Tuesday, June 18, 2024

க்ரியா ராமகிருஷ்ணன் 80வது பிறந்த நாள்

தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரும் என் வழிகாட்டியுமான க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இன்று 80வது பிறந்த நாள் நிறைவு. இருபது ஆண்டுகள் அவருடன் பயணித்திருக்கிறேன். இயற்கை, அறிவியல், கலை, இலக்கிய, சினிமா, இசை ரசனை என்று ஏராளமான விஷயங்களை அவரிடமிருந்து கற்றிருக்கிறேன். எல்லாவற்றையும் விட வாழ்க்கை சார்ந்த தார்மீக நெறிகளை அவரிடம் பெற்றிருக்கிறேன். அவரது இழப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தாலும் ஒரு விதத்தில் அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன். க்ரியா வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் கண்ணில் படும்போதெல்லாம் அவரை நான் பார்க்கிறேன்.

இதையெல்லாம் தாண்டி காலத்துடன் உறவாடிய ஒரு தீர்க்கதரிசனப் பதிப்பாளராகவே அவரை நான் உணர்கிறேன். சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உருவாகும் முன்பே அவர் வெளியிட்ட பியர் பூர்தியுவின் ‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’, ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’ போன்ற படைப்புகள் முக்கியமானவை. புத்தகங்கள் தடைசெய்யப்படும் காலத்தில் ஆசிரியர்கள் கொல்லப்படும், தாக்கப்படும் காலத்தில் பிராட்பரியின் புத்தகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னோடியான சுற்றுச்சூழல் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நீர்வளம் குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில் ‘தோண்டுகிணறுகளும் அவற்றின் அமைப்புகளும்’ புத்தகத்தை 80களின் தொடக்கத்தில் சி.மணியின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். 1986ல் வெளியான ‘இந்தியாவின் சுற்றுச்சூழல்’ ஒரு முன்னோடிப் புத்தகம். அதுமட்டுமல்ல அணுசக்தி பிரச்சினையைப் பேசும் ஜோஷ் வண்டேலூவின் ‘அபாயம்’ குறுநாவல்கள் தொகுப்பு பிரமாதமானது. துரதிர்ஷவசமாக இவையெல்லாம் தூய இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை.
பாசிசம், நாசிசம் இரண்டும் மறுஎழுச்சி பெறும் காலகட்டத்தில் யூழேன் இயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’, ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ‘நிரபராதிகளின் காலம்’, காஃப்காவின் ‘விசாரணை’ போன்ற படைப்புகளை வெளியிட அவர் தேர்ந்தெடுத்ததில் வெளிப்படும் தீர்க்கதரிசனம் வியக்க வைக்கிறது.
மரண தண்டனை, போர், வன்முறை, அதீதம் என்ற போன்ற நம் காலத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட 2500 ஆண்டுகளுக்கும் முந்திய ‘தாவோ தே ஜிங்’ படைப்பை சி.மணியின் மொழிபெயர்ப்பில் அவர் வெளியிட்டார். அதுவே அவர் வெளியிட்ட புத்தகங்களுள் அவருக்கு மிகவும் பிடித்தமானது, எனக்கும் கூட. மேலும் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, விக்தோர் ஹ்யூகோவின் ‘மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்’ போன்ற படைப்புகளும் மரண தண்டனைக்கு எதிரானவை.
இவை தவிர சாதியத்தின் கொடுமை பற்றிப் பேசும் இமையத்தின் படைப்புகளும் பூமணியின் படைப்புகளும் முக்கியமானவை.
என் 5 நூல்கள் க்ரியாவில் வெளியாகியிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
காலத்துடன் உறவாடிய, காலத்துக்கு முன்பே சிந்தித்த பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணனின் 80வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்!

Saturday, June 15, 2024

மாயக்குடமுருட்டிக்கு ஒரு வயது!

முதலில் வெளியான போஸ்டர்

எனது ‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் நூலான ‘மாயக்குடமுருட்டி’யை எழுதத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாவலாக எழுத நினைத்து, குறுங்காவியமாக எழுதி ‘அருஞ்சொல்’ மின்னிதழில் வெளியிட்டேன். எழுதி முடித்ததும் அது காவியமாக வளரும் என்று நெருக்கமான நண்பர்கள் கூறினார்கள். அப்படியே விரித்தெடுத்து காவியமாக 13 அத்தியாயங்கள் அருஞ்சொல்லில் 13 வாரங்கள் வெளியானது. ‘மாயக்குடமுருட்டி’ எழுதி முடித்த தருணத்தில் இது காவியமாகவும் நிறைவடையாது என்றும் தோன்றியது. ஆகவே, அதனை ‘காவிரியம்’ என்ற பொதுத் தலைப்பில் விரித்தெடுத்து முதல் நூலுக்கு ‘மாயக்குடமுருட்டி’ என்ற தலைப்பைத் தக்கவைத்துக்கொண்டேன். 

எழுதி வெளியிடும் முன்னே தமிழின் தலைசிறந்த காவியங்களுள் ஒன்றாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மாயக்குடமுருட்டி நிறைவடையும்போது அதனை மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் உறுதிப்படுத்தினார்கள். மாயக்குடமுருட்டியின் முதல் அத்தியாயம் வெளியான அன்று மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர் அருஞ்சொல் மின்னிதழில் அதனைப் படித்திருக்கிறார்கள். கவிதையை அதுவும் நெடுங்கவிதையைப் பொறுத்தவரை அது பெரும் சாதனை. என் நெடுங்காவியத்துக்கு ஆதரவளித்த எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், பேராசிரியர் தங்க. ஜெயராமன், தினமணி சிவக்குமார், பெரு. விஷ்ணுகுமார், அருஞ்சொல் மின்னிதழின் சமஸ், தம்பி சிவசங்கர், ஓவியர்கள் ஜோ.விஜயகுமார், இரா. தியானேஷ்வரன் உள்ளிட்டோருக்கு மிக்க நன்றி. தொடரின் விளம்பர போஸ்டருக்காகத் தங்கள் கருத்துகளைக் கொடுத்துதவிய கவிஞர் அபி, தியடோர் பாஸ்கரன், பேரா.டேவிட் ஷுல்மன் ஆகியோருக்கு நன்றி! பலரின் கருத்துகளையும் அறிந்துகொள்ள இந்தக் காவியத்தைக் கொடுத்திருந்தேன். பெருந்தேவி, ஆனந்த், கண்டராதித்தன், தூயன், பொன்முகலி, வே.நி.சூர்யா, முத்துராசா குமார் உள்ளிட்டோர் முழுவதும் படித்துவிட்டுப் பிரதியை மேம்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பிரதியின் மீதான என் நம்பிக்கையையும் இவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

எழுதத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறும் இந்நாளில் எடிட்டிங்குக்காக ‘மாயக்குடமுருட்டி’யை மறுபடியும் தொடுகிறேன். இந்த இடைவெளியில் என் கவிதைகள் வேறு வேறு திசையில் சென்று பெரும் ஆட்டம் ஆடிவிட்டன. இந்த இடைவெளி ஒரு பிரதிக்குத் தேவையும் கூட. கூடிய விரைவில் ‘மாயக்குடமுருட்டி’யை புத்தகமாக உங்கள் கண்முன் கொண்டுவருகிறேன். 2,500 ஆண்டுகால தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு ஆற்றை இந்த அளவுக்குக் கொண்டாடும் இன்னொரு கவிதைப் படைப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அதைத்தான் நண்பர்கள், வாசகர்கள் பலரும் என்னிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘காவிரியம்’ நெடுங்காவியத்தின் முதல் பகுதியான ‘மாயக்குடமுருட்டி’யின் அனைத்து அத்தியாயங்களும் ஓரிடத்தில், ‘அருஞ்சொல்’ மின்னிதழில்:

https://www.arunchol.com/asai-poem-maya-kudamurutti-all-links