Wednesday, April 19, 2017

சம்பாரண் ஏன் காந்திக்கும் நமக்கும் அவ்வளவு முக்கியமானது?


ராமசந்திர குஹா

(சம்பாரண் நூற்றாண்டை முன்னிட்டு 19-04-2017 அன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் என் மொழிபெயர்ப்பில் இன்று வெளியான கட்டுரை)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வாரத்தில்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வடக்கு பிஹாரின் சம்பாரண் மாவட்டத்துக்கு வருகை புரிந்தார். அந்த மாவட்டத்தில் பல மாதங்கள் அவர் இருந்தார்; ஆங்கிலேயரின் வற்புறுத்தலின் பேரில், தங்கள் விருப்பத்துக்கு மாறாக அவுரி விவசாயத்தை அங்குள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிவந்ததால், அவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். ஆங்கிலேயரின் வற்புறுத்தலுக்கு அடிபணியாத விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டன. காந்தி, பல மாதங்கள் அங்கு தங்கி இந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்ந்தார்.

தனது தலையீடுகளின் மூலம் காந்தி, ஆங்கில அரசிடமிருந்து விவசாயிகளுக்குக் கணிசமான நிவாரணத்தையும் சலுகைகளையும் பெற்றுத்தந்தார். குத்தகைத் தொகை பெருமளவு குறைக்கப்பட்டது, கட்டாயமாக அவுரி விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையிலிருந்து, விருப்பமிருந்தால் செய்யலாம் என்ற நடைமுறை வழக்கத்துக்கு வந்தது. விவசாயிகளைப் பொறுத்தவரை இது பெரும் வெற்றி; காந்திக்கும் இது முக்கியமான ஒரு வெற்றி. ஏனெனில், (தென்னாப்பிரிக்காவைப் போலவே) இந்தியாவுக்குள்ளும் காந்தி ஒரு வெற்றிகரமான தலைவர் என்ற நம்பிக்கையை சம்பாரண் வெற்றிதான் உறுதிப்படுத்தியது.

எனது இந்தக் கட்டுரையின் நோக்கம், சம்பாரண் போராட்டத்தின் வரலாற்றையும் அது குறித்த தகவல்களையும் ஒப்பிப்பது அல்ல. சம்பாரண் பகுதியில் காந்தி தங்கியிருந்த காலப் பகுதியின் முக்கியமான ஆறு அம்சங்களை இந்தக் கட்டுரை அடையாளம் காண்கிறது. மேலும், இந்தியாவில் எதிர்காலத்தில் காந்தி மேற்கொள்ளவிருந்த பணிகளின் திசையை இந்த சம்பாரண் போராட்டம் எப்படித் தீர்மானித்தது என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரை பேசுகிறது. தனது தாய்நாட்டு விவசாயிகளுடன் காந்திக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் சம்பாரணில்தான் முதன்முதலில் கிடைத்தது. போர்பந்தர், ராஜ்கோட் போன்ற பேரூர்களில் சிறுபிராயத்தைக் கழித்தவர் அவர். இளம் வழக்கறிஞராக பாம்பே மாநகராட்சியில் தொழில் புரிந்தார். அடுத்தது, தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் வாழ்ந்தார்.

விவசாய இந்தியா…
1915-ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, இந்தியா முழுவதும் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்த காந்தி, சம்பாரணுக்கு வருவதற்கு முன்பு, பெரிதும் நகரம் சார்ந்த, பேரூர் சார்ந்த மக்களுடனே உரையாடியிருக்கிறார்.சம்பாரணில், அந்த மாவட்டத்தின் இரண்டு பிரதான ஊர்களான மோத்திஹரியிலும் பேத்தையாவிலும் காந்தி தங்கியிருந்து தன் செயல்பாடுகளை மேற்கொண்டார். காலையிலிருந்து மாலைவரை தன்னைப் பார்ப்பதற்காக அலைமோதியபடி வந்துகொண்டிருந்த ஏராளமானோரை அவர் சந்தித்தார். சில நாட்களில் அவராகவே கிராமங்களுக்குச் சென்றுவருவார். ஏராளமான விவசாயிகளை காந்தி சந்தித்தார். கூடவே, ஐரோப்பியத் தோட்ட முதலாளிகளையும் தொழிற்சாலை மேலாளர்களையும் அவர் சந்தித்தார். அவர் எங்கு சென்றாலும் சாதாரண உடையிலிருந்த காவலர்கள் பின்தொடர்ந்தார்கள். மக்கள் நடுவே காந்தி பேசுவதையெல்லாம் அந்தக் காவலர்கள் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.

தனது வழக்கப்படியே, காந்தி மிகவும் கடுமையாக உழைத்தார். 1917, மே மாத இறுதியின்போது அந்த மாவட்டத்தில் அவர் ஆறு வாரங்களைச் செலவழித்திருந்தார். கிட்டத்தட்ட 7,000 நேரடி வாக்குமூலங்களை அவர் சேகரித்திருந்தார். ஒவ்வொரு வாக்குமூலமும் சம்பாரணில் விவசாயிகள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள், எப்படிக் கடுமையாக அவர்கள் உழைத்தார்கள் என்பதைப் பற்றிய காந்தியின் புரிதலை மேலும் ஆழமாக்கியது.

சம்பாரணில்தான் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை காந்தி நேரடியாகவும் உரிய முறையிலும் அறிந்துகொண்டார். இரண்டாவதாக, பிற்காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்கவிருந்த சகாக்களை முதன்முறையாக ஒருங்கிணைத்தது சம்பாரணில்தான்.

சிந்திக்காரரும் ஒடிசலாக, உயரமாக இருந்தவருமான ஜே.பி.கிருபளானி என்ற அறிஞரின் நட்பை சம்பாரணில்தான் காந்தி புதுப்பித்துக்கொண்டார். 1915-ல் சாந்திநிகேதனில் இருவரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள். 1917 ஏப்ரல் வாக்கில் சம்பாரண் மாவட்டத்தில் இருந்த ஒரு அரசுக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக ஜே.பி. கிருபளானி இருந்தார். முஸாஃபர்புர் ரயில் நிலையத்துக்கு காந்தி வந்திறங்கியபோது, கிருபளானி அங்கே தன் மாணவர்கள் புடைசூழ காந்தியைச் சந்தித்தார். ஆர்வ மிகுதியால் அவரது மாணவர்கள் ஒரு வண்டியில் காந்தியை உட்கார வைத்து இழுத்துச் சென்றார்கள்.

ஜே.பி. கிருபளானியும் பாட்னாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குழுவொன்றும் காந்திக்குத் துணையாக சம்பாரணில் தங்கியிருந்தார்கள். இவர்களில் பிரஜ்கிஷோர் பிரசாதும் உள்ளடக்கம். சம்பாரண் விவசாயிகள் பிரச்சினை குறித்து அவர் வெகு காலமாக அக்கறை காட்டிவந்தவர். மற்றொருவர், ராஜேந்திர பிரசாத். கல்கத்தாவில் படித்தவர். திறமையான வழக்கறிஞராகப் பெயர்வாங்க ஆரம்பித்திருந்தவர். இவர்கள் எல்லோருமே அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் காந்தியுடனே அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

மூன்றாவதாக, சம்பாரணில் காந்தி ஆற்றிய பணிகள் முதன்முறையாக அவரது சொந்தப் பிரதேசமான குஜராத்துக்கு வெளியில் (வெகுதொலைவில்) அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன. காந்தியுடன் அங்கு பணியாற்றிய வழக்கறிஞர்களும் காந்தி பேசிய விவசாயிகளும் மிகுந்த மதிப்பு மரியாதையுடனும் இருந்தார்கள். ‘இங்கு நான் ஆற்றும் காரியமானது ஒவ்வொரு நாளும் எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியூட்டுகிறது’ என்று காந்தி தனது நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதினார். “நான் சரியானதைத்தான் செய்வேன் என்று என் மேல் நம்பிக்கை கொண்டபடி, அவர்கள் வெறுமனே என்னைச் சுற்றி அமர்ந்திருப்பதன் மூலம் உவகை கொள்கிறார்கள். இந்த அன்புக்குத் தகுதியானவனாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.”

படேலும் இன்ன பிற குஜராத்திகளும்
நான்காவதாக, சம்பாரணில் அவர் பாடுபட்டதுதான் குஜராத்தில் அவருக்கு இருந்த நற்பெயரை வலுப்படுத்தியது. ‘1917-க்கு முன்பு குஜராத்திகள் மிகவும் பழமைவாதிகள் என்றும் மந்தமானவர்கள் என்று தேசியவாதிகள் மத்தியில் பெயரெடுத்திருந்தனர்’ என்று வரலாற்றாசிரியர் டேவிட் ஹார்டிமன் எழுதுகிறார். குஜராத் சபா என்பது மிதவாத வழக்கறிஞர்களாலும் ஆங்கிலேயர்களிடம் விசுவாசம் கொண்டவர்களாலும் மாற்றத்தை விரும்பாதவர்களாலும் நிரம்பியிருந்தது. அவர்களில் சிலர் காந்தியை ‘தவறாக வழிநடத்தப்பட்ட மதக் கிறுக்கர்’ என்று கருதினார்கள். சம்பாரணில் காந்தி நுழைந்தபோது, அந்த மாவட்டத்தை விட்டு உடனடியாக அவர் வெளியேற வேண்டும் என்று காலனிய அதிகாரிகள் உத்தரவிட்டபோது காந்தி வெளியேற மறுத்தார் அல்லவா! அதற்குப் பிறகு குஜராத்தியர்கள் காந்தியை அணுகிய விதம் பெரிதும் மாறியது. வெளியேறும் உத்தரவை காந்தி மறுத்த செய்தி அகமதாபாத்தை வந்தடைந்தபோது “குஜராத் கிளப்பில் இருந்த வழக்கறிஞர்கள் துள்ளிக் குதித்தனர்,” அதுமட்டுமல்லாமல் இந்த ‘தீரரை’ தங்கள் சபாவின் அடுத்த தலைவராக ஆக்கவும் முடிவுசெய்தார்கள்.

லண்டனிலிருந்து திரும்பிய பாரிஸ்டரான வல்லபபாய் படேல் 1917-ல் குஜராத் கிளப்பின் மிக முக்கியமான உறுப்பினராக இருந்தார். சம்பாரணிலிருந்து வெளியேற வேண்டுமென்று போடப்பட்ட உத்தரவை காந்தி மதிக்காதது குறித்த செய்தி வந்தடைந்தபோது, அந்த கிளப்பில் படேல் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். கூடிய விரைவிலேயே, காந்தியுடன் சேர்ந்துகொள்வதற்காகத் தனது வெற்றிகரமான வழக்கறிஞர் தொழிலை அவர் விட்டுவிட்டார். மகாதேவ் தேசாய், நர்ஹரி பாரிக் ஆகிய இரண்டு குஜராத்தி வழக்கறிஞர்களும் 1917-ன் பிற்பகுதியில் காந்தியுடன் சேர்ந்துகொண்டார்கள். படேலைப் போலவே, இந்த இருவரும் காந்தியின் தேசிய, சமூக புத்தாக்கச் செயல்திட்டங்களில் பிரிக்க முடியாத அங்கங்களானார்கள்.

ஐந்தாவதாக, சம்பாரணில் காந்தி தங்கியதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக பிரிட்டிஷ் அரசின் அதிகாரத் தரப்பைச் சீராகவும் தொடர்ச்சியாகவும் எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அடிக்கடி அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்புகளில் பெரும்பாலானவை மோசமான அனுபவங்கள்! இப்போது இந்தியாவில் அதுபோன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்கிறது. மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடனும், கமிஷனருடனும் பிஹாரின் துணைநிலை ஆளுநருடனும் தொடர்ச்சியான சந்திப்புகள் நிகழ்ந்தன. (அவற்றில் எல்லா சந்திப்புகளையும் இனிமையானவை என்று கருதிவிட முடியாது).

1917 ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் காந்தி முன்வைத்த விவசாயிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய சாட்சிகளைப் பார்த்துவிட்டு, பிஹார் அரசு ‘சம்பாரண் விவசாயப் பிரச்சினைகளுக்கான விசாரணைக் குழு’வை அமைத்தது. அதில் ஏழு உறுப்பினர்கள் இருந்தார்கள். நான்கு ஐசிஎஸ் அதிகாரிகளும் காந்தியும் அந்தக் குழுவில் உள்ளடக்கம். மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். இந்தக் குழுவின் கூட்டங்கள் மூலமாக காலனிய அரசு குறித்த காந்தியின் அறிவு ஆழமானது. அதற்கு முன்புவரை இந்தியாவில் ஆங்கிலேய அரசின் இயங்குமுறை குறித்து அவர் மிகவும் சொற்பமாகவே அறிந்திருந்தார்.

காந்தி மகாராஜாவுக்கு ஜே!
இறுதியாக, சம்பாரணில் ஆற்றிய பணிதான் விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் இன்னும் பல்வேறு தரப்பினர் என்று விரிந்திருந்த இந்தியச் சமூகத்தின் அனைத்துத் தரப்பின் இதயங்களையும் சிந்தனைகளையும் கவர்ந்திழுப்பதற்கான தன்னம்பிக்கையை காந்திக்குத் தந்தது. சம்பாரணுக்கு அவர் வந்ததுமே காந்தி மீது அங்குள்ள விவசாயிகள் நம்பிக்கை கொண்டார்கள் என்பது பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சில மாதங்கள் கழித்து 1917, அக்டோபர் 3 அன்று ‘சம்பாரண் விவசாயப் பிரச்சினைகளுக்கான விசாரணைக் குழு’ தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. பெரும்பாலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்களே அந்த அறிக்கையில் இருந்தன. அதனை அடுத்து மோத்திஹரிக்குச் சென்ற காந்தி அங்கே ஒரு வாரம் தங்குகிறார். அங்கிருந்து பேத்தையாவுக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு அகமதாபாத்துக்குத் திரும்புவதாகத் திட்டம். பேத்தையா ரயில் நிலையத்தில் சுமார் 4,000 பேர் கூடியிருந்து அவரை வரவேற்றார்கள். 

ரகசிய போலீஸ்காரர் ஒருவர் இது குறித்துத் தனது குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘ரயில் நின்றதுதான் தாமதம்.. அங்குள்ள மக்களெல்லாம் ‘காந்திக்கு ஜே’, ‘காந்தி மகாராஜாவுக்கு ஜே’ என்று வாழ்த்தொலி முழங்க ஆரம்பித்துவிட்டார்கள். பேண்டு வாத்தியக் குழுக்களும் கொடிகளும் அங்கே காணப்பட்டன. அருகிலும் தூரத்திலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், வழக்குரைஞர்கள் உட்பட எல்லோரும் அங்கே குழுமியிருந்தார்கள். காந்தி மீது மலர்களைத் தூவினார்கள். மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தார்கள். ரயில் நடைமேடையில் மிஸ்டர் காந்திக்காகச் சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். பேத்தையாவைச் சேர்ந்த சுராஜ்மால் மார்வாரி என்பவர் தனது குதிரை வண்டியையும் பூரண் பாபு ராஜ் என்ற பொறியாளரின் குதிரையையும் கொண்டுவந்து, வண்டியைத் தயாராக வைத்திருந்தார். தனது குதிரையை பூரண் பாபு ஏன் இரவல் கொடுத்தார் என்பதும் ரயில் நிலையத்தில் இவ்வளவு கூட்டம் கூடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் ஏன் அனுமதித்தார்கள் என்பதும் புரியவில்லை.”

பேத்தையா ரயில் நிலையத்தில் காந்திக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பே இந்தியாவில் அவரது முதல் போராட்டம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை உணர்த்தியது. சம்பாரணின் விவசாயிகளும், அந்த மாவட்டத்தின் நடுத்தர மக்களும்கூட, தங்கள் நன்றியை வெளிப்படுத்தினார்கள். சம்பாரணில் காந்தியின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்றால், அந்தப் பிரதேசத்தை விட்டு அவர் சென்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முஸாஃபர்பூருக்கு வந்திருந்த அதிகாரி ஒருவர் “மிஸ்டர் காந்தியின் பெயர் இன்றளவும் மிகுந்த மதிப்புக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

சம்பாரண் விவசாயிகள் காந்திக்கு நிறைய கடன்பட்டிருந்தார்கள். ஆனால், அதைவிட அதிகமாக காந்தி அவர்களுக்குக் கடன்பட்டிருந்தார். அவர்களுக்காகப் பணியாற்றியபோதுதான் இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொண்ட இன்னல்களைப் பற்றி அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அங்கேதான் அவரது தொடக்க கால அரசியல் சகாக்களை, நம்பிக்கையான நண்பர்களைச் சந்தித்தார். தனது சாதி, சமூகம், வர்க்கம், மதம் போன்றவற்றைச் சாராதவர்களையும் தன்னால் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு அங்கேதான் கிடைத்தது. வடக்கு பிஹாரில் 1917-ன் வசந்த காலத்திலும் கோடையிலும் அவர் செலவழித்த வாரங்களும் மாதங்களும்தான் எதிர்காலத்தில் அவர் எதிர்கொள்ளவிருந்த மேலும் கடினமான போராட்டங்களுக்காக அவரைத் தயார்படுத்தின.

சம்பாரண் என்பது இந்தியாவில் காந்தியின் முதல் அரசியல் அனுபவம் மட்டுமல்ல; காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஆகவே, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் இன்றியமையாதது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையரே வெளியேறுக, இறுதியில் அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை முதலானவற்றை நோக்கிய பாதையில் எடுத்து வைக்கப்பட்ட மிக முக்கியமான முதல் காலடிதான் சம்பாரண் போராட்டம்!
- ராமசந்திர குஹா, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

No comments:

Post a Comment