Monday, October 26, 2020

பிரம்மாண்டத்தை ஒரு சொல் தொட்டுவிடும்! அபி பேட்டி



தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான அபி 1942-ல் பிறந்தவர். அவரது இயற்பெயர் பீ.மு. அபிபுல்லா. நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபி தற்போது மதுரையில் வசிக்கிறார். இதுவரை ’மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தர நடை’ (1979), ‘என்ற ஒன்று’ (1988), ‘அபி கவிதைகள்’ (2013) ஆகிய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அபி கவிதைகளின் முழுத் தொகுப்பை சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…

உங்களின் முதல் தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறதல்லவா? இது கவிதைரீதியிலான பரிணாம வளர்ச்சியா, அகரீதியிலான மாற்றத்தின் விளைவா? 

இரண்டும்தான். அனுபவ விரிவு, கூர்வையில் கூர்மை – ஒன்று; மொழியைச் செறிவு செய்து பிறக்கும் வெளிப்பாட்டு வளர்ச்சி – இரண்டு. எந்தப் படைப்பாளிக்கும் இது பொருந்தும்; தேவையும் கூட. பெரிய வேறுபாடு என்று நீங்கள் குறிப்பிடுவதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். என் தொடக்க காலக் கவிதைகளின் பொது இயல்பு ஒருவித சோகம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சொந்த வாழ்வு அழுத்தங்களுக்கும், வாசிப்பில் நான் கண்ட, என் உள்ளகத்தோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஆன ஊசல் நிலை அது. ஆனால், அதை வெளிப்படுத்த அப்போதிருந்த சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த மொழி அலங்காரமும் படிம அடுக்குகளும் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடைவெளிப் பார்வையில் என் பயண இலக்கும் பயணப் பாதையும் துல்லியப்பட வேண்டும் என உணர்ந்தேன். 

என் அடுத்த நகர்வு, மூலங்கள், முரண்பாடுகள் இன்றித் தூய்மையில் இலங்கும் தொலைவாழத்தை நோக்கிய நகர்வு. இப்போது என் கவிதை உண்மையுறும் என உணர்ந்தேன். உள்-வெளி என்ற பேதம் மறையத் தொடங்கும் நிலை; நான்களின் அபரிமிதமான நெரிசலில் இருத்தலும் இன்மையும் ஒன்றெனவே காணும் நிலை; சிற்சில கணப் பிளவுகளிலிருந்து வந்து தொடும் ஆனந்த சுதந்திரத்தை உணரும் விடுபட்ட நிலை – இவை கவிப்பொருளாயின.

கவிதை வெளிப்பாட்டில், மொழியின் சர்வாதிகாரத்துக்குப் பணிய மறுத்தேன்; என் சொல் தனது அர்த்தத்தைத் தாண்டி வெளிவந்தது; சொல், வடிவிலிருந்து அனுபவத்தின் வடிவிலி நிலையை நோக்கிச் சென்றது. படிமங்கள் மனசிலிருந்து மனசுக்கு எந்த ஊடகமும் இன்றிப் பாயும் புதிய அழகியல், கவிதையை எளிய செறிவாக்கிற்று. 

உங்கள் கவிதைகள் பெரிதும் அக உலகக் கவிதைகளாக இருக்கின்றன. ஏன்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் இதற்கான தடயங்கள் உண்டா?

உண்டு. அதிகம் பேசாத, பெருமளவுக்குத் தன்னுள் அடங்கிய என் தந்தையின் இயல்பு எனக்குப் பிறவிக் கொடையாக வந்திருக்கலாம். அகநோக்காளன் அகவுலகைத் தன் கவிதைக்கு வரித்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை. எனக்கு இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது, இருப்பது அகவுலக நடமாட்டம். இப்போது என்னுடைய கேள்வி: எந்த அளவுக்குப் புறநோக்காளனாக ஒருவன் இருந்தாலும் அவனுக்குள் ஓர் அகவுலகம் இல்லையா? இடைவிடாமல் படிமங்கள் தோன்றிப் பெருகித் திரியக் கிடக்கும் அகவுலகம் யாரிடம்தான் இல்லை? கவிதையின் அகவுலகுக்கான அழைப்பொலி கேட்கும் வாசகர்களுக்கு அவரவர் அகங்களைத் துடைத்துத் துலக்கிப் பார்க்கும் தூண்டுதல் உண்டாகலாம். ‘இவ்வளவும் உண்டா இங்கே?’ என்று கிளர்ச்சி கொள்ளும் பொதுவாசகனும் இருக்கிறான். அகம் என்று சொல்லத் தொடங்கும்போதே ‘சமூகத்துக்கு எதிரான தனிமனிதம்’ என்று இடைமறிப்பது கொஞ்ச காலத்துக்கு முன்பு இருந்தது. இன்று இல்லை. இன்னவற்றை இன்ன விதமாக எழுது என்று கற்பிப்பவர்களும் இப்போது இல்லை.

பிரபஞ்சம், அதில்  மனிதனின் இருப்பு பற்றிய விசாரணைகளை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது அல்லவா?

எல்லோருக்கும் தெரியும், மனித இனம் தோன்றியதிலிருந்தே பிரபஞ்சத் தேடலை நிகழ்த்திவருகிறது. விஞ்ஞானமும் தத்துவமும் அதனதன் கருவிகளின் துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிற்றடி எடுத்துவைத்துவருகின்றன. என்ன, எப்படி, எதற்காக என்ற கேள்விகள் அறிதோறும் கிடைக்கின்ற புதுப் புது அறியாமைகளைச் சுமந்து கனக்கின்றன…

இந்த முடிவிலிகளைத் துழாவும் முயற்சியில், ஒருவகையில் முடிவிலியாகிய கவிதையும் இணைந்துகொள்கிறது. ஆனால், கவிதையின் நோக்கம் கண்டுபிடிப்பதல்ல; முடிவு காண்பதல்ல; முடிவிலிகள் தரும் திகைப்பில் திளைத்திருப்பது.

உங்களின் மாலை கவிதை வரிசை தனித்துவமானது. இந்தக் கவிதைகள் உங்களிடம் எப்படி வந்துசேர்ந்தன?

வந்துசேரவில்லை. என் பிள்ளைப் பருவத்தில், மனத் தனிமையில், விவரம் புரியாத அனுபவமாக என்னிடமே இருந்தவை இவை. அப்போது மலைக்குவடுகள், காடுகள், சுனைகள், சிற்றோடைகள், கடுங்குளிர் இவற்றோடு – என்னை நிரந்தரமாகப் பற்றிவைத்திருந்த என் மாலைப் பொழுதோடு – விளக்க முடியாத உறவு கொண்டிருந்தேன். சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கனத்திருந்தன, அந்தப் பிள்ளைச் சிறு மனதில். கவிதையிலும் மேலான அந்தத் தூய அனுபவங்களை இன்று அப்படியே வெளிப்படுத்த முடியாது. 

சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல்; தலைவி தலைவன் வரவை எதிர்நோக்கித் துயரடக்கிக் காத்திருத்தல். அந்தத் திணைக்குரிய பொழுது மாலை. அந்த மரபை விரிவுசெய்து ஒரு புதிய முல்லைத் திணையாகப் பிறப்பெடுத்தவை ‘மாலை’ கவிதைகள். பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை; என் வருகைக்குக் காத்திருக்கும் ‘நான்’ ஆக என்னை ஆக்கியவை; யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை, என் வடிவில் இருந்த மௌனத்தை எனக்குக் காட்டியவை. மொத்தத்தில் அழுகை, கண்ணீர் இல்லாத ஒரு மகத்தான துயரத்தை – பிரபஞ்ச சோகத்தை எனக்குக் காட்டியவை.

தமிழ்க் கவிதை மரபு எந்த அளவுக்கு உங்கள் படைப்புலகத்துக்குப் பங்களித்திருக்கிறது?

பங்களிப்பு, பாதிப்பு என்பவை தொலைதூரத்து உறவுகள், நுட்பமானவை, கேள்வியை எதிர்கொள்ளும்போது தேடிக் காண்பவை என்ற அளவில் உள்ளவைதான் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  எனக்கு மிகவும் உவப்பானது சங்க இலக்கியம். சற்றுக் குறுகலான இலக்கண மரபுக்குள் இயங்க வேண்டிய நிலையில் கூடக் கவிதை அல்லாத எதுவும் தன்னை அண்டாதபடி காத்துக்கொண்ட அதன் தூய எளிமையின் மீது என்க்கு ஈடுபாடு. அந்த மொழிச் செறிவும் வெளிப்பாட்டுக் கூர்மையும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். சங்க காலப் பொதுமக்களின் பேச்சு மொழி, பேச்சு முறை எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. எனினும் பேச்சு மொழியின் நேரடி, உடனடி அதிர்வலைகளைப் புலவர்கள் அங்கங்கே பொருத்தமாக இணைத்திருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கவிதைகள் மிகப் பெரும்பாலும் பேச்சுகளே. என் கவிதை பெரும்பாலும் அகப் பேச்சுகளாக உள்ள ஒப்புமையை இங்கு இப்போது நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.

தத்துவத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பேசிய சித்தர்கள் என் கவிப்பொருளில் பாதிப்பு நிகழ்த்தியிருக்கலாம் என விமர்சகர்கள் ஊகம் கொள்கின்றனர். மற்றபடி, தமிழ்க் கவிதை மரபுக்கு அப்பாற்பட்ட வெளியுலகப் பாதிப்புகள், நவீன இலக்கியப் பாதிப்புகள், எவ்வகைப் பாதிப்புக்கும் உட்படாத என் சுயங்கள் பற்றி விமர்சகர், வாசகர் சொல்லலாம். 

படைப்பின்போது முற்றுமுழுதாக நான் என்னையே பற்றி நின்றுகொள்வது எனக்கு நன்றாகத் தெரியும். 

வெளித்தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும் உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

சில கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஒரு பொதுவான ஆதங்கம். நவீன கவிதையில் படைப்பாளிகளின் அக இயக்கம் தனித்தன்மையுடன் செயல்படும்போது வாசகனுக்கு ஒரு இருண்மை தோன்றும். மொழி, சிந்தனை வடிவங்களுக்கு  வந்து சேராத, வடிவு பெறாத உணர்வு நிலைகளைக் கவிதையாக்க முயல்கிறான் கவிஞன். மூலங்களைத் தொட்டு முடிவிலிகளின் ஊடாகச் செல்லும் முயற்சிகளும் கவிதையில் உண்டு. எந்த அனுபவமும் இல்லாத ஒரு வெற்றிட நிலை வாய்த்தால் கவிதை அதைச் சொல்ல ஆசைப்படுகிறது.

‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும். உண்மையில் ஒரு கவிதை மன, கால வெளிகளில் பல கவிதைகளாகிவிடுவது உண்மையே. ஆதங்கம் வேண்டாம்.

கவிதை கவிஞனைப் படைக்கிறது என்கிறீர்கள், எப்படி?

‘மனிதனிலிருந்து கவிஞனைப் படைக்கிறது கவிதை’ என்று சொல்லியிருந்தேன். இது ஒரு சாதாரண உண்மைதான். அவன் அறிந்தோ அறியாமலோ அவனுக்குள்ளிருக்கும் கவிதை அவனிடமிருந்து வெளிப்படும்போது அவன் ‘கவிஞன்’ ஆகிறான். குழந்தை பிறந்த கணத்தில் ‘தாயை’ படைப்பது போல்தான் இது. கவிதை, கவிஞனை அடையாளப்படுத்துவதுபோலவே வாசிக்கின்ற தகுதியான வாசகர்களையும் கவிஞர்களாக அடையாளப்படுத்துகிறது. வெவ்வெறு வாசகனின் வெவ்வேறு அனுபவப் பாங்கிற்கேற்பக் கவிதை புதுப்புதுப் பரிமாணங்களைக் கொள்ளும்போது அவை வாசகர்களின் கவிதைகளே அல்லவா!

படைப்புலகுக்குரிய தனித்த ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கும்போது இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

உங்கள் ஒட்டுமொத்தக் கவிதையுலகமும் 130 சொச்சம் கவிதைகளில் முடிந்துவிட்டதுபோல் தெரிகிறதே. சமீப ஆண்டுகளில் கவிதை எழுதவில்லையா?

நீண்ட இடைவெளிகளைக் கொண்டது என் படைப்புலகம். எந்த அர்த்தங்களையும் ஊகங்களையும் கொண்டிராத அந்த இடைவெளிகளே என்னுள்ளிருக்கும் கவிதைகளோடு நான் திளைத்தும் உளைந்தும் தனித்திருக்கும் பொழுதுகள். நான் ‘சும்மா இருப்பது’ இவ்வகையில்தான். நான் எழுதுகிறேன் என்ற பிரக்ஞையோ நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகமோ என்னிடம் இல்லை. என் குறை/நிறை இது. எந்த ஒரு பிரம்மாண்டத்தையும் ஒற்றைச்சொல்/ ஒற்றைவரி தொட்டுவிட முடியும் எனும்போது சொற்களைப் பெருக்கும் அவசியம் ஏது? சரி, நானும் உணர்கிறேன். இப்போதைய இடைவெளி சற்று நீண்டுவிட்டது.

ஒற்றை வரியில் ஒரு பிரம்மாண்டத்தைத் தொட்டுவிட முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வரி ஒன்றைக் காட்ட முடியுமா?

‘சூன்யம் என்ற ஒன்று இருந்தவரை எல்லாம் சரியாயிருந்தது’ - இந்த வரி உங்களை அலைக்கழிக்க அனுமதித்துப் பாருங்கள்.

உங்களின் சம காலக் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் யார்?

நிறைய பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஞானக்கூத்தன், பிரமிள், சி.மணி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

 (‘இந்து தமிழ்’ நாளிதழில் 25-10-20 அன்று வெளியான பேட்டியின் சற்று விரிவான வடிவம் இது)

அபூர்வக் கவிஞர் அபி


தமிழ்க் கவிதையுலகில் அபியின் கவிதைகள் அலாதியானவை. அவர் எழுதும் பாணியிலான கவிதைகள் தமிழில் அரிது. பிரமிளிடமும் தேவதச்சனிடமும் கொஞ்சம் பார்க்கலாம். இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதை மரபில் தனித்துவமான கவிஞர்களுள் ஒருவரான அபி தமிழ்ச் சூழலில் போதுமான அளவு கவனம் கிட்டப்படாதவராகவே இருக்கிறார். வானம்பாடிக் கவிஞராக அவரை எல்லோரும் பார்த்தாலும் அங்கிருந்து அவர் இடம்பெயர்ந்து அடைந்த உயரம் அதிகம். எனினும் வானம்பாடிக் குழுவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; நவீனக் கவிதையுலகிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கு இலக்கிய அரசியல் பாதிக் காரணமாக இருந்தாலும் அபி கவிதைகளின் தன்மைக்கும் பாதிக் காரணம் இருக்கிறது. பிரம்மராஜன், ஜெயமோகன், தேவதேவன் உள்ளிட்ட சிலர்தான் அபியைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஒரு வகையில் ‘ஹெர்மட்டிக்’ கவிஞர் என்று அபியைக் கூறலாம். ஒரே நேரத்தில் எளிமையையும் இருண்மையையும் சாதித்தவை அவரது கவிதைகள். 

அபியின் கவிதைகளைப் பற்றி விவரிப்பதற்கு தேவதச்சனின் கவிதை வரிகளைத் துணைகொள்ளலாம்: ‘ஒரு சொட்டு/ தண்ணீரில்/ மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள்’ (பரிசு). ஒரு சொட்டு என்பது எளிமையானது;  ஆனால், அதற்கு ஆயிரம் சொட்டுக்களின் அடர்த்தி என்றால் எப்படி இருக்கும். இதை அபியின் வரிகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்த அடர்த்தியான எளிமைதான் பூடகத்துக்கும் இருண்மைக்கும் இட்டுச்செல்கிறது. இறுக்கமான வார்த்தைகளைச் செலவிட்டு பூடகத்தையும் இருண்மையையும் சாதித்த கவிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அபியோ மிக மிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தியே பூடகத்தையும் இருண்மையையும் அடைந்திருக்கிறார். இதனால்தான், சற்றுப் பெரிய சொல்கூட சமயத்தில் உறுத்துகிறது; அதிகம் புழங்கிய வார்த்தையைப் பயன்படுத்தும்போது அதுவும் உறுத்துகிறது; ‘நிமிஷம், வார்த்தைகள்’ போன்ற தேய்ந்த சொற்கள் உறுத்துகின்றன; அரிதாகப் பயன்படுத்தப்படும் உருவகம், உவமைகள் கூட உறுத்துகின்றன. அந்த அளவுக்கு நுட்பமானதாகவும் (sensitive) எளிமையானதாகவும் அபியின் கவிதைகள் இருக்கின்றன. 

அபியின் கவிதை உலகம் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? என்றெல்லாம் யோசித்துப்பார்க்கிறேன். கவிதை கணிசமாக மங்கலான உணர்வுநிலையிலும் அனுபவ நிலையிலும் இயங்குவது. ஆனாலும், அதற்குத் திட்டவட்டமான உருவங்கள், தெளிவான சொற்கள், துல்லியமான பெயர்கள் தேவை. ஆனால், உணர்வுகளும் அனுபவங்களும் நாம் நினைக்குமளவுக்குத் திட்டவட்டமான வரையறை கொண்டவை அல்ல. ஏன், பொருட்களைக் கூட நுணுகி நுணுகிச் சென்றால் அவற்றின் துல்லியமும் திட்டவட்டமும் மறைந்து அநிச்சயம் உருவாகிறது என்கிறது அறிவியல். இந்த அநிச்சயப் பிரதேசத்தில் அநேகமாக  தமிழில் தனித்து இயங்கும் கவிஞர் அபி. ஒரு உணர்வுக்கு ‘அன்பு’ என்ற ஒரு பெயர் இருக்கிறது; ஒரு உணர்வுக்கு ‘வெறுப்பு’ என்ற பெயர் இருக்கிறது; ஒரு உணர்வுக்கு ‘மகிழ்ச்சி’ என்ற உணர்வுக்குப் பெயர் இருக்கிறது. இந்த மூன்றும் கலந்த, மூன்றுக்கும் இடைப்பட்ட ஒன்றுக்குப் பெயர் இருக்கிறதா? உணர்வுகளின், அனுபவங்களின் எண்ணற்ற சாத்தியங்களுக்குப் பெயர் இருக்கிறதா? உலகில் பெயரிடப்படாத வண்ணங்களும் இருக்கின்றன அல்லவா! மானுட வசதிக்காகத் தெளிவான, திட்டவட்டமான ஒருசில அடிப்படைப் பொருள்களுக்கும் விஷயங்களுக்கும் மட்டுமே நாம் பெயர் வைத்திருக்கிறோம். அந்தப் பெயர்களுக்கிடையிலான உறவிலேயே நம் மொழி இயங்குகிறது. அபியின் கவிதைகள் இயங்கும் இடம் தெளிவற்ற அனுபவங்கள், நம்மால் எடுத்துக்கூற முடியாத உணர்வுநிலைகள். இருக்கும் மொழியின் எளிய வார்த்தைகளைக் கொண்டு இவற்றை அவர் கோக்கும்போது நமக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார். 

‘இருளிலிருந்து (தெளிவின்மையிலிருந்து) ஒளிக்கு (தெளிவுக்கு) கூட்டிச்செல்வாயாக’ என்கிறது பிருஹதாரண்ய உபநிடதம். ஆனால், அபியோ நம்மைத் தெளிவிலிருந்து தெளிவின்மைக்குக் கூட்டிச் செல்கிறார். தெளிவின்மை என்பது ஏதோ எதிர்மறையான விஷயம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது பிரபஞ்சத்தின், பொருட்களின், அனுபவங்களின் பேரியல்பு அது. ஒரு வசதிக்காக நாம் தெளிவில் இயங்குகிறோம். ஒரு அணு எங்கு முடிகிறது என்று ஆரம்பித்து, இந்தப் பிரபஞ்சம் எங்கு முடிகிறது என்பது வரை தெளிவின்மையே நிலவுகிறது. தெளிவைப் பற்றிய தன் கருத்தை ஒரு கவிதையில் கூட கூறியிருப்பார்:

‘தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக்கொண்டேன்’ 

அனுபவத்தின் தெளிவற்ற பிராந்தியத்தில் உலவினாலும் வெளிப் பார்வைக்கு ஸ்படிகத் தெளிவு கொண்டதுபோல் இருக்கின்றன அபியின் கவிதைகள். இதற்குக் காரணம் அர்த்தச் சுமையற்ற சொற்களும் சொற்செட்டும்தான். ஒரு அனுபவத்தை எவ்வளவு குறைவான சொற்களால் படம்பிடிக்க முடியுமோ அவ்வளவு குறைவான சொற்களில் படம்பிடிக்கும்போது வரிகள் ஒரே சமயத்தில் சுமையற்றவையாகவும் அடர்த்தி மிகுந்தவையாகவும் ஆகின்றன. கூடவே, பார்வைக்கோணங்களையும் வேறு திசையில் வைத்தால் அதற்கு அபாரச் செறிவு கிடைக்கிறது. இதற்கு அபியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்றான ‘குருட்டுச் சந்து’ கவிதையை எடுத்துக் காட்டலாம். கவிதைசொல்லி குருட்டுச் சந்து ஒன்றில் போய்த் திரும்பிவருகிறார். ஒரு வீட்டில் இசை கேட்கிறது: 

'தந்தியைப் பிரிந்து
கூர்ந்து கூர்ந்து போய்
ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது
கமகம்’   

என்கிறார் அபி. இசை என்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை இதைவிட யாராவது சிறப்பாக வார்த்தைகளால் படம் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரு சொட்டுக்குள் ஆயிரம் சொட்டுக்கள்! அத்தனையும் தேன்! அதே கவிதையில் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பிவருவதை ரத்தத்தின் போக்குடன் ஒப்பிடுகிறார்:

‘ரத்தம் எப்போதும்
குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்
திரும்ப வேண்டியதே’

இதனால் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பும் சாதாரண நிகழ்வு மேலும் உயர்ந்த தளத்தை எட்டுகிறது. கவிதைசொல்லி இறுதியில் சாலையை அடைகிறார். 

‘எதிரே
அடர்த்தியாய் மினுமினுப்பாய்
ஒரு கல்யாண ஊர்வலம்,
வானம் கவனிக்க’

இந்த வரிகளில் ‘வானம் கவனிக்க’ என்ற வரி மட்டும் இல்லாதிருந்தால் இந்தக் கவிதைக்குப் பாதி முக்கியத்துவம் குறைந்திருக்கும். இரண்டு சொற்களைக் கொண்டு விவரிக்க முடியாத அனுபவத்தை இந்தக் கவிதையில் தந்திருக்கிறார் அபி. இந்தக் கவிதையில் மொத்தம் நான்கு பரிமாணங்கள் ஒன்றுடன் ஒன்று இழைந்திருக்கின்றன. நேரே இருக்கும் குருட்டுச் சந்து ஒரு பரிமாணம், ‘கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து/ தோரணப் பச்சை/ கடைக்கண்ணில்/ சந்தேகமாய்ப்பட நடந்து/ சாலையை அடைந்தேன்’ எனும்போது’ பக்கவாட்டுப் பரிமாணம், ’வானம் கவனிக்க’ எனும்போது உயரம் எனும் பரிமாணம், இதற்கிடையே ‘நீடிப்பில் நிலைத்தது கமகம்’ எனும்போது காலம் எனும் பரிமாணம். இந்தப் பரிமாணங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இசைவாய் இழையோடியிருக்கின்றன. 

அடுத்ததாக, பிரபஞ்சம் அளாவும் பார்வை ஒன்று அபியிடம்  இருக்கிறது. ‘நெடுங்கால நிசப்தம்/ படீரென வெடித்துச் சிதறியது’ (நிசப்தமும் மௌனமும்) எனும்போது இது ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியதாகவும் இசையனுபவத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது. ‘நெடுங்காலம்’ கடுகாகிக்/ காணாமல் போயிற்று’ என்கிறார். ‘சுருதியின்/ பரந்து விரிந்து விரவி…/ இல்லாதிருக்கும் இருப்பு புலப்பட்டது மங்கலாக’ எனும்போது ‘தாவோ தே ஜிங்’கின் ‘நிரந்தர இருத்தலின்மையிலிருந்து/ இந்தப் பிரபஞ்சத்தின் புதிரான தொடக்கத்தைச்/ சலனமின்றி நாம் பார்க்கிறோம்’ என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தக் கவிதை ‘பூமியில்/ ஒலிகளின் உட்பரிவு/ பால் பிடித்திருந்தது/ வெண்பச்சையாய்’ என்று முடிகிறது. வேறு எந்த மொழிக்கும் மொழிபெயர்க்க முடியாத எளிமை நிரம்பிய அழகு இந்த வரிகள். இவற்றைச் சுவைக்க வேண்டுமானால் பிற மொழிக்காரர் ஒருவர் தமிழ் கற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இதே பிரபஞ்சம் அளாவும் பார்வையை ‘வினை’ கவிதையிலும் பார்க்க முடியும். ‘அண்டம், தன்/ தையல் பிரிந்து/ அவதியுற்றது’ என்ற வரிகள் இதற்கு சாட்சி என்றாலும், ‘இந்தப் பிரளயத்தில்/ மிதந்தவர்களைப் பற்றி ஒரு/ நிச்சயம் பிறந்தது’ என்ற வரிகளும் ‘மூழ்கிக்/ காணாமல் போனவர்கள்/ கண்டுபிடிப்பார்கள்/ என்றும் வதந்தி பிறந்தது’ என்ற வரிகளும் நம் அர்த்தப்படுத்தும் முயற்சியையும் தாண்டி எங்கோ செல்கின்றன. இந்தப் புதிர்த்தன்மையும் அபியின் தனித்துவங்களில் ஒன்று. விதையொன்றைப் பற்றிய கவிதையில் (வெளிப்பாடு) ‘மரமாய்க் கிளையாய் விழுதாய்/ அன்றி/ ‘வெறும் விதையாகவே’/ வளர்கிறது/ இன்னும் இன்னும்’ என்ற வரிகள் இந்தப் பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்துகொண்டிருப்பதை உணர்த்துவதுபோல் இருக்கின்றன. அபி அதைத்தான் சொல்லவருகிறாரா என்று தெரியவில்லை என்றாலும் இந்த ஒற்றுமை வியக்கத் தக்கது; அழகானது. 


தனித் தொகுப்புகளாக ‘மௌனத்தின் நாவுகள்’, ‘அந்தர நடை’, ‘என்ற ஒன்று’ ஆகிய தொகுப்புகளை அபி வெளியிட்டிருக்கிறார். தொகுப்புகளில் சேராத ‘மாலை’, ‘மற்றும் சில கவிதைகள்’ ஆகிய கவிதைகள் அவரது முழுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முழுத் தொகுப்பில் ‘மௌனத்தின் நாவுக’ளிலிருந்து சில கவிதைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன. ‘மாலை’ கவிதைகளும் ‘மற்றும் சில கவிதைக’ளும் அவரது கவித்துவத்தின் முக்கியமான தருணங்கள். குறிப்பாக, ‘மாலை’ வரிசையில் பல கவிதைகள் அபூர்வ அழகு கொண்டவை. ‘மாலைநேரம் சுறுசுறுப்படைகிறது/ இருந்த இடத்திலேயே./ முடிவின்மையின் சேமிப்புக்கு/ ஒருபுள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது’ எனும் வரிகள் மாலையைப் பற்றிய விளக்க முடியாத ஒரு உணர்வை நம் மனதுக்கு ஏற்றிவிடுகின்றன. மாலையைப் பற்றியும் மாலை கவிந்திருக்கும் பொருட்கள், அனுபவங்கள் பற்றியும் தனக்கேற்பட்ட பிம்பங்களைத் தனக்கேயுரிய மொழியழகுடன் அபி விவரித்திருப்பார்.

அபியின் கவிதை உலகம் மொத்தம் 130 சொச்சம் கவிதைகளுக்குள் அடங்கிவிடும் என்றாலும் அதற்குள் தமிழின் சத்தான ஒரு பரப்பு அடங்கியிருக்கிறது. அபியை ஆங்கிலத்தில் முறையாக மொழிபெயர்க்க முடிந்தால் ‘செங்குத்துக் கவிதைகள்’ எழுதிய ஸ்பானிஷ் கவிஞர் ரொபர்த்தோ ஹுவரோஸுக்கு இணையான ஒரு கவிஞராக மதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அபியின் அழகு மொழிபெயர்ப்புக்குள் சிக்குமா என்பதுதான் கேள்வி. அபியின் கவிதைகள் உலக அளவுக்குச் செல்வதற்கு முன் உள்ளூரில் அனைவரிடமும் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அவரது கவிதைகளைப் படிக்கவில்லையென்றால் இழப்பு நமக்குத்தான்!  

அபி கவிதைகள்
அபி
அடையாளம் பதிப்பகம்  
புத்தாநத்தம், திருச்சி - 621310.  
தொடர்புக்கு: 04332 273444

விலை: ரூ.220

- (‘இந்து தமிழ்’ நாளிதழில் 25-10-20 அன்று  வெளியான கட்டுரையின் சற்று விரிவான வடிவம்)         

    


Friday, October 16, 2020

நோபல் வாங்கித் தந்த கருந்துளை!

ரெய்ன்ஹர்டு ஜென்ஸல்                    ஆண்ட்ரியா கெஸ்                 ரோஜர் பென்ரோஸ்

அறிவியல் துறைகளில் தனி அந்தஸ்தை அனுபவித்துவருவது இயற்பியல் துறை. அதிலும், வானியற்பியலுக்குக்  கொஞ்சம் கூடுதல் அந்தஸ்து உண்டு. ஆதி காலத்திலிருந்து வானம் நம்மை வசீகரித்துக்கொண்டிருப்பதன் அடையாளம்தான் இது. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகளை வானியற்பியலாளர்கள் அதிக அளவு வாங்கிவந்திருக்கிறார்கள் என்பது இத்துறையின் தனிச்சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசும் அமைந்திருக்கிறது. கருந்துளைகள் தொடர்பான மிகச் சிறப்பு வாய்ந்த கோட்பாடுகளை உருவாக்கியதற்காக பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸுக்கும் நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலத்தின் நடுவே இருப்பது ஒரு கருந்துளைதான் என்பதை உறுதிப்படுத்திய அமெரிக்காவின் ஆண்டிரியா கெஸ்ஸுக்கும், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுக்கும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக அதிக அளவு நிறையைக் கொண்ட பொருளொன்று மிகவும் சுருங்கிக்கொண்டே போய் அதீத அடர்த்திகொண்டதாக ஆவதுதான் கருந்துளை. இதை நாம் வெறுங்கைகளால் செய்ய முடியாது. கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவிலான சக்தி இதற்கு தேவைப்படுகிறது. சூரியனை விட 20 அல்லது 25 மடங்குக்கும் மேலே நிறையுள்ள விண்மீன்கள் கருந்துளையாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த விண்மீன்களின் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலையில் அவற்றின் வெளிப்புறம் வெடித்துச் சிதறி அண்டவெளியில் கலந்துவிடும். உள்பகுதியிலோ உள்வெடிப்பு உண்டாகி உள்ளுக்குள்ளே மேலும் மேலும் சுருங்கிப்போய் அதீத நிறை கொண்டதாக மாறிவிடும். கருந்துளையிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெட்டி எடுத்து நிறுத்துப் பார்க்க முடியுமென்றால் அதன் நிறை கோடி கோடி கிலோவுக்கும் மேல் இருக்கும். ஓர் ஒப்பீட்டுக்குச் சொல்வதென்றால் பூமியானது ஒரு கருந்துளையாக ஆக வேண்டுமானால் அதை ஒரு பட்டாணி அளவுக்குச் சுருக்க வேண்டும். அதே நிறை, ஆனால் உருவில் பட்டாணி. இதை விண்மீன்களுக்குப் பொருத்திப் பாருங்கள். இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாததுபோல் உங்களுக்குப் படலாம். அடுத்து வருவதைப் பாருங்கள். கருந்துளையை நாம் பார்க்க முடியாது. கூடவே, அதிலிருந்து எந்தப் பொருளும் தப்ப முடியாது, ஒளிகூட. ஆமாம், அதன் வெளிப்புறமான நிகழ்வெல்லைக்கு (Event Horizone) அருகே வரும் ஒளிகூட தப்ப முடியாது. கருந்துளையின் அடர்த்தி காரணமாக அதனைச் சுற்றியுள்ள வெளி வளைந்துவிடும். அதன் மையப் பகுதி ஒருமைநிலை (Singularity) என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் காலம் ஸ்தம்பித்துவிடும். இயற்பியல் விதிகளெல்லாம் கருந்துளைக்குள் அர்த்தமிழந்துவிடுவது போலாகிவிடும். 

இந்தப் பிரபஞ்சத்தில் ஆயிரம் கோடி கோடி கோடி விண்மீன்கள் (1 என்ற எண்ணை அடுத்து 24 பூஜ்ஜியங்கள்) இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆகவே, அதில் சிறு விகிதத்தில் பல லட்சம் கோடி கருந்துளைகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நாம் இருக்கும் பால்வெளி மண்டலத்தில் பத்தாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் விண்மீன்களில் ஒரு விண்மீன் கருந்துளை ஆகும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. நமது பால்வெளி மண்டத்தின் மையப் பகுதியில் இருப்பதே ஒரு மகாக்  கருந்துளை என்றுதான் நம்பப்படுகிறது.    

கருந்துளையை வெறுங்கண்களாலோ தொலைநோக்கிகளாலோ பார்க்க முடியாது என்றாலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவை ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அவற்றைக் கண்டறிய முடியும். அப்படித்தான் வெகு நாட்களாகக் கருந்துளையை ஊகித்துவந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு முதன்முறையாகக் கருந்துளையொன்று படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை எடுத்தது ‘நிகழ்வெல்லை தொலைநோக்கி’ (Event Horizon Telescope) என்ற வலைப்பின்னலைச் சேர்ந்ததும் அண்டார்க்ட்டிகா, சிலி, ஸ்பெயின் போன்ற எட்டு இடங்களில் உள்ளதுமான மின்காந்தவியல் தொலைநோக்கிகளாகும்.  பூமியிலிருந்து 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது மெஸ்ஸியே உடுமண்டலம். இதன் மையத்தில் உள்ள மிகப் பெரிய கருந்துளைதான் படமெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளை நமது சூரியனைப் போல 650 கோடி மடங்கு நிறை கொண்டதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 

கருந்துளை என்பது கருத்தாக்கமாக இருந்த காலத்திலிருந்து அது உறதிப்படுத்தப்பட்டிருக்கும் தற்காலம் வரை நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள் கருந்துளை தொடர்பான கருத்தாக்கங்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஜான் மிட்செல், பிரான்ஸின் பியர்-சிமோன் லப்லாஸ் ஆகிய இரண்டு அறிவியலாளர்களும் 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கருந்துளை குறித்த தொடக்க நிலைக் கருதுகோள்களை முன்வைத்தனர். அப்போது கருந்துளை என்ற பெயரில் அவை குறிப்பிடப்படவில்லை. அதிக நிறையுள்ள சில வகை விண்மீன்கள் ஒளியைக் கூடத் தப்பவிடுவதில்லை என்றது அவர்களின் அடிப்படைக் கணிப்பு. எனினும் கருந்துளைகளைப் பற்றிய அவர்களின் பிற கணக்கீடுகள், ஊகத்திலிருந்து தற்காலக் கருந்துளைக் கோட்பாடுகள் மிகவும் விலகிவந்துவிட்டன என்றாலும் தொடக்கம் என்ற முறையில் அவை முக்கியமானவை.

அடுத்ததாக, 1915-ல் ஐன்ஸ்டைன் பொதுச்சார்பியல் கோட்பாட்டுடன் வருகிறார். மிக மிக அடர்த்தியான பொருள் ஒன்று காலத்தையும் வெளியையும் கூட வளைக்கக்கூடியது என்று அவரது பொதுச்சார்பியல் கோட்பாடு கூறியது. அவர் தனது பொதுச்சார்பியல் கொள்கையை முன்வைத்த சில மாதங்களுக்குள் கார்ல் ஷ்வார்ஸ்சீல்டு என்ற ஜெர்மானிய அறிவியலாளர் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை அடியொற்றி ‘நிகழ்வெல்லை’ என்ற கருத்தாக்கத்துக்கு வருகிறார். அதற்குள் விழும் பொருள், ஒளி எதுவும் தப்ப முடியாது என்பது அவரது கணிப்பு. ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கருந்துளையைக் கணித்திருந்தாலும் காலமெல்லாம் ஐன்ஸ்டைன் கருந்துளையை மறுத்துவந்திருக்கிறார் என்பது விந்தை. ஐன்ஸ்டைன் இறந்த ஒரு தசாப்தம் கழித்து ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டின் படி கருந்துளை என்பது நிதர்சனமான உண்மையே என்பதை ரோஜர் பென்ரோஸ் தனது கோட்பாடுகளின் வழியே நிரூபிக்கிறார். ஒருமைநிலை தேற்றங்களை (singularity theorems) ரோஜர் பென்ரோஸ் உருவாக்கினார். அடைபட்ட பரப்புகளென்பவை கருந்துளையின் உருவாக்கத்துக்கு அவசியம் என்பதை பென்ரோஸ் நிரூபிக்கிறார். அவதானிப்பின் வழியே கருந்துளை நிறுவப்படுவதற்கும் முன்பு இது அத்திசையில் எடுத்துவைக்கப்பட்ட மிக முக்கியமான காலடி ஆகும். அடுத்த சில ஆண்டுகளுக்குள் பென்ரோஸுடன் இணைந்து ஸ்டீவன் ஹாக்கிங்ஸும் பணிபுரிகிறார். தற்போது ஹாக்கிங்ஸ் உயிரோடிருந்தால் அவருக்கும் நோபல் கிடைத்திருக்கும் என்பது ஹாக்கிங்ஸின் நண்பர்கள், விசிறிகளின் கருத்து. 

ஆண்ட்ரியா கெஸ்ஸுக்கும் ரெய்ன்ஹார்டு ஜென்ஸலுக்கும் கொடுத்த பரிசானது அவதானிப்பு அறிவியலுக்குக் கிடைத்த பரிசாகும். இருவரும் பால்வெளி மண்டலத்தின் நடுவே இருப்பதாகக் கருதப்படும் ‘மகாக் கருந்துளை’யை வெவ்வேறு தொலைநோக்கிகளைக் கொண்டு வெகு காலமாக உற்றுநோக்கியவர்கள். பால்வெளி மண்டலத்தின் மையத்துக்கு அருகே சுற்றிக்கொண்டிருக்கும் விண்மீன்களையும் வாயுப் படலத்தையும் கொண்டு மையத்தில் இருப்பது கருந்துளைதான் என்று இவர்கள் நிரூபித்திருக்கின்றனர். 

2018-ல் ஜென்ஸல் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். பால்வெளி மண்டலத்தின் மையத்தை வாயுப் படலங்கள் ஒளியின் வேகத்தில் 30% வேகத்தில் சுற்றுவதாகத் தெரிவித்தார். ஒரு சுற்றுக்கு அந்தப் படலங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 45 நிமிடங்கள் ஆகும். அதேபோல் ஜென்ஸலும் ஜெஸ்ஸும் பால்வெளி வீதியின் மையத்துக்கு மிக மிக அருகே (அதாவது 1,100 கோடி மைல்கள் தொலைவில்!) சுற்றிக்கொண்டிருக்கும் விண்மீன் ஒன்றைத் தொடர்ந்து அவதானித்திருக்கிறார்கள். அது ஒரு தடவை மையத்தைச் சுற்றி முடிப்பதற்கு 16 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அதன் நீள்வட்ட சுழற்சியானது மையத்தில் ஒரு ‘மகாக் கருந்துளை’ இருப்பதை உறுதிப்படுத்தச் செய்கிறது.

கைகளுக்கு எட்டாத தொலைவையும் கண்களுக்கு எட்டாத தொலைவையும் மனிதர்களின் கற்பனை எட்டிப்பிடித்துவிடும் என்பதற்குச் சான்றுதான் கருந்துளை என்ற கருத்தாக்கமும் அது தொடர்பாக அறிவியலாளர்கள் தொடர்ந்து நிகழ்த்திவரும் கண்டுபிடிப்புகளும். இத்தகைய பணிக்குக் கொடுக்கும் கௌரவம் உண்மையில் மானுடக் கற்பனைக்குக் கொடுக்கும் கௌரவம். நோபல் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

(16-10-20 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை)



Wednesday, October 14, 2020

கொண்டலாத்தி: கண்சிமிட்டும் பறவைக் கணங்கள்


டி.என். ரஞ்சித்குமார்
அறியாமையோடு இயற்கையை நேசிக்கும் கண்கள் இயல்பான ஞானம் கொண்டுவிடுகின்றன. எவ்விதக் கற்பிதங்களின் சுவடுகளும் காட்சிகளை பகுத்தறிவுக்கு விளக்க வேண்டிய அவசியமற்ற ஒருமை நிலை சலனமற்றது. தன் மீது விழும் நிழல்களையும் பிம்பங்களையும் பிரயத்தனமின்றி தன்னியல்பாக தன் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் நீர்தேக்கம், தன் பிரதி உருவத்தை பிரதிபலித்துக் காட்டும் நீர்த்தேக்கத்தின் இருப்பின் பிரக்ஞையின்றியே தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் காட்டும் காட்சிப் பொருள், இவ்விரண்டுக்கும் இடையேயான சங்கேதப் பரிமாற்ற இடைவெளியில் நிலவும் ஆதிகால மௌனம். இந்த மௌனத்தின் அரவணைப்பில் தன்னைக் கரைத்து சாட்சியக் குரலை அவதானித்து இருபுற உரையாடல்களின் குளிர்மையையும் கதகதப்பையும் சொடுக்கில் உடைந்துவிடும் நீர்க்குமிழியைக் கைக்குக் கை மாற்றுவது போல் பத்திரமாக ஏந்தி நம் மனக்கரங்களில் ஒப்படைக்கிறது ஆசையின் கவிதை மொழி.
விதவிதமான பறவைகளைப் பற்றிய நுணுக்கமான அசைவுகளையும் அவற்றின் தனித்துவமான உருவ அமைப்புகளையும் மெச்சுக் கொட்டும் உள்ளப்பூரிப்பில் தொனிக்கும் ஆசையின் கவிதை மொழியின் வியப்பு காணாததைக் கண்டுவிட்ட அறிவியலாளனின் வியப்பு அல்ல, மாறாக தன்னைச் சுற்றி நிறைந்திருக்கும் இயற்கையின் பூரணத்தில் கரைந்து திளைக்கும் சிறுவனின் மனவியல்பும் எளிமையும் கூடிய பாந்தமான வியப்பு.
அறிந்துகொண்டதாக நம்பும் தன்மையில் உறைந்து விட்ட அலுப்பை சுக்கல் சுக்கலாக உடைத்து அறியாமை நோக்கி பின்னகர்த்துவது பெரிய சவால். புதிதாக என்ன இருக்கிறது என்று தேடும் மனதுக்கு கண்டுகொள்ளப்படாமல் இருப்பவற்றை தொட்டுக்காட்டும் கரங்கள், அறியாமையின் கண்கொண்டு பார்க்கும் போது காட்சிப்படும் அற்புதங்களை வரைந்து காட்டும் பயிற்சி பெற்றனவாக இருக்க வேண்டும். கொண்டலாத்தி அப்படியான கரங்களால் வரையப்பட்ட சித்திரங்கள் அடங்கிய கவிதைத் தொகுப்பு.
வெளியே அகமாகி, கண் சிமிட்டும் கணத்தில் இணைந்து துண்டித்துப் போன நிகழ்வின் அதிர்வலையை உருவாக்குகிறது, "தையல்சிட்டு பறந்து சென்ற பின்" என்ற கவிதை
//தையல்சிட்டின் கனம்தான்
இருக்கும்
இந்தக் கணம்
அதிர்ந்துகொண்டிருக்கிறது
அது
தையல்சிட்டு பறந்து சென்ற பின்
அதிரும்
இலைக்காம்புபோல//
ஒருமுறைக்கு மறுமுறை வாசிப்பில் வேறு வேறு கற்பனைகளைக் காட்டி இன்னதென்று வரையறுத்துக் கூற முடியாத ஆனந்தத் தத்தளிப்பில் அலையாட வைக்கிறது, "இந்தக் கணத்தின் நிறம் நீலம்" என்ற கவிதை
//தளும்பத் தளும்பப் பொங்கும் நீலம்
சிறகிலிருந்து நூலாய்ப் பிரியும்
ஒளியும் நனைய காற்றும் நனைய
பெய்யும் மழையின் பெயர் நீலம்
நுரைத்து நுரைத்து அலைகள் பாய்ந்து
தெறிக்கும் துளியில் ஒளியும் ஏறி
விரியும் வில்லில் தொடங்கும்
இந்த ஆற்றின் பெயர் நீலம்
கரையக் கரையப் பறந்து சென்று
முடியும் புள்ளியில் மூழ்கும் மீன்கொத்தி
அலைகள் தோன்றி அதிரும்
இந்தக் கணத்தின் நிறம் நீலம் //
"காற்றுக்கொத்தி" "மழைக்கொத்தி" என்ற தலைப்புகளில் இடம்பெறும் இரண்டு கவிதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டிலும் வரும் பெண் முதலாவதில் அரூபமான ஒன்றை விளங்கியும் இரண்டாவதில் ஒன்றை விளக்கியும் மறைந்து போகிறாள்.
"முதல் தோசை" என்ற கவிதையில், அடுப்பைப் பற்ற வைத்ததும் உணவு கேட்டு வந்து அமர்கிறது காகம் ஒன்று. அதன் கரைதலில் ஒரு அதட்டல். வீட்டு உறுப்பினர்கள் பற்றிய எண்ணமேதுமில்லை அதற்கு. கவிதையின் முடிவு இவ்வாறு வருகிறது,
//காகமே
நீ உரிமையாய்க் கேட்கும்போது
திருட்டுப் பொருளைத்
திருப்பிக் கொடுப்பதுபோல்
தருகிறேன் உன்னிடம்
ஆற வைத்த
முதல் தோசையை //
அறியாமைக் குணம் வைக்கும் நம்பிக்கை கடவுளைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கும் தவிர்க்க முடியாத தருணத்தைப் பதிவு செய்கிறது "அந்தத் தவிட்டுக்குருவி இறந்துகொண்டிருந்தது" என்ற கவிதை.
தொகுப்பில் உள்ள பிற கவிதைகளின் இயல்புகளை இன்னும் ஒளியுடன் மெருகேற்றிக் காட்டுகிறது, "சிறியதின் இடம்" என்ற கவிதை. அதன் ஒரு பகுதியாக கீழ்க்கண்டவாறு வருகிறது.
//விதிகள் தெரியாததால்
இவ்வளவு இயல்பாக
விளையாடி
வெற்றிகொள்கிறது
சகலத்தையும்
அவ்வளவு
உறுதியோடும்
இறுமாப்போடும்
அசைவற்ற நம்பிக்கையோடும்
வீற்றிருக்கும்
பிரம்மாண்டங்களின்
அஸ்திவாரத்தைச்
சுமந்து திரிகின்றன
இவ்வுலகின் நுண்மைகள்
வெகு இயல்பாக//
அடையாளம் மற்றும் கணம் ஆகிய ஜாலங்களை மொழி கொண்டு நெய்கின்றன, "பெயர்களின் பயனின்மை", "அதே இடம்", "என் இடம்" ஆகிய கவிதைகள்.
தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் கவர்ந்தன என்றாலும் சர்ரியலச ஓவியம் போல மனதில் சித்திரமாகப் பதிந்த கவிதை, "பறவைகளின் வரைபடம்". சப்தங்களாலும் ஒளியாலும் ஒரு வரைபடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி. வரைபடத்தின் நீள அகல உயர அளவைப் பொறுத்து வைக்கப்படும் வஸ்துக்கள் பேருண்மைகளாலும் பெருங்காதலாலும் பொதியப்பட்டு வரைபடத்தை நிரப்புகின்றன. தானே வரைபடத்தின் நிலமாக மாறுகிறாள்.
இத்தொகுப்பிலுள்ள "இந்தக் கணத்தின் நிறம் நீலம்" என்ற கவிதையின் வரிகள் யதேச்சையாக பதிவொன்றின் மூலம் கண்ணில் பட்டதும் அவை என் கற்பனைக்குள் உருண்டு திரண்டு உருவாக்கிய பரவசமான ஒளிக்கலவைகளே தொகுப்பின் மீதான ஈர்ப்பு வர முதல் அறிமுகத் தருணமாக அமைந்தது.

கவிதைகளில் என் வாசிப்பனுபவம் மிக மிகக் குறைவு என்ற போதும் ஆசையின் இத்தொகுப்பு கையாண்டிருக்கும் மொழியிலும் பேசியிருக்கும் அம்சங்களிலும் பாராட்டும் வரவேற்பும் பெறத்தக்கப் படைப்பு என்பதை மட்டும் மனநிறைவுடன் சொல்ல முடிகிறது.

(டி.என். ரஞ்சித்குமார், இளம் வாசகர், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய விமர்சனத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

புத்தக விவரங்கள்:

கொண்டலாத்தி
(கவிதைகள்)
ஆசை
2010
பக்கங்கள் : 64
கெட்டி அட்டைக்கட்டு
பறவைகளின் 31 வண்ணப் படங்கள்
ISBN 978-93-82394-27-3
விலை: ரூ. 180 
க்ரியா வெளியீடு
தொடர்புக்கு: 
+91-72999-05950 / +91- 9384057574

Sunday, October 11, 2020

அப்பா இல்லாத வீட்டில் இனி பயமில்லாமல் விளையாடு கொண்டைக்குருவியே!



ஆசை

அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சில நாட்களாகவே சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. நானும் கண்டுகொள்ளாததுபோல் இருந்துவிட்டேன். சில நாள் கழித்து சந்தேகத்துக்குரிய நடமாட்டம் வெளிப்படையான நடமாட்டமாக மாறியது. யாரோ ஒரு அந்நியர் அடிக்கடி எங்களை வேவுபார்க்க வருவது தெளிவாகிவிட்டது. என்ன காரணத்துக்காக வேவு பார்க்க வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வேவுபார்த்தல் என்ற நிலையைத் தாண்டித் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் அவர் எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல. கொண்டைக்குருவிதான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் செம்பிட்டக் கொண்டைக்குருவி (Red-vented bulbul). எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மரத்தில் அது கூடு கட்ட ஆரம்பித்திருக்கிறது. அது தனி ஆள் கிடையாது, இன்னொருத்தரும் அதற்குத் துணை. இப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. தான் கூடு கட்டுவதற்கு எந்த மரம் ஏற்றது, எந்தக் கிளை ஏற்றது, எந்த வீடு ஏற்றது என்பவற்றையும் கூடுகட்டும் இடம் பாதுகாப்பானதுதானா, அருகில் உள்ளவர்கள் ஆபத்தற்றவர்களா என்பதை முதலில் அறிந்துகொள்வதற்காகக் கொண்டைக்குருவி நோட்டம்பார்க்க முதலில் வந்திருக்கிறது. நோட்டம்பார்க்க வரும்போதெல்லாம் சுற்றுச்சுவரின் மேல் சற்று உட்கார்ந்துவிட்டுப் போவது, கொடியில் ஊஞ்சலாடுவது, அருகில் உள்ள செடிகொடிகளில் சற்று உலாவிவிட்டு வருவது என்று வழக்கத்தை வைத்திருந்தது. பிறகு தன் வருகையை அதிகரித்து, அதைத் தன்னுடைய பிரதேசமாக ஆக்கிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்தது.

அதன் கூடு உருவாகும் விதத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. மாடிப்படிகளுக்கு அருகில் இருந்த மரத்தில்தான் கூடு உருவாக ஆரம்பித்தது. மாடியில் போய்ப்பார்த்தால் இரண்டு அடி தூரத்தில் பார்க்கலாம். அதன் கூடு உருவாகும் இடத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இலைக்காம்பைவிடச் சற்றுப் பெரிய தளிர்க் கிளைகள் இரண்டுக்கு இடையில் பொதிந்து கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தத் தளிர்க் கிளையில் அணில் கூட ஓடாது, அவ்வளவு மென்மை. இதில் என்ன அப்படி பாதுகாப்பு என்று ஆயிரத்தெட்டு தடவை நோட்டமிட்டாய் கொண்டைக்குருவியே என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால் உண்மையில் அதற்கு அந்த இடம் போதுமானது, அவற்றின் கனத்தையும் போடக்கூடிய முட்டைகள், அதிலிருந்து வெளியாகக் கூடிய குஞ்சுகள் எல்லாவற்றையும் கணக்குப்போட்டுதான் கூட்டை உருவாக்க ஆரம்பித்திருந்தது. சிறுசிறு நார்கள் செத்தைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு கிண்ணம் போன்ற வடிவில் அந்தக் கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரமாயிரம் தடவை கொண்டைக்குருவி கட்டுமானப் பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டை நோக்கிப் பறந்திருக்கும். எப்படியோ கூடு உருவாகிவிட்டது.

ஒருநாள் மாடிக்குப் போய்ப் பார்த்தேன். கூட்டுக்குள் கொண்டைக்குருவி உட்கார்ந்திருந்தது. அது முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சற்றுப் பக்கத்தில் மாடியில் செருகப்பட்டிருந்த கம்பு ஒன்றில் இன்னொரு கொண்டைக்குருவி என்னைப் பார்க்காததுமாதிரி பார்த்துக்கொண்டிருந்தது. சரி அவற்றின் குடும்ப வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று நான் நல்லபிள்ளையாகக் கீழே வந்துவிட்டேன். ஆனால் அந்த அந்நியர்கள் என் அளவுக்குக் கண்ணியமாக இல்லை.

காம்பவுண்டு சுவரை ஒட்டி இருந்த தண்ணீர்க் குழாய்க்குக் கீழே உள்ள வாளியில் குதித்துக் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என்று எங்கள் அனுமதியில்லாமல் அநாகரிகமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்! அது மட்டுமல்லாமல் போர்டிகோ மாதிரி இருந்த இடத்தின் மேலே ஒரு மின்விசிறி இருக்கும். அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அத்துமீறிச் செயல்பட்டாலும், அது எங்கள் வீடாக இருந்தாலும் நான் அவர்களை இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவு ஒதுங்கி நடந்தேன் தெரியுமா? அவர்கள் வந்து விளையாடும்போது சிறுவர்கள் பெரியவர்கள் யாரையும் சத்தம்போடாமல் பார்த்துக்கொண்டதுடன் அவை விளையாடும் இடத்துக்கு அருகில் யாரும் வராமலும் பார்த்துக்கொண்டேன். முரட்டு ஆசாமியான என் அப்பாவைக்கூட அதட்டி ஒடுக்கினேன். வீட்டுக் கதவை மெலிதாகத் திறந்துவைத்துவிட்டு அந்த அந்நியர்கள் என்ன அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.

லேடிபேர்ட் சைக்கிளுக்கு முன்னால் உள்ள கூடையில் வந்து படுத்துக்கொள்வது அந்த அந்நியர்களுக்குப் பிடித்தமான செயல். படுத்துப் புரள்வார்கள், சமயத்தில் ஆள் வரும்போதுகூட பயப்படாமல் மும்முரமாக விளையாடிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களை மதிப்பதே இல்லை. உண்மையான வீட்டுக்காரர்களான நாங்கள் அவர்களுக்காக அடங்கி ஒடுங்கி நடந்துகொள்ள அவர்களோ எங்களைச் சட்டை செய்வதே இல்லை. ஆகா! எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து புரிய வந்தது. அவர்கள் நம் வீட்டை அபகரித்துவிட்டிருக்கிறார்கள். கயவர்கள், இருக்க இடம் கொடுத்துச் சுதந்திரமாக உலவ விட்டதற்கு நன்றியுணர்ச்சியே இல்லாமல் வீட்டைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். போலிப் பத்திரம் ஏதாவது தயாரித்திருப்பார்களா என்று வேறு எனக்குச் சந்தேகம். அந்நியர்களை ஆட்சியை விட்டுத் துரத்த இன்னொரு சுதந்திரப் போர் நிச்சயம் தேவை என்பது எனக்குத் தெரிந்தது. அந்தச் சுதந்திரப் போருக்கு என்ன பெயர் வைக்கலாம்? ‘கொண்டையனே வெளியேறு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அவற்றை வெளியேற்றுவதற்கான வேலைகளில் நிஜமாகவே எங்கள் அப்பா ஏற்கனவே இறங்கிவிட்டிருந்தார். கூடு இருந்த மரத்தில் நிறைய கொசு அடைவதாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனால் அப்பா மரத்தை வெட்டத் தீர்மானித்துவிட்டார். அப்போதுதான் முட்டையிட்டு அடைகாத்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் மரத்தை வெட்டினால் அவ்வளவுதான் என்பதால் அப்பாவிடம் நயமாகக் கெஞ்சினேன். அவர் முரட்டு மனிதர், அவரிடம் மென்மைக்கு இடமே கிடையாது. சாப்பிடும்போது கரப்பான் பூச்சியைப் பார்த்தால்கூட அப்படியே கையால் சப்பென்று அடித்துக் கொன்றுவிடுவார். பக்கத்து வீடுகளில் பாம்பு என்று கேள்விப்பட்டாலே வீட்டில் அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்து வைத்திருக்கும் சுளுக்கியை எடுத்துக்கொண்டு ஓடுவிடுவார். இதுவரை பாம்பை அடிப்பதில் அவருக்குத் தோல்வியே கிடையாது. அப்படிப்பட்டவரிடம் கெஞ்சிப் பிரயோசனம் இல்லை. பாவபுண்ணியத்தைச் சொல்லிதான் தடுக்க வேண்டும் என்று சொல்லித் தற்காலிகமாக அவரைத் தடுத்துவிட்டேன். குஞ்சு பொறித்து பறந்து சென்ற பிறகு வெட்டிவிடலாம் என்ற ஒப்பந்தத்துக்கு வந்தோம்.

சென்னைக்கு வந்துவிட்டு மறுபடியும் ஊருக்குத் திரும்பியபோது அங்குள்ள சிறுவர்கள் வந்து என்னிடம் சென்னார்கள், குஞ்சு பொறித்துவிட்டதென்று. மாடியில் நின்றுகொண்டு அவர்கள் கிளையைச் சற்று இழுத்துக் கூட்டினுள் இருந்த குஞ்சைப் பார்த்திருக்கிறார்கள். நான் அப்படிச் செய்யக் கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டு மாடிக்குச் சென்று கிளையையோ கூட்டையோ தொடாமல் எட்டிப் பார்த்தேன். கூட்டினுள் ஒரே ஒரு குஞ்சு அப்படியே பொதிந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அருகே இருந்த ஒரு கம்புக்கு மேலே அதன் தாய்ப் பறவை உட்கார்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தபோது, "நான் கண்காணிக்கவில்லை, உன்னைப் பற்றித்தான் எனக்குத் தெரியுமே, நான் சும்மாதான் இங்கு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்" என்று அது என்னிடம் சொன்னது.

என் வாழ்வில் என்னை மிகவும் நெருங்கி வந்த பறவைகள் காகமும் கொண்டைக்குருவியும்தான். காகம் என் கையில் இட்லியோ பிஸ்கட்டோ வாங்கித் தின்னும் அளவுக்கு நெருங்கிவந்திருக்கிறது. கொண்டைக்குருவியோ மாடியில் சாயங்காலம் நான் படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டடி தள்ளியிருக்கும் கட்டையில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கும். அப்படி உட்கார்ந்திருக்கும்போது நான் அதை மிகவும் என் மனதுக்கு நெருக்கமானதாக உணர்வேன். ஒரு துணையோடுதான் நாம் மாடியில் இருக்கிறோம் என்று எனக்கு உற்சாகமாக இருக்கும். மற்ற பயல்கள் அப்படியில்லை. கரிச்சான் பயல்கூட ஓரளவுக்குப் பக்கத்தில் வருவான். ஆனால் இந்தத் தேன்சிட்டுப் பயல் பண்ணிக்கொள்ளும் பிகு இருக்கிறதே. அருகில் போனாலே ஓடிவிடுவான். என்னவோ தான்தான் உலக அழகி (அழகன்) என்று நினைப்பு, அவனை/ளை ஒளிந்து நின்றுதான் பார்க்க வேண்டுமாம். ஆனால் கொண்டைக்குருவிப் பயல் அப்படியில்லை. ஆமாம் அவன் ஏன் என்னருகில் வரப் பயப்பட வேண்டும். அவன்தான் இந்த வீட்டை உரிமையாக்கிக்கொண்டானே. நான்தானே அவனுக்குப் பயப்பட வேண்டும். தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ளும் விதத்தில்தான் அவன் எனக்கு அருகில் தைரியமாக உட்கார்ந்திருக்கிறான் போல. அவன் என்னருகில் வரும்போதெல்லாம் ஏதோ அவனுடைய இடத்தில் நாம் இருக்கிறோமோ என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவான்.

அப்போது என் நண்பன் அவனுடைய மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கினான். அவனுக்கு மூத்தது ஒரு பெண், அடுத்து ஒரு சிறு பையன். அந்தப் பையன் வீட்டுக்குள் நுழைந்த கணத்தில் ஒட்டுமொத்த வீடும் தலைகீழாகப் புரள ஆரம்பித்தது. புதிய இடம் என்ற உணர்வு சற்றும் இல்லாமல் ஓடவும் உருளவும் புரளவும் ஆரம்பித்தான். அவனுடைய விளையாட்டுக்குத் துணை யாரும் தேவையில்லை. அவன் விளையாடுவதற்கு அவன் மட்டுமே போதும். யாராலும் அவனை அடக்க முடியவில்லை. அவ்வளவு விளையாட்டு! நண்பனும் நானும் நெருக்கமாகப் பேசிக்கொள்வதற்காக வெளியில் வந்தோம். அப்போது தன் பையனைப் பற்றி அவன் வியந்து பேசினான். "தம்பிகிட்ட ஒரு இயல்பு இருக்கு அவன் எந்த எடத்துக்குப் போனாலும் அவன் அதத் தன்னோட இடமா மாத்திக்குவான்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, முதல் நாள்தான் கொண்டைக்குருவியைப் பற்றி இந்தக் கவிதையை எழுதினேன்:

என் இடம்
நீ வந்தால்
அது
உன் இடம்
ஆகிவிடுகிறதே
எப்படிக்
கொண்டைக்குருவியே?

கொண்டைக்குருவியைப் பற்றி நான் எழுதியது என் நண்பன் தன் குழந்தையைப் பற்றிச் சொன்னதோடு எவ்வளவு பொருந்திப்போகிறது!

***

சில நாட்கள் கழித்து கூட்டில் ஆட்களை யாரும் காணோம். அப்பா மரத்தை அடியோடு வெட்டாமல் பாதி மட்டும் வெட்டியிருந்தார். மாடியில் உட்கார்ந்து ஒருநாள் படித்துக்கொண்டிருந்தபோது மாடியின் சுவரில் இரண்டு ஆசாமிகளைப் பார்த்தேன். ஒரு ஆசாமி வாயைப் பிளந்துகொண்டிருந்தார்; மற்றொரு ஆசாமி ஒரு வேப்பம்பழத்தை அப்படியே முழுசாக மேற்படியார் வாயில் ஊட்டியதும் அவர் அப்படியே விழுங்கிவிட்டார். நமக்கெல்லாம் தொண்டையை அடைத்துக்கொள்ளுமே, மேற்படியார் எப்படி விழுங்கினார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை விட ஆச்சரியம் மேற்படியார் எவ்வளவு விரைவில் வளர்ந்திருக்கிறார். கூட்டில் பார்த்த முட்டை இனி வானை அளக்க ஆரம்பிக்கும்!

***

மரம் வளர்வதும் அதில் அதே கொண்டைக்குருவியோ அல்லது வேறு ஒரு கொண்டைக்குருவியோ கூடு வைப்பதும், கொசுவுக்காக அப்பா மரத்தை வெட்டுவதும் எல்லாம் திரும்பத்திரும்ப இயற்கையின் சுழற்சிபோல் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருந்தது. சமீபத்தில் அப்பா மரணமடைந்த பின் ஒட்டுமொத்த வானத்தையும் அதன் கீழுள்ள அந்த வீட்டையும் ஏகபோகமாக அந்தக் கொண்டைக்குருவியே எடுத்துக்கொண்டிருக்கும். இனி அதனுடன் போர் தொடுக்க அந்த வீட்டில் யாருமில்லை!  

Saturday, October 10, 2020

லூயிஸ் க்லூக்: நோபலின் மற்றுமொரு ஆச்சரியம்



ஆசை 

 

கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு வெளியுலகால் அதிகம் அறியப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதில் விதிவிலக்கு பாப் டிலன் (2016). ஒவ்வொரு ஆண்டும் முராகாமிக்கு வழங்கப்படும், பிலிப் ராத்துக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்பிலேயே பிலிப் ராத்தும் காலமாகிவிட்டார். இந்த ஆண்டும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முராகாமி இருந்தார். கூடவே, அவரைப் போல நீண்ட காலம் காத்திருக்கும் கூகி வா தியாங்கோவும் இருந்தார். மேலும், கனடிய கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன நாவலாசிரியர் யான் லியான்கே, ஆன்டிகுவா-அமெரிக்க எழுத்தாளர் ஜமைக்கா கின்கைட் போன்றோரும் இருந்தனர். ஆனால், எதிர்பாராதவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கும் மரபின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்லூக்குக்கு (77) வழங்கப்பட்டிருக்கிறது. ‘அவரது தனித்துவமான கவிதைக் குரல் அலங்காரமற்ற அழகுடன் தனிநபர் இருப்பை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்குகிறது’ என்று நோபல் அறிவிப்பு கூறுகிறது. 

 

லூயிஸ் க்லூக் வெளியுலகுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர் என்றாலும் அமெரிக்காவுக்குள் மிகவும் பிரபலமானவர். அமெரிக்காவில் கவிதைக்கு வழங்கப்படும் அனைத்து விருதையும் அவர் பெற்றிருக்கிறார். ‘தி வைல்டு ஐரிஸ்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 1993-ல் புலிட்சர் பரிசு பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கையால் ‘நேஷனல் ஹ்யூமானிட்டீஸ் மெடல்’ பெற்றிருக்கிறார். இவை தவிர, அமெரிக்கப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘தேசிய புத்தக விருது’ (2014), ‘பொலிங்கன் பரிசு’ (2001) போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். 2003-04 ஆண்டுகளில் அமெரிக்க அரசின் அவைக் கவிஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரபல்யத்தை அதிகம் விரும்பாத லூயிஸ் அந்தக் கௌரவத்தை மிகவும் தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டார். 

 

1943-ல் நியூயார்க்கில் லூயிஸ் க்லூக் பிறந்தார். இவர் வளர்ந்ததெல்லாம் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டு என்ற தீவில். பதின்பருவத்தில் இவர் பசியின்மை நோயால் பெரும் பாதிப்படைந்தார். இது அவரது கவிதை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதப்படுகிறது. தனது மேற்படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்த லூயிஸ் க்லூக் முழு நேரக் கவிஞராக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார்: “நான் இளம் பெண்ணாக இருந்தபோது எழுத்தாளர்கள் எந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதுபோன்றதொரு வாழ்க்கையை நடத்தினேன். அதாவது, உலகத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு நமது எல்லா சக்திகளையும் கலைப் படைப்பை உருவாக்குவதில் குவிப்பது. எனது மேசை முன் உட்கார்ந்துகொண்டு எழுத முயல்வேன். என்னால் எதையும் எழுத முடியவில்லை. நாம் இந்த உலகத்தைப் போதுமான அளவு ஒதுக்கித்தள்ளாததால்தான் என்னால் எழுத முடியவில்லை என்று நினைத்தேன். இதே மாதிரி இரண்டு ஆண்டுகள் இருந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது இப்படியே இருந்தால் என்னால் எழுத்தாளர் ஆக முடியாது என்று. அதனால், வெர்மான்ட்டில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தேன்; உண்மையான கவிஞர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதில்லை என்று அதுவரை நான் நம்பிவந்தபோதும். ஆனாலும், அந்த வேலையில் சேர்ந்தேன். ஆசிரியர் பணியில் நான் ஈடுபட ஆரம்பித்த தருணத்தில், இந்த உலகத்தில் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை ஏற்றுக்கொண்ட தருணத்தில், நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தேன்.” 

 

லூயிஸ் க்லூக்கின் முதல் தொகுப்பான ’ஃப்ர்ஸ்ட்பான்’ 1968-ல் வெளிவந்தது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. லூயிஸ் க்லூக்கின் கவிதை சிறிய உலகத்தைப் பற்றியது, அதாவது தன்னைப் பற்றியது என்றாலும் அது அமெரிக்கர்களை ஈர்த்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் லூயிஸ் க்லூக்கின் கவிதை வரிகள் பதிவிடப்படுவது சகஜம். அமெரிக்காவுக்கு வெளியில் தற்போது நோபல்தான் லூயிஸ் க்லூக்கைக் கொண்டுசென்றிருக்கிறது என்பதால் அவரது கவிதைகளை உலகம் எப்படி அணுகப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.  

 

தாலாட்டு 

 

ஒரு விஷயத்தில் என் அம்மா கைதேர்ந்தவர்: 

தான் நேசிக்கும் மனிதர்களை 

வேறோர் உலகுக்கு அனுப்புவாள். 

சிறியவர்கள், குழந்தைகள்- அவர்களைத் 

தாலாட்டுவாள், கிசுகிசுப்பதுபோல் பாடுவாள் 

அல்லது மெல்லிய குரலில் பாடுவாள். 

என்னால் சொல்ல இயலாது 

என் தந்தைக்கு அவள் என்ன செய்தாள் என்று: 

எதுவாக இருந்தாலும், 

அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். 

 

இரண்டும் ஒன்றுதான், உறக்கத்துக்கும் மரணத்துக்கும் 

ஒருவரைத் தயார்ப்படுத்துவது. 

தாலாட்டுப் பாடல்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள்- 

அஞ்ச வேண்டாம், அப்படித்தான் அம்மாவின் 

இதயத் துடிப்பை விளக்க முடியும் என்று. 

 

ஆக, உயிருள்ளவர்கள் மெதுவாக அமைதியாகிறார்கள்; இறந்துகொண்டிருப்போர்தான் 

அமைதியடைய முடியாமல் 

மறுக்கிறார்கள். 

 

இறந்துகொண்டிருப்பவர்கள் பம்பரங்களைப் போல, 

சுழல்மானிகளைப் போல – 

நிச்சலனமாகத் தோன்றுமளவுக்கு 

வேகமாகச் சுழல்கிறார்கள். 

அப்புறம் அவர்கள் திசையெங்கும் சிதறிப்போகிறார்கள்: 

என் அம்மாவின் கைகளில், என் தங்கை 

அணுக்களின், அணுத்துகள்களின் மேகமாக இருந்தாள் – 

அதுதான் வித்தியாசம். 

 

ஒரு குழந்தை உறக்கத்தில் இருக்கும்போது, 

அது இன்னும் முழுமையாக இருக்கிறது.  

 

என் அம்மா மரணத்தைக் கண்டிருக்கிறாள்; 

ஆன்மாவின் முழுமை பற்றி அவள் பேசுவதில்லை. 

ஒரு குழந்தையை, ஒரு முதியவரை 

அவள் கைகளில் ஏந்தியிருக்கிறாள் 

ஒப்பிட்டுப் பேசினால், அவர்களைச் சுற்றிலும் 

இருள் பரவிற்று, 

இறுதியில் அவர்களை மண்ணாக ஆக்கியவாறு. 

 

எல்லாப் பருப்பொருளையும் போன்றதுதான் ஆன்மா: 

அது ஏன் மாறாமல் இருக்க வேண்டும், 

அதன் ஒரு வடிவத்துக்கு ஏன் அது 

விசுவாசமாக இருக்க வேண்டும், 

அதனால் சுதந்திரமாக இருக்க முடியும்போது? 

 

 

பின்வாங்கும் காற்று 

 

உங்களை நான் உருவாக்கியபோது, 

உங்களை நான் நேசித்தேன். 

இப்போது உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். 

 

உங்களுக்குத் தேவையான எல்லாம் நான் தந்தேன்: 

படுக்கையாக பூமியை, நீல வானப் போர்வையை – 

 

உங்களிடமிருந்து விலகிச் செல்லச் செல்ல 

உங்களை நான் தெளிவாகப் பார்க்கிறேன். 

 

உங்களின் ஆன்மாக்கள் இப்போது 

பிரம்மாண்டமாக ஆகியிருந்திருக்க வேண்டும், 

தற்போது உள்ள மாதிரி அல்ல, 

அதாவது வெற்றுப்பேச்சு பேசும் 

சின்னஞ்சிறு விஷயங்களாக அல்ல – 

 

உங்களுக்கு ஒவ்வொரு பரிசையும் தந்தேன், 

வசந்தகாலக் காலைப்பொழுதின் நீலத்தை, 

எப்படிப் பயன்படுத்துவதென்று நீங்கள் அறியாத காலத்தை—இன்னும் வேண்டுமென்றீர் நீங்கள், 

இன்னொரு படைப்புக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட 

அந்த ஒரு பரிசை. 

 

நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தது 

எவையெவையோ அவற்றை 

வளரும் தாவரங்களிடையே 

தோட்டத்தில் தேடிக் காண உங்களால் முடியாது, 

அவற்றுடையதைப் போன்று உங்கள் வாழ்க்கை 

வட்டச்சுற்றானதில்லை: 

 

நிச்சலனத்தில் தொடங்கி நிச்சலனத்தில் முடியும் 

பறவையின் பறத்தலைப் போன்றது உங்கள் வாழ்க்கை – 

அது வெள்ளை பர்ச் மரத்திலிருந்து 

ஆப்பிள் மரத்துக்குச் செல்லும் 

வில்வளைவை வடிவத்தில் ஒத்திருப்பதுபோல் 

தொடங்கி முடிகிறது. 

 

(கவிதைகள் தமிழில்: ஆசை) 

(‘இந்து தமிழ்’ நாளிதழில் 10-10-20 அன்று வெளியான கட்டுரை)