் அவர் தப்பித்துக்கொள்கிறார். இன்னொரு குறை, உள்ளூர்த்தன்மை இல்லாதது. நல்ல மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்கும் உணர்வு பல இடங்களில் ஏற்படுகிறது.
தத்துவவாதி பாலசுப்ரமணியன் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறார்; பின்னே, கதைசொல்லி துரத்திக்கொண்டிருக்கிறார். தத்துவவாதியைக் கதைசொல்லி துரத்திப்பிடிக்கும்போது இன்னும் மேலான இலக்கியத்தை பாலசுப்ரமணியன் படைப்பார் என்று உறுதியாக நம்பலாம்.
-ஆசை, (2017, இந்து தமிழ் திசையில் வெளியான விமர்சனம்)
No comments:
Post a Comment