Friday, April 26, 2024

ராஜா... ரஹ்மான்: க்ளிஷே சமூகமாக ஆகிவிட்டோமா?



நான் இளையராஜா ரசிகனாக (வெறியனாக) மட்டும் இருந்தபோது உலகிலேயே சிறந்த இசையமைப்பாளர் அவர் மட்டுமே என்ற அசைக்க முடியாத எண்ணத்தில் இருந்தேன். (வேறு யாரையும் கேட்டதில்லை). அந்த எண்ணத்தில் எனக்குள் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டது என் 19 வயதில்.
அப்போது மன்னார்குடி கல்லூரியில் இரண்டு நாள் ரோட்டரி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. வீடு மன்னார்குடி என்றாலும் அங்கேயேதான் இரண்டு நாள் இருக்க வேண்டும். அந்த நிகழ்வில் விக்டர் என்ற மூத்த ரொட்டேரியன் தன் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் விழுகிறார். மருத்துமனைக்கு எடுத்துச் செல்லத் திட்டமிடுகையில் “வேண்டாம், பீத்தோவனின் 9வது சிம்பனியைப் போடுங்கள்” என்று சொல்ல அவர்களும் இசைக்க விட்டிருக்கிறார்கள். ஒன்றே கால் மணி நேரம் ஓடியதும் புத்துணர்ச்சியுடன் அவர் எழுந்து உட்கார்ந்துவிட்டாராம். இதைக் கேட்டதிலிருந்து எனக்கு பீத்தோவன் என்ற பெயரே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இசை இப்படியெல்லாம் மாயம் நிகழ்த்துமா என்று பெரும் வியப்பாக இருந்தது.
ஒரு சில மாதங்களில் நண்பர் சென்னை செல்லவிருந்தார். அவரிடம் 40 ரூபாய் பணம் கொடுத்து பீத்தோவன் கேசட் ஏதாவது இருந்தால் வாங்கிவரும்படிக் கேட்டுக்கொண்டேன். அவர் ‘The Greatest Hits of Beethoven' என்ற கேசட்டை வாங்கிவந்தார். அதைக் கேட்க ஆரம்பித்ததும் என்னால் விவரிக்க முடியாத ஆனந்தம். திரும்பத் திரும்பக் கேட்கிறேன். அதற்கு முதல் வாரம் வரை காதுகளில் நீங்காமல் இருந்த ‘How to Name It' தொகுப்பை பீத்தோவன் வந்து அகற்றிவிட்டார். வகுப்பு பாட்டும் நடந்துகொண்டிருக்கும் என் மனதின் காதுக்குள் ஒவ்வொரு இசைத் துணுக்காய் ஓடிக்கொண்டிருக்கும். அப்படியே மிதந்துகொண்டிருப்பேன். குறிப்பாக, பீத்தோவனின் 5வது சிம்பனி, 9வது சிம்பனி போன்றவற்றில் சில மூவ்மெண்ட்கள், Für Elise, Moonlight Sonata போன்றவை அந்த கேசட்டில் மிகவும் விருப்பமானவை. இன்றுவரை நான் அதிகம் கேட்கும் பீத்தோவன் இசை, அந்த கேசட்டில் இருந்தவையே.
அதற்குப் பிறகு சென்னை வந்து க்ரியா ராமகிருஷ்ணன் மூலம் பாஹ், மொசார்ட், உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் பீம்சென் ஜோஷி உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். என் இசை ரசனைப பன்மைத்தன்மை மிக்கதாகியது. (கர்நாடக இசை மட்டும் இன்றுவரை அகப்பட மாட்டேன் என்கிறது). ஒரு கட்டத்தில் இளையராஜாவை விட்டு விலக ஆரம்பித்தேன். மிகவும் தாமதமாக 2008ல்தான் ரஹ்மானைத் தீவிரமாகக் கேட்க ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடாமல் கேட்கிறேன். அநிருத் அறிமுகமானதிலிருந்து பத்து ஆண்டுகள் அவர் பாடல்களை நான் கேட்கவே இல்லை. குழந்தைகளின் சர்வாதிகாரத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அநிருத்தும் விரும்பிக் கேட்கிறேன். (இப்போது சற்றே சலிக்க ஆரம்பித்துவிட்டது). இப்போதெல்லாம் அதிகம் கேட்கும் இசையமைப்பாளர்கள் ரஹ்மான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் (உரிய காலத்தில் இவரை நிறைய புறக்கணித்துவிட்டேன்).
இசை என்பது ஒரு நாட்டைப் போல, உலகத்தைப் போல, வாழ்க்கையைப் போல பன்மைத்தன்மை மிக்கது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி போன்று ஒரே இசை ஒரே இசையமைப்பாளர் என்பதும் நல்லதல்ல, ராஜா, ரஹ்மான் என்று யாராக இருந்தாலும்.
தன் ரசனை மீது ஒருவர் பிடிப்பு வைத்திருப்பது தவறல்ல. ஆனால், கொஞ்சம் அங்கே இங்கே எட்டியும் பார்க்க வேண்டும். குட்டி இளவரசன் நாவலில் ஒரு வரி வரும் “உன் ரோஜாவுக்காக நீ செலவிட்ட நேரம்தான் அதனை உனக்கு அவ்வளவு முக்கியமானதாக ஆக்குகிறது.” இதை ராஜாவுக்காக செலவிட்ட நேரம், ரஹ்மானுக்காகச் செலவிட்ட நேரம் என்றெல்லாம் பொருத்திப் பார்க்கலாம். நான் அதிகம் செலவிட்டது ராஜாவுக்காகத்தான். ஆனால், அந்தப் பீடிப்பு மனநிலையிலிருந்து சற்றே வெளியில் வந்து இப்போது பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன். அப்படியும் சில தருணங்களில் ராஜா என்னை மீறி ஆக்கிரமித்துவிடுவார். சமீபத்தில் கூட ஒருமுறை கையில் பியருடன் காதில் ஹெட்செட் மாட்டித் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்த ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலுக்காகத் தனியாக அழுதுகொண்டிருந்தேன். அது தனிப்பட்ட பிணைப்பு.
க்ரியா ராமகிருஷ்ணனுக்கு ராஜா, ரஹ்மான் என்று யாரையும் பிடிக்காது. (கர்நாடிக்கும் கேட்க மாட்டார்.) இந்துஸ்தானி, மேற்கத்திய செவ்வியல் இசை ரசிகர் அவர். இறுதிவரை இந்த இருவருக்காகவும் அவருடன் சண்டையிட்டிருக்கிறேன். நானறிந்து அவர் ரசித்த ராஜா பாடல்கள் சில உண்டு. ஒரு முறை அவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது டிவியில் ‘வெள்ளைப் புறா ஒன்று’ (மகிழ்ச்சியான பாடல்) ஓடிக்கொண்டிருந்தது. ‘இது நல்லாருக்கே’ என்றார். ‘இதுபோல குறைந்தபட்சம் 500 பாடல்களாவது ராஜாவிடம் காட்ட முடியும்” என்றேன். ரஹ்மானின் ‘க்வாஜா மேரே க்வாஜா’ நன்றாக இருந்தது என்று கூறினார். அவ்வளவுதான். ஒரு கட்டத்தில் போராட்டத்தை நிறுத்திக்கொண்டேன்.
மிக முக்கியமாக ஒன்று சொல்ல நினைக்கிறேன். ஒரு சமூகமே கிளிஷே சமூகமாக ஆகிவிடக்கூடாது. தேங்கி ஒரே இடத்தில் நின்றுவிடக்கூடாது. ராஜா சிறந்த திரை இசையமைப்பாளர்தான், பலரது தற்கொலைகளைத் தடுத்தவர்தான், (என்னைப் போன்ற) பலரது காதலின் பின்னணி இசையமைப்பாளர்தான். ஆனால், இதே கதைதான் எங்கு திரும்பினாலும். எக்கோ சாம்பரில் வாழ்கிறோமோ என்று தோன்றுகிறது. சிஎஸ்கே மேட்சில் தோனி இறங்கும்போது ஏற்படும் கூஸ்பம்ப்ஸ், கோஷம் எல்லாமே திரும்பத் திரும்ப எனும்போது எரிச்சல் ஏற்படுகிறதல்லவா. ஒரு சமூகம் சிவாஜியைக் கடந்து செல்ல வேண்டும், ராஜாவைக் கடந்து செல்ல வேண்டும், ரஹ்மானைக் கடந்துசெல்ல வேண்டும், சச்சினைக் கடந்து செல்ல வேண்டும், தோனியைக் கடந்து செல்ல வேண்டும், வடிவேலுவைக் கடந்து செல்ல வேண்டும், முக்கியமாக சினிமா, கிரிக்கெட் இவற்றையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். இவர்களையெல்லாம் போதும்போதும் என்று கொண்டாடித் தீர்த்தாகிவிட்டது. அங்கேயே நிற்போம் என்றால் நாம் மட்டும்தான் அங்கேயே நிற்போம், வளர்ச்சி நமக்கு வெளியே நடந்துகொண்டுதான் இருக்கும்.
இளையராஜா குறித்த சாரு நிவேதிதாவின் கட்டுரையைப் படித்தேன். அதில் உள்ள கடுமை, தடாலடி எனக்கு ஏற்புடையதல்ல எனினும். அதில் பகுதியளவு உடன்பாடே. அது ராஜாவுக்கல்ல, ரஹ்மானுக்கு எழுதியிருந்தாலும். என்ன பிரச்சினையென்றால் சாருவின் தடாலடி காரணமாகவே அவரைப் பெரும்பாலானோர் விலகிச் செல்வது நடந்திருக்கிறது.
இந்த உலகம் மிகப் பெரியது. அதில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. அவரவர் சாதனைகளைப் பொறுத்து அவரவருக்கு இசையுலகிலும் இடமிருக்கிறது. எல்லோரையும் பார்க்கும் விசாலமான பார்வையும் நமக்கு இருக்க வேண்டும்.

-ஆசை 

No comments:

Post a Comment