யுவால் நோவா ஹராரி
சதிக் கோட்பாடுகள் எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் வருகின்றன. இவற்றில் ரொம்பவும் பரவலானது உலகளாவிய ரகசிய அரசியல் குழுவைப் பற்றிய சதிக் கோட்பாடுதான். “ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள் ரகசியமாக உலகத்துப் போக்குகளைக் கட்டுப்படுத்தி உலகையே ஆள்கிறார்கள்” என்ற கோட்பாட்டை நம்புகிறார்களா என்று 25 நாடுகளைச் சேர்ந்த 26 ஆயிரம் பேரிடம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “நிச்சயமாக அல்லது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்” என்பது 37% அமெரிக்கர்களின் பதிலாக இருந்தது. 45% இத்தாலியர்களும், 55% ஸ்பானியர்களும் 78% நைஜீரியர்களும் அப்படியே பதிலளித்தார்கள்.
சதிக் கோட்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் சில கோட்பாடுகள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிஸத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் வழக்கமாக நாஜிஸத்தை ஒரு சதிக் கோட்பாடாகக் கருதுவதில்லை. அது ஒரு நாடு முழுவதையும் ஆட்கொண்டு இரண்டாம் உலகப் போரைத் தொடக்கியதால் அது தீயதாக இருந்தாலும் நாஜிஸத்தை நாம் வழக்கமாக ஒரு ‘சித்தாந்தம்’ என்றே கருதுவோம்.
நாஜிஸமும் சதிக் கோட்பாடே
ஆனால், அதன் மையமான சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, நாஜிஸமானது கீழ்க்கண்ட யூத வெறுப்புப் பொய்யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரகசிய சதிக் கோட்பாடாகவே இருந்தது: “யூத நிதி நிறுவனங்களின் ரகசியக் குழுவொன்று ஒட்டுமொத்த உலகத்தையும் ரகசியமாக ஆதிக்கம் செலுத்துவதுடன் ஆரிய இனத்தை அழிப்பதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள்தான் போல்ஷ்விக் புரட்சிக்குக் காரணம், மேற்கத்திய ஜனநாயக நாடுகளை இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களே, ஊடகங்களும் வங்கிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹிட்லரால் மட்டுமே அவர்களின் எல்லா தீய தந்திரங்களையும் கண்டுபிடிக்க முடிந்தது – அவரால் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்தி மனித குலத்தைக் காப்பாற்ற முடியும்.” இதுதான் அந்தப் பொய்.
இதுபோன்ற உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்களினுடைய கோட்பாடுகளின் பொதுவான அமைப்பைப் புரிந்துகொள்வது என்பது அவற்றின் கவர்ச்சியையும் அவற்றில் அமைந்திருக்கும் பொய்மையையும் நமக்கு விளக்கும்.
கட்டமைப்பு
இந்த உலகில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் பின்னணியில் ஒரு தீய குழுவொன்று இருக்கிறது என்று உலகளாவிய ரகசிய அரசியல் குழுக்கள் தொடர்பான கோட்பாடுகள் வாதிடுகின்றன. இந்தக் குழுவின் அடையாளம் மாறலாம்: இந்த உலகம் ரகசியமாக ஃப்ரீமேஸன்களால், சூனியக்காரிகளால் அல்லது சாத்தானியர்களால் ஆளப்படுகிறது என்று சிலர் நம்புகிறார்கள்; பிறர், அது வேற்றுக்கிரகவாசிகளால், பல்லி மனிதர்களால் அல்லது பல்வேறு இறுக்கமான குழுக்களால் ஆளப்படுவதாக நம்புகிறார்கள். ஆனால், இதன் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றுதான்: அந்தக் குழு கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது; அதே நேரத்தில், இப்படித் தான் கட்டுப்படுத்துவதை ரகசியமாகவும் வைத்திருக்கிறது.
இதுபோன்ற உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவமாகக் காட்சியளிப்பவற்றை ஒன்றிணைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றன. கம்யூனிஸமும் முதலாளியமும் நேரெதிராக இருக்கும் எதிரிகள்போல் மேல் தோற்றத்துக்குத் தோன்றுகிறதல்லவா? தவறு, அப்படித்தான் யூத ரகசிய அரசியல் குழுக்கள் நம்மை நம்பவைக்கின்றன என்று நாஜி சதிக் கோட்பாடு கூறியது. புஷ் குடும்பமும் கிளிண்டன் குடும்பமும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்று சூளுரைத்துக்கொண்டவை என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் நமக்கு முன்னால் நடிக்கிறார்கள் – மூடிய கதவுக்குப் பின்னால் அவர்கள் ஒரே விருந்து நிகழ்வுக்குத்தான் செல்வார்கள். இப்படியெல்லாம் இந்தச் சதிக் கோட்பாடுகள் எதிரெதிர் துருவங்களை இணைத்துக் கூறுகின்றன.
மயக்கும் கண்ணி
இதிலிருந்து இந்த உலகத்தைப் பற்றிய ஒரு கோட்பாடு வெளிப்படுகிறது. செய்திகளில் கூறப்படும் நிகழ்வுகளெல்லாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகளே. நமது கவனத்தைத் திசைதிருப்பும் பிரபலத் தலைவர்களெல்லாம் உண்மையாக ஆள்பவர்களின் கைகளில் வெறும் பொம்மைகளே.
உலகளாவிய சதிக் கோட்பாடுகளை நிறைய பேர் நம்பி, பின்பற்றுவதற்கு ஒரு காரணம் என்னவென்றால் எண்ணற்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு அவை நேரடியான, ஒற்றை விளக்கத்தைத் தருகின்றன. நமது வாழ்க்கை தொடர்ச்சியாகப் போர்கள், புரட்சிகள், பிரச்சினைகள், பெருந்தொற்றுக்களால் அலைக்கழிக்கப்படுகின்றன. ஆனால், சில வகையான சதிக் கோட்பாட்டை நான் நம்பினால் எனக்கு எல்லாம் புரிகிறது என்ற ஆசுவாச உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
சிரியாவில் நடைபெறும் போர்? அங்கே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் மத்தியக் கிழக்கு வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அது பெரிய சதியின் ஒரு பகுதி. 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்? மின்காந்த அலைகள் பற்றி நான் எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை. அது ஒரு சதிக் கோட்பாடுதான். கரோனா பெருந்தொற்று? அதற்கும் உயிர்ச்சூழல்கள், வௌவால்கள், வைரஸ்களுக்கும் தொடர்பில்லை. இது தெளிவாக சதிக் கோட்பாடுதான்.
உலகளாவிய சதிக் கோட்பாடு கொண்டிருக்கும் எல்லாப் பூட்டுகளையும் திறக்கும் சாவியானது உலகின் எல்லாப் புதிர்களையும் திறந்துவிடுகிறது, பிரத்யேக வட்டம் ஒன்றுக்கான, அதாவது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மக்களின் வட்டம் ஒன்றுக்கான அனுமதியை எனக்குத் தருகிறது. அது என்னை வழக்கமான நபர்களை விட அதிக புத்திசாலியாக ஆக்குகிறது. பேராசிரியர்கள், இதழாளர்கள், அரசியலர்கள் போன்ற அறிவுஜீவி மேல்தட்டினர், ஆளும் வர்க்கத்தினரைவிடவும்கூட என்னை மேலுயர்த்துகிறது. அவர்கள் காணத் தவறியதை அல்லது அவர்கள் மறைக்க முயல்வதை நான் காண்கிறேன்.
பிழை
உலகளாவிய சதிக் கோட்பாடுகள் எல்லாம் ஒரே அடிப்படைப் பிழையால் பீடிக்கப்பட்டிருக்கின்றன: வரலாற்றை அவை மிகவும் எளிமையானதாக நினைக்கின்றன. உலகளாவிய சதிக் கோட்பாடுகளின் மையக் கருதுகோள் என்னவென்றால் இந்த உலகத்தைத் தன் வசத்தில் கட்டுப்படுத்துவது ஓரளவுக்கு எளிது என்பதுதான். போர்கள், தொழில்நுட்பப் புரட்சிகள் தொடங்கி பெருந்தொற்றுகள் வரை சிறியதான சில குழுக்களால் புரிந்துகொள்ள முடியும், முன்கூட்டியே கணிக்க முடியும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று சதிக் கோட்பாடுகளை நம்புபவர்கள் நினைக்கிறார்கள்.
குறிப்பாகக் குறிப்பிட வேண்டியது எதுவென்றால் உலகளாவிய சதுரங்கத்தில் பத்து நகர்வுகளை முன்கூட்டியே காணும் இந்தக் குழுவின் திறன்தான். அவர்கள் வைரஸை எங்காவது வெளியிடும்போது அது இந்த உலகம் முழுதும் எப்படிப் பரவும் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை ஒரு ஆண்டு கழித்து எப்படிப் பாதிக்கும் என்பதையும் அவர்கள் கணிக்கக் கூடியவர்கள். ஒரு போரை அவர்கள் தொடங்கினார்கள் என்றால், அது எப்படி முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
இராக் எடுத்துக்காட்டு
ஆனால், இந்த உலகம் அதைவிடவும் மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இராக்கில் அமெரிக்காவின் ஊடுருவலைப் பற்றி யோசித்துப் பாருங்கள். 2003-ல் இந்த உலகின் ஒரே ஒரு வல்லரசு, நடுத்தர அளவுள்ள மத்தியக் கிழக்கு நாட்டினுள் ஊடுருவியது. அந்த நாட்டிலுள்ள பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், சதாம் ஹுசைனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் அந்த ஊடுருவலை நிகழ்த்தியதாக அமெரிக்கா கூறியது. அந்தப் பிரதேசத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இராக்கின் முக்கியமான எண்ணெய்க் கிணறுகளைத் தன்வசப்படுத்தவும் அமெரிக்கா இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று சிலர் சந்தேகப்பட்டனர். தனது லட்சியத்துக்கான தேடலில் உலகின் மிகச் சிறந்த ராணுவத்தை அமெரிக்கா ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல் டிரில்லியன் கணக்கான டாலர்களையும் அதற்காகச் செலவழித்தது.
சில ஆண்டுகளை வேகமாக முன்னோக்கி ஓட்டிப் பாருங்கள், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் விளைவுகள் என்ன? பரிபூரணப் பேரழிவுதான். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் இராக்கில் இல்லை, அந்த நாடு அதலபாதாளத்துள் வீழ்ந்தது. இந்தப் போரில் பெரிய வெற்றியாளர் யாரென்றால் ஈரான்தான். அதுதான் இந்தப் போரின் விளைவாக அந்தப் பிராந்தியத்தில் பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவானது.
ஆக, ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷும் டொனால்டு ரம்ஸ்ஃபெல்டும் உண்மையில் ஈரானியக் கையாள்கள் என்றும் தீயதும், சாமர்த்தியமானதுமான ஈரானிய சதியை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் நாம் முடிவுக்கு வரலாமா? வரவே முடியாது. மாறாக, மனித விவகாரங்களைக் கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக மிகக் கடினம் என்ற முடிவுக்கே நம்மால் வர முடியும்.
இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக மத்தியக் கிழக்கு நாடொன்றை ஊடுருவத் தேவையில்லை. ஒரு பள்ளிக்கூட வாரியத்திலோ உள்ளூர் பஞ்சாயத்திலோ நீங்கள் பணியாற்றியிருந்தாலும் அல்லது உங்கள் அம்மாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியூட்டும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய முயன்றாலும் உங்களுக்குத் தெரியும் மனிதர்களைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று. ஒரு திட்டத்தைத் தீட்டுவீர்கள், அது நேரெதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரோடு நீங்கள் ஒரு சதித் திட்டம் தீட்டுவீர்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் உங்கள் முதுகில் குத்திவிடுவார்.
1,000 அல்லது 100 மனிதர்களையே நம்மால் கணிக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் சிரமமாக இருக்கும் சூழலில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களை ஆட்டுவிப்பது எளிது என்று சதிக் கோட்பாட்டாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
நிதர்சனம்
நிச்சயமாக, உலகில் உண்மையான சதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. தனிநபர்கள், பெருநிறுவனங்கள், அமைப்புகள், திருச்சபைகள், கட்சிகளின் பிரிவுகள், அரசுகள் போன்றவையெல்லாம் தொடர்ந்து வெவ்வேறு சதிகளைத் தீட்டி அவற்றை நிறைவேற்றுகின்றன. அதனால், அவை ஒட்டுமொத்த உலகத்தையும் கணித்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது என்று சொல்லிவிடுவது எளிதல்ல.
1930-களில் உலகெங்கும் கம்யூனிஸப் புரட்சிகளைத் தூண்டிவிட சோவியத் ஒன்றியம் உண்மையில் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது; முதலாளிய வங்கிகளெல்லாம் நேர்மையற்ற எல்லாவித உத்திகளையும் பின்பற்றின; ரூஸ்வெல்ட்டின் நிர்வாகம் ‘நியூ டீல்’ மூலம் அமெரிக்காவை மறு கட்டமைப்பு செய்யத் திட்டமிட்டது; யூதர்களின் ஸையனிஸ்ட் இயக்கம் பாலஸ்தீனில் தங்கள் தாய்நாட்டை நிறுவும் திட்டத்தை இடைவிடாமல் பேணியது. ஆனால், இவையும் எண்ணற்ற பிற திட்டங்களும் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இயக்குபவர்களாக ஒற்றைக் குழு ஏதும் இருந்திருக்கவில்லை.
இன்றும்கூட நீங்கள் நிறைய சதிகளுக்கு இலக்காகலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் முதலாளியை உங்களுக்கு எதிராகச் செயல்படும்படி சூழ்ச்சி செய்யலாம். தீங்கு விளைவிக்கும் ஓபியாய்டுகளை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்கள் மருத்துவருக்கு ஒரு பெரிய மருந்து நிறுவனம் லஞ்சம் கொடுக்கலாம். மற்றுமொரு பெருநிறுவனம் அரசியலர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நீங்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்த முயன்றுகொண்டிருக்கலாம். ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களின் எல்லையைத் தேர்தல் வெற்றிக்கு ஏற்றவாறு மறுவரையறுக்கலாம். வெளிநாட்டு அரசு ஒன்று உங்கள் நாட்டில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடலாம். இவையெல்லாம் உண்மையான சதிகளாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உலகளாவிய ஒற்றைச் சதியின் பங்காக இருப்பவையல்ல.
அதிகாரமும் பிரபல்யமும்
சில சமயம், ஒரு பெருநிறுவனம், ஒரு அரசியல் கட்சி, அல்லது ஒரு சர்வாதிகாரி தம் கைகளில் இந்த உலகின் ஒட்டுமொத்த அதிகாரத்தில் கணிசமான பகுதியைக் கொண்டிருக்க முயன்று வெற்றி காண்பதும் உண்டு. அப்படி ஒரு விஷயம் நிகழும்போது, அதை ரகசியமாக வைத்திருப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். பெரும் அதிகாரம் வரும்போது பெரும் பிரபல்யம் வரும்.
உண்மையில், பெரும் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான அத்தியாவசியத் தேவையாகப் பெரும் புகழ் என்பது பல விஷயங்களிலும் இருந்துள்ளது. பொது மக்களின் பார்வையை லெனின் தவிர்த்திருந்தால் ரஷ்யாவில் அவர் அதிகாரத்தை வென்றிருக்க முடியாது. ஸ்டாலின் ஆரம்பத்தில் ரகசியமாகவே திட்டம் தீட்ட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால், சோவியத் ஒன்றியத்தில் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் அவர் குவித்துவிட்டிருந்தபோது பால்டிக் பிரதேசத்திலிருந்து பசிபிக் வரை ஒவ்வொரு அலுவலகம், பள்ளி, வீடு ஆகியவற்றில் ஸ்டாலினின் படம் தொங்கிக்கொண்டிருந்தது. ஸ்டாலினின் அதிகாரம் என்பது அவரது ஆளுமை மீதான் வழிபாடுடன் தொடர்புகொண்டது. லெனினும் ஸ்டாலினும் திரைக்குப் பின்னால் உள்ள ஆட்சியாளர்களின் முகமூடி மட்டுமே என்ற கருத்து எல்லா வரலாற்று ஆதாரங்களுக்கும் முரணானது.
எந்த ஒரு தனி ரகசியக் குழுவும் இந்த ஒட்டுமொத்த உலகையும் ரகசியமாகக் கட்டுப்படுத்தவில்லை என்பது துல்லியமானது மட்டுமல்ல, அது நமக்கு சக்தியையும் அளிக்கிறது. அப்படிப் புரிந்துகொண்டால், நம் உலகில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் குழுக்களை நம்மால் அடையாளம் காண முடியும் என்றும், சில குழுக்களுக்கு எதிராக சில குழுக்களுடன் உங்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்றும் அர்த்தமாகிறது. உண்மையான அரசியல் என்பதெல்லாம் இதைப் பற்றியதுதான்.
- யுவால் நோவா ஹராரி, வரலாற்றாசிரியர், ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர்.
© ‘நியூயார்க் டைம்ஸ்’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை, நன்றி: ‘இந்து தமிழ்’ நாளிதழ்