Tuesday, June 29, 2021

மகிழ் ஆதனின் கவிதை உலகம் - ஒரு ரசனை மதிப்பீடு


டாக்டர் கு. கணேசன்

அன்பு நண்பர், கவிஞர் ஆசைத்தம்பியின் மூத்த மகன் மகிழ் ஆதன் சொல்லித் தொகுத்த சிறார் கவிதை நூல் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ ஒரு பிரதியை எனக்கு அனுப்பி 2 மாதங்கள் ஆகின்றன. கரோனா கொடுத்த வேலைப் பளுவில் இன்று, நாளை என்று நாட்கள் தள்ளிக்கொண்டே வந்து, இன்றுதான் அதை வாசிப்பது சாத்தியமாயிற்று.

சின்னச்சின்ன கவிதைகள்தாம். பலவும் ஹைக்கூ நடையைக் கொண்டவைதாம். எப்படி ஒரு பிஞ்சுக் குழந்தை அம்மாவின் மார்போடு இறுக ஒட்டிக்கொள்கிறதோ அப்படிப் பார்த்ததும், படித்ததும் ‘பசக்கென’ நம்மோடு ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்தான். ஆனாலும், நிறுத்தி நிதானமாக, வரிவரியாய், வார்த்தை வார்த்தையாய் வாசித்தேன். சில கவிதைகளை மறுபடியும் மறுபடியும்கூட வாசித்தேன். ஒரு மணி நேரம் ரசித்து, மகிழ்ந்து முகிழ்ந்தேன் என்றால் மிகையில்லை.  

நான்காம் வகுப்பு படிக்கும் பாலகன் என்ன சொல்லியிருக்க முடியும் என்ற கேள்வியோடு கவிதைகளை வாசிப்பவருக்கு நிச்சயம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்.

அனுபவங்களைப் பதிவு செய்வது கவிதை. அதை வாசிக்கும்போது புதிய அனுபவங்களைத் தருவது நல்ல கவிதை. ஆனால், அந்த அனுபவங்களின் வாயிலாக ஒரு புதிய தேடலைக் காண்பிப்பது மிகச் சிறந்த கவிதை. கவிதை குறித்து இப்படி ஒரு வரையறை உண்டு. இந்த ரகத்தைச் சார்ந்த கவிதைகளை மகிழ் ஆதன் கவிதைகளில் நான் கண்டு வியந்தேன்.

இந்தச் சின்ன வயதில் அவனுக்குக் கிடைத்துள்ள அனுபவங்கள் கொஞ்சமே! இது எல்லோருக்கும் இயல்புதான். ஆனாலும் அவற்றை மறக்காமல் கவிதைகளாக்கியிருக்கிறான் பாருங்கள், அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.

‘அனுபவப் பகிர்வு கவிதை’ என்று எடுத்துக்கொண்டால், அவன் வயதுக்கு என்ன அனுபவம் கிடைத்ததோ அதைக் கவிதையாக்கியிருக்கிறான். குழந்தைகளுக்கு அம்மாக்கள் தரும் அன்புநிறை முத்தங்கள்தானே பல அனுபவங்களைத் தந்திருக்கும்!

‘முத்தம்

முறைவடிவான முத்தம்

என் கன்னத்தில் தொங்கிச்சொட்டும்

தேன் மாதிரிப் பொங்கும்!’

‘முத்தம்’ குறித்த வெறும் அனுபவ வார்த்தைகளாக அல்லாமல் ‘தேன் மாதிரி’ என்று கொஞ்சம் கற்பனையையும் கலந்து சொல்லியிருக்கிறான், பாருங்கள். அங்கேதான் மகிழ் ஆதன் ‘சிறார் கவிஞன்’ ஆகிறான்.

‘தேன் மாதிரி’ என்று சொல்லும்போது ‘இனிமை தந்த முத்தம்’ என்று உடனடி அனுபவத்தையும், அந்த முத்தத்தை நினைக்கும்போதெல்லாம் அம்மாவின் இனிய நினைவுகளையும் சேர்த்து மனதில் தேக்கிக் கொள்ளும்போது அது நாட்பட்ட அனுபவத்தையும் அல்லவா அவனுக்குத் தந்திருக்கிறது! அந்தக் கவிதையை வாசித்ததும் இதே போன்று நம் சின்ன வயது அனுபவங்களையும் அல்லவா போகிறபோக்கில் அவன் கிளறிச்செல்கிறான்.

‘நான்தான்

உலகத்தை வரைந்தேன்

வானத்தில் மிதந்தேன்

வானத்தை நான்

கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்

வானம் என்னைக் காற்றால் கட்டிப்போட்டது

கட்டிப்போடும் நேரத்தில

சூரியன் என்னை வரைந்தது’

மகிழ் ஆதனின் அனுபவங்களின் வாயிலாக ஒரு புதிய தேடலை  நமக்குக் காண்பிக்கும் மிகச் சிறந்த கவிதை இது.

இயற்கையை ரசிக்காத மனிதர் உண்டா? அதிலும் குழந்தைப் பருவத்தில் வான் மேகங்களின் பல வண்ண வடிவங்களைக் கண்டு ரசிக்காதவர்தான் உண்டா? பாலகன் மகிழ் ஆதன் அதற்கு விதிவிலக்கல்ல! இதோ அந்தக் கவிதை!

‘தண்ணியில் நடக்கும் யானை

தண்ணியாக மாறும் யானை

கடலைக் குடிக்கும் யானை

தண்ணியிலே தூங்கும் யானை

தாயாக மாறும் யானை

தனக்குள் போகும் யானை’

மகிழ் ஆதன் ‘கண்ணாடி’ குறித்து ஒரு கவிதை சொல்லியிருக்கிறான்.

‘நம்மள் கண்ணாடியில்

பார்க்கும் அற்புதம்

நம்மளைத் திரும்பியும்

கண்ணாடியில் பார்க்க வைக்கும்’

இந்தக் கவிதையை வாசிக்கும்போது குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ‘கண்ணாடி’ கவிதை என் நினைவுக்கு வந்தது. அவர் 16 வரிகளில் சொன்னதை மகிழ் ஆதன் 4 வரிகளில் சொல்லியிருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மகிழ் ஆதன் ஒரு ‘மழலைக் கவிதை மேதை’ என்பதில் ஐயமில்லை!

மகிழ் ஆதனுக்கு இது ஆரம்பம்தான். கவி சுகம் கண்ட மனம் அவனை சும்மா விடாது. போகப்போக அனுபவங்கள் கூடும்போது இன்னும் நிறைய கவிதைகள் அவனிடம் பிறக்கத்தான் போகின்றன.

அதிலும் அவனுக்கு இயற்கையை ரசனையோடு அனுபவிப்பதில் ஒரு பிடிப்பு இருக்கிறது. வானம், நிலா, நட்சத்திரம், மழை, மேகம், பூமி, வெயில், நிழல், பூக்கள், ரோஜா, மரம், மான், யானை, புலி, குயில், காகம், பறவை, மீன்கொத்தி, மூங்கில், புல்லாங்குழல் என வரிசைகட்டி கவிதைகளில் சொல்லியிருக்கிறான். இனியும் சொல்லப்போகிறான்.

நண்பர் ஆசைத்தம்பியும் அவரது துணைவியார் சிந்துவும் செய்ய வேண்டியதெல்லாம் இந்த கரோனா காலம் முடிந்த பிறகு வீடு, பள்ளி, படிப்பு என்று அவனைச் சுருக்கிவிடாமல் வெளி உலகத்தை அவனுக்கு விரிவாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் பலன் அவனுடைய அடுத்தடுத்த கவிதைகளில் தெரியும் என்பது திண்ணம்.

இதன் தொடக்கமாக, எங்கள் ஊருக்கு (இராஜபாளையம்) அவனை அழைத்து வாருங்கள். அருகில் இருக்கும் குற்றாலத்துக்கு அழைத்துச் செல்லலாம். இயற்கை அழகு கொஞ்சும் மலைத்தொடர்களையும் ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகளையும் அவன் பார்த்து, ரசித்து, பரவசமடைந்து ஒரு புதிய குற்றாலக்குறவஞ்சிகூடப் படைக்கலாம்!

சிப்பிக்குள் இருக்கிறது இன்னும் பல முத்துக்கள். அவற்றை வெளியில் கொண்டுவரலாம்.

ஆரம்ப காலத்தில் நானும் ஒரு குழந்தை எழுத்தாளர் எனும் வகையில், சிறார் கவிஞர் மகிழ் ஆதனுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளும் மனம் மகிழ்ந்த பாராட்டுகளும் ஆசிகளும் நிறையட்டும்.

அன்பு முத்தங்களுடன்,

டாக்டர் கு. கணேசன்,

இராஜபாளையம்.

28.06.2021 


புத்தக விவரங்கள்:

நான்தான் உலகத்தை வரைந்தேன்
(கவிதைகள்)
மகிழ் ஆதன்
வானம் பதிப்பக வெளியீடு
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9176549991

Monday, June 21, 2021

காலம்: மகிழின் மூன்று கவிதைகள்

 


நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டிலில் Carlo Rovelliயின் The Order of Time புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது மகிழ் என்னிடம் அது எதைப் பற்றியது என்று கேட்டான். காலத்தைப் பற்றியது என்று சொன்னேன். காலம் என்றால் என்ன என்று கேட்டான். நான் ‘நேற்று, இன்று, நாளை’ என்றரீதியில் காலத்தைப் பற்றி விளக்க முயன்றேன். முடியவில்லை. எவ்வளவுதான் காலத்தைப் பற்றிப் படித்தாலும் அதை விளக்குவது ரொம்பவும் கடினம் என்பதை உணர்ந்தேன். நீயே உனக்குப் பிடித்த மாதிரி விளக்கிக்கொள் என்று சொல்லிவிட்டேன். உன் கவிதை வழியாக அதைச் செய்யலாம் என்றேன்.  அதை அடுத்து அவன் எழுதிய மூன்று கவிதைகள். 


காலம்-1


நான் காலத்தில் மிதந்தேன்

காலத்தை
என் கண்ணுக்குள் தெரிய வைத்தேன்

காலம் என் கனவைத் தூக்கிக்
கடலில் போட்டது

நேற்று இருந்த காலம்
இன்னைக்கு இருக்குமா

இருக்கும்
காலம் என்னிடம் சொன்னது

காலம் என்னைக்
காலத்தின் முடிவுக்குக்
கூட்டிட்டுப் போனது


அங்கே
வானத்தின் முடிவு
கீழே இறங்கியது

--


காலம்-2

காலம் என்றால் என்ன

அது ஒரு பூ

அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது

--


காலம்-3

காலத்தை என் கை மூலம்
நான் நிறுத்திவைத்தேன்

காலம் என்னிடம்
பூமியின் கனவைச் சொன்னது

நான் காலத்தை
இல்லாமல் ஆக்கினேன்

நான் காலத்தின் சிலையைக்
கட்டினேன்

நான் காலத்தைத்
திருப்பி ஓடவைத்தேன்

---

இது அவனது தொகுப்பில் இடம்பெற்ற காலக் கவிதை:

காலம்: 0

காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
காலத்தில் பறப்பான்
காலத்தை நேரில் பார்ப்பான்
காலத்தைக் கற்பனை பண்ணிப்பான்