சம்பாரணின் பித்திஹாராவில் இன்றும் உள்ள காந்தி ஆசிரமம் |
மோத்திஹரியில் காந்தி வந்து இறங்கிய ரயில் நிலையத்தின் இன்றைய நிலை! |
மோத்திஹரியில் காந்தி தங்கிய கோரக் பாபுவின் வீடு |
ஆசை
சம்பாரணில் காந்தி பெற்ற வெற்றி இந்தியா முழுமைக்கும் மிக முக்கியமானதாகிறது. இந்தியாவில் காந்தி நடத்திய முதல் சத்தியாகிரகம், ஒரு போராட்டம் கூட இல்லாமல் வெற்றி பெற்ற சத்தியாகிரகம் என்பதுதான் இதன் சிறப்பு. எனினும் சம்பாரணில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பெற்ற வெற்றி காந்தியை முடங்கிப்போகச் செய்யவில்லை. வெற்றியை எண்ணி மகிழ்ச்சி கொள்வதைவிட அந்தப் பிரச்சினையின் வேரை இனம் கண்டு அதைக் கிள்ளியெறிவதிலும், பெற்ற வெற்றியை விவசாயிகள் தக்க வைத்துக்கொள்வதிலும்தான் காந்தி கவனம் செலுத்தினார்.
இந்த வெற்றியை காந்தி எப்படிப் பெற்றார் என்பதைச் சிறு குறிப்புகளாகத் தொகுத்துக்கொள்வது அவரது வழிமுறைகளைப் புரிந்துகொள்வதில் நமக்கு உதவும்.
1. சம்பாரண் பிரச்சினையை காந்தியிடம் சுக்லா திரும்பத் திரும்ப எடுத்துரைத்தபோது நேரில் வந்து பார்த்துவிட்டுதான் தன்னால் எதுவும் சொல்ல முடியும் என்றார்.
2. சம்பாரணுக்கு வந்த பிறகு அங்குள்ள விவசாயிகளையும் விவசாயிகளின் வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைத்தது; வழக்கம் போல் நீதிமன்றம் போய் முறையிடுவது பலனளிக்காது என்று கருதி அடித்தளமான ஆதாரங்களைத் திரட்டியது.
3. வெவ்வேறு பிரதேசங்களில் ஆயிரக் கணக்கான விவசாயிகளின் கூற்றுகளை மிகை களைந்து முறைப்படி பதிவுசெய்துகொண்டது.
4. ஆங்கிலேய முதலாளிகளையும் அவர்களின் மேனேஜர்களையும் ஆங்கிலேய அரசு அதிகாரிகளையும் சந்தித்துத் தன் நோக்கத்தை அவர்களுக்கு மிகவும் தாழ்மையாகப் புரியவைக்க முயன்றதோடு அவர்கள் தரப்பின் வாதங்களையும் கேட்டுக்கொண்டது.
5. சிறைசெல்லத் தயாராக இருந்தது மட்டுமல்லாமல், தான் சிறை செல்ல நேரிட்டால் தங்கள் முயற்சி தடைபடாமல் நடக்கும் விதத்தில் காந்தி தன் சகாக்களைத் தயார்செய்தது.
6. காந்தி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டடது அளித்த உத்வேகத்தில் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டதுடன் அதிகாரிகள், முதலாளிகளை சந்தித்துத் தொடர்ந்து தங்கள் பக்க நியாயங்களை அவர்களிடம் முன்வைத்தது.
7. விசாரணைக் குழு அமைக்கும்படியும் அதில் விவசாயிகள் தரப்பில் காந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெறும்படியும் செய்தது.
8. விவசாயிகளுக்கு ஆதரவான பரிந்துரைகளை விசாரணைக் குழு வைக்கும்படி செய்தது.
9. விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டு இறுதியில் அமல்படுத்தப்பட்டது.
10. வேறு விதமாகப் பார்க்கப்படும் என்பதாலும் நாடு தழுவிய போராட்டமாக ஆகிவிட்டால் உள்ளூரில் வெற்றி கிடைக்காது என்பதாலும் தனது ஒட்டுமொத்த விசாரணை காலத்திலும் காங்கிரஸின் பேரை காந்தி எந்த விதத்திலும் பயன்படுத்தாதது.
எது வெற்றி?
விவசாயிகளுக்கு சாதகமான முடிவு எட்டப்பட்டதும் விவசாயிகள் தங்களிடமிருந்து முதலாளிகள் பெற்றுக்கொண்ட பணத்தை முழுவதும் திருப்பித் தர வேண்டும் என்று காந்தியை வலியுறுத்தினார்கள். ஏற்கெனவே, இந்தப் பிரச்சினையில் தார்மிகரீதியிலான தோல்வியைச் சந்தித்திருக்கும் முதலாளிகளை மேலும் அழுத்துவது அவர்களின் ஈகோவைச் சீண்டிவிடுவது மட்டுமல்லாமல் வேறு வழிகளில் பிரச்சினை ஏற்படுவதற்கும் வாய்ப்பாகிவிடும் என்று எண்ணிய காந்தி ஐம்பது சதவீதத் தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றார். முதலாளிகளோ 25% மட்டுமே திருப்பிக் கொடுக்க முடியும் என்றார்கள். பணரீதியான வெற்றியைவிட விவசாயிகள் தற்போது பெற்றிருக்கும் மனரீதியான வெற்றியே முக்கியமானது என்று கருதிய காந்தி அதற்கு இசைந்தார். அஞ்சி ஒடுங்கி இருந்த ஏழை விவசாயிகளால் ஆங்கிலேய முதலாளிகளின் அதிகாரத்தை அசைக்க முடியும் என்ற நிலைக்கு வந்ததே இந்தப் போராட்டத்தில் கிடைத்த உச்சபட்ச வெற்றி என்று காந்தி கருதினார். இந்த உத்வேகம் இந்தியா முழுவதற்கும் பரவ வேண்டும் என்று விரும்பினார்.
இந்த வெற்றியைப் பற்றி காந்தி கூறுகிறார்: “இறுதி முடிவு என்பது அரசியல்ரீதியானதாக இருக்கலாம்; ஆனால், இந்த வெற்றிக்குக் காரணம் என்பது அரசியல்சாராத ஒன்று… தன்னலமில்லாமல் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சேவையாற்றினால் இறுதியில் அது அரசியல்ரீதியாக தேசம் முழுமைக்கும் நன்மை பயக்கும்.”
பிரச்சினையின் வேர்கள்
எனினும், சம்பாரண் வெற்றியை காந்தி முழுமையான ஒன்றாகக் கருதவில்லை. அந்த மக்களின் அறியாமையும் அதனால் ஏற்பட்ட அச்சமுமே அவர்களை இவ்வளவு காலமாக கொடிய நரகத்தில் தள்ளிவிட்டிருந்தன என்பதை சம்பாரண் வந்த உடனேயே காந்தி அறிந்துகொண்டார். தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை, சுகாதாரமின்மை போன்றவை அவுரிப் பிரச்சினையை விட மிக மோசமானவையாக காந்தி கருதினார்.
ஆகவே, சம்பாரண் வந்ததிலிருந்து அந்த மக்களை மாற்றுவதற்கு காந்தி முயல்கிறார். படிப்பறிவு மிக்க தனது சகாக்களிடமிருந்த
அந்தப் பணி ஆரம்பிக்கிறது. எல்லோரும் நல்ல மனதுடையவர்களாக இருந்தாலும் சுயசார்பு இல்லாதவர்களாக இருந்தார்கள். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளத் தெரியாதவர்களாகப் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருந்தார்கள். அவர்களின் வீடுகளில் வேலையாட்கள் இருந்தார்கள். அவுரி விவசாயிகளின் பிரச்சினை குறித்த விசாரணை ஆரம்பித்ததும் காந்தி தனது சகாக்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு வாழ்க்கையை ஏற்படுத்துகிறார். வேலையாட்கள் நிறுத்தப்படுகிறார்கள். எல்லோரும் அவரவர் வேலையை அவரவர் செய்துகொள்ளப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும் பொதுவாக ஒரு சமையலறை நிறுவப்பட்டுச் சமையலுக்கு கஸ்தூர்பா பொறுப்பேற்கிறார். உணவைப் பரிமாறும் வேலை காந்தியுடையது. நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்பது கட்டாயம்.
புடவை வாங்கித் தாருங்கள் மகாத்மாஜீ
அந்த கிராமங்களில் இருந்த பெண்கள் மிகவும் அழுக்காக ஆடை அணிந்திருந்ததைக் கண்டு மனம்வருந்திய காந்தி, கஸ்தூர்பாவை விட்டு அவர்களிடம் பேசச்செய்தார். ஒரு பெண், கஸ்தூர்பாவைத் தனது குடிசைக்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். அங்கே துணியோ, துணிவைப்பதற்கான பெட்டிகளோ அலமாரிகளோ எதும் இல்லை. “என்னிடம் இருப்பதே இந்த ஒரே ஒரு புடவைதான். இதை நான் துவைப்பதென்றால் அதுவரை நான் வேறு எந்தத் துணியை உடுத்துவது. எனக்கு ஒரு இன்னொரு புடவை வாங்கித்தரும்படி மகாத்மாஜீயிடம் சொல்லுங்கள். அப்படி வாங்கித்தந்தால் குளிக்கிறேன், துணியைத் துவைத்து உடுத்துகிறேன்” என்று அந்தப் பெண் கஸ்தூர்பாவிடம் சொன்னதாக காந்தி பதிவுசெய்கிறார்.
சுகாதாரமின்மை
வீடுகள் தோறும் உள்ளேயும் வெளியேயும் குப்பை. முறையான சாலைகள் இல்லை. எங்கு பார்த்தாலும் சாக்கடை! விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும்போது கூடவே சுகாதாரப் பணிகளையும் தனது தன்னார்வலர்களை வைத்து காந்தி செய்கிறார். அவர்கள் செய்யும் பணிகளைப் பார்த்துச் சில கிராமங்களில் மக்கள் அவர்களும் சுகாதாரப் பணிகள் செய்ய முன்வருகிறார்கள். வேறு சில கிராமங்களில் மக்கள் அசூயைப்பட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
சுகாதாரமற்ற நிலை காரணமாக தொற்றுநொய்கள் மலிந்து காணப்பட்டதுடன் அடிக்கடி கொள்ளை நோய்கள் ஏற்படும் சூழலும் அங்கு நிலவியது. சுத்தமாக இருந்தாலே எளிதில் தடுத்துவிடக் கூடிய நோய்கள் பலவற்றுக்கு அங்குள்ள மக்கள் இரையானார்கள்.
தன்னார்வலர்களின்
வருகை
வெற்றி கிடைத்ததும் சம்பாரணை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட முடியாது என்று கருதிய காந்தி சம்பாரணுக்கு வந்து கல்வி, சுகாதாரச் சேவை புரிய நாடு முழுவதிலுமிருந்து
தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று காந்தியின் நண்பர்கள் பலரும் சம்பாரணுக்கு வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்வச் செழிப்பான சூழலில் வளர்ந்தவர்கள். சம்பாரணில் அவர்களுக்குத் தங்குவதற்கு இடமும் உண்பதற்கு உணவும் மட்டுமே உத்திரவாதம் அளிக்கப்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கு வந்து அவர்கள் சேவையாற்றினார்கள்.
பம்பாயிலிருந்து அவந்திகாபாய் கோகலே, பூனாவிலிருந்து ஆனந்திபாய் வைஷாம்பாயன் போன்ற பெண்மணிகள் தன்னார்வலர்களாக சம்பாரணுக்கு வந்தார்கள். பாபாசாஹேப் சோமன், புண்டலிக் காட்கடே போன்றோர் கர்நாடகத்திலிருந்து வந்தார்கள். சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்தியின் இளைய மகன் தேவதாஸ், சோட்டாலால், சுரேந்திரநாத் போன்றோரும் மகாதேவ் தேசாய், நர்ஹரி பரிக் போன்றோர் தங்கள் மனைவியருடனும் சம்பாரணுக்குப் பணிபுரிய வந்தார்கள். காந்தியின் வேண்டுகோளை ஏற்று ‘இந்தியாவின் சேவகர்கள் கழக’த்திலிருந்து டாக்டர் தேவா மருத்துவப் பணியாற்ற சம்பாரணுக்கு வந்தார். எல்லா ஆசிரியர்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
பள்ளிக்கூடங்கள்,
கல்விமுறை
சம்பாரண் பிராந்தியத்துக்குள் மூன்று பள்ளிக்கூடங்களை காந்தி திறந்தார். அந்தப் பள்ளிக்கூடங்களின் சுற்றுப்புறத்தில் உள்ள 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவருக்கும் கல்வி ஊட்ட வேண்டும் என்பது அவரின் திட்டம். போக்குவரத்து வசதியின்மை, வறுமை, விழிப்புணர்வு இல்லாத நிலை ஆகியவற்றால் கணிசமான சிறுவர்களே அங்கு கல்வி கற்க வந்தார்கள். இந்திய முறைப்படியும் ஆங்கிலக் கல்வி முறையின் சாதகமான அம்சங்களில் ஒருசிலவற்றை எடுத்துக்கொண்டும் அங்கு கல்வி போதிக்கப்பட்டது.
கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற பாடங்களில் அடிப்படையான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. நீதிக்கல்வி மிக முக்கியமாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.
இந்தப் பணிகள் எல்லாவற்றையுமே ஆங்கிலேய அரசும் முதலாளிகளும் எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தோட்ட மேனேஜர்களின் தூண்டுதலால் ஒரு பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது. அந்தப் பள்ளியை காந்தியின் அன்பர்களும் மக்களும் சேர்ந்து மீட்டும் கட்டியெழுப்பினார்கள். இப்படியாக போராட்ட வெற்றி ஏற்றிய தீபத்தை விழிப்புணர்வு என்னும் கரம் கொண்டு காப்பாற்றும் முயற்சிகளை எடுத்த பிறகு காந்திக்கு வேறொரு போராட்டத்துக்கான
அழைப்பு வருகிறது. சம்பாரணில் சிறிய அளவிலென்றாலும் முறையாகச் செயல்படும் விதத்தில் சில கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டு காந்தி அங்கிருந்து சென்றார்.
மிக மிக ஆபத்தான மனிதர்!
காந்தியின் சம்பாரண் போராட்டத்தைப் பற்றி பேராசிரியர் கில்பர்ட் முர்ரே ‘ஹிப்பர்ட் ஜர்னல்’ என்ற இதழில் இப்படி எழுதுகிறார்: “ஒரு ஆன்மாவுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறும் தற்போதைய போராட்டம் ஒன்றை நான் உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்… உடல்சார்ந்த இன்பங்கள், செல்வம், வசதி, பாராட்டு, பதவி உயர்வு போன்ற விஷயங்களையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் ஆனால் தான் சரி என்று நினைப்பதைச் செய்வதில் தீவிரமான முனைப்பு கொண்ட ஒரு மனிதரை எதிர்கொள்வதில் அதிகாரத் தரப்பினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த மனிதர் மிகவும் ஆபத்தானவரும் மிகுந்த சங்கடத்தைக் கொடுப்பவருமான எதிராளியாவார். ஏனெனில், அவரது உடலை நீங்கள் வெற்றி கொள்ள முடியும். ஆனால், அவரது ஆன்மாவை உங்களால் ஏதும் செய்ய முடியாது.” 1918 ஜனவரி இதழில் கில்பர்ட் அப்படி எழுதினார். அதற்குப் பிறகு முப்பது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் அந்த வாசகங்களை இயல்பாகவே உறுதிபடுத்தியபடியே காந்தி வாழ்ந்தார்.
சம்பாரண் இன்று காந்தி இல்லாமல் தவிக்கிறது. சம்பாரண் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் அப்படியே. இந்தியாவில் மாபெரும் சத்தியாகிரகத்துக்குத் தொடக்கப்புள்ளியைக் கொடுத்த சம்பாரண் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு இது! அங்குமிங்குமாக எழும் மக்கள் எழுச்சிகள் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் அவற்றின் பின்னே முறையான சித்தாந்தமோ, வழி நடத்த காந்தி போன்ற தலைமையோ இல்லாமல் அந்தப் போராட்டங்களில் பல திசைமாறிச் செல்வதும், அரசுகளாலும் பிற சக்திகளாலும் ஒடுக்கப்படுவதும் நிகழ்கிறது. போராட்ட உணர்வுள்ள ஒவ்வொருவரும் சம்பாரண் சத்தியாகிரகம் உள்ளிட்ட காந்தியின் போராட்டங்களைப் படித்தால் அவர்களால் கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நூற்றாண்டுக்கு முந்தைய போராட்டம் ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்வது இனிவரும் பல நூற்றாண்டுகளுக்கும் நமக்கு நிச்சயமாகத் துணைபுரியக் கூடும்!
சம்பாரண் சத்தியாகிரகம் குறித்த பதிவுகள் இத்துடன் நிறைவடைகின்றன. காந்தியின் மற்ற அம்சங்கள், செயல்பாடுகள் குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
உதவிய நூல்கள்:
1. Gandhi and Champaran, D.G. Tendulkar, 1957, Publication Division.
2. Satyagraha at Champaran, Dr. Rajendra Prasad, 1922.
- ( நாளை…)