ஷிவ் விஸ்வநாதன்
(இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எனது மொழிபெயர்ப்பில் 10-0802016 அன்று வெளியான கட்டுரை)
மகான்கள், சத்தியாகிரகிகள் போன்றோரின் நற்செயல்களைக் காலப்போக்கில் உறையச்செய்து, அவர்களைச் சிலையாக்கி ஒரு பீடத்தில் வைப்பதுதான் நமது வழக்கம். உறைபடிவத்தில் படிந்ததைப் போன்ற ஒரு தன்மையை அவர்களின் நற்செயல்கள் பெற்றுவிடுகின்றன. உயிருள்ள ஒரு ஜீவனாக இருப்பதற்குப் பதிலாக மகான்களும் திருவுருக்களும் விளம்பரப் பதாகையாகவும் அற்புதக் காட்சியாகவும் அல்லது திரும்பத் திரும்பக் காட்டப்படும் மேற்கோளாகவும் ஆகிவிடுகிறார்கள். நாட்காட்டியில் இடம்பெறும் புகைப்படத் தொகுப்புகளாகவோ, அசையாமல் நிற்கும் சிலையாகவோ ஆகிவிடுகின்றன புனிதத்தன்மையும் வீரச்செயலும். நற்பண்பு என்பது காலத்தின் வார்ப்பெழுத்துகளாகிவிடுகின்றன.
தொடர்ந்து படைப்பூக்கத்துடன் செயல்பட்டு, மேற்கண்டதுபோல் உறைந்துவிடாமல் இருப்பதற்குப் போராடியவர்கள் இரண்டு பேரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஒருவர் காந்தி. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு உண்ணாவிரதப் போராட்டமும், ஒவ்வொரு எதிர்ப்புச் செயலும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதே. வன்முறைகள் தலைதூக்குவதாக உணர்ந்தால் காந்தி பெரும்பாலும் தனது சத்தியாகிரகச் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வார். தனது எதிர்ப்புச் செயல்பாடுகள் அவர் நினைத்த விதத்தில் செயல்படவில்லை என்றால் தனது பிரம்மச்சரிய வாழ்க்கையையே அவர் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வார்.